Skip to content
Home » யாதும் காடே, யாவரும் மிருகம் #21 – நீல ஆரவாரம்!

யாதும் காடே, யாவரும் மிருகம் #21 – நீல ஆரவாரம்!

நீல ஆரவாரம்!

மலக்குழி மரணங்கள் – விடுதலை சிகப்பி

வீட்டு மலக்குழியில் ஒரு வாரமாய் அடைப்பு
அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி
அந்தணர் கிடைக்காமல்
அயோத்தி வரை சென்று ராமனைக் கையோடு கூட்டி வந்தேன்.

முதலில் மறுத்தவரிடம்
பணம் கூட தருவதாய் கூறினேன்.
ஒரு புட்டி சாராயத்தை
ஒரே மூச்சில் குடித்து
குழிக்குள் இறங்கினான் ராமன்.

இலக்குவனும் அனுமனும் துண்டுப்பீடியில்
ஆளுக்கொரு இழு இழுத்த பின்
வாளி, சொக்கக்கயிறு, அகப்பை, மூங்கில் கழியோடு
உள்ளே இறங்கினார்கள்.

கணவன் கொடுத்த வில் அம்புகளையும்
அனுமனின் கதாயுதத்தையும்
காவல் காத்துக் கொண்டிருந்த சீதாப்பிராட்டி
பசி, என்றாள்.

உயர்சாதியினரின் பசி கொடுமையானது
எனவே, கடைத்தெருவுக்கு சென்று திரும்பினேன்.

மலக்குழியை மூடிவிட்டு
இலங்கை நோக்கி சென்றிருந்தாள் போலும்
சீதாப்பிராட்டி.
அருகில் கிடந்த சிகரெட் அட்டையில்
எழுதியிருந்தாள்.

‘மன்றாடிக் கேட்கிறேன்
மலக்குழியைத் திறக்கவே வேண்டாம்’ என்று.

எனக்கும் மனமில்லை
மலக்குழியைத் திறப்பதற்கு.

0

‘மலக்குழி மரணங்கள்’ என்ற கவிதைக்காக ‘விடுதலை சிகப்பி’ மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதனையொட்டி, கருத்துச் சுதந்திரம், நல்ல கவிதை – கெட்ட கவிதை போன்ற உரையாடல்கள் வலுப்பெற்றுள்ளன.

ஒவ்வொரு முறை கருத்துரிமை மறுக்கப்படும்பொழுதும் இந்த ‘நல்ல – கெட்ட’ பேச்சு உருவாகுவது தமிழ் மரபு. கொஞ்ச வருடங்களுக்கு முன்னால், பெருமாள்முருகனின் ‘மாதொருபாகனுக்கு’ இதே போன்ற பிரச்சினை வந்த போதும், இதே ‘நல்ல – கெட்ட’ படைப்பு பேச்சு மேலெழுந்தது.

என்னைப் பொறுத்தவரையில், கருத்துரிமை என்பது நல்லதைச் சொல்வதற்கு எவ்வளவு தேவையோ அதே அளவு கெட்டதைச் சொல்வதற்கும் தேவை. ஆனால், அந்தக் குறிப்பிட்டக் கவிதையில் என் பிரச்சினை வேறு.

அது என்ன அரசியலைப் பேசுகிறது? அந்த அரசியல் நிலைப்பாட்டிற்காகத்தான் அதன் மீது அடக்குமுறை ஏவப்படுகிறதா? அக்கவிதையை ஆதரிப்பவர்களை விடவும் எதிர்ப்பவர்களே அதை மேலும் மேலும் பரவலாக்குகிறார்களே, ஏன்?

0

விடுதலை சிகப்பியின் கவிதையை, கதை என்றுகூடச் சொல்லலாம். அது, நமக்கொரு கதை சொல்லவா என்கிறது. கதைகள் கவிதை சொல்வதும், கவிதைகள் கதை சொல்வதும் நம் மரபில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கவிதையைக் கதை என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வழக்கமாய் கவிதைகள் தத்தம் கவித்துவத் தன்னிலைகளை அரூபமாகவே உருவாக்கித் தரும். இந்தக் கவிதை அப்படி எதுவும் செய்யவில்லை. சிரமமே இல்லாமல், அந்தக் கவிதையை வாசிக்கிற ‘விடுதலை சிகப்பி’ தான் அந்தத் தன்னிலை என்று சொல்லி விடுகிறது.

‘மலக்குழி மரணங்கள்’ என்ற அக்கவிதை அரங்கேற்றப்பட்ட காணொளியை நீங்கள் பார்த்திருக்க முடியும். அதைத்தான் பலரும் பரவலாக்கினர். அவர் வாசிக்க வாசிக்க, ஒவ்வொரு இரண்டாவது வரிக்கும் அரங்கம் ஆர்ப்பரிக்கிறது. அதைப் புரிந்து கொண்டவர்போல், சில வரிகளை அவர் மீண்டுமொரு முறை வாசிக்கிறார். இதுவொரு உத்தி.

ஆர்ப்பரிப்பைத் திரும்பக் கேட்க முடியும். அதே போல, இப்படியான வாசிப்புக் கவிதைகளில் சந்தம் இருப்பதில்லை; ஆனால், திரும்ப வாசிப்பதன் மூலம் இருக்கிறதோ என்ற சந்தேகத்தை நம்மால் உருவாக்க முடியும். சந்தம் என்பது ஒத்த ஒலிகள் திரும்ப ஒலிப்பது என்று நமக்குத் தெரியும்; திரும்ப வாசிப்பதன் மூலம் சந்தமிருப்பதாய் நம்ப வைக்கும் கவியரங்க மேடைகளின் தொன்று தொட்ட ‘தொத்து மந்திரம்’ இது.

0

இந்த வசனக் கவிதைக்குச் சொல்லப்படும் அரசியல் முக்கியத்துவமும், அது உண்மை என்பது போல் விதிக்கப்பட்ட அரச அடக்குமுறையையும் பற்றியே இங்கு நான் பேச விரும்புகிறேன்.

எனது அடிப்படையான கேள்வி, ஒரு இலக்கியப் படைப்பின் அரசியல் எதிலிருந்து உருவாகுகிறது? அதை எழுதியவனின் அரசியல் நிலைப்பாட்டிலிருந்தா, அல்லது, அந்தப் பிரதிக்கு சொல்லப்படும் விளக்கங்களில் இருந்தா அல்லது, வேறு ஏதேனும் காரணங்களிலிருந்தா?

கவிதையை எழுதியவரின் அரசியல் நிலைப்பாட்டிலிருந்தே அக்கவிதையின் அரசியல் உருவாகுகிறது என்றால், இந்தக் கவிதையைப் பொறுத்தவரை, அது மிக வெளிப்படையானது. நீலம் அமைப்பின் அரசியல் நிலைப்பாடும், அதில் கவிதை வாசிக்கிறவரின் நிலைப்பாடும், அந்த அரங்கத்தில் ஆர்ப்பரிக்கும் வாசகர்களின் நிலைப்பாடும் ஊரறிந்த விஷயம் – தலித் விடுதலை.

அதனால், இந்தக் கவிதை மட்டுமல்ல, அங்கே அனுமதிக்கப்படும் எல்லா பிரதிகளும் தலித் அரசியலைப் பேசுபவை என்றே நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கையை நான் மறுக்கவில்லை, அதே நேரம் பொருட்படுத்தவும் இல்லை. ஏனெனில், வழக்குகள் தலித் அரசியலைப் பேசியதற்காக அல்ல என்பது நமக்குத் தெரியும்.

போடப்பட்ட வழக்குகள், இந்துப் புராணங்களையும் தெய்வங்களையும் அக்கவிதை நிந்திக்கிறது என்று குற்றச்சாட்டுகின்றன. இதிலும் உண்மை இல்லை. ஏனெனில், இந்தியப் புராணங்களையும் தெய்வங்களையும் இதைவிடக் காட்டமாக விமர்சிக்கக்கூடிய பல்வேறு நாட்டார் படைப்புகளையும், நவீன படைப்புகளையும் நாம் கண்டிருக்கிறோம்.

ஓர் உதாரணத்திற்கு, தோற்பாவைக் கூத்தில் நிகழ்த்தப்படும் இராமாயணக் கதையில், உச்சிக்குடுமி – உழுவத்தலையன் கூட்டணி இன்னும் கூடுதலாக ராமனைக் கேலி செய்வதுண்டு; மக்கள் அதையெல்லாம் கடந்தே வந்திருக்கிறார்கள். தலித் அரசியல் அல்ல காரணம்; இந்து தெய்வங்களை நிந்தனை செய்கிறது என்பதல்ல நிஜமான காரணம்; என்றால், அதிகாரம் எதைக் கண்டு மிரள்கிறது?

0

இனி நாம், அந்தப் பிரதிக்குள் பூடகமாய் வேறு ஏதேனும் ஒளிந்திருக்க முடியுமா என்று கேட்டுப் பார்க்கலாம். ஆசிரியனின் அரசியலில் பிரச்சினை இல்லை என்றால், பிரதியில் தானே இருக்க வேண்டும்?

அதைக் கெட்ட கவிதை என்பவர்களை நாம் விட்டுவிடலாம். ஆனால், அந்தப் பிரதியை எதிர்க் கலாசாரப் பிரதியாக ஏற்றுக்கொள்வது பற்றி நாம் பேசலாம். ’மலக்குழி மரணங்கள்’ என்ற தலைப்பே அதன் எதிர்க் குணத்தைச் சொல்வதற்குப் போதுமான சாட்சியம் என்கிறார்கள். நாம் இன்னும் கொஞ்சம் பொறுமையாய் அதை அணுகலாம்.

அந்தக் க(வி)தையில், மலக்குழி அடைப்புள்ள வீட்டைச் சார்ந்த ஒருவனும், அடைப்பை நீக்குவதற்கு நியமிக்கப்படும் ராமன், இலக்குவன் மற்றும் அனுமனும், ராமனின் மனைவி சீதையும் கதாபாத்திரங்களாக வலம் வருகிறார்கள்.

ஒரு வாரமாய் மலக்குழி அடைப்பைச் சரி செய்ய அந்தணர் கிடைக்கவில்லை என்ற தகவலோடு க(வி)தை ஆரம்பிக்கிறது. நீங்கள் இதை இரண்டு விதமாக வாசிக்க முடியும்:

நிஜமாகவே அது மலக்குழி அடைப்புதான் என்றும், அதற்கு அந்தணர்களை அழைப்பது என்றும் விளங்கிக் கொண்டால், அதுவொரு நக்கல். அஃதன்றி, அடைப்பெடுக்கும் திருப்பணியை அந்தணரே செய்வார் என்று சொன்னால், ‘மலக்குழி’ உருவகமாய் நிற்கும் சாத்தியம் உள்ளது. அப்படியானால் அதுவொரு படிமக்கவிதை. ஆனால், அடுத்த வரியிலேயே படிம யோசனை மறுக்கப்பட்டு நக்கலே என்று உறுதியாகிறது. அந்தணர் கிடைக்காமல், ராமனை அழைத்து வந்தேன் என்று சொல்வதன் மூலம், இதுவொரு கேலிச்சித்திரக் கவிதை என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

0

அதன் பின் ராமனாகட்டும் இலக்குவனாகட்டும் அனுமனாகட்டும், தத்தம் தொன்மக் குணங்களை விட்டுவிட்டு, ஒரு சாதாரண மலக்குழி அடைப்பு நீக்கும் தொழிலாளியாகவே மாறிப்போகிறார்கள். ஒரு புட்டி சாராயத்தைக் குடிப்பது, துண்டு பீடியை இழுப்பது, வாளி – கயிறு – அகப்பை – மூங்கில் கழியோடு அடைப்பை நீக்கக் கிளம்புவது என்று அவர்களின் செயல்கள் தலித் தொழிலாளர்களின் வருந்தத்தக்க சூழலைச் சுட்டுகிறது. தங்களது தொன்ம வல்லமைகளான, வில்லம்பு – கதாயுதம் அனைத்தையும் சீதையின் பாதுகாப்பில் விட்டு வைக்கின்றனர்.

நக்கலாகவும் கேலியாகவும் ஆரம்பிக்கப்பட்ட கவிதை கழிவிரக்க நிலைக்கு உள்ளாகும் இடம் இது. மலக்குழிக்குள் இறக்கிவிடப்படும் தெய்வங்கள்கூடத் தத்தம் வல்லமையை இழந்துவிடுகின்றன என்ற தகவல் அத்தொழிலின் கொடூரத்தையே விளக்குகிறது. (இதற்கெல்லாம் வாசகர்கள் ஆர்ப்பரித்தார்கள் என்பது வேறு விஷயம்!).

க(வி)தையின் இந்தத் தருணம் எனக்கு முக்கியம் என்று பட்டது. மலக்குழி. அடைப்பு என்றல்ல, அதற்கு இணையான அல்லது விஞ்சிய வேறு சவால்களையெல்லாம் இதே கதாபாத்திரங்கள் புராணங்களில் எதிர்கொண்டிருப்பதை நாம் அறிவோம். ராமன் – இலக்குவனின் வில்லாலும், அனுமனின் கதாயுதத்தாலும் சாதிக்க முடியாத விஷயம் இவ்வுலகத்தில் இல்லை என்ற பட்சத்தில், ஒரு வார மலக்குழி அடைப்பு அவர்களை நிலைகுலைய வைக்கிறது என்ற செய்தியை நான் சாதகமாக வாசித்தேன்.

க(வி)தையில் ‘ராமன் அன் கோ’ தத்தம் ஆயுதங்களோடு மலக்குழிக்குள் இறங்கியிருந்தால், இக்கவிதை ராமாயணத்தின் கிளைக்கதைகளில் ஒன்றாக மாறியிருக்கும். ஆனால், க(வி)தையில் அவர்கள் உடனடியாக சாதாரண மனிதர்களாக மாறி விடுகின்றனர். அவர்களுக்கு சாராயமும், பீடியும், மூங்கில் கழி உள்ளிட்ட சாதனங்களும் தேவைப்படுகின்றன. இந்த இடத்தில்கூட கவிதை முடிந்திருக்கலாம் என்று தோன்றியது. முடிந்திருந்தால், மலக்குழி அடைப்பு வேலை எத்தனைக் கொடுமையானது என்ற உணர்வைக் கடத்தியதோடு நிறைவு பெற்றிருக்கும்.

ஆனால், க(வி)தை மேலும் தொடர்ந்தது. இந்தப் பகுதியில், சீதை புகுந்து விளையாட ஆரம்பிக்கிறாள். அதாவது, கொலை செய்கிறாள். அதுவும், கவிஞருக்குக் கூடத் தெரியாமல் சாட்சியம் இல்லாக் கொலையைச் செய்கிறாள்.

தங்களது தெய்வாம்சத்திற்குக் கொஞ்ச நேரம் ஓய்வு கொடுத்துவிட்டு, சாதாரண மனிதர்களைப் போல மலக்குழிக்குள் இறங்கிய மூவரையும், சீதா மலக்குழிக்குள்ளேயே கொன்றுவிடுகிறாள். இந்தச் செய்தி ஒரு சிகரெட் அட்டையில் கவிஞருக்கு மட்டும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. கூடவே அதிலொரு மன்றாட்டும் உண்டு: தயவு செய்து மலக்குழியைத் திறந்து விடாதீர்கள்! அதாவது, திறந்து அந்தப் பாவிகளைக் காப்பாற்றிவிடாதீர்கள். இந்த முடிவில் கவிஞர் தனக்கும் உடன்பாடு என்கிறார். (எனக்கும் மனமில்லை, மலக்குழியைத் திறப்பதற்கு!).

0

இந்தக் க(வி)தை என்ன பேச வருகிறது என்று நாம் குழம்ப ஆரம்பிக்கிறோம். கவிஞரின் வேண்டுகோளுக்காகச் சாதாரண மனிதர்களைப் போலத் தங்களை மாற்றிக் கொண்ட தெய்வங்களை ஏன் கொல்லவேண்டும்? அதாவது, நிராயுதபாணிகளை!

அவர்களைக் கொல்வதற்கான காரணங்கள் இராமாயணக் கதையில் சீதைக்கு ஆயிரம் இருக்கலாம். இராவணனைக் காட்டிலும் ராமனே அவளை அதிகமும் துன்புறுத்தியவன் என்பதுகூட உண்மையாக இருக்கலாம். ஆனால், சீதை இந்தக் கவிதையில் ஏன் அந்தக் கொலையைச் செய்யவேண்டும்?

எனக்குத் தெரிந்து, மலக்குழிக்குள் அடைப்பை நீக்க ஒப்புக்கொண்டதே அவர்கள் வாழ்நாளில் நியாயமாய் நடந்து கொண்ட முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். தனது ஒற்றை அம்பால் அல்லது கதாயுதத்தின் ஒற்றை வீச்சால் மலக்குழி அடைப்பை அவர்களால் நீக்க முடிந்திருக்கும். ஆனால் அவர்கள் அப்படி ஏதும் பித்தலாட்டம் செய்யவில்லை. முதன் முதலாய் சுத்த சுயம்பரமாய் செயலாற்ற ஆரம்பிக்கிறார்கள். இந்த நேரம் இடையில் புகுந்து சீதை அவர்களைக் கொன்று விடுவதும், அதைக் கவிஞரும் ஆமோதிப்பதும் எந்த ஊர் அரசியல் என்று தெரியவில்லை. கடவுளைக் கந்தசாமிப் பிள்ளை கொன்று விடுவதாக நினைத்துப் பாருங்கள்!

கவிதை தான் கோருகிற அரசியலுக்கு எதிராகத் திரும்புவதை உங்களால் உணரமுடிகிறதா? ஒரு தலித்தாக வாழ்ந்து பார்க்கக் கடவுளே முன்வந்தாலும், அவரைக் கொன்று விடுவதை தலித் அரசியல் என்று நிச்சயமாய் சொல்ல முடியாது. ஒரு சிறு கணத்தில், கவிதையின் நோக்கம், கடவுளைக் கொல்வதாகவும், சீதைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பழிவாங்குவதாகவும் மாறிவிடுகிறது. நிராயுதபாணி ஆண்களைக் கொல்வதை பெண்ணியமும் ஆதரிக்காது என்ற நம்பிக்கையில், அக்க(வி)தை தலித் – பெண்ணிய அரசியலுக்கு எதிராகத் திரும்புவதை நாம் உணரலாம் (இந்தத் தருணத்திலும் வாசக ஆரவாரம் அடங்கவில்லை).

இங்கே நாம் விசித்திரமான ஒரு விஷயத்தை எதிர்கொள்கிறோம். பிரதி அளவில், தலித் அரசியலுக்கு எதிரான தன்மையை வெளிப்படுத்தும் கவிதையை, அதன் வாசகர்களும் சரி, அரசும் சரி எவ்வாறு தலித் ஆதரவுக் கவிதையாக வாசிக்கிறார்கள்? வாசித்து, ஆர்ப்பரிக்கவும், கருத்துரிமையைப் பறிக்கவுமாக இருக்கிறார்கள்? நான் பேச வந்த விஷயத்திற்கு ஒருவழியாய் வந்துவிட்டேன்!

0

விடுதலை சிகப்பி, தலித் ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதே போல, நீலம் அமைப்பும் தலித் அரசியலையே முன்னெடுக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துகள் இல்லை. ஆனால், தலித் அரசியலோடு எழுதப்படுகிற பிரதி அதற்கு எதிரான பிரதியாகவே மாறிவிடக்கூடும் என்பதை நாம் மறக்கக்கூடாது.

நான் ஏற்கனவே பலமுறை இது குறித்து எழுதியிருக்கிறேன். அதீதக் கதையாடலின் குணங்களை வரிசைப்படுத்தும் கட்டுரையில் நான் மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். கதையாடல்கள், மானுடர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை; அனுபவங்களைப் பேசுபவை அல்ல; அறிவைப் பகிரும் சாதனமும் இல்லை.

இதன்படி, ஒரு படைப்பாளி தனது அரசியல் ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக நின்றுகூட ஒரு படைப்பை உருவாக்கியிருக்கலாம். அதன்மூலம், அவர் தன் அரசியல் அறிவை வாசகர்களுக்குக் கடத்திவிட்டதாகக்கூடத் திருப்தி அடைந்திருக்கலாம். ஆனால், அப்படைப்பு அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அது கதையாடல் என்ற தன்மையை அடையும்போது, யாராலும் தீர்மானிக்க முடியாத தற்செயல்கள் நிகழ ஆரம்பிக்கின்றன.

அப்படியொரு தற்செயலாக, விதலை சிகப்பியின் கவிதை அரசியல் நிலைப்பாட்டில் தடுமாறத் தொடங்குகிறது. இந்தத் தடுமாற்றம், பிரம்மாண்ட தொன்மக் கதையாடலை அணுகும்போது நேரும் தடுமாற்றம். ராமாயணத்தைத் தொட்டுவிட்ட மறுகணமே, அதனுள் காலம் காலமாய் ஊடாடிக் கொண்டிருக்கும் பெண்ணிய அரசியல் உங்களை மயக்க ஆரம்பிக்கிறது. இப்பொழுது நீங்கள் இன்னொரு கதையாடல் திரியால் ஏமாற்றப்பட்டு, தலித்திய நிலைப்பாட்டிலிருந்து வெளியேறி விடுகிறீர்கள்.

0

ஓர் உதாரணத்திற்கு இப்படி யோசித்துப் பாருங்கள்: இந்தக் கதையில் இரண்டு சாத்தியங்கள் இருந்தன. மலக்குழி அடைப்பை எடுக்க வேண்டும் என்று அழைத்ததும், ராமன் வகையறாக்கள் தத்தம் வல்லமையால் அதை நிவர்த்தி செய்ய முன்வந்திருக்கலாம். அப்படி வந்திருக்கும் பட்சத்தில், கவிஞர் தனது நோக்கம் நிறைவேறாத ஏமாற்றத்தில் இருந்திருப்பார். அந்நேரம், சீதை மலக்குழியை மூடி அவர்களைக் கொன்று விடலாம் என்று முடிவு செய்திருந்து, அதைக் கவிஞரும் ஆமோத்திருந்தால் கவிதையின் தன்மையே வேறாக இருந்திருக்கும்.

இன்னொரு சாத்தியமாக, ராமன் அன் கோ தத்தம் தெய்வாம்சத்தைக் கலைத்துவிட்டு சாதாரண மனிதர்களாக மாறும்பொழுது, கவிஞரின் கனவு பலித்துவிட்டது என்றே அர்த்தம். மலக்குழி மரண அவஸ்தையைக் கடவுளுக்கே விளங்க வைக்க உங்களுக்கொரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. மலக்குழிக்குள் இறங்கியுள்ள சாதாராமன் அன் கோவைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இப்பொழுது தலித் அரசியலுக்கு இருக்கிறது. ஏனெனில், முதல் முறையாக மலக்குழி அவமானங்கள் கடவுளின் மூலம் ஒட்டுமொத்த உலகிற்கும் தெரியப்போகிறது. இந்த நேரத்தில் சீதை என்ன, இராவணன் கூட மீண்டு வந்து ராமனைக் கொல்ல முயன்றால், நிச்சயமாய் தலித் அரசியலில் நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள்.

தொன்மங்களை மறுவாசிப்பு செய்வது எவ்வளவு கடினம் என்பதை இப்பொழுது நீங்கள் உணர்ந்திருக்க முடியும். என்னால் சொல்ல முடிகிற ஒரு நல்ல உள்ளூர் உதாரணம் புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்தான். உலகிற்கு வந்த சிவபெருமானை, எந்தத் திருவிளையாடல்களும் இல்லாமல் சாதாரண மனிதனைப் போல வாழ வேண்டும் என்று நிர்பந்திக்கிற புபி, அதன் மூலம் எளியவனின் இயலாமையைக் கடவுளுக்கு மட்டுமல்ல, வாசகர்களாகிய நமக்கும் விளங்க வைத்ததே அக்கதையாடலின் வெற்றி. இப்படியான சாத்தியமிருந்தும் அதைத் தொலைத்துவிட்ட ‘மலக்குழி மரணங்கள்’, எதற்காக நண்பர்களால் கொண்டாடவும், அதிகாரத்தால் பழிக்கவும் படுகிறதோ அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதே என் கருத்து.

0

இனி நாம் இறுதிக் கேள்விக்கு வரலாம். தலித் அரசியலுக்கு எதிரான பிரதி, தலித் ஆதரவுப் பிரதியாக வாசிக்கப்படுவது எப்படி? அதிலும், அதை ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி எப்படி ஒரே மாதிரியான தவறைச் செய்கிறார்கள்? இன்னும் தீர்க்கமாய் கேட்பது என்றால், தலித் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் இணையும் புள்ளி எது?

அதீதக் கதையாடலியலில் சொல்லப்படும் மூன்றாவது விஷயத்தை நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வேன். அதன்படி, எந்தவொரு கதையாடலும், அறிவையோ அனுபவத்தையோ அல்ல, உணர்வையே கடத்திக்கொண்டிருக்கிறது. ஒரு பிரதியில் அரசியல் எதிர் நிலைப்பாடே வெளிப்பட்டாலும், அது கதையாடலாக நிகழ்த்தப்படும் பொழுது, அதற்கு சற்றும் பொருத்தமற்ற உணர்வைக்கூட அடைய முடியும் என்பதற்கு இந்தக் கவிதை மிகச்சிறந்த உதாரணம்.

நீலம் பண்பாட்டு மையம் என்ற தளத்தில் வாசிக்கப்படும் ஒரு பிரதி, மொழியால் செய்யப்பட்ட பிரதியாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அந்தக் கவிதையை விடுதலை சிகப்பி வாசிக்கும் காணொளியை ஒரு முறை மீண்டும் கேட்டுப் பாருங்கள். அங்கே, எழுப்பப்படும் ஆரவாரம் அக்கவிதைக்கானது அல்ல என்பது உங்களுக்கு விளங்கும். ஏனெனில் அப்பிரதியை உள்வாங்கிக் கொள்ளும் சூழல் அங்கே கொஞ்சமும் இல்லை என்பதை உங்களால் எளிதில் உணர முடியும்.

அங்கே, ஏற்கனவே நிறுவப்பட்ட ‘தலித் அரசியல் தளம்’ என்ற மயக்கும் கதையாடல் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அதனால் அங்கே எழும்புகிற ஆரவாரம் வாசிக்கப்படும் பிரதிக்கானது அல்ல. தலித் அரசியல் நிலைப்பாடு, அறிவுபூர்வ தளத்திலிருந்து வெளியேறி, வெற்று உணர்வுத் தளத்தை அடைவதன் விளைவு இது.

நீலம் மேற்கொள்ளும் பெரும்பான்மை செயல்பாடுகள் இப்படியான ‘வெற்று உணர்ச்சிவசமாகவே’ மாறிப்போவது இது முதல் முறை அல்ல. என்றைக்கு, தலித் அரசியலை, காட்சிப் பெருமிதங்களாகத் திரைப்படங்களில் சித்தரிக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து தொடரும் சீர்கேடு இது. கபாலி, காலா படங்களே இதன் ஆரம்பம். அச்சீர்கேட்டின் வெவ்வறு வடிவங்களையே நீலம் பண்பாட்டு மையத்தின் அத்தனை நடவடிக்கைகளும் பிரதிபலிக்கின்றன.

அரசு இயந்திரமும் சரி, தலித் எதிர்ப்பாளர்களும் சரி, அக்கவிதையில் இந்துக் கடவுள்களை நிந்தனை செய்ததாய் விளங்கிக் கொண்டதும் இந்த ‘வெற்று தலித் உணர்ச்சிப் பரவசத்தை’ முன்வைத்தே என்பது இப்பொழுது உங்களுக்கு விளங்கியிருக்கும்.

0

அப்படியானால், அந்தக் கதையாடலில் உருவாக்கப்படும் அர்த்தம் என்ன என்று நீங்கள் கேட்கலாம்.

நீலமும் அவர்கள் கட்டமைக்க விரும்பும் கதையாடலும் ‘உணர்ச்சிகரத் தலித் தன்னிலையைத்’ தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. அதில் காரணகாரியமற்ற ஆரவாரத்தையும், ஆர்ப்பரிப்பையும் தவிர வேறு ஒன்றும் இல்லை. இப்படியொரு சாரமற்ற தலித் தன்னிலையைக் காட்சி வடிவில் உருவாக்கி வருவதிலுள்ள ஆபத்தை அவர்கள் உணரவில்லை.

0

பகிர:
டி. தருமராஜ்

டி. தருமராஜ்

மானுடவியல், நாட்டார் வழக்கியல், பண்பாடு, வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் இயங்கி வருபவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர். சமீபத்தில், தேர்வாணையாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’, ‘அயோத்திதாசர் : பார்ப்பனர் முதல் பறையர்வரை’, ‘இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?‘ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு : tdharmaraj67@gmail.comView Author posts

3 thoughts on “யாதும் காடே, யாவரும் மிருகம் #21 – நீல ஆரவாரம்!”

  1. I sympathise with the agony of those who have to make a living by cleaning septic tanks and underground drainage lines in cities. The Govt has also prohibited the manual cleaning of them. The public as a whole recognises the hazards these workers and are grateful to them.
    What pushes these sanitary workers into such jobs? The lack of other employment opportunities and the income from them. Is there a compulsion to make them do that work? I doubt much.
    In these circumstances, does this poem(?) achieve any purpose? I do not think so.
    Dalit organisations may use them to gather followers.
    Needless confrontation with others would waste energy and result in diversion of attention.

  2. ஜெகன் பறையனார்

    அண்ணன் ரஞ்சித் மீதும் நீலம் அமைப்பின் மீதும் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு எங்களுக்குப் புதுசு இல்லை. அதுவும் பேராசிரியர் போர்வையில் உலாவும் இவர் எத்தனை நயவஞ்சகமானவர் என்பது எங்களுக்கு நல்லாவே தெரியும். தொடர்ச்சியாக பறையர் இனத்தின் மீது இவர் காட்டி வரும் வெறுப்பு இக்கட்டுரையில் நல்லாவே வெளிப்பட்டு விட்டது. விடுதலை சிகப்பி, தலித் அரசியல் பாசறையில் படித்தவர். அவரது கவிதைகள் எளிய மக்களுக்காக எழுதுகிறார். பேராசிரிய மூளைக் கொளுத்தவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக வருத்தம் இல்லை. உட்சாதி வன்மம் ரொம்ப நாளைக்கு தாங்காது. அறிஞர் ஸ்டாலின் ராஜாங்கத்தைப் பார்த்தாவது இவரைக் கத்துக் கொள்ள சொல்லுங்கள்.

  3. மிக நிதானமான கட்டுடைப்பு. கவிதைக்குள் செயல்படும் கதை வடிவம் என்பது கதை என்பதாக வாசிக்கப்படும் உரைநடை பிரதிகளிலிருந்து வேறுபட்டது என்பது கவிதை எழுதுபவருக்கு நினைவில் இருந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. மலக்குழி கவிதையில் செயல்படும் கதை அவ்வகைப்பட்டதாக இருப்பதே அதன் பூமராங் விளைவுக்கு காரணம். உரைநடை வடிவ கதையில் செயல்படும் கடந்த காலத்தின் தடங்கள் கவிதை சொல்ல முயலும் கதை வடிவத்தில் பொருந்துவதில்லை. பொருந்தினால் அது கவிதை அடையாளத்தை இழந்துவிடுகிறது.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *