விவசாயிகள், தங்கள் பிள்ளைகள் ஐடி படித்துவிட்டு அமெரிக்காவுக்குச் செல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். என்னுடைய சக பதிப்பாளர்களைப் பார்த்தால் ஓரிருவர் தவிர பிறருடைய அடுத்த தலைமுறை யாருமே பதிப்புத் தொழிலுக்குள் வரவில்லை.
அம்பத்தூர், திருமழிசை, திருமுடிவாக்கம் முதலிய பல தொழில்பேட்டைகளில் தொழிற்சாலைகளை நடத்தி வீடு, கார் என்று வசதியாக வலம்வரும் பல தொழிலதிபர்களின் பிள்ளைகளும் தந்தையின் தொழில் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். பணம் கிடைக்கிறது என்றாலும் காலை முதல் மாலை வரை யார் தொழிற்சாலையின் அழுக்குகளில் கிடந்து புரளுவது என்பதே அவர்களுடைய வாதம்.
சில தொழில்களில் அடுத்தடுத்த தலைமுறையினர் விரும்பி நுழைவதையும் பார்க்கிறோம். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் (சிஏ) ஆகியோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அப்பா, அடுத்து மகன், மகள் என்று அதே துறை. கூடவே இவர்கள் திருமணம் செய்துகொள்ளும்போதும் மருத்துவர் மருத்துவரையும் சிஏ சிஏவையும் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொள்கிறார்கள். இங்கே வேலைப்பளு இருந்தாலும் பெயர், புகழ், பணம் என்று எல்லாம் கிடைக்கிறது. எனவே அடுத்த தலைமுறையும் இதனை விரும்புகிறது.
ஏப்ரல் 23, 2026 அன்று தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளராக நிற்க விரும்பும் எவரும் தங்களுடைய கல்வித்தகுதி, சொத்துப் பட்டியல் ஆகியவற்றைத் தரவேண்டும். 1967-லிருந்து தமிழகத்தை திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ஆண்டுவருகின்றன. இந்தக் கட்சிகளைச் சேர்ந்த சாதாரண எம்.எல்.ஏக்களிலிருந்து சூப்பர் டூப்பர் அமைச்சர்கள், முதல் அமைச்சர்கள் என அனைவருடைய சொத்து மதிப்புகளைப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.
திமுக அமைச்சர்கள் பெயரில் மட்டும் இருக்கும் சொத்துகளை ஆராய்ந்தால், மிக அதிகப் பணக்கார அமைச்சரின் சொத்து மதிப்பு வெறும் 48 கோடி ரூபாய் மட்டுமே. திமுகவின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். அவருடைய சொந்தச் சொத்து வெறும் 29 கோடி ரூபாய்தான். டாப் டென் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் பெயரையே காணோம்.
முதல்வர் ஸ்டாலினுக்கு சொந்தமாக வீடு இல்லை, கார் இல்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்த வீடு, விவசாய நிலம் என்று எதுவும் இல்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் தங்கள் வாழ்க்கையையே அரசியலுக்காகவும், தங்கள் கட்சிக்காகவும், தங்கள் மாநில மக்களின் நன்மைக்காகவும் என்று செலவிட்டு, அல்லும் பகலும் அரும்பாடு பட்டுவரும் இவர்கள் தங்கள் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் தங்களுக்கென ஒன்றுமே சேர்த்துக்கொள்ளவில்லை என்பதை நினைக்கையில் நெஞ்சம் பதறுகிறது.
ஒரு சாதாரண ஐடி துறை வேலையில் சேர்ந்து பத்து, இருபது ஆண்டுகள் உழைக்கும் ஓர் இளைஞனே இதைவிட அதிகம் சொத்து சேர்த்துவிடுவார். சொந்தமாகத் தொழில் தொடங்கி சாதிக்கும் பலரும் மிக எளிதில் மேலே சொன்ன அரசியல் சாதனையாளர்களின் சொத்துகளைப் போலப் பல மடங்கு சம்பாதித்துவிடுகிறார்கள். ஆனால் நம் அரசியல்வாதிகளோ, மிடில் கிளாஸ் என்பதைப் பெரும்பாலும் தாண்டுவதில்லை.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், இவர்களுடைய பிள்ளைகளும் பெண்களும் தாங்களும் அரசியலுக்கு வந்தே தீருவோம் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். பூங்கோதை ஆலடி அருணா என்று திமுக உறுப்பினர் ஒருவர். அவருடைய தந்தை ஏதோ தனி நபர் பிரச்னை காரணமாகக் கொல்லப்பட்டார். பூங்கோதை இங்கிலாந்து நாட்டில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். மிக நல்ல சம்பளம் இருந்திருக்கும். அப்படியே அதனை விட்டுவிட்டு தமிழகம் வந்து, தேர்தலில் நின்று பின்னர் அமைச்சராகவும் ஆனார்.
நன்கு படித்தவர், வெளிநாடுகளில் வேலை பார்த்தவர், கட்சியின் ஒழுங்குக்கு ஏற்ப, சட்டமன்றத்தில் பெஞ்சுமீது ஏறி நின்று பேப்பரைக் கிழித்து வீசி எறிந்தெல்லாம் போராட்டம் செய்தார். பின்னர் தேர்தலில் தோல்வி அடைந்து இன்று கிட்டத்தட்டக் காணாமலேயே போய்விட்டார். இந்தியா வந்து மருத்துவராகப் பணியாற்றியிருந்தாலே இன்று பல கோடிகளைச் சம்பாதித்திருக்கலாம். ஒருவேளை அவ்வாறு இப்போது மருத்துவர் வேலையைச் செய்துகொண்டிருக்கிறாரோ என்னவோ, தெரியவில்லை.
முனைவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மிக அருமையாக ஆங்கிலம் பேசுபவர். வெளிநாடுகளில் நிதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகித்தவர். அவருடைய மூதாதையருக்கே எக்கச்சக்க சொத்துகள் உண்டு. அவருடைய பாட்டனார் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக சென்னை மாகாணத்தில் பிரீமியராக இருந்தவர். அவருடைய தந்தை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்.
தந்தையின் மறைவுக்குப் பின், தன் அமெரிக்க மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மதுரை வந்த பிடிஆர், தேர்தலில் குதித்து மிகச் சிறப்பாக எதிர்க்கட்சி உறுப்பினராகச் செயலாற்றினார். பின்னர் திமுக ஆட்சியில் நிதியமைச்சராக ஆனார். தகுதி அல்லது வேலையில் திறனின்மை என்பதனால் அல்ல, வேறுசில மர்மமான காரணங்களால் ஐடி துறைக்குத் தள்ளப்பட்டார். இப்போது தன் சொத்து மதிப்பு வெறும் 39 கோடி ரூபாய்தான் என்று சொல்லியிருக்கிறார்.
அமெரிக்காவில் வேலையில் இருந்தால் ஆண்டுக்கு இதற்குமேல் சம்பளம் பெற்றிருப்பார். அதையெல்லாம் தூர எறிந்துவிட்டு தம் முன்னோர்களைப்போல அரசியலில் இறங்கியிருக்கிறார்.
இதுவரை நாம் மேலே சொன்னவர்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு போன்றவர்கள் மிகவும் ஏழைகளாகத் தெரிகிறார்கள். திருச்சி மாவட்டத்தையே தன் கைக்குள் வைத்திருக்கும் நேரு அவர்களின் மொத்தக் குடும்பத்தின் மொத்தச் சொத்து பத்து கோடி ரூபாய்க்கும் குறைவாம். கொங்கு நாட்டுத் தங்கம் செந்தில் பாலாஜியும் மிக மிகக் குறைவான சொத்துக்கே அதிபதியாக உள்ளார். இவர்களின் தியாக உணர்வு, என்னைக் குற்ற உணர்ச்சி உடையவனாக ஆக்கியிருக்கிறது.
நானோ இந்த நாட்டின்மீது எள்ளளவும் பற்று இல்லாமல், பல தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பது ஒன்றே குறி என்று இத்தனை ஆண்டுக் காலத்தை வீணடித்துவிட்டேன். தேசநலனைப் பற்றிக் கவலைப்படாத என்னைப் போன்றோர், தமிழக அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசுவதற்கு முற்றிலும் அருகதை அற்றவர்கள்.
என்னை மன்னித்துவிடுங்கள், அரசியல்வாதிகளே.
தமிழக வேட்பாளர்களிலேயே அதிக சொத்து மதிப்பு உடையவர்கள் என்னும் பட்டியலில் வரும் முதல் மூவர் பின்வருமாறு:
1. லாட்டரி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், அதிமுக கட்சியில் சமீபத்தில் சேர்ந்தவர். இவருடைய சொத்து 1048 கோடி ரூபாய். குடும்பத்தின் சொத்து 6000 கோடிக்கும் மேல். தேர்தல் பத்திரங்கள்மூலம் சர்வசாதாரணமாக லாட்டரி மார்ட்டின், திமுக, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக எனும் மூன்றே கட்சிகளுக்குக் கொடுத்த நன்கொடை 1150 கோடி. அதைக் கொடுத்தபின்பும் அவர்கள் கையில் 6000 கோடி (அறிவிக்கப்பட்ட சொத்து!) உள்ளது.
2. தவெக கட்சியின் நிறுவனர், தலைவர் மற்றும் நடிகர் விஜய். சொத்து மதிப்பு 645 கோடி.
3. தவெக கட்சியின் ஆதவ் அர்ஜுனா. இவர் லாட்டரி மார்டினின் மருமகன்! இவருடைய மற்றும் இவருடைய மனைவியின் சொத்துமதிப்பு கிட்டத்தட்ட 350 கோடி.
4. திமுகவின் நெடுநாளைய எம்.எல்.ஏ, அமைச்சர் துரைமுருகன். குடும்பத்தின் மொத்தச் சொத்து கிட்டத்தட்ட 262 கோடி.
விஜயகாந்தின் மனைவி, மகன் இருவரும் தேர்தலில் நிற்கிறார்கள். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து 115 கோடி என்றால், இவர்கள்மீதான கடன் 100 கோடிக்குமேல் உள்ளது.
என் கேள்விக்கு மீண்டும் வருகிறேன். நடிப்புத் தொழில்மூலம் சொத்து சேர்க்கலாம். நடிகர் விஜய் போல. லாட்டரி தொழில்மூலம் சொத்து சேர்க்கலாம், லாட்டரி மார்ட்டின் குடும்பத்தவர்போல. கையில் உள்ள ரொக்கத்தைப் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வங்கி டெபாசிட் என்று முதலீடு செய்தால் சொத்து மதிப்பு உயரும். அதேபோல ஆங்காங்கே வீடு, நிலம், வணிக வளாகம் என்று வாங்கிவைத்து, வாடகை வசூலித்தாலேயே சொத்து மதிப்பும் உயரும், வருமானமும் வரும்.
ஆனால் இவற்றையெல்லாம் வெகு சில அரசியல்வாதிகளே ஒழுங்காகச் செய்கிறார்கள் என்பது இவர்கள் கொடுத்திருக்கும் சொத்துப் பட்டியலிலிருந்து தெரியவருகிறது.
அல்லது…
இவர்கள் அனைவரும் கடைந்தெடுத்த பொய்யர்கள், நாம் அனைவரும் கேனையர்கள், நம்மை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்று தெரியவருகிறது.
இரண்டில் ஒன்றுதான் உண்மை.
0

