மே 4-ம் தேதி தொலைக்காட்சியில் பார்க்கும்வரை விஜயுடைய தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் ஒற்றைப் பெரிய கட்சியாக வெற்றிபெறும் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை.
‘ஜென் ஸீ’யுடன் தொடர்பில் இல்லாத ‘பூமர் அங்கிள்’ என்று நினைத்துவிட்டுப் போங்கள். தவறில்லை. ஓரளவுக்கு அரசியலை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தாலும் அடித்தளத்தில் விஜய்க்குப் பொங்கி எழுந்த ஆதரவு என்னை மலைக்க வைத்துள்ளது.
கட்டமைப்பே இல்லாமல், பிரசார யுக்திகள் பற்றிக் கவலைப்படாமல், உள்ளூர் பலசாலிகளின் துணை இல்லாமல் ஒவ்வொரு தொகுதியாக வெற்றி கண்டிருக்கிறார். திமுக, அதிமுக இரண்டுமே அடித்துத் துவைக்கப்பட்டிருக்கின்றன. அடித்த புயலில் நாம் தமிழர் கட்சி காணவே காணோம். திமுக, அதிமுக இரண்டின் கூட்டணிக் கட்சிகளும் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியடையவில்லை.
மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால், மு.க. ஸ்டாலின், அவருடைய கொளத்தூர் தொகுதியிலேயே தோற்றுப்போனதுதான். பழைய அரசியல் பொடிப்பொடியாகிவிட்டது என்பதை இந்தத் தோல்விதான் எனக்கு உணர்த்தியது.
பொதுவாக அலை இல்லாத் தேர்தலில், இரு தரப்பிலுமே முக்கியமான தலைவர்கள் அனைவரும் ஜெயித்துவிடுவார்கள். ஒருவித மேட்ச் பிக்சிங்தான் நடக்கும். ஓர் உள்ளூர் பலசாளிக்கு எதிராக, எதிர்த்தரப்பு ஒரு நோஞ்சானைத்தான் நிறுத்தும். எங்கோ ஒருசில இடங்களில் மட்டும்தான் இரு தரப்புமே வலுவாக இருந்து, யார் வெல்வார்கள் என்பதையே சொல்ல முடியாமல் இருக்கும். தேர்தலில் மாபெரும் எதிர்-அலை இருந்தால் ஜெயலலிதாவே தோற்றுப்போகக்கூடும்.
ஆனால் இந்தத் தேர்தலில் கொஞ்சமே கொஞ்சமாக அலை அடித்துள்ளது. அது ஸ்டாலின் முதல் பல அமைச்சர்களைப் பதம் பார்த்துள்ளது. ஆனாலும் விஜய்க்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால்தான் ‘பாஜக உள்ள வந்துரும்’ எனும் கோட்பாட்டின்படி, முதலில் காங்கிரஸும் (5), பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகளும் (2+2), கடைசியாக விடுதலைச் சிறுத்தைகளும் (2) தமிழக வெற்றிக் கழகத்துக்கு (108-1) நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்திருக்கிறார்கள். விஜய் முதல்வர் ஆகிறார்.
0
தவெக ஆட்சியிலிருந்து எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. திமுக, அதிமுக இரண்டுமே சமூக நலம், சமூக நீதி என்ற பெயரால் அரசுப் பணத்தை அள்ளி வாரி இறைப்பவர்கள். இருவருமே கொடூரமான ஊழலைப் பின்பற்றுபவர்கள். பல்லாயிரம் கோடிக் கணக்கில் பணத்தைச் சுருட்டுபவர்கள். இடையிடையே சென்னையைச் சிங்கப்பூர் ஆக்குவேன் என்று கப்ஸா விடுவார்கள்.
ஆனாலும் இத்தனைப் பிரச்னைகளையும்மீறி தமிழகம் சிறப்பான வளர்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மக்களின் தொழில்முனைவு மட்டுமே. அது விஜயின் ஆட்சியிலும் தொடரும் என்றே நினைக்கிறேன். ஊழல் இருக்குமா என்று இப்போது சொல்ல முடியாது. அரசுப் பணம் அள்ளி வீசப்படுமா என்றால் நிச்சயமாக. திமுக, அதிமுக செலவு செய்ததைவிட அதிகமாக. அதனால் மக்களின் வாழ்க்கையில் பெரும் மேம்பாடு வருமா என்பதுதான் சிக்கலே.
பொதுவாக தனி நபர்களின் வாழ்க்கையில் மேம்பாடு என்பது கீழ்க்கண்ட சில இடங்களிலிருந்து வருவதாக நான் பார்க்கிறேன்.
(1) அடிப்படைக் கட்டுமானம். வீடுகளுக்குத் தடையில்லா மின்சாரம், குழாயில் 24×7 தரமான நீர், வண்டிகள் செல்லச் சீரான சாலைகள், மக்கள் நடந்துசெல்லத் தரமான நடைபாதைகள், பொதுப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு இல்லாது இருத்தல், பொதுப்போக்குவரத்து, சாலை விளக்குகள், பூங்காக்கள், நூலகங்கள், இப்படி…
இவற்றில் பல உள்ளாட்சியின்கீழ் வரும். உள்ளாட்சிகள் இவற்றைச் செய்யவேண்டுமானால் அவற்றுக்கு சரியான நிதியை மாநில அரசு வழங்கவேண்டும். உள்ளாட்சிகளைச் சரியானபடி வழி நடத்தவும் வேண்டும். சென்னையின் தேவை வேறு, நாகப்பட்டினத்தின் தேவை வேறு, ஶ்ரீரங்கத்தின் தேவை வேறு, கோடாலிக் கருப்பூரின் தேவை வேறு. அவற்றை உணர்ந்து ஒவ்வொரு உள்ளாட்சியும் சரியான திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்திப் பராமரிக்கவேண்டும். மாநில அரசு, மீதமுள்ளவற்றைச் சிறப்பாகச் செய்யவேண்டும்.
வளர்ந்த நாடுகள் அனைத்தும் சிறப்பாக இருப்பது இந்தக் கட்டுமானத்தில்தான். கடந்த சில தினங்களாக லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, ஹூஸ்டன் போன்ற அமெரிக்க நகரங்களில் சுற்றிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் மேலே சொன்ன அனைத்துக் கட்டுமானங்களையும் பார்க்க முடிகிறது.
(2) சட்டம், ஒழுங்கு. குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பது, நடந்தால், குற்றவாளிகளை விரைந்து பிடித்து, சரியான தண்டனை பெற்றுத் தருவது. தனிப்பட்ட சில குற்றங்களைத் தடுக்கவே முடியாது என்றாலும், குற்றம் நடந்தபின் எப்படிக் காவல்துறை நடந்துகொள்கிறது என்பதுதான் முக்கியத்துவம் பெறுகிறது.
(3) கல்வி, ஆராய்ச்சி. முதல் இரண்டுபோல் அல்லாமல் இங்கே தனியாரும் இந்தச் சேவையைத் தர முடியும். அரசு, தனியார், அரசு நிதியுதவியுடன் நடக்கும் தனியார் என்று அனைத்துமே, மாநில மக்கள் அனைவருக்கும் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.
(4) வேலை வாய்ப்பு, பொருளாதாரம். இங்கு அரசு ஒரு facilitator மட்டுமே. பொதுமக்களே பொருளாதாரத்தைக் கட்டமைக்கிறார்கள். வரியை வசூல் செய்து, செலவுகளை ஒழுங்காகச் செய்து, சேவையைத் தரவேண்டிய வேலை மட்டும்தான் ஓர் அரசு செய்யவேண்டியது. பொருளாதார வளர்ச்சியை ஓர் அரசு விரைவுபடுத்தலாம். ஆனால் மக்களுடைய பங்கேற்பு இல்லாமல் இது சாத்தியமாகாது. நான் எதிர்பார்ப்பது, அரசு குட்டிக்கரணம் அடித்து தமிழகத்துக்குப் பெரு முதலாளிகளை அழைத்துவரவேண்டும் என்பதல்ல. வருவோரை விரட்டி அடிக்காமல் இருந்தாலேயே போதும்!
(5) மேலே சொன்னவற்றோடு எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் நாம் தமிழகத்தில் இருக்கிறோம் அல்லவா, எனவே ‘சமூக நீதி’ என்று சொல்லாவிட்டால் பெரியாரின் ஆவி நம்மைச் சும்மா விடாது!
இதுவரை இருந்த, இப்போது இருக்கும் உள்ளாட்சி, மாநில அரசுகள் கட்டுமானத்தை உலகத் தரத்தில் நமக்குக் கொடுத்ததே இல்லை. அதை உடனடியாக யாரும் சாதிக்க முடியாது என்றாலும் மனத்தளவிலாவது அதனைச் செய்து தரவேண்டும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அது ஒன்றுமட்டுமே என்பதனை அரசியல்வாதிகள் அதிகம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பேருந்து இலவசம் என்று பேசும் யாருமே, சென்னை போன்ற நெரிசல் மிக்க மாநகரில் தரமான சேவையைத் தர எத்தனைப் பேருந்துகளை விடவேண்டும் என்னும் ஆராய்ச்சியைச் செய்வதில்லை. திட்டமிடுதலே இல்லாமல் ‘ஏதோ முடிந்தது இவ்வளவுதான், வைத்துக்கொள்’ என்று போய்விடுகிறார்கள்.
சட்டம் ஒழுங்கில், உண்மையில், அமெரிக்க நகரங்களைவிடச் சிறப்பாக நம்மால் சாதிக்க முடியும். கட்டுமானம் அளவுக்கு இது கடினமல்ல. Intent – இது ஒன்றுதான் நம்மிடம் இல்லாமல் இருக்கிறது.
பொருளாதாரத்தைப் பொருத்தமட்டில் ஒரு மாநில அரசு, அதன் நிதிநிலையை இழுத்துப் பிடித்து, ஊழல்கள் செய்து கொள்ளையடிக்காமல், வீண் செலவுகளைக் குறைத்தாலே போதுமானது.
ஆளுக்கு, மாதத்துக்கு 1000, 2000 என்று கொடுப்பது சிந்திக்க எளிதாக இருக்கலாம். லாப்டாப் வைத்துக்கொள், தங்கத் தாலி வைத்துக்கொள் என்றெல்லாம் எளிதில் சொல்லிவிடலாம். ஆனால் அவற்றைச் சாத்தியமாக்க, எங்கிருந்தோ பணத்தைச் சம்பாதிக்கவேண்டும். அதற்கு சாராயக் கடைகளை நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தேவைப்படுகிறது. மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று அதன்மீது பழிபோட வேண்டியிருக்கிறது.
ஏற்கெனவே நாம் ‘freebies’ கலாசாரத்துக்குள் வந்துவிட்டோம். நான் இலவசம் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன சீமான் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழந்துள்ளது. விஜயும் இலவசங்களை அள்ளித் தருவேன் என்று சொல்லிதான் வெற்றி பெற்றுள்ளார். அவற்றிலிருந்து பின்வாங்க முடியாது.
அதனால்தான் எனக்கு இந்த ஆட்சியின்மீது பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. எனவே எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி, அவருடைய ஆட்சி சிறக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.
0

