Skip to content
Home » இரவாடிய திருமேனி – மையிருளுக்குள் மறைந்த மெய் இருளைப் பேசும் காவியம்

இரவாடிய திருமேனி – மையிருளுக்குள் மறைந்த மெய் இருளைப் பேசும் காவியம்

விமர்சனம்: இர.மௌலிதரன்

வரலாறு என்பது தீர்க்கமான ஒற்றை நிலைப்பாட்டைக் கொண்டதல்ல என்பதை திரு.சீனிவாச ராமானுஜம் அவர்களின் உரை ஒன்றுக்குப் பின் வெகு நிச்சயமாக நம்பத் தொடங்கினேன். அதன் பிறகு வரலாற்றை நான் பார்க்கும் விதமும், வரலாறு என் முன்னே விரியும் விதமும் முற்றிலுமாக மாறத்தொடங்கியது. அவர் கூறியதுபோல அந்தக் குறிப்பிட்ட வரலாற்றை ஒருவர் அணுகும்பொழுது அவருடைய  சமூகமும் நிலமும் பண்பாடும் நிச்சயம் அந்தப் புரிதலிலும் வெளிப்படுத்தலிலும் பெரும் பங்கு வகிக்கும் என்பதை உணரத் தொடங்கினேன்.

வரலாறு எங்குமே எப்பொழுதுமே முழுமையாகக் கூறப்பட்டது கிடையாது. அப்படி ஒரு சாத்தியமும் இருப்பதாகத் தெரியவில்லை. வரலாறு காலத்தாலும், அதனை பதிவு செய்யும் மனிதர்களாலும் ஒரு வரையறைக்கு உட்படுத்தப்பட்டு, தணிக்கைகள் கொடுக்கப்பட்டு, எது வரலாறாக வேண்டும் என்று ஒரு கூட்டம் முடிவுசெய்கிறதோ அதுவே ஒரு தலைமுறைக்கே அடித்தளமாக மாறிவிடுகிறது . இதுவே நிதர்சனம் என்றால் வரலாற்றின் மீது கட்டி எழுப்பப்படும் நிகழ்காலத்தின் விதிகளும், எதிர்காலத்தின் கனவுகளும் எப்படி உண்மையானதென்று நாம் உறுதிப்படுத்தமுடியும்?

வரலாறு அனைவர்க்கும் சமமானது அல்ல, அது ஒரு பக்கம் மட்டுமே தன் பார்வையை செலுத்தும்படி திட்டமிட்டு திசைதிருப்பப்பட்ட ஒரு ரதம். அதன் பிரம்மாண்டமும், அதனைச் சுற்றி எழுப்பப்பட்ட கதைகளும், அதனைச் சார்ந்து இயற்றப்பட்ட புராணங்களும் அதனைக் கேள்விகளுக்கு அப்பால் புறந்தள்ளி காப்பாற்றி விடுகிறது. ஆனால், உண்மைகளை காலம்  நெடுநாள் மறைத்துவைக்க முடியாது. ஏதேனும் ஒரு வடிவில் அந்தப் பொய் அலங்காரமிட்ட ரதம் துகிலுரிக்கப்பட்டு உண்மையெனும் ஒளி அதன் மீது விழுந்தே தீரும். அந்த ஒளியைத் தெளிக்கும் திறன் நவீன தமிழ் இலக்கியத்திற்கு உண்டென்றால் – அந்த ஒளி, இரவாடிய திருமேனி என்ற புனைவின் வடிவிலும் நிகழலாம்.

ஓர் இலக்கியப் படைப்பு மொழி எனும் அஸ்திவாரத்தின் மேல்தான் தன்னை ஒரு பேருருவமாக உருவாக்கத் தொடங்குகிறது. சில நேரங்களில் மொழியை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வாசகனைத் தன் வசம் இழுக்கவும் ஒரு படைப்பு முயற்சிக்கும். மொழியைத் தன் போக்கில் கொண்டு சென்று ஒரு குழந்தை விளையாடும் கைபொம்மை போலவும் உபயோகிக்கப்படலாம். ஒரு விஞ்ஞானிபோல மொழி கொண்டு புதிய ஆராய்ச்சிகளின் வழி புதிய கண்டுபிடிப்புகளும் நிகழலாம். மொழி அத்தனை விஸ்தாரமானது. ஒரு தேர்ந்த படைப்பாளியிடம் மொழி தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கும் தருணம் இத்தகைய முயற்சிகள் ஊடாக ஒரு புனைவில் நிகழ வாய்ப்புள்ளது.

வேல்முருகன் இளங்கோ அவர்களுக்குத் தமிழ்மொழி, தன்னை ஒப்புக்கொடுத்ததோடு அவரைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி அழைத்து சென்று அதன் நன்கு ஊறிய அமுதை ஒரு தேறலைப்போல அவருக்கு அமுதூட்டி, அதன் மயக்கத்தில் அவரையே ஒரு கருவியாகக் கொண்டு தன்னை முன்னிறுத்தி கொண்டது என்றுதான் கூறவேண்டும். அதே மயக்கநிலை வாசிக்கும் நமக்கும் காந்தர்வனின் முன்னுரையிலிருந்தே தொற்றிக்கொண்டு முதல் நூறு பக்கங்கள் வரை மொழிதான் நம்மை அழைத்துச் செல்கிறது. தீக்கடம்பைமலரும்- மாறவர்மனின் மகளின் மரணமும்- தேடல் படலமும் நம்மை அந்த மயக்கத்திலிருந்து விடுவிக்கிறது .

ஒரு வரலாற்றுப் புனைகதை என்றால் அதற்கென்று இருந்த ஆதார விதிகளைக் கடந்து சென்றும் உருவாக்கமுடியும் என்ற பெரும் சவாலை எடுத்துக்கொண்டு அதனைத் தன் படைப்பில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் வெளிக்கொண்டு வந்துள்ளார் வேல்முருகன் இளங்கோ. பெரும்பாலான வரலாற்றுப் புனைகதைகள் அரசனைச் சுற்றியும் அவர் குடும்பத்தைச் சுற்றியும் அவரை வாழ்த்திப்பாடும் புலவனைச் சுற்றியும் மட்டுமே சுழலன்று, அந்தச் சூழலில் சிக்கித் தவிக்கும் எளிய மக்களைக் கண்டுகொள்ளாது, அரசனை அரியணை ஏற்றிவிட்டு அவரின் பாதம் தொட்டு முடிந்துவிடும். சுமார் ஒரு லட்சம் மக்களாவது அரசர் வாழும் நகரில் வாழ்ந்திருக்கலாம் ஆனால் பெரும்பாலான வரலாற்றுக் கதைகள் ஊரை மறந்துவிட்டு அரண்மனையை மட்டுமே சுற்றித்திரியும். ஆனால், இங்கு கதை சொல்பவன் ஒரு கூத்தாடி – அரசனின் சபையில் பெரும் புலவர்கள் முன் – கம்பனின் சபையிலும் – கள்வனைப் பற்றிய கவிபாடத் தொடங்குகிறான். கதையின் முதல் காட்சியே கள்வனின் பார்வையிலேயே தொடங்குகிறது. இங்கு அரசன் ஒரு பேசும் பொம்மைபோல அங்குமிங்கும் பல்லக்கில் வந்துசெல்கிறார். ராணியோ அழுக்கேறிய ஒரு கண்ணாடியின் குவியமில்லா பிம்பம்போல எஞ்சிய காலத்தை ஒட்டியிருக்கும் சிறு அதிகாரத்துடன் காலந்தள்ளுகிறாள். ஞான குருவோ அச்சத்திலும் குழப்பத்திலும் வெறுப்பிலும் மெல்ல மெல்ல ஒளியை இழந்து இருளை நோக்கி நகர்கிறார். இதனால்தான் சாம்ராஜ் இந்தப் படைப்பை எதிர்காவியம் என்று முத்திரையிடுகிறார் .

சீட்டுக்கட்டைக் கலைத்துப்போடுவதுபோல வேல்முருகன் இளங்கோ இங்கு ஐந்திணைகளின் கருப்பொருளை முன்னிறுத்தி அகப்பொருளைக் கலைத்துப்போட்டு ஒரு சிறிய விளையாட்டை விளையாடுகிறார். தமிழ் சங்க இலக்கியத்தில் நிலத்திற்கெனக் கருப்பொருளை நிச்சயமாகக் கூறுவதோடு, பிரதான அகப்பொருளையும் நிர்ணயிப்பது என்றுமே எனக்குச் சற்று நெருடலாகவே இருந்துவந்துள்ளது. இதனைத் தன் புனைவின் வழி சற்று இங்கும் அங்கும் மாற்றி அமைத்திருக்கிறார் வேல்முருகன் இளங்கோ. குறிஞ்சி நிலத்தில் நிகழ்வதாக சாம்பனின் பெரும்பாலான வாழ்க்கை காட்டப்பட்டாலும், அந்தப் பெண்ணுடன் கூடல் எனும் அகப்பொருள் வர்ணனையில் கூறப்பட்டாலும், அங்கு பிரதான அகவுணர்வாகத் தலைதூக்கி நிற்பது பிரிதலின் தவிப்பே. பாலை நிலத்திலிருந்து வந்திருந்தாலும் சாம்பனுக்கும், சங்கனுக்கும் கூடல் உணர்வு மிகுதியாக வெளிப்படுகிறது. மருத நிலத்தைச் சார்ந்த மாறவர்மனுக்கோ, கோதைக்கோ, உத்திரபாத பண்டிதருக்கோ ஊடல் பெரும் அகப்பொருளாக வெளிப்படவில்லை. மாறாக, உற்றவர்களைப் பிரிந்த சோகமும், குற்றவுணர்வுமே வெளிப்படுகின்றன.

