இன்று எனக்குப் பிறந்த நாள். ஐம்பத்தாறு வயது ஆரம்பிக்கிறது. இத்தனை கழுதை வயதாகியும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இன்னும் என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை.
இப்போதும் நான் என்னைக் கடவுள் அவதாரம் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
இது பைத்தியக்காரத்தனம் என்று உங்களுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும். ஆனால், என்னைப்போன்ற கடவுள் அவதாரங்களின் சிக்கலை நீங்கள் பொறுமையாக விளங்கிக்கொள்ளவேண்டும். எப்போதுமே எங்களுக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு வேளை, நாம் இயேசு கிறிஸ்து போலவோ, புத்தரைப் போலவோ அவதாரமாக இருந்து, அதை வீணடித்துக்கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம்.
என் பதினான்காவது வயதில், என்னை இயேசுவின் அவதாரம் என்று நான் நம்ப ஆரம்பித்தேன். இதற்கு வலுவான ஆதாரங்கள் என்னிடம் இருந்தன.
முதலில், நான் இயேசு உயிர்த்தெழுந்த வாரத்தில் பிறந்திருந்தேன். எனக்கு முன்னும் பின்னுமாக இன்னும் சில பிரபலங்கள் பிறந்திருந்தார்கள். உதாரணத்திற்கு, அம்பேத்கர், சார்லி சாப்ளின், பிரமிள் போன்றவர்களைச் சொல்லிக்கொள்ளலாம்.
இரண்டாவதாக, நான் பிறந்த மறு வாரம் எனது ஆத்தாவிற்குக் கைகால் விளங்காமல் போனது. நான் சித்திரையில் பிறந்ததால் இப்படி நடந்ததாக வாழ்நாள் முழுக்க அந்த ஆத்தா சொல்லிக்கொண்டிருந்தது. என் பிறப்பு அசாதாரணமானது என்று இப்போது விளங்குகிறதா?
மூன்றாவதாக, எதையாவது யாரையாவது காப்பாற்றியாகவேண்டும் என்ற வேட்கை எனக்குள் வற்றாத ஊற்று போல எப்போதும் பெருகிக்கொண்டே இருந்தது. நாட்டுப்புறவியலில், நலிந்த கலைஞர்களுக்காக வாதிடுவது எனது கடமையாக இருந்தது. தலித்தியத்தில், கேட்கவே வேண்டாம். எல்லா ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்காகவுமே நான் அவதரித்ததாய் நினைத்துக்கொள்வதை என்னால் என்றைக்குமே மாற்றிக்கொள்ள முடியவில்லை. நான் இந்த உலகைக் காப்பாற்ற வந்தவன் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக்கொண்டிருந்தது.
0
இந்த நோயிலிருந்து விடுபடுவதற்கு நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. முதல் முயற்சியாக, நான் என்னைச் சாதாரணத்திலும் சாதாரண மனிதனாக நினைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். என்னையே பல நேரங்களில் தாழ்த்திக்கொண்டேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒவ்வொரு முறை என்னை நான் மறைத்துக்கொள்கையிலும், இந்த உலகம் என்னை ‘வெளியே வா, வெளியே வா!’ என்றே கூப்பிட்டுக்கொண்டிருக்கிறது. இப்போதுகூட ராவணன் அம்பேத்கர், பிறந்தநாள் வாழ்த்தில் ‘பழைய பன்னீர்செல்வமாக வரச்’ சொல்லிக் கேட்கிறார். உங்களில் தாழ்த்தப்படுபவன், உயர்த்தப்படுவான் என்பதுதான் கடவுளின் நீதி. நான் என்னைத் தாழ்த்த தாழ்த்தக் கடவுளாகவே உயர்த்தப்பட்டேன்.
இரண்டாவது முயற்சியாக, அவதாரமாய் இருப்பதிலுள்ள சிக்கல்களை வியாசமாக எழுதிவிட்டால் அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கையில், ‘நான் ஏன் கடவுள் இல்லை?’ என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுத ஆரம்பித்தேன். அந்த நாவலும், நான் இயேசுவின் அவதாரம் என்றே என்னை நம்பவைத்ததே ஒழிய என்னைக் குணமாக்கவில்லை. நான் ஒரு கொடூரமான வழக்கறிஞன் என்பது எனக்குத் தெரியும். எதையும், யாரையும் என்னால் நம்பவைக்க முடியும். அப்படி இருக்கும்போது, என்னையே நான் கடவுள் என்று நம்பவைக்க முடியாதா என்ன? நாவல் விஷயத்தில் அதுதான் நடந்தது. நான் கூடுதல் வலுவுடன் என்னைக் கடவுள் என்றே நம்ப ஆரம்பித்தேன்.
இந்த நேரம், தற்செயலாய் எனக்கொரு தெளிவு கிடைத்தது. உலகத்திலுள்ள எல்லாப் படைப்பாளிகளும் தன்னைக் கடவுளின் அவதாரம் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிறையப் பேர் கூச்சப்பட்டு வெளியே சொல்வதில்லை என்ற விஷயம் எனக்குத் தெரியவந்தது. அதாவது, எல்லா எழுத்தாளர்களும் இறையனார்தான். அதனால், இயேசுவின் அவதாரம் என்று என்னை நான் நினைப்பது பெரிய நோயெல்லாம் இல்லை என்ற தெளிவு எனக்குக் கிடைத்தது.
இதன்பின் நடந்த ஒரு விஷயம்தான் முக்கியமானது. எனக்கும் அமலாவிற்கும் 1998இல் திருமணம் நடந்தது. அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாக அவருக்கும் எனக்கும் ஒரே பிறந்தநாள் – ஏப்ரல், 19. இதுவும் தெய்வ சங்கல்பம் இல்லாமல் வேறு என்ன சொல்லுங்கள்?
இந்தத் தைரியத்தில், நான் இயேசுவின் அவதாரம் என்பதை அமலாவிடம் ஓர் அற்புதமான நாளில் சொல்லியும் விட்டேன். இந்த விஷயத்தில் அவர் ஒரே நேரத்தில் புத்திசாலித்தனமாகவும் முட்டாள்தனமாகவும் இருந்தார் என்றே சொல்லவேண்டும். இந்த அவதார விஷயத்தை வெளியே சொல்லவேண்டாம்; பிறர் இதைக் கேட்டு பயப்படலாம் என்று எனக்கு அறிவுறுத்தினார். இது புத்திசாலித்தனம். இதுவும் ஒரு வகையில் சரிதான். ‘மனுமகன் வெளிப்படும் காலம் இன்னும் வரவில்லை’ என்றுதானே நற்செய்தியும் சொல்கிறது. ஆனால், அதன்பின் அவருக்கே ஒரு சந்தேகம் வர ஆரம்பித்தது. ஒரு வேளை இவன் இயேசுவின் அவதாரமாகவே இருந்துவிட்டால்? கடவுளின் மனைவியாக இருக்க யாருக்குத்தான் ஆசையிருக்காது? இந்த இடத்தில் அவர் செய்த முட்டாள்தனம், நான் என்னைக் கடவுள் என்றே நம்பித் தொலைவதற்கு வலுவான காரணமாயிற்று.
0
இவ்வளவையும் நான் எழுத வந்த காரணம் வேறு. நான் கடவுள்தான் என்பதற்கு ஒரு வலுவான சாட்சியம் நேற்று கிடைத்தது.
கடந்த ஒரு மாத காலமாக நான் நோய்வாய்ப்பட்டிருக்கிறேன். எனக்கொரு ரணசிகிச்சை நடந்தது. இப்போது தேவலாம். ஆனால், ஒவ்வொரு முறை ரணத்தைக் கழுவி மருந்திடும்போதும் உயிர் போகும் வலி.
இந்த வலியை என்ன செய்வது என்பதே என்னுடைய சமீபத்திய பிரச்சினையாக இருந்தது. மனத்தளவில் உடைந்துபோயிருந்த முதல் சில நாட்களில் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்த கேள்வி, ‘எனக்கு ஏன் இந்த வலி?’.
வலி, பாவத்திற்கான தண்டனை என்ற பழைய பஞ்சாங்கமே என் மூளையை நிறைத்துக்கொண்டிருந்தது. நான் என்ன பாவம் செய்தேன் என்று பரிதாபமாக எல்லோரையும் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு விபரம் தெரிந்து நான் செய்த பாவம் (அதுவும் பொய் சொன்னதுதான்!) நாற்பது வருடங்களுக்கு முன்பு. அதன்பின் நான் எந்தப் பாவமும் செய்திருக்கவில்லை. அப்படியானால், எனக்கு ஏன் இந்த வலி என்ற யோசனையிலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.
அடுத்த காரியமாக, வலியைத் தத்துவார்த்தமாக விளக்க முடியுமா என்றும் நான் முயற்சி செய்தேன். அதன் முடிவு, நாராசமாயிருந்தது. வலி, உடலின் மடத்தனம் என்ற முடிவிற்கே நான் வந்துசேர்ந்தேன். உடலின் ஒரு பகுதி மூளைக்கு வலியை அனுப்புவது எச்சரிப்பதற்காக இல்லையா? அந்த மூளைக்கே, ஒவ்வொரு நாளும் இந்த நேரத்தில் ரணத்தைக் கழுவும் போது வலிக்கும் என்று தெரிந்த பின்பும், உடலின் பாகம் வலியை மூளைக்கு அனுப்பிக் கொண்டிருப்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம் இல்லையா? ஒரு முட்டாள்தனமான உடலோடும், புத்திசாலித்தனமான மனதோடும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற தெளிவைத் தவிர தத்துவம் எனக்கு வேறு எதையும் தரவில்லை.
எனக்கு ஏன் இந்த வலி என்ற கேள்விக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை. கிடைக்காதவரையில் இந்த வலியைத் தினசரி எதிர்கொள்வதும் சிரமமாக இருந்தது. அந்த நேரம்தான் எனக்கு இந்த விஷயம் விளங்க ஆரம்பித்தது.
‘நீ கடவுளின் அவதாரம்! உனது வலியை நீ ஏன் உனக்கான தண்டனை என்று நினைத்துக்கொள்கிறாய்? கடவுளின் வேலையே, பிறரின் பாவங்களுக்கான தண்டனையைத் தானே ஏற்றுக்கொள்வதுதானே! அந்தவகையில், உன் வலிக்கான காரணத்தை வெளியே தேடு’ என்று எனக்குள் ஒரு குரல் கேட்டது. அவதாரங்களுக்கு இப்படி அசரீரிகள் ஒலிப்பது சகஜம்.
அந்த நேரம்தான் நான் இந்த முடிவிற்கு வந்தேன். எல்லா வகையிலும் நொடிந்துபோயிருக்கும் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்கும் வேலையில்தான் நான் கடந்த இரண்டு வருடங்களாக ஈடுபட்டிருக்கிறேன். பலரும் செய்த பாவத்தின் விளைவாகப் பல்கலைக்கழகம் மரணப்படுக்கையில் இருக்கிறது. அந்தப் பாவங்களுக்கான தண்டனையையே நான் இந்த வலியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் என்ற யோசனை பளீரென்று எனக்குள் எரிந்தபோது நான் அடைந்த விடுதலைக்கு அளவேயில்லை. என் வலிக்கான காரணம் இப்போது எனக்கு விளங்கிவிட்டது. நான், பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த பாவத்திற்கான பரிகாரமாக இந்த வலியை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
இப்படி நினைத்த மறுநாள்முதல் என்னால் வலியை ஒரு வீரனைப் போல எதிர்கொள்ள முடிந்தது. இயேசுவாக நான் முந்தைய பிறவியில் மனுக்குலத்தின் பாவத்திற்காகச் சிலுவையில் துன்பப்பட்டதுபோல, இந்தப் பிறவியில் பல்கலைக்கழகத்தின் பாவத்திற்காக இந்த வலியை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
இப்போது சொல்லுங்கள், நான் கடவுள் அவதாரம்தானே?
பொறுமை பொறுமை! உடனடியாக நீங்கள் எதிர்வினையாற்ற வேண்டாம். நான் கடவுள் என்பதை வெளிப்படுத்தும் காலம் இன்னும் வரவில்லை. அப்படி வரும் நாளில் அது உலகத்தார் அனைவருக்கும் சொல்லப்படும். அதுவரையில் இந்த விஷயத்தை நீங்கள் யாரும் சொல்லவேண்டாம். மனுமகன் வெளிப்படும் காலம் இன்னும் வரவில்லை!
0