Skip to content
Home » மக்கள் அரசியல் #13 – கூட்டணி பரிதாபங்கள்

மக்கள் அரசியல் #13 – கூட்டணி பரிதாபங்கள்

சுதந்திரா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மினூ மசானி, டிசம்பர் 1969இல் கட்சியின் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக இந்திரா காந்தி சர்வாதிகாரியாக மாறி வருவதை மசானி புரிந்துகொண்டார். எனவே, காங்கிரஸ் (ஆர்) கட்சிக்கு எதிராக ஒரு பலமான கூட்டணியை உருவாக்க விரும்பினார். ஒரு பெரிய கூட்டணியின் தேவை குறித்து மார்ச் 1970இல் ராஜாஜியும் வெளிப்படையாக எழுதினார். பழைய காங்கிரஸ்காரர்கள் இருந்த காங்கிரஸ் (ஓ) கட்சியே மசானியின் முதல் விருப்பமாக இருந்தது. அந்தக் கட்சிக்கு மக்களவையில் 65 உறுப்பினர்கள் இருந்தனர். காங்கிரஸ் (ஓ) கட்சியைத் தவிர, ஜன சங்கத்தோடும் அவர் பேசிக் கொண்டிருந்தார்.

மொரார்ஜி, வாஜ்பாய், மசானி மூவரும் அடிக்கடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 3 கட்சிகளும் இணைந்து குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை ஒப்புக்கொண்டு கையெழுத்திடுவது என்ற மசானியின் கருத்தை அனைவரும் வரவேற்றனர். ஒரு வரைவுத் திட்டத்தை மசானி தயாரித்தார். ஆனால், அது குறித்த எவ்வித முடிவும் எட்டப்படாமல் இழுத்துக்கொண்டே போனது. இதனால் ராஜாஜி விரக்தி அடைந்தார். ஜூலை 1970இல் மசானிக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘என்னால் இயன்றவரை அனைத்தையும் செய்துவிட்டேன்; இனி துரதிர்ஷ்டத்திற்கு அடிபணிவதையும், என் முயற்சிகளை வெறும் முட்டாள்தனமான வீண் பெருமையாகக் கருதுவதையும் தவிர வேறு வழியில்லை. இளைய தலைமுறையான உங்களுக்கு இறைவன் வழிகாட்டட்டும்’ என்று வெறுத்துப்போய் எழுதியிருந்தார்.

அக்டோபர் 1970இல் காங்கிரஸ் (ஓ), ஜன சங்கம் மற்றும் பாரதிய கிராந்தி தளம் (உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலக் கட்சி; சரண் சிங் இந்தக் கட்சியில்தான் இருந்தார்) ஆகிய 3 கட்சிகளின் தலைவர்களுக்கும் மசானி கடிதம் எழுதினார். கூட்டணியின் அவசியத்தைப் பற்றி வலியுறுத்திய மசானி, ஒரு வேளை 1972க்கு முன்னரே தேர்தல் வந்தாலும் அதற்குத் தயாராக இருக்க வேண்டுமென்றும், விரைவாகக் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டுமென்றும் அதில் வற்புறுத்தினார். 1972க்கு முன்னரே தேர்தல் வருமென்று மசானிக்கு எவ்வாறு தெரிந்தது? வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானிய ஒழிப்பு ஆகியவற்றில் இந்திரா காந்தி காட்டிய வேகம் மசானியை அவ்வாறு ஊகிக்க வைத்தது. அவர் ஊகித்தவாறுதான் நடந்தது.

டிசம்பர் 1970இல் மக்களவையைக் கலைப்பதாக இந்திரா காந்தி அறிவித்தார். அதாவது, 1967இல் அமைக்கப்பட்ட நாட்டின் நான்காவது மக்களவை, அதன் ஐந்தாண்டுகளை முடிக்காமல், இடையிலேயே கலைக்கப்பட்டது. மத்தியில் அவ்வாறு நடப்பது அதுதான் முதல் முறை. 1952 முதல் ஒவ்வொரு ஐந்தாம் ஆண்டிலும் நடைபெற்று வந்த பொதுத் தேர்தல், அந்த முறை ஓராண்டுக்கு முன்னதாக 1971இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளிடையே எவ்விதக் கூட்டணியும் முடிவாகாத நிலையில், அதிரடியாக இந்த முடிவை இந்திரா காந்தி எடுத்திருந்தார். இந்த அறிவிப்பால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் திகைத்தன.

சரி, ஆனது ஆயிற்று. தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகாவது கூட்டணியை அறிவிக்கலாம் என்று மசானி எண்ணினார். அதுவும் உடனே நடக்கவில்லை. சம்யுக்த சோஷலிசக் கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் (ஓ) கட்சியின் நிஜலிங்கப்பா கூறினார். மசானிக்கு இது பிடிக்கவில்லை. இருந்தாலும் ஒப்புக்கொண்டு பொறுமை காத்தார். சம்யுக்த சோஷலிசக் கட்சியின் தலைவர்களான மது லிமாயே மற்றும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இருவரும் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.

அவர்கள் இரு கோரிக்கைகளை முன் வைத்தனர்: (1) குறைந்தபட்ச செயல்திட்டம் என்று எதுவும் இருக்கக் கூடாது, (2) ‘இந்திராவை அகற்றுங்கள்’ என்பதே கூட்டணியின் ஒரே பொதுவான முழக்கமாக இருக்க வேண்டும். இரண்டையும் மசானி எதிர்த்தார். அவருடைய எதிர்ப்பை எவர் கண்டுகொண்டார்? நிஜலிங்கப்பா தலைமையிலான காங்கிரஸ் (ஓ) கட்சியை இதற்குச் சம்மதிக்க வைத்திருந்தனர் சோஷலிசத் தலைவர்கள். ‘குறைந்தபட்ச செயல்திட்டம் என்ற ஒன்று எதற்கு வேண்டும்?’ என்று வாஜ்பாய் கேள்வி கேட்டார். மசானி வெறுத்துப் போனார். இறுதியில் சுதந்திரா கட்சியைத் தவிர்த்துவிட்டு கூட்டணி அறிவிக்கப்பட்டது. வாஜ்பாய் பத்திரிகை நிருபர்களுக்கு அறிவித்தார்: ‘நாங்கள் மூவராக இருந்தோம், இப்போதும் மூவராகவே இருக்கிறோம். ஒரே வித்தியாசம் என்னவென்றால், சுதந்திரா கட்சி போய்விட்டது; அதற்குப் பதிலாக சம்யுக்த சோஷலிசக் கட்சி வந்துவிட்டது’.

ஜனவரி 1971இல் சென்னையில் சுதந்திரா கட்சியின் தேசியச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தேர்தலைத் தனியாக எதிர்கொள்ளலாம் என்று மசானி கூறினார். கட்சியில் இருந்த பெரும்பாலானவர்களின் எண்ணம் இதற்கு மாறாக இருந்தது. எப்படியாவது கூட்டணியில் சேர்ந்துவிட வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தனர். இந்திரா காந்தியின் எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்துவிடக் கூடாது என்று காரணம் கூறினர். பேராசிரியர் ரங்காவும், ராஜாஜியும் இந்தக் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ‘நம்பகத்தன்மையும் கொள்கை உறுதியும் இல்லாத ஒரு கூட்டணியின் அங்கமாகி வீழ்வதைவிட, தனியாக நின்று வீழ்ந்தால் கூட கட்சிக்குப் பெருமைதான்’ என்ற மசானி உள்ளிட்டோரின் கருத்து புறந்தள்ளப்பட்டது.

தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்யலாமா என்று மசானி யோசித்தார். வேட்புமனு தாக்கல் தொடங்க 20 நாட்களே இருந்த நிலையில், கட்சியின் தலைவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தால், அது கட்சியினரின் ஊக்கத்தைப் பெருமளவில் பாதிக்கும் என்ற எண்ணம் தோன்றவே, அந்த எண்ணத்தை மசானி கைவிட்டார். இருந்தாலும், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறினார். எனவே, சுதந்திரா கட்சியின் சார்பில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்த டாக்டர். கூப்பர் (வங்கிகளை நாட்டுடைமை ஆக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்) மற்றும் தண்டேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குச் சென்ற சுதந்திரா கட்சிக்கு என்ன மரியாதை கிடைத்திருக்கும் என்பதற்கு ஒரு சோற்றுப் பதம்: கூட்டணியில் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை. காங்கிரஸ் (ஓ) கட்சிக்கு இருநூறுக்கும் மேற்பட்ட இடங்கள்; ஜன சங்கத்திற்கு 150 சொச்ச இடங்கள்; சம்யுக்த சோஷலிசக் கட்சிக்கு 90 சொச்சம். சுதந்திரா கட்சிக்கு வெறும் 59 இடங்கள்! முந்தைய தேர்தலில் 178 இடங்களில் நின்று 44 இடங்களில் வென்று, மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த நிலையில் இருந்த சுதந்திரா கட்சியின் நிலைமை, 1971 தேர்தலில் பரிதாபத்திற்குரிய ஒன்றாக மாறிப்போனது. ‘இஷ்டமிருந்தால் இருந்து கொள்ளுங்கள்; இல்லையென்றால் வெளியேறுங்கள்’ என்ற மனப்பான்மையுடன் சுதந்திரா கட்சி நடத்தப்பட்டது. எப்பாடுபட்டாவது இந்திரா காந்தியைத் தோற்கடிக்க வேண்டுமென்ற காரணத்திற்காகவும், இந்திரா காந்திக்கு எதிராக விழக்கூடிய ஓட்டுகளைப் பிரிக்கக் கூடாதென்ற காரணத்திற்காகவும் கூட்டணியில் சுதந்திரா கட்சி தொடர்ந்தது.

அதிகாரபூர்வமாகக் கூட்டணிக்கு எந்தப் பெயரும் வைக்கப்படவில்லை என்றாலும், கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தம் கூட்டணியை ‘பெருங்கூட்டணி’ என்று அழைக்கலாயினர். செய்தியாளர்களைச் சந்தித்த மசானி, இந்தக் கூட்டணியைப் ‘பெயரற்ற கூட்டணி’ என்று குறிப்பிட்டார். ‘பெயர் வைக்க வேண்டியதுதானே!’ என்று செய்தியாளர்கள் கூறியபோது, ‘நான் ஏன் பெயர் வைக்க வேண்டும்? அது என் குழந்தை கிடையாதே!’ என்று மசானி பதிலளித்தார். தேர்தலில் சுதந்திரா கட்சியின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பது அப்போதே பலருக்கும் புரிந்திருக்கும்.

1971 பொதுத் தேர்தல்

மார்ச் 1971இல் தேர்தல் நடக்குமென்று அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலோடு, தமிழ்நாடு, ஒரிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலச் சட்டப்பேரவைகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து அனைத்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடக்காமல் போனது அதுவே முதல் முறை. கிட்டத்தட்ட 27.5 கோடி வாக்காளர்கள் அந்தத் தேர்தலில் வாக்களிக்க இருந்தனர்; இவர்களுள் 2 கோடி வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்கக் கூடியவர்களாக இருந்தனர். அரசியல் களம் சூடானது.

தன்னுடைய 68 பத்திகள் கொண்ட விளக்கமான தேர்தல் அறிக்கையில், 12 அம்சத் திட்டத்தை முன்வைத்தது இந்திரா காந்தியின் காங்கிரஸ் (ஆர்) கட்சி. வறுமையை ஒழித்தல், பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைத்தல், சமூக அநீதியை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகிய இலக்குகளை முன்வைத்த அக்கட்சி, ஜனநாயக சோஷலிசத்தை நோக்கிய முன்னேற்றத்தைத் தொடர்ந்திடப் பேராதரவு நல்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது. திமுகவுடன் கூட்டணி அமைத்த இந்திரா காந்தி, தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதிகூட வாங்கிக் கொள்ளாமல், 10 மக்களவைத் தொகுதிகளுடன் திருப்தியடைந்தார். தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வகிப்பதைவிடவும், மத்தியில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதே முக்கியம் என்று இந்திரா காந்தி கருதியதாகவே இந்த முடிவு பார்க்கப்பட்டது.

பெருங்கூட்டணியின் முதன்மையான கட்சியான காங்கிரஸ் (ஓ), தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் (ஆர்) கட்சியைக் கடுமையாக விமர்சித்திருந்தது. சோவியத் யூனியனைச் சார்ந்து நிற்கும் கட்சியென்றும், ஆட்சியில் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய கட்சியென்றும் காங்கிரஸ் (ஆர்) கட்சியை அது விமர்சித்தது. சுதந்திரா கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் காங்கிரஸ் (ஆர்) கட்சி விமர்சிக்கப்பட்டது. கம்யூனிஸ்டுகளின் உதவியுடனும் தூண்டுதலுடனும், அரசியலமைப்புச் சட்டத்தையே சிதைத்ததாகக் காங்கிரஸ் (ஆர்) கட்சியின்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஊழல் மலிந்த அரசாங்கம் என்றும், பொதுமக்களின் நலங்களுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டு வந்த ஆட்சி என்றும் இந்திரா காந்தியின் ஆட்சியைத் தனது தேர்தல் அறிக்கையில் விமர்சித்திருந்தது சம்யுக்த சோஷலிசக் கட்சி. முன்னெப்போதும் இல்லாத வகையில், நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம் இரண்டையும் அவமதிப்புடன் நடத்தியதாக, இந்திரா காந்தியின் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியது ஜன சங்கத்தின் தேர்தல் அறிக்கை.

1969இல் காங்கிரஸ் (ஆர்) மற்றும் காங்கிரஸ் (ஓ) என்று காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்துவிட்ட நிலையில், கட்சியின் சின்னமான ‘நுகத்தடியில் பூட்டப்பட்ட இரண்டு காளைகள்’ சின்னத்தை எந்தப் பிரிவு பயன்படுத்துவது என்ற பிரச்னை கிளம்பியது. அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் (ஆர்) கட்சியில் இருப்பதாலும், அதிக எண்ணிக்கையிலான மாநில ஆட்சிகள் காங்கிரஸ் (ஆர்) கட்சியின் வசத்தில் இருப்பதாலும், காங்கிரஸ் (ஆர்) கட்சிக்கு அந்தச் சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது காங்கிரஸ் (ஓ). தேர்தல் முடியும் வரை, எந்தக் கட்சிக்கும் அந்தச் சின்னத்தை ஒதுக்கக் கூடாதென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, காங்கிரஸ் (ஆர்) கட்சிக்கு ‘கன்றுக்குட்டியுடன் கூடிய பசு’ சின்னமும், காங்கிரஸ் (ஓ) கட்சிக்கு ‘ஒரு பெண்ணால் இயக்கப்படும் ராட்டை’ சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

‘இந்திராவை அகற்றுவோம்’ என்ற ஒரே வாதத்தையே அந்தத் தேர்தலில் பெருங்கூட்டணி முன்வைத்தது. இதற்குச் சரியான பதிலடியை இந்திரா காந்தி அளித்தார். ‘இந்திராவை அகற்றுவோம்’ என்று எதிர்க்கட்சிகள் முழங்குகின்றன; ‘வறுமையை அகற்றுவோம்’ என்று நாங்கள் முழங்குகிறோம்! எனப் பேசினார். முன்பு, மன்னர் மானிய ஒழிப்பு நடவடிக்கை செல்லாதென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்திரா காந்தியின் ராஜினாமாவைக் கோரின. ‘தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற மாண்புமிகு உறுப்பினர்களின் கருத்துகளை நான் குறித்துக் கொண்டே’ என்று இந்திரா காந்தி பதில் கூறியிருந்தார்.

அவ்வாறே மக்களவையைக் கலைத்து, முன்கூட்டியே தேர்தலை வருவித்திருந்தார். யாரும் எதிர்பார்த்திராத சமயத்தில், எதிர்க்கட்சிகளிடையே கூட்டணி உருவாகாத நிலையில், தன்னுடைய சுயலாபத்தைக் கருதி, 14 மாதங்களுக்கு முன்னரே மக்களவையைக் கலைத்துவிட்டதாகச் சில எதிர்க்கட்சிகள் இந்திராவைக் கண்டித்தன. அதற்கும் பதிலடி கொடுத்த இந்திரா, ‘அவர்கள் பரிந்துரைத்தபடியே இப்போது தேர்தல்கள் வந்துவிட்ட நிலையில், அவர்கள் ஏன் கோபமாகவும் சோர்வாகவும் இருக்க வேண்டும்? மகிழ்ச்சியாக அல்லவா இருக்க வேண்டும்!’ என்று எதிர்க்கட்சிகளைக் கிண்டல் செய்தார். தனது கட்சியின் ஒட்டுமொத்தத் தேர்தல் பிரச்சாரத்தையும் தனி ஒருவராக முன்னின்று நடத்தினார். நேருவைவிடவும் இந்த விதத்தில் அவர் ஒருபடி மேலே சென்றிருந்தார். அவரது கட்சியின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் அரசியல் பின்னணி ஏதுமற்ற அறிமுகமில்லாத நபர்களாக இருந்தனர்; அவர்கள் முழுமையாக இந்திரா காந்தியின் ஆளுமையை மட்டுமே நம்பிக் களத்தில் நின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் பழைய தலைவர்கள் இருந்த காங்கிரஸ் (ஓ) கட்சிக்கு மக்களிடையே பெரிதாக வரவேற்பு இருக்கவில்லை. தவிரவும், கூட்டணி ஒதுக்கீடுகளைத் தாண்டியும் பல தொகுதிகளில், கூட்டணிக் கட்சியினரே போட்டி வேட்பாளர்களை நிறுத்திக் குழப்பம் ஏற்படுத்தியிருந்தனர். பெருங்கூட்டணியில் ஈடுபாடு காட்டாத மசானியும், தேர்தல் பிரச்சாரத்தைப் பெரிதும் தவிர்த்தார். இருப்பினும், இந்திரா காந்தியின் எதிர்ப்பு வாக்குகள் தம் கூட்டணிக்குக் கிடைத்து, அதனால் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் இருந்தனர். அதிகபட்சமாக 230 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் (ஆர்) கட்சியால் வெல்லக்கூடும் என்று பலரால் கணிக்கப்பட்டது. கட்சி ஒன்றுபட்டு இருந்தபோதே 1967 தேர்தலில் 283 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்த இந்திரா காந்தியால், கட்சி இரண்டாகப் பிரிந்ததற்குப் பிறகு அதை விடவும் குறைவான எண்ணிக்கையிலான இடங்களில்தான் வெல்ல முடியும் என்று காரணம் கூறப்பட்டது. ஆனால், பொதுமக்களின் பெருவாரியான ஆதரவு யாருக்கு என்பது தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது.

தேர்தல் நடந்த 518 தொகுதிகளில், 441 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் (ஆர்) கட்சி, 352 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதாவது, மக்களவையில் மூன்றில் இரு மடங்கிற்கும் அதிகமான இடங்களில் அக்கட்சி வென்றிருந்தது. 1967 தேர்தலில் சற்றுச் சறுக்கியிருந்த இந்திரா காந்தி, தனது தந்தை பெற்ற வெற்றிகளைப்போல 1971 தேர்தலில் பெருவெற்றி பெற்றிருந்தார். பெருங்கூட்டணி காணாமல் போயிருந்தது. மொத்தமாக 49 இடங்களில் மட்டுமே அந்தக் கூட்டணி வென்றிருந்தது. அதிகபட்சமாக, ஜன சங்கம் 22 இடங்களில் வெற்றி அடைந்திருந்தது. 238 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் (ஓ) கட்சி, 16 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. சம்யுக்த சோஷலிசக் கட்சி மூன்றே இடங்கள் பெற்றிருந்தது. அக்கட்சியின் மது லிமாயே, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் தோற்றுப் போயிருந்தனர்.

சுதந்திரா கட்சி 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ராஜ்கோட் தொகுதியில் ஏற்கெனவே 2 முறை (1963 இடைத் தேர்தல் மற்றும் 1967 தேர்தல்) வென்றிருந்த மசானி, அந்த முறை 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் (ஆர்) கட்சியின் வேட்பாளரிடம் தோற்றிருந்தார். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் மைசூர் (கர்நாடக மாநிலத்தின் அன்றைய பெயர்) ஆகிய 4 தென்னாட்டு மாநிலங்களிலும், பெருங்கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்றிருந்த ஒரே நபர் – காமராஜர் (நாகர்கோவில் தொகுதி). இந்திரா அலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் காணாமல் போயிருந்தன – மினூ மசானி அதற்கு விதிவிலக்காக அமையவில்லை.

சுதந்திரா கட்சி கலைப்பு

இந்திய அரசியலின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது 1971 தேர்தல் முடிவுகள். 352 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்திருந்த காங்கிரஸ் (ஆர்) கட்சிக்கு அடுத்த இடத்தில், வெறும் 25 உறுப்பினர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. எதிர்க்கட்சி என்று அதிகாரபூர்வமாக எந்தக் கட்சியையும் சொல்ல முடியாத அளவிற்கு அந்தத் தேர்தலில் காங்கிரஸ் (ஆர்) கட்சி பெருவெற்றி பெற்றிருந்தது. இந்த அளவிலான வெற்றியை இந்திரா காந்தியே எதிர்பார்த்திருக்கவில்லை. தாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் 30 இடங்கள் அதிகமாக வென்றிருப்பதை இந்திரா காந்தி ஒப்புக்கொண்டார். சென்ற ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன மன்னர் மானிய ஒழிப்பு மசோதாவை, இந்த முறை வெகு எளிதாக நிறைவேற்றினார்.

தோல்விக்கான காரணத்தை மசானி ஆராயத் தொடங்கினார். ஒரு கொள்கை ரீதியான கூட்டணியை உருவாக்க மசானி முயற்சித்தார்; மற்றவர்களோ இந்திராவைத் தோற்கடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினர். கூட்டணிக் கட்சிகளிடையே ஒரு பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை மசானி விரும்பினார்; மற்றவர்களோ ‘இந்திராவை அகற்றுவோம்’ என்ற கோஷத்தை மட்டுமே விரும்பினர். கொள்கையற்ற கூட்டணிக்கு எதிராக அவர் எச்சரித்தார்; யாரும் கேட்கவில்லை. தனியாகப் போட்டியிடலாம் என்றார்; ராஜாஜி உட்பட எவரும் அதை ஏற்க மறுத்தனர். கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிகளுக்கான இடப்பங்கீட்டின்போது சுதந்திரா கட்சி அவமானப்படுத்தப்பட்டது; ஆனாலும், அவர் கட்சித் தலைவர் பதவியிலும், கூட்டணியிலும் நீடித்தார். இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய எச்சரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல் போனதன் விளைவே பெருங்கூட்டணியின் பெருந்தோல்வி என்பதை மசானி உணர்ந்தார்.

352 இடங்களில் வென்றிருந்தபோதும் காங்கிரஸ் (ஆர்) கட்சி பெற்றது 43% வாக்குகளே என்பதை மசானி அறிந்திருந்தார். என்றாலும், தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதாகவும், அதன் விளைவாகவே காங்கிரஸ் (ஆர்) கட்சி வெற்றிபெற்றதாகவும் வைக்கப்பட்ட வாதங்களை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘பிரதமரின் மீதும் அவரது கட்சியின் மீதும் வாக்காளர்கள் வைத்திருக்கும் தெளிவான நம்பிக்கையை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன; ஜனநாயகவாதிகளான எதிர்க்கட்சியினர் இந்தத் தீர்ப்பையும் அதன் விளைவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார். தேர்தலில் கட்சியின் மோசமான செயல்பாட்டிற்குத் தார்மீக ரீதியாகப் பொறுப்பேற்ற மசானி, கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். ஹெச்.எம். படேல் என்பவர் (பின்னாளில் ஜனதா அரசாங்கத்தில் நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்) சுதந்திரா கட்சியின் தலைவர் ஆனார்.

தலைவர் பதவியிலிருந்து விலகினாலும், கட்சியில் நீடித்தார் மசானி. டிசம்பர் 1972இல் ராஜாஜி மறைந்தார். ராஜாஜியின் மறைவிற்குப் பிறகு, ஏப்ரல் 1973இல் சென்னையில் நடந்த கட்சியின் 6வது தேசிய செயற்குழுவை மசானி தொடங்கி வைத்தார். 1971 தேர்தலுக்குப் பிறகு சுதந்திரா கட்சி வேகமாகத் தேயத் தொடங்கியது. பல மாநிலங்களில் அதன் அமைப்பு பலவீனமடைந்தது. கட்சியின் முக்கிய நபர்கள் சிலர் அரசியலிலிருந்து விலகினர்; இன்னும் சிலர் பிற கட்சிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினர். 1967இல் நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாகத் திகழ்ந்த சுதந்திரா கட்சி, சில ஆண்டுகளிலேயே தனது இருப்பிற்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. வழிநடத்திய ராஜாஜி காலமாகியிருக்க, மசானி தலைவர் பதவியை விட்டு விலகியிருக்க, நூலறுபட்ட காத்தாடியைப் போல, அரசியல் வானில் அந்தக் கட்சி அங்குமிங்கும் அலைந்தது. இறுதியில் கட்சியைக் கலைத்து விடுவதென்று முடிவானது. இந்த முடிவை எடுத்தவர் பிலூ மோடி – ஹெச்.எம்.படேலுக்குப் பிறகு கட்சியின் தலைவர் பதவிக்கு வந்தவர்.

பாரதிய கிராந்தி தளத்திலிருந்து வெளியேறி ஒரு புதுக் கட்சியைத் தொடங்க எண்ணியிருந்தார் சரண் சிங். அவர் உருவாக்கும் புதிய கட்சியோடு சுதந்திரா கட்சியை இணைத்துவிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. ‘பாரதிய லோக் தளம்’ என்று சரண் சிங் கட்சிக்குப் பெயரிடப்பட்டது. இந்தக் கட்சியுடன் இணைவது குறித்து ஆலோசிக்க, டெல்லியில் ஆகஸ்ட் 1974இல் சுதந்திரா கட்சியின் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மசானி, கட்சியின் முடிவை எதிர்த்துப் பேசினார். தேர்தலில் தோற்றுப் போயிருந்தாலும் சுதந்திரா கட்சியை ஒரு தேசிய கட்சியாகவே தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருந்ததைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், அவ்வாறு தேசிய கட்சியாக இருந்துவிட்டு ஒரு மாநிலக் கட்சியுடன் இணைவது அவசரமான முடிவு என்று எடுத்துரைத்தார். வழக்கம்போல மசானியின் பேச்சு எடுபடவில்லை. பாரதிய லோக் தளத்துடன் சுதந்திரா கட்சி இணைக்கப்பட்டது. தீவிர அரசியலில் இருந்து மூன்றாவது மற்றும் இறுதி முறையாக மசானி விலகினார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *