1956 அக்டோபரில், சூயஸ் கால்வாயை ராணுவ பலத்தால் மீண்டும் கைப்பற்ற பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுடன் ரகசியமாகக் கைகோர்க்க ஒப்புதல் அளித்தார் அப்போதைய பிரிட்டனின் பிரதமர் சர் அந்தோணி ஈடன். விக்டோரியா மகாராணி காலத்து பால்மர்ஸ்டன் பிரபுவின் தைரியமான ஏகாதிபத்தியப் பாரம்பரியத்தில்தான் தானும் நடப்பதாக அவர் நம்பினார். ஒரு வேகமான அதிரடி நடவடிக்கை போதுமானது; நடந்ததை உலகம் ஏற்றுக்கொள்ளும்; அமெரிக்காவுடனான கருத்து வேறுபாடு அட்லாண்டிக் கூட்டணியை உடைக்காது என்று அவர் கணக்கிட்டார். ஆனால் இரண்டே வாரங்களில் அந்தக் கணக்குகள் சிதறின. பிரிட்டனின் வல்லரசு மாயை, போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு என்ற பாறையில் மோதி உடைந்த தருணமே சூயஸ் நெருக்கடி.
இதன் அடிப்படை எகிப்திய தேசியவாதத்துக்கும் ஐரோப்பிய மூலோபாய நலன்களுக்கும் இடையிலான மோதலில் இருக்கிறது. ஜூலை 1952இல் 34 வயது கர்னல் ஜமால் அப்தெல் நாசரின் கட்டுப்பாட்டில் இருந்த ஃப்ரீ ஆஃபீசர்ஸ் எனும் எகிப்து ராணுவத்தின் ரகசியப் புரட்சி இயக்கம், மன்னர் ஃபரூக்கின் காலாவதியான முடியாட்சியை மக்களின் ஆதரவுடன் தூக்கியெறிந்தது. எகிப்து சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்றால், பிரிட்டிஷ் படைகள் அங்கிருந்து நீங்குவதும், பிரிட்டன்-பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்த சூயஸ் கால்வாய் நிறுவனத்தின் ஆட்சி முடிவுக்கு வருவதும் நடக்கவேண்டும் என்று நாசர் நம்பினார்.
1954 அக்டோபர் ஒப்பந்தத்தின்படி கால்வாய் பகுதியிலிருந்த 70,000 பிரிட்டிஷ் வீரர்கள் வெளியேறினார்கள். ஆனால் 1968 வரை உரிமை வைத்திருந்த சூயஸ் கால்வாய் நிறுவனம், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார எலும்புக்கூடாக அங்கேயே நின்றது. ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் இந்தக் கால்வாய் வெறும் நீர்வழி மட்டும் அல்ல; எண்ணெய், வர்த்தகம், கடற்படை அணுகல், பேரரசு கௌரவம் ஆகிய அனைத்தும் அதனுள் அடைபட்டிருந்தன.
முதல் தீப்பொறியை அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் ஃபாஸ்டர் டல்லஸ் பற்றவைத்தார். கம்யூனிச சீனாவை எகிப்து அங்கீகரித்ததும், 1955இல் செக்கோஸ்லோவாக்கியாவுடன் ஆயுத ஒப்பந்தமும் செய்ததும், சோவியத் முகாமுக்குப் பருத்தி விற்றதும் அவரை எரிச்சலடையச் செய்தன. 19 ஜூலை 1956 அன்று எகிப்தின் நைல் நதியின் குறுக்கே கட்டப்படவிருந்த அஸ்வான் உயர் அணைக்கான அமெரிக்க நிதியுதவியை அவர் திரும்பப் பெற்றார்; பின்னர் பிரிட்டனும் அதையே செய்தது. இதற்கு எதிரான நாசரின் பதில் உலகை அதிர வைத்தது.
ஜூலை 26ஆம் தேதி எகிப்தின் வடக்கே, அதாவது மத்தியத்தரைக் கடலோரம் இருந்த அலெக்ஸாண்ட்ரியா நகரத்தின் மன்ஷியா சதுக்கத்தில் 2.5 லட்சம் மக்களுக்கு முன்னால் அவர் உரையாற்றினார். உரையின் நடுவில் சூயஸ் கால்வாயை வடிவமைத்த பிரெஞ்சு பொறியாளர் டி லெஸெப்ஸ் என்ற பெயரை அவர் உச்சரித்தவுடன், முன்கூட்டியே காத்திருந்த எகிப்து படைகள் நாடு முழுவதுமிருந்த சூயஸ் கால்வாய் நிறுவன அலுவலகங்களைக் கைப்பற்றின. ‘எங்கள் உயிர்கள், எங்கள் மண்டையோடுகள், எங்கள் எலும்புகள், எங்கள் ரத்தத்தால்தான் இந்தக் கால்வாயைத் தோண்டினோம்’ என்று நாசர் முழங்கினார். பங்குதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டாலும், லண்டன் மற்றும் பாரிஸில் இது போர் அறிவிப்பாகவே பார்க்கப்பட்டது.
அந்தோணி ஈடன் இந்த நெருக்கடியைப் புரிந்துகொண்ட விதமே பிரச்னைகளின் தொடக்கம். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் சேம்பர்லேன் பின்பற்றிய சமாதானக் கொள்கை, ஜெர்மனியின் தெற்கே உள்ள முக்கிய நகரமான மியூனிக் மாநாட்டில் எப்படி ஒரு மாபெரும் துரோகத்தில் முடிந்தது என்பதை அவர் கண்கூடாகப் பார்த்திருந்தார் என்பதால் நாசரை அவர் ஒரு சுதந்திர நாட்டின் தலைவராகப் பார்க்கவில்லை; ரைன்லேண்டை மீறிய ஹிட்லரின் புதிய வடிவமாகவே அவரைக் கற்பனை செய்தார். ‘நாசர் ஓர் அரபு முசோலினி’ என்றார். ஆனால் இழப்பீடு கொடுத்து கால்வாயை தேசியமயமாக்குவது ராணுவ ஆக்கிரமிப்பு அல்ல; 1956 என்பது 1938 அல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. 1953இல் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு அளிக்கப்பட்ட ஆம்பெடமைன், பார்பிட்யூரேட் மருந்துகள் அவரது முடிவெடுக்கும் திறனைச் சீர்குலைத்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
பிரான்ஸின் நோக்கம் இன்னும் நேரடியாக இருந்தது. அல்ஜீரியப் போரில் அல்ஜீரியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஆயுதக் குழுவான எஃப்.எல்.என். அமைப்புக்கு கெய்ரோ வழங்கிய ஆதரவும் ஆயுதப் பாதைகளும் பாரிஸைக் கொதிக்க வைத்திருந்தன. பிரான்ஸ் நாட்டின் அப்போதைய சோசலிசப் பிரதமரான கய் மோலட் அரசுக்கு, நாசரைத் தண்டிப்பது அல்ஜீரிய போரின் ஒரு பகுதியாகவே தோன்றியது. பிரிட்டன் இன்னும் பேரரசின் மரியாதையைக் காப்பாற்றப் போராடியது; பிரான்ஸ் தனது வட ஆப்பிரிக்கக் காயத்திற்குப் பழிவாங்கப் போராடியது.
அக்டோபர் 22-24 இடையில் பாரிஸ் அருகிலுள்ள செவ்ரெஸில் ரகசியச் சதி இறுதி செய்யப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் பிரதிநிதிகள், குறிப்பாக இஸ்ரேல் நாட்டின் முதல் பிரதமர் டேவிட் பென் குரியன், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் சிமோன் பெரெஸ், மற்றும் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி மோஷே தயான் ஆகியோர் பின்வருமாறு திட்டமிட்டனர்.
முதலில் இஸ்ரேல் எகிப்தின் கிழக்கே உள்ள மாபெரும் பாலைவனமான சினாயைத் தாக்கும். பிறகு பிரிட்டன், பிரான்ஸ் இரண்டும் நடுநிலையாளர்களைப்போல் நடித்து, சூயஸ் கால்வாயிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரம் எகிப்தும் இஸ்ரேலும் பின்வாங்க வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கும். தன் நாட்டிலிருந்து பின்வாங்கச் சொல்லும் இந்த நிபந்தனையை எகிப்து நிராகரிக்கும்; அதைக் காரணமாக்கி கால்வாயைப் பாதுகாக்கும் பெயரில் பிரிட்டிஷ்-பிரெஞ்சுப் படைகள் இறங்கும். இதுதான் அந்தத் திட்டம்!
இந்த நெறிமுறை ஒப்பந்தத்தை அழிக்க ஈடன் முயன்றாலும், அது பல தசாப்தங்களாக வெளியே தெரியாமல் இஸ்ரேலிய அரசு ஆவணக் காப்பகத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தம், ஒரு ராணுவ உத்தரவைப்போல் ஒவ்வொரு நடவடிக்கைக்குமான கால அட்டவணையை மிகத் துல்லியமாக வரையறுத்திருந்தது.
சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் இருந்த இஸ்ரேலியப் படைகள், இன்னும் வந்து சேராத ஓர் எல்லைக்கோடு வரை எகிப்து பின்வாங்க வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கைதான், இந்தச் சதியை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியது. பிரிட்டனின் அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த செல்வின் லாயிட், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான காமன்ஸ் சபையில் இது சதி அல்ல என்று எவ்வளவு மறுத்துச் சொல்லியும் எவரும் அதை நம்பத் தயாராக இல்லை. இதன் பிறகு, தனது கூட்டாளிகளை ‘தயங்கும் கூட்டாளிகள்’ என்று பென் குரியன் விமர்சித்தது, அவரது வழக்கமான மிகக் கச்சிதமான ராஜதந்திர வார்த்தை பிரயோகமாகவே அமைந்தது.
அக்டோபர் 29ஆம் தேதி, இஸ்ரேல் ராணுவத்தின் தளபதி ஏரியல் ஷரோன் தலைமையிலான பாராசூட் வீரர்கள் சினாய் பாலைவனத்தின் நடுவே உள்ள குறுகிய மலைப்பாதையான மிட்லா கணவாயில் இறக்கப்பட்டதும், ஆபரேஷன் காதேஷ் தொடங்கியது. சில நாட்களிலேயே இஸ்ரேல் சினாயைக் கைப்பற்றியது; சுமார் 170 வீரர்களை இழந்தது. பிரிட்டிஷ்-பிரெஞ்சு படைகளின் குண்டுவீச்சால் 48 மணி நேரத்தில் எகிப்தின் பெரும்பாலான போர் விமானங்கள் அழிந்தன. நவம்பர் 5ஆம் தேதி, சூயஸ் கால்வாயின் வடக்கே உள்ள துறைமுக நகரமான போர்ட் சயீத்தில் பாராசூட் வீரர்கள் இறங்கினர்; மறுநாள் கடல் மற்றும் தரைவழிப் படைகளும் கரை ஏறின. ராணுவ ரீதியாக நடவடிக்கை வெற்றியாக இருந்தது. ஆனால் எகிப்து கால்வாயில் கப்பல்களை மூழ்கடித்ததால், பல மாதங்களுக்கு சூயஸ் மூடப்பட்டது. ‘கால்வாயைப் பாதுகாக்க’ வந்த ஆக்கிரமிப்பே அதன் வர்த்தகத்தை முடக்கியது.
சர்வதேச எதிர்வினை மின்னல் வேகத்தில் வெடித்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் படைகள் திரும்ப வேண்டும் என்கிற தீர்மானங்களைப் பிரிட்டனும் பிரான்சும் வீட்டோ செய்தன; அதுவே அவர்களின் நடுநிலை வேஷத்தைக் கிழித்தெறிந்தது. ஐநா பொதுச்சபையில் ஆப்பிரிக்க-ஆசிய நாடுகளும், சோவியத் யூனியனும் இதைக் கடுமையாகக் கண்டித்தன. பிரதமர் ஈடனை அதிர்ச்சியடையச் செய்தது அமெரிக்காவின் கோபம். அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஐசனோவருக்கு இது தனிப்பட்ட அறநெறி மீறலும், அரசியல் தந்திரத் தவறுமாகும். அமெரிக்கத் தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன், ஹங்கேரியில் சோவியத் டாங்கிகள் புரட்சியை நசுக்கும் அதே நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. ‘பிரிட்டனும் பிரான்சும் எகிப்தில் இதையே செய்துகொண்டிருக்கும்போது, ஹங்கேரி பற்றி நாம் எந்த முகத்துடன் பேசுவது?’ என்ற அவரது கேள்விக்குள்ளேயே தீர்ப்பு இருந்தது.
ஐசனோவர் பயன்படுத்திய ஆயுதம், ராணுவம் அல்ல; பொருளாதாரத் தடையாகும். ஊக வணிகத் தாக்குதலில் ஸ்டெர்லிங் வாரத்திற்கு இன்றைய மதிப்பில் சுமார் 9,545 கோடி ரூபாய் அளவுக்கு ரத்தம் சொரிந்தது. சூயஸ் போரை அமைச்சரவையில் மிகத் தீவிரமாக ஆதரித்த அவரே, சர்வதேச நாணய நிதியம் மூலமாக அமெரிக்காவின் மாபெரும் ஆதரவைப் பெறாவிட்டால் பிரிட்டன் ஒரு மாபெரும் பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும் என்று ஈடனை எச்சரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் போரை நிறுத்தாவிட்டால் எந்த உதவியும் இல்லை என்று வாஷிங்டன் தெளிவாகச் சொன்னது.
அதே நேரத்தில் நவம்பர் 5ஆம் தேதி சோவியத் யூனியனின் அமைச்சர்கள் குழுவின் தலைவரான நிகொலாய் புல்கானின் அனுப்பிய சோவியத் கடிதங்கள், லண்டன் மற்றும் பாரிஸுக்கு எதிராக ராக்கெட் ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்று பகிரங்கமாக மிரட்டின. தற்காத்துக்கொள்ளத் தன்னிச்சையான அணு ஆயுதங்கள் இல்லாத அரசாங்கங்கள்மீது இந்த மிரட்டல் ஒரு மாபெரும் உளவியல் தாக்குதலை நடத்தியது. ஹங்கேரியில் நிகிதா குருசேவ் ராக்கெட்டுகளுக்குப் பதிலாக வெறும் டாங்கிகளை மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருந்தாலும், அந்த அணு நிழல் பயத்தை அதிகரித்தது.
இந்த நெருக்கடியில் கனடாவின் வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த லெஸ்டர் பியர்சன் முக்கியத் தீர்வை முன்வைத்தார். போரில் ஈடுபட்ட வல்லரசுகளைத் தவிர்த்து, நடுநிலை நாடுகளால் ‘ஐக்கிய நாடுகள் அவசரகாலப் படை’ எனும் ஒரு படையை உருவாக்கலாம் என்றார். இது தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் படைகளைப் பின்வாங்கும் வழியைத் தந்தது. படையெடுப்பு தொடங்கி 43 மணி நேரத்திற்குப் பிறகு, நவம்பர் 6 நள்ளிரவில் பிரிட்டன் போரை நிறுத்த உத்தரவிட்டது. அந்த முடிவு ராணுவ தோல்வியால் அல்ல; பொருளாதார முற்றுகையால் எடுக்கப்பட்டது. 1957 மார்ச் வரை படைகள் திரும்பின. சூயஸ் கால்வாய் எகிப்தின் இறையாண்மைக்குள் உறுதியாகத் திரும்பியது. நாசர் ஆரம்பத்திலிருந்தே நாடியது இதுதான், அதுவே அவருக்கு இறுதி வெற்றியாகக் கிடைத்தது.
9 ஜனவரி 1957 அன்று ஈடன் உடல்நலக் காரணத்தைக் கூறி பதவியை ராஜினாமா செய்தார்; ஆனால் உண்மையான காரணம் அரசியல் தோல்வி. மேக்மில்லன், சேதமடைந்த பிரிட்டன்-அமெரிக்க உறவைச் சரிசெய்ய முனைந்தார். சினாய் பாலைவனத்தில் ராணுவத் தோல்வி கண்டிருந்தாலும், அரபு தேசியவாதத்தின் அசைக்க முடியாத நாயகனாக உயர்ந்தார் நாசர். 3 வல்லரசுகளையும் எகிப்து படைகள் அல்ல, சர்வதேச அழுத்தமே பின்வாங்கச் செய்தது என்பதால் அவரது கௌரவம் மேலும் பெரிதானது. மேற்கத்திய நிதியுதவிக்கு மாற்றாக அடுத்த 2 ஆண்டுகளில் சோவியத் யூனியனின் மாபெரும் உதவி எகிப்தை வந்தடைந்ததும், இந்த வெற்றி உறுதியானது.
பிரிட்டனுக்குச் சூயஸ் தவிர்க்க முடியாத மறுபரிசீலனையைத் திணித்தது. அமெரிக்காவுடனான ‘சிறப்பு உறவு’ என்பது அமெரிக்கச் சகிப்புத்தன்மையை மட்டுமே சார்ந்தது; வாஷிங்டன் ஆதரவை விலக்கினால் பிரிட்டன் தனியாக நிற்க முடியாது என்பது வெளிப்பட்டது. பிரிட்டனின் அணு ஆயுதத் தடுப்பு அரண் என்பது அமெரிக்காவின் ஒத்துழைப்பை மட்டுமே சார்ந்திருந்தது. சூயஸுக்குக் கிழக்கே பிரிட்டன் கொடுத்திருந்த ராணுவ, அரசியல் வாக்குறுதிகள் அடுத்த பத்தாண்டுகளில் கைவிடப்பட்டன. பேரரசை நடத்தும் செலவு அதன் லாபத்தைவிட அதிகம் என்ற உண்மை, காலனி ஆதிக்க முடிவை வேகப்படுத்தியது. ஆனால் இதற்கு மாறாக பிரான்ஸ், போதிய தன்னிச்சை இல்லாததே அவமானம் என்று முடிவெடுத்து, 1960 பிப்ரவரியில் தனது முதல் அணு சோதனையை நடத்தியது. அல்ஜீரியப் போர், பிரான்ஸ் நாட்டின் தேசியவாதத் தலைவரான டி கோல் போரைக் கைவிடும் வரை நீடித்தது. இஸ்ரேலின் லாபங்களும் தாற்காலிகமே; 1967 மே மாதத்தில் நாசர் செங்கடலையும் அக்காபா வளைகுடாவையும் இணைக்கும் நீரிணையான டிரான் நீரிணையை மீண்டும் மூடியபோது அது தெளிவானது.
பாரம்பரிய ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்ததற்குக் காரணம் தார்மிக வளர்ச்சி மட்டுமல்ல; புதிய கட்டமைப்பு யதார்த்தங்களாலும்தான் என்பதை சூயஸ் நெருக்கடி நிரூபித்தது. அமெரிக்கப் பொருளாதார ஆதிக்கம், சோவியத் அணு நிழல், மூன்றாம் உலக தேசியவாதத்தின் நியாயம், ஐநாவின் மத்தியஸ்தம் – இவை அனைத்தும் பழைய பீரங்கிக் கப்பல் அரசியலைக் காலாவதியாக்கின. தேசியவாதிகளை இன்னும் பீரங்கியால் அடக்கலாம் என்ற ஈடனின் விக்டோரியன் கற்பனை அப்பட்டமாகத் தவறானது என்று நிரூபிக்கப்பட்டது. உலகப்போர் ஏற்கெனவே புதைத்திருந்த ஒரு யுகத்தில் மனதளவில் இன்னும் வாழ்ந்தவர்களின் மாயைதான் அது. ஏகாதிபத்தியத்தின் அந்திமக் காலம், சூயஸ் கால்வாயில் இருண்ட இரவாக மாறியது.
(தொடரும்)

