வரலாற்றுக் காலத்தில் முதன்முதலாக இந்தியாவில் ஒரு பேரரசை உருவாக்கிய பெருமை சந்திரகுப்த மௌரியரையே சேரும். இத்தனைக்கும் அவர் வலுவான பின்னணியிலிருந்து வந்தவரல்ல. அவரது தாய் தந்தையர் யார் என்று கூடத் தெரியாது. இப்படி எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் ஒரு பேரரசை உருவாக்குவதற்கும் விரிவடையச் செய்வதற்கும் பெரும் வீரமும் ராஜதந்திரமும் வேண்டும். அது சந்திரகுப்த மௌரியரிடம் இருந்தது.
சந்திரகுப்தரின் இளமைக்காலம்
அவர் வாழ்ந்தது மிகப் பழமையான காலம் என்பதால் சந்திரகுப்தரைப் பற்றிய செய்திகளில் பல குழப்பங்கள் தென்படுகின்றன. இந்திய வரலாற்று ஆதாரங்களான புராணங்கள், பௌத்த, ஜைன மத நூல்கள், முத்ராராக்ஷசம் போன்ற இலக்கியங்கள் ஆகியவற்றோடு ஸ்ட்ராபோ, ப்ளூடக், டியோடரஸ், ப்ளினி போன்ற பல கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் வேறு தாங்கள் கேள்விப்பட்ட கதைகளை எல்லாம் வரலாறாகப் பதிவு செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆகவே உண்மை வரலாற்றை அறிவதற்காக, கிடைக்கும் ஆதாரங்களைத் தொகுத்து ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.
அவருடைய குலத்தைப் பற்றியே மாறுபாடான பல கருத்துகள் கூறப்படுகின்றன. சந்திரகுப்தர் ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவரென்றும் தன் திறமையால் அரசுப் பதவியை அடைந்தவரென்றும் ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர். மற்றவர்களோ சந்திரகுப்தர் க்ஷத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவரே என்று அதற்கான பல ஆதாரங்களை முன்வைக்கின்றனர். கிரேக்க வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளில் சந்திரகுப்தர் தோற்கடித்த நந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான் தாழ்த்தப்பட்ட குலத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட இதே கருத்தை புராணங்களிலும் காணமுடிகிறது. க்ஷத்திரியர்களான சிசுநாகவம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்து மகதத்தை “சர்வக்ஷத்ராந்தகர்களான” நவ நந்தர்கள் ஆட்சி செய்தனர் என்றும் அவர்கள் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட நாஸ்திகர்களான நந்தர்களை த்விஜனான கௌடல்யர் (கௌடில்யர் என்பது தவறான உச்சரிப்பு) விரட்டிவிட்டு சந்திரகுப்தருக்கு ராஜ்யாபிஷேகம் செய்துவைத்தார் என்பதையும் அவை தெரிவிக்கின்றன. இவற்றிலிருந்து சாஸ்திரங்களை அறிந்த சாணக்கியர் வகுத்த விதிகளின் படி க்ஷத்திரியரான சந்திரகுப்தருக்கே அரசை அளித்திருப்பார் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இதில் சந்திரகுப்தர் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர் என்ற முடிவு அடிபட்டுப் போகிறது. வர்ணாஸ்ரம தர்மப்படி க்ஷத்திரியர்களே அரசாள வேண்டும் என்பதை கௌடல்யரின் அர்த்தசாஸ்திரமும் பல இடங்களில் வலியுறுத்துவது இங்கே கவனிக்கத்தக்கது.
சந்திரகுப்தரைப் பற்றி உலவுகிற இன்னொரு கதை அவருடைய தாயின் பெயர் முரா என்பது. அவர் நந்தவம்ச அரசர்கள் ஒருவரின் மனைவி என்று சித்தரிக்கப்படுகிறார். முராவிலிருந்துதான் மௌரியர்கள் என்ற பெயர் வந்தது என்பது இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டவர்களின் கருத்து. ஆனால் சமஸ்கிருத இலக்கணப்படி முராவின் மகனின் பின்னெட்டு மௌரேயா என்று வருமே தவிர மௌரியா என்று வராது. விசாகதத்தர் பின்னாளில் எழுதிய நாடகமான முத்ராராக்ஷசம் என்ற நூலில் சந்திரகுப்தர் நந்த மன்னனான சர்வார்த்தசித்தியின் வம்சத்தில் வந்தவராகக் கூறப்படுகிறார். சர்வார்த்தசித்திக்கு முரா என்ற மனைவி இருந்ததாகவும் அவர் மூலம் மௌரியா என்ற மகன் இருந்ததாகவும் அந்த நாடகத்தில் கூறப்பட்டிருக்கிறது. அந்த மௌரியரின் மகனே சந்திரகுப்தர் என்று அந்த நாடகம் கூறிச்செல்கிறது. ஆனால் நாடகச் சுவைக்காக இவை சேர்க்கப்பட்டிருக்கலாமே தவிர இலக்கணப்படியும் சரித்திரப்படியும் இந்தக் கதைக்கு ஆதாரங்கள் இல்லை.
மௌரியா என்பது மூரா என்ற கோத்திரத்தில் வந்தவர்களாக இருக்கலாம் என்று பாணிணியில் இலக்கணத்தைக் காட்டி அந்த கோத்திரத்தில் வந்தவரே சந்திரகுப்தர் என்று சிலர் கூறுகின்றனர். மஹாவம்சம் போன்ற புத்தமத நூல்கள் சிலவற்றின் படி, க்ஷத்திரிய குலத்தவரும் புத்தர் பிறந்த சாக்கிய குலத்தில் கிளை வம்சத்தவருமான மோரியர் குலத்தில் பிறந்தவரே சந்திரகுப்தர் என்ற குறிப்புக் கிடைக்கிறது. தமிழ்ச் சங்க இலக்கியங்களும் “வம்ப மோரியர்” என்று மௌரிய வம்சத்தைக் குறிப்பிடுகின்றன. கஷ்மீரின் தெற்கில் மயில்கள் அடர்ந்த பகுதியை இவர்கள் ஆட்சி செய்ததால் மோரியர்கள் என்ற பெயர் இவர்களுக்கு வந்ததாகப் பல குறிப்புகள் உண்டு. ஹேமசந்திரர் போன்றவர்கள் எழுதிய ஜைன மத நூல்களிலும் இதே போன்ற குறிப்புகள் உண்டு. இதை வலுப்படுத்தும் விதமாக அசோகருடைய நந்தன்கர் தூணில் மயிலின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை பல வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆக, இவற்றிலிருந்து சந்திரகுப்தர் க்ஷத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரது முன்னோர்கள் கஷ்மீரின் ஒரு பகுதியை ஆண்டு வந்தவர்கள் என்பதும் தெளிவாகிறது.
சந்திரகுப்தரின் இளமைப் பருவத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றியும் பல கதைகளைக் காணமுடிகிறது. என்ன காரணத்தாலோ அனாதையாக விடப்பட்ட சந்திரகுப்தர், பாடலிபுத்திரத்தில் வளர்ந்தார் என்றும் அங்கே அவர் தம்மை அரசனாகக் கருதிக்கொண்டு விளையாட்டாக ராஜ தர்பார்கள் நடத்துவது வழக்கம் என்றும் அப்போது அவரைக் கண்ட சாணக்கியர் சந்திரகுப்தரைத் தம்மோடு அழைத்துச் சென்று தக்ஷசீலத்தில் கல்வி கற்க வைத்தார் என்றும் மஹாவம்ச தீக, மஹாபோதிவம்ஸா போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது.
சாணக்கியர்
இந்த இடத்தில் சாணக்கியர், விஷ்ணுகுப்தர், கௌடல்யர் என்று அழைக்கப்படும் அந்தண ஆசிரியரைப் பற்றியும் தெளிவுபடுத்துவது அவசியமாகும். இவை ஒரே ஆளைக் குறிக்கின்றனவா அல்லது வேறு வேறு ஆட்களா என்பது பற்றி பலவகைக் கருத்துகள் நிலவுகின்றன. போலவே அர்த்தசாஸ்திரம் மௌரியர்களின் காலத்தில் எழுதியதா அல்லது அது பின்னாளில் எழுந்த நூலா என்பது பற்றியும் மாறுபட்ட விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. வின்சென்ட் ஸ்மித், ஜெயஸ்வால் போன்ற வரலாற்றாசிரியர்கள் அர்த்தசாஸ்திரம் மௌரியர்களின் காலத்தைச் சேர்ந்ததே என்பதற்கான வலுவான ஆதாரங்களை முன்வைக்கின்றனர். கிரேக்க நூல்களில் காணப்படும் மௌரிய அரசைப் பற்றிய தகவல்களும் அர்த்தசாஸ்திரத்தில் காணப்படும் அரசின் அம்சங்களும் பெரும்பாலும் ஒத்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அர்த்தசாஸ்திரத்தில் பல இடங்களில் விஷ்ணுகுப்த கௌடல்யர் அதன் ஆசிரியர் என்று கூறப்பட்டிருக்கிறது. (“समाप्तं कौटिलीयम् अर्थशास्त्रम्”). அசோகனின் கல்வெட்டுகள் (பொயுமு 3ஆம் நூற்றாண்டு) மகாமாத்திரர்கள் கொண்ட நிர்வாக அமைப்பு, மக்கள் நலத்துறை அதிகாரிகள், விலங்கு வதைத் தடை நாட்கள், நீதிநெறி ஆகியவற்றை விவரிக்கின்றன — இவை அனைத்தும் அர்த்தசாஸ்திரத்தில் காணப்படும் அம்சங்களே. காமாந்தகி நீதி சாஸ்திரம் என்ற புத்த மத நூல், அர்த்தசாஸ்திரத்தை எழுதிய விஷ்ணுகுப்த கௌடல்யர், நந்தர்களை வென்ற சந்திரகுப்தரின் ஆசான் என்று குறிப்பிடுகிறது. இவற்றிலிருந்து அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் சாணக்கியர், விஷ்ணுகுப்தர் என்ற பெயர்களைக் கொண்ட கௌடல்யரே என்பதுவும் அவர் சந்திரகுப்தரின் குருவாக விளங்கியவர் என்பதும் தெளிவாகிறது.
பேரறிவு பெற்ற சாணக்கியர் மேலும் கல்வியறிவு பெற வேண்டி பாடலிபுத்திர நகரை அடைந்தபோது அங்கே உக்ரசேன நந்தன் என்ற மன்னன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். அவனுக்குத் தன நந்தன் என்ற பெயரும் உண்டு. செல்வம் சேர்ப்பதில் அளவில்லாத பெருமை உடையவனாக அந்த அரசன் சித்தரிக்கப்படுகிறான். அவனிடம் இருந்த அளவில்லாச் செல்வத்தை கங்கை ஆற்றின் கரையில் புதைத்து வைத்திருந்ததாக சங்கப் புலவரான மாமூலனார் அகநானூறு நூலில் கூறுகிறார்.
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ
அப்படிப்பட்ட செல்வச் செருக்கினால் சாணக்கியரை தன நந்தன் அவமதித்தான் என்றும் அவனை ஆட்சியிலிருந்து அகற்றச் சபதம் செய்துகொண்ட சாணக்கியர், சந்திரகுப்தனைக் கண்டார் என்றும் அவரைக் கூட்டிக்கொண்டு தக்ஷசீலம் சென்றார் என்றும் புத்த, ஜைன மத நூல்கள் கூறுகின்றன.
கிரேக்கர்களுடன் மோதல்
தக்ஷசீலத்தில் சந்திரகுப்தர் கல்வி கற்கச் சென்றபோது, பாரதத்தின் வடமேற்குப் பகுதி அலெக்சாண்டரின் படையெடுப்பால் நிலைகுலைந்து போயிருந்தது. ஒன்றன்பின் ஒன்றாக அரசுகள் பல அலெக்சாண்டரிடம் வீழ்ந்தன. தக்ஷசீலத்தில் அலெக்சாண்டரை சந்தித்த இளைஞனான “அண்ட்ரோகூட்டஸ்” (சந்திரகுப்தர்), அலெக்சாண்டரிடம் நந்த அரசர் குடிமக்களால் பெருமளவில் வெறுக்கப்பட்டார் என்ற காரணத்தால் இந்தியா மொத்தத்தையும் அலெக்சாண்டரால் வெற்றிகொள்ள முடியும் என்று தெரிவித்ததாக ப்ளூடக் குறிப்பிடுகிறார். இதன் உண்மை ஆராய்ச்சிக்குரியது என்றாலும், அலெக்சாண்டர் வடமேற்குப் பகுதியை முழுவதும் வென்றுவிட்டார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் பல காரணங்களால் அவர் கிரேக்கத்திற்குத் திரும்பிச் செல்ல நேரிட்டபோது தமது பிரதிநிதிகளாக சிந்து நதியின் மேற்கில் சிந்துப் பிரதேசத்தின் ஆளுநராக பைதான் என்பவரையும் நிகானோர் என்பவரை காபூலின் ஆளுநராகவும் புஷ்கலாவதியின் ஆளுநராக பிலிப் என்பவரையும் நியமித்தார். இப்படி மூன்று கிரேக்கர்களை சிந்து நதியின் மேற்குப் பகுதியில் ஆளுநராக நியமித்த அலெக்சாண்டர் சிந்துவின் கிழக்குப் பகுதியில் மூன்று இந்தியர்களை, தக்ஷசீலத்தில் அம்பி, பஞ்சாபில் போரஸ் என்கிற புருஷோத்தமன், கஷ்மீரின் ஆளுநராக ஓர் அரசர் ஆகியோரை ஆட்சி செய்யப்பணித்திருந்தார்.
இப்படி அந்நியர்களாலும் கிரேக்கர்களின் பிரதிநிதிகளாலும் ஆளப்பட்டுக்கொண்டிருந்த இந்தியாவின் வடமேற்குப் பகுதியை மீட்குமாறு சாணக்கியர் சந்திரகுப்தரைக் கேட்டுக்கொண்டார். தக்ஷசீலத்தில் சந்திரகுப்தருக்குக் கல்வியையும் ராணுவப் பயிற்சியையும் அரசியலையும் பயிற்றுவித்த கௌடல்யர், அந்நியர் ஆட்சியை விஷம் போல வெறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அர்த்தசாஸ்திரம் அந்நியர்கள் வேறொரு நாட்டை வெற்றிகொள்ளும்போது எந்தக்காரணம் கொண்டும் அதைத் தங்கள் நாடாகக் கருத மாட்டார்கள் என்றும் கடுமையான வரிகளை விதிப்பார்கள் என்றும் பொதுமக்கள் அந்த ஆட்சியில் பல துன்பங்களை அனுபவிப்பார்கள் என்றும் கண்டனம் செய்கிறது.
ஆகவே, தன்னுடைய ஆசார்யரின் ஆணைப்படி அந்நியர் ஆதிக்கத்திலிருந்து பாரதத்தை விடுவிக்க சந்திரகுப்தர் படை திரட்டினார். அதற்காக அந்தப் பகுதியிலிருந்த குடியரசுகளின் உதவியை நாடினார். பழங்காலத்திலிருந்தே யௌதேயர்கள், சூத்திரகர்கள், மாளவர்கள், ஔதும்பரர்கள் போன்ற பல குடிகளால் அப்பகுதி ஆட்சி செய்யப்பட்டுவந்தது. இந்தக் குடியரசுகள் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது அவரைக் கடுமையாக எதிர்த்தன. உதாரணமாக அஸ்டெஸ் என்று அழைக்கப்பட்ட ஹஸ்திநாயனர்கள் புஷ்கலாவதியை (பாகிஸ்தானில் உள்ள தற்போதைய சார்ஸத்தா) ஆட்சி செய்து வந்தனர். அலெக்சாண்டர் அந்த நகரின் கோட்டையை முற்றுகையிட்டபோது மூன்று மாதங்கள் கடுமையாகப் போர் செய்து கிரேக்கர்களின் படையை அவர்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர். போலவே அஸ்வகாயனர்கள் என்ற குடியரசிலிருந்து சுமார் 40,000 பேர் சிறைபிடிக்கப்பட்டதாகக் கிரேக்கர்களின் குறிப்புகள் கூறுகின்றன. இப்படி வலிமை மிக்கதாக இருந்த இந்தக் குடியரசுகள் ஒன்றிணைந்து செயல்படாத காரணத்தாலும் அவர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லாததாலும் அலெக்சாண்டரால் தோற்கடிக்கப்பட்டன.
ஆனால் சுதந்தர உணர்வு கனன்று கொண்டிருந்த இந்தக் குடியரசுகள் அலெக்சாண்டர் திரும்பிச் சென்றதும் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தன. கிரேக்க ஆளுநர் நிகானோர் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார். இப்படிக் கிளர்ச்சி செய்த குடியரசுகளின் படைகளை சாணக்கியர் உதவியுடன் சந்திரகுப்தர் ஒன்றிணைத்தார். தவிர, கஷ்மீர அரசரிடம் தூது சென்ற சாணக்கியர் அந்த அரசின் படைகளையும் சந்திரகுப்தரின் படைகளோடு சேர்த்துவிட்டார். இந்தப் பெரும்படை உதவியுடன், இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளை சந்திரகுப்தர் பொயுமு 323ம் ஆண்டு மீட்டார். இது அவரின் முதல் வெற்றியாகும்.
மகதப் படையெடுப்பு
அடுத்ததாகக் கொடுங்கோல் ஆட்சி செய்த நந்த அரசரின் மேல் தன் பார்வையைத் திருப்பிய சந்திரகுப்தர் மகதத்தின் மீது படையெடுத்தார். ஆனால் அவர் எல்லைப் பகுதிகளைத் தாண்டி மகதத்தைத் தாக்கிய போது எல்லையில் ஆட்சி செய்த சிற்றரசுகள் அவரைப் பின்னாலிருந்து தாக்கித் தோல்வியுறச் செய்தன.
இதைப் பற்றிய பிரபலமான கதை ஒன்று உண்டு. போர்க்களத்திலிருந்து ஓடிய சந்திரகுப்தர் ஒரு மூதாட்டியிடம் உணவு கேட்டார். அந்த மூதாட்டி தந்த ரொட்டிகளைச் சாப்பிடும்போது நடுவில் உள்ள பகுதியைச் சாப்பிட முயன்றார். அது சுட்டதால் கையை உதறிக்கொண்டார். அதைக் கண்ட மூதாட்டி “இந்தப் பையன் சந்திரகுப்தன் அரசைப் பிடிக்க முயல்வது போலத் தவறான முறையில் சாப்பிடுகிறான்” என்று சொன்னாராம். அது எப்படி என்று சந்திரகுப்தர் கேட்க, எல்லைப் பகுதிகளை முழுவதுமாக வெற்றிகொள்ளாமல் மைய அரசைக் கைப்பற்ற நினைக்கிறான் சந்திரகுப்தன் என்று அந்த மூதாட்டி கூறவே, தன்னுடைய வியூகத்தை மாற்றிக்கொண்ட சந்திரகுப்தர் எல்லைப் பகுதிகளை முற்றிலுமாக வென்ற பிறகு, பாடலிபுத்திரத்தை நோக்கிச் சென்றதாக மஹாவம்ச தீகா கூறுகிறது.
இது உண்மையோ இல்லையோ, மகதத்தைச் சரியான வியூகம் வகுத்து சாணக்கியரின் உதவியுடன் சந்திரகுப்தர் வென்றதாக வரலாறு கூறுகிறது. இத்தனைக்கும் நந்த அரசர்களின் பலம் அல்பசொல்பமானதல்ல, பெரும் யானைப்படைகளையும் ஆயிரக்கணக்கான காலாட் படையினரையும் கொண்டது மகதத்தின் படை. அப்படிப்பட்ட நந்தர்களை தனது வீரத்தாலும் விவேகத்தாலும் வென்றார் சந்திரகுப்தர். அதன் பின் பாடலிபுத்திரத்தின் அரசராக ராஜ்யாபிஷேகம் செய்துகொண்டார். இது பொயுமு 322ம் ஆண்டில் நடைபெற்றது.
இதற்கிடையில் கிரேக்கத் தளபதியான செலூகஸ் நிகேட்டர் பாபிலோனிலிருந்து கிளம்பி இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளைப் பிடித்துக்கொண்டார். ஆகவே அவரோடு போரிடுவது சந்திரகுப்தருக்கு அவசியமாயிற்று. ஒரு பெரும்படையோடு கிளம்பிய சந்திரகுப்தர் செலூகஸை பல இடங்களில் தோற்கடித்தார். முடிவில் செலூகஸ் சந்திரகுப்தரோடு சமாதானம் செய்துகொண்டார். இந்த வெற்றியின் மூலம் காபூல், கந்தகார், ஹீரட், பலூசிஸ்தானம் ஆகிய பகுதிகள் மௌரியப் பேரரசோடு இணைந்தன. செலூகஸ் தனது புதல்வியை சந்திரகுப்தருக்குத் திருமணம் செய்துகொடுத்ததாக சிலர் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் இந்தச் செய்திக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் தனது தூதுவராக மெகஸ்தனீஸ் என்பவரை சந்திரகுப்தரின் அவைக்கு அனுப்பிவைத்தார். அவர் எழுதிய இண்டிகா என்ற நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த அதன் பகுதிகள் மௌரியர் கால இந்தியாவைப் பற்றிய பல செய்திகளைத் தெரிவிக்கின்றன.
அடுத்ததாகத் தென் இந்தியாமீது கவனம் செலுத்திய சந்திரகுப்தர் விந்திய மலைக்குத் தெற்கில் படையெடுத்தார். இந்தப் படையெடுப்பு அவரது மகனான பிந்துசாரரின் தலைமையில் நடந்தது என்றும் பிந்துசாரரின் ஆட்சிக்காலத்தில் நடந்தது என்றும் கூறுவது உண்டு. தமிழ்ச் சங்கப் புலவரான மாமூலனார் மௌரியர்களின் இந்தப் படையெடுப்பைப் பற்றி “மா பெருந் தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய “ என்று பெரும் சேனையை உடைய மௌரியர்கள் தங்களுடைய தேர்ச்சக்கரம் உருளுவதற்காக மலையைத் தகர்த்து வழி அமைத்தனர் என்று குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் அரசர்கள் மௌரியப் படையை வெற்றிகொண்டதாகவும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இருப்பினும் தக்காணத்தின் பல பகுதிகளையும் சந்திரகுப்தர் வென்று மௌரியப் பேரரசுடன் இணைத்துக்கொண்டிருக்கிறார். அதன் பின் மேற்கு நோக்கிச் சென்ற சந்திரகுப்தர், சௌராஷ்டிராவை வென்றார்.
பின்னாளில் சந்திரகுப்தர்
சுமார் 28 ஆண்டுகள் ஆட்சி செய்த சந்திரகுப்தர் அதன் பின் ஜைன மதத்தில் இணைந்ததாகவும் ஜைன குரு ஒருவருடன் கர்நாடகாவில் உள்ள ஷ்ரவணபெலகுளா என்ற இடத்திற்கு வந்து அங்கேயே உயிர் துறந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக அங்கே உள்ள பொயு 7ம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடப்படுகிறது. அந்தக் கல்வெட்டில் பத்ரபாகு என்ற ஜைன குரு அவருடைய சீடரான ப்ரபாசந்திரா என்பவரோடு இங்கே வந்ததாகக் கூறுகிறது. அதை வைத்து சந்திரகுப்தரும் ப்ரபாசந்திரரும் ஒருவரே என்று முடிவுகட்டிவிட்டனர். ஆனால் வரலாற்றாய்வாளரான ஜான் ப்ளீட், இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகின்ற இருவரும் உஜ்ஜயினைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்திரகுப்தருக்கும் ப்ரபாசந்திரருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஸ்வேதாம்ப்ர ஜைனப் பிரிவைச் சேர்ந்த ஹேமச்சந்திராவும் சந்திரகுப்தர் தெற்கு நோக்கி வந்ததை மறுக்கிறார். சிலர் இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருப்பவர், அசோகரின் பேரனான சம்ப்ரதி சந்திரகுப்தர் என்று கூறுகின்றனர். இப்படி ஆதாரங்கள் வலுவாக இல்லாததால், சந்திரகுப்தர் ஜைன மதத்திற்கு மாறினார் என்பதும் தெற்கு நோக்கி வந்தார் என்பதும் வரலாறு அல்ல என்பது தெளிவாகிறது.
ஒரு பேரரசை முதன்முதலாக நிறுவியவர் என்பதைத் தவிர சந்திரகுப்த மௌரியருக்கு பல பெருமைகள் உண்டு. பின்னாளில் இருந்த பிரிட்டிஷ் இந்தியாவை விட அதிகமான நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் சந்திரகுப்தர். அவரது அரசு மேற்கில் பாரசீகம் வரையும் கிழக்கில் அஸ்ஸாம் வரையும் பரவியிருந்தது. அந்நிய ஆதிக்கத்திலிருந்து இந்தியாவின் பல பகுதிகள் மீட்டெடுத்தவர் என்ற சிறப்பும் சந்திரகுப்தரையே சேரும். வலிமையான கிரேக்கர்களை வடமேற்குப் பகுதியிலிருந்து விரட்டி அங்கே தன்னுடைய ஆட்சியை நிறுவியவர் சந்திரகுப்தர். விந்திய மலைக்கு வடக்கே உள்ள பகுதிகளையும் தெற்கே உள்ள பகுதிகளையும் ஒரே ஆட்சியின் கீழ் முதன்முதலில் கொண்டுவந்தவரும் சந்திரகுப்தர மௌரியர்தான். இருபத்தெட்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் இப்படிப் பல செயற்கரிய செயல்களைச் செய்தவர்தான் சந்திரகுப்த மௌரியர்.
(தொடரும்)

