Skip to content
Home » பிரபலங்களின் உளவியல் #15 – ரிச்சர்ட் டாட்

பிரபலங்களின் உளவியல் #15 – ரிச்சர்ட் டாட்

‘இல்லை…இவர் என்னுடைய தந்தையே இல்லை. என்னைக் கொல்ல வந்த சாத்தான். சாத்தான்தான் என் தந்தையின் உடலில் புகுந்திருக்கிறது. இந்த சாத்தானைக் கொல்லவேண்டும். இதோ, இப்போதே கொல்கிறேன்…’

மேற்படி தோன்றிய தன்னுடைய எண்ணங்களை செயலாக மாற்றியபோது ரிச்சர்ட் டாட்டுக்கு வயது இருபத்து ஏழு மட்டுமே. அதன் பின்னர், மீதமிருந்த தன் மொத்த வாழ்க்கையையும் அவர் மனநல விடுதியில்தான் கழித்தார்.

நூற்றாண்டைக் கடந்து இன்றும் ஆச்சரியப்பட வைக்கும் அவருடைய ஓவியங்கள் பெரும்பாலும், மனநல விடுதியில் வரையப்பட்டதே!

யார் இந்த ரிச்சர்ட் டாட்? சொந்த தந்தையையே அவர் கொலை செய்யக் காரணம் என்ன? அவருக்கிருந்த மனச்சிதைவு நோய், அவருடைய ஓவியங்களில் எவ்வாறு பிரதிபலித்தது?

பார்ப்போம்…

0

ரிச்சர்ட் டாட், 1817ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் கென்ட் நகரில் பிறந்தவர். சிறுவயதிலேயே ஓவியக்கலை மீது ஆர்வம் கொண்ட இவர், தன்னுடைய பதிமூன்றாவது வயதில் ஓவியம் வரைவதைத் தீவிரப்படுத்திக் கொண்டார். 1837ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராயல் அகாடமியில் சேர்ந்து ஓவியம் பயின்றார். விரைவிலேயே ஓவியக்கலையில் புகழ் பெற்றார்.

தாமஸ் பிலிப் என்பவர், ரிச்சர்ட்டை ஒரு சுற்றுப்பயணம் அழைத்துச் சென்றால் மேலும் அழகான ஓவியங்களை அவரால் வரைய முடியும் என நினைத்தார். எனவே 1842ஆம் ஆண்டு, ஐரோப்பா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு ரிச்சர்ட்டை அழைத்துச் சென்றார் பிலிப். அங்கேதான் பிரச்னைகள் ஆரம்பித்திருக்கின்றன.

ஆம். பயணத்தின் இறுதியில் ரிச்சர்ட்டிடம் மனரீதியான சில மாற்றங்கள் ஏற்பட்டன.

ரிச்சர்ட், பிலிப்புடன் பேசுவதைத் தவிர்த்தார். முகத்தில் மகிழ்ச்சி இல்லை. வெறுமை மேலோங்கி இருந்தது. கவனம் சிதறியிருந்தது. ஒருவித பதட்டமும் பயமும் அவரைச் சூழ்ந்திருந்தது. எல்லோரையும் சந்தேகப் பார்வையோடு அணுகினார். சின்ன சின்ன விஷயங்களுக்கு அதீத கோபமடைந்தார். மொத்தத்தில், அந்தப் பயணத்திற்குப் பிறகு மொத்தமாக மாறிப்போயிருந்தார் ரிச்சர்ட்.

ஊர் திரும்பிய ரிச்சர்ட்டுக்கு, உளவியல் சிக்கல்கள் தீவிரமடைந்திருந்தன. சுற்றியிருக்கும் அனைவரும் தனக்குத் தீங்கு செய்வதாக நினைத்தார். எல்லோரும் அவரைப் பற்றியே பேசுவதாகவும் சிரிப்பதாகவும் தவறாக நினைத்துக் கொண்டார். நெருங்கிய நண்பர்களையே சந்தேகப்பட்டு அவர்கள் மீது கொலைவெறியை வளர்த்துக் கொண்டார் ரிச்சர்ட். அதன் உச்சம்தான் சொந்த தந்தையையே கொலை செய்தது.

1843ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள்.

தந்தையின் உடலுக்குள் சாத்தான் புகுந்து விட்டது என்று நம்பிய ரிச்சர்ட், அவரை ஒரு பூங்காவில் வைத்து கழுத்தறுத்து கொலை செய்தார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய அவரை, ஃப்ரான்ஸில் வைத்து கைது செய்தனர் காவலர்கள். ரிச்சர்ட்டிடம் விசாரணை செய்ததில், அவர் அதீத மனச்சிதைவில் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

‘தந்தையை ஏன் கொன்றாய்?’ என்ற கேள்விக்கு, ரிச்சர்ட் சொன்ன காரணங்கள் இவை:

1. அவர் என் தந்தையே இல்லை. அது ஒரு சாத்தன்.

2. அதைக் கொல்லச் சொல்லி ஒசிரிஸிடம் (ஒசிரிஸ் – Orisis என்பவர் ஓர் எகிப்தியக் கடவுள்) இருந்து எனக்கு ஆணை வந்தது. எனவேதான் அதைக் கொன்றேன்.

ரிச்சர்ட்டின் வீட்டைச் சோதனை செய்ததில், கழுத்தை அறுத்துக் கொலை செய்வதுபோன்ற பல ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டன. அத்தனை ஓவியங்களிலும் ரிச்சர்ட் நண்பர்களின் முகங்கள்.

ரிச்சர்ட்டுக்கு இருந்தது சீசோஃப்ரேனியா (Schizophrenia) எனும் மனச்சிதைவு நோய். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் ‘பேரனாய்ட் சீசோஃப்ரேனியா (Paranoid Schizophrenia)’. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முதன்மையானப் பிரச்னை ‘சந்தேகம்’. எதைக் கண்டாலும் சந்தேகம். யாரைக் கண்டாலும் சந்தேகம்.

‘என்னை யாரோ பின்தொடர்கிறார்கள்…’

‘என் உடம்பில் சிப் (Chip) பொருத்தப்பட்டிருக்கிறது…’

‘என்னைக் கொலை செய்ய கவர்மென்ட் ஆட்களை நியமித்திருக்கிறார்கள்…’

‘என் வீடு முழுக்க எனக்கே தெரியாமல் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன…’

‘அதோ…என்னைக் கொலை செய்ய ஒருவர் நிற்கிறார்…’

இவையெல்லாம் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக சொல்லும் விஷயங்கள். அவ்வளவு ஏன்? சாப்பாட்டில் விஷம் கலந்திருந்தது என நினைத்துக் கொண்டு இவர்கள் சாப்பிடக்கூட மாட்டார்கள்.

ரிச்சர்ட்டும் இப்படித்தான் சொல்லி வந்திருக்கிறார். அதன் உச்சம்தான் தந்தையின் கொலை.

அவர் வாழ்ந்த காலத்தில், ‘சீசோஃப்ரேனியா’ என்கிற வார்த்தையே கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரிச்சர்ட்டின் உடன்பிறந்த சகோதரர்களுக்கும் இதேபோன்ற உளவியல் சிக்கல் இருந்திருக்கிறது.

ரிச்சர்ட், லண்டனின் புகழ்பெற்ற மனநல மருத்துவமனையான பெத்லம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1843 முதல் 1864 வரை, மொத்தம் இருபது ஆண்டுகள் அங்கே இருந்தார். பின்னர் ப்ராட்மூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ப்ராட்மூர் மருத்துவமனையில்தான் சாகும் வரை வாழ்க்கையைக் கழித்தார் ரிச்சர்ட்.

ரிச்சர்ட் தொடர்ந்து ஓவியங்கள் வரைய மருத்துவ நிர்வாகம் அனுமதி வழங்கியது. அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தது. குறிப்பாக பெத்லம் மருத்துவமனையின் இயக்குனர் சார்லஸ் ஹுட், ரிச்சர்ட்டின் ஓவியங்களை வெகுவாகப் பாராட்டினார்.

0

ரிச்சர்ட் டாட் வரைந்த ஓவியங்களுள் முக்கியமானவை, ‘The Fairy Feller’s Master- Stroke’.

இந்த ஓவியத்தை வரைய அவர் எடுத்துக் கொண்ட காலம், கிட்டத்தட்ட பத்து வருடங்கள் (1855 – 1864). பெத்லம் மருத்துவமனையில் இருந்தபோதுதான் இதை அவர் வரைந்திருக்கிறார். இருபதுக்கும் மேற்பட்ட மனிதர்கள் இந்த ஓவியத்தில் இருக்கிறார்கள். ரிச்சர்ட்டுக்கு இருந்த மனச்சிதைவின் வெளிப்பாடாகவே இந்த ஓவியம் பார்க்கப்படுகிறது.

சீசோபெர்னியாவால் பாதிக்கப்படுபவர்கள், தங்களைச் சுற்றி புதிய உலகம் ஒன்றை உருவாக்கிக்கொள்வர். அவ்வுலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் சந்தேகத்திற்கு உட்பட்டவர்களே. யார் வேண்டுமானாலும், எப்போதும் வேண்டுமானாலும் சாத்தானாக உருமாறலாம். எனவே எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

‘The Fairy Feller’s Master- Stroke’ ஓவியம், அப்படிப்பட்ட ஒரு தனி உலகத்தைத்தான் குறிக்கிறது. அது, ரிச்சர்ட்டின் உலகம். ஓவியத்தை மேலோட்டமாகப் பார்த்தால், ஒன்றும் புரியாது. உன்னிப்பாக கவனித்தால், ரிச்சர்ட்டுக்கு இருந்த மனச்சிதைவின் ஆழம் புலப்படும்.

The Fairy Feller’s Master- Stroke and The Dangerous Artist

கோடாரியுடன் நிற்கும் மனிதனைப் பாருங்கள். அவன் ஏதோ ஒரு ஆணைக்காக காத்திருக்கிறான். இது ஒசிரிஸின் ஆணைக்காக ரிச்சர்ட் காத்திருப்பதுபோலவே இருக்கிறது. ஆங்காங்கே சிலர் ஒளிந்து கொண்டு உளவு பார்க்கிறார்கள். ரிச்சர்ட்டுக்கு இருந்த சந்தேக நோயின் வெளிப்பாடே இது. சிலர் பதட்டமும் பயமும் ஒருசேர ஒருவித மிரட்சியுடன் காணப்படுகின்றனர். ரிச்சர்ட்டின் குழப்பமான மனநிலையை அது குறிக்கிறது.

ரிச்சர்ட்டின் இன்னொரு புகழ்பெற்ற ஓவியம், ‘Agony Raving Maddness’. மிகவும் களைப்புடன், முகத்தில் ஒளியின்றி, தலையில் கை வைத்தபடி, சங்கிலியுடன் பிணைந்திருக்கும் உருவத்தைப் பார்க்கும்போது அக்காலத்தில் மனநோய் எவ்வாறு அணுக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இதுவும் அவர் பெத்லம் மருத்துவமனையில் இருந்தபோது வரையப்பட்டதுதான்.

‘The Fairy Feller’s Master- Stroke’ ஓவியத்தைப் பத்து வருடங்களாக வரைந்திருக்கிறார் என்றால், அந்த பத்து வருடங்களும் தீராத மனநோயுடன் இருந்திருக்கிறார் என்பதே பொருள். ரிச்சர்ட்டின் அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கைகளும் அதைத்தான் சொல்கின்றன.

மருத்துவமனையில், ‘The Dangerous Artist’ என்ற பெயரே‌ இறுதி வரையில் அவருக்கு இருந்திருக்கிறது. தன்னுடைய அறுபத்து எட்டு வயதில் உடல்நலம் குன்றி அவர் இறக்கும் வரையிலும், அவருக்கிருந்த மனநோயானது குணமாகவே‌ இல்லை. ‘தந்தையைக் கொலை செய்துவிட்டோமே…’ என ஒருநாளும் அவர் குற்ற உணர்ச்சிக்கு ஆளானதில்லை.‌ அவர், அவர் உலகத்தோடு மட்டுமே வாழ்ந்திருக்கிறார்.

கலையும் உளவியலும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது. ரிச்சர்ட்டுக்கு இருந்த மனச்சிதைவே தொடர்ந்து ஓவியம் வரைய அவரை இயக்கியது போன்ற வழக்கமான கருத்துக்கள் எழத்தான் செய்தன. ஆனால் மனச்சிதைவு இல்லாமல் போயிருந்தால், பத்து வருடங்கள் எடுத்துக் கொண்ட ‘The Fairy Feller’s Master- Stroke’ ஓவியத்தை ஐந்தே வருடங்களில் முடித்திருப்பார் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. உங்கள் கருத்து என்ன?

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *