ஆச்சார்ய நரேந்திர தேவ் அளித்த ஆலோசனை, சந்திரசேகரின் வாழ்க்கைப் பாதையை மாற்றியது. ஒருவேளை, நரேந்திர தேவ் அந்த ஆலோசனையை அளிக்காமல் போயிருந்தாலோ நரேந்திர தேவின் அறிவுரையை சந்திரசேகர் ஏற்றுக்கொள்ளாமல் போயிருந்தாலோ, ஆய்வை முடித்து, முனைவர் பட்டம் பெற்று, சந்திரசேகர் ஏதேனும் ஒரு கல்லூரியில் பேராசிரியர் ஆகியிருப்பார். நிலையான வருமானம், கௌரவமான வேலை, நிம்மதியான வாழ்க்கை ஆகிய மூன்றையும் அவர் நிச்சயம் பெற்றிருப்பார்; சாதாரண குடும்பப் பின்புலம் கொண்ட எவருக்கும் அத்தகைய வாழ்க்கை அமையவே விருப்பம் இருந்திருக்கும். ஆனால், சந்திரசேகரோ மாற்றி யோசித்தார். தன்னுடைய ஆய்வுப் பணிக்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர அரசியலுக்கு வந்தார். ஆச்சார்ய நரேந்திர தேவ் இருந்த பிரஜா சோஷலிசக் கட்சியில் சேர்ந்தார்.
1948இல் காங்கிரஸ் கட்சியை விட்டுப்பிரிந்து, தனிக்கட்சியாக உருவான சோஷலிசக் கட்சியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. நேருவிற்கு அடுத்தபடியாக, நாடு முழுவதும் புகழ் பெற்றிருந்த தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் சோஷலிசக் கட்சியில் இருந்தார். தவிரவும், ஆச்சார்ய நரேந்திர தேவ், ராம் மனோகர் லோஹியா, அசோக் மேத்தா, அச்யுத் பட்வர்தன், யூசுஃப் மெஹரலி, மது லிமாயே போன்ற புகழ்பெற்ற தலைவர்களும் சோஷலிசக் கட்சியில் இருந்தனர். 1951இல் மக்களவைக்கான முதல் தேர்தல் நடைபெற்றது. பிகார் உள்ளிட்ட பல வடக்கு மாநிலங்களில் சோஷலிசக் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்குப் பொதுமக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. எனவே, காங்கிரஸ் கட்சிக்குக் கடும் சவாலைச் சோஷலிசக் கட்சி தருமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகளோ வேறு விதமாக இருந்தன.
மொத்தமிருந்த 489 இடங்களில், காங்கிரஸ் கட்சி 364 இடங்களில் வென்றிருந்தது. தொகுதிகளின் எண்ணிக்கையின்படி பார்த்தால் கிட்டத்தட்ட 75% இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், தேர்தலில் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் கிட்டத்தட்ட 45% மட்டுமே பெற்றிருந்தது. காங்கிரசிற்கு அடுத்தபடியாக 10.5% வாக்குகள் பெற்ற சோஷலிசக் கட்சி, வெறும் 12 இடங்களில் மட்டுமே வென்றது. கட்சியின் தேர்தல் செயல்பாடுகள் குறித்து ஜேபி அதிருப்தி அடைந்தார். கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
சோஷலிசக் கட்சிக்கு அடுத்தபடியாக ஆச்சார்ய கிருபளானியின் ‘கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி’ (தமிழில், விவசாயிகள்-தொழிலாளர்கள்-மக்கள் கட்சி), கிட்டத்தட்ட 6% வாக்குகளுடன் 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ‘கொள்கை அளவில் இந்த இரு கட்சிகளிடையே பெரிய வித்தியாசங்கள் என்று ஏதுமில்லை. பிறகு எதற்காகத் தனித்தனிக் கட்சிகளாக இருக்கவேண்டும்? இரண்டு கட்சிகளையும் இணைத்து ஒரே கட்சியாகப் பணியாற்றினால் என்ன?’ என்று ஜேபி கருதினார். பேச்சுவார்த்தைகள் நடந்தன. இரு கட்சிகளும் செப்டம்பர் 1952இல் பம்பாயில் இணைந்தன. புதிய கட்சிக்குப் ‘பிரஜா சோஷலிசக் கட்சி’ என்று பெயரிடப்பட்டது. கட்சியின் தலைவராக ஆச்சார்ய கிருபளானியும், பொதுச் செயலாளராக அசோக் மேத்தாவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பிரஜா சோஷலிசக் கட்சியில் 1952இல் தன்னை இணைத்துக்கொண்ட சந்திரசேகர், மாவட்ட அளவில் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். பலியா மாவட்டச் செயலாளர் ஆனார். அடுத்த ஆண்டில் அவருக்கொரு திருப்பம் ஏற்பட்டது. சந்திரசேகர் ஆற்றிய கட்சிப் பணிகள் குறித்துக் கேள்விப்பட்டார் நரேந்திர தேவ். மாநிலத் தலைநகர் லக்னோவிற்கு உடனடியாக வரும்படி, சந்திரசேகருக்கு அழைப்பு வந்தது. சந்திரசேகரைக் கட்சியின் மாநில இணைச் செயலாளராக்கும் எண்ணத்தை அவரிடம் நரேந்திர தேவ் கூறினார். சந்திரசேகர் சற்றுத் தயங்கினார்; தன்னால் இந்தப் பெரும் பொறுப்பை ஏற்று நடத்த முடியுமா என்று யோசித்தார். நரேந்திர தேவின் வற்புறுத்தலின் பேரில் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். அதுவரையில் மாவட்ட அளவில் கட்சிப்பணி ஆற்றிக் கொண்டிருந்தவர், இணைச் செயலாளர் ஆன பிறகு, மாநில அளவில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
கழிப்பறை வசதிகூட இல்லாத சிறிய அறையில் செயல்பட்டுக் கொண்டிருந்த லக்னோவின் கட்சி அலுவலகத்தில் தன் நண்பர்களுடன் தங்கினார் சந்திரசேகர். கட்சி அலுவலகத்திற்கென்று பெரிய வசதிகள் எதுவும் இருந்திருக்கவில்லை. கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மாதாமாதம் அளிக்கக்கூடிய 10 ரூபாயை வசூலித்து, அதைச் செலவிற்குப் பயன்படுத்தி வந்தார் சந்திரசேகர். பல சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தம் பங்குத் தொகையை அளிக்க முன்வராதபோது அவர்களை வற்புறுத்தாத சந்திரசேகர், இருக்கின்ற தொகையை வைத்துச் சமாளித்தார். இருப்பதை வைத்துக்கொண்டு பல நாட்கள் பசியாறினார். முறையற்ற உணவுப் பழக்கத்தால் அவருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படத் தொடங்கியது. அது வாழ்நாள் முழுவதும் அவரை விட்டு நீங்காமலிருந்தது.
வேலையாட்கள் என்று யாரையும் வைத்துக்கொள்ளாத சந்திரசேகர், சமையல் பாத்திரங்களையும் நண்பர்களின் பாத்திரங்களையும்கூடப் பல சமயங்களில் தானே கழுவினார். மாநிலம் முழுவதும் சுற்றி, கட்சியின் கொள்கைகளைப் பல்வேறு கூட்டங்களில் விளக்கிப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த சந்திரசேகர், கட்சியைப் படிப்படியாக வளர்க்கத் தொடங்கினார். ‘போராட்டம்’ (இந்தியில் ‘சங்கர்ஷ்’) என்ற பெயரில் ஒரு சோஷலிச இதழை நடத்தினார். ஆச்சார்ய நரேந்திர தேவின் பிறந்தநாளை முன்னிட்டுக் கட்சித் தொண்டர்களிடம் தலா ஒரு ரூபாய் வசூலித்தவர், அவ்வாறு திரட்டிய ஆயிரக்கணக்கான ரூபாயை முதலீடாகக் கொண்டு ‘போராட்டம்’ இதழை வளர்த்தார். இவ்வாறு உத்தரப் பிரதேச மாநிலத்தில் கட்சியைச் சந்திரசேகர் வளர்த்துக் கொண்டிருக்க, கட்சிக்குள் சில முக்கியமான சம்பவங்கள் நடைபெற்றன.
கட்சிக்குள் விரிசல்
1953இல் ‘ஜனதா’ என்ற இதழில், பிரஜா சோஷலிசக் கட்சியின் பொதுச் செயலாளரான அசோக் மேத்தா ஒரு கட்டுரை எழுதினார். ‘பின்தங்கிய பொருளாதாரத்தின் அரசியல் கட்டாயங்கள்’ என்பதே அந்தக் கட்டுரையின் தலைப்பு. நான்கு வார்த்தைகளைத் தலைப்பில் கொண்ட இந்தக் கட்டுரையின் சாராம்சத்தை நான்கே வார்த்தைகளில் குறிப்பிட வேண்டுமென்றால், ‘சண்டையின்றிக் காங்கிரசோடு ஒத்துப் போகலாம்’ என்பதுதான். காங்கிரசோடு ஏன் ஒத்துப் போக வேண்டும் என்பதை அவர் இந்தக் கட்டுரையில் விரிவாக விளக்கியிருந்தார்.
‘இந்தியா போன்ற ஒரு பின்தங்கிய நாட்டில், கோட்பாடு அல்லது கொள்கையின் நுணுக்கமான அம்சங்கள் குறித்து வீண் விவாதங்களில் ஈடுபடுவது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும். தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தைக் காண விரும்புபவர்கள், நாட்டின் முக்கிய அரசியல் சக்திகளுடன் இணைந்து செயல்பட வேண்டுமே தவிர, அரசாங்கம் போதுமான அளவு தீவிரமான மாற்றங்களை மேற்கொள்ளவில்லை என்பதற்காகவே ஒவ்வொரு கட்டத்திலும் அதைத் தொந்தரவு செய்யக்கூடாது. ஜனநாயக அமைப்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பொறுப்பற்ற விமர்சனங்கள், அரசாங்கத்தைத் தளர்வடையச் செய்யும். அதன் விளைவாக நாட்டின் வளர்ச்சி குன்றக்கூடும்’ என்பவையே அவர் அந்தக் கட்டுரையில் முன்வைத்த வாதங்கள்.
அசோக் மேத்தாவின் இந்தக் கட்டுரை, கட்சியினரிடையே பலத்த விவாதங்களுக்கு உள்ளானது. குறிப்பாக, ராம் மனோகர் லோஹியா இந்தக் கட்டுரையை மிகவும் தீவிரமாக விமர்சித்தார். விளைவு, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அசோக் மேத்தா விலகினார். ஆனால், கட்சியில் நீடித்தார். என்.ஜி.கோரே என்பவர் பொதுச் செயலாளர் ஆனார்.
இந்தப் பிரச்னை அடங்குவதற்குள்ளாக, அடுத்த விவகாரம் கிளம்பியது. நேருவை ஜேபி ரகசியமாகச் சந்தித்ததாக வதந்தி பரவியது. இது குறித்து ஜேபி விளக்கம் தர நேரிட்டது. நேரு கேட்டுக்கொண்டதன் பேரில், அவரைச் சந்தித்ததாக ஜேபி ஒப்புக்கொண்டார். ‘எதன் பொருட்டு இந்தச் சந்திப்பு?’ என்ற கேள்விக்கு, எந்தெந்த விஷயங்களில் காங்கிரஸ் ஆட்சிக்குப் பிரஜா சோஷலிசக் கட்சி ஆதரவு தரக்கூடும் என்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜேபி தெரிவித்தார். தங்கள் கட்சியின் ஆதரவு தேவையென்றால், தங்களுடைய 14 அம்சக் கோரிக்கைகளைக் காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்ற வேண்டுமென்று தான் நிபந்தனை விதித்ததையும், ஆனால் நேரு இதற்கு உடன்பட மறுத்துவிடவே, பேச்சுவார்த்தை முறிந்தது என்பதையும் ஜேபி விளக்கினார்.
ஜேபியின் இந்த விளக்கம், கட்சிக்குள் கடும் கொந்தளிப்பைக் கிளப்பியது. ‘எதற்காகக் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு?’ என்ற கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டது. ஜேபிக்கு துணைப் பிரதமர் பதவி உறுதியளிக்கப்பட்டதாகவும், கூடிய விரைவில் காங்கிரஸ் கட்சியில் ஜேபி இணைந்து, அந்தப் பதவியைப் பெறப்போகிறார் என்றும் வதந்திகள் உலவின. பதவிக்கு அலைபவராக ஜேபி சித்தரிக்கப்பட்டார். ஆனால் ஜேபி இவற்றை வன்மையாக மறுத்தார்.
1955இல் நடைபெற்ற ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் சோஷலிசப் பாணியிலான சமூகம் உருவாக்கப்படவேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலில், ‘காங்கிரசும் சோஷலிசத்தைத் தானே வலியுறுத்துகிறது! எனவே, கொள்கையளவில் ஒரே அலைவரிசையில் இருக்கும் காங்கிரசோடு, சில விஷயங்களிலாவது ஒத்துப்போனால் என்ன தவறு?’ என்கிற கேள்விகள் பிரஜா சோஷலிசக் கட்சிக்குள் எழுந்தன. காங்கிரசோடு ஒத்துப்போவது என்ற கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்த லோஹியா, அசோக் மேத்தாவின் கட்டுரை மற்றும் ஜேபி-நேரு சந்திப்பு ஆகிய நிகழ்வுகளால் வெறுப்படைந்தார். கட்சியிலிருந்து டிசம்பர் 1955இல் விலகினார். புதிதாகக் கட்சி தொடங்கினார். தன்னுடைய கட்சிக்கு ‘சோஷலிசக் கட்சி’ என்று பெயரிட்டார்.
கட்சியிலிருந்து லோஹியா விலகியதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, களத்தில் இறங்கி, கடுமையாக உழைக்கக் கூடிய நபரொருவர் தேவையென்பதை ஆச்சார்ய நரேந்திர தேவ் உணர்ந்தார். மாநில இணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்த சந்திரசேகர், கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். கட்சியின் முன்னேற்றத்திலும் தனிப்பட்ட முறையில் சந்திரசேகரின் முன்னேற்றத்திலும் மிகவும் அக்கறை செலுத்தி வந்த ஆச்சார்ய நரேந்திர தேவ் பிப்ரவரி 1956இல் காலமானார். தன்னுடைய அரசியல் குரு காலமானதில், சந்திரசேகர் மிகவும் வருத்தமுற்றார். அவர் விரும்பியவாறு, கட்சிப் பணிகளில் மேலும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.
லக்னோவிலிருந்து தில்லிக்கு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கட்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதில் சந்திரசேகர் முனைப்புடன் ஈடுபட்டார். அர்ப்பணிப்பு உணர்வுடைய பல்வேறு தொண்டர்கள் கட்சியில் இணையத் தொடங்கினர். சந்திரசேகரின் தீவிரமான களப்பணியின் விளைவுகள், 1957 சட்டமன்ற தேர்தலில் வெளிப்பட்டது. முந்தைய தேர்தலில் (1952) 21 இடங்களில் மட்டுமே வென்றிருந்த பிரஜா சோஷலிசக் கட்சி, 1957 தேர்தலில் 44 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி ஆனது. எதிர்க்கட்சித் தலைவராக என்.டி.திவாரி நியமிக்கப்பட்டார்.
மாநிலச் சட்டப்பேரவை எதிர்க்கட்சியான பிரஜா சோஷலிசக் கட்சிக்கு ஒரு பங்களா ஒதுக்கப்பட்டது. சந்திரசேகருக்கு ஊதியமாகக் கட்சி நிதியிலிருந்து மாதா மாதம் 75 ரூபாய் அளிக்கப்பட்டது. அதில் 25 ரூபாயைக் கட்சி அலுவலகம் நடத்துவதற்காக அளித்தார் சந்திரசேகர். கட்சி அலுவலகத்திற்கு வரும் அடிமட்டத் தொண்டனுக்கும் சாப்பாடு தயாரித்து வழங்கப்பட்டது. கட்சியின் அடிமட்டத் தொண்டனும் கட்சியின் தலைவனும் ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தத் தொடங்கினர். தொண்டர்களிடையே சந்திரசேகர் மிகவும் பிரபலமானார். உத்தரப் பிரதேசத்தில் கட்சியின் முகமாகச் சந்திரசேகரே அறியப்படத் தொடங்கினார். 1963 வரை ஒவ்வோர் ஆண்டும் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சியினரிடையே சந்திரசேகருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது என்பது ஒருபுறம் இருக்கட்டும். பொதுமக்களிடையே அவருக்கு எந்த அளவிற்குச் செல்வாக்கு இருந்தது? ஒருமுறை, தொழிலாளர்களின் பேரணி ஒன்றில் பங்குகொள்வதற்காகச் சந்திரசேகர் ஓர் ஊருக்கு அவசரமாகச் செல்லவேண்டியிருந்தது. அவரிடமோ அப்போது சுத்தமாகக் காசில்லாத நிலை. அந்த நிலையிலும் பேரணியில் கலந்துகொள்ள முடிவெடுத்தவர் லக்னோ ரயில் நிலையத்திற்குச் சென்றார். பயணச்சீட்டு அளிப்பவரிடம் தன்னுடைய நிலையைக் கூறியவர், தனக்குப் பயணச்சீட்டு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பயணம் முடிந்து திரும்பி வந்த பிறகு, பயணக் கட்டணத்தைச் செலுத்துவதாக உறுதியளித்தார்.
வந்திருப்பவர் சந்திரசேகர் என்பதைப் புரிந்துகொண்ட அந்தப் பயணச்சீட்டு முன்பதிவு எழுத்தர், உடனடியாகச் சந்திரசேகருக்கும் அவருடன் வந்தவருக்கும், பணமே பெற்றுக்கொள்ளாமல் பயணச்சீட்டுகளை வழங்கினார். பயணம் முடிந்தபிறகு பயணச் சீட்டிற்கான கட்டணத்தைச் சொன்னபடி சந்திரசேகர் திருப்பியளித்தது இங்கு முக்கியமல்ல. மக்களிடையே சந்திரசேகருக்கு எத்தனை செல்வாக்கு இருந்தது என்பதை இந்த நிகழ்வின் மூலம் அறியலாம்.
மாநில அளவில் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்த அதே வேளையில், தேசிய அளவில் கட்சியின் செல்வாக்கு பெரிதாக வளரவில்லை. 1957இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 10.5% வாக்குகளுடன் 19 இடங்களில் மட்டுமே அக்கட்சி வென்றிருந்தது. உபி மாநிலத்தில் ராஸ்ரா என்ற மக்களவைத் தொகுதியில் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரசேகர், மூன்றாமிடம் பெற்றுத் தோல்வியடைந்தார். 1962 தேர்தலில் கட்சியின் செயல்பாடு மேலும் மோசமடைந்தது. ஏறக்குறைய 7% வாக்குகளுடன் 12 இடங்களில் மட்டுமே அக்கட்சி வென்றது. தேசிய அளவில் கட்சியின் செயல்பாட்டை முன்னேற்ற வேண்டுமென்ற சிந்தனை கட்சியினரிடையே ஏற்பட்டது. எனவே, மாநிலங்களவை உறுப்பினராகக் கட்சியின் சார்பில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் சந்திரசேகர். மாநில அரசியலில் வெற்றி பெற்றிருந்த சந்திரசேகர், 1962இல் தேசிய அரசியலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார்.
சந்திரசேகரும் நேருவும்
1962இல் முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினரான சந்திரசேகர், தொடக்கத்திலிருந்தே நாடாளுமன்றத்தில் தன்னுடைய முத்திரையைப் பதிக்கத் தொடங்கினார். ‘யார் அந்தத் தாடி வைத்த இளம் உறுப்பினர்?’ என்று நேருவே கவனித்துத் தன்னுடைய அமைச்சர் ஒருவரிடம் கேட்குமளவிற்குச் சந்திரசேகரின் செயல்பாடுகள் இருந்தன. ஆளுங்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என எவரையும் விட்டு வைக்காமல் தன்னுடைய கேள்விகளாலும் விவாதங்களாலும் சந்திரசேகர் அனைவரையும் துளைத்தெடுத்தார்.
ஒருமுறை பஞ்சாப் முதல்வராகப் பணியாற்றி வந்த பிரதாப் சிங் கைரோன் என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது குறித்து விசாரிக்க ஓர் உயர்மட்டக் குழுவைக் கட்சியின் சார்பில் நேரு அமைத்திருந்தார். அந்தக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று சந்திரசேகர் கோரினார். அது ரகசியமான அறிக்கையென்றும், எனவே அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அது குறித்து விவாதிக்க முடியாதென்றும் நேரு பதிலளித்தார். ‘காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுவான மத்தியச் செயற்குழுவில் ஏற்கெனவே வைத்து விவாதிக்கப்பட்ட அந்த அறிக்கையை எவ்வாறு ரகசியமானதாகக் கருதமுடியும்?’ என்று பதில் கேள்வி எழுப்பினார் சந்திரசேகர். உண்மைக்கு மாறான தன்னுடைய பதிலின் மூலம், நாடாளுமன்றத்தை நேரு தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டினார். தன்னுடைய நினைவில் இருந்ததை வைத்துக்கொண்டு, அது சரிதானா என்பதைச் சரிபார்க்காமல், அவ்வாறு தவறாகப் பதிலளித்து விட்டதாகக் கூறிய நேரு, அவையிடம் மன்னிப்பு கோரினார். நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தும் எண்ணம் தனக்கில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
1962இல் நடந்த இந்திய-சீனப் போரில், இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி குறித்து பிரஜா சோஷலிசக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அந்தக் கேள்விக்குச் சற்று ஏளனமான தொனியில் நேரு பதிலளித்தார். நேருவின் பதிலுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிரித்தனர். கேள்வி கேட்ட உறுப்பினர் தர்மசங்கடமாக அமர்ந்தார். கோபத்தில் எழுந்த சந்திரசேகர், தன்னுடைய அகங்காரத்தை நேரு விட்டொழிக்க வேண்டுமென்றும், தன்னுடைய தோல்விகளிலிருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும், ஒரு போர்த் தலைவரைப்போல் நடந்துகொள்ள வேண்டுமென்றும் நேருவிற்கே அறிவுரை கூறினார். முதல்முறை உறுப்பினரான 35 வயதே நிரம்பிய சந்திரசேகர், பிரதமர் நேருவிற்கே அறிவுரை அளிக்கும் துணிச்சல் குறித்துப் பலரும் வியப்பாகப் பேசினர்.
சீனப்போரில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து பிப்ரவரி 1963இல் மாநிலங்களவையில் உரையாற்றிய சந்திரசேகர், 1959 மற்றும் 1960இல் பல்வேறு சீன நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளை மேற்கோள்காட்டிப் பேசினார். இந்தியா மீது போர்தொடுக்கும் எண்ணம் நீண்ட நாட்களாகவே சீனாவிற்கு இருந்ததென்பதை இத்தகைய ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி விளக்கிய சந்திரசேகர், சீனாவின் விஷயத்தில் நம் நாடு எச்சரிக்கையின்றி அலட்சியமாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டினார். சீன ஆக்கிரமிப்பின் ஆரம்பக் கட்டத்தின்போது இலங்கை சென்றிருந்த நேரு, ‘சீனப் படைகள் நமது எல்லைப் பகுதிகளில் இருந்தால், நாம் அவர்களை வெளியேற்ற வேண்டும்’ என்று கூறினார். ‘நேருவின் இந்த அறிவிப்பு, ஏற்கெனவே பதற்றமாக இருந்த சூழலை மேலும் மோசமாக்கியது’ என்று சந்திரசேகர் சுட்டிக்காட்டினார்.
இந்திய-சீனப் போரின்போது இந்தியக் கம்யூனிஸ்டுகளில் ஒரு பிரிவினர் சீனாவிற்கு ஆதரவாக நடந்துகொண்டதை ஆதாரத்துடன் குறிப்பிட்ட அவர், அத்தகைய நபர்கள்மீது கடுமையாகக் குற்றம்சாட்டினார். சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு வல்லரசு முகாம்களுக்கு இடையிலான பனிப்போரைப் பொறுத்தமட்டில் நம் நாட்டின் ‘அணிசேராக் கொள்கை’ பொருத்தமானதாக இருந்தபோதிலும், சீனாவை எதிர்கொள்வதில் அது போதுமானதாக இல்லை என்று வாதிட்டார்.
போரில் தோல்வி அடைந்ததன் எதிரொலியாக, நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனன் பதவி விலக நேர்ந்ததைப் பற்றியும் சந்திரசேகர் பேசினார். ‘தங்கள் தலைவர் எப்போதும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் அப்பாற்பட்டவர்’ என்று காங்கிரஸ் கட்சியில் கருதப்படுவது வழக்கமென்றும், கட்சியின் தலைமையைப் பாதுகாக்க எப்போதும் ஒரு பலி ஆட்டைக் காவு கொடுப்பதே காங்கிரஸ் கட்சியின் மரபாக இருந்து வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
நேருவை நாட்டின் ஒரே மீட்பராகப் போற்றியவர்களை அவர் எதிர்த்தார். ஒட்டுமொத்த நாட்டையும் உருவாக்கவோ அல்லது அழிக்கவோ நேருவால் மட்டுமே முடியும் என்று மக்கள் நம்புவது நாட்டிற்குத் துரதிர்ஷ்டவசமானதாகவே அமையும் என்று அவர் குறிப்பிட்டார். நேருவின் பல கொள்கைகளுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், அவருடைய ஜனநாயகப் பண்பையும் தனிப்பட்ட நேர்மையையும் சந்திரசேகர் எப்போதும் மதித்தார் என்பதையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.
மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதங்களின்போது சந்திரசேகர் மேற்கொண்ட இத்தகைய நேரடியான மற்றும் ஆழமான கருத்துப் பகிர்வுகள் அனைவரையும் ஈர்த்தன. மாநில அளவிலான சோஷலிசத் தலைவராக அறியப்பட்ட சந்திரசேகர், மாநிலங்களவையில் நிகழ்த்திய இந்த உரைகளின் மூலம் தேசிய அரசியலின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார்.
கட்சி மாற்றம்
தில்லியில் சந்திரசேகரின் செல்வாக்கு படிப்படியாக உயர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்த பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் படிப்படியாகக் குழப்பங்கள் ஏற்பட்டன. அவற்றின் ஒட்டுமொத்த விளைவால் கட்சிக்குள் பிளவு உண்டானது.
1962இல் இந்திய-சீனப் போரில் இந்தியா தோற்றதன் விளைவால், நேருவின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. மக்களிடையே நேருவின் ஆட்சிக்கெதிராக லேசான முணுமுணுப்புகள் எழும்பின. 1963இல் நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது (குஜராத்தில் ராஜ்கோட், உத்தர பிரதேசத்தில் அம்ரோஹா, ஃபரூக்காபாத் மற்றும் ஜான்பூர்). இவற்றில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் தோற்றது (ராஜ்கோட்டில் சுதந்திரா கட்சியின் மினூ மசானி வெற்றி பெற்றிருந்தார்; அம்ரோஹா தொகுதியில் சுயேச்சையாக நின்ற ஆச்சார்ய கிருபளானி வென்றிருந்தார்; ஃபரூக்காபாத் தொகுதியில் சோஷலிசக் கட்சியின் லோஹியா வெற்றி அடைந்திருந்தார்).
நேருவின் ஆட்சிக்கெதிரான மக்கள் அதிருப்தியின் வெளிப்பாடாகவே இந்த இடைத்தேர்தல் முடிவுகள் கருதப்பட்டன. நாடாளுமன்றத்தில் இந்த மூவரும் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் நெருக்கடி அளிப்பார்கள் என்பது நேருவிற்குத் தெரிந்தது. எனவே, ஆட்சிக்கெதிரான அதிருப்தியைச் சமாளிக்கவும், நாடாளுமன்றத்தில் இவர்களுடைய எதிர்ப்பைச் சமாளிக்கவும், அதே சமயத்தில் கட்சியைப் பலப்படுத்தவும் நேரு விரும்பினார். தன்னுடைய கட்சியில் இணையச் சொல்லி சோஷலிசத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இது ஒருபுறமிருக்க, 1957 மற்றும் 1962 தேர்தல்களில் சோஷலிசக் கட்சிகளின் (ஜேபி இருந்த பிரஜா சோஷலிசக் கட்சி மற்றும் லோஹியாவின் சோஷலிசக் கட்சி) செயல்பாடும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. தவிரவும், வலதுசாரிக் கட்சியான பாரதிய ஜன சங்கம் மற்றும் ராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆகியவை கணிசமான வெற்றிகளைப் பெறத் தொடங்கியிருந்தன. இது போதாதென்று, கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் இருந்தது. இந்தச் சூழலில், சோஷலிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த லோஹியா, டிசம்பர் 1962இல் இதுகுறித்த அழைப்பை விடுத்தார். காங்கிரசிற்கு எதிரான வாக்குகள் சிதறக் கூடாதென்றும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றும், இவற்றின் முதல்படியாகச் சோஷலிசக் கட்சிகள் இணைய வேண்டுமென்றும் லோஹியா விளக்கினார்.
ஒருபுறத்தில் தன்னுடைய கட்சியில் இணையச் சொல்லி நேரு விடுத்த வேண்டுகோள், மறுபுறத்தில் சோஷலிசக் கட்சிகள் இணைய வேண்டுமென்று லோஹியாவின் அழைப்பு. எந்தப் பக்கம் செல்வதென்று பிரஜா சோஷலிசக் கட்சிக்குள் விவாதங்கள் ஏற்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப்போக வேண்டியதன் அவசியத்தைத் தன் கட்டுரையில் விளக்கியிருந்த அசோக் மேத்தா, மீண்டும் அதையே வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியோடு இணைவது தவறென்று லோஹியா வாதிட்டார்; தொடக்கத்திலிருந்தே லோஹியாவின் நிலைப்பாடு இதுவாகவே இருந்தது. விவாதங்களின் முடிவில், பிரஜா சோஷலிசக் கட்சியிலிருந்து அசோக் மேத்தா விலகிட முடிவெடுத்தார். எனவே, பிரஜா சோஷலிசக் கட்சியிலிருந்து அவர் விலக்கப்பட்டார்.
அசோக் மேத்தாவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறென்று சந்திரசேகர் குரல்கொடுத்தார். எனவே, சந்திரசேகரும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாகக் கட்சியை ஒவ்வொரு படியாக வளர்த்த சந்திரசேகர், அதே கட்சி தன்னைத் துரத்தியதை எண்ணி வருந்தினார். அசோக் மேத்தாவைத் தவிர, என்.டி.திவாரி (1957இல் உபி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டவர்), வசந்த் சாத்தே போன்ற முக்கியமான தலைவர்களும் காங்கிரசில் சேர்ந்தனர்.
பிரஜா சோஷலிசக் கட்சியில் மீதமிருந்த தலைவர்கள், லோஹியாவின் அழைப்பை ஏற்றனர். ஜூன் 1964இல், பிரஜா சோஷலிசக் கட்சியும் லோஹியாவின் சோஷலிசக் கட்சியும் இணைந்தன. புதிய கட்சிக்கு, ‘சம்யுக்த சோஷலிசக் கட்சி’ என்று பெயரிடப்பட்டது. தன்னுடைய வேண்டுகோளை ஏற்று, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அசோக் மேத்தாவைத் திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஆக்கினார் நேரு. கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் மாநிலங்களவையில் சில நாட்கள் சுயேச்சை உறுப்பினராக இருந்த சந்திரசேகர், பின்னர் காங்கிரஸ் கட்சியில் முறையாக இணைந்தார்.
(தொடரும்)

