ஒரு சிறந்த அரசன் என்றாலே, அவன் பிற நாடுகளோடு போர் செய்து அவற்றை வென்று தன்னுடைய அரசை விரிவாக்கம் செய்த வீரனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. தன்னுடைய நாட்டு மக்கள் அமைதியாக வாழ வழி செய்து செம்மையான நிர்வாகத்தை அளிக்கும் அரசர்களும் சிறந்தவர்களாகவே கருதப்படவேண்டும். அப்படிப்பட்ட ஓர் அரசன் வாகாடக அரசனான இரண்டாம் ப்ரவரசேனன்.
வாகாடகர்கள்
சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தக்காணத்தில் கோலோச்சிய அரச வம்சம் வாகாடகர்களுடையது. பொ.யு. மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய வாகாடக அரசு வடக்கில் குஜராத்தில் இருந்து தெற்கில் துங்கபத்திரா ஆறு வரை விரிந்து பரந்திருந்தது. இந்த வம்சத்தைத் தோற்றுவித்தவராக விந்தியாசக்தி என்பவர் கருதப்படுகிறார். விந்தியாவாசினி என்ற அம்மனின் பெயரிலிருந்து தோன்றியது இந்த விந்தியாசக்தி என்ற பெயர்.
பிற்காலத்தில் வந்த கல்வெட்டுகளில் இவர் பெயர் குலமுதல்வனாகக் காணப்பட்டாலும் இவர் எங்கிருந்து ஆட்சி செய்தார் என்பது பற்றிப் பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. இவருக்கு அடுத்து ஆட்சி செய்தவர் முதலாம் ப்ரவரசேனர் என்பவர். அவர் தம்மை சக்கரவர்த்தி என்றும் சாம்ராட் என்றும் அழைத்துக்கொண்டார். ஷோடசின், அதிராத்ரம், வாஜபேயம், அஸ்வமேதம் போன்ற பல யாகங்களை வேதமுறைப்படி செய்தவர் இவர் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அவருடைய காலகட்டத்தில் குப்தர்கள், லிச்சாவிகள், பாரசிவ நாகர்கள் என்ற மூன்று வம்சங்கள் வட இந்தியாவை ஆண்டுகொண்டிருந்தன. தன்னுடைய அரசை வலுவாக்க விரும்பிய முதலாம் ப்ரவரசேனர், தன் மகனான கௌதமிபுத்திரனுக்கு நாகர்களின் அரசர் பவநாகரின் மகளைத் திருமணம் செய்து வைத்தார். இதைக்கண்ட குப்தர்கள் முதலாம் சந்திரகுப்தருக்கு லிச்சாவியின் அரசமகளான குமாரதேவியைத் திருமணம் செய்து வலுவான எதிர்க்கூட்டணியை உருவாக்கினர். பின்னாளில் சமுத்திரகுப்தரால் நாகர்கள் தோற்கடிக்கப்பட்டது வரலாறு.
கௌதமிபுத்திரர் சிறிய வயதிலேயே இறந்துபடவே, அவரது மகனான ருத்ரசேனர் அரசபதவியை ஏற்றார். ஆனால் முதலாம் ப்ரவசேனரின் மற்ற மூன்று மகன்களும் அரசைப் பிரித்துக்கொண்டு தனித்தனியே ஆளத்தொடங்கினர். அதனால் வாகாடக வம்சம் நான்காகப் பிரிந்தது. அவர்களில் ஒருவரான சர்வசேனர் மகாராஷ்டிராவில் உள்ள வத்ஸகுல்மா (தற்போதைய வாஷிம்) என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆளத்தொடங்கினார். அஜந்தாவில் உள்ள பல குகைக்கோவில்கள் வாகாடகர்களின் இந்தப் பிரிவினால் உருவாக்கப்பட்டதாகும். ருத்ரசேனர் நந்திவர்த்தனத்தைத் (நாக்பூரில் உள்ள நகர்தன்) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். இவரும் சமுத்திரகுப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
அரசி ப்ரபாவதிகுப்தா
வலுப்பெற்று வரும் குப்தர்களைக் கண்ட ருத்ரசேனரின் மகனான முதலாம் ப்ருதிவிசேனர் தன்னுடைய மகனான இரண்டாம் ருத்ரசேனருக்கு சந்திரகுப்த விக்கிரமாதித்தரின் மகளான ப்ரபாவதிகுப்தாவைத் திருமணம் செய்துவைத்தார். இந்த மண உறவால் வாகாடகப் பேரரசு வலுப்பெற்றது.
ஆனால் திருமணம் நடந்து சில ஆண்டுகளிலேயே இரண்டாம் ருத்ரசேனர் இறந்துபட்டார். அப்போது அவருக்கு சிறு வயதான மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களது பெயர்கள், திவாகரசேனர், தாமோதரசேனர், ப்ரவரசேனர். இரண்டாம் சந்திரகுப்தரின் அறிவுரைப்படி மகன்கள் தக்க வயது வரும் வரையில் ப்ரபாதிகுப்தாவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகள் அவர் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். அவரது பூனா செப்பேடுகள் “யுவராஜா திவாகரசேனரின் அன்னை” என்று ப்ரபாவதிகுப்தாவை வர்ணிக்கின்றன. பிரபாவதிகுப்தா ஆட்சியிலிருந்த காலத்தில், வாகாடக வம்சத்தின் மீது குப்தர்களின் செல்வாக்கு உச்சக்கட்டத்தை எட்டியது. பிரபாவதிகுப்தாவின் கல்வெட்டுகள், அவருடைய குப்த வம்ச மரபினையும், தாய்வழி/பிறப்புவழி தொடர்புகளையும் சிறப்பாக வலியுறுத்துகின்றன. அவருடைய சாசனங்களில் குறிப்பிடப்பட்ட கோத்திரம், வாகாடக வம்சத்திற்குரிய “விஷ்ணுவிருத்த” கோத்திரமாக அல்லாமல், அவருடைய தந்தைக்குரிய “தாரண” கோத்திரமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது ஆட்சிக்காலத்தில் வாகாடக அரசில் அமைதி தவழ்ந்ததாக சாசனங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. ஆயினும் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட துன்பங்கள் தீரவில்லை. அடுத்தடுத்து அவரது முதல் இரண்டு மகன்களும் பூவுலகை விட்டுச் சென்றனர். ஆகவே அவரது மூன்றாவது மகனான இரண்டாம் ப்ரவரசேனர் வாகாடகர்களின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். ஒருவழியாக ப்ரவரசேனரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு துறவறம் பூண்ட ப்ரபாவதிகுப்தா தொடர்ந்து அறச்செயல்களில் ஈடுபட்டார் என்பதை அவரது சாசனங்கள் தெரிவிக்கின்றன.
ப்ரவரசேனரின் ஆட்சி
பெரும் வீரரான இரண்டாம் சந்திரகுப்தரைப் பாட்டனாராகக் கொண்ட ப்ரவரசேனருக்கு குப்தர்களின் பாதுகாப்பு அரண்போல இருந்தது. அதனால் அவர்களின் வடக்கு எல்லையில் பூரண அமைதி நிலவியது. இவருடைய ஆட்சிக்காலத்தைப் பற்றி வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும் பொதுவாக பொயு 420 முதல் 455 வரை இவர் ஆட்சி செய்தார் என்ற கருத்து உள்ளது. தனது ஆட்சிக்காலத்தில் தன்னுடைய தலைநகரை நந்திவர்த்தனத்தில் இருந்து தன் பெயரால் உருவாக்கப்பட்ட ப்ரவரபுரம் என்ற இடத்திற்கு இவர் மாற்றினார். இது தற்போது நாக்பூருக்கு அருகில் உள்ள மன்சர் என்ற இடமாகக் கருதப்படுகிறது. அவரது 16ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த சாசனங்கள் ப்ரவரபுரத்திலிருந்தே வெளியிடப்பட்டிருக்கின்றன. இவருடைய ஆட்சிப் பரப்பு மகாராஷ்டிராவின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியை உள்ளடக்கி இருந்தது.
ப்ரவரசேனருடைய ஆட்சி பொதுவாக அமைதியும் செழிப்பும் நிறைந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து போர்களால் பீடிக்கப்பட்டிருந்த வடபாரதத்தில் இப்படிப்பட்ட ஓர் ஆட்சியைத் தருவது பெரிய சாதனையாகும். பெரும்பாலான வாகாடகர்களின் கல்வெட்டுகளும் செப்பேடுகளும், இரண்டாம் ப்ரவரசேனரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை. அந்தச் சாசனங்கள் அவருடைய ஆட்சியில் சிறந்த நிர்வாக அமைப்பு, முறையான அரச மானியங்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் இயந்திரம் ஆகியவை இருந்ததைக் காட்டுகிறது. வாகாடர்களின் ஆட்சிப் பகுதிக்கு உட்பட்டிருந்த மாகாணங்களில் ஆளுநர்களாக சேனாபதிகள் என்பவர்களை ப்ரவசேனர் நியமித்தார். சித்ரவர்மன், நமிதாசன், காத்யாயனன், பப்புதேவன் போன்ற பல சேனாபதிகளின் பெயர்கள் கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகின்றன. சேனாபதி நமிதாசன், ஆரம்மி-ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட ஒரு நிர்வாகப் பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இவரே பிரவரசேனரின் ராஜ்யாதிக்ருதன் — அதாவது பிரதம அமைச்சராகவும் செயல்பட்டார்.
இவர்களைத் தவிர பல சிற்றரசர்களும் ப்ரவரசேனரின் நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகித்தனர். அவர்களில் பெராரைச் சேர்ந்த கொண்டராஜனும், பேதூல் பகுதியைச் சேர்ந்த நாராயணராயனும் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இவர்களுக்குப் பேரரசரின் அனுமதியின்றி நிலமானியங்களை வழங்கும் அதிகாரம் இல்லை என்று தெரிகிறது. ஆகவே ப்ரவரசேனரின் அனுமதியுடன் இவர்கள் அளித்த தானங்களில் கொண்டராஜா ஆயிரம் பிராமணர்களுக்கு நிலக்கொடை அளித்திருக்கிறார், நாராயணராயர் அன்னதானச் சத்திரம் ஒன்றுக்கு கொடை அளித்திருக்கிறார்.
நிர்வாகம்
ப்ரவரசேனரின் சாசனங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களும், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அமராவதி, பேதூல், சிந்த்வாரா, நாக்பூர், பண்டாரா, பாலாகாட் போன்ற ஊர்களும் இந்தப் பகுதிகள் எல்லாம் அவருடைய நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்தன என்பதை உறுதியாக காட்டுகின்றன. ஆனால் ப்ரவரசேனருடைய அரசு இதைவிடப் பெரிய பரப்பில் விரிந்திருந்திருக்க வேண்டும். அதில் மத்தியப் பிரதேசத்தின் பெரும்பகுதி, பெரார், காண்டேஷ், மேற்கு மகாராஷ்டிரம், தெலிங்கானாவின் வடபகுதிகள் ஆகியவை அடங்கியிருந்தன. இந்தப் பகுதிகளில் தென் பெரார், வடமேற்கு தெலிங்கானா, தென் மகாராஷ்டிரம் ஆகிய பகுதிகள் வாகாடகர்களின் வாஷிம் கிளையால் ஆட்சி செய்யப்பட்டன. இதே காலகட்டத்தில் ஆட்சி செய்த வாகாடகர்களின் வாஷிம் கிளை அரசனும் ப்ரவரசேனன் என்ற பெயரை உடையவன் என்பது சுவாரஸ்யமானது. இதனால் இரு பகுதிகளும் இணைந்துவிட்டனவா அல்லது வாஷிம் கிளையின் பகுதி நந்திவர்த்தனக் கிளையின் நிர்வாகத்தின் கீழ் இருந்ததா என்று தெரியவில்லை.
சமயம்

வாகாடகர்கள் தொடக்கம் முதலே சிவபக்தர்களாக இருந்தனர். ஆனால் வைணவர்களான குப்தர்களுடன் ஏற்பட்ட மண உறவின் காரணமாக ப்ரபாவதிகுப்தாவும் அவருடைய கணவரும் விஷ்ணு பக்தர்களாக இருந்தனர். ஆனால் இரண்டாம் ப்ரவரசேனர் வாகாடகர்களின் சைவ வழிபாட்டை மீட்டெடுத்தார். தன்னைக் கல்வெட்டுகளில் பரமமகேஸ்வரர் (மகேஸ்வரனின் பக்தர்) என்றே அவர் குறிப்பிட்டுக்கொள்கிறார். சம்புவின் ஆசியால் தான் சூலத்தைத் தாங்கியதாகக் குறிப்பிடும் அவரது கல்வெட்டுகளில் ப்ரவரசேனர், தன்னுடைய நாட்டில் கிருதயுகத்தைப் போன்ற ஆட்சியை சிவபெருமானின் கருணையால் நிறுவியதாகவும் கூறுகிறார்.

மன்சரில் ஒரு பெரிய சிவன் கோவிலை ப்ரவரசேனர் கட்டினார். அது ப்ரவரேஸ்வரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ப்ரவேஸ்வர தேவகுலம் என்று பாந்தூர்னா செப்பேடுகளால் அழைக்கப்படும் அந்தக் கோவிலிலிருந்து அவர் பல தானங்களைச் செய்திருக்கிறார். தற்போது இடிந்த நிலையில் இருக்கும் அந்தக் கோவிலிலிருந்து கிடைத்த அழகான சிவபெருமானின் சிலை மிகவும் புகழ்பெற்றதாகும்.

நரட்டங்கவரி என்று அறியப்பட்ட இடமும் ஒரு முக்கியமான சமய மையமாக வளர்ந்திருந்ததாகத் தெரிகிறது. பிரவரசேனர் அந்த இடத்திற்குத் தீர்த்தயாத்திரையாகச் சென்றபோது, அங்கிருந்தபடியே வழங்கிய கொடைகள் திரோடி செப்பேடுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

“பகைவர்களை அடக்கும் இந்தச் சாசனம், பரம்பரை வழியாக அரசாட்சிச் செல்வத்தைப் பெற்ற, வாகாடக குலத்தின் அணிகலனாகத் திகழும் ப்ரவரசேனனுடையது ஆகும்.”
தான் சிவபக்தனாக இருந்தாலும் தன்னுடைய தாயின் பக்திக்காக ராமகிரி என்ற இடத்தில் விஷ்ணுவுக்காக ஒரு பெரும் கோவிலை எழுப்பினார் ப்ரவரசேனர். அதில் அவரது அவதாரங்களுக்கான சிலைகளை வடித்து வைத்தார்.
இலக்கியம்
இரண்டாம் சந்திரகுப்தரிடம் இருந்த காளிதாசர் போன்ற கவிகளிடம் மொழியறிவையும் இலக்கியத்தையும் கற்றதனால், ப்ரவரசேனர் ஒரு சிறந்த கவிஞராகவும் இருந்தார். சேதுபந்தா என்ற பெயரில் ப்ராகிருத மொழியில் ஒரு காவியத்தை இவர் இயற்றினார். ராமாயணத்தில் வரும் சேதுபந்தனப் படலத்தோடு தொடங்கும் இந்தக் காவியம் இலங்கையில் ராமனுக்கும் ராவணனுக்கும் நடந்த போர்க்காட்சிகளை வர்ணிக்கிறது. இந்தக் காவியத்தில் ராவணன் இறந்தவுடன் விபீஷணன் அதை நினைத்து வருந்தும் செய்யுள்களை வைத்து சிலர் அண்ணனைக் கொன்று விபீஷணன் அரியணை ஏற நினைத்ததை அவை குறிக்கின்றன என்றும் அதுபோலவே ப்ரவசேனரும் தன் அண்ணன்கள் இருவரையும் கொன்றுவிட்டு அரியணை ஏறியதாகவும் கூறுகின்றனர். ஆனால் இது வெறும் யூகங்கள் அடிப்படையில் அமைந்ததே தவிர எந்தவித ஆதாரமும் இல்லாத ஒன்று.
பொயு 430-ஆம் ஆண்டில் பிரவரசேனர், தனது மகனான நரேந்திரசேனனுக்கும் குந்தள நாட்டின் அரசனுடைய மகளான அஜ்ஜிதபட்டாரிகாவுக்கும் திருமணம் செய்து வைத்தார். தெற்கில் இருந்த முக்கியமான அரசுடன் இந்தத் திருமண உறவை ஏற்படுத்தி, தன்னுடைய தென்பகுதி எல்லைகளையும் அவர் பாதுகாத்துக்கொண்டார். “குந்தள அரசு” என்று குறிப்பிடப்படும் இந்த அரசு மயூரசன்மனால் தோற்றுவிக்கப்பட்ட கதம்பர்களின் அரசு என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தனது மகள்களை குப்தர்களுக்கும் பிற அரச குடும்பங்களுக்கும் மணமுடித்துக் கொடுத்த காகுஸ்தவர்மன் அஜ்ஜிதபட்டாரிகாவின் தந்தையாக இருக்கக்கூடும்.
குந்தள அரசிடம் இருந்த தெற்கு மராட்டியப் பகுதி முன்பு வாகாடக அரசுடன் இணைக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டிருந்த பகைமையையும் பொறாமையையும் இந்தத் திருமணம் ஓரளவு குறைத்திருக்கலாம். இந்தத் திருமணம் கதம்பர்கள், வாகாடகர்கள், குப்தர்கள் ஆகியோருக்கிடையே ஒரு வகையான நட்புறவையும் அரசியல் புரிந்துணர்வையும் ஏற்படுத்தியது.
ப்ரவரசேனரைப் பற்றிய கடைசியாக அறியப்படும் காலம் அவருடைய 27-ஆம் ஆட்சியாண்டாகும். எனவே, அதன் பின்னர் அவர் இறந்திருக்கலாம் என்று கருதலாம். அவருக்குப் பின்னர் ப்ரவரசேனருடைய மகன் நரேந்திரசேனன் அரியணை ஏறினான்.
இரண்டாம் ப்ரவரசேனரின் பெருமை வெறும் போர்களிலும் அதில் கிடைக்கும் வெற்றிகளில் மட்டும் இல்லை. அரசை உறுதியாக நிலைநிறுத்தியது, திறமையான நிர்வாகம், பண்பாட்டு வளர்ச்சி, சமயப் பாதுகாப்பு மற்றும் ஆதரவு ஆகியவையே அவருடைய ஆட்சியின் முக்கியமான அம்சங்கள். ப்ரவரசேனருடைய ஆட்சி வாகாடக அரசுக்கு அளித்த வலிமையின் அடிப்படையின் காரணமாகவே பின்னர் அவருடைய மகன் நரேந்திரசேனன் கோசலம், மாளவம் போன்ற பகுதிகளுக்கு வாகாடகர்களின் செல்வாக்கை விரிவுபடுத்த உதவியது.
(தொடரும்)

