Skip to content
Home » மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…

மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…

1989இல் வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்றிருந்தபோது, நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. தனக்கு முன்பு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, காலியான கருவூலத்தை விட்டுச்சென்றிருப்பதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையிலேயே வி.பி.சிங் அறிவித்தார். நாட்டின் பொருளாதார நிலை குறித்த புள்ளிவிவரங்களை, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் மது தண்டவதே விளக்கினார்.

ராஜீவ் பதவியேற்றபோது (1984) மத்திய உணவுக் கிடங்குகளில் 21 மில்லியன் டன்களாக இருந்த உணவுத் தானியக் கையிருப்பு, வி.பி.சிங் பதவியேற்றபோது 11 மில்லியன் டன்கள் மட்டுமே இருந்தன. 1989-90ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், பட்ஜெட் பற்றாக்குறை ரூ.7,337 கோடியாக இருக்குமென்று ராஜீவ் அரசால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதியாண்டு தொடங்கி 8 மாதங்களே முடிந்த நிலையில், பட்ஜெட் பற்றாக்குறை கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்து ரூ.13,790 கோடியாக இருந்தது. இரண்டு மாதத்திற்கான இறக்குமதித் தேவைக்கான அளவிற்கே அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்தது. முந்தைய நிதியாண்டில் (1988-89) 9.6 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (GDP), அவ்வாண்டில் 5.9 சதவிகிதமாக இருந்தது. முந்தைய நிதியாண்டில் (1988-89) 21 சதவிகிதமாக இருந்த விவசாயத்துறை வளர்ச்சி, அவ்வாண்டில் 1 சதவிகித அளவில் நிலவியது. இவற்றின் ஒட்டுமொத்த விளைவாக, விலைவாசி உயர்வு (WPI Inflation) 7 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. நாட்டின் பொருளாதார நிலையை முன்னேற்றும் பெரும்பொறுப்பு மது தண்டவதேவின் தோள்களில் இறங்கியது.

விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவரும் செயலை முதலில் கையிலெடுத்தார் மது தண்டவதே. விலைவாசிகள் குறித்த காபினெட் குழு ஒன்றை அமைத்தார். அதிக அளவில் பருப்புகளும் அரிசியும் சர்க்கரையும் சமையல் எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்பட்டன. பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் இருந்த இடையூறுகளை நீக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பொது விநியோகத் திட்டம் நெறிப்படுத்தப்பட்டது. டிசம்பர் 1989இல் ரூ.13,790 கோடியாக இருந்த பட்ஜெட் பற்றாக்குறையை மூன்று மாதங்களில் ரூ.11,750 கோடியாகக் குறைத்தார் மது தண்டவதே.

1990-91இல் மது தண்டவதே தாக்கல் செய்த பட்ஜெட்டில் அவர் கடைபிடித்து வந்த சோஷலிசக் கொள்கைகள் பல்வேறு இடங்களில் வெளிப்பட்டன. வேளாண்மைத்துறைக்குத் தன்னுடைய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்திருந்தார் மது தண்டவதே. 1956ஆம் ஆண்டு பண்டித நேரு அரசு கொண்டுவந்த தொழில்துறை கொள்கைத் தீர்மானத்தைப்போல, ஒரு வேளாண்மைக் கொள்கைத் தீர்மானத்தைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்தார். இந்தத் தீர்மானத்தின் மூலம், அரசின் முதலீடுகளில் 50 சதவிகிதத்தை வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக ஒதுக்க வேண்டும் என்பது மது தண்டவதேயின் நோக்கமாக இருந்தது. 1990–91ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், அந்த இலக்கை நோக்கி நகர்வதற்கான தொடக்கமாக அமைந்தது.

நிலச் சீர்திருத்தம் என்பது மது தண்டவதேவின் அடிப்படைக் கனவுகளுள் ஒன்று. எனவே, நிலச் சீர்திருத்தம் குறித்த சட்டங்களை அரசியலமைப்புச் சட்டத்தின் 9ஆம் அட்டவணையில் சேர்த்திடத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று தன்னுடைய பட்ஜெட் உரையில் மது தண்டவதே அறிவித்தார். (அரசியலமைப்புச் சட்டத்தின் 9ஆம் அட்டவணையின் கீழ் உள்ள சட்டங்களை, நீதிமன்றப் பரிசீலனைக்கு உட்படுத்த முடியாது. நிலச் சீர்திருத்தம் குறித்து இயற்றப்பட்ட சட்டங்களை 9ஆவது அட்டவணையில் சேர்ப்பதன் மூலம், அச்சட்டங்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது; எனவே அத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்காது). அவ்வாறு அறிவித்தவாறே, 55 நிலச் சீர்திருத்தச் சட்டங்களை 9ஆம் அட்டவணையில் சேர்க்கும் வண்ணம், 66வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றம் மூலம் நிறைவேற்றச் செய்தார்.

சமூகத்தின் நலிந்த பிரிவினருக்குப் பல்வேறு சலுகைகளைத் தன்னுடைய பட்ஜெட்டில் மது தண்டவதே அறிவித்தார். ரூ.10,000 வரையிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அரசிற்கு ரூ.10,000 கோடி செலவாகும் என்று கணித்த மது தண்டவதே, 1990-91 நிதியாண்டில் மட்டும் இதற்கு ரூ.1,000 கோடியை ஒதுக்கினார். இந்தத் திட்டத்தைப் பின்பற்றித்தான் 2008இல் டாக்டர். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ரூ.60,000 வரையிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரின் வரிச்சுமையைக் குறைக்கும் நோக்கில், தனிநபர் வருமான வரிக்கான விலக்கு வரம்பை ரூ.18,000இலிருந்து ரூ.22,000ஆக மது தண்டவதே உயர்த்தினார். இதனால் வருமான வரி கட்டுவதிலிருந்து சுமார் 10 லட்சம் நபர்கள் விலக்கு பெற்றனர்.

வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாகக் கொண்டுவர மது தண்டவதே முயன்றார். (வேலையளிப்பது அரசின் கடமையாக ஆக்கப்பட்டால், அனைவருக்கும் வேலைவாய்ப்பை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்; இல்லையெனில் வேலையின்மைக்கான இழப்பீட்டை அளிக்கவேண்டும்). படிப்படியாக இத்திட்டத்தைக் கொண்டுவர நினைத்தார்; வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கும், கடுமையான வேலையின்மைப் பிரச்னை உள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டத்தை அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்குள் வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது. இந்தத் திட்டத்தைப் பின்பற்றித்தான் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை 2005இல் நிறைவேற்றியது. (இந்தச் சட்டம் 2009இல் MGNREGA என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது).

மது தண்டவதே தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் (Gold Control Act) ரத்து செய்யப்பட்டது. தங்கத்தைக் கட்டிகளாகவும், நாணயங்களாகவும் பொதுமக்கள் வைத்திருப்பதைத் தடைசெய்திருந்தது இச்சட்டம். மேலும், பொற்கொல்லர்கள் 100 கிராமுக்கு மேலும், உரிமம் பெற்ற டீலர்கள் 2 கிலோவுக்கு மேலும் தங்கம் வைத்திருப்பதையும் இந்தச் சட்டம் தடைசெய்திருந்தது. 1962இல் சீன ஆக்கிரமிப்பின்போது அந்நிய செலாவணியைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்தில், தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு, அதனால் அந்நிய செலாவணியின் கையிருப்பு குறையத் தொடங்கி இருந்தது. எனவே தங்கத்தின் இறக்குமதியையும், அதன் பயன்பாட்டையும் கட்டுப்படுத்துவதற்காக 1962இல் இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. 1990இல் இச்சட்டம் தன் முக்கியத்துவத்தை இழந்திருந்ததை உணர்ந்த மது தண்டவதே, இச்சட்டத்தை ரத்து செய்தார். 1962இல் நிதி அமைச்சராக இருந்தபோது இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்திருந்த மொரார்ஜி தேசாய், ‘நான் அறிமுகப்படுத்திய இச்சட்டம், இப்போது பொருளற்றதாகிவிட்டது. ஆனாலும் இதை ரத்து செய்யும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை. இந்தத் தைரியமான முடிவை எடுத்ததற்காக நான் உங்களை வாழ்த்துகிறேன்’ என்று மது தண்டவதேவிற்கு கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்தார்.

தன்னுடைய சோஷலிசக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரு கருவியாகத் தான் தாக்கல் செய்த 1990-91 பட்ஜெட்டை மது தண்டவதே கையாண்டிருந்தார். துரதிருஷ்டவசமாக, அவர் தாக்கல் செய்த ஒரே பட்ஜெட் இதுவே. பதவிக்கு வந்த ஓராண்டுக்குள் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது. சுமார் 11 மாதங்கள் மட்டுமே நிதி அமைச்சராகப் பதவி வகித்தார் மது தண்டவதே. வி.பி.சிங் ஆட்சிக்குப் பிறகு வந்த சந்திரசேகர் ஆட்சியும் நிலைக்கவில்லை. மக்களவை கலைக்கப்பட்டு 1991இல் தேர்தல் வர, அம்முறை தேர்தலில் தோற்றார் மது தண்டவதே. இராஜ்யசபை உறுப்பினராக விருப்பமில்லாத மது தண்டவதே, அதற்குப் பிறகு நாடாளுமன்றத்திற்குச் செல்லவில்லை.

திட்டக்குழுவின் துணைத் தலைவராக…

தேவே கௌடா பிரதமராக இருந்த காலகட்டத்தில் (1996-97) திட்டக்குழுவின் துணைத்தலைவராகப் பதவி வகித்தார் மது தண்டவதே. (நாட்டு வளர்ச்சிக்கான ஐந்தாண்டுத் திட்டங்களை வகுப்பது திட்டக்குழுவின் பணி. திட்டக்குழுவின் தலைவர் பிரதமர். சோவியத் இரஷ்ய நாட்டின் ‘மையப்படுத்தப்பட்ட திட்டமிடல்’ கொள்கையைத் தழுவி, நம் நாட்டில் ஐந்தாண்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 2014ஆம் ஆண்டில் திட்டக்குழு கலைக்கப்பட்டது. திட்டக்குழுவிற்குப் பதிலாகத் தற்சமயம் ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது).

திட்டக்குழுவின் துணைத் தலைவராக அவர் பதவி வகித்தது மிகக் குறுகிய காலமே. இருப்பினும், அந்தக் குறுகிய காலத்தில், 9வது ஐந்தாண்டுத் திட்டத்தை (1997-2002) உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். அவரது தலைமையில் தயாரிக்கப்பட்ட வரைவுத் திட்டத்தில், வேளாண்மை, வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், அனைவருக்கும் ஆரம்பக் கல்வி, அனைவருக்கும் வீடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட புதிய முயற்சிகளும் வரைவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டன. நாட்டில் நிலவும் வறுமையின் தன்மை மற்றும் அதன் அளவை மதிப்பிடுவதற்கான புதிய கணக்கீட்டு முறையை தன்னுடைய வரைவுத் திட்டத்தில் மது தண்டவதே அறிமுகப்படுத்தினார். மேலும், வடகிழக்கு மாநிலங்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சிக்கல்களை ஆய்வு செய்த மது தண்டவதே, அந்த மாநிலங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான செயல்முறைகளையும் வரைவுத் திட்டத்தில் பரிந்துரைத்தார்.

திட்டக்குழுவின் பரிந்துரைகளைத் தேசிய வளர்ச்சிக் குழு என்ற அமைப்பு ஒப்புதல் அளிக்க வேண்டும். பிரதமர் தலைமையில் செயல்படும் இந்த அமைப்பில், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் மற்றும் திட்டக் குழுவின் உறுப்பினர்கள் இடம்பெறுவர். இந்த அமைப்பின் ஒப்புதலுக்குப் பிறகு, மத்திய அமைச்சரவைக் குழுவும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்குப் பிறகே, ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைக்கு வரும். 9வது ஐந்தாண்டுத் திட்டத்தின் வரைவு ஆவணங்களை மது தண்டவதே தயார் செய்துவிட்டிருந்தார். 1997ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தேசிய வளர்ச்சிக் குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அணுகுமுறை ஆவணத்தில், 9வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான வளர்ச்சி இலக்காக 7 சதவிகிதத்தை முன்மொழிந்திருந்தார்; தேசிய வளர்ச்சிக் குழுவால் அது ஏற்கப்பட்டது. ஆனால், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன்பே, 1997ஆம் ஆண்டு தேவே கௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு வீழ்ந்தது. அடுத்த ஆண்டே, ஐ.கே குஜ்ரால் தலைமையிலான 2வது ஐக்கிய முன்னணி அரசும் பதவி இழந்து, தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றின் விளைவால், 9வது ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

தன்னுடைய ஒன்றரை ஆண்டு கால உழைப்பு வீணாகப் போவதை விரும்பாத மது தண்டவதே, பிரதமரின் ஒப்புதல் பெற்ற பிறகு, 9வது ஐந்தாண்டுத் திட்டத்தின் வரைவு ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட்டார். மது தண்டவதேவின் இந்த முடிவு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. புதிதாகப் பதவியேற்கப்போகும் அரசாங்கத்திற்கென்று இருக்கும் உரிமையைப் (ஐந்தாண்டுத் திட்டத்தைத் தன்னுடைய விருப்பப்படி உருவாக்கக் கூடிய உரிமை) பறிக்கும் விதமாக, மது தண்டவதேவின் இந்த முடிவு இருப்பதாகச் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், மது தண்டவதேயின் நிலைப்பாடு தெளிவாக இருந்தது. ‘இந்த ஆவணத்தை வெளியிட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் மிகுந்த உழைப்புடன் இதை உருவாக்கியுள்ளோம். இதை மக்களிடமும், புதிய அரசிடமும் விடுவோம். அவர்கள் இதை நிராகரிக்க விரும்பினால், நிராகரிக்கட்டும்’.

தேர்தலுக்குப் பிறகு பதவியேற்ற வாஜ்பாய் தலைமையிலான புதிய அரசு, மது தண்டவதே தலைமையில் தயாரிக்கப்பட்டிருந்த வரைவுத் திட்டத்தைப் பெரும்பாலும் அப்படியே ஏற்றுக்கொண்டது (1999). வரைவு ஆவணம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிகழ்வைத் தன்னுடைய உழைப்பு அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாக மது தண்டவதே கருதினார். இது குறித்து வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்த அமைச்சர் ஒருவரிடம் பேசிய மது தண்டவதே, ‘எழுத்துப் பிழைகளைக்கூட மாற்றாமல் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்!’ என்று தன் இயல்பான நகைச்சுவையுடன் கூறி நன்றி தெரிவித்தார்.

பயனுள்ள வாழ்வு

தன்னலம் கருதாமல் சமுதாயப் பணியாற்றிய பல்வேறு தலைவர்களின் வரிசையில், மது தண்டவதே குறிப்பிடத்தக்கவர். கொள்கைப் பிடிப்போடும், நேர்மையாகவும் அதே சமயத்தில் செயல்திறன் மிக்கவராகவும் விளங்கியவர் மது தண்டவதே. எவரையும் அவ்வளவாகப் புகழாத மொரார்ஜி தேசாய்கூட, தன் அமைச்சரவையில் மது தண்டவதே இரயில்வே அமைச்சராக இருந்தபோது, ‘நான் தலையிடத் தேவையில்லாத ஓர் அமைச்சகம்- இரயில்வே அமைச்சகம்தான். அத்துறையை மது தண்டவதே நிர்வகிக்கும் அளவுக்கு என்னால் கூட முடியாது’ என்று புகழ்ந்திருக்கிறார்.

இரயில்வே துறை அமைச்சராக மது தண்டவதே புரிந்துவந்த சாதனைகள் குறித்துக் கூர்மையாகக் கவனித்த இந்திரா காந்தி, ஒருமுறை அவரிடம் ‘உங்கள் அரசாங்கத்திற்கு நீங்கள் பெருமை தேடித் தந்திருக்கிறீர்கள். நீங்கள் என் அமைச்சரவையில் இடம்பெறாதது என்னுடைய துர்பாக்கியம்.’ என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். ‘அது என் பாக்கியம் மேடம்’ என்று உடனே நகைச்சுவையாகப் பதிலளித்திருக்கிறார் மது தண்டவதே.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்வதற்காக, முழுமையான ஆய்வுகள் செய்து, தன்னுடைய உரைகளைத் தயாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மது தண்டவதே. சற்றும் பொய்யற்ற தகவல்கள்; அத்தகவல்களை மேலும் மெருகேற்றும் புள்ளிவிவரங்கள்; புன்னகைக்க வைக்கும் மெல்லிய நகைச்சுவை- இவை மூன்றையும் மது தண்டவதேயின் உரைகளில் காணலாம்.

நாடாளுமன்றத்தில் ஒருநாள் தன்னுடைய கண்ணாடியை மது தண்டவதே தேடிக்கொண்டிருக்க, அருகிலிருந்த உறுப்பினர் தன்னுடைய கண்ணாடியைத் தரட்டுமா எனக் கேட்க, ‘வேண்டாம். நான் குறுகிய கண்ணோட்டம் உடையவனாக இருக்க விருப்பமில்லை’ என்று தனக்கே உரிய குறும்புடன் கூறியிருக்கிறார் மது தண்டவதே.

அந்நாட்களில், நாடாளுமன்ற உணவகத்தில் இரயில்வேயின் பணியாளர்களே பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். ‘நாங்கள் நாடாளுமன்றத்தில் ஒரு நல்ல உணவகத்தை நடத்தி வருகிறோம்; By the way, நாங்கள் இரயில்களையும் இயக்குகிறோம்!’ என்று இதுகுறித்துக் குறும்புடன் குறிப்பிட்டிருக்கிறார் மது தண்டவதே.

வேலை தொடர்பாக இந்தியாவிற்கு வர நேர்ந்த பங்களாதேஷைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர், கல்கத்தாவிற்கு இரயில் வண்டியில் பயணிக்க டிக்கெட் கிடைக்காமல் தில்லி இரயில் பவனில் அங்குமிங்கும் அலைந்தார். வெறுத்துப்போனவர், கடைசியில் இரயில்வே அமைச்சரான மது தண்டவதேயின் காரை வழிமறித்துவிட்டார். காரிலிருந்து பொறுமையாக இறங்கிய மது தண்டவதே, அவரிடம் விவரம் கேட்டறிந்து, அவரைத் தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தேநீர் அருந்தவைத்து, அவருக்கு டிக்கெட் கிடைக்குமாறு செய்திருக்கிறார்!.

படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்த மது தண்டவதே, பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘Gandhi and Marx’ என்ற புத்தகம் குறிப்பிடத்தகுந்தது. அவசரநிலை அமலில் இருந்த காலத்தில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மது தண்டவதே எழுதிய புத்தகம் இது. அவருடைய இறுதிப் புத்தகத்தின் தலைப்பு ‘Dialogue with Life’. வெறும் புத்தகப்புழுவாக மட்டுமே அவர் இருந்ததில்லை- நீச்சல் மற்றும் கிரிக்கெட் ஆகிவற்றிலும் அவர் சிறந்து விளங்கினார்.

தன்னுடைய 81வது வயதில் 2005ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார் மது தண்டவதே. இறுதிவரை ‘பற்றுநோய்’ கொள்ளாதவரைப் புற்றுநோய் கொண்டது. தன்னுடைய உடலை மருத்துவ ஆராய்ச்சிக்குத் தானமாகத் தந்த மது தண்டவதே, தான் தவறிய பிறகும் சமுதாயத் தொண்டாற்றத் தவறவில்லை.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *