Skip to content
Home » பனிப்போர் #2 – முரண்பாட்டின் தத்துவவாதிகள்

பனிப்போர் #2 – முரண்பாட்டின் தத்துவவாதிகள்

20ஆம் நூற்றாண்டின் பிற்பாதியை ஆக்கிரமித்த அந்த மாபெரும் மோதலின் ஆணிவேர் எது தெரியுமா? நிலங்களோ, வளங்களோ, ராணுவ ஆதிக்கமோ அல்ல. மனித வாழ்வின் அடிப்படை என்ன, ஒரு சமூகம் எப்படி நேர்த்தியாக இயங்க வேண்டும் என்பது குறித்த ஆழமான முரண்பாடுதான் அது. இரண்டு முற்றிலும் முரணான மனித வாழ்வியல் சித்தாந்தங்கள் ஒரு பெரும் தத்துவப் பள்ளத்தாக்கின் இருபுறமும் நின்று ஒன்றையொன்று நேருக்கு நேர் சந்தித்தன. அந்தப் பள்ளம் எவ்வளவு ஆழமானது என்றால், இரண்டுக்கும் இடையே சமரசம் என்பது சாத்தியமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. பரஸ்பர பயமும் பீதியும் கலந்த ஓர் ஆபத்தான சமநிலையின் மூலம் மட்டுமே அவை இரண்டும் இந்த உலகில் ஒன்றாக இயங்க முடிந்தது. ஒரு பிரம்மாண்டமான தேவாலயத்தின் வெளிப்புறக் கற்களை மட்டும் பார்த்துவிட்டு அதன் மொத்த அமைப்பையும் புரிந்துகொள்ள நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதே அளவு முட்டாள்தனம் இந்தத் தத்துவ முரண்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் பனிப்போரை வெறும் ராஜதந்திர மற்றும் ராணுவ நெருக்கடிகளாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது.

இன்றைய இளம் தலைமுறைக்கு ஓர் அடிப்படையான கேள்வி எழலாம். அது என்ன பனிப்போர்? பனியில் நின்று சண்டை போட்டார்களா? இல்லை. துப்பாக்கிகள் வெடிக்கவில்லை, பீரங்கிகள் நேரடியாக மோதிக்கொள்ளவில்லை, ஆனாலும் உலகம் முழுவதும் ஒரு நிரந்தரமான மரணப் பதற்றம் சூழ்ந்திருந்தது. 1945இல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த மறுகணமே இந்த நிழல் யுத்தம் தொடங்கிவிட்டது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் நேரடியாக மோதிக்கொண்டால் மொத்த உலகமும் அணு ஆயுதத்தால் அழிந்துவிடும் என்பதால், மறைமுகமாகத் தங்கள் பலத்தைப் சோதித்துப் பார்த்த காலக்கட்டமே பனிப்போர். இது ஒரு விசித்திரமான யுத்தம். இதில் போர்க்களம் என்பது வெறும் தேச எல்லைகளாக மட்டும் இருக்கவில்லை; விண்வெளிப் போட்டிகள், உளவு வேலைகள், தொழில்நுட்பம், ஏன் ஒலிம்பிக் விளையாட்டு மைதானங்கள் வரை மனிதன் இயங்கிய எல்லாத் தளங்களிலும் இந்த யுத்தம் வியாபித்திருந்தது.

சரி, இது எப்போது முடிந்தது? 1991இல் சோவியத் யூனியன் பல துண்டுகளாக உடைந்தபோது, பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உலகம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டது. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதோடு அந்த இருண்ட சகாப்தம் முடிந்துவிட்டது என்று வரலாற்றுப் புத்தகங்கள் எழுதிவிட்டன. ஆனால் உண்மையிலேயே அது முடிந்துவிட்டதா? இன்று நடக்கும் ரஷ்ய-உக்ரைன் போரையும், அமெரிக்க-சீனப் பதற்றங்களையும் உற்று நோக்கினால், பனிப்போர் முடியவில்லையோ? தன் சட்டையை மட்டும் மாற்றிக்கொண்டு இன்றும் தொடர்கிறதோ என்ற சந்தேகம் வராமல் இருக்காது. ஆயுதங்களும் ஆடுகளமும் மாறலாம்; ஆனால் இந்த மோதலின் ஆணிவேர் அப்படியேதான் இருக்கிறது. அதை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நாம் மீண்டும் அந்தத் தத்துவப் பள்ளத்தாக்கின் விளிம்பிற்கே செல்ல வேண்டும். அப்படி என்னதான் இந்த இரண்டு தரப்புக்கும் இடையிலான அடிப்படைப் பிரச்னை?

முதலாளித்துவத்தின் அறிவார்ந்த அடித்தளத்தை ஸ்காட்டிஷ் அறிவொளிக் காலத்தில் ஆடம் ஸ்மித் அமைத்தார். அவரது புகழ்பெற்ற ‘கண்ணுக்குத் தெரியாத கை’ (invisible hand) தத்துவம் என்ற கருத்து, ஒரு மனிதன் தனது சொந்த நலனுக்காக செயல்பட்டாலும், அதனால் அவனுக்குத் தெரியாமலேயே சமூகம் முழுவதும் முன்னேற்றம் அடையும் என்பதை விளக்குகிறது. பின்னாளில் ஃப்ரெட்ரிக் ஹயக் இதையே ‘அறிவுப் பிரச்சினை’ என்று விரிவாக விளக்கினார். அதாவது, கோடிக்கணக்கான மனிதர்களிடம் சிதறிக் கிடக்கும் பொருளாதாரத் தகவல்களை எந்தவொரு அரசாங்கத்தாலும் மையப்படுத்தித் திட்டமிடவோ வெற்றிகரமாக நிர்வகிக்கவோ முடியாது என்றார். ஸ்மித்தின் இந்தப் பொருளாதாரத் தாராளவாதத்திற்கு ஜான் ஸ்டூவர்ட் மில் தத்துவ மகுடம் சூட்டினார். 1859இல் வெளியான அவரது ‘ஆன் லிபர்ட்டி’ புத்தகத்தில், ‘தன் மீதும், தன் உடல் மீதும், தன் மனதின் மீதும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முழு இறையாண்மை உண்டு’ என்று பிரகடனம் செய்தார். அதிகாரப் பகிர்வு மற்றும் நீதித்துறையால் உறுதி செய்யப்படும் உரிமைகளைக் கொண்ட அமெரிக்கக் குடியரசு, இந்தத் தத்துவத்தின் மிகச் சிறந்த செயல்வடிவமாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டது. கொள்கையளவில் அது கம்பீரமாக நின்றாலும், நடைமுறையில் அது பல குறைகளைக் கொண்டிருந்தது. ஏனென்றால், 1964 வரை கறுப்பின மக்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டைச் சட்டபூர்வமாக வைத்திருந்த ஒரு நாடு, தன்னைச் சுதந்திரத்தின் முழுமையான, கறையற்ற அடையாளமாகக் காட்டிக் கொள்ள முடியாது அல்லவா?

இந்தத் தாராளவாதக் கட்டமைப்பிற்கு எதிராக, கார்ல் மார்க்ஸ் ஒரு வலுவான, உள்ளுக்குள் நேர்த்தியாகப் பின்னப்பட்ட மாற்றுச் சிந்தனையை முன்வைத்தார். அது வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற அடிப்படையில் அமைந்தது. சமூகம் எப்படி இயங்குகிறது என்பதைத் தீர்மானிப்பது அதன் பொருளாதார அடித்தளம்தான்; வர்க்கப் போராட்டங்களின் வழியாகவே வரலாறு நகர்கிறது; முதலாளித்துவத்தின் உள்ளேயே இருக்கும் முரண்பாடுகள் பிற்காலத்தில் அதை அழித்துவிடும் என்றார் மார்க்ஸ். ‘அந்நியமாதல்’ என்ற அவரது கோட்பாடு மிக முக்கியமானது. ஒரு தொழிலாளி தான் உருவாக்கும் பொருளிலிருந்து, தன் உழைப்பிலிருந்து, சக மனிதர்களிடமிருந்து, ஏன் தனக்குள்ளே இருக்கும் படைப்பாற்றலிலிருந்தே அந்நியப்பட்டுப் போகிறான் என்ற சமூக நோயை அவர் துல்லியமாகக் கணித்தார். இதற்குப் புரட்சி என்ற ஒன்றுதான் மருந்து என்று அவர் உறுதியாக நம்பினார்.

ரஷ்யப் புரட்சியாளர், அரசியல் கோட்பாட்டாளர் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் நிறுவனரான விளாடிமிர் லெனின் ‘என்ன செய்ய வேண்டும்?’ (What Is To Be Done?) என்ற நூலில் இதற்கு ஒரு முக்கியமான மாற்றத்தை முன்வைத்தார். தொழிலாளர்கள் தாமாகவே புரட்சி செய்வார்கள் என்று காத்திருக்கக் கூடாது. அவர்களுக்கு வழிகாட்ட ஒரு கட்டுப்பாடான முன்னோடி கட்சி வேண்டும் என்றார். இதன் தர்க்கம் எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? தொழிலாளர்களின் உண்மையான நலன்களைக் கட்சி மட்டுமே பிரதிபலிக்கிறது என்றால், அந்தக் கட்சியை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் எதிரிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். இந்தச் சுழல் தர்க்கத்தின் கொடூரமான விளைவுகளை அடுத்தடுத்த தசாப்தங்கள் ரத்தமும் சதையுமாக உலகிற்குக் காட்டின.

1924இல் லெனின் மறைந்த பிறகு, ஜோசப் ஸ்டாலின், லியோன் ட்ரொட்ஸ்கி ஆகியோர் முக்கியத் தலைவர்களாக உருவாயினர். ட்ரொட்ஸ்கி ‘நிரந்தர சர்வதேசப் புரட்சி’ வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தபோது, அதற்கு எதிராக ஸ்டாலின் ‘ஒரு நாட்டில் சோசியலிசம்’ என்ற கோட்பாட்டைக் கொண்டு வந்தார். உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையைவிட, சோவியத் அரசின் நலன்களுக்கே முழு முன்னுரிமை அளிக்க இது தத்துவார்த்த நியாயத்தை வழங்கியது. இது தன் சொந்த அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள ஸ்டாலின் செய்த அதிகாரத்துவத் தந்திரம் என்றாலும், அதன் வியூகப் பயன்பாடு அபாரமானது. மேலும், அடக்குமுறைக்கான அரசு இயந்திரம் ஒன்றும் ஸ்டாலின் புதிதாகக் கண்டுபிடித்ததல்ல. 1917 டிசம்பரில் லெனினின் நேரடி அனுமதியோடு உருவாக்கப்பட்ட ‘செகா’ என்ற ரகசிய போலீஸ் அமைப்பிலேயே இதன் வேர்கள் இருந்தன. புரட்சியின் ஆரம்பத்திலிருந்தே பயங்கரவாதம் ஒரு அரசியல் கருவியாகவே பயன்படுத்தப்பட்டது. பின்னால் வந்த ஜி.பி.யு, என்.கே.வி.டி போன்ற அமைப்புகள் எல்லாம் ஏற்கெனவே இருந்த கொள்கையின் முதிர்ச்சியடைந்த வடிவங்கள் மட்டுமே.

இதற்கிடையே போல்ஷிவிசம் பற்றிச் சொல்ல வேண்டும். சோசியலிசம் என்பது ஒரு பரந்த கொள்கை என்றால், கம்யூனிசம் அதன் இறுதி லட்சியம் ஆகும், போல்ஷிவிசம் என்பது அந்த லட்சியத்தை அடைய ரஷ்யாவில் பயன்படுத்தப்பட்ட வன்முறைப் புரட்சிகர உத்தி. மேற்கத்திய நாடுகளுக்கு இந்த போல்ஷிவிசத்தின் அறிமுகம் ஒரு கசப்பான அனுபவமாகவே இருந்தது. ஜனவரி 1920இல் அமெரிக்காவில் நடந்த ‘பாமர் ரெய்டுகளில்’ வெறும் பதினைந்து நாட்களுக்குள் பத்தாயிரம் பேர் கைது செய்யப்பட்டார்கள். தாராளவாதக் குடியரசு என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா, தனக்கு எதிரான அரசியல் சித்தாந்தத்தைக் கண்டு எந்த அளவு பீதியடைந்து அதிகார துஷ்பிரயோகம் செய்யும் என்பதையே இது காட்டியது. ‘பார்த்தீர்களா, முதலாளித்துவத்தின் உள்ளேயே இந்தச் சர்வாதிகாரம் ஒளிந்திருக்கிறது’ என்று மார்க்சிய அறிஞர்கள் உடனடியாகச் சுட்டிக்காட்டினார்கள். ஆனால், முதலாளித்துவத்திற்கு மிகப்பெரிய சவால் அரசாங்கங்களின் அடக்குமுறையிலிருந்து வரவில்லை; அது தனக்குள்ளேயே வெடித்துச் சிதறியது.

1929க்குப் பிறகு உருவான மாபெரும் பொருளாதார மந்தநிலை, சம்பிரதாயப் பொருளாதாரக் கோட்பாடுகள் எதற்கும் பிடிபடவில்லை. 1932இல் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 25 சதவிகிதத்தைத் தொட்டது. இந்தச் சரிவைப் பார்த்த பல மேற்கத்திய அறிவுஜீவிகளுக்கு, மார்க்ஸ் சொன்ன முதலாளித்துவ முரண்பாடுகள் உண்மையாகவே பலித்துவிட்டதோ என்று தோன்றியது. அந்தப் பேரழிவின் பின்னணியில், தொலைவிலிருந்து பார்க்கும்போது சோவியத் யூனியனின் அசுரத்தனமான தொழில் வளர்ச்சி ஓர் ஈர்க்கக்கூடிய மாற்று வழியாகத் தெரிந்தது.

ஆனால் அந்தத் ‘தொலைவை’ சோவியத் அரசு மிகக் கவனமாகப் பராமரித்தது. சிட்னி, பீட்ரைஸ் வெப் போன்றவர்களை சோவியத் அரசு அழைத்துச் சென்று, தங்களுக்கேற்றபடி திட்டமிட்டுக் காட்டிய போலி பிம்பங்களைப் பார்க்க வைத்தது. அவர்கள் உடனே 1936ஆம் ஆண்டின் ஸ்டாலின் அரசியலமைப்பை, குடிமக்கள், அரசியல் மற்றும் மத உரிமைகளை முழுமையாக வழங்கும் அற்புதமான சாசனம் என்று புகழ்ந்து தள்ளினார்கள். 1932இல் புலிட்சர் விருது வாங்கிய நியூயார்க் டைம்ஸ் நிருபரான வால்டர் டுரான்டி, உக்ரைனில் நடந்த மாபெரும் பஞ்சத்தை (Holodomor) இருட்டடிப்பு செய்தார். முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட முடியாது என்று அவர் சர்வ சாதாரணமாகச் சொன்னார். ஆனால் உடைக்கப்பட்ட முட்டைகள் ஒவ்வொன்றும் மனித உயிர்கள். ஆன் ஆப்பிள்பாம், டிமோதி ஸ்னைடர் போன்ற வரலாற்று ஆய்வாளர்களின் ஆவணக் குறிப்புகளின்படி, 1932-33 ஆண்டுகளில் நடந்த ஹோலோடோமோர் பஞ்சத்தில் முப்பது முதல் நாற்பது லட்சம் உக்ரைனிய விவசாயிகள் பட்டினி கிடந்து செத்தார்கள். கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட கிராமங்களிலிருந்து தானியங்களை அரசு வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்ததே இதற்குக் காரணம். பின்னாளில் டெஹ்ரானில் சர்ச்சிலிடம் பேசிய ஸ்டாலின், போரை விடவும் கூட்டுப் பண்ணையாக்கம் ஒரு பயங்கரமான போராட்டமாக இருந்தது என்று ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த ஒப்புதலில் சிறு குற்றவுணர்ச்சிகூட இல்லை என்பதுதான் வரலாற்று அவலம்.

1936 முதல் 1938 வரை நடந்த மாபெரும் சுத்திகரிப்புகள், ஸ்டாலினின் இரும்புப்பிடி வெளியாட்கள் மீது மட்டுமல்ல, கட்சியின் மீதே எப்படி விழுந்தது என்பதைக் காட்டின. லெனினால் ‘கட்சியின் செல்லப்பிள்ளை’ என்று அழைக்கப்பட்ட நிகோலாய் புகாரின், கடுமையான உளவியல் நெருக்கடிகளுக்கும் குடும்பத்தை அழித்துவிடுவோம் என்ற மிரட்டலுக்கும் பயந்து, தான் செய்யாத குற்றங்களைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். கட்சியின் நலனுக்காகத் தன் உயிரைக் கொடுப்பதுதான் மார்க்சியத்தின் தர்க்கம் என்று அவர் நம்பவைக்கப்பட்டார். ஆர்தர் கோஸ்ட்லரின் ‘டார்க்னஸ் அட் நூன்’ நாவல் இந்த மனநிலையைத்தான் துல்லியமாகத் தோலுரித்துக் காட்டியது. கட்சியின் கொள்கைதான் தொழிலாளர்களின் உண்மையான நலன் என்றால், ஒரு தனிமனிதனின் நிரபராதித்தனம் தத்துவார்த்த ரீதியாக எதற்கும் உதவாது. தர்க்கரீதியாகப் பார்த்தால் இது மிகச் சரியானது; ஆனால் அதன் விளைவுகள் கொடூரமானவை.

1958இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இசையா பெர்லின் ஆற்றிய ‘சுதந்திரத்தின் இரு கோட்பாடுகள்’ (Two Concepts of Liberty) என்ற உரை இந்தச் சித்தாந்த மோதலை மிக அழகாகப் பகுப்பாய்வு செய்தது. ‘எதிர்மறைச் சுதந்திரம்’ (Negative liberty) என்பது தலையீடற்ற நிலை. அதாவது, ஒருவர் தன் விருப்பப்படி செயல்படுவதை மற்றவர்கள் தடுக்காமல் இருப்பது. ஆனால் ‘நேர்மறைச் சுதந்திரம்’ (Positive liberty) என்பது தனது திறனை முழுமையாக உணர்ந்து, தனது வாழ்க்கையைத் தானே கட்டுப்படுத்தும் திறன். எதிர்மறைச் சுதந்திரத்தில் அரசு தலையீடு மிகக்குறைவாக இருக்கும். நேர்மறைச் சுதந்திரத்தில், ‘மக்களின் உண்மையான நலன்’ என்ற பெயரில் அரசு தலையிடக்கூடும். சோவியத் அரசு இந்த நேர்மறைச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கொடூரமான அடக்குமுறைகளை அரங்கேற்றியது. கட்சியின் வழிகாட்டுதலை எதிர்ப்பதுகூட ஒரு வகையான அடிமைத்தனம்தான் என்றும், தனிமனிதனின் மாயையான எண்ணங்களுக்கு அவன் அடிமையாக இருக்கிறான் என்றும் அது தர்க்கம் பேசியது. இதற்கிடையில், ஹயக் சொன்ன ‘அறிவுப் பிரச்னை’ சோவியத் யூனியனில் அப்பட்டமாக நிஜமானது. சோவியத் திட்டக் குழுவான ‘கோஸ்பிளான்’ உருவாக்கிய புள்ளிவிவரங்கள், நிர்வாகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பொய்களாகவே கட்டமைக்கப்பட்டன. தரத்தைவிட அளவு முக்கியமானது; செயல்திறனைவிட அதிக உற்பத்தி முக்கியம் என்ற விபரீதமான நடைமுறை அங்கு உருவானது.

இந்த இரு அமைப்புகளையும் இன்னும் இரண்டு எல்லைகள் பிரித்தன. ஒன்று மதம். சோவியத் அரசு சட்டபூர்வமாகவே தீவிர நாத்திகத்தை அமல்படுத்தியது. ஆனால் அமெரிக்க அரசியல் கலாச்சாரமோ புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் இயங்கியது. பனிப்போரில் அமெரிக்கா பயன்படுத்திய தார்மீகப் போராட்ட வார்த்தைகள் பலவும் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டவை. மறுபக்கம், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை சோவியத் யூனியன் இடைவிடாமல் விமர்சித்தது. அந்த விமர்சனங்களில் உண்மையும் இருந்தது. ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழியப் பேசும் நாடுகள், இந்தியாவை அடிமைப்படுத்தியும், இந்தோசீனாவைத் தங்கள் பிடிக்குள் வைத்துப் போராடியும், சொந்த நாட்டிற்குள்ளேயே நிறவெறியை அனுமதித்தும் வந்தன. காலனி ஆதிக்கத்திற்கு எதிரான மாஸ்கோவின் அக்கறை அப்பட்டமான வெளிவேடம்தான் என்றாலும், மேற்கத்திய நாடுகளின் மீதான அவர்களின் குற்றச்சாட்டில் இருந்த பிரசாரப் பலத்தை யாராலும் மறுக்க முடியாது.

இந்த இரு தத்துவங்களையும் எந்த வகையிலும் ஒன்றிணைக்க முடியாது. ஒன்று, அரசியல் அமைப்பை அது பாதுகாக்கும் சுதந்திரத்தின் அளவுகோலைக் கொண்டு மதிப்பிட்டது. மற்றொன்று, அது எதிர்காலத்தில் தரப்போகும் பொருளாதாரச் சமத்துவத்தை வைத்து மதிப்பிட்டது. 1945க்குப் பிந்தைய தசாப்தங்கள் ஒரு உண்மையை உலகுக்கு உணர்த்தின. பயமுறுத்தல், ராஜதந்திரம், பொறுமை ஆகியவற்றின் மூலம் இந்த அமைப்புகளுக்கு இடையிலான மோதலைத் தற்காலிகமாகக் கையாளலாமே தவிர, ஏதாவது ஓர் அமைப்பு முழுமையாக வீழ்ச்சியடையும் வரையோ அல்லது தன்னை மாற்றிக்கொள்ளும் வரையோ இதை நிரந்தரமாகத் தீர்க்க முடியாது. முரண்பாட்டின் இந்தத் தத்துவவாதிகள் தங்கள் அரசியல் வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது எளிதில் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்னையை அல்ல; காலம் முழுவதும் ஒரு படகைப்போலக் கவனமாகச் செலுத்த வேண்டிய ஒரு நிரந்தர நெருக்கடியை.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *