Skip to content
Home » பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #11 – மகேந்திர பல்லவர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #11 – மகேந்திர பல்லவர்

வடக்கில் ஹர்ஷவர்த்தனரும் மத்திய இந்தியாவில் இரண்டாம் புலகேசியும் பேரரசுகளை உருவாக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில் தென்பகுதியில் ஆட்சிக்கு வந்தவர் மகேந்திரவர்மர். அவருக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே பல்லவர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தாலும், பல்லவர்கள் என்ற அரச வம்சத்தினருக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியவர் மகேந்திரர். இத்தனைக்கும் மகேந்திரர் அவருடைய தந்தை சிம்மவிஷ்ணுவைப்போல போர் வெற்றிகளைப் பெற்றவர் இல்லை. இருப்பினும் பல துறைகளில் அவர் பதித்த முத்திரைகளின் காரணமாக வரலாற்றில் தன்னுடைய பெயரை வலுவாகப் பதித்துச் சென்றவர் மகேந்திரர்.

ஆட்சிப்பொறுப்பு

சிம்மவிஷ்ணு பல்லவராலும் பாண்டியன் கடுங்கோனாலும் களப்பிரர்கள் தமிழகத்தை விட்டு விரட்டப்பட்டவுடன், காவிரியின் வடக்குக் கரைப் பகுதிகளைப் பல்லவர்களும் தெற்கில் பாண்டியர்களும் ஆட்சி செய்யத்தொடங்கினர். தந்தை விஷ்ணு பக்தராக இருந்தாலும் மகேந்திரர் சமண சமயத்தையே முதலில் தழுவியிருந்தார். அவர் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தொண்டை மண்டலத்தில் சமணம் வலுப்பெற்றது. ஆயினும் சைவ சமய அருளாளரான திருநாவுக்கரசரின் தொடர்பால், மகேந்திரபல்லவர் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்குத் திரும்பினார்.

பெரும்பாலான அரசர்கள் அரியணை ஏறியது முதல் அண்டை நாடுகளுக்குப் படையெடுத்துப் போர் செய்வது, பேரரசை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதையே பார்த்திருக்கிறோம். ஆனால் மகேந்திரபல்லவர் அவற்றையெல்லாம் செய்யாமல் கலைகளில் ஆர்வம் செலுத்தினார். ஆந்திரப் பிரதேசத்தை ஆட்சி செய்த விஷ்ணுகுண்டின அரச வம்சத்தினர் பல்லவர்களின் நண்பர்கள். அவர்களின் தாக்கத்தால் மகேந்திரவர்மரும் குடைவரைக் கோவில்களை அமைப்பதில் கவனம் செலுத்தினார். அப்படி அவர் அமைத்த முதல் குடைவரையாக மண்டகப்பட்டுக் கோவில் கருதப்படுகிறது. தமிழ்நாட்டுக் கோவில் கட்டடக் கலையில் மண்டகப்பட்டு ஒரு புதிய யுகத்தை உருவாக்கியது எனலாம்.

மண்டகப்பட்டுக் கோவில்
மண்டகப்பட்டுக் கோவில்

இந்தக் கோவிலில் தாமே வெட்டிய கல்வெட்டு ஒன்றில் மகேந்திரபல்லவர் இப்படிக் கூறுகிறார்: ‘செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் ஏற்படுத்தப்பட்டதும் பிரம்மா, ஈஸ்வரன், விஷ்ணு ஆகியோருக்காக அர்ப்பணிக்கப்பட்டதுமான இந்தக் கோவில், விசித்திரசித்தன் என அழைக்கப்பட்ட மகேந்திர பல்லவரால் அமைக்கப்பட்டது.’

இந்தக் கல்வெட்டிலிருந்து அதற்கு முன்னால் கோவில்கள் பெரும்பாலும் செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு ஆகியவற்றாலே அமைக்கப்பட்டிருந்தது என்றும் அதை மாற்றி குடைவரையாக மகேந்திரபல்லவர் கட்ட ஆரம்பித்தார் என்றும் தெரிந்துகொள்ள முடிகிறது. அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில், பல்லவர்களும் பாண்டியர்களும் ஏராளமான பாறைக் குடைவரைக் கோவில்களை அமைக்க இந்த மரபு பெரும் தூண்டுதலாக அமைந்தது.

தவிர, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய திருமூர்த்திகளுக்கான கோவில் இது என்கிற குறிப்பு, தமிழகம் முழுவதும் மும்மூர்த்தி வழிபாடு நன்கு நிலைபெற்றிருந்ததை வெளிப்படுத்துகிறது. சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்கள் மட்டுமே அப்போது இருந்தன என்ற வாதமும் இதனால் அடிபட்டுப் போகிறது.

சாளுக்கியப் படையெடுப்பு

மண்டகப்பட்டுக் கோவிலை அடுத்து மகேந்திரபல்லவர் வட தமிழகம் முழுவதும் பல கோவில்களை கட்டும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதற்கான பெரும் தடை சாளுக்கியப் படையெடுப்பினால் வந்தது. தன்னுடைய பேரரசை விரிவடையச் செய்ய விரும்பிய இரண்டாம் புலகேசி, ஆந்திராவை ஆட்சி செய்த விஷ்ணுகுண்டினர்களை வென்ற பிறகு தமிழகத்தை நோக்கிப் படையெடுத்தார். பல்லவர்களை நோக்கிய இந்தப் படையெடுப்பிற்கு பேரரசு விரிவாக்கத்தைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

எதிர்பாராது நேர்ந்த இந்தப் படையெடுப்பை எதிர்கொள்ள தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாததால் மகேந்திரபல்லவர் காஞ்சிக் கோட்டையின் கதவுகளை அடைத்துவிட்டார். காஞ்சிபுரத்தை புலகேசியின் படைகள் முற்றுகை இட்டன. புலகேசியின் ஐஹொளேக் கல்வெட்டு பல்லவன் காஞ்சியில் ஒளிந்துகொண்டான் என்று கூறுகிறது. ஆனால் பல்லவர்கள் இதுபோன்ற போர்த்தந்திரத்தைத் தொடர்ந்து கையாளுவதை நாம் பார்க்கமுடிகிறது. எதிரியை உள்நாட்டில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழுத்து விட்டு அதன்பின் தாக்குதல் நடத்துவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். போலவே காஞ்சிக்கோட்டையின் உள்ளே பாதுகாப்பாக தன் படைகளை வைத்துக்கொண்ட மகேந்திரர், புலகேசியின் முற்றுகையை அனுமதித்தார். பலநாட்கள் முற்றுகைக்குப் பிறகு வெற்றி கிடைக்காததால், புலகேசி தெற்கு நோக்கிப் பயணம் செய்தார். அங்கே தமிழ் மூவேந்தர்களைச் சந்தித்து அவர்களைக் ‘களிப்படையச் செய்ததாக’ புலகேசியின் கல்வெட்டு கூறுகிறது.

இதற்கிடையில் வேங்கியில் புலகேசியால் நியமிக்கப்பட்டிருந்த அவரது சகோதரர் குப்ஜ விஷ்ணுவர்த்தனர் இறந்துபட்டார். அதற்கு அடுத்து அவரது மகன் பதவிக்கு வர முயன்றபோது, விஷ்ணுகுண்டின அரசர்கள் தங்கள் அரசை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அதற்குப் பல்லவர்களின் உதவியையும் நாடினார். மகேந்திரபல்லவர் விஷ்ணுகுண்டினர்களுக்கு உதவியாக ஒரு படையை அனுப்பி வைத்தார். இது தலைக்காட்டில் அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த கங்க மன்னனான துர்விநீதனை ஆத்திரமடையச் செய்தது. ஏனென்றால் விஷ்ணுவர்த்தனனின் மனைவி, கங்க மன்னனான துர்விநீதனின் மகளாவார்.

ஆகவே தன்னுடைய பேரனை ஆட்சியில் அமரவிடாமல் செய்த மகேந்திரரை நோக்கி கங்க மன்னன் படையெடுத்தான். ‘ஹூம்சாவில்’ உள்ள துர்விநீதனின் கல்வெட்டு ஒன்று  ‘துர்விநீதன் காடுவெட்டியை (பல்லவனை) போரில் வென்று தன்னுடைய மகள் வயிற்றுப் பேரனை (கீழைச்) சாளுக்கிய அரசு கட்டிலில் அமர்த்தினான்’ என்று கூறுகிறது. மேலும் துர்விநீதனின் கல்வெட்டு ‘அந்தரி, ஆலத்தூர், போலுளரே, பேர்நகர ஆகிய இடங்களில் நடந்த போர்களில் கங்க மன்னன் வெற்றி பெற்றான்’ என்றும் குறிப்பிடுகிறது. இன்னொரு கல்வெட்டு ‘மகேந்திரனின் தளபதியான வேடராசனுடன் போரிட்டு சீலாதித்தனின் சேனாதிபதி பெத்தாணி சத்தியாங்கன், பல்லவ சேனையைக் கலக்கிவிட்டு வீர சுவர்க்கம் அடைந்தான்’ என்று கூறுகிறது.

மேற்குறிப்பிட்ட கல்வெட்டுகளிலிருந்து, பல்லவர்களுக்கும் கங்கர்களுக்கும் பல இடங்களில் போர் நடந்தது என்று தெரியவருகிறது. இறுதியாக நாடு திரும்பிக்கொண்டிருந்த புலகேசியின் படைகளோடு கங்கர்கள் இணைந்து புள்ளலூர் என்ற இடத்தில் பல்லவர்களோடு போரிட்டனர். துர்விநீதனின் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள போலுளரே என்பது புள்ளலூராகவே இருக்க வேண்டும். இந்தப் போரில் பல்லவர்களுக்குப் பெரு வெற்றி கிடைத்தது. காசக்குடிச் செப்பேடுகள் மகேந்திரன் தன் எதிரி அரசர்களைப் புள்ளலூரில் அழித்தான் என்று தெளிவாக இந்தச் செய்தியைப் பதிவு செய்திருக்கின்றன. இந்தப் போரில்தான் கங்கர்களுடைய சேனாதிபதியும் உயிரிழந்திருக்கக் கூடும்.

தன்னுடைய கலையார்வத்திற்கு ஏற்பட்ட இந்தத் தடங்கலைச் சமாளித்தபிறகு மகேந்திரபல்லவர் மீண்டும் கோவில் கட்டும் பணியில் இறங்கினார். பல்லாவரம், திருவல்லம், சிங்கவரம், மகேந்திரவாடி, திருச்சிராப்பள்ளி போன்ற பல இடங்களில் உள்ள குடைவரைக் கோவில்கள் மகேந்திரபல்லவரால் கட்டப்பட்டவை ஆகும்.

கங்காதரர் சிற்பத் தொகுதி, லலிதாங்குர பல்லவ கிருகம்
கங்காதரர் சிற்பத் தொகுதி, லலிதாங்குர பல்லவ கிருகம்

இதில் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள கோவிலில், தான் புறச்சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியதை அழகாகக் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார் மகேந்திரர். ‘லலிதாங்குர பல்லவேஸ்வர க்ருஹம்’ என்று மகேந்திரரின் பெயரால் அழைக்கப்படும் அக்கோவிலில் காணப்படும் அந்தக் கல்வெட்டு முழுவதுமே அழகான கவிதையாக உள்ளது.

சிறந்த மலைகளில் முதன்மையான மலையின் உச்சியில் அமைந்த அதிசயமான கற்கோவிலில், குணபரன் என்னும் அரசன் ஸ்தாணுவை, அதாவது சிவபெருமானை, நிலைபெறச் செய்தான். அதனுடன் சேர்ந்து, அவனும் உலகங்களில் நிலைபெற்றவனாக, அதாவது அழியாப் புகழ் பெற்றவனாக ஆனான்.

மலைகளின் அரசனுடைய மகளின் கணவரான கிரீசருக்கு, அதாவது சிவபெருமானுக்கு, சத்ருமல்லன் என்னும் அரசன் இந்த மலையின் மீது ஒரு கோவிலை அமைத்தான். ‘கிரீசன்’ என்ற பெயர் ‘மலையில் உறைவவன்’ என்ற பொருளுக்கு உண்மையாவதற்காகவே அவன் இதைச் செய்தான்.

ஹரன், அதாவது சிவபெருமான், அவனிடம் அருளுடன், ‘பூமியில் உள்ள ஒரு கோவிலில் இருந்துகொண்டு, சோழர்களின் பெரும் வலிமையையோ காவிரி நதியையோ நான் எவ்வாறு காண முடியும்?’ என்று கேட்டபின், மனுவைப் போன்ற ஆட்சிமுறையைக் கொண்டிருந்த குணபரன் என்னும் அரசன், மேகங்களைத் தொடும் இந்த மலைக்கோவிலை அவருக்காக அர்ப்பணித்தான்.

இவ்வாறு, சிரா எனப்படும் மலையின் உச்சியில், தானே உருவாக்கச் செய்த ஹரனின், அதாவது சிவபெருமானின், ஒப்பற்ற கற்சிலையை மகிழ்ச்சியுடன் நிறுவிய அந்த புருஷோத்தமன், தன் மனதில் சிவனை நிலையாகக் கொண்டிருந்தவனாக, அந்த மலையின் உயர்வை அர்த்தமுள்ளதாக ஆக்கினான்.

சிவபெருமான் நதிகளை விரும்புகிறவர் என்ற காரணத்தால், கண்களுக்கு இன்பம் தரும் நீரைக் கொண்டதும், தோட்டங்களின் மாலையை அணிந்ததுபோல் அழகுற விளங்குவதும், இனிய பண்புகளைக் கொண்டதுமான காவிரியைப் பார்த்து அவள்மீது காதல் கொள்ளக்கூடும் என்று பயந்த பார்வதி, தன் தந்தையின் இல்லத்தை விட்டு நீங்கி, இந்த மலையிலேயே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினாள்.

குணபரன் என அழைக்கப்படும் அரசன் எதிர்மறையான சமயத்திலிருந்து விலகி லிங்கத்தை வழிபடுபவனாக இருப்பதனால், இந்த லிங்கத்தின் மூலம் அறிவு உலகில் நீண்ட காலம் பரவட்டும்!

இந்த மலை சோழ நாட்டின் மகுடத்தைப்போல் விளங்குகிறது. இந்த சிவபெருமானின் கோவில், அந்த மகுடத்தின் தலைசிறந்த இரத்தினத்தைப் போல் உள்ளது. சங்கரன், அதாவது சிவபெருமானின் மகிமையே அதன் ஒளியாக விளங்குகிறது.

மகேந்திரர் கட்டிய கோவில்கள் அனைத்திற்கும் சில பொதுவான அம்சங்கள் உண்டு அவை பெரும்பாலும் மலைச்சரிவுகளில் குடைந்து அமைத்தவையாகவே இருக்கும். மலையில் அடிவாரத்திலோ அல்லது உச்சியிலோ இருப்பது அரிது. தூண்கள் மூன்று பகுதிகளாக இருக்கும். அதில் மேலும் கீழும் சதுர வடிவமாக இருக்கும். தூண்களுக்கு இடையில் மூர்த்தங்களுக்கான கருவறை குடையப்பட்டிருக்கும். வெளியில் துவாரபாலர்களுடைய உருவம் பெரிதாக அலங்காரங்கள் ஏதுமில்லாமல் செதுக்கப்பட்டிருக்கும். மகேந்திரருடைய குடைவரைகளில் அவருடைய சிறப்புப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்ற கல்வெட்டு ஒன்று இருக்கும். பெரும்பாலான கோவில்களின் அருகில் நீர் நிலை ஒன்றை வெட்டுவதையும் மகேந்திரபல்லவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சென்னையில் உள்ள பல்லாவரம் (பல்லவபுரம்) என்ற இடத்தில் இது போன்ற அமைப்புகள் கொண்ட குடைவரையைக் காணலாம். தற்போது அது வேறு மதத்திற்கான வழிபாட்டு இடமாக உள்ளது. செங்கற்பட்டிற்கு அருகில் உள்ள வல்லம் என்ற இடத்தில் மூன்று குடைவரைக் கோவில்கள் உள்ளன.

வல்லம் குகைக்கோவில்
வல்லம் குகைக்கோவில்

அந்தக் கோவில்களில் உள்ள கல்வெட்டு ஒன்று

பகாப்பிடுகு லலிதாங்குரன
சத்துருமல்லன் குணபரன்
மயேந்திரப் போத்தரசன் அடியான்
வயந்தபிரி அரசர் மகன் கந்தசேனன்
செய்வித்த தேவகுலம்

என்று மகேந்திரருடைய அடியானான கந்தசேனன் செய்த கோவில் அது என்று கூறுகிறது. இந்த இடத்தில் உள்ள மற்றொரு கோவில் கல்வெட்டு, அது ‘பல்லவப் பேரரசர் மகள் கொம்மை’ அமைத்த கோவில் என்று கூறுகிறது. இது மகேந்திரருடைய மகள் அமைத்த கோவிலா என்பது சரிவரத் தெரியவில்லை.

தளவனூர் சத்ருமல்லேஸ்வரம் கோவில்
தளவனூர் சத்ருமல்லேஸ்வரம் கோவில்

மாமண்டூர், மகேந்திரவாடி போன்ற இடங்களில் அமைந்த மகேந்திரபல்லவரின் கோவில்களும் புகழ்பெற்றவை . மாமல்லபுரத்தில் உள்ள தர்மராஜ மண்டபம், ஆதிவராகர் கோவில் ஆகியவையும் மகேந்திரர் கட்டியதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

0

கோவில் கட்டும் கலையில் மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் மகேந்திரபல்லவர் சிறந்து விளங்கினார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ‘மத்தவிலாசப் பிரகசனம்’, ‘பகவதஜ்ஜுகம்’ ஆகிய இரண்டு நூல்களும் மகேந்திரவர்மரின் படைப்புகளே. மத்தவிலாசப் பிரகசனம் என்பது பல்வேறு சமயங்களைக் கேலி செய்து எழுதப்பட்ட நையாண்டி நாடகமாகும். காபாலிகன் ஒருவன் காபாலினியுடன் குடித்துவிட்டு மயங்கியிருக்கும்போது அவனுடைய கபாலத்தை ஒரு நாய் கவர்ந்து செல்ல, அதை ஒரு பௌத்தத் துறவி எடுத்ததாக நினைத்து காபாலிகன் பௌத்தத் துறவியோடு சண்டையிடுவதாகவும் அதன் பின் பாசுபதன் ஒருவனை அவன் அழைத்துப் பேசுவதாகவும் பின்னால் வெறிகொண்ட ஒருவனிடமிருந்து அந்த கபாலத்தைப் பெறுவதாகும் அமைந்துள்ள இந்த நாடகத்தில் மகேந்திரரின் சிறப்புப் பெயரான அவநிபாஜனன், குணபரன், மத்தவிலாசன் ஆகிய பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அக்காலத்தில் காபாலிகம், பௌத்தம், பாசுபதம் ஆகிய சமயங்களின் நிலையை இந்த நூல் நகைச்சுவையோடு விவரிக்கிறது. இதனை எழுதும்போது சைவ சித்தாந்தத்தை மகேந்திரர் தழுவியிருக்கக்கூடும் என்பது தெளிவு.

இலக்கியம் தவிர, இசை, நடனம் ஆகியவற்றிலும் மகேந்திரபல்லவர் சிறந்து விளங்கினார் என்பது அவரது கல்வெட்டுகளிலிருந்து தெரியவருகிறது.

விசித்திரசித்தன், நரேந்திரன், சேத்தகாரி, சத்ருமல்லன், கலகப்பிரியன், நரவாகனன், அலுப்தகாமன் போன்ற பல விசித்திரமான சிறப்புப் பெயர்களை தனக்குச் சூட்டிக்கொண்டவர் மகேந்திரர். இவருடைய காலத்தில் கிருஷ்ணை ஆற்றங்கரை வரை பல்லவப் பேரரசு விரிந்திருந்தது.

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது, கலை வரலாற்றிலும் மகேந்திரபல்லவருக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *