1963இல் நேரு தளர்ந்திருந்தார். முந்தைய ஆண்டில்தான் சீனா அவரின் முதுகில் குத்தியிருந்தது. ‘சீனாவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’ என்று 1959இல் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களின்போதே மசானி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் பலமுறை எச்சரிக்கை தெரிவித்திருந்தனர். எதிர்க்கட்சிகளின் கருத்துக்குச் செவிசாய்க்காத நேரு, அதற்கான விலையை 1962இல் தரவேண்டி இருந்தது. தன்னுடைய அறியாமையை நேரு பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். ‘நவீன உலகின் எதார்த்தத்திலிருந்து நாம் விலகிச் சென்று கொண்டிருந்தோம்; நாமே உருவாக்கிக்கொண்ட ஒரு செயற்கையான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்தோம்; அரசாங்கமோ அல்லது மக்களோ, நாம் அனைவருமே அந்தச் சூழலிலிருந்து அதிர்ச்சியுடன் வெளியே கொண்டு வரப்பட்டிருக்கிறோம்’ என்று சீனப் போரின் தோல்விக்குப் பிறகு நேரு கூறினார்.
போரில் தோற்றதன் விளைவாகத் தன்னுடைய வலதுகரமாகத் திகழ்ந்த பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனை, அவர் காவு கொடுக்க வேண்டியிருந்தது. வழக்கமாக இதுபோன்ற சிக்கல்கள் எழும்போது, தன்னுடைய பதவியை விட்டு விலகுவதாக முன்பெல்லாம் நேரு கூறி வந்ததுண்டு. அவ்வாறு நேரு கூறியதும், அந்த முடிவிற்கு நேரு வரவேண்டாம் என்று பதறிப்போய் மற்ற தலைவர்கள் கோரிக்கை வைப்பதும், நேரு அதை ஏற்றுக்கொண்டு பிரதமர் பதவியில் நீடிப்பதும் வாடிக்கை. ‘சீனப் போருக்குப் பொறுப்பேற்று கிருஷ்ண மேனன் பதவி விலக வேண்டும் அல்லது நேரு அவரைப் பதவியிலிருந்து விலக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வலுத்தது. கிருஷ்ண மேனன் பதவி விலக வேண்டியிருந்தால், தானும் அவரோடு செல்ல வேண்டியிருக்கும் என்ற தன் பிரம்மாஸ்திரத்தை நேரு அம்முறையும் பயன்படுத்தினார். ‘நேருவின் முடிவு துன்பம் தரக்கூடிய ஒன்றே. என்றாலும், கட்சியும் நாடும் அதைத் தாங்கிக் கொள்ளும்’ என்று மஹாவீர் தியாகி என்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகக் கூறிவிட்டார். கிருஷ்ண மேனனின் பதவியைப் பறித்தாலே போதுமென்றும், நேரு பிரதமராகத் தொடர்வதில் தங்களுக்கு எந்தச் சங்கடமும் இல்லையென்றும் நேருவை நேரில் சந்தித்து மசானி கூறினார். ஒரு விரக்தியான சிரிப்புடன் நன்றி தெரிவித்தார் நேரு. வேறு வழியின்றித் தன்னுடைய நண்பரான கிருஷ்ண மேனனின் ராஜினாமாவை அவர் ஏற்றுக் கொள்ளும்படி ஆனது.
அமைச்சர்களிடம் மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் நேரு அவமானப்பட நேர்ந்தது. ‘சீனாவிடம் இழந்த நிலப்பரப்புகளில் மரங்கள்கூட வளர வாய்ப்பில்லை; ஆங்காங்கே சில புதர்கள் வேண்டுமானால் இருக்கலாம்’ என்று நாடாளுமன்றத்தில் நேரு கூறினார். அதாவது, சீனா ஆக்கிரமித்த பகுதி எவ்வித வளமும் அற்றது; எனவே அப்பகுதியை இழந்தது குறித்து பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை என்கிற பொருளில் அவர் அவ்வாறு பேசியிருந்தார். இதற்கும் மஹாவீர் தியாகி பதில் கொடுத்தார்: ‘என் தலையில் முடி வளரவில்லை; எனவே என் தலைக்கு மதிப்பில்லை என்று அர்த்தமா?’ என்று கேட்டார். நாடாளுமன்றம் சிரித்தது.
சீனாவின் துரோகமும், இத்தகைய நிகழ்வுகளும் நேருவின் உடல்நலத்தைப் பாதித்தன. ஜனவரி 1964இல் புவனேஸ்வரில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட நேருவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. தன்னுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை நேரு உணர்ந்தார். ஏப்ரல் 1964இல் நேருவிற்கு இன்னொரு தோல்வி கிடைத்தது. நில உச்சவரம்புச் சட்டங்கள் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தும் மசோதாவை (17வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா) நேரு அரசு தாக்கல் செய்தது. ‘உச்ச வரம்பிற்கு மேல் ஒருவர் வைத்துள்ள விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தும்போது, அத்தகைய நிலத்திற்கு இழப்பீடு அளிக்க வேண்டிய அவசியமில்லை’ என்ற மசோதாவின் மையக் கருத்தைச் சுதந்திரா கட்சி எதிர்த்தது. சுதந்திரா கட்சியுடன் வேறு பல எதிர்க்கட்சிகளும் சேர்ந்துகொண்டன. விவாதங்கள் முடிந்து வாக்கெடுப்பு நடந்தது. நேரு அரசு கொண்டு வந்திருந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. முடிவெடுக்கும் அதிகாரமும் தம் கையை விட்டுப்போகிறது என்பதை நேரு உணர்ந்துகொண்டார்.
தான் இருக்கும் காலத்திலேயே காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட வேண்டும் என்கிற நோக்கத்தில், ஷேக் அப்துல்லாவை நேரு விடுதலை செய்தார் (ஏப்ரல் 1964). பாகிஸ்தானுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வர ஷேக் அப்துல்லாவை அனுப்பி வைத்தார். ஏதாவது அமைதி ஒப்பந்தம் போடப்பட்டு அந்தப் பிரச்னை முடிவிற்கு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் 27.05.1964 அன்று நேரு காலமானார். நேரு இறந்த அன்று, அவருடைய இல்லத்திற்குச் சென்ற மசானி, 30 ஆண்டுகளாகத் தனக்கும் நேருவிற்கும் இடையே இருந்த நட்பைக் குறித்து நினைவுகூர்ந்தார். நாடாளுமன்றத்தில் அசுர பலத்துடன் பல்லாண்டுகளாக ஆட்சி புரிந்த சூழலிலும், ஜனநாயக மாண்புகளைச் சிதைக்காத நேருவின் பண்பை மசானி பெரிதும் போற்றினார். தன்னுடைய ஆரம்பகால நண்பனுக்குப் பிரியாவிடை தந்து அனுப்பினார்.
சுதந்திரா கட்சியின் வளர்ச்சி
எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே (1962), 18 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் மூன்றாமிடம் பெற்ற சுதந்திரா கட்சி, சீரான வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கியது. மசானியின் கட்டுக்கோப்பான கட்சி நிர்வாகம் மற்றும் தாராளமயக் கொள்கைகள், பேராசிரியர் ரங்காவின் விவசாயச் சார்புக் கொள்கைகள், மூதறிஞர் ராஜாஜியின் அனுபவ வழிகாட்டுதல் ஆகியவற்றால் அக்கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகியது. அன்றைய காலகட்டத்தில், சோஷலிசம் மற்றும் கம்யூனிசம் பேசாத, மதச்சார்பற்ற ஒரே கட்சியாகச் சுதந்திரா கட்சியே விளங்கியது. எனவே, சோஷலிசம் பேசும் காங்கிரஸ் மற்றும் சோஷலிசக் கட்சிகள், கம்யூனிசம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அன்றைய ஜன சங்கம் ஆகியவற்றுக்கு ஒரே மாற்றாகச் சுதந்திரா கட்சி கருதப்பட்டது.1962 முதல் 1967 வரையிலான காலகட்டத்தைச் சுதந்திரா கட்சியின் பொற்காலமாகக் கருதலாம்.
தன்னுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில், நேரு மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவும் சுதந்திரா கட்சியின் வளர்ச்சிக்குக் காரணங்களாக அமைந்தன. 1962இல் சீன ஆக்கிரமிப்பின்போது அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்தில், தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு, அதனால் அந்நியச் செலாவணியின் கையிருப்பு குறையத் தொடங்கியிருந்தது. எனவே தங்கத்தின் இறக்குமதியையும், அதன் பயன்பாட்டையும் கட்டுப்படுத்துவதற்காக 1962இல் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தங்கத்தைக் கட்டிகளாகவும், நாணயங்களாகவும் பொதுமக்கள் வைத்திருப்பதைத் தடைசெய்த இச்சட்டம், பொற்கொல்லர்கள் 100 கிராமுக்கு மேலும், உரிமம் பெற்ற டீலர்கள் 2 கிலோவுக்கு மேலும் தங்கம் வைத்திருப்பதையும் தடை செய்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தது சுதந்திரா கட்சி. இதனால், குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் இருந்த தங்க வியாபாரிகள், பொற்கொல்லர்கள் பலரும் சுதந்திரா கட்சியின் ஆதரவாளர்களாக மாறினர். தவிரவும், சீன ஆக்கிரமிப்பின் விளைவால் பொதுமக்கள் மத்தியில் நேருவின் செல்வாக்கு சரியத் தொடங்கிய நிலையில், காங்கிரசிற்கு மாற்றான கட்சி என்ற எண்ணமும் சுதந்திரா கட்சியின் மீது ஏற்படத் தொடங்கியது.
கட்சி நிர்வாகத்தை மிகக் கவனமாகக் கையாண்டார் மசானி. நாடு முழுதும் சுற்றி வந்தார். 1964 முதல் 1968 வரை, கட்சியின் 8 மாநில மாநாடுகளை நடத்தினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, வேட்பாளர்கள் தேர்வு நடத்தப்படுவதை அவர் விரும்பவில்லை. தேர்தல் வருவதற்கு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளரை அறிவிக்கும் திட்டத்தை அமல்படுத்தினார். எல்லாத் தொகுதிகளிலும் இந்தத் திட்டத்தை அவரால் அமல்படுத்த இயலவில்லை என்றாலும், எந்தக் கட்சியும் அதுவரை இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டதில்லை. 1967 தேர்தலில் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டும் முயற்சிகளையும் மசானி மேற்கொண்டார். இருப்பினும், ஜன சங்கத்தோடு ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டுமே கூட்டணி ஏற்பட்டது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்ற பேச்சிற்கே இடமளிக்கவில்லை மசானி. எனவே, சிறிய அளவிலான கூட்டணியோடு தேர்தலை எதிர்கொண்டது சுதந்திரா கட்சி.
மக்களவைத் தேர்தலோடு மாநிலச் சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து நடைபெற்ற 1967 தேர்தலில், பல மாநிலங்களில் கணிசமான இடங்களில் சுதந்திரா கட்சி வெற்றி பெற்றிருந்தது. முந்தைய தேர்தலில் (1962), மொத்த மாநிலங்களையும் சேர்த்து 207 இடங்களில் வென்றிருந்த சுதந்திரா கட்சி, 1967 தேர்தலில் இந்த எண்ணிக்கையை 259ஆக உயர்த்திக் கொண்டது. தவிரவும், சுதந்திரா கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி ஒரிசாவில் அமைந்தது. குஜராத்திலும், ராஜஸ்தானிலும் கணிசமான எண்ணிக்கையில் வெற்றிபெற்ற சுதந்திரா கட்சி, இம்மாநிலங்களில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றைத் தவிர, மீதமிருந்த மாநிலங்களில் கட்சிக்குப் பிரதிநிதித்துவம் கிடைத்தது.
மொத்தமிருந்த 520 மக்களவைத் தொகுதிகளில் 178 இடங்களில் வேட்பாளர்களைக் கட்சி நிறுத்தியது. முந்தைய தேர்தலில் (1962) 7.89% வாக்குகள் பெற்று 18 இடங்களில் வென்றிருந்த அக்கட்சி, 1967 தேர்தலில் 8.67% வாக்குகளுடன் 44 இடங்களில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாகக் குஜராத் மாநிலத்தில் 12 இடங்களில் வெற்றி பெற்றிருந்த சுதந்திரா கட்சி, தன்னுடைய 44 நாடாளுமன்ற உறுப்பினர்களை 8 மாநிலங்களிலிருந்து பெற்றது. ‘ஹெலிகாப்டர் கட்சி’ என்றும், ‘பெருமுதலாளிகளின் கட்சி’ என்றும் வருணிக்கப்பட்ட சுதந்திரா கட்சியின் சார்பில் வென்றிருந்த 44 உறுப்பினர்களுள், 19 நபர்கள் விவசாயப் பின்புலம் கொண்டிருந்த சாதாரணர்கள். 1962 தேர்தலில் 3ஆம் இடம் பெற்ற சுதந்திரா கட்சி, 1967 தேர்தலில் 2ஆம் இடம் பெற்றது. மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரானார் மசானி.
(தொடரும்)

