Skip to content
Home » இந்தியத் தொன்மக் கதைகள் #15 – உண்மையான தலைவன்

இந்தியத் தொன்மக் கதைகள் #15 – உண்மையான தலைவன்

‘ஆசைகளே மனிதத் துன்பத்துக்குக் காரணம்’ என்கிற கொள்கையை முன்மொழியும் பௌத்தச் சமயத்தைத் தோற்றுவித்தவர் புத்தர். இவருடைய முற்பிறப்பு நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட நீதிக் கதைகளின் தொகுப்பே ‘புத்த ஜாதகக் கதைகள்’. நீதி, கருணை, ஒழுக்கம், ஈகை போன்ற நற்பண்புகளை எளிமையாக மக்களுக்கு விளக்கி உணர்த்தும் வகையில் இக்கதைகள் உள்ளன. பாலி மொழியில் தொகுக்கப்பட்ட பௌத்த நூலான சுத்த பிடகத்தின், ‘குடக்க நிகாயம்’ என்கிற பகுதியில் இக்கதைகள் இடம் பெற்றுள்ளன.

இக்கதைகளில் மனிதராகவோ விலங்காகவோ பிறக்கும் புத்தர், பல தியாகங்களைச் செய்து பல்வேறு நற்பண்புகளின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளார். அவ்வாறு புத்தர் ஒருமுறை குரங்கு அரசராக அவதரித்து, ஓர் அரசனுக்கு நற்பண்புகளைப் போதித்தார். பாலியில் மஹா கபி ஜாதகம் எனப்படும் இக்கதையின் களம் இமயமலை ஆகும்.

இமயமலைப் பகுதியில் உருவாகும் கங்கை நதியின் கரையில் வாழ்ந்த 80,000 குரங்குகளின் அரசராக புத்தர் இருந்தார். அச்சமயம் அங்கு ஒரு பெரிய மாமரம் இருந்தது. கிளைகளை விரித்துப் பரந்து நிழலைத் தந்த அம்மரம் நிறைய மாங்கனிகளைத் தந்துகொண்டிருந்தது. அம்மரத்தின் மாங்கனிகள் அனைத்தும் அமிர்தத்தைப்போல் சுவையாகவும் அளவில் பெரிதாகவும் இருந்தன. அந்த மாமரத்தை ஒருநாள் கண்டறிந்த குரங்கு அரசர், மற்ற குரங்குகளுக்கு அம்மரத்தைக் காண்பித்து, அதன் பழங்களை உண்டு மகிழச் செய்தார்.

அம்மாமரம் கங்கை நதிக்கரையோரத்தில் இருந்தது. இதனால் என்றாவது ஒரு மாம்பழம் நதியில் அடித்துச் செல்லப்பட்டு அது குறித்து மற்ற இனத்தவருக்குத் தெரியும் பட்சத்தில், அதனால் தன்னுடைய குரங்கு இனத்துக்கு ஆபத்து வருமென நினைத்தார் குரங்கு அரசர். எனவே எந்தவொரு மாம்பழமும், நதியில் விழாமல் அவர் பார்த்துக்கொண்டார். தப்பித்தவறி நதிக்குள் விழும் மாம்பழங்களைச் சேகரிக்கத் தனது கூட்டாளி குரங்குகளைக் காவலுக்கு நிறுத்தினார். கீழே தரையில் விழும் மாம்பழங்களைக்கூட உடனுக்குடன் எடுக்கச் செய்தார். ஒரு மாம்பழம்கூட அங்கிருந்து வெளியே சென்றுவிடாமல் குரங்கு அரசர் பார்த்துக்கொண்டார்.

80,000 குரங்குகள் மிகக் கவனமாக இருந்தும், அம்மாமரத்தின் அடியில் இருந்த புற்றின் மறைவில் விழுந்திருந்த மாம்பழம் ஒன்று, காற்றின் அசைவில் உருண்டோடி கங்கை நதியில் விழுந்தது. நதியின் போக்கில் அடித்துச் செல்லப்பட்ட அந்த மாம்பழம், காசி பகுதிக்கு வந்து சேர்ந்தது. அப்போது கங்கை நதியில் குளித்துக்கொண்டிருந்த காசி மன்னரின் கையில் அம்மாம்பழம் கிடைத்தது. அளவில் பெரிதாக இருந்ததால், பார்த்ததும் அது என்ன பழமென மன்னரால் கண்டறிய முடியவில்லை. உடனே அப்பழத்துடன் அரண்மனைக்குத் திரும்பிய மன்னர், அதைத் துண்டுத் துண்டாக வெட்டச் சொல்லி உத்தரவு பிறப்பித்தார்.

