Skip to content
Home » பனிப்போர் #4 – அணு ஆயுதக் கணக்கீடு

பனிப்போர் #4 – அணு ஆயுதக் கணக்கீடு

எல்லாமே ஒரு சமன்பாட்டில்தான் தொடங்கியது. E=mc². 1905ஆம் ஆண்டில் பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும் இந்தச் சமன்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்டபோது, இதன் பின்னால் உலகை அழிக்கும் பிரம்மாண்டமான ஆபத்து ஒன்று ஒளிந்திருக்கிறது என்பதை வெகு சிலரே உணர்ந்திருந்தார்கள். பொருண்மையும் (mass) ஆற்றலும் (energy) ஒன்றோடொன்று மாறக்கூடியவை என்பதுதான் அந்தச் சமன்பாட்டின் அடிப்படை உண்மை. இதற்கு வேறு ஓர் அர்த்தமும் இருந்தது. கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய பருப்பொருளில்கூட கற்பனைக்கு எட்டாத அளப்பரிய அழிவு சக்தி ஒளிந்திருக்கிறது என்பதுதான் அது.

40 வருடங்களாக வெறும் கோட்பாடாகவே காகிதத்தில் தூங்கிக்கொண்டிருந்தது இந்தச் சமன்பாடு. பிறகு, டிசம்பர் 17, 1938 அன்று ஆட்டோ ஹான், ஃபிரிட்ஸ் ஸ்ட்ராஸ்மேன் என்கிற இரு விஞ்ஞானிகள் சேர்ந்து முதன்முறையாக யுரேனியம் அணுவைச் செயற்கையாகப் பிளந்து காட்டினார்கள். அவ்வளவுதான். கோட்பாட்டு இயற்பியலின் காலம் முடிந்து, உலகை அழிப்பதற்கான பயன்பாட்டுக் காலம் அசுர வேகத்தில் தொடங்கிவிட்டது.

இதன்பிறகு நடந்த சம்பவங்கள் விஞ்ஞானிகளுக்கே தலைசுற்ற வைக்கும் வேகத்தில் நடந்தன. 1933இல் லண்டன் வீதியைக் கடக்கும்போது அணுக்கருத் தொடர்வினை (nuclear chain reaction) பற்றிய சிந்தனையை முதன்முதலில் உருவாக்கிய லியோ சிலார்ட், ஐன்ஸ்டீனை வலியுறுத்தி அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம் எழுத வைத்தார். அமெரிக்காவின் அணுக்கரு ஆராய்ச்சி அதிலிருந்துதான் தொடங்கியது. அமெரிக்காவின் துறைமுகங்களில் ஒன்றான பேர்ல் ஹார்பரின் மீதான ஜப்பானின் தாக்குதல் அந்த ஆராய்ச்சியை ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்ற மாபெரும் அரக்கனாக மாற்றியது. ஓக் ரிட்ஜ், ஹான்ஃபோர்ட் மற்றும் லாஸ் அலமோஸ் ஆகிய இடங்களில் 1.30 லட்சம் பேர் இரவு பகலாக வேலை பார்த்தார்கள். இதில் லாஸ் அலமோஸ் ஆய்வகத்தை வழிநடத்தியவர் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமர். அவருடைய அபாரமான அறிவும், நிர்வாகத் திறனும் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு 2 பில்லியன் டாலர்களைத் தாண்டியது. இது பாதுகாப்பு பட்ஜெட்டிற்குள் மிகத் திறமையாக மறைக்கப்பட்டது.

ஜூலை 16, 1945. அதிகாலை சரியாக 5 மணி, 29 நிமிடம், 45 விநாடி. ‘மரணத்தின் பயணம்’ (Jornada del Muerto) என்றழைக்கப்பட்ட பாலைவனத்தில், மனித குலம் திரும்பவே முடியாத ஓர் எல்லையைத் தாண்டியது. டிரினிட்டி அணு ஆயுதச் சோதனை சுமார் 21 கிலோ டன் டி.என்.டிக்கு சமமான ஆற்றலை வெளியிட்டது. அடுத்த ஒரே விநாடியில் 600 மீட்டர் அகலத்திற்கு நெருப்புப் பந்து விரிவடைந்தது. அது உருவாக்கிய நெருப்புப் பந்தின் வெப்பநிலை, சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையை (5778 K) விட அதிகமாக, 8430 கெல்வின் அல்லது 8155 டிகிரியை எட்டியது. 200 கிலோமீட்டர் தள்ளி இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின. பூமியிலிருந்து 12 கிலோமீட்டர் உயரத்திற்கு விண்வெளியை நோக்கி ஒரு பிரம்மாண்டமான காளான் மேகம் எழும்பியது. 20ஆம் நூற்றாண்டின் மிகப் பயங்கரமான குறியீடாக அது மாறப்போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

வெல்டிங் கண்ணாடிகளை அணிந்துகொண்டு இதைப் பார்த்த ஓப்பன்ஹைமருக்கு பகவத் கீதையின் ஒரு வரி நினைவுக்கு வந்தது: ‘நானே உலகங்களை அழிக்கும் மரணமாக உருவெடுத்துள்ளேன்’. விஞ்ஞானி இசிடோர் ராபி இதை ‘வெறும் கண்களால் பார்க்க முடியாத ஒரு தரிசனம்’ என்றார். வெடிப்பின் அதிர்வலைகள் வந்தபோது சில காகிதத் துண்டுகளைக் கீழேபோட்டு, அவை எவ்வளவு தூரம் பறக்கின்றன என்பதை வைத்து இது ‘10 கிலோ டன்’ சக்தி கொண்டது என்று என்ரிக்கோ ஃபெர்மி கணக்கிட்டார். உண்மையான அளவில் அது பாதிதான் என்றாலும், அந்தச் சூழ்நிலையில் அது ஓர் அபாரமான உடனடிக் கணக்கீடு.

ட்ரூமனுக்கு முன்னால் இருந்த தார்மீகக் கணக்கீட்டிற்கு எந்த ஒரு சுலபமான பதிலும் இல்லை. பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஒரே நொடியில் எரித்துக்கொல்வது என்பது பல நூற்றாண்டுகளாக மேற்கத்திய உலகம் கட்டிவைத்திருந்த ‘நியாயமான போர்’ என்ற அறத்தின் பிம்பத்தைக் குழிதோண்டிப் புதைப்பதாகும். ஆனால் அதேசமயம், ஜப்பானுக்குள் நேரடியாகப் படையெடுக்கும் ஆபரேஷன் டவுன்ஃபால் திட்டத்தைச் செயல்படுத்தினால், சுமார் 10 லட்சத்துக்கும் மேலான அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்படுவார்கள் என்று கணக்கிடப்பட்டது. இதை ஜப்பானின் நகரங்கள் மீது வீச வேண்டாம்; வெடித்து மட்டும் காட்டுவோம் என்று 69 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை விஞ்ஞானி லியோ சிலார்ட் அனுப்பினார். ஆனால் அது அதிபரின் கைக்கே போய்சேரவில்லை. கார் அல்பரோவிட்ஸ் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், இதைத் தவிர வேறு வழிகள் இருந்தன என்றும், ஆகஸ்ட் 8இல் சோவியத் படைகள் போரில் இணைந்ததே ஜப்பானின் சரணடைதலுக்கு முக்கியக் காரணம் என்றும் வாதிடுகிறார்கள். ட்ரூமன் செய்தது சரியா தவறா என்ற விவாதம் இன்றுவரை ஓயாததற்குக் காரணம், அந்த முடிவுக்குப் பின்னால் இருந்த உண்மையான துயரம்தான்.

ஆகஸ்ட் 6 காலை 8:15 மணி. எனோலா கே விமானம், 15 கிலோ டன் சக்தி கொண்ட யுரேனியம் குண்டை ஹிரோஷிமா மீது வீசியது. குண்டு வெடித்த மையத்திலிருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த மனிதர்கள் அப்படியே ஆவியானார்கள். அவர்களின் நிழல்கள் மட்டும் ஒரு நிரந்தர ஓவியம்போலக் கற்களில் பதிந்தன. 13 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நெருப்பிற்கு இரையானது. முதல் நொடியில் 70,000 பேர் உயிரிழந்தார்கள். அடுத்த சில வாரங்களில் அதே அளவு மக்கள் இறந்தார்கள்.

3 நாட்களுக்குப் பிறகு, மேகமூட்டம் காரணமாக கொகுரா நகரத்திலிருந்து திசை திருப்பப்பட்ட ‘ஃபேட் மேன்’ என்கிற மற்றொரு குண்டு நாகசாகி மீது விழுந்தது. 2 நகரங்களிலும் சேர்த்து சுமார் 1.10 லட்சம் பேர் மாண்டனர். அணுகுண்டு வெடித்தால் என்ன ஆகும் என்பதற்கு இந்த எண்கள்தான் இன்றுவரை ஒரே அளவுகோல். ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பான் சரணடைந்தது. ஒருபக்கம் அணுகுண்டின் கோரத்தாண்டவம்; மறுபக்கம் மஞ்சூரியாவில் புகுந்த சோவியத் படைகள் ஜப்பானின் குவாங்டுங் ராணுவத்தை அடியோடு அழித்த நிதர்சனம். இனி பேரம் பேசத் தன்னிடம் எதுவும் இல்லை என்பதை ஜப்பான் உணர்ந்துகொண்டது.

போட்ஸ்டாம் மாநாட்டில் ட்ரூமன் அணுகுண்டைப் பற்றிச் சொன்னபோது ஸ்டாலின் எந்த அதிர்ச்சியுமில்லாமல் அலட்சியமாகக் காட்டிக்கொண்டாரே, ஏன் தெரியுமா? அடுத்த சில மணி நேரங்களில் சோவியத் அணு ஆயுதத் திட்டத்தை முடுக்கிவிடும்படி சோவியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் மொலடோவுக்கு அவர் ரகசிய உத்தரவிட்டார். சோவியத் யூனியனிடம் விஞ்ஞானிகளைத் தாண்டி மிகச் சிறந்த உளவுத்துறை இருந்தது. லாஸ் அலமோஸில் இருந்த விஞ்ஞானியும், சோவியத்தின் உளவாளியுமான கிளாஸ் ஃபூக்ஸ், 1942லிருந்தே அணுக்கரு ரகசியங்களை மாஸ்கோவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். ப்ளூட்டோனியம் வெடிப்பு வடிவமைப்பு (plutonium implosion design) அச்சுப்பிசகாமல் சோவியத் கைகளுக்குச் சென்றது. டேவிட் க்ரீன்கிளாஸ், தியோடர் ஹால் போன்றவர்களும் ரகசியங்களைக் கசியவிட்டார்கள். ‘வெனோனா திட்டம்’ மூலம் 1943லிருந்தே சோவியத் ரகசியக் குறியீடுகளை அமெரிக்கா உடைத்திருந்தாலும், 1995இல் அது பொதுவெளிக்கு வந்தபோதுதான் அமெரிக்கப் பாதுகாப்பில் எவ்வளவு பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது என்பது உலகத்துக்குத் தெரிந்தது. அணு ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைத்த ‘பரூச் திட்டம்’ ஒரு சமநிலையற்ற கணக்கீட்டில் மோதி உடைந்தது. அமெரிக்கர்கள் என்ன நினைத்தார்கள்? சர்வதேசக் கண்காணிப்பு என்ற பெயரில், தங்களிடம் மட்டுமே இருக்கும் அணு ஆயுத முற்றுரிமையை சட்டபூர்வமாகத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று. ஆனால் சோவியத் யூனியன் இதற்குச் சம்மதிக்குமா? தங்களை நிரந்தரமாக ஒரு பலவீனமான நிலையில் கட்டிப்போடும் எந்தவொரு சட்டகத்திற்கும் அவர்கள் தலையாட்டத் தயாராக இல்லை.

ஆகஸ்ட் 29, 1949. சோவியத் யூனியன் தனது முதல் அணு ஆயுதமான ஆர்டிஎஸ்-1 (அமெரிக்கர்கள் இதை ஜோ-1 என்று அழைத்தனர்) குண்டை செமிபலாடின்ஸ்க் என்ற இடத்தில் வெடித்துச் சோதித்தது. இது கிட்டத்தட்ட நாகசாகியில் வீசப்பட்ட ‘ஃபேட் மேன்’ குண்டின் அச்சு அசலான நகல்தான். அமெரிக்காவின் முற்றுரிமை சரியாக 4 வருடங்கள் மட்டுமே நீடித்தது. உளவாளி கணக்கீடுகளைத் தவிர்த்துப் பார்த்தால், அமெரிக்க உளவுத்துறை கணித்ததைவிட 2 அல்லது 3 வருடங்களுக்கு முன்பாகவே சோவியத் இந்தச் சாதனையைச் செய்துவிட்டது.

இந்த அதிர்ச்சி அமெரிக்க விஞ்ஞானிகளிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியது. யுரேனியப் பிளவைவிடச் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் இணைவு மூலம் ஒரு ‘சூப்பர்’ குண்டை உருவாக்க வேண்டும் என்று விஞ்ஞானி எட்வர்ட் டெல்லர் அவசரப்படுத்தினார். இதன் அழிவுச் சக்திக்கு எல்லையே இல்லை. அக்டோபர் 1949இல் ஓப்பன்ஹைமர் தலைமையிலான ஆலோசனைக் குழு, ‘எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது ஒரு தீய ஆயுதம்’ என்று அறிக்கை கொடுத்தது. ஆனால் ஜனவரி 31, 1950 அன்று இதை உருவாக்க ட்ரூமன் உத்தரவிட்டார். வெறும் 7 நிமிடங்களில் அவர் எடுத்த முடிவு அது. பிளவின் கதிர்வீச்சைப் பயன்படுத்தி இணைவை அழுத்தும் டெல்லர்-உலாம் கட்டமைப்பு (Teller-Ulam configuration) தொழில்நுட்பம், 1951இல் இந்தச் சிக்கலைத் தீர்த்தது.

நவம்பர் 1, 1952இல் எனிவெடாக் பவளத்தீவில் நடந்த ‘மைக்’ சோதனை 10.4 மெகாடன் சக்தியை வெளியிட்டது. இது ஹிரோஷிமா குண்டைவிட 700 மடங்கு சக்தி வாய்ந்தது. எலுஜெலாப் என்ற அந்தத் தீவே வரைபடத்திலிருந்து காணாமல்போனது. அங்கு ஒரு மைல் அகலத்திற்கு ஒரு மாபெரும் பள்ளம் மட்டுமே மிஞ்சியது. ஆகஸ்ட் 12, 1953இல் சோவியத் யூனியனும் ஆண்ட்ரே சகரோவ் வடிவமைத்த ஆர்டிஎஸ்-6எஸ் குண்டை வெடித்தது. ஆயுதங்களை வடிவமைத்த சகரோவ், பின்னாளில் அதே ஆயுதங்களுக்கு எதிராகப் போராடும் ஓர் அகிம்சைவாதியாக மாறியது பனிப்போர் வரலாற்றின் சுவாரஸ்யமான பக்கங்களில் ஒன்று. ஆனால், அமெரிக்காவோ தனது ஆயுதத் திட்டத்தைத் தார்மீக அடிப்படையில் எதிர்த்த ஓப்பன்ஹைமரை 1954இல் விசாரணைக் கூண்டில் ஏற்றி அவரது பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்தது. அணுக்கரு யுகத்தில், ஒரு விஞ்ஞானியின் மனசாட்சிக்குக் கிடைத்த முதல் தண்டனை இதுதான்.

ஓப்பன்ஹைமருக்கு நடந்த அதே விபரீதம்தான் சகரோவுக்கும் காத்திருந்தது. அது ஒரு கச்சிதமான பழிவாங்கல். அவரிடமிருந்த அசுரத்தனமான அறிவியல் மூளையை சோவியத் அரசு முழுமையாக உறிஞ்சிக்கொண்டது. ஆனால், அந்த ஆயுதத்தை உருவாக்கிய பிறகு அவருக்கு விழித்துக்கொண்ட மனசாட்சியை, அந்த அரசால் துளியும் சகித்துக்கொள்ள முடியவில்லை. சகரோவுக்கு வழங்கப்பட்ட விருதுகள், பதவிகள் அத்தனையும் பிடுங்கப்பட்டு, கோர்க்கி நகரத்திற்கு அவர் நாடு கடத்தப்பட்டார். ஓர் உண்மை அப்போது அப்பட்டமாகத் தெரிந்தது. தான் ஏற்றிவைத்த அழிவு நெருப்புக்கு எதிராகவே பேசத் துணிந்தால், அவர் பேரழிவின் பிதாமகனாகவே இருந்தாலும் சரி, எந்த வல்லரசும் அவரை விட்டுவைக்காது என்பதுதான் அது.

ஜனவரி 12, 1954இல் அப்போதைய அமெரிக்கச் செயலாளராக இருந்த ஜான் ஃபாஸ்டர் டல்லஸ் ஒரு புதிய கொள்கையை அறிவித்தார். ‘பாரிய பதிலடி’ (massive retaliation) என்பது அதன் பெயர். சோவியத் படைகள் சாதாரண தாக்குதல் நடத்தினால்கூட, ‘எங்களுக்கு வசதியான இடத்தில், எங்கள் விருப்பப்படி’ அணு ஆயுதத்தால் பதிலடி கொடுப்போம் என்ற மிரட்டல் அது. இதற்காகக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுத் திட்டம்தான் ‘டக் அண்ட் கவர்’ (Duck and Cover). அணு ஆயுதத் தாக்குதல் நடந்தால், பள்ளிக் குழந்தைகள் தங்கள் பெஞ்சுகளுக்கு அடியில் பதுங்கிக்கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், அணுகுண்டு வெடிக்கும் மையத்தில் ஒரு மேஜைக்கு அடியில் ஒளிந்துகொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது அரசாங்கத்திற்கே தெரிந்திருந்தும், இந்தக் கேலிக்கூத்து தொடர்ந்து நடந்தது.

அணு யுகம் சமூகத்தில் பெரும் பீதியை உருவாக்கியது. நெவில் ஷூட் எழுதிய ‘ஆன் தி பீச்’ என்ற நாவல், கதிர்வீச்சு எப்படி உலகத்தை அழிக்கிறது என்று காட்டியது. ஸ்டான்லி குப்ரிக்கின் ’டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லவ்’ திரைப்படம், தர்க்கரீதியான முட்டாள்தனங்கள் எப்படி மனித குலத்தை அழிக்கும் என்பதைப் பகடியாகப் படம்பிடித்தது. மேலும் ஒரு கூடுதல் துணுக்கு, இயன் ஃபிளெமிங் ‘ஜேம்ஸ் பாண்ட்’ நாவல்களை எழுத ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான். விஞ்ஞானிகளின் ‘டூம்ஸ்டே கடிகாரம்’ கூட்டுப் பயத்தின் அடையாளமாக மாறியது.

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் இறுதியாக உருவானதுதான் ‘எம்.ஏ.டி’ (MAD – Mutual Assured Destruction). தமிழில், பரஸ்பர அழிவு நிச்சயம். இதன் பெயர் சுருக்கமே (MAD – பைத்தியக்காரத்தனம்) இதன் முரண்பாட்டைக் காட்டியது. யார் போரைத் தொடங்கினாலும் இரு தரப்புமே அழிவது நிச்சயம் என்ற நிலையில், எந்த ஓர் அறிவாளியும் போரைத் தொடங்க மாட்டான் அல்லவா? 1946இல் பெர்னார்ட் பிரோடி (இராணுவ வியூக வல்லுநர்) சொன்னதுபோல, ராணுவத்தின் வேலை இனி போரில் ஜெயிப்பதல்ல. போர் வராமல் தடுப்பதுதான்.

அணுகுண்டு ஒரு விசித்திரமான வேலையைச் செய்தது. இரண்டு வல்லரசுகளும் நேரடியாக மோதிக்கொண்டால் அது கூட்டுத் தற்கொலையில் போய் முடியும் என்பதால், பனிப்போர் வேறு வழிகளில் பயணித்தது. பொம்மலாட்டப் போர்கள் (proxy wars), கொள்கை ரீதியான சூழ்ச்சிகள், தொழில்நுட்பப் போட்டிகள் என அது திசைமாறியது. போர் என்பது ‘அரசியல் கொள்கையின் இன்னொரு வடிவமே’ என்ற கிளாஸ்விட்ஸ் தத்துவம் இங்குத் தலைகீழானது. கொரியா, இந்தோ-சீனா, அங்கோலா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மனிதத்தின் கோர முகத்தைக் காட்டும் பயங்கரப் போர்கள் நடந்தாலும், இரண்டு வல்லரசுகளுக்கு இடையே ஒரு முரண்பாடான அமைதியை இந்த அணு ஆயுதங்கள் தக்கவைத்தன. மனிதன் தன்னைத்தானே நிரந்தரமாக அழித்துக்கொள்ளும் ஒரு முழுமையான கருவியைக் கண்டுபிடித்தான். ஆனால் அதன் முழுமையே அது பயன்படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தியது. இதைவிடப் பெரிய தத்துவ முரண் இந்த உலகத்தில் இருக்க முடியுமா?

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *