Skip to content
Home » அயோத்திதாசர் #4 – சமூக அரசியலும் தலித்திய இதழ்களின் தோற்றமும்

அயோத்திதாசர் #4 – சமூக அரசியலும் தலித்திய இதழ்களின் தோற்றமும்

1870 – 1890 காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தங்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்காகச் சென்னைக்குக் குடிபெயர்ந்துகொண்டிருந்தனர். சென்னை மாநகரின் வணிக வளர்ச்சிக்குப் பிரதான காரணமாக இம்மக்கள் இருந்தார்கள். இவர்களுக்கான உரிமைகளைக் காக்கவும் சமத்துவத்தை நிலைநாட்டவும், தலித்திய அறிஞர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் பல்வேறு சீறிய முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். பண்டிதரின் குருவான வீ. அயோத்திதாச பண்டிதர், சதாவதானம், வைரக்கண் வேலாயுதம் புலவர், புதுப்பேட்டை வேங்கிடசாமி பண்டிதர், ஶ்ரீமான் அரங்கைய தாசப் பண்டிதர், மயிலை சின்னத்தம்பி உள்ளிட்ட முக்கியமான சமூக சீர்திருத்தவாதிகள் தீவிரமான இலக்கியப் பணிகளையும் சமூக ஒருங்கிணைப்புப் பணிகளையும் முன்னெடுத்து வந்தனர்.

இந்தச் சூழலில் நீலகிரியில் அயோத்திதாசரின் செயல்பாடுகள் சமூக முன்னேற்றத்தைக் குறிக்கோளாக முன்வைத்து தீவிரமாக நடைபெற்று வந்தன. இலக்கியப் பணிகள் வழியாகச் சமூகத்தில் விழிப்புணர்வைப் புகுத்தி மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றபோது சிலர் மதங்களின் வாயிலாகச் சமூக மாற்றங்களைக் கொண்டுவர முனைந்தனர். இத்தகைய நபர்களில் சாங்கு சித்த சிவலிங்க நாயனார் குறிப்பிடத்தக்கவர். சென்னை சேத்துப்பட்டு ஜெகந்நாதபுரத்தில் இருந்தபடி இவர் சமூகம் சார்ந்த பல்வேறு பணிகளை ஆற்றி வந்தார். பலதரப்பட்ட சமூக மக்கள் இவரிடம் சீடர்களாக இருந்தனர். இதனால் மதத்தின் மூலமாகச் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான பணிகளை இவர் முன்னெடுத்தார்.

இந்தக் காலக்கட்டத்தில் ஜான் ரத்தினம் என்பவர் அயோத்திதாசரின் நண்பராக மட்டுமல்லாமல் ஆலோசகராகவும் இருந்தார். இவர் இந்து மதத்தில் இருந்த மூட பழக்க வழக்கங்களை எதிர்த்துக் குரல் எழுப்பி வந்தார். கிறித்துவத்தின் சகோதரத்தன்மை கொள்கையால் ஈர்க்கப்பட்டு கிறித்துவ மதப் போதகராகக் கல்வி கற்ற பிறகு தன்னுடைய 27வது வயதில் (1877) பாதிரியாராகப் பணியாற்றத் தொடங்கினார். அந்நாளில் இருந்து மறை திரு. ஜான் ரத்தினம் என்று அழைக்கப்பட்டார்.

அன்றைய சூழலில் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு கிறித்துவ சமயத்தின் வழியாகப் பல பணிகளை மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவற்றை மேற்கொண்ட ஜான் ரத்தினத்தின் நட்பு, பண்டிதருக்குப் பெரும் உதவியாக இருந்ததோடு அவருடைய சிந்தனைகளையும் ஆழமாக்க வழிவகை செய்தது.

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்கப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல சிறிய அமைப்புகள் பரவலாகத் தோன்றியபடி இருந்தன. குறிப்பாக, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அமைப்புகள் இதழ்களைத் தொடங்கின. ஆங்கில வழிக் கல்வி இந்தப் போக்கை மேலும் வலுவுடையதாக மாற்றியது. சுபிச்சார சங்கம், பூர்வ தமிழ் அபிமான சங்கம், பஞ்சமர், கல்விச் சங்கம், ஆதுலர் அபிவிருத்தி சங்கம், அயோத்திதாசரின் ’அத்வைதானந்த சபை’ உள்ளிட்டவை தனித்தனியாக இயங்கி சமூகத்தின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் சமூக வளர்ச்சிக்காகவும் குரல் கொடுத்து வந்தன.

இந்நிலையில், தலித் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான மிக முக்கியமான முயற்சி ஒன்றை திருவேங்கிடசாமி என்பவர் மேற்கொண்டார். சென்னையிலிருந்த ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக 1869ஆம் ஆண்டில் ’சூரியோதயம்’ என்ற பெயரில் முதல் தலித்திய இதழ் அவரால் வெளியிடப்பட்டது. இதுவே, இந்தியாவின் முதல் தலித்திய இதழாகக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து ’பஞ்சமன்’ என்னும் இரண்டாவது தலித்திய இதழ் 1871ஆம் ஆண்டு வெளிவந்தது. தலித் மக்களின் முன்னேற்றத்திற்கான போராட்டக் குரலாக இந்த இதழ் செயல்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இதற்கு அடுத்ததாக 1872ஆம் ஆண்டில் சுவாமி அரங்கையாதாஸ் என்பவரால் ’சுகிர்தவசனி’ எனும் இதழ் சென்னையில் இருந்து வெளியிடப்பட்டது. சமூக சீர்திருத்தம், மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த இதழ் வெளியானது. 1883ஆம் ஆண்டில் பாளையங்கோட்டைச் சேர்ந்த கே. ஆறுமுகம் பிள்ளை என்கிற ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவரால் ’இந்து மத சீர்திருத்தி’ என்னும் இதழ் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேலூர் முனுசாமி பண்டிதரின் முயற்சியால் 1886ஆம் ஆண்டில் ’ஆன்றோர் மித்திரன்’ என்கிற இதழ் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை கிருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய பா.அ.அ. இராஜேந்திரம் பிள்ளை என்பவரால் ’மஹா விகடதூதன்’ என்கிற இதழ் தொடங்கப்பட்டது. 1886 முதல் 1927 வரை இது வெளிவந்தது என்பதையும், இராஜேந்திரம் பிள்ளைக்குப் பிறகு, தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்திரிகை ஆசிரியர்கள் சிலர் இதன் வெளியீட்டைத் தொடர்ந்தனர் என்பதையும் அறிய முடிகின்றது.

’பறையன்’ இதழை இரட்டைமலை சீனிவாசன் 1893 முதல் 1900 வரை வெளியிட்டார். மாத இதழாகத் தொடங்கி பின்னர் வார இதழாக இது மாற்றம் கண்டது. இந்தப் பத்திரிகை ஒடுக்கப்பட்டோருக்காக அதிலும் பறையர் சமூகத்தினருக்காகத் தனி பள்ளிகளைத் தொடங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வந்ததை அறியமுடிகிறது. ஜான் ரத்தினத்தின் தொடர்பும் நட்பும் அயோத்திதாசருக்கு தன்னுடைய கொள்கைகளில் உறுதியான பிடிப்பை உண்டாக்கியது என்றே கூறலாம். சமூகத்தில் நிலவிய பார்ப்பனிய கொடுமைகளில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை மீட்டெடுக்க அவர்களது தாய் மதமான பௌத்ததுக்கு மீண்டும் அவர்களை அழைத்துச் செல்வதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று அவர் முடிவு செய்தார்.

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் உலகளாவிய முறையில் பல்வேறு புதிய சமய அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. இவற்றின் வழியாக சமயச் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. உலகின் பல முக்கிய நகரங்களில் சமய மாநாடுகள் நடைபெற்றன. சமயங்கள் கூறும் உள்ளார்ந்த, உண்மைத் தன்மை வாய்ந்த தத்துவங்களை வெளிக்கொணர இந்தச் சமய நிறுவனங்கள் முனைப்புடன் செயலாற்றின. மேலும், மேற்கத்திய செல்வந்தர்கள் பலரும் சமய் தத்துவங்களின் உண்மைப் பொருளைக் கண்டறியும் பொருட்டு இந்தியாவுக்குப் பயணித்தார்கள். இவ்வாறு இந்தியாவுக்கு வருகை தந்தவர்களால் புதிய சபைகள் உருவாக்கப்பட்டு சமய கூடுகைகள் நடத்தப்பட்டன. இவற்றின் வழியாக மக்களுக்குப் பல்வேறு சேவைகளைச் செய்ய வழிவகை செய்யப்பட்டன. அந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பிளாவட்ஸ்க்கி அம்மையாரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டும் இறையாண்மை கோட்பாடுகளையும் தத்துவங்களையும் அறியும் நோக்குடன் இந்தியாவுக்கு வந்தனர்.

பிளாவாட்ஸ்கி அம்மையார் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டபோதும் இல்லறத்தில் நாட்டம் இல்லாமல் தன்னுடைய 17ஆம் வயதில் கணவரைப் பிரிந்து இறைத் தத்துவங்களின் உண்மைப் பொருளை ஆராயத் தொடங்கினார். அமெரிக்க உள்நாட்டுப் போர்களில் பங்கேற்ற ஹென்றி பின்னர் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அவருக்கு மதத் தத்துவங்களில் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிளாவட்ஸ்க்கி அம்மையாருடன் இணைந்து அவர் பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார்.

இவர்களின் இந்திய வருகை அயோத்திதாசருக்கு புதிய ஊக்கத்தை அளித்தது. ஓய்வுக்காக நீலகிரி வந்த இருவரையும் தன்னுடைய தோழர் சீனிவாசனுடன் இணைந்து பண்டிதர் சந்தித்தார். ஹென்றிக்கு பௌத்த மதக் கோட்பாடுகள் மீது ஆழ்ந்த பற்றுதல் இருந்த காரணத்தால் அயோத்திதாசருக்கும் அவருக்கும் பெரும் இணக்கம் ஏற்பட்டது. பண்டிதரைப் பொறுத்தவரையில் இந்தச் சந்திப்பு அவருக்குப் பயனுள்ளதாகவே இருந்துள்ளது. நீலகிரியில் இருந்து சென்னைக்குத் திரும்பிய பிளாவட்ஸ்க்கியும் ஹென்றியும் 1883ஆம் ஆண்டில் அடையாற்றில் ’பிரம்ம ஞான சபை’ (தியோசஃபிகல் சொசைட்டி) என்கிற அமைப்பை உருவாக்கினார்கள். இதன் செயல்பாடுகளில் அயோத்திதாசரும் ஈடுபட்டு பௌத்தத் தத்துவங்களின் உண்மைப் பொருண்மைகளை அறிந்து வந்தார்.

1884ஆம் ஆண்டில் நடைபெற்ற தியோசஃபிகல் சொசைட்டியின் ஆண்டு விழா நிகழ்வுக்கு ஹென்றி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ரெட்டைமலை சீனிவாசன் உட்பட பல அறிஞர்களும் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டனர். இந்தியர்களின் அரசியல் தேவைகளுக்காக ஓர் அமைப்பை உருவாக்கவேண்டிய அவசியம் உள்ளதாக ஹென்றி இந்தக் கூட்டத்தில் கூறினார். சென்னையில் இயங்கி வந்த சுதேசி இயக்கம் அச்சமயம் வெறுமனே பெயரளவில் மட்டுமே இயங்கி வந்ததும் இதற்கு ஒரு காரணமாகும்.

ஹென்றியின் ஆலோசனையைக் கருத்தில்கொண்டு அதே ஆண்டில் ’மெட்ராஸ் மகாஜன சபை’ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அதன் சொத்துடைமையாளருக்கு மட்டுமே இருந்தது. இதைக் கவனித்த அயோத்திதாசர் அரசியல் தளத்திலும் உயர் வகுப்பைச் சேர்ந்தோர் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் நோக்கில் 1891ஆம் ஆண்டில் ’திராவிடர் மஹாஜன சபை’ என்கிற அமைப்பை உருவாக்கினார். இதற்கு நடுவே தன்னுடைய நண்பர் ஜான் ரத்தினத்துடன் இணைந்து ’திராவிட பாண்டியன்’ இதழை 1885ஆம் ஆண்டில் பண்டிதர் தொடங்கியிருந்தார். இந்த இதழின் ஆசிரியராக ஜான் ரத்தினம் செயல்பட்டார். மிகுந்த அறிவையும் கல்விப் புலமையையும் பெற்றிருந்த இந்த இருவரின் கூட்டு முயற்சியால் திராவிட பாண்டியன் இதழ் வெற்றிகரமாக வெளிவந்துகொண்டிருந்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *