நீலம் இதழில், கருத்துச் சுதந்திரமும் அறமும் என்ற பொருளில் (இலக்கியக் களமும் கருத்துரிமைக் களமும், நீலம், ஜூன் 2023) பெருமாள்முருகன் நீண்ட வியாசமொன்றை எழுதியிருக்கிறார். ‘நீல ஆரவாரம்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினையாக அது வெளியிடப்பட்டிருக்கிறது. விடுதலை சிகப்பியின் கவிதையை நான் வாசிக்கும் முறையே தவறானது என்று சொல்லும் பெருமாள்முருகன், பின் நான் சொல்வது அப்படியே சரியாக இருந்தாலும், என்னிடம் அறம் இல்லை என்று சொல்லி கட்டுரையை நிறைவு செய்கிறார்.
என் கட்டுரைக்கு மறுப்பு எழுத ‘நீலம்’ ஏன் பெருமாள்முருகனை அழைத்து வர வேண்டும் என்ற ரகசியங்களுக்கெல்லாம் நான் போக விரும்பவில்லை. எனது அக்கறையெல்லாம், அக்கட்டுரையில் இத்தனைக் குழப்பங்களோடு தப்பும்தவறுமாக ‘கருத்துச் சுதந்திரம்’ புரிந்து கொள்ளப்படுவது ஏன் என்பதுதான்.
இதே பெருமாள்முருகனுக்கு ‘மாதொருபாகன்’ நாவல் மூலமாக அச்சுறுத்தல் வந்தபோதும், என் நிலைப்பாடு இதுவாகவே இருந்தது. கருத்துச் சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. அதற்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு அதிகாரத்தையும் கண்ணைமூடிக் கொண்டு எதிர்ப்பதே என் அரசியல் நிலைப்பாடு. இப்பொழுதும் நான் அதையே சொல்கிறேன். விடுதலை சிகப்பி ஒரு கவிதை எழுதினார் என்பதற்காக அவருக்கு நீதிமன்றம் மூலமாகவோ அல்லது வேறு அமைப்புகள் மூலமாகவோ எந்தத் தண்டனையையும் யாரும் வழங்கிவிட முடியாது. அப்படி நடந்தால் நாம் ஜனநாயகத்தை இழந்துவிட்டோம் என்று அர்த்தம்.
வழக்கமாக, ஜனநாயக அரசியலமைப்பில், படைப்பிற்காகப் படைப்பாளியைத் தண்டிக்கும் பழக்கம் தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது. அது அவ்வளவு எளிதான காரியமும் இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால், ஜனநாயக அரசாங்கத்தால் ஒரு படைப்பைத் தடை செய்ய முடியுமே தவிர, சல்மான் ருஷ்டிக்கு விதித்தது போலெல்லாம் மரணதண்டனை விதித்துவிட முடியாது. ஒரு கவிதைக்காகப் பதியப்படும் வழக்குகள் நீதிமன்றத்தில் தோற்றுப் போவதற்குத்தான் அதிக சாத்தியம் உள்ளது. ஏனெனில், நீதிமன்றம், முழுக்க முழுக்கத் தரவுகளின் அடிப்படையில் இயங்கக்கூடிய அமைப்பு; இலக்கியமோ, தரவுகளுக்கு எதிரான புனைவில் பயணம் செய்கிறது.
இதனாலேயே காலம் காலமாகக் கலைப்படைப்புகளை அதிகாரம் அச்சுறுத்தலாகவே பார்த்து வந்திருக்கிறது. ஏனெனில், கலை, தன்னை உண்மையல்ல என்று சொல்லி உண்மையைப் பேசக்கூடியது. அதில் வெளிப்படும் உண்மை ஸ்தூலமானது அல்ல என்பதால், உங்களால் அளந்து பார்க்கவோ, நீக்கிவிடவோ முடியாது. அதனால், ஒரு கலைப்படைப்பை என்றைக்குமே நீதிமன்றக் கூண்டுகளில் ஏற்றிவிட முடியாது.
அரச அதிகாரமோ நீதிமன்ற அதிகாரமோ ஒரு படைப்பின் விநியோகத்தை மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். அதை விற்கக்கூடாது என்று சொல்லலாம், பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கச் சொல்லலாம், அச்சிடக்கூடாது என்று சொல்லலாம், பகிரக்கூடாது என்று சொல்லலாம். இதன் எந்தச் சூழலிலும் அப்படைப்பை எழுதியதற்காக அப்படைப்பாளியை உங்களால் துன்புறுத்திவிட முடியாது.
இன்று நேற்று அல்ல, காலங்காலமாக இதுதான் அதிகாரத்திற்கும் கலைக்குமான உறவு. ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ என்று சொல்லி கவிஞர்கள் தலைநிமிர்ந்து நடந்திருக்கிறார்கள். ‘நாமார்க்கும் குடியல்லோம்’ தான் ஒரு உதாரணக் கலைஞனின் தன்னிலை. கேள்வி கேட்க முடியாத வானளாவிய அதிகாரம் கொண்ட அரசாண்மையால்கூட கலைஞனை ஒரு படைப்பிற்காக தண்டிக்க முடிந்ததில்லை.
மேலும், விடுதலை சிகப்பியின் கவிதை விவகாரத்தில் நான் எழுப்பிய கேள்வி அதில் மலிந்திருக்கும் ‘பொருட்குற்றம்’ பற்றியது மட்டுமே. இதை நான் மிகத் தெளிவாகவே அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். உண்மையில் அக்கவிதையில் இல்லாத அர்த்தங்களையெல்லாம், நீலத்தின் சூழலே உருவாக்கித் தருகிறது என்பதுதான் என் குற்றச்சாட்டு.
அக்கவிதை நிகழும்போது உருவாக்கப்படும் பொருட்குற்றத்தையே நான் திரும்பத் திரும்ப விமர்சிக்கிறேன். அது, நிச்சயமாக அந்தக் கவிஞன் உருவாக்கியது அல்ல; அக்கவிதைப் பிரதியிலும் அதற்கான நியாயங்கள் இல்லை. இத்தனையையும் மீறி, அக்கவிதை வாசிப்பு இப்படியொரு ஆரவாரத்தைத் தோற்றுவிப்பதன் அரசியலையே நான் என் கட்டுரையில் விமர்சிக்கிறேன்.
இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், தமிழில் ஜெயமோகன், எஸ்ரா, சாரு, கோணங்கி, மனுஷ்யபுத்திரன் போன்ற எழுத்துப் பீடங்களைப் போல, சினிமாக் கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு ரஞ்சித் தனக்குக் கட்டியெழுப்பும் நீலப்பீடத்தினால் நிகழும் கோளாறுகளையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். எனது விமர்சனப்படி, அக்கவிதை இந்த வழக்குகளுக்கெல்லாம் தகுதியற்றது.
இதையெல்லாம் வசதியாக மறந்துவிடுகிற பெருமாள்முருகன், இறுதியில் அறம் போதிப்பதுதான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. சந்தடிசாக்கில், விடுதலை சிகப்பிக்கு நேர்ந்ததே தனக்கும் நேர்ந்தது என்று ஒரு கதையையும் அவர் அவிழ்த்துவிடுகிறார்.
பெருமாள்முருகனின் மாதொருபாகனுக்கு ஏற்பட்ட சிக்கல் முற்றிலும் வேறு மாதிரியானது. மலக்குழி மரணம் கவிதையில் வழக்கிற்கான காரணங்களே இல்லை என்று நான் சொல்வதுபோல, மாதொருபாகனுக்குச் சொல்ல மாட்டேன். ஏனெனில், மாதொருபாகன் நாவல் என்று தன்னை அழைத்துக் கொண்டாலும், கள ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது என்றும் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்கிறது. அதாவது, தமிழில் வினோதமாகக் கண்டெடுக்கப்பட்ட ‘இனவரைவியல் நாவல்’ என்ற வகைமைக்குள் அது தன்னைப் பொருத்திக் கொள்கிறது.
வழக்கமாய், கலைப்படைப்புகள் முன்மொழியும் ‘பொறுப்புத் துறப்பிற்கு’ மாற்றாக, இவ்வகை நாவல்கள் தங்களை உண்மை என்று பறைசாற்றிக் கொள்கின்றன. IFA வால் வழங்கப்பட்ட நிதியுதவியின் காரணமாக பெருமாள்முருகன் அப்படிச் சொல்ல நேர்ந்தது என்றாலும், அந்த உண்மைத்தன்மைக் கோரலே அந்நாவலுக்கான அச்சுறுத்தலை உருவாக்கியது.
அப்பிரதிக்குச் சமூக அளவில் எதிர்ப்புக் கிளம்பியபோது, மானிடவியல் பேராசிரியர் ஆ.செல்லப்பெருமாள் போன்றோர் தொடர்ச்சியாக அந்நாவலுக்குக் கண்டனம் தெரிவித்ததையும் நாம் கவனிக்க வேண்டும். மானிடவியலில் இனவரைவியல் கட்டுரைகளே புனைவின் சாத்தியங்களைப் பயன்படுத்தி, நிஜ மனிதர்களின் அந்தரங்கங்களைக் காப்பாற்ற முனையும் போது, புனைவுகள் தங்களை உண்மை என்று சொல்லி தனிமனித அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைவதை என்னவென்று சொல்வது?
இனவரைவியல் நாவல்கள் அனைத்திற்கும் இந்தச் சிக்கல் உண்டு. ‘ஆழி சூல் உலகு’, ‘கொற்கை’ போன்ற நாவல்களை எழுதிய ஜோ டி குரூஸ் அந்நாவல் நிகழும் தனது சொந்த ஊர்களுக்குள் நுழைய முடியவில்லை என்றொரு கதை உண்டு. அக்கிராமங்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் பல மனிதர்களும் தங்களது அந்தரங்கம் அம்பலப்பட்டது என்று எதிர்ப்பு தெரிவித்ததாய் சொன்னார்கள். ஒரு கலைப்படைப்பின் சுதந்திரம் முக்கியமா தனிமனிதனின் அந்தரங்கச் சுதந்திரம் முக்கியமா என்று கேட்டால், தனிமனித சுதந்திரத்தையே நான் ஆதரிப்பேன்.
மாதொருபாகனுக்கு ஏற்பட்ட நீதிமன்ற நெருக்கடி, அதன் கலைத்தன்மை குறித்தது அல்ல என்பதை பெருமாள்முருகன் தனது கட்டுரையில் திட்டமிட்டே மறைக்கிறார். மறைப்பதோடு, மலக்குழி மரணம் கவிதையோடு தன்னைப் பொருத்திக் கொள்வதன் மூலம், தனது பிரதியைத் தொடர்ந்து நியாயப்படுத்தவும் செய்கிறார்.
என்னைப் பொறுத்தவரை, இனவரைவியல் நாவல்கள் என்று சொல்லிக் கொள்வதைப் போல பெரிய தகிடுதத்தம் எதுவுமிருக்கவில்லை. உண்மைக்கான பொறுப்பை தட்டிக் கழித்தபடி யாராலும் இனவரைவியலை எழுத முடியாது. அந்த வகையில் இனவரைவியல் புனைவுகள், ஒரு பெரும் ஏமாற்றுவேலை.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பெருமாள்முருகன் எனக்குப் பரிந்துரைக்கும் அறம் இன்னும் வேடிக்கையானது. கலைஞனின் கருத்துச் சுதந்திரத்தை நீதிமன்றத்தில் பாதுகாப்பதற்காக என்னைப் போன்றவர்கள் வாய்மூடி இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். அதாவது, என் போன்றவர்களின் எழுத்துகள் வழக்கில் எதிர்மறை விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்று எச்சரிக்கிறார். அதற்காக, நாங்கள் அப்படைப்பை நியாயப்படுத்தி எதையாவது எழுத வேண்டும், அல்லது குறைந்தபட்சம் எதுவும் பேசாமலாவது எழுதாமலாவது இருக்க வேண்டும் என்கிறார். ஒரு கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க, உங்களால் பரிந்துரைக்க முடிவது என்னைப் போன்றோரின் கருத்திற்கு எதிரான அடக்குமுறைதான் என்றால், நீங்கள் பேசும் அறத்தின் லட்சணம் இவ்வளவுதான்.
பெருமாள்முருகன், மலக்குழி மரணங்கள் கவிதைக்குக் காட்டும் அக்கறை உண்மை என்றால், அவருக்கு என்னிடம் ஒரு பரிந்துரை இருக்கிறது. என் போன்றோரின் குரல்வளைகளை நெறிப்பதை நிறுத்திவிட்டு, மாதொருபாகனுக்கு நேர்ந்த அடக்குமுறையை நான் எவ்வாறு வென்றேன், பின் அந்த அச்சுறுத்தலையே மூலதனமாகக் கொண்டு உலக அங்கீகாரத்தை எப்படிப் பெற்றேன் என்ற சூட்சுமங்களை விடுதலை சிகப்பிக்கும் நீலத்திற்கும் கற்றுத் தந்தால் இன்னும் பிரயோஜனமாக இருக்கும்.
0
உச்சந்தலையில் ஆணி அடித்தது போல சொல்லியிருக்கிறது.
பெருமாள்முருகன் சந்தர்ப்பவாதியோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கோழையைப் போல அவர் எதிர்கொண்டார் என்பதும் என் கணிப்பு. இன்று, மலக்குழி மரணங்கள் கவிதைப் பிரச்சினையில் அவர் மீண்டும் சுயநலத்துடன் பேசுவதாகத் தான் எனக்குப் பட்டது. அதை மிகச் சரியாக வெளிப்ப்டுத்தியிருக்கிறீர்கள். ஆனால், நீலம் ரஞ்சித் பற்றிய உங்கள் கணிப்பு அதிகபட்சமோ என்று தோன்றுகிறது. பல்வேறு சாதிப்பீடங்கள் இருக்கும் போது, ரஞ்சித் தலைமையில் ‘பறையர் பீடம்’ அமைவதில் என்ன தவறு? ஜெயமோகன் முதல் ரஞ்சித் வரை என்று சுயமோகத்தை பொதுவாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஜெ, சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் போன்ற பலரும் செய்வது அநியாயம், ஆனால் அந்த வரிசையில் ரஞ்சித்தை வைக்க வேண்டாம். ரஞ்சித் ஒரு படையைத் திரட்டுகிறார் என்றால் அதை நாம் பாராட்டவே வேண்டும்.
இவர் சொல்லி இருப்பது ரஞ்சித்தின் “அறிவுப் பீடம்” என நினைக்கிறேன். அவருக்கு எதுக்கு சாதி பீடம்?
சார், கடைசி பத்தி வன்மக் கேலி அவசியம் தானா? “மாதொருபாகனுக்கு நேர்ந்த அடக்குமுறையை நான் எவ்வாறு வென்றேன், பின் அந்த அச்சுறுத்தலையே மூலதனமாகக் கொண்டு உலக அங்கீகாரத்தை எப்படிப் பெற்றேன் என்ற சூட்சுமங்களை விடுதலை சிகப்பிக்கும் நீலத்திற்கும் கற்றுத் தந்தால் இன்னும் பிரயோஜனமாக இருக்கும்.”. சாரு நிவேதிதா போன்றோர் தொடர்ந்து பெருமாள்முருகன் பெறும் உலகக் கவனத்தை நினைத்துப் பொருமுவதற்கும் இந்த வரிகளுக்கும் என்ன வித்தியாசம்? மொத்த கட்டுரையும் தர்க்கரீதியாய் இருக்கும் போது, இந்த பத்தி மட்டும் ஒரு மாற்றுக் குறைவாகத் தெரிகிறது.