பல துண்டுகளாகப் பழம் வெட்டப்பட்டது. அதில் இரு துண்டுகளைத் தன் அமைச்சர்களிடம் அளிக்கச்செய்து, அவர்களை உண்ணும்படி கூறினார் மன்னர். அந்தத் துண்டுகளை உண்ட அமைச்சர்கள், அது மாம்பழம் என்பதைக் கண்டறிந்தார்கள். அது குறித்தும், அதன் அபாரமான சுவை குறித்தும் மன்னரிடம் அவர்கள் புகழ்ந்து கூறினார்கள். அதைக் கேட்ட மன்னர், ஒரு துண்டு மாம்பழத்தை உண்டு அதன் சுவையில் மெய்மறந்தார். உடனே, இந்த மாம்பழத்தைக் கொடுத்த மாமரம் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறியுமாறு தன் நாட்டு வேடர்களுக்கு அவர் ஆணையிட்டார்.

அந்தக் குறிப்பிட்ட மாமரம் இமயமலையில் உருவாகும் கங்கையின் நதிக்கரையில் இருப்பதைக் கண்டறிந்த காசி நாட்டு வேடர்கள், அம்மரத்துக்கு எந்நேரமும் குரங்குகள் காவல் இருக்கும் தகவலை மன்னரிடம் கூறினார்கள். உடனே தன்னுடைய படை பரிவாரங்கள் சூழ அம்மாமரத்தின் இருப்பிடமான இமயமலையை நோக்கி அவர் புறப்பட்டார். மாம்பழங்களால் நிறைந்திருந்த அம்மரத்தை நேரில் கண்டதும், அது தன் ஒருவனுடைய கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டுமென அந்த மன்னர் உறுதிபூண்டார்.

தன்னுடைய விருப்பத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் குரங்குகள் அனைத்தையும் அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்த அவர் முடிவெடுத்தார். அதனால் இரவோடு இரவாகத் தன்னுடைய வீரர்களை மரத்தைச் சுற்றி ஆயுதங்களுடன் மறைந்திருக்கச் செய்தார் மன்னர். இதை அறியாத குரங்கு அரசர், மாம்பழம் உண்பதற்காக எப்போதும்போல் தன் குரங்கு கூட்டாளிகளுடன் மரத்தில் ஏறினார். குரங்குகள் அனைத்தும் மரத்தில் ஏறியதும், அம்பெய்து அவற்றைக் கொன்றுவிடும்படி தன் வீரர்களுக்கு ஆணையிட்டிருந்தார் மன்னர்.

மரத்தில் ஏறிய பிறகே சூழ்ந்திருக்கும் ஆபத்தைக் குரங்கு அரசரும் அவருடைய கூட்டாளிகளும் உணர்ந்தார்கள். காசி மன்னரின் தாக்குதலை எண்ணி பயந்திருந்த தன் கூட்டாளிகளுக்குத் தைரியம் கூறிவிட்டு, அவர்களைக் காப்பாற்ற ஏதாவது வழி இருக்கிறதா என்பதைக் கண்டறிய குரங்கு அரசர் மாமரத்தின் உச்சியில் ஏறினார். பிறகு அங்கிருந்தபடி, கங்கை நதிக்கு அக்கரையில் வளைந்த நிலையில் இருந்த மற்றொரு மரத்தின் மீது தாவினார்.

அங்கிருந்து நூறு வில்லின் நாண் எய்யும் தூரத்தில் இருந்த ஒரு புதரில் இறங்கி, தான் கடந்து வந்திருந்த தூரத்தை மனதில் வைத்து, அதற்கு ஈடான நீளத்தில் ஒரு மூங்கில் தடியை ஒடித்தார் குரங்கு அரசர். அதன் நாரைக் கிழித்து ஒரு முனையைத் தன் இடுப்பில் கட்டிக்கொண்டு, எவ்வளவு நீளத்திற்கு நாரை மரத்தில் கட்ட வேண்டும், எவ்வளவு நீளத்திற்கு நாரைத் தரையில் தொங்கவிட வேண்டும் என்கிற அளவுகளை மனதில் குறித்துக்கொண்டார். ஆனால் பதற்றத்தில், தன் இடுப்பில் கட்டியிருந்த நாரின் நீளத்தை அளக்கக் குரங்கு அரசர் மறந்துவிட்டார்.

அதன்பிறகு, தன் இடுப்பில் கட்டியிருந்த மூங்கில் நாரின் மற்றொரு முனையை, வளைந்த நிலையில் இருந்த மரத்தில் காய்ந்திருந்த ஒரு கிளையில் முடிந்துவிட்டு, அங்கிருந்து நூறு நாண் எய்யும் தூரத்துக்குப் பாய்ந்தார். ஆனால் இடுப்பில் கட்டியிருந்த நாரின் நீளத்தைக் கவனிக்காமலிருந்ததால், அவரால் மாமரத்தை அடைய முடியவில்லை. ஆனால் மாமரத்தின் ஒரு சிறிய கிளையை இரண்டு கைகளாலும் இறுகப் பற்றிக்கொண்டு, தன்னுடைய குரங்குக் கூட்டத்திற்கு அவர் சைகை செய்தார்.

‘என் முதுகின் மீதேறி, மூங்கில் நார் வழியாக அனைவரும் அக்கரைக்குச் செல்லுங்கள்’ என மற்ற குரங்குகளுக்கு அவர் ஆணையிட்டார்.

80,000 குரங்குகளும் ஒன்றன்பின் ஒன்றாகக் குரங்கு அரசரின் மீதேறி அக்கரைக்குச் செல்லத் தொடங்கின. அக்கூட்டத்தில் இருந்த தேவதத்தன் என்கிற குரங்குக்கு, குரங்கு அரசர் மீது பொறாமை இருந்தது. இதனால்,’இப்போதாவது என் எதிரியின் புறமுதுகைக் காண முடிந்தது’ எனக் கூறிக்கொண்டே குரங்கு அரசரின் முதுகில் குதித்துவிட்டு அக்கரைக்குச் சென்றது. இதனால் குரங்கு அரசரின் முதுகெலும்பு உடைந்து அவருக்குக் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனாலும் அவர் அதைப் பொறுத்துக்கொண்டு அதே நிலையில் இருந்தார். அனைத்துக் குரங்குகளும் அக்கரைக்குப் பத்திரமாகச் சென்றபிறகு இறுதியாகக் குரங்கு அரசர் மட்டுமே அக்கரைக்குச் செல்லவேண்டியிருந்தது.

நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த காசி மன்னர், ‘இக்குரங்கு தன்னுயிரையும் பொருட்படுத்தாமல், தன் இனத்தைக் காப்பாற்ற எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறது?’ எனத் தன் மனதினுள்ளே குரங்கு அரசரைப் புகழ்ந்தார். இத்தனை பெரிய தியாகம் செய்த குரங்கை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென அவர் நினைத்தார். பொழுது புலர்ந்ததும், முதுகெலும்பு உடைந்து நகர முடியாமல் மயங்கிய நிலையில் இருந்த குரங்கைக் கவனமாகக் கீழே தூக்கி வருமாறு தன் வீரர்களுக்கு மன்னர் ஆணையிட்டார். அதன்பிறகு பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தி காயத்திற்கு மருந்திட்டு, குரங்கு அரசரைக் கண்விழிக்கச் செய்தார் காசி மன்னர்.

அவர் கண் விழித்ததும், ‘உங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்ற குரங்குகள் உயிரைக் காப்பாற்றி இருக்கிறீர்களே நீங்கள் யார்? நீங்கள் கண்டிப்பாக ஒரு சாதாரணக் குரங்காக இருக்க முடியாது’ எனக் குரங்கு அரசரிடம் வியப்புடன் காசி மன்னர் கேட்டார்.

‘நான் இந்த 80,000 குரங்குகளின் தலைவன். தன் மக்களின் உயிரை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவது ஒரு தலைவனின் தலையாய கடமை. ஒரு தலைவனுக்குரிய கடமையைத்தான் நான் செய்தேன்’ என மூச்சுவிடச் சிரமப்பட்டுக்கொண்டே அவர் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய குரங்கு மன்னரான புத்தர், ‘அதிகாரத்தால் மக்களை ஆள முடியாது. அன்பால் மட்டுமே மக்களை ஆட்சி செய்ய முடியும். நீ ஆட்சி செய்யும் பரந்து விரிந்த நிலமெங்கிலும் வாழும் உயிர்கள் அனைத்தும் உனது மக்களே. அவர்களை நீ துன்புறுத்தாதே. அன்புடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்வாயாக…’ என மன்னருக்குப் போதனை வழங்கிவிட்டு, தன்னுடைய வாழ்வை முடித்துக்கொண்டார். பின்னர் குரங்கு அரசரின் உடலுக்கு முறையாக இறுதிச் சடங்கு செய்து சமாதி எழுப்பினார் காசி மன்னர். அச்சமாதியை வணங்கி வந்த மன்னர், புத்தர் போதித்ததுபோல் அதன்பிறகு அன்புடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்தார்.

புத்தரின் முற்பிறவிகள் குறித்துக் கூறும் பல்வேறு ஜாதகக் கதைகளில் ஒன்றான இது, ஒரு தலைவன் என்பவன் சுயநலம் இல்லாமல், குடும்பத்தார், சுற்றத்தார் மற்றும் மக்களின் நலனுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்யவும் தயங்கக்கூடாது என்பதை நமக்குக் கூறுகிறது. எவன் ஒருவன் சுயநலமில்லாமல் மக்களின் நலனுக்காகச் செயல்படுகிறானோ அவனே உண்மையான தலைவன் என்பதை இக்கதை நமக்கு விளக்குகிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *