ஐரோப்பாவின் பிரிவினை ராணுவ மோதலில் தொடங்கவில்லை; மாறாக, நாகரிகத்தில் நேரெதிராக இருந்த 2 மனிதர்களுக்கு இடையிலான தற்காலிகப் பேரத்தில்தான் தொடங்கியது. 1944 அக்டோபர் 9ஆம் தேதி மாலை. பிரிட்டனின் முன்னாள் போர்க்காலப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு சிறிய காகிதத்தை எடுத்து பால்கன் நாடுகள் யாருக்கு எவ்வளவு சதவிகிதம் சொந்தம் என்று எழுதினார். ருமேனியா 90% ரஷ்யாவுக்கு, கிரீஸ் 90% பிரிட்டனுக்கு, யூகோஸ்லாவியாவும் ஹங்கேரியும் சரிபாதி, பல்கேரியா 75% ரஷ்யாவுக்கு என்று எழுதி, அதை ஸ்டாலினிடம் நகர்த்தினார். ஸ்டாலின் அதை அரை நிமிடம் பார்த்தார். தனது நீலநிற பென்சிலை எடுத்து அந்த எண்களுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய ‘டிக்’ அடித்தார். கோப்பைகளில் பிராந்தி ஊற்றப்படும் நேரத்தைவிடக் குறைவான நேரத்தில் பல கோடி மக்களின் தலையெழுத்து எழுதப்பட்டது.
இந்தச் சதவிகிதப் பங்கீடு பால்கன் மக்களின் ஜனநாயகக் கனவுகளை வல்லரசுகளின் வசதிக்காகத் தூக்கிலிட்டது. அதேசமயம், எப்படியும் தன் கையை விட்டுப்போகப்போகும் நாடுகளை வைத்து, குறைந்தபட்சம் கிரீஸ் நாட்டையாவது காப்பாற்றலாம் என்று சர்ச்சில் உண்மையாகவே நம்பிய முரண்பாடும் இதில் இருந்தது. இதை நாம் முன்பே பார்த்தோம். ஆனால், இப்போது கொஞ்சம் ஆழமாக ஐரோப்பா மீது பார்வையை வீசவேண்டிய நேரமிது.
நேச நாடுகளின் வெற்றிக்காகப் போலந்து கொடுத்த விலை மிக அதிகம். ஆனால் யாருக்காக அவர்கள் போராடினார்களோ, அவர்களாலேயே அனாதையாகக் கைவிடப்பட்டனர். யால்டா மாநாட்டின் சமரசம் என்பது வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு குழப்பம். போலந்தில் ஒரு தேசிய ஐக்கிய தற்காலிக அரசாங்கத்தை அமைத்து, கூடிய விரைவில் சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஜனநாயகம் என்ற வார்த்தைக்கு ஸ்டாலின் என்ன அர்த்தம் எடுத்துக்கொண்டார் தெரியுமா? சோவியத் யூனியனுக்குச் சம்மதமான அரசு என்று பொருள்கொண்டார். மேற்கத்திய நாடுகள் அது மக்களின் விருப்பம் என்று நம்பின. இந்த இரண்டு விளக்கங்களையும் ஒருபோதும் ஒன்றிணைக்க முடியாது.
1945 மார்ச் மாதம், போலந்தின் 16 தலைவர்கள் சோவியத் அரசின் பாதுகாப்பு உத்தரவாதத்தை நம்பித் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார்கள். அடுத்த நொடியே அவர்கள் ரகசியப் போலீஸ் அமைப்பான என்கேவிடி (NKVD) வசம் கைதானார்கள். 1947 ஜனவரியில் நடந்த தேர்தல்கள் முழுக்க முழுக்க அச்சுறுத்தல்களாலும் கள்ள ஓட்டுகளாலும் நிரம்பியிருந்தன. எதிர்பார்த்தபடியே கம்யூனிஸ்ட் கூட்டணி 80% வாக்குகளைப் பெற்றது. போலந்தின் ஜனநாயகம் ஏதோ ஒரேநாளில் திடீரென்று சாகவில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாகக் கழுத்து நெரிக்கப்பட்டுத் திட்டமிட்டுக் கொல்லப்பட்டது. இதை மிகுந்த விரக்தியோடு பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்கத் தூதர் ஆர்தர் பிளிஸ் லேன், தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் எழுதிய நினைவுக்குறிப்புப் புத்தகத்தின் தலைப்பு அவரது வேதனையைச் சொன்னது. அந்தத் தலைப்பின் பெயர், நான் போலந்திற்குத் துரோகமிழைக்கப்படுவதைப் பார்த்தேன் (I Saw Poland Betrayed).
பால்டிக் நாடுகளான எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா ஆகியவற்றின் நிலைமை இன்னும் மோசம். பெயரளவு சுதந்திரம்கூட இல்லாமல், அவை சோவியத் யூனியனுடன் முற்றிலுமாக இணைக்கப்பட்டன. மோலோடோவ் ரிப்பன்ட்ராப் ஒப்பந்தத்தின்படி விழுங்கப்பட்ட இந்த நாடுகள், ஜெர்மன் ஆக்கிரமிப்புக்குப் பிறகு 1944இல் மீண்டும் சோவியத் வசமாகின. பனிப்போர் காலம் முழுவதும், பால்டிக் நாடுகள் மீதான சோவியத் அதிகாரத்தை மேற்கத்திய நாடுகள் ஏற்கவே இல்லை. தார்மீக ரீதியாக இது சரி என்றாலும், நடைமுறையில் இதனால் எந்தப் பயனும் இல்லை. இந்த 3 நாடுகளின் காடுகளிலும் ‘ஃபாரஸ்ட் பிரதர்ஸ்’ என்ற கிளர்ச்சிக் குழுவினர் 1950களின் ஆரம்பம் வரை கொரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள். கடைசியாக அறியப்பட்ட லிதுவேனியப் போராளியான ஸ்டாசிஸ் குய்கா ஒருபோதும் ஆயுதங்களைக் கீழே போடவில்லை. மாறாக, 1986இல் நோய்வாய்ப்பட்டு இறக்கும் வரை அவர் சோவியத் படைகளிடம் சிக்காமல் தலைமறைவாகவே வாழ்ந்தார்.
கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் ஒரு குறிப்பிட்ட ப்ளூபிரிண்ட் திரும்பத் திரும்பச் செயல்பட்டதை வரலாற்று ஆய்வாளர் ஆன் ஆப்பிள்பாம் ஆவணப்படுத்தியுள்ளார். இது ஏதோ தற்செயலாக நடந்ததல்ல, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்கிறார். செஞ்சேனையின் புகழைப் பயன்படுத்துவது, பெயரளவு பதவிகளில் ஜனநாயகவாதிகளை உட்கார வைத்துவிட்டு, உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களில் கம்யூனிஸ்டுகளை நியமிப்பது, கைதுகள் மற்றும் தேர்தல் தில்லுமுல்லுகள் மூலம் எதிர்க்கட்சிகளை ஒழிப்பது, கடைசியில் ஒற்றைக் கட்சி ஆட்சியை நிறுவுவது ஆகியவை மேற்கொள்ளப்பட்டன என்கிறார்.
ருமேனியாவில் இது அசுர வேகத்தில் நடந்தது. 1945 பிப்ரவரியில் ருமேனியாவின் தலைநகரான புகாரெஸ்ட் வந்த சோவியத் துணை வெளியுறவு அமைச்சர் விஷின்ஸ்கி, கம்யூனிஸ்ட் அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசரின் அறைக்கதவை அவர் எவ்வளவு வேகமாகச் சாத்தினார் என்றால், சுவரிலிருந்த பிளாஸ்டர் பெயர்ந்து விழுந்தது. 1947 டிசம்பரில் அரண்மனைக்கு அழைக்கப்பட்ட மன்னர் மைக்கேல் (ருமேனியாவின் கடைசி மன்னராக இருந்தவர்), பதவி விலகாவிட்டால் ஒட்டுமொத்த மக்களும் கைது செய்யப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டார். இதையடுத்து மைக்கேல் மதியமே ராஜினாமா செய்தார். அன்று மாலையே ருமேனியா மக்கள் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
பல்கேரியாவோ இன்னும் வேகம் காட்டியது. 1945 பிப்ரவரி முதல் தேதியில் மட்டும் 1000 அரசியல் கைதிகள் தூக்கிலிடப்பட்டார்கள். ஜனநாயகத்தின் கடைசிக் குரலாக இருந்த விவசாய சங்கத்தின் தலைவர் நிகோலா பெட்கோவ், 1947 செப்டம்பரில் தூக்கிலிடப்பட்டார். சோவியத் ஆதரவு பல்கேரியாவில் தேர்தல் அரசியல் என்பது மரணத்தை விலைபேசும் ஒரு தொழில் என்பதை இது உணர்த்தியது.
ஹங்கேரியில் ஒரு சிறிய சிக்கல் எழுந்தது. அங்கு நடந்த தேர்தலில் சிறு விவசாயிகள் கட்சி 57% வாக்குகளை வென்றது. கம்யூனிஸ்ட் தலைவர் மத்தியாஸ் ராகோசி இதற்கு ஒரு தந்திரத்தைக் கையாண்டார். அதற்குப் பெயர் ‘சலாமி தந்திரம்’ (salami tactics). எதிரிகளை மொத்தமாக அழிக்காமல், ஒரு சலாமியை மெல்லிய துண்டுகளாக வெட்டுவதுபோல கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சாய்ப்பது. இதனால் ஜனநாயக அரசியல் முற்றிலுமாக உள்ளீடற்றுப்போனது. 1947இல் வெளிநாட்டுச் சுற்றுலா சென்ற பிரதமர் ஃபெரென்க் நாகி, திரும்ப வந்தால் கைது செய்யப்படுவார் என்று மிரட்டப்பட்டார். எந்தச் சமரசத்துக்கும் உடன்படாத கார்டினல் மைண்ட்சென்டி என்ற மதகுரு, சித்திரவதை செய்யப்பட்டு போதைமருந்து ஏற்றப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் வாக்குமூலம் அளித்த இயந்திரத்தனமான தொனியிலேயே அந்தச் சித்திரவதை அப்பட்டமாகத் தெரிந்தது.
சோவியத் பிடிக்குள் விழுந்த நாடுகளிலேயே மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது செக்கோஸ்லோவாக்கியாதான். இரண்டு உலகப்போர்களுக்கும் இடையே மத்திய ஐரோப்பாவில் இயங்கிவந்த ஒரே ஜனநாயக நாடு அது. 1946இல் சுதந்திரமாக நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி 38% மக்களின் வாக்குகளை வென்றது. ஆனால் 1948 பிப்ரவரியில் புதிய தேர்தலை எதிர்பார்த்து கம்யூனிஸ்ட் அல்லாத அமைச்சர்கள் ராஜினாமா செய்தபோது, நிலைமை தலைகீழானது. கம்யூனிஸ்ட் செயல்பாட்டுக் குழுக்கள் முக்கிய அமைச்சகங்களையும் தகவல் தொடர்பு நிலையங்களையும் ஆக்கிரமித்தன. அதிபர் பெனஸ் (செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் அதிபராக இருந்தவர்) முன் இரண்டு வழிகள்தான் இருந்தன: ஒன்று, எதிர்த்துப் போராடி சோவியத் ராணுவத் தலையீட்டை வரவேற்பது; அல்லது சரணடைவது.
அவர் சரணடைந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான காட்வால்ட் தலைமையில் கம்யூனிஸ்ட் அரசு அமைக்கப்பட்டது. மார்ச் 10ஆம் தேதி, குடியரசை உருவாக்கியவரின் மகனும் வெளியுறவு அமைச்சருமான ஜான் மாசரிக்கின் சடலம் செர்னின் அரண்மனை முற்றத்தில் கண்டெடுக்கப்பட்டது. அரசாங்கம் அது தற்கொலை என்றது. ஆனால் ஜன்னலில் இருந்த தடயங்கள் வேறு கதையைச் சொல்லின. புதிய கம்யூனிஸ்ட் அரசியலமைப்பில் கையெழுத்திட மறுத்த பெனஸ், ஜூனில் ராஜினாமா செய்து செப்டம்பரில் இறந்துபோனார்.
உருவாகிக்கொண்டிருந்த இந்தப் புதிய யதார்த்தத்திற்கு ‘இரும்புத்திரை’ என்ற பெயரைச் சூட்டியது சர்ச்சில்தான். 1946 மார்ச் 5ஆம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரூமனும் மேடையில் இருக்க, சர்ச்சில் அந்தத் தீர்க்கதரிசனமான வார்த்தைகளை உதிர்த்தார்: ‘பால்டிக் கடலின் ஸ்டெட்டினில் இருந்து அட்ரியாட்டிக் கடலின் ட்ரைஸ்டே வரை, ஐரோப்பாவின் குறுக்கே ஓர் இரும்புத்திரை இறங்கியிருக்கிறது.’ சோவியத் அரசு இதற்கு அளித்த பதிலடி, அந்தத் திரையின் இருப்பை மறுக்கவில்லை. மாறாக, தங்கள் மீது சொல்லப்பட்ட பழியை மட்டுமே தவிர்த்தது. அந்தத் தவிர்ப்பே சர்ச்சிலின் உருவகம் எவ்வளவு துல்லியமானது என்பதைக் காட்டியது.
ஜெர்மனியில் நடந்ததைப்போலப் பிரிவினை வேறு எங்கும் இவ்வளவு ஆழமாகப் பதியவில்லை. சோவியத் கட்டுப்பாட்டிலிருந்த ஜெர்மன் பகுதியில், போர் இழப்பீடாகச் சுமார் 3,300 கோடி ரூபாய் மதிப்பிலான (அன்றைய மதிப்பில்) தொழிற்சாலை இயந்திரங்கள் கழற்றிச் செல்லப்பட்டன. ஆனால், மேற்கத்தியக் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில், 1948 ஜூன் 19ஆம் தேதி கொண்டுவரப்பட்ட நாணயச் சீர்திருத்தம், நாஜி போர்ப் பொருளாதாரத்தால் ஏற்பட்ட பணவீக்கத்தை ஒரே அடியில் சரிசெய்தது. இதற்குப் பதிலடியாக ஸ்டாலின் பெர்லினுக்குச் செல்லும் நிலப்பாதைகளை முடக்கினார். அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இதற்கு எப்படிப் பதிலடி கொடுத்தார்கள் தெரியுமா? 488 நாட்களுக்கு ஆகாய மார்க்கமாகவே பொருட்களை அனுப்பினார்கள். விமானப் போக்குவரத்து உச்சத்தில் இருந்தபோது, ஒவ்வொரு 90 விநாடிகளுக்கும் ஒரு விமானம் தரையிறங்கியது. 1949 மே 23இல் மேற்கு ஜெர்மனி உருவானது; அக்டோபர் 7இல் கிழக்கு ஜெர்மனி பிரகடனப்படுத்தப்பட்டது.
அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இந்த இரு துருவப் பிரிவினைக்கு அடிபணியவில்லை. ஆஸ்திரியா, ஜெர்மனியின் விதியிலிருந்து சாதுரியமாகத் தப்பியது. 1955 மே மாதம் கையெழுத்தான அரசு உடன்படிக்கையின் மூலம், அந்த நாடு தனது சுதந்திரத்தையும் நிரந்தர நடுநிலையையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. பின்லாந்து, சோவியத் யூனியனின் அருகாமையிலேயே இருந்தாலும் தனது நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இந்த நிலையைத்தான் மேற்கத்திய ஆய்வாளர்கள் ‘பின்லாந்துமயமாக்கல்’ (Finlandisation) என்றார்கள். யூகோஸ்லாவியாவின் கதை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. டிட்டோவின் படைகள் தங்கள் சொந்த பலத்தாலேயே ஆட்சியைக் கைப்பற்றியிருந்தன. 1948 ஜூனில் ஸ்டாலினின் மிரட்டல் கடிதம் வந்தபோது, டிட்டோ சரணடையவில்லை; பதிலடி கொடுத்தார். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார உதவியும், சோவியத் ஆத்திரமூட்டல்களை அதே துணிச்சலோடு எதிர்கொள்ளும் அவரது மனநிலையுமே அந்தத் திமிரைக் கொடுத்தது.
யார் இந்த டிட்டோ? இது இன்றைய தலைமுறை வாசகர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தரலாம். இவரது உண்மையான பெயர் ஜோசப் ப்ரோஸ். 2ஆம் உலகப்போரின்போது நாஜி படைகளுக்கு எதிராக ஐரோப்பாவிலேயே மிகக் கடுமையான கொரில்லாப் போரைத் தலைமையேற்று நடத்தியவர் இவர்தான். தன் நாட்டை நாஜிகளிடமிருந்து மீட்க சோவியத் செஞ்சேனை வரும் என்று அவர் காத்திருக்கவில்லை. தன் சொந்த மக்களையே படையாக மாற்றி நாட்டை மீட்டெடுத்தார். அதனால் ஸ்டாலினைக் கண்டு அவருக்கு எந்தப் பயமும் இல்லை. பின்னாளில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் என இரு வல்லரசுகளின் அதிகாரப் பிடியிலும் சிக்காமல், இந்தியாவின் நேரு மற்றும் எகிப்தின் நாசர் ஆகியோருடன் இணைந்து அணிசேரா இயக்கத்தை உருவாக்கினார்.
பனிப்போரில் மேற்கத்திய நாடுகளுக்குச் சவாலாக அமைந்தது கிரீஸ்தான். 1947 மார்ச்சில் அறிவிக்கப்பட்ட ட்ரூமன் கோட்பாடு, கிரீஸ் மற்றும் துருக்கியில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிகளை ஒடுக்க சுமார் 132 கோடி ரூபாயை ஒதுக்கியது. இது ட்ரூமனின் பெயரைக் காலத்திற்கும் நிலைநிறுத்தியது. 1948இல் நடந்த இத்தாலியத் தேர்தல், வாஷிங்டனால் ஒரு உலகளாவிய வாக்கெடுப்பாகவே பார்க்கப்பட்டது. சிஐஏ நிதியை கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்கு ரகசியமாக வழங்கி, அவர்கள் 48% வாக்குகளைப் பெற்று வெற்றிபெற அமெரிக்கா உதவியது. கம்யூனிஸ்ட் சோசலிஸ்ட் கூட்டணி 31% சுருண்டது. 1947 ஜூனில் ஹார்வர்டில் பேசிய ஜார்ஜ் மார்ஷல், சுமார் 4,290 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்கப் பொருளாதார உதவித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் (Marshall Plan).
ஜார்ஜ் மார்ஷல், 2ஆம் உலகப்போரின்போது அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றி மாபெரும் வெற்றிகளைத் தேடித்தந்தவர். பின்னாளில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக உயர்ந்தவர். ராணுவத்தின் துப்பாக்கிகளைவிட, பசிக்குக் கொடுக்கும் ரொட்டியும் பொருளாதார முன்னேற்றமும்தான் கம்யூனிசத்தைத் தடுக்கும் மிகச்சிறந்த ஆயுதங்கள் என்று அவர் ஆழமாக நம்பினார்.
செக்கோஸ்லோவாக்கியா இதில் சேர விருப்பம் தெரிவித்ததும், உடனடியாக மாஸ்கோவுக்கு அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டது. இவ்வாறு கிழக்குக்கும் மேற்குக்குமான பிளவு, அரசியல் நிலவியலில் மட்டுமல்ல பொருளாதாரப் புவியியலிலும் மிகக் கூர்மையாக வரையப்பட்டது.
1949 வாக்கில், ஐரோப்பாவின் இந்தப் பிரிவினை ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட நிரந்தர வடிவத்தை எட்டியிருந்தது. இதையெல்லாம் திட்டமிட்டவர்கள், கொஞ்சம் நேர்மையாகச் சிந்தித்திருந்தால், தங்கள் பேரங்களின் விளைவு இதுவாகத்தான் இருக்கும் என்பதை ஆரம்பத்திலேயே கணித்திருக்க முடியும். நாஜி ஆக்கிரமிப்பையும் சோவியத் ‘விடுதலையையும்’ தாங்கிய கிழக்கு ஐரோப்பிய மக்கள், கவர்ச்சிகரமான பேச்சுகளைவிட யதார்த்தம் எவ்வளவு கொடூரமானது என்பதை உணர்ந்தார்கள். இரும்புத்திரைக்குப் பின்னால் வாழ்ந்தவர்களுக்கு அதன் கொடூரத்தைப் புரியவைக்க எந்த உருவகமும் தேவைப்படவில்லை. மறுபக்கம், அமெரிக்காவின் தாராளமான உதவியாலும், தங்களின் கடின உழைப்பாலும் ஜனநாயக ஆட்சியை மீட்டெடுத்த மேற்கு ஐரோப்பிய மக்கள், கிழக்கே திரும்பிப் பார்த்தார்கள். அது வெறும் ராணுவப் பிரிவினையாக அல்லாமல் ஒரு நாகரிகத்தின் எல்லையாகவே உறைந்துபோயிருந்தது. அடுத்த 40 வருடங்களுக்கு அந்த எல்லைக்கோடு அசையப்போவதில்லை. அதுவும் அந்த இரும்புத்திரையை உருவாக்கிய அமைப்பு தனக்குள்ளேயே சரிந்து விழும்போதுதான் அந்தச் சுவர் இடியும் என்பது அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
(தொடரும்)

