பாரதத்தின் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் அரசர்களாக இருந்திருக்கிறார்கள், திறமையான நிர்வாகிகளும் மன்னர்களாகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டையும் தாண்டி, சிறந்த புலமையும் கல்வியறிவும் கொண்ட பண்டிதர்கள் மிகச்சிலரே ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ராஷ்டிரகூட வம்சத்தைச் சேர்ந்த முதலாம் அமோகவர்ஷர்.
அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், தக்காணத்தில் சாளுக்கியர்களுக்குப் பிறகு ஆதிக்கம் செலுத்திய ராஷ்டிரகூடர்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.
ராஷ்டிரகூடர்கள்
மௌரியப் பேரரசர் அசோகரின் காலத்தில் ரதிகர்கள் என்ற ஆட்சியாளர்கள் மத்திய இந்தியாவின் சில பகுதிகளை ஆட்சி செய்துவந்தனர். நாளடைவில் அவர் சிற்றரசர்களாக உயர்ந்தனர். சில கல்வெட்டுகளிலும் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அந்த ரதிகர்களின் வழிவந்தவர்களே ராஷ்டிரகூடர்கள் என்று பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். உள்ளூர் தலைவர்களைக் குறிக்கும் நிர்வாகச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருதச் சொல்லான ‘ராஷ்டிரிக’ என்பது, காலப்போக்கில் பிராகிருத மொழியில் ‘ரட்ட’ என்ற வடிவத்தைப் பெற்றது. தமிழிலும் இவர்கள் இரட்டை மண்டலத்தார் என்றே அழைக்கப்படுகின்றனர்.
வரலாற்றுச் சான்றுகளின்படி, ராஷ்டிரகூடர்களின் பூர்வீகத் தாயகம் பீதருக்கு உள்ள லத்தூர் ஆகும். கல்வெட்டுகளில் இது ‘லட்டலூர’ என்றும், ‘நகரங்களில் சிறந்தது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் லத்தூரிலிருந்து இன்றைய எலிச்சபூருக்கு அருகிலுள்ள பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கிருந்து ஆட்சி செய்யத் தொடங்கிய ராஷ்டிரகூடர்கள், சிறிது காலம் பாதாமி-சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக இருந்தனர். பின்னர், ராஷ்டிரகூடர் அரசர் தந்திதுர்கர், சாளுக்கிய அரசரான கீர்த்திவர்மனை வீழ்த்தி அந்நாட்டைக் கைப்பற்றிக்கொண்டார். அவரை அடுத்து வந்த அரசர்கள் ராஷ்டிரகூட அரசை விரிவுபடுத்தினர். அதன்பின் மான்யகேடம் (தற்போதைய மல்கேட்) ராஷ்டிரகூடர்களின் தலைநகராக மாறியது.
அமோகவர்ஷரின் ஆட்சி
ராஷ்டிரகூட அரசரான மூன்றாம் கோவிந்தனின் மகன்தான், அமோகவர்ஷர். இவர் திருவோண நட்சத்திரத்தில் பிறந்ததால், ஷ்ராவண் என்ற இயற்பெயரைக் கொண்டவர். மூன்றாம் கோவிந்தன் வட இந்தியப் படையெடுப்பு ஒன்றை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பும்போது, நர்மதை ஆற்றங்கரையில் அமோகவர்ஷர் பிறந்தார் என்று சஞ்சன் செப்பேடுகளில் உள்ள குறிப்புகள் கூறுகின்றன. தன்னுடைய இறுதிக்காலம் நெருங்குவதை அறிந்த கோவிந்தன், அமோகவர்ஷர் சிறிய வயதினராக இருந்ததால், தன்னுடைய சகோதரர் இந்திரனின் மகனான கர்க சுவர்ணவர்ஷனை அடுத்த ஆட்சிப்பொறுப்பாளராக நியமித்தார். அதன் பின், சிறிது நாட்களிலேயே மறைந்தும் விட்டார்.
தந்தையை அமோகவர்ஷர் இழந்தபோது அவருக்கு வயது ஆறுதான் என்றும் பதினான்கு என்றும் வேறுபட்ட கருத்துகள் உலவுகின்றன. எப்படி இருந்தாலும் சிறுவராக இருந்ததால், அவருக்கு பொயு 814ம் ஆண்டு பட்டம் சூட்டப்பட்டபோதும் ஆட்சியை கர்கரே கவனித்துக்கொண்டார். கர்கருடைய பொயு 816ம் ஆண்டைச் சேர்ந்த நவ்சாரி செப்பேடுகள் அமோகவர்ஷரையே சக்கரவர்த்தி என்று உறுதிசெய்துள்ளன. ஆனால் அரசர் சிறுவராக இருந்தால், பிரச்சனைகள் வருமல்லவா, அதுபோலவே அமோகவர்ஷரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது.
அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அரசவைப் பிரமுகர்கள் சிலரும் அமோகவர்ஷரின் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். தலைக்காட்டின் கங்க அரசனான சிவமாறன் அரசை எதிர்த்துக் கலகம் செய்யத் தொடங்கினான். இந்தக் கிளர்ச்சிகளின் முடிவில், அமோகவர்ஷர் ஆட்சியிலிருந்து துரத்தப்பட்டார். ராஷ்டிரகூட அரசில் பெரும் குழப்பம் நிலவியது. ஆனாலும், ஆட்சி நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டிருந்த கர்கர், திறம்பட இந்தக் கிளர்ச்சியாளர்களை அடக்கி அதிகாரத்தை மீட்டெடுத்தார். இந்தப் பிரச்சனைகள் மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் தொடர்ந்தன என்று தெரிகிறது. அதன்பின் அமோகவர்ஷர் மீண்டும் 821ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்றார். இதனை சூரத்திலும் வடோதராவிலும் கிடைக்கும் ராஷ்டிரகூட ஆவணங்கள் உறுதிசெய்கின்றன.
கீழைச்சாளுக்கியர்களுடன் போர்
ஆனாலும் வெளியிலிருந்து வந்த தாக்குதல்கள் நிற்கவில்லை. அவருக்கு முன்பு ஆட்சி செய்த மேலைச் சாளுக்கியர்கள் ஓரளவு அடங்கிவிட்டாலும், கீழைச்சாளுக்கியர்களின் அரசனாக இருந்த விஜயாதித்தன், வேங்கியிலிருந்து ராஷ்டிரகூடர்களுக்குத் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக்கொண்டே இருந்தான். இதன் காரணமாக அமோகவர்ஷர் விஜயாதித்தனோடு போர் தொடுக்க வேண்டியதாயிற்று. அமோகவர்ஷரின் சிரூர் சாசனம், வேங்கியின் அரசரால் அவர் தொழப்பட்டதாகக் கூறுகிறது. இதிலிருந்து அமோகவர்ஷர் விஜயாதித்தனைத் தோற்கடித்ததாகப் புரிந்துகொள்ளலாம். நான்காம் கோவிந்தனின் சங்லி செப்பேடுகள், அமோகவர்ஷர் விங்கவல்லிப் போர்க்களத்தில் சாளுக்கியர்களைத் தோற்கடித்து காலனுக்குப் பெருவிருந்து வைத்ததாகப் புகழ்கிறது. கர்ஹத் செப்பேடுகள் அமோகவர்ஷர் சாளுக்கியர்களைச் சாம்பலாக்கிவிட்டதாகப் பெருமை கொள்கிறது. இவற்றிலிருந்து கீழைச்சாளுக்கிய அரசு அமோகவர்ஷரால் தோற்கடிக்கப்பட்டு, அந்தப் பகுதி ராஷ்டிரகூடர்களோடு இணைந்துவிட்டது என்று தெரிகிறது. விஜயாதித்தனின் விஷ்ணுவர்த்தனன், கர்கருடைய சகோதரியான சிலமகாதேவியை மணம் செய்துகொண்டு ராஷ்டிரகூடர்களோடு மணத்தொடர்பும் ஏற்படுத்திக் கொண்டான்.
ஆனால், இதனால் ஏற்பட்ட நட்புறவு சிறிது காலமே நீடித்தது. நாசிக்கை ஆட்சி செய்துகொண்டிருந்த ராஷ்டிரகூட அரசர்களின் சிற்றரசர்களான காலச்சூரி அரசனை விஷ்ணுவர்த்தனன் போரில் தோற்கடித்தான். இதனால் ஆத்திரமடைந்த அமோகவர்ஷர், விஷ்ணுவர்த்தனனோடு போர் செய்து அவனைக் கொன்றுவிட்டார். பிறகு தெற்கில் அவருடைய ஆட்சியை எதிர்த்த, அலூபர்களோடு போரிட்டு அவர்களையும் அமோகவர்ஷர் தோற்கடித்தார். காஞ்சியை ஆட்சி செய்துகொண்டிருந்த பல்லவர்களோடு அவர் நட்புறவைப் பேணினார். தனது மகளான சங்காவை பல்லவ அரசன் மூன்றாம் நந்திவர்மனுக்குத் திருமணம் செய்துகொடுத்தார்.
போருக்குப் பின் அமைதி
அதன்பின் அவருடைய மனம் என்ன காரணத்தினாலோ போர்களில் ஈடுபட நினைக்கவில்லை. வடக்கில் கூர்ஜர பிரதிஹார அரசர்கள் தங்கள் அரசை விரிவடையச் செய்து ராஷ்டிரகூடர்களின் வட எல்லைப் பிரதேசங்களைப் பிடித்துக்கொண்ட போதும் அமோகவர்ஷர் அசையவில்லை. போலவே தெற்கில் கங்க அரசன் ரச்சமல்லன், அமோகவர்ஷரின் நெருங்கிய நண்பரும் தளபதியுமான பங்கேசனைப் போரில் கொன்றபிறகும் அமோகவர்ஷர் அங்கே படையெடுத்துச் செல்லவில்லை. மாறாக தன்னுடைய மகளான சந்திராவை கங்க அரசன் பூதுகனுக்கு மணம் செய்து கொடுத்து அவர்களோடு சுமூக உறவு ஏற்படுத்திக்கொண்டார்.
அரபு வணிகரான சுலைமான், அமோகவர்ஷரை உலகின் நான்கு மிகச் சிறந்த மன்னர்களில் ஒருவராகக் குறிப்பிட்டுள்ளார். பாக்தாத்தின் கலீபா, சீனப் பேரரசர் மற்றும் கான்ஸ்டான்டினோபிலின் பேரரசர் ஆகியோருடன் அமோகவர்ஷரையும் அவர் இந்தப் பட்டியலில் இணைத்துப் புகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அமோகவர்ஷரின் தலைமையில் ராஷ்டிரகூடப் பேரரசு உலகளாவிய விதத்தில் புகழ்பெற்றிருந்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
அமோகவர்ஷரின் காலத்தில் வணிகம் பெரும் வளர்ச்சியை அடைந்தது. குறிப்பாக மேற்குக் கடற்கரைப் பகுதிகளும், புரோச் போன்ற துறைமுகங்களும் அவர்களது பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகித்தன. அமோகவர்ஷரின் ஆட்சிக்காலத்தில் புரோச், ராஷ்டிரகூடப் பேரரசின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது.
அந்தக் காலத்தில் இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் அரபு வணிகர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர் என்பதால் இது குறிப்பிடத்தக்கதாகும். தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் நிலையான ராஷ்டிரகூட ஆட்சி நிலவியது, இந்தியாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் பிற பிரதேசங்களுக்கும் இடையிலான வணிகம் வளர்வதற்கு பெரிதும் உதவியது.
இலக்கியப் பணி
அமோகவர்ஷரின் மிகப் புகழ்பெற்ற பங்களிப்பாக அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பணியைக் குறிப்பிடலாம். கன்னட இலக்கியத்தின் மிகப் பழமையான, இன்றுவரை கிடைத்திருக்கும் நூல்களில் ஒன்றான ‘கவிராஜமார்க்கம்’ என்ற படைப்பு அவரால் எழுதப்பட்டது. ‘கவிஞர்களின் ராஜ பாட்டை’ என்று பொருள்படும் கவிராஜமார்க்கம், கவிதையியல், அணியியல் மற்றும் இலக்கிய நடையைப் பற்றிய ஒரு முக்கிய நூலாகும்.
எனினும், இதை அவர் தாமே இயற்றினாரா, அவரது ஆதரவின் கீழ் உருவானதா, அல்லது அரசவைக் கவிஞரான ஸ்ரீவிஜயரின் உதவியுடன் இயற்றப்பட்டதா என்பது குறித்து அறிஞர்களிடையே விவாதம் நிலவுகிறது. இந்த நூலின் முக்கியத்துவம், அது பழமையானது என்பதில் மட்டும் இல்லை. ஒன்பதாம் நூற்றாண்டிலேயே கன்னட மொழி செழுமையான இலக்கிய மரபை உருவாக்கியிருந்தது என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. கன்னட மொழியில் கிடைத்துள்ள அணியியல், கவிதையியல் மற்றும் இலக்கணம் சார்ந்த மிகப் பழமையான நூலாக கவிராஜமார்க்கம் பொதுவாகக் கருதப்படுகிறது. பொயு 850ஆம் ஆண்டை ஒட்டிய காலத்தில் இயற்றப்பட்ட இந்நூல், சமஸ்கிருத நூலான ‘காவ்யாதர்சம்’ என்பதன் தாக்கத்தைப் பெற்றதாகவோ அல்லது அதன் சில கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாகவோ கருதப்படுகிறது.
தவிர, கவிராஜமார்க்கம் தனக்கு முந்தைய கன்னட இலக்கிய மரபுகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. இதன் மூலம் அமோகவர்ஷரின் காலத்திற்கு முன்பே கணிசமான அளவில் கன்னட இலக்கியப் படைப்புகள் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இதுவே அமோகவர்ஷரின் பங்களிப்பை மேலும் முக்கியமானதாக ஆக்குகிறது. அவர் புதிதாக கன்னட இலக்கியத்தை உருவாக்கவில்லை. மாறாக, ஏற்கனவே செழித்து வளர்ந்திருந்த ஓர் இலக்கிய மரபை முறைப்படுத்தி, அதற்கு உயர்ந்த மதிப்பையும் அரசவையின் அங்கீகாரத்தையும் வழங்கினார்.
இந்தியா முழுவதும் சமஸ்கிருதம் தொடர்ந்து மிகுந்த செல்வாக்கும் மரியாதையும் பெற்றிருந்தபோதிலும், மற்ற மொழிகளுக்கும் அரச ஆதரவு கிடைக்கத் தொடங்கிய காலம் அது. இந்த மாற்றத்தில் அமோகவர்ஷரின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கன்னட மொழிக்கு ஒரு முறைப்படுத்தப்பட்ட இலக்கியக் கட்டமைப்பை வழங்கிய அவர், அதனை இந்தியாவின் பரந்த செவ்வியல் இலக்கிய மரபின் ஓர் அங்கமாக உயர்த்திய பெருமை அமோகவர்ஷரைச் சாரும்.
அமோகவர்ஷர் கன்னட இலக்கியத்திற்கு மட்டுமல்ல, சமஸ்கிருத அறிவுலகிற்கும் நெருக்கமானவர். ‘பிரச்னோத்தர ரத்னமாலிகா’ என்ற சமஸ்கிருத நூல் அவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதை உண்மையில் அமோகவர்ஷரே இயற்றினாரா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் ஒரு சமஸ்கிருத நூலின் ஆசிரியராகவே அவரது பெயர் நினைவுகூரப்பட்டிருப்பது, அவர் பெற்றிருந்த அறிவார்ந்த மன்னர் என்ற புகழைக் காட்டுகிறது. அறிஞர்களுக்கு ஆதரவளித்த அரசராக மட்டும் அவர் இருக்கவில்லை; தன் காலத்தின் அறிவுசார் உலகில் நேரடியாகப் பங்கேற்றவராகவே அவர் போற்றப்பட்டார்.
அவரது அரசவையும் அக்கால இந்தியாவின் முக்கிய அறிவு மையங்களில் ஒன்றாக விளங்கியது. ராஷ்டிரகூடர் காலத்தில் சமஸ்கிருதமும் கன்னடமும் ஒரே நேரத்தில் பெரும் வளர்ச்சியைப் பெற்றன. குறிப்பாக சமண அறிஞர்கள் இதில் முக்கியப் பங்கு வகித்தனர். ஜினசேனர், சாகடாயனர், மகாவீராச்சாரியர் போன்ற பெரும் அறிஞர்கள் ராஷ்டிரகூடர் காலத்தின் அறிவுலகை வளப்படுத்தினர்.
இவர்களில் ஜினசேனர் அக்காலத்தின் தலைசிறந்த சமண ஆசாரியர்களில் ஒருவர். ‘ஆதிபுராணம்’ போன்ற புகழ்பெற்ற நூல்களுடன் அவரது பெயர் தொடர்புடையது. ஜினசேனருடன் அமோகவர்ஷர் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு, அவரது சமய சிந்தனையிலும் பண்பாட்டு அணுகுமுறையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
சமயம்
அமோகவர்ஷரின் சமண சமய ஈடுபாடு அவரது வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று. ஜினசேனரின் தாக்கத்தால் அவர் சமண சமயத்தைத் தழுவியதாகவும் கூறப்படுகிறது. இது நிகழ்ந்த காலம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அமோகவர்ஷரின் காலத்தில் சமண சமயம் வலுவான ஆதரவைப் பெற்றது என்பதில் சந்தேகம் இல்லை. சமணத் துறவிகள், இலக்கிய அறிஞர்கள், தத்துவவாதிகள், கணித மேதைகள் எனப் பலரும் ராஷ்டிரகூட அரசவையின் அறிவுச் சூழலில் சிறந்து விளங்கினர்.
அதே நேரத்தில், அமோகவர்ஷரின் சமய நிலைப்பாட்டை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது. தனிப்பட்ட முறையில் சமண சமயத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும், ராஷ்டிரகூட அரச மரபு சைவம், வைணவம், சாக்தம் போன்ற இந்து சமய மரபுகளுக்கும் ஆதரவளித்தது. சமண மையங்களும் இந்துக் கோவில்களும் ஒரே அரசியல் நிலப்பரப்பில் வளர்ந்தன.
சாளுக்கியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பட்டடக்கல் பகுதியும் ராஷ்டிரகூடர்களின் செல்வாக்கிற்குள் வந்தது. அமோகவர்ஷருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த இரண்டாம் கிருஷ்ணரின் காலத்தில், இன்று ‘ஜைன நாராயணா’ என்று அழைக்கப்படும் சமணக் கோவில் பட்டடக்கலில் அமைக்கப்பட்டது. அமோகவர்ஷரின் காலத்தில் வலுவடைந்த சமண ஆதரவு, அடுத்த தலைமுறையிலும் தொடர்ந்ததை இது காட்டுகிறது.
கணித மரபு
அவரது காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த அறிஞர்களில் ஒருவர் மகாவீராச்சாரியர். சமண மரபைச் சேர்ந்த இந்தக் கணித மேதை ‘கணித சார சங்கிரகம்’ என்ற முக்கிய நூலை இயற்றினார். ஒன்பது அத்தியாயங்களாக அமைந்த இந்த நூலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணித விதிகளும் எடுத்துக்காட்டுகளும் செய்யுள் வடிவில் இடம்பெற்றிருந்தன.
அடிப்படை கணிதச் செயல்கள், பின்னங்கள், இருபடிச் சமன்பாடுகள், வடிவியல், திண்ம வடிவங்கள் எனப் பல துறைகள் இதில் விவாதிக்கப்பட்டன. எதிர்மறை எண்களைப் பற்றியும் மகாவீராச்சாரியர் ஆராய்ந்தார். மெய்யெண்களின் அடிப்படையில் எதிர்மறை எண்ணுக்கு வர்க்கமூலம் இருக்க முடியாது என்பதையும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பதாம் நூற்றாண்டிலேயே இத்தகைய உயர்தரமான கணித நூல் ஒன்று அமோகவர்ஷரின் ஆட்சிக் காலத்தில் உருவானது சாதாரண நிகழ்வு அல்ல. ராஷ்டிரகூட அரசவை இலக்கியம், சமயத்திற்கு மட்டும் ஆதரவளித்த இடமாக இல்லாமல், கணிதம் உள்ளிட்ட அறிவுத் துறைகளும் செழித்து வளர்ந்த மையமாக இருந்ததையே இது காட்டுகிறது.
அமோகவர்ஷரின் தனித்தன்மை
அமைதியை விரும்பியவர், சமயச் சிந்தனையில் ஆழ்ந்தவர் என்ற அமோகவர்ஷரின் புகழ், அவரது ஆட்சிக்கும் ஒரு தனித்துவமான முகத்தை அளித்தது. ஆனால் அவர் வெறும் துறவற மனநிலை கொண்ட மன்னர் அல்ல. அவர் ஏற்றிருந்த பட்டங்களே இதை வெளிப்படுத்துகின்றன. நிருபதுங்கன், அதிசயதவளன், வீரநாராயணன், ரட்டமார்த்தாண்டன், ஸ்ரீவல்லபன் போன்ற பட்டங்கள் அவரது வீரத்தையும் இறையாண்மையையும் எடுத்துக்காட்டின.
மற்ற ராஷ்டிரகூட மன்னர்களுடன் அவரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அமோகவர்ஷரின் தனித்துவம் இன்னும் தெளிவாகிறது.
தந்திதுர்கர் ராஷ்டிரகூடப் பேரரசை நிறுவினார். முதலாம் கிருஷ்ணர் அதனை வலுப்படுத்தி, எல்லோரா கைலாசநாதர் கோவில் போன்ற கட்டடக்கலை அற்புதங்களுடன் தனது பெயரை நிலைநிறுத்தினார். துருவனும் மூன்றாம் கோவிந்தனும் மாபெரும் படையெடுப்புகளால் ராஷ்டிரகூடர்களின் புகழை இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்றனர். ஆனால் அமோகவர்ஷர் இவர்களிலிருந்து மாறுபட்டு விளங்கினார்.
ராஷ்டிரகூடர்களின் அரசியல் வெற்றியை அவர் பண்பாட்டு மேன்மையாக மாற்றினார். அவரது ஆட்சியில் மான்யகேடம் வெறும் தலைநகராக இல்லாமல் அறிவின் மையமாக வளர்ந்தது. கன்னட மொழி அரசவையின் உயர்ந்த இலக்கிய மொழியாக இடம்பிடித்தது. சமஸ்கிருத அறிவுலகம் தொடர்ந்து செழித்தது. சமண அறிஞர்களும் கணித மேதைகளும் அரச ஆதரவைப் பெற்றனர். இந்தியாவுக்கு வெளியேயும் ராஷ்டிரகூடப் பேரரசின் புகழ் பரவியது.
இலக்கியத்தாலும் அறிவாலும் பக்தியாலும் ஒரு மன்னன் தனது ஆட்சிக்கு பெருமை சேர்க்க முடியும் என்பதை அமோகவர்ஷர் நிரூபித்துக்காட்டினார். போர்க்கள வெற்றிகள் சில தலைமுறைகளுக்குப் பிறகு மங்கிப்போகலாம். ஆனால் ஒரு மொழியின் இலக்கிய வரலாற்றில் உருவாக்கப்பட்ட திருப்புமுனை நூற்றாண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும். ‘கவிராஜமார்க்கம்’ கன்னட இலக்கிய வரலாற்றில் பெற்றுள்ள இடமே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அந்த நூலுடன் அமோகவர்ஷரின் பெயரும் பிரிக்க முடியாத வகையில் இணைந்துவிட்டது.
பாரதத்தின் வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர்களின் ஒருவரான அமோகவர்ஷர், பொயு 878ஆம் ஆண்டை ஒட்டி மறைந்தார். அவருக்குப் பின்னர் இரண்டாம் கிருஷ்ணர் ஆட்சிக்கு வந்தார். அமோகவர்ஷர் விட்டுச்சென்ற ராஷ்டிரகூடப் பேரரசு தொடர்ந்து ஒரு வலிமையான அரசியல் சக்தியாகவே இருந்தது. பிற்காலத்தில் அந்த வம்சம் எழுச்சிகளையும் பின்னடைவுகளையும் சந்தித்தாலும், அமோகவர்ஷரின் ஆட்சிக்காலம் அதன் மிகச் சிறந்த காலகட்டங்களில் ஒன்றாக நினைவுகூரப்பட்டது.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த அவர், தனது இளமைக் காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை வென்றார். பரந்த பேரரசை நிலைநிறுத்தினார். மான்யகேடத்தைப் புகழ்பெற்ற தலைநகராக உயர்த்தினார். அறிஞர்களை ஆதரித்தார். சமண அறிவு மரபை வளர்த்தார். கன்னட இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அரச அங்கீகாரம் அளித்தார். இந்தியாவுக்கு அப்பாலும் புகழ்பெற்ற மன்னராக விளங்கினார். ராஷ்டிரகூடர்களின் அரசியல் வலிமையை ஒரு நாகரிகப் பெருமையாக மாற்றினார். அதனால்தான் இடைக்கால பாரதத்தின் தலைசிறந்த பேரறிஞராகவும் அரசராகவும் அமோகவர்ஷர் உயர்ந்து நிற்கிறார்.
(தொடரும்)
படம்: அமோகவர்ஷரின் கன்னட கல்வெட்டு (876 CE), வீரபத்ரா கோவில், கும்சி – ஷிமோகா

