Skip to content
Home » மக்கள் அரசியல் #15 – சந்திரசேகர்: ஒரு சோஷலிசப் போராளி

மக்கள் அரசியல் #15 – சந்திரசேகர்: ஒரு சோஷலிசப் போராளி

ஜனநாயகன்…

தமிழக முதல்வர் நடித்த திரைப்படம் குறித்த கட்டுரை அல்ல இது; மாறாக, இந்தியப் பிரதமர் ஒருவர் குறித்த கட்டுரைத் தொகுப்பு. அவரது பட்டப்பெயர்தான் ‘ஜனநாயகன்’. தில்லியில் இருக்கும் அவருடைய நினைவிடத்திற்குப் பெயர் ‘ஜனநாயக் ஸ்தல்’.

இந்திய ஆட்சி நிர்வாகத்தின் நடைமுறையில், ‘பிரதமர்’ என்பது அதிகாரமிக்க பதவி. அவ்வாறு பிரதமர் பதவி வகித்த அவரைப் பற்றி, பெரும்பாலான வரலாற்றுப் புத்தகங்களின் அடிக்குறிப்பில்கூட குறிப்பிடப்படவில்லை என்றால் நம்புவதற்குச் சற்றுக் கடினமாக இருக்கும். நாட்டின் வரலாற்று நூல்களில், அதிகபட்சமாக அவரைப் பற்றி ஒன்றிரண்டு பத்திகள் எழுதப்பட்டிருந்தால் பெரிய விஷயம். இத்தனைக்கும் ஓர் அசாதாரணச் சூழலில் பிரதமராகப் பணியாற்றி, துணிச்சலான பல நடவடிக்கைகளை எடுத்தவர். அப்படிப்பட்டவரை ஏன் வரலாற்றுப் புத்தகங்கள் புறக்கணித்தன?

நேருவைப்போல் அவர் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, மேல்நாட்டில் சென்று படித்ததில்லை. லால் பகதூர் சாஸ்திரியைப்போல், படிப்படியாகப் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்து, இறுதியாகப் பிரதமர் பதவிக்கு வந்தவரில்லை. இந்திரா காந்தியைப்போல் தன் தந்தையின் நிழலில் அரசியல் கற்று, ஆட்சியைப் பிடித்தவர் இல்லை. மொரார்ஜி தேசாய்போல, அரசு உயரதிகாரியாகப் பணிபுரிந்து, பின்னர் அரசியலில் நுழைந்து பிரதமரானவர் இல்லை. சரண் சிங்கிற்கு இருந்த விவசாயிகளின் ஆதரவைப்போல், அவருக்கென்று ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ராஜிவ் காந்தியைப்போல், அவர் இளவயதில் பிரதமர் ஆனவரில்லை. வி.பி. சிங்கைப்போல், ‘மாண்டாவின் ராஜா’ என்றெல்லாம் அவர் புகழைப் பெற்றவரில்லை.

அதுவரையில் பிரதமர் பதவி வகித்த ஒவ்வொருவருக்கும் இருந்த தனிச்சிறப்புகளில் எதுவும் அவருக்கு இருந்ததில்லை. எனவே, அவர் மீது எவருக்கும் ஓர் அலட்சிய எண்ணம் தோன்றுவது இயற்கை. ‘சொல்லிக் கொள்ளும்படி அவர் எதுவும் செய்யவில்லை’ என்பதே அவரைப் பற்றிய பெரும்பாலானவர்களின் கணிப்பு. ‘பதவி ஆசை பிடித்தவர்’ என்று அவரைப் பற்றிக் குறிப்பிடுவோரும் உண்டு. 1977இல் ஜனதா கட்சி ஆட்சியமைத்தபோது, ஜேபியே விரும்பிக் கேட்டுக்கொண்ட பிறகும்கூட அமைச்சர் பதவியை ஏற்க மறுத்தவர் அவர். 1989இல் வி.பி.சிங் ஆட்சியமைத்தபோதும் தனக்குக் கிடைக்கவிருந்த அமைச்சர் பதவியை மறுத்தவர் அவர். அவரைத்தான் ‘பதவி ஆசை பிடித்தவர்’ என்று சிலர் கருதுகிறார்கள். இந்தியப் பிரதமராகப் பதவி வகித்தவர்களுள், மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட நபர் அநேகமாக அவராகத்தான் இருப்பார்.

அவர் ஒரு சோஷலிசவாதி; ஆனால், சோவியத் ரஷ்யாவைக் கண்மூடித்தனமாக ஆதரித்தவரில்லை. காங்கிரசில் இருந்தவரையில், இந்திரா காந்தியின் தலைமையை ஆதரித்தவர் அவர். ஆனால், அவசரநிலை காலத்தில் அதே இந்திரா காந்தியால் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டவர். காந்தியடிகள், வினோபா பாவே ஆகிய இருவருக்குப் பிறகு நாடு முழுவதும் பாதயாத்திரையில் ஈடுபட்ட தலைவர் அவர். என்றாலும், நாடு தழுவிய மக்கள் செல்வாக்கு என்று எதுவும் அவருக்கு இருந்ததில்லை. கட்சி விட்டுக் கட்சி தாவி, தான் இருக்கும் கட்சிக்கேற்ப கொள்கைகளை ஆதரித்த தலைவர்கள் பலர் உண்டு. தான் தாங்கி நின்ற சோஷலிசக் கொள்கைக்காகவே, பல கட்சிகள் மாறியவர் அவர். சோஷலிசவாதியாகத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இறுதி வரை சோஷலிசவாதியாக இருந்தார். பிரதமராக ஆனது அவருடைய சாதனை அல்ல; பிரதமர் பதவியை இழக்கத் தயங்காததுதான் அவருடைய தனிச்சிறப்பு.

அவர் பெயர், சந்திரசேகர்.

சந்திரசேகருக்கும் எட்டாம் எண்ணிற்கும் ஒரு சுவாரசியமான தொடர்பு உண்டு. இந்தியாவின் 8வது பிரதமர் அவர். பிரதமராக அவர் பதவி வகித்த நாட்களின் எண்ணிக்கை: 224. இதன் கூட்டுத்தொகை 8. மக்களவை உறுப்பினராக அவர் 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 6வது மக்களவை காலத்தில் (1977-1980) முதல் முறை மக்களவை உறுப்பினர் ஆனவர், 14வது மக்களவையின் காலம் வரை (1999-2004) உறுப்பினராக நீடித்தார்; 8வது மக்களவையைத் தவிர (1984-1989). அவர் 80 வயது வரை வாழ்ந்தார். அவருடைய பிறந்த தினம்: ஏப்ரல் 17 (சில நூல்களில் ஜுலை 1 என்று குறிப்புகள் காணப்படுகின்றன; ஆனால், ஏப்ரல் 17 அன்றே தன்னுடைய பிறந்தநாள் என்று அவர் குறிப்பிட்டார்). அவர் மறைந்த தினம், ஜுலை 8.

எளிமையான குடும்பப் பின்புலத்திலிருந்து நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்த முதல் நபர், லால் பகதூர் சாஸ்திரி. அவருக்குப் பிறகு, அவரைப்போலவே எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து பிரதமர் ஆனவர் சந்திரசேகர். பிரதமர் ஆவதற்கு முன்பு வரை, அவர் எவ்விதப் பதவியையும் வகித்ததில்லை. அமைச்சராகவும் இருந்ததில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமே இருந்து பிரதமரானவர் அவர். அதேபோல் பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்பு, அவர் வேறெந்தப் பதவியையும் வகிக்கவில்லை; நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமே தொடர்ந்தார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, சோஷலிசம் சார்ந்த பல அதிரடி முடிவுகளை (வங்கிகளைத் தேசியமயமாக்குதல், மன்னர் மானிய ஒழிப்பு போன்றவை) எடுத்தார். அதற்குப் பின்புலமாக இருந்து செயல்பட்ட ‘இளம் துருக்கியர்’ அணியின் முக்கியமான உறுப்பினராக இருந்தவர் சந்திரசேகர். இந்திரா காந்தியின் எதிர்ப்பையும் மீறி, காங்கிரஸ் கட்சியின் மிக உயரிய குழுவான மத்திய செயற்குழுவிற்கும், மத்திய தேர்தல் குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சந்திரசேகர். தலைமையின் விருப்பத்தை மீறி, காங்கிரஸ் கட்சியில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு, இரண்டு முறை மட்டுமே இதுவரை நிகழ்ந்துள்ளது. 1939இல் மத்திய பிரதேசத்தில் ஜபல்பூருக்கு அருகிலுள்ள திரிபுரி என்ற ஊரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், காந்தியடிகளின் விருப்பத்தை மீறி ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு இரண்டாவது நிகழ்வு, 1970இல் சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்குச் சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமே. இதனாலேயே, சில காங்கிரஸ் தலைவர்களால் ‘நேதாஜி’ என்று அவர் செல்லமாக விளிக்கப்பட்டார்.

பிரதமர் பதவியில் இருந்தபோது, நாட்டின் நலன் கருதி பல அதிரடி முடிவுகளைத் துணிச்சலோடு எடுத்தவர் சந்திரசேகர். அவர் பதவி விலகியபோது, லண்டனின் ஃபைனான்சியல் டைம்ஸ், ‘an uncomfortably successful prime minister’ என்று சந்திரசேகரைக் குறித்து எழுதியது. ஒருவேளை அவரது ஆட்சி இன்னும் சில காலம் நீடித்திருந்தால், இந்திய அரசியலில் அவரைப் பற்றிய மதிப்பீடுகள் வேறுவிதமாக அமைந்திருக்கக்கூடும். 1927இல் பிறந்த அவருக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு. அவரைப் பற்றி அறிந்துகொள்ள, இதைவிட ஒரு சிறப்பான தருணம் கிடைக்காது.

பலியா

பலியா – கிழக்கு உத்தர பிரதேசத்திலுள்ள ஒரு மாவட்டம். பக்கத்தில்தான் பீஹார். 1857இல் நடந்த சிப்பாய்க் கலகத்தின் ஆரம்ப கர்த்தாவான மங்கள் பாண்டே பிறந்த ஊர். 1942இல் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது, இந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில்தான் நாட்டிலேயே முதல்முறையாக இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. விரைவிலேயே ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலையை அறிவித்துக்கொண்டது இந்த மாவட்டம். இந்த மாவட்டத்தின் ‘இப்ரஹீம்பட்டி’ என்ற ஊரில் வளர்ந்த சந்திரசேகர், போராட்டக் குணம் கொண்ட ஒரு சோஷலிசத் தலைவராக ஆனதில் என்ன வியப்பிருக்க முடியும்?

ஒரு சாதாரண விவசாயிக்கு 4வது மகனாகப் பிறந்தவர் சந்திரசேகர். கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த சந்திரசேகரின் குடும்பத்திற்கு மொத்தமாக இருந்தது 20 ஏக்கர் நிலம் மட்டுமே. பாசன வசதிகள் இல்லாத அந்த நிலத்தை வைத்துக்கொண்டுதான் ஒட்டுமொத்தக் குடும்பமும் சாப்பிட்டு வந்தது. சிறு வயதில் செருப்புகூட அணிந்துகொள்ள வழியின்றி, சந்திரசேகர் நெடுந்தூரம் நடந்ததுண்டு. வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பள்ளிக்குத் தினமும் நடந்துசென்றே படித்துவந்தார் சந்திரசேகர். பர்மாவில் வேலை பார்த்து வந்த அவருடைய அண்ணன் மாதாமாதம் அனுப்பி வந்த தொகையின் உதவியால், சந்திரசேகர் படிக்க முடிந்தது. பள்ளிப் படிப்பை முடித்த சந்திரசேகரை, ஏதாவது ஓர் அலுவலகத்தில் எழுத்தர் பணிக்குச் செல்லச் சொன்னார் அவருடைய தந்தை. நல்லவேளையாக, அன்னையின் ஆதரவு இருந்ததால், சந்திரசேகரால் கல்லூரிக்குச் சென்று படிக்க முடிந்தது.

சந்திரசேகர் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயார் காலமானார். காலரா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது அன்னையைக் குணப்படுத்த, அந்தக் கிராமத்தில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. அந்தக் கிராமத்தைச் சுற்றி 112 கிலோமீட்டர் தொலைவில்கூட மருத்துவர் என்று எவரும் இருந்திருக்கவில்லை. தாயின் உடல்நிலை குறித்த செய்தி சந்திரசேகருக்குத் தெரியவந்து, தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்குள், அவரது அன்னைக்கு இறுதிச் சடங்குகள் நடந்துமுடிந்திருந்தன.

தாயாரின் மரணம் சந்திரசேகரை மிகவும் பாதித்தது. ‘கிராமத்தில் போதுமான மருத்துவ வசதிகள் இருந்திருந்தால், தன்னுடைய அன்னையைக் காப்பாற்றியிருக்கலாம். நல்ல சாலை வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் இருந்திருந்தால், குறைந்தபட்சம் தாயின் முகத்தை இறுதியாக ஒருமுறையாவது பார்த்திருக்கலாம். வசதி படைத்தோர் இருக்கும் நகரங்களில் இயல்பாக இருக்கக்கூடிய இத்தகைய அடிப்படை வசதிகள் ஏன் கிராமங்களில் இருப்பதில்லை? அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் தன் தாயாரைப்போல இன்னும் எத்தனை உயிர்கள் போகக்கூடுமோ?’ என்றெல்லாம் தீவிரமாகச் சிந்தித்தார் சந்திரசேகர். இந்த அனுபவங்களே, பின்னாளில் சந்திரசேகரை சோஷலிசச் சிந்தனைகளை நோக்கி இட்டுச் சென்றன.

ஒன்றிரண்டு புத்தகங்களைப் படித்ததன் விளைவாக சோஷலிசவாதி ஆனவரில்லை சந்திரசேகர். தன்னுடைய சொந்த அனுபவங்களின் விளைவாகவும், தன்னுடைய கிராமத்தில் காண நேர்ந்த அவலங்களின் விளைவாகவும் சோஷலிசவாதி ஆனவர் அவர். ‘வறுமையில் உழன்று, அதன் துன்பங்களை அனுபவிக்க நேர்ந்திடாத அரசியல்வாதிகளால், நாட்டின் வறுமையை ஒழிக்கவே முடியாது’ என்று பின்னாளில் அவர் கூறியது அனுபவ மொழி.

இளங்கலைப் பட்டம் பெற்ற சந்திரசேகர், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் அறிவியல்’ துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அவருடைய கிராமத்தின் முதல் பட்டதாரியே அவர்தான். மேற்கொண்டு படிப்பைத் தொடர விரும்பிய சந்திரசேகர், ஆய்வுப் பட்டம் பெறுவதற்காகப் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆய்வுக்கு அவர் தேர்ந்தெடுத்த தலைப்பு, ‘அரசியல் சிந்தனைகள் மீது பொருளாதார வளர்ச்சியின் தாக்கம்’. அவருடைய பேராசிரியருக்கு இந்தத் தலைப்பு மிகவும் பிடித்துப்போய்விட, சந்திரசேகரை அவர் வெகுவாக ஊக்குவித்தார். ஆனால், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஆச்சார்ய நரேந்திர தேவுக்கோ சந்திரசேகரின் எதிர்காலம் குறித்து வேறு திட்டங்கள் இருந்தன.

ஆச்சார்ய நரேந்திர தேவ்

அன்றைய சோஷலிசத் தலைவர்களுள் முக்கியமானவர், ஆச்சார்ய நரேந்திர தேவ். நேரு பிறந்த அதே ஆண்டில் (1889) பிறந்த அவரின் இயற்பெயர், அவிநாஷிலால். மார்க்சியத்தையும், பௌத்தத்தையும் கற்றறிந்த வல்லுநர்களில் ஒருவராக அறியப்பட்டவர். காங்கிரஸ் இயக்கத்திற்குள் ஒரு பிரிவாக 1934இல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் சோஷலிசக் கட்சி, நாடு விடுதலை அடைந்த பிறகு 1948இல் காங்கிரசை விட்டு வெளியேறி, ‘சோஷலிசக் கட்சி’ என்ற பெயரில் தனிக்கட்சியானது. இந்த சோஷலிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக ஆச்சார்ய நரேந்திர தேவ் திகழ்ந்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அவர் பணியாற்றியபோதுதான், ஆய்வுப் பட்டத்திற்காக சந்திரசேகர் அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்காகப் படித்துக் கொண்டிருக்கும்போதே, சந்திரசேகருக்கு சோஷலிசத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. மாணவர் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்ற அவர், மாணவர் தலைவராகவும் பிரபலமானார்.

1952இல் சோஷலிசக் கட்சி அமைக்கக் கருதிய ஒரு குழுவின் துணைத் தலைவராகச் சந்திரசேகரை நியமிக்கலாமென்று பேச்சுக்கள் கிளம்பின. இரண்டு வருடங்களுக்குச் சந்திரசேகரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்றும், அவரை நல்லபடியாக ஆய்வு செய்ய விடுமாறும் அவருடைய பேராசிரியர் கூறினார். ஆனால், சந்திரசேகரை அரசியலுக்கு வருமாறு ஆச்சார்ய நரேந்திர தேவ் வற்புறுத்தினார். ‘இந்தப் பேராசிரியர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம்; பலரின் வாழ்க்கையை அவர்கள் சீரழித்து விட்டார்கள். இந்தத் தேசமே இல்லையென்றால், உங்கள் ஆய்வுக் கட்டுரையை யார் படிப்பார்கள்? தயவுசெய்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபடுங்கள்’ என்று சந்திரசேகருக்கு அறிவுரை கூறினார். விளைவு, சந்திரசேகர் தன்னுடைய ஆய்வுப் படிப்பைக் கைவிட்டார். சோஷலிசக் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *