Skip to content
Home » சினிமாவும் சாதியும் #3 – சாதி உணர்வின் தோற்றம்

சினிமாவும் சாதியும் #3 – சாதி உணர்வின் தோற்றம்

சாதியக் குறியீடுகளைக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் மட்டுமல்ல, வெளிப்படையாகச் சாதி உணர்வைத் தூண்டும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள்கூட பார்வையாளர்கள் மத்தியில் ‘புதிதாகச் சாதிய உணர்வை உருவாக்கவில்லை’ என்றாகிவிட்ட பின், உண்மையில் சாதிய உணர்வு அல்லது சாதிய மனநிலை சிறு வயதிலே ஒருவருக்கு எவ்வாறு விதைக்கப்படுகிறது? இந்தக் கேள்விதான் தற்போதைய விவாதத்தின் மையக்கரு.

முன்குறிப்பாகச் சில விஷயங்களைச் சொல்லவேண்டும். சினிமா உள்ளிட்ட கலைகள் அனைத்தும் மனித உணர்வுகளிலிருந்து முற்றிலும் அந்நியப்பட்டதல்ல. ஒரு சிங்கத்தின் வாழ்க்கையைக் கதையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘Lion King’ திரைப்படம்கூட காட்டைப் பற்றியதோ சிங்கத்தைப் பற்றியதோ அல்ல. மனிதர்கள் இடையில் நிலவும் வாரிசுரிமை, பொறுப்புணர்வு, வஞ்சகம் ஆகியவற்றைப் பற்றிய கதைதான். சாரமாகச் சொன்னால், சினிமா உட்பட, கலைகள் அனைத்தும் மனிதர்களின் உணர்வுகள் பற்றியதுதான். மனித உணர்வுகளைத் திரித்து அல்லது மிகைப்படுத்தி காட்சிப்படுத்தும் ‘மசாலா’ திரைப்படங்கள்கூட அடிப்படையில் மனித உணர்வுகளையே கதைக்களமாகக் கொண்டிருக்கின்றன.

அதனால், சினிமா என்னும் ஊடகம் மனிதர்களின் உணர்வுகள்மீது செலுத்தும் தாக்கம், சினிமா – மனித உணர்வு என்கிற இரண்டிற்கும் இடையிலான ஊடாட்டம் ஆகியவை குறித்து நிறைய விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதேநேரம், மனிதர்களின் வாழ்நிலையிலிருந்துதான் அவர்களின் உணர்வுகள் பிறக்கின்றன. அவற்றை முற்றிலும் வெளியிலிருந்து வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது என்கிற அடிப்படையை மட்டும் தெளிவாகப் பதிவு செய்துகொள்வோம்.

எதனால் இதை வலியுறுத்திச் சொல்லவேண்டியிருக்கிறது என்றால், சினிமா முற்றிலுமாக ஒரு புதிய கருத்தை அல்லது உணர்வை மனித மனதிற்குள் செலுத்துவதாகப் பலர் நம்புகிறார்கள். சினிமாவைப் பார்த்து சிகரெட் பிடிக்கிறார்கள், சினிமாவைப் பார்த்துக் கெட்டுப் போகிறார்கள் என்பது போன்ற பேச்சுகளை நாம் நிறையவே கேட்டிருப்போம். அந்த வரிசையில், சாதிய சினிமா, சாதிய உணர்வை மக்கள் மத்தியில் விதைக்கிறது அல்லது உருவாக்குகிறது என்று பலர் நம்புகிறார்கள். ‘தேவர் மகன்’ படம்தான் தென்மாவட்ட இளைஞர்கள் மத்தியில் சாதிய மனநிலையை விதைத்தது என்று சொன்னால் அது அபத்தமாகவே இருக்கும்.

ஊடகவியலில் ‘Magic Bullet Theory’ என்கிற கருத்தாக்கம் இருக்கிறது. அதன்படி, பார்வையாளர்கள், அதாவது மக்கள் செயலூக்கமற்றவர்கள், ஊடகங்கள் (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி) சொல்லும் கருத்துகளை அவர்கள் அப்படியே நம்பிவிடுவார்கள். அதாவது, ஊசி மூலமாக உடம்பிற்குள் மருந்தைச் செலுத்துவதுபோல் ஒரு கருத்தை மக்கள் மனதில் விதைக்கமுடியும் என்று இந்தக் கருத்தாக்கம் சொல்கிறது. ஆனால், மக்களை மந்தைகளாகக் கருதும் இந்தக் கருத்தாக்கம் தவறானது என்று 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதுவொரு காலாவதியான கருத்தாக்கம்.

ஆனால் இன்றும் மக்கள்மீது சினிமா செலுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வுகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பார்வையாளர்களைச் செயலூக்கமற்றவர்களாகவே கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. சாதிய சினிமாக்களில் இடம்பெறும் வசனங்கள், குறியீடுகளைப் பார்த்து மக்கள் சாதிய உணர்வை வளர்த்துக்கொள்வதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல், சாதிய அடையாளங்கள், குறியீடுகள் பற்றிய பரிச்சயம் இல்லாதவர்களால் சினிமாவில் இடம்பெறும் சாதி சார்ந்த கதையாடலைப் புரிந்துகொள்ள முடியாது.

அப்படியென்றால் மக்களிடையே சாதிய உணர்வு அல்லது சாதி மனப்பான்மை எங்கிருந்து, யாரால் விதைக்கப்படுகிறது என்கிற கேள்விக்கு நாம் விடை தேட வேண்டும்.

சாதிய மனப்பான்மையை இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போதே அவர்கள் புத்தியில் விதைப்பதில் முதன்மையாக இருப்பது, ‘ஊர்’ என்று சொல்லப்படக்கூடிய சமூக வெளிதான். இங்கே ஊர் என்பது ஒரு குக்கிராமத்தை மட்டுமே குறிப்பிடும் சொல் அல்ல; சாதி சார்ந்த மூலதனம் வெளிப்படையாக நிலைநிறுத்தப்பட்டு, அதன் பொருளாதார-அரசியல் ஆதிக்கத்தால் சமூக வாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருக்கும் கோவில்பட்டி, திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், கோவை, மதுரை போன்ற நகர்ப்புறங்களையும் அது உள்ளடக்கியது.

ஊர்களில், குறிப்பாகக் கிராமப்புறங்களில், திருவிழா என்பது சாதிய அணிதிரட்சியைக் காட்சிப்படுத்தும் களமாகவே இருக்கிறது. பல கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் திருவிழாக்கள் என்பது மதுரை அழகர் கோவில் திருவிழாபோல் நகரம் முழுமைக்குமாக பொதுவானதாக இல்லாமல், ஒவ்வொரு சாதியும் தனித்தனியாக அது வலுவாக இருக்கும் பகுதியில் மட்டும் முன்னெடுக்கப்படுவதாக இருக்கிறது.

இந்த ஊர் மற்றும் சிறுநகரங்களின் அன்றாடச் சமூக வாழ்க்கையில் சாதி எப்படியெல்லாம் கட்டமைக்கப்படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

முதலில், ஊர் அளவில் இருக்கும் பொது இடங்களில் சாதி சார்ந்த அடையாளங்கள் வெளிப்படையாகவே நிலைநிறுத்தப்படுகின்றன. ஊரின் மையப்பகுதியில் இருக்கும் சாதியத் தலைவரின் சிலை, சாதி நிறங்கள் பூசப்பட்ட கொடிக் கம்பம், மின் கம்பங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொது இடங்களில்கூட சாதிப் பெயர்களை எழுதுவது அல்லது சாதி சார்ந்த நிறங்களைப் பூசுவது என அந்த ஊரின் பெரும்பான்மை சாதி தன்னை வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொள்கிறது.

இரண்டாவது, குடும்ப அளவில் – வீடுகளில் சாதி சார்ந்த தலைவர்களின் புகைப்படங்கள் இருப்பது, விஷேசங்களின்போது அச்சடிக்கப்படும் பத்திரிகைகளில் சாதி பெயர் குறிப்பிடப்படுவது போன்றவையெல்லாம் ஒருவர் சிறுவனாக இருக்கும்போதே சாதிய உணர்வை அவருக்குள் விதைக்கும் புறச்சூழலாகச் செயல்படுகிறது. திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளின்போது, சிலர் சாதிய தலைவர்களின் புகைப்படங்களைச் சட்டகமிட்டு மணமக்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். அந்த மணமக்கள் அதனைத் தங்களது வீடுகளில் மாட்டி வைக்கிறார்கள். திருமணங்களில் பேனர் அடிக்கும் கலாசாரம் தொடங்கியதிலிருந்து அதில் சாதியத் தலைவர்களும், குறியீடுகளும், சாதிப் பெருமை பேசும் வசனங்களும் இடம்பெற்று வருவது நமக்குப் பொதுவாகவே தெரிந்திருக்கும்.

குறிப்பாக, ஊர் திருவிழாக்களின்போது சாதிய அடையாளங்கள் மிக உயர்ந்த அளவில் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆயிரத்துக்கும் மேல் மக்கள்தொகை இருக்கக்கூடிய கிராமங்களில், ஒவ்வொரு சாதியினரும் தனித்தனியாகவே திருவிழாக்களை நடத்துகிறார்கள் என்பதும், தனித்தனிச் சுடுகாடுகள் இருக்கின்றன என்பதும் இங்கே முதன்மையாகக் கவனிக்க வேண்டிய விஷயங்களாகும். இந்தத் திருவிழாக்களின்போது சீரியல் பல்புகள் கொண்டு கடவுளர்களின் உருவங்கள் அமைக்கப்படுவதுபோல், சம்பந்தப்பட்ட சாதித் தலைவர்களின் உருவமும் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்படுகின்றன.

ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் திருவிழாவின்போது அவர்களுக்குள் குழுக்களாகப் பிரிந்து பல பேனர்களை வைக்கிறார்கள். அவை ஒவ்வொன்றிலும் சாதிய அடையாளங்கள் இருக்கின்றன. சாதி சார்ந்த நடிகர்களின் புகைப்படங்களும் அதில் தவறாமல் இடம்பெறுகின்றன. சாதியக் குறியீட்டையோ பெயரையோ வெளிப்படையாக அச்சிட்டு டிஷர்ட் அடிக்கும் கலாசாரமும் தற்போது பரவலாகக் காணப்படுகிறது.

குறிப்பாகக் கரகாட்டம், ஆடலும் பாடலும் போன்ற நிகழ்ச்சிகளில் சாதி சார்ந்த பாட்டுகள் ஒலிக்கப்படுகின்றன. அந்தச் சாதியைச் சேர்ந்த தலைவர் அல்லது சாதியின் அடையாளமாகப் பார்க்கப்படும் நடிகர்கள்போல் வேடமிட்டு கலைஞர்கள் ஆடுகிறார்கள். சாதியப் பெருமை பேசும் பாடல்கள் அல்லது அந்தச் சாதியின் அடையாளமாகப் பார்க்கப்படும் நடிகர்களின் பாடல் ஒலிக்கப்படும்போது மிக உக்கிரமாக இளைஞர்கள் ஆரவாரம் செய்கிறார்கள். பெரியவர்கள் சிலர் அந்த நடிகர்போல் வேடமிட்டு ஆடும் கலைஞரின் சட்டையில் ரூபாய் நோட்டுகளைக் குத்தி அன்பளிப்பு வழங்குகிறார்கள்.

திருவிழா, திருமணம் போன்ற விஷேச நாட்களைத் தாண்டி அன்றாட தினசரி வாழ்க்கையிலும் சாதி வேற்றுமைகளைக் கோடு கிழித்துக் காட்டும் நிகழ்வுகள் வழக்கமாக நடக்கின்றன. குறிப்பாகச் சாதி சார்ந்து தனித்தனியாகச் சுடுகாடுகள் இருப்பது, ஊர் என்னும் சமூக வெளியில் வாழும் மக்கள் மனதில், ‘நம்மவர்கள்’, ‘மற்றவர்கள்’ என்று பிரித்துப் பார்க்கும் எண்ணத்தை இயல்பாகவே நிலைநிறுத்துகிறது. ஊரில் ஆதிக்கத்தோடு இருக்கும் சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமல்ல; பள்ளியில் படிக்கும் வளரிளம் சிறார்கள்கூட தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெரியவர்களையும் பெயர் சொல்லியோ ஒருமையிலோ அழைக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்து அனுபவித்து வளரும் ஒரு சிறுவனின் மனநிலையில் சாதியின் இருப்பு விதைக்கப்படுகிறது. சாதி சார்ந்த வழக்கங்கள், கதைகள், குறியீடுகள் ஆகியவற்றுக்கு அவன் பழக்கப்படுத்தப்படுகிறான். இப்படித்தான் ஒரு சிறுவனுடைய மனதில் சாதிய உணர்வு விதைக்கப்படுகிறது. இந்தச் சூழலில் வளரும் சிறுவர்கள், ‘நாம் ஒரு சமூகக் குழுவின் அங்கமாக இருக்கிறோம். இது நம் கொடி. இது நம்முடைய தலைவர். இது நமது நடிகர்’ என்று தன்னியல்பாகவே எண்ணத் தொடங்குகிறார்கள். மற்றவர்களுக்கும் நமக்கும் சமூக அளவில் வேறுபாடு இருக்கிறது என்று சாதியை ஒரு வாழும் யதார்த்தமாக அவர்கள் அங்கீகரிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், சாதி என்பது படிநிலை ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ள சமூக நிறுவனம் என்பதால், இந்த வேறுபாட்டை அங்கீகரிப்பவர்கள் படிப்படியாக இந்த ஏற்றத்தாழ்வுகளையும் அங்கீகரிக்கிறார்கள்.

இவ்வாறுதான் ஊர் என்னும் சமூக வெளி ஆரம்பகட்ட சாதி உணர்வைச் சிறுவர்கள் மனதில் விதைக்கிறது. இதுதான் காலப்போக்கில் சாதி வெறியாக வளர்ச்சியடைகிறது.

இங்கே நாம் மற்றொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். ஒரு குழந்தை ‘சமூகமயமாக்கப்படும்’ நிகழ்வானது, முதல்நிலை சமூகமயமாக்கம் (Primary Socialization), இரண்டாம் நிலை (Secondary Socialization) என இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. முதல்நிலை சமூகமயமாக்கம் என்பது ஒரு குழந்தை தனது வீடு, குடும்பம், ஊர் ஆகியவற்றின் மூலமாகக் கற்றுக்கொள்ளும் பழக்கவழக்கங்கள் மற்றும் வளர்த்துக்கொள்ளும் மனநிலையைக் குறிக்கிறது. இரண்டாம் நிலை சமூகமயமாக்கம் என்பது பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடங்கள் போன்றவற்றில் கட்டமைக்கப்படும் மனநிலையைக் குறிக்கிறது.

சிலர் பெரிய கல்வி நிலையங்களில் படிப்பது மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் செல்வதன் மூலமாகத் தங்களது குடும்பம், ஊர் ஆகியவற்றைத் தாண்டிய பழக்கங்கள், நட்புகளை வளர்த்துக் கொள்கிறார்கள். இதன்மூலம் ஊரில் கற்றுக்கொண்ட மனநிலையை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் பெரிய தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்விநிறுவனங்களில் படிக்க வாய்ப்பில்லாத பலர், ஊர் மூலம் கற்றுக்கொண்ட மனநிலையை மாற்றிக்கொள்ள வழியில்லாமல் இருக்கிறார்கள். அவர்களது பொருளாதார வாழ்வு என்பது, சாதி சார்ந்த கட்டமைப்பு இறுக்கமாக இருக்கும் ஊர் பகுதிகளையே சார்ந்திருக்கும் நிலையில், புதிய கருத்துகளுடன் அவர்களுக்குப் பரிச்சயம் ஏற்பட வாய்ப்பில்லாமல் போகிறது. இதனால் ஊர் என்னும் வாழ்நிலையிலிருந்து பெற்ற சாதிய மனநிலையை அவர்களால் துறக்கமுடிவதில்லை.

ஊர் என்கிற சூழலில்தான் சாதிய உணர்வு பெறப்படுகிறது என்றால், சாதிய மனப்பான்மையைக் கட்டமைப்பது, வளர்ப்பது போன்றவற்றில் சினிமாவின் பங்கு ஏதுமில்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழும்.

சாதியை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள், சாதிய மனப்பான்மையைப் புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்வதில், மிகப்பெரிய அளவில் பங்காற்றியிருக்கின்றன. அதை மறுக்க முடியாது. ஆனால், சாதி என்கிற சமூக நிறுவனம், அது சார்ந்த பண்பாடு, அது சார்ந்த மனநிலை, ஆகியவையெல்லாம் சமூகத்தில் ‘உள் இயல்பாக’ இருக்கின்றன. இவற்றைச் சினிமாவால் வெளியிலிருந்து விதைக்கமுடியாது என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படியென்றால், சாதிய மனநிலையை வளர்ப்பதில் சினிமாவின் பங்கு என்ன? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *