அரசியல்வாதிகள் என்றாலே அரைகுறையாகப் படித்தவர்கள், உளறுபவர்கள் என்ற பிம்பமே பெரும்பாலும் நம் மனதில் உள்ளது. இதற்கு நேர்மாறாக ஒரு பேராசிரியர் அமைச்சராகப் பதவி வகித்தாரென்றால் நம்ப முடிகிறதா? டாக்டர். மன்மோகன் சிங்கிற்கு முன்பே அரசியலில் இயங்கியவர் அவர். அதுவும், அரசியலுக்கு எவ்விதமும் தொடர்பற்ற இயற்பியல் துறையில் பேராசிரியராக இருந்தவர். அது மட்டுமா? அவர் ஒரு சோஷலிசவாதி; காந்தியவாதி; எளிமையின் உறைவிடம்; நேர்மையின் வார்ப்படம்.
இவரைப் போன்றவர்களை என்ன துறைக்கு அமைச்சராக வைத்திருப்பார்கள்? அவ்வளவாக முக்கியத்துவம் பெறாத துறைக்குத்தான் இவரெல்லாம் அமைச்சராக இருந்திருப்பார் என்றே இந்நேரம் பலருக்குத் தோன்றியிருக்கும். அதுவும் தவறு. அவர் இரு முக்கியமான துறைகளுக்கு மத்திய காபினெட் அமைச்சராகப் பதவி வகித்தார். இரயில்வே (1977-79) மற்றும் நிதி (1989-90). பிற்பாடு, மத்தியத் திட்டக்குழுவின் துணைத்தலைவராகவும் பதவி வகித்தார் (1990 மற்றும் 1996-98).
மெத்தப் படித்தவரெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாரா என்ன? டாக்டர் மன்மோகன் சிங்கூட லோக்சபா தேர்தலில் தோல்வியுற்றவர்தானே. பிறகு இராஜ்யசபையின் உறுப்பினராக இருந்துதானே பத்தாண்டு காலம் அவர் பிரதமராகப் பதவி வகித்தார். அவரைப்போலவே இவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் இராஜ்யசபையின் உறுப்பினராகி, பிறகு அமைச்சராகியிருப்பார் என்ற சிந்தனையும் இந்நேரம் ஏற்பட்டிருக்கும். இதுவும் தவறு. இவர் 1971 முதல் 1990 வரை ஐந்து முறை மக்களால் தொடர்ச்சியாக லோக்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அரசியல்வாதிகள் குறித்து நாம் கொண்டிருக்கும் பல்வேறு பிம்பங்களைத் தகர்த்தெறிந்த அந்த ஆளுமை, பேராசிரியர் மது தண்டவதே!
இளமை வாழ்க்கையும், நாடாளுமன்ற நுழைவும்
மஹாராஷ்டிர மாநிலத்தின் அஹமதுநகரில் ஜனவரி 1924இல் பிறந்தவர் மது தண்டவதே. சிறிய வயதில் இராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் அவர் படிக்க நேர்கையில், அவற்றில் வரும் சீதை தீக்குளிப்பு மற்றும் ஏகலைவனின் கதை போன்ற பகுதிகள் அவரின் மனதைப் பாதித்தன. பின்னாளில் அவர் சோஷலிஸ்ட் ஆனதற்கு இது ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது. அஹமதுநகரில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், கல்லூரிப் படிப்பிற்காக மும்பைக்கு வந்தார். இயற்பியல் துறையில் இளங்கலைப் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னாளில், மும்பையின் சித்தார்த் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகச் செயல்பட்டார்.
வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தன்னுடைய மனதையும் சிந்தனையையும் சிறைப்படுத்திக்கொள்ளாத அவர், மக்கள் சேவைக்கான பரந்த மனதுடன் செயல்பட்டார். தன்னுடைய 18வது வயதில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்குபெற்று நாட்டு விடுதலைக்குப் போராடினார். நாடு விடுதலை பெற்ற பின்னர், கோவா விடுதலை இயக்கத்தில் (போர்த்துகீசியர் ஆட்சியை எதிர்த்து) பங்குபெற்று முக்கியப்பங்கு வகித்தார். அதேபோல், ‘சம்யுக்த மகாராஷ்டிரா’ இயக்கத்தில் அவரது தலைமை, மகாராஷ்டிராவின் ஒரு பகுதியாகப் பம்பாய் மாநகரை உறுதிப்படுத்த உதவியது.
இவ்வாறு சமூகப் பணி மற்றும் பேராசிரியர் பணி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் திறம்படச் செயலாற்றிக் கொண்டிருந்த மது தண்டவதே, மராட்டிய சட்டசபையின் மேல்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மேல்சபையின் உறுப்பினராகவும் ஓராண்டு பணியாற்றினார். 1971இல் மக்களவைத் தேர்தல் நெருங்குகையில், மகாராஷ்டிர மாநிலத்தின் இராஜப்பூர் தொகுதி உறுப்பினர் எதிர்பாராவிதமாக மரணமடைய நேரிட்டது. சோஷலிஸ்டுகளின் கோட்டையாகக் கருதப்பட்ட அத்தொகுதியைத் தக்கவைக்க, சோஷலிஸ்டுகளால் களமிறக்கப்பட்டார் மது தண்டவதே. இந்திரா காந்திக்கு ஆதரவு பெருகிக் காணப்பட்ட அந்தத் தேர்தலின்போது, மகாராஷ்டிர மாநிலத்தின் 48 மக்களவைத் தொகுதிகளில் 47இல் சோஷலிஸ்டுகள் தோற்றிருந்தனர். வெற்றி பெற்றிருந்த ஒரே நபர்- மது தண்டவதே! இதற்குப் பிறகு நடைபெற்ற நான்கு மக்களவைத் தேர்தல்களிலும் (1977, 1980, 1984 மற்றும் 1989) இதே தொகுதியில் வெற்றி பெற்றார் மது தண்டவதே.
நாடாளுமன்ற உறுப்பினராக…
மது தண்டவதே ஐந்து முறை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர் (1971, 1977, 1980, 1984 மற்றும் 1989). ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எவ்வாறு பணியாற்ற வேண்டுமென்பதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டாக விளங்கியவர் மது தண்டவதே. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின்போது, அவர் நாடாளுமன்ற நூலகத்தின் புத்தகங்களைப் படித்து, குறிப்புகள் எடுத்து, ஆராய்ந்து, அவற்றைத் தம்முடைய பேச்சுகளில் மேற்கோள் காட்டினார். அவருடைய நாடாளுமன்ற உரைகள் கருத்தாழம் மிக்கவையாக விளங்கின.
1971 தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இந்திரா காந்தியின் போக்கில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பெரிதா? நீதித்துறையின் அதிகாரங்கள் பெரிதா? என்ற போட்டி ஏற்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால், நாடாளுமன்றமே அதிகபட்ச அதிகாரம் கொண்டதென்ற கருத்தாக்கமே ஆள்வோரின் நடத்தையில் வெளிப்பட்டது. அதாவது, நாடாளுமன்றம் இயற்றுகின்ற சட்டங்களில் நீதிமன்றங்கள் குறுக்கிடக்கூடாதென்று முணுமுணுப்புகள் தலைதூக்கத் தொடங்கின. இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்தில் பின்வருமாறு பேசினார் மது தண்டவதே:
‘ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் மக்களே உச்சபட்ச அதிகாரம் பெற்றவர்கள்; சட்டங்களை உருவாக்குவதிலும், அரசியலமைப்பைத் திருத்துவதிலும் நாடாளுமன்றம் உயர்ந்ததாகும்; ஆனால், நாடாளுமன்றம் மேற்கொண்ட திருத்தங்கள் அரசியலமைப்பின் அடிப்படைக்குள் இருக்கின்றனவா என்பதைத் தீர்மானிப்பதில் உச்ச நீதிமன்றம் உயர்ந்ததாகும்!’.
தன்னுடைய பேச்சுகளில் நகைச்சுவை முலாம் பூசுவதை இயல்பாகக் கொண்டிருந்தார் மது தண்டவதே. ஒருமுறை நாடாளுமன்றத்தில் மது லிமாயே என்ற உறுப்பினர் மிக ஆவேசமாக எழுந்து உரத்த குரலில் பேசத்துவங்கவே, அவைத்தலைவர் அதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். அவைத்தலைவரை அவமதிக்கும் விதமாகவே மது லிமாயேவின் அச்செயல் கருதப்பட்டது. ஆனால், மிகவும் முக்கியமான பிரச்னை ஒன்றைக் குறித்து அவையின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவே மது லிமாயே அவ்வாறு ஆவேசமாகப் பேசத்துவங்கினாரேயன்றி, அவைத்தலைவரின் மாண்பைக் குறைக்கும் எண்ணத்தில் அவர் அவ்வாறு செய்யவில்லை. இருப்பினும், அவைத்தலைவர் அதைத் தவறாக எடுத்துக்கொண்டு ஆட்சேபிக்கவே, நிலைமையைப் புரிந்துகொண்டு குறுக்கிட்ட மது தண்டவதே, அவைத்தலைவரை நோக்கி, ‘லிமாயே அவர்களின் உரத்த குரலைக் குறித்துத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். வீட்டில் தன் மனைவியிடமே கூட அவர் இதே உரத்த குரலில்தான் பேசுகிறார்!’ என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார். நிலைமை சகஜமான பிறகு, மது லிமாயேவைப் பேச வைத்தார் அவைத்தலைவர்.
பின்னொரு சமயத்தில், ஆளுங்கட்சியின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது நடந்த வாக்குவாதத்தில், எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடிக்கொண்டிருந்தார் இந்திரா காந்தி. அப்போது அமைதியாக எழுந்த மது தண்டவதே, ‘மாண்புமிகு பிரதமர் அவர்களே! சில நாட்களுக்கு முன்பு, நீங்கள் மேற்கொண்ட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்தபோது, அங்கு நீங்கள் மிகவும் இனிமையாகவும் வசீகரமாகவும் காட்சியளித்தீர்கள். ஆனால், நம் நாட்டிற்குத் திரும்பிய பின் ஏன் இவ்வளவு கசப்பானீர்கள்?’ என்று கேட்கவே, அவையுடன் சேர்ந்து பிரதமரும் சிரித்தார். அதற்குப் பிறகு, பிரதமருடைய பேச்சில் அனல் குறைந்தது.
பல்வேறு தலைப்புகளில் அவையில் புள்ளிவிவரங்களோடு பேசி, கூறவந்த கருத்தை அனைவருக்கும் நன்கு விளங்கும்படி உரையாற்றியவர் மது தண்டவதே. அவையின் மாண்புகளைக் கடைபிடிப்பதிலும், அவைத்தலைவருக்குரிய மரியாதையை அளிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்திச் செயல்பட்டவர் மது தண்டவதே.
நெருக்கடி நிலையில்…
1975-77இல் நாடுதழுவிய அவசரநிலை நடைமுறையில் இருந்த காலத்தில், ஜனநாயகத்திற்கு எதிராகத் திகழந்த, அவசர நிலைக்கு எதிராகக் குரல் கொடுத்த மது தண்டவதே, அதன் விளைவாகத் சிறைத்தண்டனை அனுபவித்தார். இவரும், இவர் மனைவியும் பிரமிளா தண்டவதேவும் (பின்னாளில் இவரும் நாடாளுமன்ற உறுப்பினரானார்) வெவ்வேறு ஊர்களில் உள்ள சிறைச்சாலைகளில் சிறை வைக்கப்பட்டனர். மது தண்டவதே பெங்களூரு சிறையில்; பிரமிளா தண்டவதே- புனே ஏரவாடா சிறையில். சிறையிலிருந்தபடியே இவர்கள் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் (கிட்டத்தட்ட 200) தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டன.
மேதைகளான கணவன்-மனைவி, தங்களுக்குள் செய்துகொண்ட இக்கருத்துப் பரிமாற்றங்கள், பின்னாளில் மிகப் பிரபலமாகின. இக்கடிதங்களில் இசை, தத்துவம், காதல் போன்ற தலைப்புகளை இவர்கள் விவாதித்தனர். இடையிடையே கிண்டலுக்கும் பஞ்சமில்லை. எடுத்துக்காட்டாக, மது தண்டவதேவிற்கு எழுதிய கடிதமொன்றில் பிரமிளா தண்டவதே பின்வருமாறு குறிப்பிட்டார்: ‘இதுவரையில் நீங்கள் இவ்வளவு முறையாக எனக்குக் கடிதம் எழுதியதுண்டா? நீங்கள் நீண்ட பயணங்களுக்கு போய் மாதக்கணக்கில் எழுதாமலிருப்பீர்கள். அப்போதெல்லாம் யாராவது உங்களைப் பற்றி விசாரித்தால், என்னிடம் சொல்ல வார்த்தையே இருக்காது. நான் மிகவும் அவமானப்பட்டுப் போவேன். ஆனால் இப்போது பாருங்கள், ஒவ்வொரு திங்கள்கிழமையும் தவறாமல் எனக்குக் கடிதம் எழுதுகிறீர்கள். உங்களை இவ்வாறு எழுத வைத்த அவசரநிலைக்குத்தான் நன்றி கூறவேண்டும்!’.
தங்களின் ஒரே மகன் உதய் தண்டவதே (தற்சமயம் ஆம் ஆத்மி கட்சியில் உள்ளார்) குறித்துக் கவலைப்பட்ட பிரமிளா தண்டவதே, ‘நமக்கு ஒரே மகன். ஆனால் அவனுக்காகத் தற்சமயம் எதுவும் செய்ய முடியவில்லை; நம்முடைய மதிப்பீடுகளையும் எண்ணங்களையும் அவனுக்குள் ஊட்ட முயன்றோம்; அவன் முழுமையாகத் தயார் ஆகுமுன், அவன் இறகுகளில் சக்தி வருவதற்குமுன், அவனை விட்டுப் பிரிந்து நிற்கிறோம். அவன் தனியாகப் போராடி, தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கவேண்டிய நிலைக்கு வந்து விட்டான்!’ என்று குறிப்பிட்டார். மேலும் ஒரு கடிதத்தில் ‘தன்னுடைய பெற்றோர் உயிரோடு இருந்தபோதும், அவன் ஒரு அனாதையாக இருக்கிறான்!’ என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
எரவாடா சிறையில் தன்னைச் சந்திக்கக் கோரி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு மது தண்டவதேவிடம் கடிதம் எழுதிக் கேட்டுக்கொண்டார் பிரமிளா தண்டவதே. இச்சந்திப்பிற்காகச் செய்யப்படும் மொத்தச் செலவுகளையும் மது தண்டவதே அவர்களே ஏற்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அரசாங்கத்தால் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், தங்களின் கொள்கைக்கு எதிரான இந்த நிபந்தனையை இத்தம்பதிகள் ஏற்கவில்லை. எனவே சிறையிலிருந்து விடுவிக்கப்படும்வரை இவர்கள் சந்திக்கவில்லை. ‘இந்த இருள் விடியவே விடியாதா?’ என்று வருத்தப்பட்டுக் கணவருக்குக் கடிதம் எழுதினார் பிரமிளா தண்டவதே.
ஒரு வழியாகப் பொழுது விடிந்தது. தேர்தல் வந்தது. அதுவரையில் சந்தித்திராத தோல்வியைக் காங்கிரஸ் சந்தித்தது. இந்திரா காந்தியே தோற்க நேர்ந்தது. ஜனதா கட்சி ஆட்சியமைத்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். மது தண்டவதே கேபினட் அமைச்சரானார்- இரயில்வே துறைக்கு.
(தொடரும்)

