நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினராக அமர்ந்திருந்ததைவிடவும், எதிர்க்கட்சி வரிசையில்தான் அதிகக் காலம் அமர்ந்திருக்கிறார் மது தண்டவதே. எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோதும், தன்னுடைய பங்களிப்பை அவர் செய்யத் தவறியதில்லை.
தனி நபர் மசோதாவாகக் கட்சித்தாவல் தடை மசோதாவை மார்ச் 14, 1980 அன்று கொண்டுவந்த மது தண்டவதே, அன்றைய அரசியல் நிலைமையைப் புள்ளிவிவரத்தோடு தன் உரையில் குறிப்பிட்டார். 1967-68இல் அதிகளவில் நடந்த கட்சித் தாவல்கள்தான் 80களில் நடக்கும் கட்சித் தாவல்களுக்கு முன்னோடியென்று அவர் சுட்டிக்காட்டினார். எடுத்துக்காட்டாக, முந்தைய ஆண்டில் (1979) மட்டும் 438 கட்சித் தாவல்கள் நடைபெற்றதாகவும், அவ்வாறு கட்சி மாறிய 210 உறுப்பினர்கள் (அனைத்து மாநிலங்களையும் சேர்த்து) அமைச்சர்கள் ஆக்கப்பட்டனர் என்ற புள்ளிவிவரத்தையும் குறிப்பிட்டார். பலகட்ட விவாதங்களுக்குப் பிறகு, ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில், அரசியலமைப்புச் சட்டம் திருத்தி எழுதப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் 52வது திருத்தத்தின்படி, 1985இல் கட்சித்தாவல் தடை செய்யப்பட்டது.
வாக்காளர்களுக்கான குறைந்தபட்ச வயதை 21இலிருந்து 18ஆகக் குறைக்க வழிவகுக்கும் மசோதாவை ஜுன் 27,1980 அன்று கொண்டுவந்தார் மது தண்டவதே. அன்றைய தேதியில், எந்தெந்த நாடுகளில் வாக்காளர்களின் குறைந்தபட்ச வயது 18ஆக இருந்ததென்ற விவரத்தைத் தன் உரையில் குறிப்பிட்டார். அந்த மசோதாவின் தேவை என்ன என்பதையும், அதனால் எதிர்காலத்தில் எத்தனை வாக்காளர்கள் தோன்றுவார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் தன் உரையில் அவர் குறிப்பிட்டார். ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 61வது திருத்தத்தின்படி, 1989இல் வாக்காளர்களுக்கான குறைந்தபட்ச வயது 21இலிருந்து 18ஆகக் குறைக்கப்பட்டது.
இவைபோன்ற பல்வேறு முன்னெடுப்புகளை, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் மது தண்டவதே மேற்கொண்டார். வருங்காலங்களில் நாட்டிற்குத் தேவையானவை எவையெவை என்பதைப் பல்லாண்டுகளுக்கு முன்னரே தெளிவாக உணர்ந்துகொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்த முயன்றார். பல்வேறு விவாதங்களில் பங்கேற்றுக் கருத்தாழம் மிக்க உரைகளை நாடாளுமன்றத்தில் அருவிபோலப் பொழிந்தார்.
ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மது தண்டவதே, நகர்வாலா ஊழல், போஃபர்ஸ் பீரங்கி ஊழல் போன்ற பல்வேறு ஊழல் புகார்கள் குறித்த விவாதங்களில் ஆளுங்கட்சியைக் கேள்விகளால் துளைத்தெடுத்தார். லோக்பால் சட்டத்தின் அவசியம் குறித்தும் உரை நிகழ்த்தினார்.
மாற்றுக்கருத்து உடையவர்களை அவர் எதிரியாகப் பாவித்ததில்லை. இந்திரா காந்திக்கு எதிராக அவர் அரசியல் செய்திருந்தாலும், இந்திரா காந்தியின் மரணம் குறித்த இரங்கல் தீர்மானத்தின்போது அவர் நிகழ்த்திய உரை இதைத் தெளிவாக்குகிறது. விடுதலை பெற்ற ஐம்பது ஆண்டுகளில், நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட நூறு சிறந்த சொற்பொழிவுகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது மது தண்டவதேவின் அவ்வுரை. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை உணர்ச்சிவசப்படச் செய்த அவ்வுரையைப் பின்வருமாறு நிறைவு செய்திருப்பார் மது தண்டவதே:
‘திருமதி இந்திரா காந்தியின் இறப்பால் இந்நாட்டில் பல்வேறு இழப்புகள் நேர்ந்துள்ளன. காங்கிரஸ்(ஐ) கட்சி தனது தலைவரை இழந்தது. நாடு தனது பிரதமரை இழந்தது. ராஜீவ் தனது அன்புத்தாயை இழந்தார். காங்கிரஸ்(ஐ) கட்சியால் புதிய தலைவரைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நாடு புதிய பிரதமரைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், ராஜீவ் தனது தாயை நிரந்தரமாக இழந்தார். பிரதமர் பதவி என்ன? உலகிலுள்ள அனைத்துச் சக்திகளை ஒன்று சேர்த்தாலும் அவையாவும் தாயின் அன்பிற்கும் பாசத்திற்கும் மாற்றாகாது என்பதை நம்புபவர்களில் நானும் ஒருவன். எனவே, நான் என்னுடைய அஞ்சலிகளை முன்னாள் பிரதமருக்கு மட்டும் செலுத்தவில்லை. இந்த அவையின் சார்பில் ராஜீவ் காந்தி அவர்களிடம் என் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய கொள்கைகள் மற்றும் பார்வைகள் எவையாக இருந்தாலும் சரி, உங்கள் தாயின் தளராத மனவலிமையையே நீங்கள் கைக்கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கவேண்டும்!’
பிரதமர் ராஜீவ் காலத்தில்…
இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, 1984இல் தேர்தல் வந்தது. நாடு முழுதும் இந்திரா அனுதாப அலை வீசிய அத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி 404 இடங்களில் வெற்றிபெற்றது. அந்தத் தேர்தலிலும் மது தண்டவதே வெற்றி பெற்றாரென்றால், மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அசுரபலத்துடன் ராஜீவ் காந்தி ஆட்சியமைக்க, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார் மது தண்டவதே.
ஒரு விவாதத்தின்போது, விவாதப்பொருளை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டுமென்று அவையில் அறிவித்தார் ராஜீவ் காந்தி. எவ்விதத் தயாரிப்புமின்றி உடனே பேச எழுந்த மது தண்டவதே, எந்த எந்தச் சட்டங்களில் அதுகுறித்து ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன என்பதை விளக்கினார். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டிய தேவை இல்லை என்று கூறி அமர்ந்தார். மது தண்டவதே அளித்த விளக்கத்திற்குப் பிறகு, தன்னுடைய கட்சியின் சட்டம் படித்த உறுப்பினர்களைப் பார்த்தார் ராஜீவ். மது தண்டவதே கூறியது உண்மையே என்றும், இதுகுறித்து தாங்கள்தான் ராஜீவிற்கு முழுமையாகக் கூறவில்லை என்றும் அவர்கள் கூற நேர்ந்தது.
போஃபர்ஸ் பீரங்கி ஊழல் புகார் குறித்த விவாதங்களில் பங்கெடுத்த மது தண்டவதே, நான்கு உரைகளாற்றினார்; அவை தொகுக்கப்பட்டு ‘Bofors Payoff’ என்ற தலைப்பில் சிறுநூலாக வெளிவந்தது. போஃபர்ஸ் பீரங்கிக் கொள்முதலில் இடைத்தரகர் எவரும் அமர்த்தப்படவில்லை என்றும், எனவே எவ்விதமான கமிஷனும் எவருக்கும் அளிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பண்ட், ராஜீவ் இருவருமே நாடாளுமன்ற அவையில் ஆரம்பத்தில் அறிவித்திருந்தனர். அவ்வாறு அறிவிக்கப்பட்ட இரண்டே நாட்களில், பல்வேறு விவரங்களையும், ஆதாரங்களையும் திரட்டிய மது தண்டவதே, கே.சி.பண்ட், ராஜீவ் இருவரும் அவையில் கூறியவை பொய்கள் என்பதை நிரூபித்தார். மேலும், இருவரும் தத்தம் சிறப்புரிமைகளை மீறியதாகத் தீர்மானத்தை முன்மொழிந்தார். இவற்றாலெல்லாம் ராஜீவ் அவமானப்பட நேர்ந்தது.
இவை போதாதென்று, ராஜீவ் அமைச்சரவையில் இருந்த வி.பி.சிங், ராஜீவிற்கு இவ்விஷயத்தில் தொல்லைதரத் தொடங்கினார். வெறுப்படைந்த காங்கிரஸ், அவரைக் கட்சியிலிருந்து நீக்கியது; வி.பி.சிங் ஹீரோவானார். போஃபர்ஸ் விவகாரம் குறித்த தன்னுடைய இறுதிப் பேச்சை நிறைவு செய்கையில், ‘மாண்புமிகு மக்களவை உறுப்பினர்களே, நீங்கள் ராஜீவ் காந்தியை ‘மிஸ்டர் கிளீன்’ என்று அழைக்கிறீர்கள்; ஆனால் உண்மையில் ‘மிஸ்டர் கிளீன்’ என்ற பெருமையை ஏற்கக் கூடியவர் ஒருவர் இருக்கிறார்; அவர்தான் விபி சிங்!’ என்று கூறி வி.பி.சிங் அவர்களை இன்னும் உயர்த்தி வைத்தார் மது தண்டவதே. ராஜீவின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் நிறைவடைந்து 1989இல் தேர்தல் வந்தது.
அரசியல் நாடகம்
1989இல் நடந்த மக்களவைக்கான 9வது தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை. போஃபர்ஸ் விவகாரம் ராஜீவ் காந்தியின் செல்வாக்கைப் பெருமளவில் சரித்து விட்டிருந்தது. முந்தைய தேர்தலின்போது (1984) இந்திரா அனுதாப அலையில் 404 இடங்களில் வென்றிருந்தது காங்கிரஸ் கட்சி. அடுத்த தேர்தலில் (1989), மொத்தமிருந்த 524 தொகுதிகளில் 197 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடிந்திருந்தது. காங்கிரஸிற்கு அடுத்த இடத்தில் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் 140 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. தான் ஆட்சி அமைக்கப்போவதில்லை என்று ராஜீவ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். எனவே, ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தேசிய முன்னணிக்கு பிஜேபி கட்சியும் (88 இடங்களில் வென்றிருந்தது), கம்யூனிஸ்ட் கட்சிகளும் (44 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன) வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. தேசிய முன்னணி ஆட்சியமைக்க முன்வந்தது. யார் பிரதமர் என்பதில் பிரச்சனை எழுந்தது.
ஜனதா தளக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அனைவரும் ஒருங்கிணைந்து பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வி.பி.சிங் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, சந்திரசேகரும் இப்பதவிக்குப் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஏன் இந்தப் போட்டி? காரணமில்லாமல் இல்லை. ஜனதா தளத்திற்கு முன்னர் இருந்த ஜனதா கட்சியின் தலைவராக இருந்தவர் சந்திரசேகர். 1962 முதல் 1984 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். வி.பி.சிங்கை விடவும் சீனியர். அவசரநிலை அறிவிக்கப்பட்ட பிறகு (1975), இந்திராவிற்கும் சஞ்சய் காந்திக்கும் வி.பி.சிங் ஆதரவாக இருந்திருக்க, சந்திரசேகரோ அவசரநிலையை எதிர்த்து சிறைத்தண்டனை அனுபவித்தவர். மொரார்ஜி தேசாய் ஆட்சியமைத்தபோது (1977) அவருடைய அமைச்சரவையில் அமைச்சர் பதவி தாமாகக் கிடைத்தபோதும், சந்திரசேகர் அமைச்சராக வேண்டுமென்று ஜெயபிரகாஷ் நாராயணே விரும்பியபோதும் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்தவர் அவர். இப்படிப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக்காரரான சந்திரசேகரை, ஜனதா தளத்தில் ஓரங்கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவரின் ஆதரவாளர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே 1989 தேர்தலில் சீட்டளிக்கப்பட்டன. இவற்றாலெல்லாம் கடுப்பாகியிருந்த சந்திரசேகர், வி.பி.சிங்கை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் முக்கால்வாசி பேர் சந்திரசேகரின் ஆதரவாளர்கள் அல்லர். இதைத் தவிரவும் மிஸ்டர் க்ளீன் என்ற பிம்பம் வேறு வி.பி.சிங் மீது இருந்தது. எப்படிப் பார்த்தாலும், இப்போட்டியில் வி.பி.சிங் மட்டுமே வென்றிருக்கக் கூடும். இருப்பினும், சந்திரசேகரின் எதிர்ப்பு, கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. சந்திரசேகரை வெல்ல ஒரு தந்திரம் செய்யப்பட்டது. தேசிய முன்னணியில் ஹரியானாவைச் சேர்ந்த தேவிலால் இருந்தார். அருண் நேரு-தேவி லால்-வி.பி.சிங் ஆகியோர் ஒரு திட்டம் தீட்டினர். இதன்படி, பிரதமர் பதவிக்குத் தேவிலால் பெயரை வி.பி.சிங் முன்மொழிந்தார். தேவி லாலைப் பிரதமராக ஏற்றுக்கொள்ள சந்திரசேகர் ஏற்கெனவே சம்மதித்திருந்தார். எனவே, தேவி லால் பெயரை வி.பி.சிங் முன்மொழிந்ததும், சந்திரசேகர் வழிமொழிந்தார். கதையில் ஒரு திருப்பமாகத் தேவி லால் எழுந்து, தனக்குப் பிரதமர் பதவியின் மீது ஆசையில்லை என்றும், தேசிய முன்னணிக்குத் தானொரு மூத்த அண்ணனாக இருந்து வழிநடத்த விரும்புவதாகவும், பிரதமர் பதவிக்கு வி.பி.சிங் பெயரையே தாம் முன்மொழிவதாகவும் கூறினார்.
இவை அனைத்தும் முன்கூட்டியே முடிவெடுக்கப்பட்டவை என்பது சந்திரசேகருக்குத் தெரியாது. தேவி லால் நிற்பதாகக் கூறப்பட்டவுடன் தாம் போட்டியிலிருந்து விலகுவதாக சந்திரசேகர் முடிவெடுத்து விட்டிருந்தார். ஆக, சந்திரசேகரைப் போட்டியிலிருந்து விலக்கிடவே தேவி லால் கொண்டுவரப்பட்டார். சந்திரசேகர் விலகியதும், பிரதமர் பதவியை வி.பி. சிங்கிற்குத் தேவி லால் தந்தார். இதற்குப் பதில் மரியாதையாகத் தேவி லால் துணைப் பிரதமர் ஆக்கப்பட்டார். வி.பி.சிங் பிரதமராக டிசம்பர் 2, 1989 அன்று பதவியேற்றுக்கொண்டார். யார் யாருக்கு என்னென்ன அமைச்சர் பதவி என்பதில் பலத்த விவாதங்கள் நடைபெற்றன. இறுதியாக, மது தண்டவதேவிற்கு நிதித்துறை அளிக்கப்பட்டது. டிசம்பர் 5, 1989 அன்று நிதி அமைச்சராக மது தண்டவதே பொறுப்பேற்றுக் கொண்டார்.
(தொடரும்)

