பிரேசிலில் இந்தியத் தூதுவராகப் பணிபுரிந்ததைத் தவிரவும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றினார் மசானி. ஐநா சபையின் பாகுபாட்டுத் தடுப்பு மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்புக்கான இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். 1947 முதல் 1954 வரை இந்தத் துணைக் குழுவில் பங்குவகித்த மசானி, 1951இல் அதன் தலைவராகவும் பணியாற்றினார். இவ்வாறு அயல்நாட்டுத் தூதுவர் பணியிலும், ஐநா துணைக்குழுவிலும் மசானியை அமர்த்தியவர் நேரு. மசானிக்கும் நேருவிற்கும் இடையே உறவு எப்படியிருந்தது?
தொடக்கக் காலங்களில், நேருவின் நன்மதிப்பைப் பெற்றவர்களுள் ஒருவராக மசானி திகழ்ந்தார். இருவருக்கும் சோஷலிசக் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. மசானியைத் தன் இல்லத்தில் தங்க வைத்துக்கொண்டார் நேரு. இருவரும் சோஷலிசம் குறித்து நிறைய விவாதித்தனர். நேருவைப்போலவே, மசானியும் வெளிநாட்டில் படித்தவர். உடை, உணவு போன்றவற்றில் ஆங்கிலேயக் கலாசாரத்தைப் பின்பற்றியவர். எனவே, இருவருக்குமிடையே இயல்பாக நட்பு மலர்ந்தது. 1945இல் மத்திய சட்டசபையின் உறுப்பினரான மசானி, தன்னுடைய கன்னிப் பேச்சிலேயே அனைவரையும் ஈர்த்தார். கருத்துச் செறிவுள்ள உரைகளைத் தொடர்ந்து நிகழ்த்தினார். ‘காங்கிரஸ் உறுப்பினர்களின் அவை நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை; மசானியின் செயல்பாடுகளைத் தவிர!’ என்று நேரு குறிப்பிடும் அளவிற்கு மசானியின் செயல்பாடுகள் திகழ்ந்தன.
1946இல் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பெற்றது. நேரு அதன் தலைவரானார். அதுவரையில் இணக்கமாக இருந்த நேரு-மசானி உறவில் விரிசல்கள் விழத் தொடங்கின. நிதி அமைச்சராக இருந்த லியாகத் அலி கான் (பின்னாளில் பாகிஸ்தானின் முதல் பிரதமர்) 1947 பிப்ரவரியில் தாக்கல் செய்த பட்ஜெட்டின் குறைகளை விமர்சனம் செய்தார் மசானி. நேருவிற்கு இது பிடிக்கவில்லை. இது தொடங்கி, பல்வேறு விஷயங்களில் நேருவிற்கும் மசானிக்கும் கருத்து வேறுபாடுகள் வரத்தொடங்கின. இந்த இடைக்கால அரசாங்கத்தின் தொடக்கத்தில், மசானிக்கு உணவுத்துறை அமைச்சர் பதவியை வழங்கிட நேருவிற்கு எண்ணம் இருப்பதாக மசானியிடமே தெரிவித்தார் ஜான் மாத்தாய். ஒருவேளை அவ்வாறு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டால், நேருவிற்கு ஆதரவாக மசானி செயல்படுவாரா (அல்லது சர்தார் படேலுக்கா?) என்று மசானியிடம் ஜான் மாத்தாய் நேரடியாகக் கேட்டார். தனிநபர் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பதில் அக்கறை காட்டாத மசானி, தான் எந்தெந்தப் பிரச்னைகளில் எவர் பக்கம் நிற்கக்கூடும் என்பதை மாத்தாயிடம் தெளிவுபடுத்தினார். விளைவு, உத்தேச அமைச்சரவைப் பட்டியலிலிருந்து மசானியின் பெயர் நீக்கப்பட்டது.
நாடு விடுதலை அடைந்த பிறகு, பிரேசில் நாட்டுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார் மசானி (1948-49). முதலில் இப்பதவியை ஏற்க மறுத்த மசானி, பிறகு ஏற்றுக்கொண்டார். ஒரு வருடம் மட்டுமே தான் இப்பதவியில் இருக்க முடியும் என்ற நிபந்தனையுடன். பதவிக்காலம் முடிந்து இந்தியா திரும்பிய மசானிக்கு, சர்தார் படேலின் உதவியால் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. தான் ஒரு காங்கிரஸ் உறுப்பினராகவே இருந்தபோதும், ஆளும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நாடாளுமன்றத்தில் விமர்சித்தார் மசானி. குறிப்பாக, நேருவின் வெளியுறவுக் கொள்கைகளை.
அன்றைய காலகட்டத்தில், உலகளவில் பனிப்போர் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணமிருந்தன. கொரியா போர் (1950), சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பு (1950) எனப் பல்வேறு சம்பவங்களில் மசானியின் நிலைப்பாடும் நேருவின் நிலைப்பாடும் நேரெதிராக இருந்தன. ஏகாதிபத்தியம் குறித்த நேருவின் பழைய சொற்பொழிவுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய மசானி, கம்யூனிஸ்ட் நாடுகள் செய்த அராஜகங்கள் குறித்த நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைக்கும்படி நேருவிடம் கேள்வியெழுப்பினார். ஃபாசிசமோ அல்லது கம்யூனிசமோ, மனித உரிமைகளை நசுக்கும் எந்த இசத்தையும் மசானி எதிர்த்தார். ஆனால், ஹிட்லரையும் ஸ்டாலினையும் ஒரே தட்டில் வைத்துச் சமமாகப் பார்க்க நேரு முன்வரவில்லை. நேரு-மசானி உறவில் நாளுக்கு நாள் இடைவெளி அதிகரித்தது.
1951 பிப்ரவரியில் ஒரு சம்பவம் நடந்தது. உணவுப் பஞ்சம் நாட்டில் தலைவிரித்தாடிய காலகட்டம் அது. உணவுத் தானியங்களை நம் நாட்டிற்கு அனுப்பி வைத்திட அமெரிக்க நாடாளுமன்றம் உத்தேசித்திருந்தது. இந்த விஷயத்தில் விரைவாக முடிவெடுக்கும்படி வேண்டுகோள் விடுத்து, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் ஒன்றிணைந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தந்தியனுப்பலாம் என்று மசானி எண்ணினார். இந்த யோசனைக்கு, உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் கே.எம்.முன்ஷியும் ஆதரவு தெரிவித்தார். 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தந்தி அனுப்பப்பட்டது. இந்த விஷயம் நேருவிற்குத் தெரிய வந்தது. அமைச்சரவைக்குத் தெரியாமல், அமெரிக்க அரசாங்கத்திற்குக் கோரிக்கை வைத்தது தவறென்று நாடாளுமன்றத்தில் நேரு கோபமாகப் பேசினார். நேருவின் தவறான புரிதலை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகச் சுட்டிக்காட்ட விரும்பாத மசானி அமைதி காத்தார்.
இந்த நிகழ்வு குறித்து விவாதிக்க, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்பட்டது. முன்ஷியின் ஒப்புதலோடுதான் தந்தி அனுப்பப்பட்டது என்பதையும், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு மட்டுமே தந்தி அனுப்பப்பட்டது என்பதையும், அமெரிக்க அரசாங்கத்தோடு இந்த விஷயத்தில் எந்தக் கடிதப் போக்குவரத்திலும் ஈடுபடவில்லை என்பதையும் மசானி விளக்கினார். விவாதம் பெரிதாகி, நேருவின் வெளியுறவுக் கொள்கை குறித்து விமர்சிக்கப்பட்டது. ‘பிரதமரின் வெளியுறவுக் கொள்கை குறித்து நம் கட்சியில் சந்தேகம் கொண்டுள்ளவர், மசானி என்கிற ஒருவர் மட்டுமே அல்லர்’ என்று ஓர் உறுப்பினர் கூறினார். நேரு சங்கடப்பட்டார். தன்னுடைய ஆட்சி குறித்துத் தன் கட்சியினரிடம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அவருடைய ஆட்சிக்கு எதிராக ஒன்றிரண்டு வாக்குகளே கிடைத்தன. கூட்டம் முடிந்து வெளியே வந்த மசானியிடம் அமைச்சர்கள் உட்படப் பலரும் கைகுலுக்கினர். நெடுநாட்களாகத் தாங்கள் அடக்கி வைத்திருந்த எண்ணங்களை, அன்று மசானி பகிரங்கமாக வெளிப்படுத்தியதாக அவர்கள் கூறிச் சென்றனர். பிறகு எதற்காக அவர்கள் நேருவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்? நேருவின் மீது அவர்கள் கொண்ட பாசம், மரியாதை மற்றும் பயம்.
1951ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேருவை விமர்சித்துப் பேசிய தனக்குக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதை முன்னமேயே ஊகித்து வைத்திருந்தார் மசானி. எனவே, தேர்தல் நடந்த சமயத்தில் அவர் அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டார். தேர்தல் முடிந்த பிறகே இந்தியா திரும்பினார். ஆகவே, நாட்டின் முதல் தேர்தலில் மசானியின் பங்களிப்பு ஏதுமில்லை. தவிரவும், 1952 முதல் 1957 வரை அவர் தீவிர அரசியலை விட்டு விலகியே இருந்தார். தன்னுடைய டாடா நிறுவன வேலையைத் தொடர்ந்தவாறே, அரசியலைக் கவனித்து வந்தார். காங்கிரஸிலிருந்து மசானி விலகி நின்றதற்கு முக்கியக் காரணம், நேருவுடனான கருத்து முரண்பாடுகள். ‘காங்கிரசிற்கு எதிரான மாற்றுக் கட்சி ஒன்றை உருவாக்க வேண்டும்’ என்ற மசானியின் பின்னாளைய எண்ணத்திற்கும் அதுவே அடிப்படையாகத் திகழ்ந்தது.
சுதந்திரா கட்சி
விடுதலைக்குப் பாடுபட்ட நாட்களில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தனியொரு பிரிவாக இருந்த காங்கிரஸ் சோஷலிசக் கட்சி, விடுதலையடைந்த பிறகு 1949இல் பிரிந்து சென்று ‘சோஷலிசக் கட்சி’ என்ற பெயரில் தனிக்கட்சி ஆனது. பிறகு இக்கட்சி இரண்டாகப் பிரிந்தது (பிரஜா சோஷலிசக் கட்சி மற்றும் சம்யுக்த சோஷலிசக் கட்சி). சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவெற்றி பெற்று ஆட்சியமைக்க, சோஷலிசக் கட்சியோ படுதோல்வி அடைந்தது. ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, படிப்படியாக இடதுசாரிகளின் பக்கம் சாய்வதையும், ‘அணிசேராக் கொள்கை’ என்று கூறிவிட்டு, சோவியத் ரஷ்யாவிற்கு எதிராகக் குரல் தராமல் அடக்கி வாசிப்பதையும் மசானி கவனித்து வந்தார். காங்கிரஸ் கட்சிக்குத் தகுந்த மாற்றுக் கட்சியை உருவாக்க வேண்டிய தேவையை உணர்ந்தார். ஜேபி மற்றும் ராஜாஜி இருவரையும் அக்கட்சிக்குத் தலைமைப் பதவியேற்கக் கோரினார். கட்சி அரசியல் என்பதைத் தாண்டி சர்வோதய இயக்கத்தில் ஈடுபட்டிருந்த ஜேபி, மசானியின் இக்கோரிக்கையை நிராகரித்தார். வயதைக் காரணம் காட்டி ராஜாஜியும் நிராகரித்தார். ‘தனிக்கட்சி தொடங்க நினைத்த மசானி, எதற்காக ஜேபி மற்றும் ராஜாஜியிடம் தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி வேண்டுகோள் விடுக்க வேண்டும்? தானே அக்கட்சிக்குத் தலைமை ஏற்றிருக்கலாமே’ என்று இந்த இடத்தில் தோன்றலாம். தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் திறமை தனக்கில்லை என்பதைத் தான் உணர்ந்திருப்பதாகவும், கட்சியில் இரண்டாமிடப் பதவிக்கே தான் ஏற்றவன் என்றும் மசானி கருதினார்; எனவேதான் கட்சித் தலைமைக்கேற்ற தலைவரைத் தேடினார்.
இதற்கிடையில், நாட்டின் 2ஆம் தேர்தல் நடந்தது (1957). தன்னுடைய விருப்பப்படி, காங்கிரசுக்கு மாற்றான ஒரு கட்சியை மசானியால் தொடங்க முடியவில்லை. கட்சி உருவாகவில்லை என்றால் என்ன? காங்கிரசிற்கு எதிராக மசானியும், அவர் நண்பர்களும் சுயேச்சையாகத் தேர்தலில் நின்றனர். தன்னுடைய டாடா நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ராஞ்சி தொகுதியில் வேட்பாளராகக் களம்கண்ட மசானி வெற்றி பெற்றார். ஆனால், சுயேச்சையாக நின்ற அவருடைய மற்ற நண்பர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர். அடுத்த 2 ஆண்டுகளில் தனிக்கட்சி தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த மசானிக்கு, அதற்குரிய பலன் 1959இல் கிடைத்தது. வயதைக் காரணம் காட்டி, அரசியலைத் தவிர்த்து வந்த ராஜாஜி, தாமே இறங்கி வந்து கட்சி தொடங்கினார். ‘சுதந்திரா கட்சி’ (Swatantra Party) என்று தன்னுடைய கட்சிக்குப் பெயரிட்டவர், மசானியைக் கட்சியின் பொதுச் செயலாளராக ஆக்கினார். தள்ளாத வயதிலும் மூதறிஞர் ராஜாஜி சுதந்திரா கட்சியைத் தொடங்கிடக் காரணம், அவரின் பதவி ஆசை அல்ல. அன்றைய அரசாங்கத்தின் சோவியத் சார்புநிலை. ஐந்தாண்டுத் திட்டங்களாகட்டும், அனைத்தையும் நாட்டுமயமாக்குவதாகட்டும், ராஜாஜி குறிப்பிட்ட ‘லைசென்ஸ்-பர்மிட்-கோட்டா’ ராஜ்ஜியமாகட்டும், சோவியத் ரஷ்யா வகுத்த பாதையிலேயே நம் நாட்டையும் கொண்டு சென்றார் நேரு. இதனைச் சுட்டிக்காட்ட வலுவான எதிர்க்கட்சி என்று எதுவுமே இல்லாத நிலையில், நேரு கையிலெடுத்த அடுத்த விஷயம், கூட்டுறவு விவசாயம்.
1959ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கூட்டுறவு விவசாயத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் தலைவர்களான சரண் சிங், பேராசிரியர் என்.ஜி.இரங்கா போன்றோர் எதிர்த்தும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சிக்குள் புகைச்சல் கிளம்பியது. ‘சோவியத் ரஷ்யாவைப்போலவும், சீனாவைப் போலவும் சர்வாதிகார ஆட்சிக்கு இந்தியாவை இட்டுச் செல்கிறார் நேரு’ என்பன போன்ற கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தச் சூழலில்தான், கூட்டுறவு விவசாயத்திற்கு எதிராக ராஜாஜியும் குரல் கொடுத்தார். சுதந்திரா கட்சியை அவர் தொடங்கிட இதுவே உடனடிக் காரணமாக அமைந்தது. கடும் எதிர்ப்பின் காரணமாக, கூட்டுறவு விவசாயத் திட்டம் கைவிடப்பட்டது. 21 கொள்கைகளுடன் தொடங்கப்பட்ட சுதந்திரா கட்சி, காங்கிரசின் ‘லைசென்ஸ்-பர்மிட்-கோட்டா’ ராஜ்யத்தைத் தீவிரமாக எதிர்த்தது. மசானியின் கம்யூனிச எதிர்ப்பிற்கும், நேரு எதிர்ப்பிற்கும் சரியான வடிகாலாக அமைந்தது சுதந்திரா கட்சி. மீண்டும் தீவிர அரசியலுக்குள் வந்தார் மசானி.
முதல் தேர்தலும் இடைத் தேர்தலும்
காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக, 1959இல் தொடங்கப்பட்ட சுதந்திரா கட்சிக்கு ‘முதலாளித்துவம் பேசி, கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதரிக்கும் கட்சி’ என்றொரு பிம்பம் இருந்தது. எனவே, பணக்காரர்கள், தொழிலதிபர்கள், படித்த நகர்ப்புறவாசிகள் போன்றோர் மட்டுமே இக்கட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்று பலரால் கணிக்கப்பட்டது. ஆனால், இக்கட்சி தொடங்கப்பட்டபோது சேர்ந்த உறுப்பினர்களில் பலர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். ‘கூட்டுறவு விவசாயம்’ என்பதை எதிர்த்துத் தொடங்கப்பட்ட கட்சி என்பதனால், சுதந்திரா கட்சிக்குக் கிராமப்புறங்களில் வரவேற்பு அதிகமாக இருந்தது. இதற்கு நேர்மாறாக, நகர்ப்புறங்களில் வாழ்ந்த படித்தவர்கள் பலரும் சுதந்திரா கட்சியின் கொள்கைகளை ஏற்காமல், சோஷலிசப் பாதையே சரியானதென்று கருதுபவர்களாக இருந்தனர். எனவே, தொடக்கக் காலங்களில் கிராமப்புறங்களில் மட்டுமே சுதந்திரா கட்சி வேகமாக வளரத் தொடங்கியது.
கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற மசானி, கட்சியின் வளர்ச்சிக்காகத் தீவிரமாகப் பணியாற்றினார். கட்சியின் முதன்மையான இலக்காக மத்தியில் ஆட்சிக்கு வருவது மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும், ஒன்றிரண்டு மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கின்ற அளவோடு கட்சியின் இலக்குகள் நின்றுவிடக்கூடாது என்பதையும் வலியுறுத்திவந்தார். எல்லாம் சரி. கட்சி வளர வேண்டுமென்றால் வெறும் கொள்கைகள் மட்டும் போதுமா? கட்சி நிதி ஏராளமாகத் திரள வேண்டாமா? கட்சி நிதியை அதிகப்படுத்துவதில் மசானி அக்கறை செலுத்தினார். மார்ச் 1961இல் ரூபாய் 1 கோடி இலக்கை நிர்ணயித்துப் பணியாற்றினார். என்னதான் முயற்சி செய்தாலும், கட்சி நிதி எதிர்பார்த்த அளவிற்குத் திரளவில்லை. இதன் விளைவு, சுதந்திரா கட்சி எதிர்கொண்ட முதல் தேர்தலில் வெளிப்பட்டது.
1962இல் தேர்தல் நடந்தது. மக்களவைத் தேர்தலோடு மாநிலச் சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து அப்போது தேர்தல் நடைபெற்றது. சுதந்திரா கட்சி எதிர்கொண்ட முதல் தேர்தல் அது. மொத்தமிருந்த 494 லோக்சபை தொகுதிகளில், 173 இடங்களில் மட்டுமே சுதந்திரா கட்சியால் வேட்பாளர்களை நிறுத்த முடிந்தது. காரணம், எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திடப் போதுமான கட்சி நிதி அதனிடம் இல்லாமல் போனதுதான். இதே நிலைதான் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும். இத்தகைய சிக்கல்கள் இருந்தபோதும், தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றியது சுதந்திரா கட்சி. தேர்தல் சார்ந்த கட்சிப் பணிகளுக்கு முன்னுரிமை தந்த மசானி, அந்தத் தேர்தலில் வேட்பாளராக நிற்கவில்லை. தேர்தல் நிதி திரட்டுதல், பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பரப்புரை குறித்துத் திட்டமிடுதல், பல தொகுதிகளில் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தல் என்பன போன்ற செயல்களில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டார் மசானி. ‘கொள்கை ரீதியாகத் தனது ஆட்சிக்கு இருந்த ஒரே தீவிரமான சவால் சுதந்திரா கட்சிதான்’ என்பதை நேரு உணர்ந்திருந்தார். எனவே, சுதந்திரா கட்சிக்கு எதிராக மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார் நேரு.
தேர்தல் முடிவுகள் வெளியாகின. காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெற்று, நேரு பிரதமராகத் தொடர்ந்தார். காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த இடத்தில் 29 இடங்களில் வென்றிருந்தது கம்யூனிஸ்ட் கட்சி. 18 தொகுதிகளில் வென்று 3ஆம் இடம் பெற்றது சுதந்திரா கட்சி. இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புறத் தொகுதிகள். ‘கட்சி தொடங்கி ஏறக்குறைய 3 ஆண்டுகளில், நேரு போன்ற பேராளுமையை எதிர்த்து, 7.89 சதவிகித வாக்குகளோடு 18 இடங்களில் சுதந்திரா கட்சி வென்றது ஒரு சாதனை’ என்று பல பத்திரிகைகள் பாராட்டின. மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருந்தது சுதந்திரா கட்சி. மொத்த மாநிலங்களையும் சேர்த்து 207 தொகுதிகளில் வென்றிருந்த சுதந்திரா கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக நாடெங்கிலும் அதிகச் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வென்ற கட்சி என்ற பெருமையைப் பெற்றது. குஜராத், பீஹார், ஒரிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் பெற்ற மொத்த வாக்குகளோடு ஒப்பிடுகையில், ஏறக்குறைய சரிபாதி வாக்குகளைச் சுதந்திரா கட்சி பெற்றது. இவற்றின் ஒட்டுமொத்த விளைவு, சுதந்திரா கட்சியைத் தேசியக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. நட்சத்திரச் சின்னம் கட்சிக்கு நிரந்தரமானது.
தேர்தலில் கட்சி செயல்பட்ட விதம் குறித்து மசானிக்கு முழுத் திருப்தி இருந்திருக்கவில்லை. தேர்தல் முடிவுகளிலிருந்து கட்சி கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இனங்கண்டு, அவற்றைத் தன் கட்சியினரோடு பகிர்ந்துகொண்டார். ‘1930களில் காந்தியடிகள் கடைபிடித்து வந்த ‘ஆக்கபூர்வமான வேலைதிட்டம்’ போலச் சுதந்திரா கட்சியின் தொண்டர்களும் களப்பணி ஆற்றவேண்டும். அப்போதுதான் பொதுமக்களிடையே கட்சியின் செல்வாக்கு உயரும்’ என்று அறிவுறுத்தி வந்தார். கட்சியினரிடையே மசானியின் அறிவுரைக்குப் பெரிதாக வரவேற்பு இருக்கவில்லை.
என்னதான் 18 இடங்களில் சுதந்திரா கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் மசானி போட்டியிடாதது கட்சியின் விவாதப்பொருளானது. நேருவைப் போன்ற ஆளுமையை நாடாளுமன்றத்தில் எதிர்கொண்டு விமர்சிக்க, மசானிதான் சரியான நபர் என்று பலரும் கருதினர். எனவே, ஏதாவது இடைத்தேர்தலில் கட்சியின் சார்பில் மசானி போட்டியிட வேண்டுமென்று பலரும் மசானிக்கு அழுத்தம் தரத் தொடங்கினார். ஆரம்பத்தில் இதற்கு உடன்பட மசானி மறுத்தார். கட்சியைப் பலப்படுத்துவதே தன்னுடைய குறிக்கோள் என்பதை அனைவருக்கும் விளக்கினார். குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் தொகுதிக்கு ஏப்ரல் 1963இல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ‘மசானி இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும்’ என்று கட்சியினர் பலரும் தந்த அழுத்தத்தின் விளைவால் ராஜ்கோட் இடைத்தேர்தலில் மசானி போட்டியிட்டார்.
‘காங்கிரசின் கோட்டை’ என்று கருதப்பட்ட ராஜ்கோட் தொகுதியில் மசானி போட்டியிடப்போகிறார் என்பது தெரியவந்ததும், மசானி நிச்சயமாகத் தோற்றுவிடுவார் என்றே பலரும் கருதினர். ‘தொகுதிக்குச் சற்றும் தொடர்பே இல்லாத மசானி, ராஜ்கோட்டில் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை!’ என்றும், ‘எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் கட்சி வெல்லக்கூடும் என்பது குறித்துத்தான் சிந்திக்க வேண்டும்’ என்றும் காங்கிரஸ்காரர்கள் கருதினர். சற்றும் மனம் தளராத மசானி, தொகுதி முழுக்கச் சுற்றி வந்தார். பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசினார். ராஜ்கோட்டில் மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் மசானிக்குப் பெருகி வந்ததைக் கண்ட தில்லி, முக்கியமான அமைச்சர்களை ராஜ்கோட் தொகுதிக்கு அனுப்பியது.
இலால் பகதூர் சாஸ்திரி, வொய்.பி.சவான் போன்ற அமைச்சர்கள் ராஜ்கோட் வந்து, மசானிக்கு எதிராகப் பிரசாரம் செய்தனர். பிரதமரின் மகளான இந்திரா காந்தியும் ராஜ்கோட்டிற்கு வருகை தந்தார். அப்போது அவர் அமைச்சர் பொறுப்பில் இல்லை. பொதுக்கூட்டம் ஒன்றில் இந்திரா பேசுகையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பொதுமக்கள் சிலர் கேள்வியெழுப்பினர். அரசியலில் அவ்வளவாகப் பக்குவமடையாத நிலையில் அன்று விளங்கிய இந்திரா, அவ்வாறு கேள்வி எழுப்பியோரைப் பார்த்து வெறுப்புற்றார். அவர்களைக் ‘காட்டு மக்கள்’ என்று விளித்தார். கோபமடைந்த பொதுமக்கள், இந்திராவை நோக்கிக் கூழாங்கற்களை வீசினர். ‘என் தந்தையிடம் இதைப் பற்றிக் கூறுவேன்’ என்று பள்ளிக்குச் செல்லும் சின்னப் பெண்ணைப்போல இந்திரா கூறிவிட்டுச் சென்றார். இத்தகைய நிகழ்வுகளால் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலை ராஜ்கோட் மக்களிடையே அதிகரித்தது. விளைவு- தேர்தல் முடிவில் வெளிப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தார் மசானி. சுதந்திரா கட்சியின் நாடாளுமன்றத் துணைத் தலைவராக மே 1963இல் நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.
(தொடரும்)