இயல்பாக கதையின் போக்கில் கதைமாந்தர்கள் இந்த உணர்வுகளைப் பெற்றுக்கொண்டார்களா? அல்லது எழுத்தாளரின் நுணுக்கமான முன்தீர்மானத்துடன் நிகழ்ந்ததா என்பதை நாம் படைப்பின் வழி அறியமுடியாத வண்ணம் இவ்வுணர்வுகள் ஒன்றோடொன்று கலந்துள்ளன. காட்சிகளையும் காலங்களையும் வர்ணிக்கும்பொழுதும்கூட அந்தத் திணைகளுக்கு உரித்தான உவமைகளையும் – கருப்பொருட்களையும் தேர்ந்தெடுத்து, அதனை ஓர் இடத்தில்கூட பிசகாமல் இறுதிவரை எடுத்துச் சென்றது, கதை நடக்கும் காலத்திற்கும் நிலத்திற்கும் அகவழி பயணம் மேற்கொண்டால் மட்டுமே சாத்தியம்.

இருள் மீது இதுவரை நாம் சுமத்தி வந்த அபத்தங்களை மௌனமாகத் தனக்குள்ஒளியை விழுங்குவதுபோல உள்வாங்கிக்கொண்டிருந்த இருளின் மீதான ஒரு தெளிவான புரிதலை உருவாக்கும் திண்ணம் கதைநெடுகதென்படுகிறது. ஒளிக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டையே இருளுக்கு அளித்து, அதனை ஒளியின் எதிர் உருவமாக உருவகித்து வந்த சமய சங்க மார்கங்களுக்கு இந்த நாவலின் அடிப்படைக் கருத்தில் முரண் ஏற்படலாம். இருள் அனைத்து நிறங்களின் சரியான கலவை என்றும், இருள்தான் மிகுந்த நிறம்கொண்ட ஒன்று என்றும் ஆசிரியர் கூறும் தருணம் எனக்குள் முதல் முதலாக இருள் வழி ஒரு திறப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவத்சரின் ஞான ஒளி அச்சத்தின் வெளிப்பாடு, அந்த மலை உச்சியில் இருளின் முழு வடிவைக் கண்டபின் அவரின் நிலைப்பாடு மாறத்தொடங்குகிறது . ஒருவகையில் நாமும் ஸ்ரீவத்சரின் பார்வையில்தான் இருளைப் பார்த்துவந்தோமா என்ற குற்றவுணர்வும் தோன்றுகிறது. ஒளி சரியெனில் இருளும் சரியே. ஒளியும் இருளும் துலாபாரத்தில் சமநிலையில் நிற்பவை. அச்சமும் குழப்பமும்  புரிதலின்மையும் நிறைந்த மனமே இருளைக் கண்டு அஞ்சி ஒளியிடம் தஞ்சம் புகுந்து ஒளியை ஆராதிக்கத் தொடங்குகிறது. இருளில் தொடங்கி இருளில் நிறைவுறும் இவ்வாழ்வில் ஒளிக்கான இடம் மிகக்குறைவு. அதிலும் அவ்விடம் இருள் விலகி நின்றதால் உருவான ஒன்று.  அந்தப்  பெண் குரலின் ஆணைப்படி சாம்பனின் வளரி, ஞான ஒளியை வீழ்த்தி இருளைத் தென்கூடலுக்குப் பரிசளிக்கிறது. எங்கே தம் மக்களுக்கு ஒளி மேல் இருக்கும் நம்பிக்கை அகன்றுவிடுமோ என்ற அச்சத்தில் சமயம் சார்ந்த மக்கள் யாகம் என்ற பெயரில்ஒளியைத் தீயின் உருவில் மீட்கப் போராடும் தருணம், தீயே பேருருவாகத் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறது. சாம்பனைத் தண்டனை என்ற பெயரில் இருள் உலகத்திற்குள் அடைக்கும் அரசுக்குத் தெரியவில்லை, அதுவே அவனுக்குக் கிடைத்த மாபெரும் வரமென்று . அவன் மெல்ல இருளுக்குள் தனக்கான உலகத்திற்குள் சஞ்சரிக்க தொடங்குகிறான் .

வரலாற்றின் கண்களுக்கு ஒரு வினோத நோய் உண்டு. அது ஒரு சிலரை என்றைக்குமே கண்கொண்டு பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் அதன் நினைவில் தங்கிவிடாதபடி ஆயிரம் கைகள் கொண்டு அந்தப் பார்வையை மறைப்பவர்களும் உண்டு. இந்தப் புனைவிலும் ஞான ஒளி ஒரு கள்வனால் அணைக்கப்பட்டது என்பதை கோபிலன் மறைக்கத் துடிக்கிறான். அரிகண்டம் ஏறும் நாளில் தப்பிச்செல்லும் மறவன் வேம்பனை சுற்றி பொய்க்கதைகள் புனையப்படுகின்றன, மகாசங்கின் அபத்தமான ஒளிக்கு மாற்று யோசனை மூலம் சரிசெய்யும் வழிப்போக்கனின் வார்த்தையை ஸ்ரீவத்சர் வரலாற்றின் பார்வையிலிருந்து திட்டமிட்டு மறைத்துவிடுகிறார். இந்த கதையை கவிபாடும் காந்தர்வனின் செய்யுளையும் பொறுக்க முடியாமல்  பாதியிலேயே அவைப் புலவர்களால் விரட்டப்படுகிறான். இத்தனையும் மறைப்பதற்காகப் பலர் போராடினாலும் இந்தப் புனைவு, வரலாறு கவனிக்க மறந்தவர்களை, திட்டமிட்டு மறைத்தவர்களை மட்டுமே பிரதான கதைமாந்தர்களாய் முன்னிறுத்தி வரலாற்றின் நாயகர்களாக, இதுவரை நாம் பார்த்து வந்தவர்களை உபபாத்திரங்களாக வைத்தது அம்மக்களளுக்குக் கிடைத்த ஓர் ஆறுதல். அரசரின் அறிவின்மை, பதவியாசை, பேராசை, ராணியின் குரூர மனம், வசை மொழி, அருவருப்பான உருவம், ஞானகுருவின் இச்சை மனம், சுயநலம், மாயை நிறைந்த போதனை என அனைவரின் முகத்திரையும் கிழித்தெறியப்படுகிறது. மறுபக்கம், நாவித வம்சத்தின் வறுமை, மருத்துவ அறிவு, மறவன் வம்சத்தின் வீரம், விசுவாசம், வேசிகளின் வலிகள், கள்வர்களின் நீதியும் வாழ்க்கையும் என வரலாற்றால் இருள் போர்த்தப்பட்டவர்கள் மேல் ஒரு மெல்லிய ஒளி வீசுகிறது.

இந்தப் படைப்பு வரலாற்றுப் பின்புலம் கொண்டிருந்தாலும் இதில் கையாளப்பட்டிருக்கும் சில மருத்துவ நிகழ்வுகளும், அதற்கான காரண காரியங்களும் மிக சரியாக தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருப்பது ஒரு மருத்துவனாக எனக்குப் பெரும் ஆச்சர்யத்தை கொடுத்தது. ஜன்னல் கதையில் சுரா அவர்களின் cerebral palsy குழந்தையின் தவிப்பை நான் வாசித்தபோது ஏற்பட்ட அதே ஆச்சர்யம் இங்கு நிகழ்ந்தது. இத்தனை வருடம் மருத்துவம் சார்ந்த புத்தகங்களை வாசித்து, நோயாளிகளைப் பார்த்து எங்களுக்குக் கிடைத்த அவதானிப்பை எப்படி ஓர் எழுத்தாளன் தன்னுடைய படைப்பில் போகிற போக்கில் இத்தனை இலகுவாக அதுவும் அறிவியல் பொருத்தத்துடன் கூறிவிடுகிறான் என்ற வியப்புதான் அது.

இந்தப் புனைவிலும் அந்த செட்டியாருக்கு அரண்மனை வைத்தியர்  கொடுத்த ஒரு மருந்தினால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அவர் மயக்கநிலைக்குச் செல்ல, உத்திரபாத பண்டிதரே செட்டிக்கு அந்த மருந்து ஒத்துக்காது என்பது தெரியாதா என்ற கேள்வியெழுப்புகிறார். இது அறிவியல் பூர்வமாக 100 விழுக்காடு சரியே. செட்டியார் வகை சமூகத்திற்கு ரத்தத்தில் pseudo cholinesterase என்ற நொதியம் பற்றாக்குறை காரணமாக ஒரு சில மயக்க மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படுவது அறிவியல் உண்மை. இதனை மிகச்சரியாக ஆசிரியரும் அந்த காலத்து நாவித மருத்துவர்களும் புரிந்து வைத்துள்ளார்கள் என்ற உண்மை அவர்களின் அறிவின் விஸ்தாரத்தைக் காட்டுகிறது. சாம்பனுக்கு காட்டிலிருக்கும் தருணம் அம்மை வருவதும், அவன் தென்கூடலுக்குத் திரும்பிய பின்னர் அங்கு மக்கள் அனைவரும் பிணியில் துவண்டு போவதும் பெரியம்மை நோயின் தன்மைகளே. monkey pox – small pox என்றஇருவகை வைரஸ்கிருமிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. காட்டிலிருந்து வந்த சாம்பனுக்கு வந்தது monkey pox அம்மை. எனவேதான் அவன் மீண்டுவிட்டான். அதுவே இங்கு தென்கூடல் மக்களுக்கு வந்தது என்னவோ பெரியம்மை. எனவேதான் அது ஊர் முழுக்கப் பரவி மக்களைக் காவு வாங்குகிறது. இலக்கியம் இவ்வாறு மருத்துவத் தகவல்களையும், வரலாற்றில் நிகழ்ந்த நோய்மை குறித்த குறிப்புகளையும் இத்தகைய படைப்புகளின் மூலம் காலம் கடந்து கொண்டு செல்கிறது.

கருத்தியல் ரீதியாக இதுவரை வந்த வரலாற்றுப் படைப்புகளிலிருந்து இந்தப் படைப்பு தனித்து நின்றாலும், பல இடங்களில் வழமையான வரலாற்று நாவல்களின் சட்டகத்தரிக்குள் மாட்டிக்கொள்கிறது. காட்டில் தேடல் படலம் தொடங்கிபயணிக்கும் தருணங்களில், வழக்கமான அந்த இயற்கை வர்ணனனைகள் வரலாற்று நாவல்கள்போலவே சற்று அதீதமாக காணப்படுகிறது. அவை கதையின் போக்கையும் வாசிப்பையும் சற்று அயற்சிக்குள்ளாக்குகிறது. எல்லா வரலாற்றுப் படைப்புகள் போலவே இதிலும் பெண்களும் அவர்களின் உடல்களும் மட்டுமே காமத்தின் அடித்தளமாக, ஆரம்பப்புள்ளியாக உருவகப்படுத்துவது, மேலும் அதன் மீதான விவரிப்புகளும் பழைய தொனியில் இருப்பது படைப்பின் புதுமையை நோக்கிய பயணத்திற்கு இடறலாக இருக்கிறது.

மேற்கூறிய உடல் சார்ந்த வர்ணனைகள் ஓர் அளவிற்கு மேல் அழகியல் என்ற நோக்கத்தைத் தாண்டி ஒரு நெருடலைக் கொடுக்கத் தொடங்கிவிடுகிறது. ஒரு நாவல் தன்னுடைய கதைமாந்தர்கள் வழி தனக்குள் தானே எழுப்பிய கேள்விகளுக்கு அந்த நாவலுக்குள்ளாகவே விடைகொடுத்தாக வேண்டும். ஒரு நாவல் முடிவை நோக்கி நகராமலோ, முடிவை வாசகனின் பார்வைக்கு விட்டுவிடுவதாகக்கூட இருக்கலாம். ஆனால் நாவல் தன்னளவில் எடுத்துக்கொண்ட விவாதத்தை, கேள்விகளை விடை கொடுத்தாக வேண்டிய கடமையுள்ளது. அந்த வகையில் இந்தப் படைப்பு பல கேள்விகளுக்கு விடையளிக்காமலே முடிந்துவிடுகிறது. கதையின் பல வெற்றிடங்கள் நிரப்பப்படாமலே  இருக்கின்றன. ஒரு பெரும் பயணத்தை நோக்கி வாசகனின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு கதை நகராமல் அந்த காட்டின் ஒரு பகுதியிலே சுழல்கிறது. தன்னுடைய நிலையும், தன்னுடைய தந்தையின் உயிரும் கேள்விக்குறியாக இருக்கும் தருணங்களில்கூட காட்டில் உள்ள ஆண்களுக்குக் காமம் பொங்குவது கேள்விக்குட்படுத்த வேண்டிய ஓர் உணர்வு. கதையில் வரும் இளைஞர்களே காமத்தை வெளிப்படுத்தியும், அதற்குள் அடைபட்டும் கிடப்பதுபோல விவரித்து சற்று வயது கூடிய ஆண்களைக் காமத்திடமிருந்து விலக்கி வைத்தது வாழ்வனுபவத்தின் விளைவாக எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை .

இந்தப் படைப்பு முழுக்க வெவ்வேறு நிலத்தில், வெவ்வேறு தருணங்களில் மரணங்களும் இழப்புகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே மனிதன் இழப்புகள் நிறைந்த ஒரு வாழ்வைத்தான் வாழ்கிறான். அதில் நிம்மதியுறாமல் நிரந்தரத்தை எதிர்நோக்கி ஏங்குகிறான். வாழ்க்கையும் உயிரும்சுற்றமும் நிலையற்றது என்பதை அறிந்திருந்தும் அவனால் ஏற்றுக்கொள்ளமுடியாமல் எப்பொழுதும் அலையடித்துக் கொண்டிருக்கும் கடல்போல ஆற்றுப்படுத்த முடியாத ஒரு வாழ்வைத்தான் அவன் வாழ்கிறான் என்ற தத்துவத்தை இந்தப் புனைவின் பின்புறம் ஒரு மெல்லிய நூல் இழைபோல இறுதிவரை தொடர்ந்துகொண்டே வருகிறது. கண்ணம்மா, பெரியசாமி, காவலர்கள் எனக் காரணமே இல்லாமல் ஒரு கணத்தில் மாண்டுவிட, மற்றொரு பக்கம் சாம்பனின் தந்தை – சுருளி – சங்கன் எனக் காலத்தின் பிடியில் மரணம் எனும் பெருஞ்சுமையைச் சுமக்கமுடியாமல் அதன் கொடுமைகளுக்கு ஆளாகி மரணத்திடம் மண்டியிட்டு மரணத்தையே வரமாகப் பெற்று மாண்டுவிடுகின்றனர். இங்கு பிறப்பில் இருக்கும் சமத்துவம் ஏனோ இறப்பிற்கு இருப்பதில்லை. மனிதன் மூப்படையும் தருணம் காலம்  அவன் வாழ்வின் மொத்த கணக்குகளையும்  கூட்டி கழித்து ஒரு பெருஞ்சுமையை அவன் மீது ஏற்றிவைத்து, ஒரு சுமைதாங்கியாக மாற்றி அலையவிடுகிறது. உயிரின் வாசம் உயிர் இருக்கும் தருணம் வரை நாம் அறிவதில்லை.இந்தப் படைப்பிலும் வீழும் மனிதர்களின் மேல் ஒரு துர்நாற்றம் எழத்தொடங்குகிறது. அது மரணத்தின் நெடி. காலம் கொடுத்த அந்தப் பெருஞ்சுமையின் வீச்சம். மரணத்தை எண்ணி துயரில் துவளும் உத்திரபாதரும், வேம்பனும்கூட அதனை உணரத் தொடங்குகின்றனர்.

மாறவர்மன் யானையின் அழிவினை கனவில் காணும் தருணம் மரணத்திற்கு ஓர் உருவகத்தை கொடுக்கிறது. அங்கும் உயிரின் வாசம் விலகி மரணத்தின் துர்நாற்றம் எழத்தொடங்குகிறது. வெற்றிகளையும் வீரமகுடங்களையும் கொண்டாட்டங்களையும் தூக்கிப்பிடித்த வரலாற்றுப் புனைவுகள் மத்தியில், நிதர்சனமான இழப்புகளைப் பற்றி பேசிய முக்கியமான வரலாற்றுப் படைப்பாக நிற்கிறது இந்த இரவாடிய திருமேனி.

0

ஆசிரியர்: வேல்முருகன் இளங்கோ
பதிப்பகம்: எதிர் வெளியீடு
பக்கங்கள்: 480
விலை: ரூ.699
தொடர்புக்கு: +91 4259 226012

 

 

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *