‘மக்கள் அரசியல்’ என்ற தலைப்பில் எழுதப்படும் இரண்டாவது ஆளுமை குறித்த கட்டுரைத் தொகுப்பு இது என்பதற்காக மட்டுமே, இக்கட்டுரையின் தலைப்பு ‘இரண்டு’ என்று வைக்கப்படவில்லை.
அனைவருமே தலைவராகி அமைச்சர் பதவியை அலங்கரிக்க ஆசைப்படும் அரசியலில், தான் இரண்டாம் நிலைத் தலைவராக இருப்பதற்கு மட்டுமே தகுதியடைவர் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்ட தலைவர் அவர். இரண்டு முறை அவர் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருமுறை சுயேச்சையாக ஒரு மாநிலத்தில். இன்னொரு முறை ஒரு கட்சியின் சார்பில் வேட்பாளராக வேறொரு மாநிலத்தில்.
இரண்டு முறை அரசியலிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து, சிலகாலம் கழித்து மீண்டும் அரசியலுக்கு வந்தவர் அவர். மூன்றாம் முறை வெளியேறியவர் அரசியலுக்கு மொத்தமாக முழுக்குப் போட்டார். தன்னுடைய சுயசரிதையை இரண்டு பிரிவுகளாக, இரண்டு தலைப்புகளில் புத்தகங்களாக எழுதியவர் அவர்.
தொடக்கத்தில் சோஷலிசத்தின் மீது ஆழ்ந்த பற்றுடையவராக இருந்த அவர், நாளடைவில் அதற்கு நேரெதிர்க் கொள்கையான சந்தைப் பொருளாதாரத்தை ஆதரித்து, 2 கொள்கைகளிலும் தன்னுடைய அறிவைச் செலுத்தியவர்.
அவரை வியந்தவர்கள் உண்டு. ஆனால் பின்பற்றியவர்கள் குறைவு. அவருக்கெனத் தனியான ஆதரவு கோஷ்டிகள் என எவரும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கிருந்த திறமைகளுக்கு அமைச்சராகிப் பெரிய உயரங்களை அடைந்திருக்க வேண்டியவர், நாடாளுமன்ற உறுப்பினர் அளவோடு நின்றுவிட்டார். ஆயினும், தான் தீர்க்கதரிசனத்தோடு கூறியவை பின்னாளில் நடந்தேறியதை அவர் கண்டார்.
தனக்கெனத் தொண்டர் படையோ, ஆதரவுக் குழுவோ, அடிவருடிகளோ எவரும் இல்லாத இத்தலைவர், பொதுமக்களின் நினைவில் அவ்வளவாக நில்லாததில் வியப்பில்லை. அந்தத் தலைவரின் பெயர், மினூ மசானி.
இளமைக் காலம்
‘நேர்மையான அரசியல்வாதி’ என்று ஒருவரை அடையாளப்படுத்துவது அதிசயமாகிவிட்ட இக்காலத்தில், மினூ மசானியைச் சுருக்கமாக இப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. ‘ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாக அவர் பரிமளிக்க முடியாததற்கு, அவருடைய நேர்மையே காரணமாக இருந்தது’ என்று அவருடன் பணியாற்றிய ஒருவர் கூறுமளவுக்கு அவர் நேர்மையானவர்.
மும்பையின் ஒரு பார்சி குடும்பத்தில் 1905இல் பிறந்தார் மினூ மசானி. மசானி பிறந்தபோது அவருடைய தந்தை சர் ருஸ்தம் மசானி, பம்பாய் மாநகராட்சியின் உதவிச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். பின்னாளில் பம்பாய் மாநகராட்சியின் செயலாளராகப் பணியாற்றிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர். பம்பாய்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்தவர். பிரிட்டிஷார் அளித்த ‘சர்’ பட்டத்தை ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது துறந்தவர். கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்த குடும்பமாதலால், அவருடைய நான்கு குழந்தைகளும் நன்கு படிக்க வைக்கப்பட்டனர். பம்பாயின் எல்பின்ஸ்டன் கல்லூரியில் படித்த மினூ மசானி, பிறகு லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸிலும் பயின்றார். ‘லிங்கன்ஸ் இன்’னில் பாரிஸ்டராகப் பயிற்சி பெறுவதற்கு முன்பு சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.
லண்டனில் படித்த காலங்களில் சோஷலிசக் கருத்துகளால் கவரப்பட்ட மினூ மசானி, ரஷ்யாவில் நடைமுறையில் இருந்த கம்யூனிச ஆட்சியைக் குறித்து ஆர்வமடைந்து ரஷ்யாவைப் பார்த்துவரச் சென்றார் (1927). ரஷ்யாவில் அப்போது நடைமுறையில் இருந்த புதிய பொருளாதாரக் கொள்கை குறித்தும் அறிந்துகொண்டவர், சோஷலிச ஆதரவாளராக மாறினார். படிப்பை முடித்து இந்தியா திரும்பிய மினூ மசானி, வழக்கறிஞராகப் பணிபுரியத் தொடங்கினார்.
வழக்கறிஞர் வேலையை விட, நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபடுவதை விரும்பிய மினூ மசானி, காங்கிரசில் சேர்ந்தார். பின்னாளில், பம்பாய் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அமர்த்தப்பட்டார். சட்டமறுப்பு இயக்கத்தில் (1930-32) பங்குபெற்ற மினூ மசானி, 2 முறை சிறைக்குச் சென்றார். பின்னர், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் (1942) பங்குபெற்று 3ஆம் முறை சிறைவாசத்தில் இருந்தார். தன்னுடைய 38வது வயதில், பம்பாயின் மேயரானார்.
சோஷலிசப் பாதையில்…
1933இல் 2வது முறையாகச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட மசானியுடன் சிறைவாசியாக இருந்தவர்கள், ஜேபி என அனைவராலும் அழைக்கப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயண, அச்யுத் பட்வர்தன், அஷோக் மேத்தா ஆகிய மூவர். சோஷலிசக் கருத்துகளில் ஈர்ப்புடைய இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ‘காங்கிரஸ் சோஷலிசக் கட்சி’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவைத் தொடங்க வேண்டுமென்று முடிவெடுத்தனர். காங்கிரஸ் கட்சியைச் சோஷலிசப் பாதையில் அழைத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கப்பட்ட இக்கட்சிக்கு, நேருவின் ஆதரவு இருந்தது. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக!
‘அதெப்படி கட்சிக்குள்ளேயே இன்னொரு கட்சி?’ என்ற எண்ணம் தோன்றலாம். அன்றைய காங்கிரசை 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாம் பிரிவில் காந்தியடிகளைப் பின்பற்றுவோர் இருந்தனர். எண்ணிக்கையின் அடிப்படையில் இவர்களே அதிகம். 2ஆம் பிரிவில் ஸ்வராஜ் கட்சியினர் (Swaraj Party) இருந்தனர். அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த தேர்தல்களில் பங்கேற்று மத்திய, மாநில அவைகளில் உறுப்பினர்களாக ஆகி, அவைகளுக்குள்ளே இருந்தபடி பிரிட்டிஷாரை எதிர்ப்பதே இவர்களின் முக்கியக் கொள்கை. 3ஆம் பிரிவில் சோஷலிஸ்டுகள். காங்கிரசையும், இந்தியாவையும் சோஷலிசமயமாக்குதலே இவர்களின் முக்கிய நோக்கம். காங்கிரஸ் கட்சியைத் தவிரவும் வலதுசாரிகள், கம்யூனிஸ்ட்கள் ஆகியோர் அன்றைய அரசியல் களத்தில் இருந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் பிரிவுகளுக்குள் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் இருந்த பிரிவு, சோஷலிஸ்ட் பிரிவு. தங்கள் கொள்கையில் ஆழ்ந்த பிடிப்புடன் இருந்த இப்பிரிவினர், காங்கிரஸ் இயக்கத்தினரால் உற்று நோக்கப்பட்டனர். குறிப்பாக, நேருவின் கரிசனம் இவர்களின்பால் இருந்தது. மசானியை நேரு விரும்பினார். தன்னுடைய வீட்டில் மசானியைத் தங்கிக்கொள்ளச் சொன்னார். சோஷலிசத்தின் தாக்கம் இந்தியாவில் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இருவரும் உரையாடினர்.
மசானியின் தந்தைக்குத் தன் மகனின் சோஷலிச ஈர்ப்பில் விருப்பம் இருந்திருக்கவில்லை. தன்னுடைய வீட்டில் இருந்துகொண்டு தன்னுடைய கொள்கைகளுக்கு எதிராகச் சோஷலிசம் பேசவேண்டாமென்று மினூ மசானிக்கு உணர்த்தினார். வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது மசானிக்கு. ஓர் ஆங்கிலத் தினசரியில் உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்துகொண்ட மசானி, வீட்டைவிட்டு வெளியேறி வெளியில் தங்கினார். இருந்தபோதும், ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தன்னுடைய பெற்றோரின் வீட்டிற்குச் சென்று மதிய உணவு உண்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்த மசானிக்கு, வீட்டைவிட்டுப் பிரிந்ததில் பெரிதாக வருத்தம் இருந்திருக்கவில்லை. தன்னுடைய கட்சியின் கொள்கைகளை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்ற செயலூக்கத்துடன் பணியாற்றினார்.
அவர் பணியாற்றி வந்த ஆங்கிலச் செய்தித்தாள் நிறுவனம் ஆறே மாதங்களில் இழுத்து மூடப்பட்டது. மசானியின் மீது இரக்கம் கொண்ட இருவர், மசானியின் செலவுகளுக்கு மாதாமாதம் தலா 50 ரூபாய் அளித்து உதவியிருக்கின்றனர். அவருடைய மோசமான நிலையை அறிந்த அவரது தந்தை, தினமும் அவரைத் தன்னுடன் மதிய உணவிற்கு அழைத்தார். கொண்ட கொள்கைகளுக்காக இவ்வாறு துன்பப்பட நேர்ந்தாலும், மசானி இந்தக் காலகட்டங்களில் பம்பரம்போல நாடெங்கும் சுற்றினார்; சோஷலிசக் கருத்துகளைப் பரப்பிய வண்ணம் இருந்தார். காங்கிரஸ் சோஷலிசப் பிரிவின் இணைச் செயலாளர் ஆனார். கட்சிப் பணிகளுக்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் இரயில் வண்டியின் 3ஆம் வகுப்புப் பெட்டியில்தான் அமைந்தன. கட்சி நிதியைச் செலவு செய்வதிலும் அவர் சிக்கனம் காட்டினார். இரயில் நிலையங்களில் விற்கப்படும் விலை குறைந்த உணவுகளை உண்டும், ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தரும சத்திரங்களில் தங்கவும் நேர்ந்தது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் இதே நிலை நீடித்தாலும், அவருடைய உடல்நலமோ அல்லது அவருடைய சோஷலிசப் பற்றோ சிறிதளவும் பாதிக்கப்படவில்லை.
இவ்வாறு சோஷலிசத்தைப் பரப்பி நேருவின் அபிமானத்தைப் பெற்று, வீட்டில் எதிர்ப்பைத் தேடிக்கொண்டு வெளியில் தங்க நேர்ந்து பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்த மினூ மசானிதான் பின்னாளில் சோஷலிசத்தையும், கம்யூனிசத்தையும் தீவிரமாக எதிர்த்தார்; நேருவின் வெறுப்பையும் சம்பாதித்தார்.
(தொடரும்)

