Skip to content
Home » பிரபலங்களின் உளவியல் #17 – எலீ வீசல்

பிரபலங்களின் உளவியல் #17 – எலீ வீசல்

‘நான் என்றுமே மறக்க மாட்டேன் அந்த இரவை.

நான் என்றுமே மறக்க மாட்டேன் அக்கரும்புகையை.

நான் என்றுமே மறக்க மாட்டேன், எனது இறை நம்பிக்கையை விழுங்கிய அந்தக் கொடிய நாட்களை.

என்றுமே மறக்கமாட்டேன்.

என்றுமே…’

எலீ வீசலின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும், ஆறா ரணங்கள் அழுத்தமாகப் பொதிந்திருக்கின்றன.

யார் இந்த எலீ வீசல்? யூதர் என்பதாலேயே அவர் அனுபவித்த உளவியல் சிக்கல்கள் என்னென்ன? அவை, அவருடைய ’இரவு’ என்கிற புகழ்பெற்ற புத்தகத்தில் எவ்வாறு வெளிப்பட்டன?

0

எலீ வீசல், 30-செப்டம்பர்-1928 அன்று ஐரோப்பாவின் ரொமானியா நகரில் பிறந்தார். அவர் பிறந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் ஒரு யூதருக்கு மகனாகப் பிறந்தாரே; அங்கே எழுதப்பட்டது அவருடைய விதி. 2ஆம் உலகப்போரின்போது, யூத இனத்தை அழித்தொழிக்கப் பல வதைமுகாம்கள் உருவாக்கப்பட்டன. ஆஸ்விட்ச், புச்சன்வால்ட் எனப் பல முக்கிய வதைமுகாம்கள் அவற்றில் அடங்கும். அந்த மரணத் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும்போது எலீ வீசலின் வயது, வெறும் 15. தன்னுடைய வதைமுகாம் அனுபவங்களைப் பல புத்தகங்களில் எழுதி வெளியிட்டிருக்கிறார் எலீ. அதில் முதன்மையான புத்தகம் தான் இந்த ’இரவு’.

1955ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல், முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழில், ரவி.தி.இளங்கோவன் மொழி பெயர்த்திருக்கிறார். நூல் முழுக்க எலீ வீசலின் மூச்சுச் சத்தம் நமக்குக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அது சாதாரண மூச்சுச் சத்தம் அல்ல; ரத்தக்கறை படிந்த மூச்சுச் சத்தம்.

அழகான தனது சிறிய குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறார் எலீ. நண்பர்கள், உறவினர்கள், மத போதகர்கள் என எல்லோரைப் பற்றியும் பேசுகிறார். பிறகுதான் வருகிறது, அந்த ரயில் பயணம். ஆம்… ’நரகம்’ நோக்கிப் பயணிக்கும் அந்த இறக்கமற்ற ரயிலைப் பற்றி எலீ விவரிக்கும்போது, நாமும் அதில் ஏறிக்கொள்கிறோம். அதன் பின்னர் எலீ வீசல் சொல்வதெல்லாம் மரணம்… மரணம்… மரணம் மட்டுமே.

வெட்டி வீசப்படும் தலைகள் பற்றி, உயிரோடு புதைக்கப்படும் குழந்தைகள் பற்றி, மானபங்கம் செய்யப்படும் பெண்கள் பற்றி, இரக்கமின்றிச் சுட்டுத் தள்ளப்படும் சிறுவர்கள் பற்றி, இப்படி நிறைய.

‘எனது தந்தை அழுதார். நான் முதல்முறையாக அவர் அழுவதைப் பார்த்தேன். நான் கற்பனைகூடச் செய்ததில்லை; அவரால் அழ முடியுமென்று…’

தந்தையைப் பற்றி எலீ இப்படி எழுதும்போது, உலகின் எந்த மூலையில் இருக்கும் மகனும் கலங்கிப்போவான். எலீயுடன் அவருடைய மொத்தக் குடும்பமும் ஆஸ்விட்ச்சுக்கு வந்து சேர்கிறது. உள்ளே நுழைந்தவுடன் தாயிடமிருந்தும் சகோதரியிடமிருந்தும் பிரிக்கப்படுகிறார் எலீ. அதன் பிறகு அவர்களைத் திரும்பப் பார்த்திருக்கவே மாட்டார்.

முகாமில் அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் தந்தை மட்டுமே. பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரைப் பிரிய நேர்ந்தும், தந்தையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருக்கிறார் எலீ. இவரும் சேர்ந்தே எல்லாத் துயரையும் அனுபவித்திருக்கிறார்கள். தந்தை அடி வாங்குவதை மகன் பார்க்க வேண்டும். மகன் அடி வாங்குவதைத் தந்தை பார்க்க வேண்டும். இப்படி ஒருமுறை தன் தந்தை உடைந்து அழுதபோது, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் எலீ தவித்திருக்கிறார். அதை அவர் விளக்கும்போது நாமும் உடைகிறோம்.

உண்மைதான். இன்னொருவன் முன், தந்தை மண்டியிட்டு அழுவதை எந்த மகனால் தான் தாங்கிக் கொள்ள முடியும்?

எலீயும் அவர் தந்தையும் அங்கு பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்தனர். மனிதர்களால் செய்ய முடியாத அத்தனை கடினமான வேலைகளையும் அவர்கள் செய்தனர். அங்கு அவர்களுக்கு இரண்டே வழிகள்தான் இருந்தன. ஒன்று வேலை செய்து சாக வேண்டும்; மற்றொன்று நாஜிப்படையால் சாக வேண்டும். ஆக மொத்தம் மரணம் உறுதி!

1945ஆம் ஆண்டு, ஜனவரி மாதம்.

எலீயும் அவர் தந்தையும் ஆஸ்விட்சிலிருந்து மற்றொரு வதைமுகாமான புச்சன்வால்டுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கே தனது கண்முன்னே தந்தை இறந்துபோவதைப் பார்க்கிறார் எலீ. நூலின் முன்னுரையில், ‘என் தந்தை இறந்து கொண்டிருக்கும்போது என்னால் அதைப் பார்க்க மட்டுமே முடிந்தது…’ எனச் சொல்லி தன் குற்ற உணர்வை வெளிப்படுத்தியிருப்பார் எலீ. தந்தை இறந்த நிகழ்வோடு இந்நூலை முடித்திருக்கிறார். இறுதி அத்தியாயத்தில், ‘ருஷ்ய வீரர்கள் எங்களை விடுவித்தபோது, எங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது’ என்கிறார். அது, ‘ரொட்டியும் தண்ணீரும் எங்கு கிடைக்கும்?’.

எலீயின் ’ரொட்டியும் தண்ணீரும் எங்கு கிடைக்கும்’ என்கிற வார்த்தைகளில் உள்ள ஆழத்தை, எப்போதும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அந்த ஒற்றை வார்த்தையில் ஒட்டுமொத்த உணர்வுகளையும் நம்மிடம் கடத்தியிருப்பார் எலீ.

வெளியே வந்த எலீ என்ன செய்தார்?

என்ன செய்வதென்று புரியவில்லை. இத்தனை நாட்கள் அனுபவித்த கொடுமைகள் எல்லாம் கண்முன்னே வந்து அவரைப் பாடாய்ப்படுத்தின. கனவுகள் ஒருமுறை இரண்டுமுறை வந்தால் பரவாயில்லை; ஒவ்வொரு நாளும் வந்தால்? ஆம், எலீ வதை முகாமிலிருந்து வெளியே வந்தபின் பல்வேறு வகையான உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டார். அதில் முதன்மையானது ’Post Traumatic Stress Disorder (PTSD)’. கடுமையான அதிர்ச்சி அனுபவத்திற்குப் பிறகு ஏற்படும் மன அழுத்த நோய் இது. மரணம் வரை சென்று, நூலிழையில் தப்பிப் பிழைத்தவர்கள், இந்த PTSDஆல் பாதிக்கப்படுவர்.

PTSDன் முக்கிய அறிகுறிகள்:

  1. கடுமையான அதிர்ச்சி நிகழ்வை அனுபவித்தல் அல்லது நேரில் கண்டிருத்தல் (எடுத்துக்காட்டு: வதைமுகாம் அனுபவங்கள், 9/11 சம்பவம், சுனாமி)
  2. இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான கனவுகள் மீண்டும் மீண்டும் வருவது
  3. கவனம் செலுத்துவதில் சிரமம்
  4. தூக்கப் பிரச்னைகள்
  5. சம்பவத்தை நினைவூட்டும் விஷயங்களால் கடுமையான மன அழுத்தம்
  6. சம்பவத்தை நினைவூட்டும் இடங்கள், மனிதர்கள், சூழ்நிலைகளைத் தவிர்த்தல்
  7. சிந்தனை மற்றும் மனநிலையில் எதிர்மறை மாற்றங்கள்
  8. பயம், கோபம், குற்ற உணர்ச்சி, அவமானம் போன்ற உணர்வுகள்
  9. முன்பு விரும்பிய செயல்பாடுகளில் ஆர்வம் குறைதல்
  10. பிறரிடமிருந்து விலகி இருப்பது போன்ற உணர்வு
  11. எளிதில் எரிச்சல் அல்லது கோபம் ஏற்படுவது
  12. அதிக எச்சரிக்கையுடன் இருப்பது. அதாவது திடீர் சத்தங்களுக்கு அதிகமாகப் பதறுதல்

எலீக்கு இதிலிருக்கும் பெரும்பாலான அறிகுறிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.  ஆனால், தன்னால் இதிலிருந்து கண்டிப்பாக வெளிவர முடியும் என்று அவர் நம்பினார். உளவியல் நிபுணர்களைச் சந்தித்து தன்னுடைய பிரச்னைகளை எடுத்துச் சொன்னார். அவர்களுடைய வழிகாட்டுதலின்படி கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அனுபவித்து வந்த சிக்கல்களிலிருந்து வெளியேறினார் எலீ. அத்தோடு அவர் விடவில்லை.

எலீ இப்போது உலகத்தை வேறு பார்வை கொண்டு நோக்கினார். தான் அனுபவித்த எல்லாவற்றையும் எழுத்துக்களாக உருமாற்றினார். மறைக்கப்பட்ட பல உண்மைகளைத் தன் புத்தகங்களின் மூலம் பேசினார். அதில், ‘இரவு’ புத்தகம் இன்றளவும் விற்பனையில் சாதித்து வருகிறது.  பல தன்னார்வலர்களுடன் இணைந்து எளிய மக்களுக்குச் சேவை செய்தார் எலீ. அரசியல் பேசினார். மேடைகளில் விவாதம் செய்தார். அன்பைப் போதித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக 1986ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

2-ஜூலை-2016.

எலீ வீசல், தனது 87வது வயதில் அமைதியான மரணத்தைத் தழுவினார். ஹிட்லரின் வதைமுகாம்களில் தப்பிப் பிழைத்தவர்கள் வெகு சிலரே. விடுவிக்கப்பட்ட பின்னரும் அவர்கள், பலவிதமான மனநோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். எலீ வீசல் போன்ற ஒருசிலர் மட்டுமே தங்களின் வாழ்க்கையை வெளியுலகத்தோடு இணைத்துக் கொண்டு அதில் வெற்றி கண்டனர். அதுவும் PTSD போன்ற தீவிர உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து விரைவில் மீண்டு வந்து, நோபல் பரிசு வரை சென்ற ஒரே நபர் அவர் மட்டுமே.

எலீ, வதைமுகாம்களிலிருந்து உயிர் தப்பிய மனிதர் மட்டுமல்ல; நினைவுகளை மறக்காமல் சுமந்தபடியே வாழக் கற்றுக்கொண்ட மனிதர். தன் துயரத்தைத் தனக்குள் புதைத்துவிடாமல், அதை எழுத்தாக மாற்றி உலகின் மனசாட்சியிடம் ஒப்படைத்தவர். அதனால்தான் ’இரவு’ ஒரு புத்தகம் மட்டுமல்ல; மனித வரலாறு மீண்டும் அதே தவற்றைச் செய்யக்கூடாது என்று ஒலிக்கும் எச்சரிக்கை மணியும்கூட.

‘நான் என்றுமே மறக்க மாட்டேன் அந்த இரவை. நான் என்றுமே மறக்க மாட்டேன் அக்கரும்‌ புகையை…’

கேட்டுக்கொண்டே இருக்கிறது…

0

கலை மற்றும் உளவியல் சிக்கல்கள் பற்றிய விவாதம் எழும்போதெல்லாம், ஒரு கேள்வி தவறாமல் கேட்கப்படுகிறது.

‘ஒருவருக்கு இருக்கும் உளவியல் சிக்கலால்தான் அவரால் கலையில் சிறந்து விளங்க முடிகிறதா?’

நிச்சயமாக இல்லை. உளவியல் சிக்கல் என்பது மலைப்பாம்பைப் போன்றது. சத்தமே இல்லாமல், அது நம் கால்களைச் சுற்றிக்கொண்டு இருக்கும். கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் நிச்சயம் ஒருநாள் கழுத்தை நெறிக்கும். இத்தொடரில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கலைஞர்களுக்கும் அதுதான் நடந்தது. ஒருவேளை அவர்களுக்கு உளவியல் சிக்கல்கள் இல்லாமல் போயிருந்தால் இன்னமும்கூட அவர்களால் சாதித்திருக்க முடியும். எனவே, ‘உளவியல் சிக்கல்கள் சிறந்த கலைப்படைப்பைப் பெற்றுத்தரும்’ எனும் மூடநம்பிக்கையை யாரும் சுமக்க வேண்டாம்.

மேலும், இத்தொடரை வாசித்து முடிக்கும்போது, உங்களுக்குள் இயல்பாக ஒரு கேள்வி எழலாம். ’பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் உளவியலை இன்று பகுப்பாய்வு செய்வது சாத்தியமா?’

ஆம்… சாத்தியம்தான்.

இதற்குப் பெயர் ’Retrospective Diagnosis’ (பின்னோக்கி நோயறிதல்). இந்த முறையில், நோய் அல்லது உளநிலை பற்றிய 100% துல்லியத்தை யாராலும் உறுதியாக வழங்க முடியாது.

ஆனால், ஒருவரின் கடிதங்கள், நாட்குறிப்புகள், படைப்புகள், வாழ்க்கை வரலாறு மற்றும் அவரைப் பற்றிய சமகாலப் பதிவுகள் போன்றவற்றை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்வதன் மூலம், அவருடைய உளவியலை ஓரளவு நெருங்கிப் புரிந்துகொள்ள முடியும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.

இத்தொடரில் இடம்பெற்றுள்ள பிரபலங்களின் உளவியல் சார்ந்த விவரங்கள், பல்வேறு நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. கிடைக்கப்பெற்ற தகவல்களை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே என்னுடைய நோக்கம். அந்த முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.  இத்தோடு ’பிரபலங்களின் உளவியல்’ தொடர் முடிகிறது. ஆரம்பம் முதலே இத்தொடருக்குப் பெருவாரியான ஆதரவு அளித்த வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி.

முற்றும்.

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *