பண்டைய காலத்தில் பரவலாகக் காணப்பட்ட ஒரு கொடிய வழக்கம், ‘சதி’ என்னும் ‘உடன்கட்டை ஏறுதல்’. கணவன் இறந்தபின் பிரிவின் துக்கம் தாளாமல், தானாக விருப்பப்பட்டு கணவனின் உடல் எரியும் சிதையில் மனைவி புகுந்து உயிரை மாய்த்துக்கொண்ட செயலை, காலப்போக்கில் இந்தச் சமுதாயம் வழக்கமாக்கியது. இந்த வழக்கம் பின்னாளில் சடங்காக மாற்றப்பட்டது.
உடன்கட்டை ஏறும் முறை இந்தியாவில் தோன்றியதுபோல் இருந்தாலும், உலகளவில் பல நாகரிகங்களில் காணப்பட்ட நடைமுறையாக இருந்துள்ளது. ரஷ்யா, தென்கிழக்கு ஐரோப்பா, பசிஃபிக் தீவுகள் போன்ற இடங்களில் பண்டைய காலத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் காணப்பட்டாலும், இந்தியாவில் மட்டுமே நீண்டகாலமாக இவ்வழக்கம் கட்டாயச் சடங்காகப் பின்பற்றப்பட்டுள்ளது.
கணவன் இறப்புக்குப் பிறகு மனைவி உடன்கட்டை ஏறுவது சிறந்த கற்பின் நெறியாகக் கருதப்பட்டது. இது முழுக்க முழுக்க பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மூட சடங்காகும். காலத்தின் ஓட்டத்தில் நம் சமூகம் பல மாற்றங்களைச் சந்தித்தது. அந்த வகையில், ராஜாராம் மோகன் ராய் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் சீரிய முயற்சியால் இந்தியாவில் உடன்கட்டை ஏறும் வழக்கம் 1829இல் தடை செய்யப்பட்டது. இருப்பினும் 1987ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் ரூப் கன்வர் என்கிற பெண்ணின் உடன்கட்டை நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அதே ஆண்டில் ‘சதி தடுப்புச் சட்டத்தை’ மத்திய அரசு இயற்றியது. அதன்பின்னர் இத்தகைய சம்பவங்கள் அரிதிலும் அரிதாகிவிட்டன. இந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தின் தோற்றம் குறித்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் ஒரு செவிவழிக் கதை கூறப்படுகிறது.
மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்குக்கு வடக்கே சில மைல் தொலைவில், இயற்கை வளம் மிக்க ரைடாங் மலைப்பகுதி உள்ளது. இங்கு மன்னராட்சி நடைபெற்ற காலகட்டத்தில் ஒருமுறை, சியெம் என்கிற மன்னர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். இவர், லியாங் மகாவ் என்கிற அழகிய இளம்பெண்ணை மணந்து தன்னுடைய ராணியாக்கினார். ஒருமுறை, அரச காரியங்களுக்காகத் தனது ஆட்சிக்கு உட்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்குச் சியெம் பயணித்தார். இதனால் நீண்டகாலம் தனது குடும்பத்தை விட்டு அவர் பிரிய நேர்ந்தது.
இந்தக் காலகட்டத்தில் சியெமின் குடும்பத்தையும் அரசு நிர்வாகத்தையும் அவரது நம்பிக்கைக்குரிய நபர்கள் கவனித்துக்கொண்டார்கள். ஆனால் சியெம் இல்லாமல் அவரது மனைவி லியாங் மகாவ் தனிமையில் வாடினார். அப்படி ஒருநாள் இரவு அரண்மனையில் சோகத்துடன் அமர்ந்திருந்த அவருடைய செவிகளில் இனிமையான புல்லாங்குழல் இசை கேட்டது. அப்புல்லாங்குழல் இசை லியாங்கின் தனிமைக்குத் துணையாக இருக்கவே, ஒவ்வொரு நாள் இரவும் அதைக் கேட்பதை அவர் பழக்கமாக்கிக்கொண்டார். நாட்கள் செல்லச் செல்ல, அந்த இனிமையான இசைக்கு உரிய நபரைக் கண்டறிய லியாங் ஆவல்கொண்டார்.
ஒரு நாள் இரவு வழக்கம்போல் புல்லாங்குழல் இசை கேட்கத் தொடங்கியதும் அதைப் பின்பற்றிச் சென்ற லியாங், அந்த இசை ஒலிக்கும் வீட்டைக் கண்டறிந்தார். ஊரிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அந்த வீட்டில், ஓர் அழகிய இளைஞன் தன்னை மறந்து புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான். அந்த இளைஞனைக் கண்டதும் லியாங் மனதில் குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில், அந்த ஊரில் அழுக்கு உடையுடனும் சித்தம் கலங்கிய நிலையிலும் தினமும் பிச்சை எடுத்துவந்த மாணிக் ரைடாங் என்பவன்தான், அப்போது தூய உடையுடனும் தெளிவான சிந்தனையுடனும் புல்லாங்குழல் இசைத்துக்கொண்டிருந்தான். குழப்பம் ஏற்பட்டாலும் இசையைக் கேட்டுவிட்டு அன்று இரவு அரண்மனைக்குத் திரும்பினார் லியாங்.
அதன் பின் தினமும் அந்த வீட்டிற்குச் அருகே சென்று மறைவாக இருந்தபடி ரைடாங்கின் இசையைக் கேட்டு ரசிக்கத் தொடங்கினார் லியாங். நாட்கள் செல்லச் செல்ல ரைடாங் மீது தனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்படுவதை அவர் உணர்ந்தார். வழக்கம்போல் ஒருநாள் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்த ரைடாங்குக்கு முன்பு சென்று நின்றார் லியாங். பகலில் பிச்சைக்காரனாகவும் இரவில் இசைக்கலைஞனாகவும் இருப்பதற்கான காரணத்தை அவனிடம் அவர் கேட்டார். அதற்கு, தன்னுடைய உறவினர்கள் அனைவரும் இறந்துவிட்டதால் அவர்களது நினைவாகப் பகலில் பிச்சை எடுத்து உண்பதை ஒரு நோன்பாகக் கடைப்பிடிப்பதாகவும் இரவில் தனக்குப் பிடித்ததுபோல் இருப்பதாகவும் ரைடாங் பதிலளித்தான்.
அதன்பிறகு, யாருக்கும் தெரியாமல் ரைடாங்கின் வீட்டுக்குத் தினமும் சென்று அவனது புல்லாங்குழல் இசையைக் கேட்டு மகிழ்ந்தார் லியாங். ஆரம்பத்தில் லியாங் தன் வீட்டுக்கு இரவு நேரத்தில் வருவதைக் கண்டு பயம் கொண்டாலும், பின்னாட்களில் அவரது வருகையை ரைடாங் விரும்பத் தொடங்கினான். காலப்போக்கில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து, ஒரு கட்டத்தில் ரைடாங்கின் குழந்தையை லியாங் சுமக்கத் தொடங்கினார். ஒருநாள் லியாங்குக்கு குழந்தை பிறந்தது. அடுத்த ஓரிரு நாட்களில் மன்னர் சியெம் அரண்மனைக்குத் திரும்பினார். தன்னுடைய மனைவிக்குக் குழந்தை பிறந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
குழந்தையின் தந்தை குறித்துச் சியெம் பலமுறை கேட்டும், பதில் ஏதும் கூறாமல் கண்ணீர் வடித்தார் லியாங். இதனால் கடுங்கோபம்கொண்ட சியெம், தன் மனைவியை வீட்டுக்காவலில் வைத்தார். குழந்தையின் தந்தையைக் கண்டறியும் நோக்கில் ஊரில் உள்ள அனைத்து ஆண்களையும் அங்கு வரச்செய்த சியெம், அழும் குழந்தைக்கு வாழைப்பழத்தைக் கொடுக்குமாறு அவர்களிடம் கூறினார்.
அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தை, தன் தந்தையின் கையால் மட்டுமே பழத்தை வாங்கிக்கொள்ளும் என்பது அவ்வூரில் இருந்த நம்பிக்கை. அங்கிருந்த ஆண்கள் ஒவ்வொருவராகக் குழந்தையிடம் வாழைப்பழத்தைக் கொடுக்க முயன்றார்கள். ஆனால் யாரிடமிருந்தும் வாழைப்பழத்தை வாங்கிக்கொள்ளாமல் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. அதைக் கண்டு ஊர் மக்கள் திகைத்துப்போனார்கள்.
உடனே ‘ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் வந்தாயிற்றா?’ எனச் சியெம் விசாரித்தார். அப்போதுதான் மாணிக் ரைடாங் அங்கு வரவில்லை என்பது தெரிந்தது.
ரைடாங்கின் பெயரைக் கேட்டதும், ‘அந்தப் பைத்தியக்காரனா?’ என்றபடி மக்கள் கேலியாகச் சிரித்தார்கள். அவ்வூர் மக்கள் ரைடாங்கை ஒரு மனிதனாகவே கருதவில்லை என்பதால் அவனை ஆண்களின் எண்ணிக்கையில் சேர்க்கவில்லை.
இருப்பினும் காவலர்களை அனுப்பி ரைடாங்கை அழைத்து வரச்செய்த சியெம், அவனை அக்குழந்தைக்கு வாழைப்பழத்தை அளிக்கச் செய்தார். தனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்துகொண்ட ரைடாங், தன் குழந்தையிடம் வாஞ்சையோடு வாழைப்பழத்தை நீட்டினான். ரைடாங் அளித்த வாழைப்பழத்தைப் புன்னகையுடன் குழந்தை வாங்கிக்கொண்டது.
அதைக் கண்ட சியெம், தன் மனைவியைக் கர்ப்பமாக்கியது ஒரு பிச்சைக்காரன் என்பதை உணர்ந்து பேரதிர்ச்சிகொண்டார். இதனால் கோபமடைந்த அவர், எரியும் நெருப்பில் ரைடாங்கை உயிருடன் தள்ள உத்தரவிட்டார். அவரது உத்தரவை வேதனையுடன் தலைவணங்கி ஏற்றுக்கொண்ட ரைடாங், தானே நெருப்பில் குதிப்பதாகக் கூறி அதற்குச் சிறிது அவகாசம் அளிக்கும்படி வேண்டினான்.
அதற்குச் சியெம் சம்மதம் தெரிவிக்கவே, தன்னுடைய வீட்டுக்குச் சென்ற ரைடாங், குளித்து முடித்துப் புத்தாடை அணிந்துகொண்டான். தனக்கு விருப்பமான புல்லாங்குழலை எடுத்து, உயிரை உருக்கும் சோகமான இசையை வாசித்தவாறே எரியும் சிதையை நோக்கி வந்தான். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த லியாங், அந்த சோகமான இசையைக் கேட்டு நடந்ததை ஒருவாறு புரிந்துகொண்டார். உடனே, வெளியே காவல் இருப்பவர்களுக்குச் சந்தேகம் வராத வண்ணம் தனது கொலுசுகளைக் கழட்டி ஒரு பூனைக்குக் கட்டினார் லியாங். அதன்மூலம் அறைக்குள் தான் நடமாடுவது போன்ற பிரம்மையைத் தோற்றுவித்துவிட்டு, அங்கிருந்து தப்பினார்.
போர்வையில் தனது முகத்தை மறைத்தபடி மக்கள் கூடியிருந்த இடத்துக்கு வந்த லியாங், அவர்களுக்கு நடுவே எரிந்துகொண்டிருந்த சிதையைக் கண்ணீருடன் வலம் வந்துகொண்டிருந்த ரைடாங்கை கண்டார். ரைடாங்கின் புல்லாங்குழல் இசையால் அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒருவிதமான மயக்க நிலையில் இருந்தார்கள். இதனால் அவர்கள் யாரும் லியாங்கை கவனிக்கவில்லை. மூன்று முறை சிதையை வலம் வந்ததும், தன் கையில் இருந்த புல்லாங்குழலைத் தரையில் ஊன்றிவிட்டு எரியும் நெருப்புக்குள் புகுந்தார் ரைடாங். அதைத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்ட லியாங், ஆட்களை விலக்கியவாறு கூட்டத்துக்கள் நுழைந்து சற்றும் தாமதிக்காமல் எரிந்துகொண்டிருந்த சிதைக்குள் குதித்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த அச்செயலைக் கண்ட அங்கிருந்த மக்களை சோகம் ஆட்கொண்டது. மனைவியின் காதலின் வலிமையை எண்ணி நெகிழ்ந்துபோன சியெம், தன்னுடைய செயலுக்காக வருந்தினார். ரைடாங் நினைவாக அப்பகுதி ‘ரைடாங் மலை’ எனப் பெயர் பெற்றது. அன்று அவர் தரையில் ஊன்றிய புல்லாங்குழலில் இருந்து கீழ்நோக்கிய நிலையில் மூங்கில் செடி வளர்ந்தது. இன்றும் ரைடாங் மலைப்பகுதியில் ஆங்காங்கே கீழ்நோக்கி வளர்ந்த மூங்கில் செடிகளைக் காணலாம்.
லியாங் மகாவ்வின் காதலும் அவரது உயிர்த் தியாகமும் பல ஊர்கள் தாண்டிப் பேசப்பட்டது. அதைக் கேட்ட பெண்கள் பலர், தங்கள் கணவர் இறந்தபிறகு லியாங்கைப்போல் எரியும் சிதையில் விருப்பப்பட்டு குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்கள். இதுவே உடன்கட்டை ஏறும் வழக்கத்தின் தொடக்கமாக அமைந்ததாக மேகாலயா வாழ் மக்கள் இன்றும் கூறுகிறார்கள்.
0

