Skip to content
Home » அயோத்திதாசர் #5 – பௌத்த ஏற்பும் திராவிட மகாஜன சங்கத்தின் தோற்றமும்

அயோத்திதாசர் #5 – பௌத்த ஏற்பும் திராவிட மகாஜன சங்கத்தின் தோற்றமும்

சங்ககாலத்தின்போது வைதீக சமயத்தைப்போல் பௌத்தமும் சமணமும் இந்தியா முழுவதும் செல்வாக்குடன் இருந்தன. குறிப்பாக, அசோகர் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பிற பகுதிகள் மட்டுமல்லாது கடல் கடந்தும் பௌத்தம் பரவியது. புத்தரின் போதனைகளும் அவருடைய சங்கமும் கோட்பாடுகளும் பொதுமக்களிடையே செல்வாக்குப் பெறத் தொடங்கியது. பௌத்த கோட்பாடுகளைப் பழந்தமிழ் மக்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். பௌத்த போதனைகளும் கொள்கைகளும் பொதுமக்களிடையே தழைத்தோங்கியதை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை எடுத்துக்காட்டுகிறது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற பழந்தமிழ் கோட்பாட்டைத் தமிழர்கள் மறந்து வர்ணாசிரமக் கொள்கைகளால் வேற்றுமைகொண்ட சூழலில், பௌத்தமும் சமணமும் ‘பிறப்பால் அனைவரும் சமம்’ என்கிற சமத்துவ நிலைப்பாட்டை போதித்து வந்தன. இதன் காரணமாகத் தமிழ்ச் சமூக மக்கள் பௌத்த மதத்தைத் தழுவத் தொடங்கினார்கள். இவ்வாறு வைதீக மதத்தை விடுத்து மதம் மாறிய தமிழர்களைத் தாழ்ந்தவர்கள் என்றும் தீண்டத்தகாதவர் என்றும் குறிப்பிட்டு காழ்ப்புணர்வுகொண்ட சில சமூகத்தினர் இழிவுபடுத்தினர். இத்தகைய மனப்பாங்கு நாளடைவில் வன்மமாக மாறத் தொடங்கியது.

இடைக்காலத்தில் ஏற்பட்ட சில குழப்பங்கள், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ நெறியை மறக்கடிக்கச் செய்தது. இந்தச் சூழலை ஆதிக்க வர்க்கத்தினர் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு மக்களை அடிமைப்படுத்தத் தொடங்கினார்கள். சமூகக் காரணிகளால் நலிவுற்றிருந்த மக்களும் அவர்களை எதிர்க்க வலுவில்லாது அடிமைகளாக வாழத் தொடங்கினார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட சாதியக் கொடுமைகளை இதற்கான சான்றாகக் கூறலாம். சதி வழக்கம், இரட்டைக் குவளை முறை, காலணி அணியாமை, மேலாடை அணியும் உரிமையை மறுத்தல், கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுத்தல் எனப் பலப்பல கொடுமைகளைத் தமிழ்ச் சமூகம் காண நேர்ந்தது.

அதேநேரம் ஆங்கிலேயரின் வருகையால் கல்வி கற்கத் தொடங்கிய தாழ்த்தப்பட்ட மக்கள், அதன் மூலமாக விழிப்புணர்வு பெறத் தொடங்கினார்கள். அவர்களில் கல்விப் புலமை பெற்றிருந்த நபர்கள், தம் மக்களின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்தார்கள். ஆங்கிலேயரின் முற்போக்குச் சிந்தனைகள் மற்றும் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவற்றால் மக்கள் மனதில் புதிய சித்தாந்தங்கள் வளரத் தொடங்கின.

குறிப்பாக, நெடுங்காலமாக அடிமைபட்டுக் கிடந்த மக்கள் ஆங்கிலேய கல்வி முறையால் தங்களது நிலையை உணர்ந்து, அதிலிருந்து வெளியே வரத்தொடங்கினார்கள். அச்சமயம் பலவிதமான வழிமுறைகளைப் பயன்படுத்தி அவர்களைத் தடுக்க ஆதிக்கச் சமூகத்தினர் முயற்சி செய்தார்கள். இந்தச் சதி வேலையை முறியடிக்க அன்றைய சூழலில் இதழியல் துறையை ஓர் ஆயுதமாகப் பலரும் பயன்படுத்தத் தொடங்கினர்.

ஒதுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், ஜான் ரத்தினத்துடன் இணைந்து திராவிட பாண்டியன் இதழை அயோத்திதாசர் நடத்திவந்தார். அதன் வழியாக அறிவார்ந்த கருத்துகளையும் மேலைநாட்டுச் சிந்தனைகளையும் மக்களிடையே அவர் புகுத்திக்கொண்டிருந்தார். 1885இல் தொடங்கி 1887 வரை திராவிட பாண்டியன் இதழ் வெளிவந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. 1887இல் ஜான் ரத்தினம் கௌரவ நீதிபதியாகப் பதவியேற்றார். இதற்குப் பிறகு நீலகிரியில் இருந்தபடி பல்வேறு பணிகளை அயோத்திதாசர் மேற்கொண்டு வந்தார். அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி அவர்களை வலுவான ஓர் இயக்கமாக மாற்றிக்கொண்டிருந்தார். அவர்களுக்கான தத்துவ வழிகாட்டியாக அவர் விளங்கினார்.

இந்நிலையில், ஒரு கட்டத்தில் அயோத்திதாசரின் தத்துவ நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இந்துத் தத்துவங்கள் மீது அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனால் ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் தெரிந்துகொள்ளும் வகையில் இருந்த சமயக் கோட்பாடுகள் அவரைச் சிந்திக்கத் தூண்டின. ஆதிசங்கரரின் அத்வைத கொள்கையை முழுமையாகக்கொண்டிருக்கும் பௌத்த மதக் கருத்துகள் மற்றும் அதன் தம்மத்தின் மீது அயோத்திதாசர் கவனம் செலுத்தத் தொடங்கினார். அவருடைய கண்ணோட்டத்தில் இத்தகைய மாற்றம் பெறுவதற்கான முக்கியக் காரணமாக அவருக்குக் கிடைத்த ஓர் ஓலைச்சுவடி இருந்தது.

ஒருமுறை அயோத்திதாசர் கோயம்புத்தூருக்குப் பயணித்தபோது, அஷ்வகோஷர் எழுதிய ‘நாரதீய சங்கை தெளிவு’ என்கிற சுவடி அவருக்குக் கிடைத்தது. அந்தச் சுவடியில் பல்வேறு சாதி பேத விவரங்களும் பௌத்த மதத்தினர் எவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களாக மாற்றப்பட்டனர் என்கிற விவரங்களும் அடங்கியிருந்தன. அதைப் படித்த பிறகு பண்டிதரின் முழு கவனமும் பௌத்த மதக் கருத்துகள் மீது நிலைகொண்டன. பௌத்த ஆராய்ச்சியை அவர் மிகத் தீவிரமாக மேற்கொண்டார்.

ஆரம்ப காலத்திலேயே பௌத்தம் மீது அயோத்திதாசருக்கு ஆர்வம் இருந்ததைத் தன்னுடைய பெண் குழந்தைகளுக்கு அவர் வைத்த பெயர்களின் வாயிலாக நம்மால் அறிந்துகொள்ள முடியும். நாரதீய சங்கை தெளிவு சுவடி கிடைத்த பின்னர், அவர் முழுமையாக பௌத்தத்தை நோக்கி நகரத் தொடங்கினார். பௌத்தத்தின் அடிப்படையை எட்டிவிட்டதாக 1890இல் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் பண்டிதரின் வாழ்வில் ஒரு மாபெரும் திருப்புமுனையை இந்தச் சுவடி ஏற்படுத்தியது. பௌத்தத்தில் கொள்கைப் பிடிப்பைப் பெற்ற பிறகு ஆதித் தமிழர்கள் பின்பற்றிய பௌத்த நெறிகளை, ‘துக்க நிவாரண மார்க்கம்’ என்கிற பெயரில் அவர் மக்களிடையே பரப்பத் தொடங்கினார்.

தன்னுடன் நட்பாகப் பழகிய தியோசஃபிகல் சொசைட்டியின் நிறுவனர் கர்னல் ஹெச்.எஸ். ஆல்காட்டுடன் ‘பௌத்தம் தழுவுதல்’ குறித்து அயோத்திதாசர் தொடர்ந்து கலந்துரையாடினார். பௌத்த மதத் தத்துவங்கள் மீது ஆல்காட் மிகுந்த ஈடுபாடுகொண்டிருந்ததைப் பண்டிதர் முன்னரே அறிந்திருந்தார்.

தமிழக மக்கள் பூர்வ காலத்தில் பௌத்தர்களாக இருந்தார்கள் என்றும் பின்னர் வேஷப் பார்ப்பனர்களால் அவர்கள் பறையர்கள் என்கிற தாழ்த்தப்பட்ட நிலையை அடைந்தார்கள் என்றும் அயோத்திதாசர் அவரிடம் விளக்கினார். இதற்கு ஆதாரமாக 570 பாக்களைக்கொண்ட அசுவகோசரின் நாரதீய சங்கைத் தெளிவு என்னும் ஓலைச்சுவடி விளங்குவதாகவும் எடுத்துக் கூறினார். சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி உள்ளிட்ட ஐம்பெருங்காப்பியங்களிலும், பன்னிரண்டு நிகண்டுகளிலும், அகத்தியர், புலிப்பாணி, தன்வந்திரி, போகர் ஆகியோருடைய மருத்துவ நூல்களிலும், திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உள்ளிட்ட இலக்கிய நூல்களிலும் பௌத்தம் இங்குச் செல்வாக்குடன் இருந்ததற்கான தகவல்கள் புதைந்திருப்பதாக விளக்கினார்.

உண்மையான திராவிடர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் இழந்த சுயமரியாதையையும் உரிமைகளையும் மீட்கவும் அவர்களுக்கான விடுதலையைப் பெற்றுத்தரவும், தங்களது பூர்வீக மதமான பௌத்தத்தைத் தழுவ இருப்பதாக ஆல்காட்டிடம் கூறிய பண்டிதர், அதற்கு உதவுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாகப் பண்டிதரையும் வேறு சிலரையும் அழைத்துக்கொண்டு ஆல்காட் இலங்கைக்குச் சென்றார்.

கொழும்பு நகரில் இருந்த மலிகானந்தா விஹாரத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பிரதிநிதிகள் முன்பாக, தலைமை பௌத்த குருக்களான சுமங்களா மஹாநாயகர் மற்றும் தர்மபாலர் ஆகியோரிடம் பஞ்சசீலம் பெற்று முறைப்படி பௌத்தத்தைத் தழுவினார் அயோத்திதாசர். ‘An Appeal to Buddhist Societies’ எனத் தலைப்பிட்ட மடல் மூலமாக, இந்நிகழ்வைப் பின்னாளில் கீழ்காணும்படி பண்டிதர் விளக்கமளித்தார்.

‘In the year 1898, I sought the late Col. H.S. Olcott of the theosophical society, Adayar, Madras for advice and co-operation in the establishment of Buddhist Society in the city of Madras. At the instance of that good and great man I journeyed and voyaged to Ceylon. At the Malikaganda Vihara, I obtained the Panchasila at the hands of the Venerable Sri Sumangala Mahanayaka, the High Priest, Principle of the Vidyodaya College, Colombo, in the presence of a large and representative gathering. With the blessings of the High Priest the venerable Sumangala I returned to Madras and started the sakya Buddhist Society at Royapettah in Madras’

இலங்கையிலிருந்து திரும்பியதும், சென்னை ராயப்பேட்டையைத் தலைமை இடமாகக்கொண்டு ‘சாக்கிய பௌத்த சங்கம்’ என்கிற ஓர் அமைப்பை அயோத்திதாசர் தோற்றுவித்தார். இந்தப் பெயருக்கு விளக்கமளித்த பண்டிதர், ’புத்தருக்கு முன்னர் இருபத்து நான்கு புத்தர்கள் வந்து சென்றுள்ளனர். சாக்கிய வம்சத்தில் வந்த சாக்கிய புத்தரையே தற்போது குறிப்பிட்டுள்ளேன்’ என்றார்.

இதன் தொடர்ச்சியாக, ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் பொருட்டு ‘திராவிட மகாஜன சங்கம்’ என்கிற அமைப்பை 1891ஆம் ஆண்டில் அயோத்திதாசர் தொடங்கினார். ‘திராவிடர்’ என்கிற காரணத்துக்காக ஒதுக்கப்பட்ட மக்களின் நலன்களைக் காக்க, இந்தச் சங்கத்தின் வாயிலாகப் பல்வேறு முயற்சிகளை அவர் முன்னெடுத்தார். தலித் என்பதற்காக நீலகிரியில் ஒதுக்கப்பட்ட மக்கள் இந்த அமைப்பின் கீழ் ஒன்றிணைந்து ஒரு குழுவாகச் செயல்படத் தொடங்கினார்கள்.

திராவிட மகாஜன சங்கத்தின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகள் தமிழகம் முழுவதும் பரவத் தொடங்கின. இச்சங்கம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, அதே காலகட்டத்தில், ‘ஆதிதிராவிடர்கள்’ என்கிற பெயரை முன்னிறுத்தி வீ. அயோத்திதாச பண்டிதர், அரங்கையதாசர், வேலாயுதம் புலவர், வேங்கிடசாமி பண்டிதர் முதலானோர் ‘ஆதிதிராவிட மகாஜன சபை’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்கள். 1892ஆம் ஆண்டில் இந்த அமைப்பு சென்னையில் வலுவுடன் இயங்கி வந்தது. இதைத் தொடர்ந்து, ‘பறையர் மகாஜன சபை’ என்கிற அமைப்பை இரட்டைமலை சீனிவாசன் நிறுவினார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *