1939இல் காங்கிரஸ் சோஷலிசக் கட்சியை விட்டு வெளியேறிய பிறகும், ஜேபியுடன் நட்பைத் தொடர்ந்தார் மசானி. அவ்வப்போது அவரோடு கடிதப் போக்குவரத்திலும் ஈடுபட்டுவந்தார். கட்சிக்கு மீண்டும் திரும்பச் சொல்லி ஜேபி விடுத்த வேண்டுகோளை மென்மையாக மறுத்தார். டாடா நிறுவனத்தில் வேலையில் சேருவதற்கு முன்னர், ‘நமது இந்தியா’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார் (1940). சிறுவர்களுக்கு நமது நாட்டைப் பற்றிய ஓர் அறிமுகத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் பெரும் வரவேற்பைப்பெற்றது. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட ‘நமது இந்தியா’, 10 ஆண்டுகளில் 10 இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுச் சாதனை படைத்தது.
இதற்கு 4 ஆண்டுகள் கழித்து ‘சோஷலிசம் மறுபரிசீலனை செய்யப்பட்டது’ என்ற புத்தகத்தை வெளியிட்டார் மசானி. ரஷ்யப் புரட்சியின் நோக்கங்கள் நிறைவேறாமல்போனது குறித்த பகுப்பாய்வை அந்த நூலில் மேற்கொண்டார். ‘எந்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சுதந்திரமான வாழ்க்கை முறையையா? அல்லது அடக்கி, ஒடுக்கப்படும் அடிமை வாழ்க்கை முறையையா?’ என்று கேள்வியெழுப்பிய மசானி, தனிநபர் உரிமைகளையும், சுதந்திரத்தையும் நசுக்கும் சர்வாதிகார வாழ்க்கை முறை, ஃபாசிசத்தின் விளைவாகவோ அல்லது கம்யூனிசத்தின் விளைவாகவோ இருந்தாலும், அவற்றுக்கிடையே வேறுபாடு இல்லை என்று விளக்கினார்.
1940 இறுதியில் டாடா நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்த மசானி, அரசியலைவிட்டு விலகியிருந்தார். அவரை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்தது, 1942இல் தொடங்கப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம். இந்தப் போராட்டத்தை ஒடுக்கிடக் கடுமையான வழிமுறைகளைப் பின்பற்றியது ஆங்கிலேய அரசு. பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் பிப்ரவரி 1943இல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் காந்தி. ஆங்கிலேய அரசு மசியவில்லை. காந்தியின் உண்ணாவிரதம் 10 நாட்களைத் தாண்டியும் தொடர்ந்தது. ஆங்கிலேய அரசின் இந்த அலட்சியப் போக்கை எதிர்த்துச் சத்தியாகிரகப் போராட்டத்தை மேற்கொள்ள மசானி முடிவெடுத்தார். டாடா நிறுவனத்தில் ஒப்புதல் கிடைத்தது. காந்தியடிகள் காவலில் வைக்கப்பட்டிருந்த பூனாவில் தன்னுடைய போராட்டத்தை நடத்த விரும்பிய மசானி, பூனாவிற்கு வந்தார். போராட்டம் தொடங்கிய உடனேயே மசானியைக் காவல்துறை கைதுசெய்தது. பூனாவின் எரவாடா சிறையில் காவல் வைக்கப்பட்டார் மசானி. நாடெங்கிலும் இதேபோல எதிர்ப்புகள் அதிகமாவதைக் கண்ட ஆங்கிலேய அரசு, சற்று இறங்கி வந்தது. 21 நாட்கள் கழித்துத் தன்னுடைய உண்ணாவிரதத்தை மார்ச் 1943இல் முடித்துக்கொண்டார் காந்தியடிகள். சில நாட்களில் மசானியும் விடுதலை செய்யப்பட்டார்.
நவம்பர் 1943இல் பம்பாய் மாநகராட்சியின் மேயர் பதவிக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மசானி வெற்றிபெற்றார். மேயர் பதவி கிடைத்தவுடன், தன்னுடைய டாடா நிறுவன வேலையை மசானி துறக்கவில்லை. அவருக்குத் தேவைப்பட்ட சுதந்திரத்தை டாடா நிறுவனத்தினர் அளித்திருந்தனர். எனவே, காலைப் பொழுதுகளில் டாடா நிறுவனத்தில் வேலை பார்த்தவர், மதிய வேளைகளில் பம்பாய் மேயராகப் பணிபுரிந்தார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் இவ்வாறு பம்பாய் மேயராகப் பணியாற்றி வந்தார் மசானி.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் (1945) தேர்தல் அறிவிக்கப்பட்டது (பிரிட்டிஷ் ஆட்சியின்போது நடைபெற்ற இத்தேர்தலில் வருமான வரி செலுத்துவோர் மட்டுமே வாக்காளர்கள். 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் வாக்களிக்கும் நடைமுறையெல்லாம் நாடு விடுதலையடைந்த பிறகு வந்தது). சர்தார் படேலின் ஆதரவோடு பம்பாயில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மசானி, வெற்றிபெற்று மத்திய சட்டப்பேரவையின் (இந்நாளைய மக்களவை) உறுப்பினரானார். பின்னாளில் இதே அவைதான் அரசியல் நிர்ணய சபையாகப் பணியாற்றி, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியது. எனவே, மசானி அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
அரசியல் நிர்ணய சபையில்…
அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகப் பொறுப்பேற்ற மசானி, பல விவாதங்களில் பங்கேற்றுத் தன் கருத்துகளை வெளிப்படுத்தினார். அரசியலமைப்புச் சட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மசானி, ‘தனிநபர் சுதந்திரமும் ஜனநாயகமும் முதலில் அழிக்கப்பட்டு, ஒரு சர்வ வல்லமை வாய்ந்த அரசு தனது திட்டங்களைத் திணித்தாலன்றி, தற்போது தேவைப்படுகின்ற சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களைச் செய்ய முடியாது என்று வாதிடுவது இன்றைய காலகட்டத்தில் ஒரு வழக்கமாகிவிட்டது’ என்று கம்யூனிசத்தைக் குறித்துக் குத்திப் பேசினார். ‘அரசு மக்களைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமா? அல்லது அரசை மக்கள் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமா? என்பதே நம் காலத்தின் மையப் பிரச்னையாகும்’ என்று கூறிய மசானி, ‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வாழ்வதற்கான உரிமையும் விடுதலைக்கான உரிமையும் அவசியம் இருக்க வேண்டும்’ என்றும் அரசியலமைப்புச் சட்டம் குறித்த தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.
அடிப்படை உரிமைகள் குறித்த அரசியல் நிர்ணய சபையின் துணைக்குழுவில் பங்கேற்ற மசானி, சட்டத்தால் அமல்படுத்த முடியாத அடிப்படை உரிமைகளை (non-justiciable fundamental rights) அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதை எதிர்த்தார். மசானியின் எதிர்ப்பு கண்டுகொள்ளப்படவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் செயல்படுத்தக்கூடிய சில உரிமைகளும், செயல்படுத்த முடியாத சில உரிமைகளும் தனித்தனியே இருக்க வேண்டும் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது. செயல்படுத்த முடியாத உரிமைகளாகக் கருதப்பட்டவை அனைத்தும் ‘அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்’ (Directive Principles of State Policy) என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்டன. இதன் விளைவு என்னவாயிற்று? 1970களில் இத்தகைய செயல்படுத்த முடியாத உரிமைகளைச் செயல்படுத்துவதாகக் காரணம்காட்டி, அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்ற விதத்தில் சட்டங்கள் இயற்றப்பட்டு, மத்திய அரசிற்கும் உச்சநீதிமன்றத்திற்குமிடையே மோதல்போக்கு ஏற்படவே இவை வழிவகுத்தன என்று தன் சுயசரிதையில் மசானி குறிப்பிட்டுள்ளார்.
தனிமனித உரிமைகளில் நம்பிக்கை கொண்ட மசானி போன்றவர்களுக்கும், அரசுக்கு முன்னுரிமை அளிக்க விரும்பிய உறுப்பினர்களுக்குமிடையே அரசியல் நிர்ணயசபை மற்றும் அதன் குழுக்களில் தொடர் மோதல் நிலவியது. பெரும்பாலான விவாதங்களில் மசானியின் கருத்துகளோடு டாக்டர் அம்பேத்கர், இராஜ்குமாரி அம்ரித் கவுர் (பின்னாளில் இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் என்ற பெருமை பெற்றவர்) மற்றும் ஹன்சா மேத்தா ஆகியோரின் கருத்துகள் ஒத்துப்போயிருக்கின்றன. இருப்பினும் பெரும்பான்மையானோரின் விருப்பத்திற்கேற்பவே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, மக்களவைத் தேர்தல் முறையில் ‘விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை’யை (System of Proportional Representation) கொண்டுவர மசானி விரும்பினார். விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை என்பது ஒரு தேர்தலில் ஒரு கட்சி பெற்ற வாக்குகளின் விகிதத்திற்கு ஏற்ப அந்தக் கட்சிக்கு இடங்கள் வழங்கப்படும் தேர்தல் முறையாகும். எத்தனை சதவிகித வாக்குகள் கிடைத்ததோ, அதற்கேற்ற சதவிகிதத்தில் இடங்கள் கிடைக்கும் என்பதே இந்த முறையின் அடிப்படை. இதை டாக்டர் அம்பேத்கர் ஆதரித்தார். இருப்பினும், பெரும்பான்மையானோரின் விருப்பப்படி இந்த முறை கொண்டுவரப்படாமல், பிரிட்டிஷார் தேர்தல் முறையான ‘பெரும்பான்மை ஆட்சி முறை’ (First past the post) ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தத் தேர்தல் முறையில் அதிக வாக்குகள் பெற்றவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இதன் விளைவு என்னவானது? பொதுமக்களின் 50% ஆதரவு வாக்குகளைப் பெறாமல் போனாலும், நேரு, இந்திரா போன்ற தலைவர்கள் மக்களவையில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை பெற்றனர். இதன் காரணமாக அரசியலமைப்புச் சட்டத்தைப் பலமுறை தன் விருப்பத்திற்கேற்ப மாற்றும் அளவிற்கு அவர்கள் அதிகாரங்கள் பெற்றனர் என்று மசானி குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை மசானியின் விருப்பப்படி விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை கொண்டுவரப்பட்டிருந்தால், இத்தகைய வானளாவிய அதிகாரங்கள் எந்தப் பிரதமருக்கும் கிடைத்திருக்காது.
அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் பதவியிலிருந்து மே 1948இல் விலகிய மசானி, நேருவின் விருப்பப்படி பிரேசில் நாட்டுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். ஒன்றேகால் வருடம் அந்தப் பதவியில் பணியாற்றிய மசானி, மீண்டும் இந்தியா திரும்பினார். சர்தார் படேலின் விருப்பப்படி, பம்பாய் மாகாணத்தில் இடைத்தேர்தலில் நின்று வெற்றிபெற்று, மீண்டும் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரானார். அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியா குடியரசு நாடானது (1950). குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரேசிலில்…
சுமார் ஒன்றேகால் ஆண்டுகள் பிரேசிலில் இந்திய நாட்டின் தூதுவராகப் பணியாற்றிய மினூ மசானியின் செயல்பாடுகள் இந்திய அரசாங்கத்திற்குத் திருப்தியளிக்கும் விதத்தில் இருந்தன. காந்தியடிகள் மீது பிரேசில் நாட்டு மக்களுக்குப் பெருமதிப்பு இருந்ததைத் தன்னுடைய சுயசரிதையில் (‘Against the Tide’) விளக்கியுள்ள மசானி, ரியோ டி ஜெனீரோ நகரின் ஒரு முக்கியப் பகுதியில் அமைந்த சதுக்கத்திற்குக் காந்தியடிகளின் பெயரை வைக்க முடிவுசெய்யப்பட்ட நிகழ்வைக் குறித்துச் சுவைபட விளக்கியுள்ளார்.
ஆகஸ்ட் 15, 1948 அன்று அந்த விழா நடந்தது. காந்தியடிகளின் தொண்டுகளையும் தியாகத்தையும் குறித்துப் புகழாரம் சூட்டிய அந்நகரின் மேயர், மசானியைப் பேச அழைத்தார். மசானி ஆங்கிலத்தில் பேசப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, மசானியோ போர்த்துகீசிய மொழியில் பேசி அசத்தியிருக்கிறார். இத்தனைக்கும் அவருக்குப் போர்த்துகீசிய மொழி தெரியாது. பின் எவ்வாறு பேசினார்? அவர் அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஒரு பெண்ணிடம் தன்னுடைய உரையை ஆங்கிலத்தில் சொல்லி, அதை அப்படியே அப்பெண்ணின் துணைகொண்டு போர்த்துகீசிய மொழியில் எழுதி, அதை முழுவதுமாகப் படித்துப் புரிந்துகொண்டு (ஏற்ற, இறக்கம், உச்சரிப்பு உட்பட) அவ்வாறு உரையாற்றியிருக்கிறார். மறுநாள் செய்தித்தாள்கள் அனைத்தும் மசானியைப் புகழ்ந்துதள்ளின. பிரேசிலில் இருந்த அமெரிக்கத் தூதுவர்களோ, அல்லது வேறு எந்த நாட்டுத் தூதுவர்களோ அதுவரையிலும் செய்யாத ஒரு விஷயத்தை, மசானி செய்ததாகப் பாராட்டின.
இந்தியத் தூதராக மசானி பணியாற்றி முடித்து இந்தியாவிற்குத் திரும்புகையில் இன்னொரு குறிப்பிடத்தக்க சம்பவம் – அவருடைய வருமான வரி குறித்தது. மசானியின் பணிநியமனக் கடிதத்தில் அவரின் ஊதிய விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவருடைய ஊதியத்திற்கு வருமான வரி கிடையாதென்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரேசில் பணியை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய மசானிக்கு அதிர்ச்சி. ஏனெனில், ரூ.13,000 வருமான வரி கட்டச்சொல்லி மசானிக்குத் தாக்கீது வந்தது (1950களில் இது மிகப்பெரிய தொகை). வருமானவரித்துறைக்கு எழுதிப்போட்டும், மேல்முறையீடு செய்தும் பயனில்லை. அமைச்சரைப் பார்க்கச் சொல்லிவிட்டார்கள். மசானியும் விடாமல் நிதி அமைச்சரிடம் (முதலில் டி.டி.கே, பிறகு மொரார்ஜி தேசாய்) வேண்டுகோள் விடுக்க, இறுதியாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
பிறகு, தனியாக மசானியிடம் பேசிய வருமானவரித்துறையினர், இதுபோல ஏற்கெனவே பிற தூதுவர்களுக்கும் நிகழ்ந்தது என்பதைக் கூறி, இந்த விவகாரத்தை வெளியில் சொல்லவேண்டாமென்று கேட்டிருக்கின்றனர். ஏனெனில், அவர்களும் மசானியைப்போலவே விலக்கு கோரி வரலாமல்லவா. மசானியும் அமைதியுற்று, யார் அந்தத் தூதுவர்கள் என்று கேட்டபிறகுதான் தெரிய வந்திருக்கிறது, ஒருவர் அந்நாளைய குடியரசுத் துணைத்தலைவரும், பின்னாளில் குடியரசுத் தலைவராகவும் இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன். இன்னொருவர் அந்நாளைய பீகார் ஆளுநராக இருந்து, பின்னாளில் குடியரசுத் தலைவரான டாக்டர் ஜாகிர் உசேன்.
(தொடரும்)

