மகாபாரதத்தில் கண்ணன் பிரவேசித்ததுபோல், இந்தியக் கணித வரலாற்றில் பிரம்மகுப்தன் பிரவேசித்ததுபோல், ஸ்வீடனில் பிறந்த ஜான்ஸ் ஜேகப் பெர்சீலியஸ் வேதியியலில் பிரவேசித்தார்.
தேனை மறந்திருக்கும் வண்டையும் வானை மறந்திருக்கும் பயிரையும், பெர்சீலியஸை மறந்திருக்கும் வேதியியலுக்கு உவமையாகச் சொல்லலாம். முழு மகாபாரத நாடகத்தைப் பார்த்துவிட்டு, ஒருவன், ‘சண்டைக் காட்சியெல்லாம் அற்புதம், அரண்மனையும் காடுகளும் மலைகளும் கண்ணைக் கவர்ந்தன. ஆகா, எப்பேர்ப்பட்ட இதிகாசம்,’ என்று புகழ்ந்துவிட்டு, ‘ஆமாம், மயிலிரகைச் சூடிக்கொண்டு நடுநடுவில் புல்லாங்குழலோடு ஒருவன் அடிக்கடி வந்துட்டு போனானே, யாரப்பா அவன்?’ என்று கேட்டால் எப்படி இருக்கும்? அதுபோல்தான் பெர்சீலியஸின் இருட்டடிப்பும்.
வேதியியலுக்கு இலக்கணத்தை வகுத்து அகராதியைப் படைத்தவர் பெர்சீலியஸ் என்மனார் உண்டு. வேதியியலின் தொல்காப்பியன் அல்லது பாணினி என்று சொல்வது பொருந்துமோ?
நிலவும் புவியும் கல்லும் மணலும்
ஒரு பள்ளி ஆசிரியரின் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் தந்தையை இழந்து, தாயின் இரண்டாம் கணவரின் ஆதரவில், அப்சலா கல்லூரியில் மருத்துவம் படித்தார் பெர்சீலியஸ். ஆண்டர்ஸ் எகெபெர்க் எனும் வேதியியல் பேராசிரியரின் மாணவரானார். இந்த எகெபெர்க் டாண்டலம் என்கிற தனிமத்தைக் கண்டுபிடித்தவர்.
வில்ஹெல்ம் ஹைசிங்கர் (Wilhelm Hisinger) எனும் சுரங்க முதலாளி, ஒரு புவியியல் ஆர்வலர். 1800இல் தன் தந்தையின் நிலத்தில் கிடைத்த ஒரு கனிமத்தை கார்ல் ஷீலுக்கு அனுப்பி இது டங்க்ஸ்டனா என்று அவர் வினவ, ஷீல் அதை மேலோட்டமாக பரிசீலித்து ‘இது டங்க்ஸ்டன் இல்லை’ என்று மட்டும் பதிலளித்தார். ‘டங்க்ஸ்டன் இல்லை எனில் அது என்ன’ என்று அவர் அறிய முனையவில்லை. ஹைசிங்கர் இதே கனிமத்தை பெர்சீலியஸிடம் அனுப்ப, 1803இல் அவர் அதை அனைத்து விதங்களிலும் பரிசோதித்து, இது ஒரு புதிய உலோகம், புதிய தனிமம் என்று அறிவித்தார். இப்படி வேதியியலில் பேர் சொல்லும்படி முதல் படி எடுத்தார் பெர்சீலியஸ். ரோம மதத்தின் விவசாயத் தேவதை சீரீஸ். 1801இல் இத்தாலிய வானியலாளர் கிசிப்பி பியாட்சி செவ்வாய் கிரகத்துக்கு அருகே புதிய ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்து அதற்கு சீரீஸ் (Ceres) என்று பெயரிட்டார். அதன் தாக்கத்தில் புதிய தனிமத்திற்கு சீரியம் (Cerium) என்று பெர்சீலியஸ் பெயர் வைத்தார். பெர்சிலியஸின் திறமையை வியந்து அவர்க்கு ஓர் ஆராய்ச்சிச் சாலையை ஹைசிங்கர் அமைத்துக் கொடுத்தார்.
1808இல் கரோலின்ஸ்கா கல்லூரியில் வேதியியல் பேராசிரியராகப் பொறுப்பேற்றார் பெர்சீலியஸ். மருத்துவம் படித்திருந்தாலும் அதைக் கைவிட்டுவிட்டு, முழுநேர வேதியியல் ஆராய்ச்சியாளராய் மாறினார்.
பின்னர் செலீனியம் எனும் தனிமத்தையும் பெர்சீலியஸ் கண்டுபிடித்தார். கந்தக அமிலம் தயாரிக்கும் ஒரு கம்பெனியில் பெர்சீலியஸ் தொழில் கூட்டாளியாக இருந்தார். பைரைட் என்னும் தாதுவிலிருந்து கந்தகம் சுரக்கும்போது வித்தியாசமான ஒரு வாசனை வரவே, அதைப் பரிசீலித்தார். டெலூரியம் (Tellurium) எனும் தனிமம் என்று அதை முதலில் நினைத்தவர், பரிசோதித்த பின் இது எவரும் அறியாத புதியதொரு தனிமம் என்று முடிவுக்கு வந்தார். டெல்லஸ் (Tellus) எனும் லத்தீன சொல் பூமியைக் குறிக்கும். இதனை சார்ந்து டெலூரியம் பெயர் பெற்றது. டெலூரியம் போலவே முதலில் இது தோன்றியதால் செலீனியம் (Selenium) என்று பெயர் வைத்தார் பெர்சீலியஸ். செலீனி (Selene) என்று சந்திரனுக்கு கிரேக்க மொழியில் ஒரு பெயர் உண்டு. அதன் அடிப்படையில் இத்தனிமத்துக்கு செலீனியம் என்று பெர்சீலியஸ் பெயரிட்டார்.
மணலிலும், ஃப்ளிண்ட் (Flint) எனும் கல்சிப்பியிலும் ஆக்ஸிஜனோடு ஓர் அடையாளம் காணாத தனிமம் உள்ளது என்று ஹம்ஃப்ரீ டேவி 1808இல் யூகித்து, அதற்கு சிலிசியம் (Silicium) என்று பெயரிட்டார். ஆனால் அந்தத் தனிமத்தை அவரால் மின்பகுத்தி பிரிக்கமுடியவில்லை. 1824இல் பல முயற்சிகள் செய்து அந்தத் தனிமத்தை பெர்சீலியஸ் எடுத்தார். அது கேல்சியம், பொடாசியம் போன்ற உலோகம் இல்லை; கார்பன், போரன் போன்றது என்று சிலிசியத்திற்கு, சிலிகான் (Silicon) என்று தாமஸ் தாம்ஸன் பெயர் மாற்றினார். இதுவே நிலைத்து. 1950கள் முதல் எலக்டரானிக்ஸின் அடிப்படையாகவும் கணினிகளின் அடிப்படை தனிமமாகவும், வெண்கல யுகம், இரும்பு யுகம்போல் சிலிகான் யுகம் என்றே சொல்லுமளவுக்குப் புகழ்பெற்ற தனிமத்தை முதலில் தனிமைப்படுத்தினார் பெர்சீலியஸ்.
1806இல் ‘இயற்பியல் வேதியியல் தாதுவியல் சித்தாந்தங்கள்’ (Ajhandlingar i Fysik, Kemi och Mineralogi – Treatises in Physics, Chemistry, and Mineralogy) என்கிற பெயரில் ஓர் அறிவியல் ஆராய்ச்சி பத்திரிகையைத் தொடங்கினார் பெர்சீலியஸ். கார்ல் லின்னேயஸ்போல் லத்தீன் மொழி, கார்ல் வில்ஹெல்ம் ஷீல்போல் ஜெர்மன் மொழியில் எழுதாமல் ஸ்வீட் மொழியிலேயே (Swedish) எழுதினார். அம்மொழிக்கும் அந்நாட்டிற்கும் இது ஒரு பெரும் வரப்பிரசாதமாயினும், இவருடைய மாணவர் ஃப்ரைட்ரிக் ஓஃலர் கட்டுரைகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தது பெர்சீலியசின் புகழை ஐரோப்பா முழுவதும் பரவ உதவியது.
உயிர்சக்தி
தாது வேதிகளையே பிரதானமாக ஆராய்ச்சி செய்து வந்த பெர்சீலியஸ், உயிரின வேதிகளிலும் நடுநடுவே ஆர்வம் காட்டினார். கார்ல் வில்ஹெல்ம் ஷீல் பாலில் கண்டுபிடித்த லாக்டிக் அமிலம் (lactic acid), தசையிலும் (Muscle tissue) உள்ளது என்று பெர்சீலியஸ் 1808இல் கண்டுபிடித்தார்.
விலங்குகளையும் தாவரங்களையும் சோதித்துப் பற்பல புதிய தனிமங்களையும் சேர்மங்களையும் பல தசாப்தங்களாகக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், உயிரற்ற தாதுப்பொருட்களிலிருந்து கிடைக்கும் தனிமங்கள் ஒன்றானவை என்றாலும் சேர்மங்கள் வித்தியாசமானவை என்று கருதி வந்தனர். தெய்வங்கள், ஒற்றைக்கடவுள் இறைவன் என யாரும் இல்லை என்று கி.மு. 500க்கு முன்பே பல கிரேக்கர்கள் நாத்திகத்தை முன்வைத்தனர். இப்படி நாத்திகத்தைப் பரப்பினால் சமூகமே சீரழியும் என்று ஏதென்ஸ் நகரின் பேரவை, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதித்தபின், வெகு சிலரே அதுபோன்ற கருத்துகளை வெளிப்படையாகக் கூறி வந்தனர். உலகமும் பிரபஞ்சமும் உயிரினங்களும் இறைவனின் படைப்பு என்று பல விஞ்ஞானிகள் தீவிரமாகக் கருதினர்.
அதன் அடிப்படையில் உயிரினங்களில் (ஆர்கனிசம் – organism) மட்டும் காணப்படும் சேர்மங்களை உயிரின வேதிகள் என்றும், உயிரற்ற பொருட்களில் காணும் சேர்மங்களை உயிரற்ற வேதிகள் என்றும் டோபர்ன் பெர்க்மன் (Tobern Bergman) 1777இல் வகுத்தார். 1794இல் அந்துவான் லவோசியே, திராட்சை ரச மது (Wine), ஆலிவ் எண்ணெய், தேன்கூட்டு மெழுகு போன்ற உயிரின வேதிகள் பலவற்றை ஆராய்ந்து, பெரும்பான்மையாக அவற்றில் கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் இருப்பதைக் காண்பித்தார்.
உயிரின வேதியியல் (Organic Chemistry), உயிரற்ற வேதியியல் (inorganic chemistry) என்று இரு பிரிவுகள் நிலைத்தன. தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லை, போகும்போது வேறு பாதை போகவில்லை என்று நம்பியதால் ஒவ்வொரு உயிரிலும் ஓர் உயிர்சக்தி (Vital force) தெய்வத்தால் புகுத்தப்பட்டது என்று அவர்கள் நம்பினார்கள். அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் உயிர்சக்தி பற்றி எழுதிய ஒரு கட்டுரை 1794இல் பிரபலமானது. தெய்வத்தையோ ஆன்மிகத்தையோ பேசாமல், விலங்குகளின் உறுப்புகளும் கரிவிசை, தறி, காற்றாலை போன்று ஒரு இயந்திரம்தான் என்று யோகான் கிறிஸ்டியன் ரெய்ல் (Johann Christian Reil) 1795இல் உயிர்சக்திக் கோட்பாட்டைப் பலமாக மறுத்து ஒரு கட்டுரை வெளியிட்டார்.
நேர்மாறாக உயிர்சக்தி கோட்பாட்டை பெர்சீலியஸ் வியந்து சிலாகித்து எழுதினார். உடலின் உறுப்புகள் இயந்திரத்தைப்போல் இயங்கினாலும், பல வேதிப்பொருட்களின் குணங்களையும் உடலோட்டத்தையும் ஆராய்ந்து நூற்றுக்கணக்கான புதிய தகவல்களை வேதியியல் வல்லுநர்களும் மருத்துவர்களும் கண்டுபிடித்தாலும், உடல் உறுப்புகளின் அடிப்படை இயக்கம் மர்மமாகவே உள்ளது என்றார். கனம், திடம், மின்சக்தி போன்ற குணங்களைத் தாண்டி, ஏதோ ஒரு மறைந்த சக்தி உயிரினங்களை இயக்குகிறது, இதுவே உயிர்சக்தி என்று விளக்கினார். விஞ்ஞான முறைகளால் மர்ம ரகசியத்தைக் கண்டுபிடிப்பது சந்தேகமே என்றும் விளம்பினார். இக்கட்டுரை ஆங்கிலத்திலும் ஜெர்மனிலும் மொழிபெயர்த்துப் பிரபலமானது.
லவோய்சியே கூறிய கார்பன், ஆக்ஸிஜன் தவிர, உயிரினங்களில் நைட்ரொஜன், கந்தகம், ஃபாஸ்ஃபரஸ், பொடாசியம், சோடியம், கேல்சியம், மெக்னீசியம், சிலிகான், இரும்பு ஆகியவை இருப்பதாக பெர்சீலியஸ் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார். 1827இல் அவர் எழுதிய வேதியியல் புத்தகத்தில் (லெஹ்ர்புக் டெர் கெமீ – Lehrbuch der Chemie) நூலில் இத்தனிமங்களை வரிசையிட்டார்.
மின்பகுப்பு முறையில் (Electrolysis) சேர்மங்கள் தனிமங்களாகப் பிரிவதை ஆராய்ந்து, தனிமங்களின் அணுக்கள் மின்னூட்டம் கொண்டவை; அதனால் எதிரெதிர் மின்னூட்டம் கொண்டவை இணைந்து சேர்மம் ஆவதும், மின்சாரம் பாய்ந்தால் மின்பகுப்பால் சேர்ம அணு தனிம அணுக்களாக பிரிகின்றன என்றும், பெர்சீலியஸ் கருத்தை முன்வைத்தார். இதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.
…கடலும் புகையும் தனிமம் சொல்லும்
1810இல் ஹம்ஃப்ரீ டேவி, முரியாடிக் அமிலத்தை (Muriatic Acid) ஆராய்ந்து, அதில் குளோரின் எனும் தனிமம் இருப்பதாக அறிவித்தார். குளோரின் தவிர அதில் ஹைட்ரஜன் மட்டுமே மற்றொரு தனிமம் என்றும் கூறினார். லவோய்சியேவின் கொள்கைபடி ஆக்ஸிஜன் இன்றி அமிலமே இருக்க முடியாது. அமிலங்களை (கிரேக்க மொழியில் ஆக்ஸி – Oxy) உருவாக்குவதால்தான் அதற்கு ஆக்ஸிஜன் எனப் பெயர் வந்தது என்று பெர்சீலியஸ் எதிர்க்கருத்து கூறினார். இதனால் குளோரின் ஒரு தனிமம் அல்ல, ஆக்ஸிஜனோடு ஒட்டியிருக்கவேண்டும் என்று வாதாடினார்.
அவ்வாண்டு பெர்சீலியஸ் லண்டன் சென்றார். டேவி, வோலாஸ்டன், எகிப்திய எழுத்தார்வலர் தாமஸ் யங், யுரேனஸ் எனும் கிரகத்தைக் கண்டுபிடித்த வில்லியம் ஹெர்ஷல், ஜேம்ஸ் வாட் ஆகியோரைச் சந்தித்தார். லண்டன் தெருக்களில் இரவில் ஒளி வீசிய வாயு விளக்குகளை (Coal gas lamps) கண்டு அதிசயத்தார். புகழ்பெற்ற டேவியை சந்தித்தார். டேவி பெர்சீலியசின் திறமையை பாராட்டி அவரை லண்டன் ராஜ்ஜிய சங்கத்தின் உறுப்பினராகச் சேர்க்க சிபாரிசு செய்தார்.
1812இல் வெடிமருந்து தயாரிக்க நைட்டர் (Nitre) உப்பு கிடைக்காமல், கடற்பாசியிலிருந்து (Seaweed) அதை எடுக்க பெர்ணார்ட் கோர்த்துவா (Bernard Courtois) என்பவர் பரிசோதனைகளைச் செய்தார். ஒரு கட்டத்தில் ஊதா நிறத்தில் புகை தோன்றியது. ஊதா (Violet) நிறத்தில் புகை வேதியியல் உலகிற்குப் புதிது. இது ஒரு புதுத் தனிமம் என்று கோர்த்துவா நம்பினார். ஆனால், அதை நிரூபிக்க அவரிடம் போதிய வசதியில்லை. தெசோர்மஸ் (Desormes), கிளிமெண்ட் (Clement) என்கிற இரண்டு நண்பர்களிடமும், மின்சாரத்திற்குப் பின்னால் புகழ்பெற்ற ஆந்திரே மரி ஆம்பியரிடமும் (Ampere) இதை கோர்த்துவா பகிர்ந்துகொண்டார். ஆம்பியர் தன் ஆங்கில நண்பர் டேவிக்கும் அதை அனுப்பினார். டேவி, ஊதா புகை உருவாக்கி, ஐயோடின் (Iodine) என்று பெயரிட்டார். இதே சமயம், பிரான்சில் கேலூசக்கும் இதே ஊதா புகை உருவாக்கி, அதே ஐயோடின் என்று பெயர் சூட்டினார். ஊதாவிற்குக் கிரேக்கச் சொல் ஐயோடீஸ் (Iodes). ஐயோடினைக் கண்டுபிடித்த புகழுக்குச் சில மாதங்கள் போட்டி போட்டுவிட்டு டேவி, கே-லூசாக் இருவரும் கோர்த்துவாதான் அந்தப் புகழுக்கு உரியவர் என்று ஒப்புக்கொண்டனர். குளோரினின் குணத்தோடு பல விதங்களில் ஐயோடின் ஒத்துப்போவதை டேவி குறிப்பிட்டார்.
1816இல் விஷப்பரீட்சை செய்த ஷீல், பிரஸ்ஸிக் அமிலத்தை (Prussic Acid) ஆராய்ந்து, அதில் ஆக்ஸிஜனே இல்லை, ஹைட்ரஜன் தவிர கார்பனும் நைட்ரஜனும் மட்டுமே உள்ளன என்று நிறுவினார். பின்னர் இதன் பெயர் ஹைட்ரஜன் சயனைட் (Hydrogen Cyanide) என்று மருவியது. இதன் பின் பெர்சீலியஸ் உட்படப் பலரும், ஆக்ஸிஜன் இல்லாமலும் அமிலம் இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டனர். குளோரின் தனிமம் என்று டேவி சொன்னது ஏற்றுக்கொள்ளப்பட்டது. முரியாடிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம் (Hydrochloric Acid) என்று பெயர் மாறியது. ஆனால் ஆக்ஸிஜன் பெயரை யாரும் மாற்றவில்லை.
பிரீஸ்ட்லியும் லவோய்சியேவும் வான் கரந்து காற்றை வகுத்துப் பல தனிமங்களை அடையாளம் கண்டதுபோல், ஹம்ஃப்ரீ டேவியும் பெர்சீலியசும் பூமியைக் கரந்து, மின்பகுந்து, தாதுக்களை ஆராய்ந்து வேறு பல தனிமங்களை அடையாளம் கண்டனர். புதிய வானம், புதிய பூமி என்று தனிம மழை பொழிந்தது.
வேதியியலின் எழுத்ததிகாரம்
1813இல் ஒரு மிக முக்கியக் கட்டுரையை எழுதினார் பெர்சீலியஸ். ஆல்கெமி ஆய்வாளர்களும், பெர்க்மன் பெர்தொலே போன்ற நவீன வேதியியல் ஆய்வாளர்களும், ஒவ்வொரு உலோகத்திற்கும், அமிலத்திற்கும், காரத்திற்கும், தனிமத்திற்கும், சேர்மத்திற்கும், ஒவ்வொரு சித்திர வடிவத்தை இயற்றினர். எகிப்தியரும் சீனரும் ஃபீனிசியரும் தங்கள் மொழிகளின் எழுத்திற்கும் சொல்லிற்கும் உருவாக்கிய சித்திர வடிவங்களை (Pictograms) போன்று, இவை குழூஉக்குறிகள். அவரவர் ஆராய்ச்சிச் சாலைகளிலும், மருந்து கடைகளிலும், ஜாடிகளிலும், பெட்டிகளிலும் இதை எழுதி வைப்பது அக்கால வழக்கம்.
லவோய்சியே காட்டிய வழியில் உருவாகிய புதிய வேதியியலுக்கு, குறிப்பாக தனிமம், சேர்மம், கலவை அணு, மூலக்கூறு எனப் பல புதிய தத்துவங்களும் அதற்கேற்ற சொற்களும் தோன்றிய துறையில், சித்திர வடிவங்கள் தகாது, அவை காலாவதியானவை என்று பெர்சீலியஸ் கருதினார். ஒவ்வொரு தனிமத்திற்கும் அதனது லத்தீன பெயரின் முதல் எழுத்தை எழுத்துக்குறியாகவும், ஒவ்வொரு சேர்மத்திற்கும் அதிலுள்ள தனிமங்களை எழுத்துக்குறிகளின் தொடரை அடையாளக் குறியாகவும் எழுத வேண்டும் என்றார். ஜாடிகளின் மூடிகளில் பெயர் எழுத மட்டுமல்ல; வேதியியல் கட்டுரை எழுதும்போதும் லத்தீன எழுத்துகள் மட்டுமே தனிமக் குறியாகிவிட்டால், சித்திரங்களை வடிக்கும் அச்சுகள் தேவைப்படமாட்டா.
இதனால் சில தனிமங்களுக்குப் புதிய லத்தீன பெயர்களைச் சூட்டினார். சோடாவிலிருந்து டேவி கண்டுபிடித்த சோடியத்துக்கு நேட்ரியம் என்றும், பானை சாம்பலில் உருவான போடாசியத்துக்கு கேலியம் என்றும் லத்தீனத்தில் பெயர் சூட்டினார். ஸ்வீட் மொழியில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர், தனிமப் பெயர்களுக்கு லத்தீன மொழியை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.
பிரௌஸ்டின் விகிதாச்சார விதியையும், பெர்தொலேவின் எதிர்ப்பையும், டால்டனின் அணுக் கோட்பாட்டையும் பெர்சீலியஸ் அலசினார். தனிம அணுக்கள் கோள (Sphere) வடிவில் இருக்கவேண்டும், ஹைட்ரஜன் அணு சிறிதாகவும் மற்ற அணுக்கள் கனத்திற்கு ஏற்ப பெரிதாகவும் இருக்கவேண்டும், மற்ற அணுக்களோடு மின் ஈர்ப்பால் சேருகையில் ஒட்டிக்கொண்ட கோளங்களாய் அவை இருத்தல் வேண்டும்; இப்படிப் பார்த்தால் பன்னிரண்டு தனிம அணுக்களுக்கு மேல் ஒரு சேர்ம அணு வடிவம் பெற, வடிவியல் (Geometry) அனுமதிக்காது என்றார். உயிரற்ற வேதிகள் இவ்விதியைப் பின்பற்றுகின்றன. ஆனால் உயிரின வேதிகள் இந்த விதியைப் பின்பற்றவேயில்லை. உதாரணமாக, ஆக்ஸாலிக் அமிலத்தில் (Oxalic Acid) 27 கார்பன் அணுக்கள், 18 ஆக்ஸிஜன் அணுக்கள், 1 ஹைட்ரஜன் அணு உள்ளன. இது எப்படிச் சாத்தியம்?
பிரௌஸ்டின் விகிதாச்சார விதி பெரும்பான்மையாகச் சரியானதே என்று தான் கருதினாலும், சில உயிரற்ற சேர்மங்களின் அளவுகள் இதனுடன் ஒத்துப்போகவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். உதாரணமாக, இரும்பு ஆக்சிஜனோடு ஓரளவு அல்லது ஒன்றரை அளவு சேர்ந்து, கருப்பு சிவப்பு என இரு வகை ஆக்ஸைட் உருவாகியதை கேலூசாக் காண்பித்துள்ளார். இது போன்ற விதிவிலக்கு இருப்பினும், இதற்கு வேறு விளக்கம் தேடவேண்டும் என்றும் பெர்சீலியஸ் பரிந்துரைத்தார்.
சாதாரண வெப்பநிலையில் (Room temperature) ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் மட்டுமே வாயுக்களாக உள்ளன. மற்ற தனிமங்கள் மிக உயர்ந்த வெப்பநிலையில் மட்டுமே வாயுக்களாக உள்ளன. அதனால் கே-லூசாக்கின் வாயுக்கலவை விதிகளை மற்ற தனிமங்களை வைத்துச் சோதிப்பது கடினம். மேலும், ஹைட்ரஜன் கனம் மிகக் குறைவு. அதைப் பிரமாணமாக எடுத்துக்கொண்டால் உலோகங்களின் கனம் மிக மிக அதிகம். மேலும், ஹைட்ரஜனைவிட ஆக்ஸிஜன் பற்பல தனிமங்களோடு புணர்ந்து அதிகமான சேர்மங்களில் உள்ளது. அதனால் ஆக்ஸிஜனின் கனத்தை பிரதானமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக்சிஜனைப் பிரமாணமாக வைத்து அனைத்துத் தனிமங்களின் கலக்கும் கொள்ளவையும், அதன்மூலம் கனத்தையும், குறிப்பாக அணுக்களின் கனத்தையும் கணிக்க வேண்டும், என்றும் பரிந்துரைத்தார். ஆங்கிலேயர்கள் டால்டன், டேவி, யங் மட்டுமே இந்த ஆய்வில் கவனம் செலுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் சேர்மங்கள் பெயர் எழுதுகையில் அவற்றிலுள்ள தனிமங்களை மட்டும் குறிக்காமல், ஒவ்வொரு தனிமத்தின் அளவையும் குறிக்கவேண்டும், சித்திர வடிவங்களை அறவே தவிர்க்கவேண்டும், இதற்காக முழுப் பெயரைக் கூட எழுதாமல், ஓரெழுத்து அல்லது இரண்டெழுத்தில் தனிமத்தைக் குறிக்கவேண்டும் என்றார்.
கணிதத்தில் அல்ஜீப்ரா என்கிற புகழ்பெற்ற துறை, இந்தியாவில் அவ்யக்த கணிதம் என்று புகழ்பெற்று விளங்கியது. 1, 2, 24, 130 என்று எண் பெயர் சொல்வது வ்யக்த (பெயர் சொல்லும்) கணிதம். தெரியாத எண்களைக் கணிக்க நினைத்தால் அதற்கு x,y என்று ஆங்கில எழுத்துகளால் குறிப்பிடுவதின் முன்னோடியாக, முதன்முதலில் ஏழாம் நூற்றாண்டில் பிரம்மகுப்தன் எனும் இந்தியக் கணிதமேதை அறிமுகப்படுத்தினான். யாவத் (எதுவோ அது), யாவத் வர்கம் (அதன் வர்கம்), ரூபகம் (constant – வ்யக்த எண்) ஆகியவற்றை ய, யா வ, ரூ என்று எழுத்துகளால் குறிப்பிட்டதை பிரம்மகுப்தனின் கணித நூல் பிராஹ்ம ஸ்புட சித்தாந்தத்தின் (BrahmaSphuta Siddhanta) உரையாசிரியன் பிருதூதக ஸ்வாமி விளக்கியுள்ளான். பெயர் சொல்லாத (அவ்யக்த) எண் என்பதால் பிரம்மகுப்தன் இதை அவ்யக்த கணிதம் என்றான். பிற்காலத்தில் அவ்யக்த கணிதம், பீஜ கணிதம் என்று பெயர் மறுவியது. பீஜம் என்றால் விதை. அறியப்படாத (x) எண்ணிலிருந்து அதன் வர்கம் (x2), கனம் (x3 ) போன்றவை விதையிலிருந்து மரம் வளர்வதுபோல் விரிவதால் பீஜ கணிதம் எனும் பெயரைப் பெற்றது. பிரம்மகுப்தன் கணிதத்தில் அறிமுகம் செய்ததை, பெர்சீலியஸ் வேதியியலில் செய்தான். இதை மற்ற வேதியியல் ஆய்வாளர்களும் ஆமோதித்து தொடர்ந்தனர். அதுவே பின்னர் உலக வழக்காகியது.
ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கந்தகம், செம்புக்கு கியுப்ரம் (Cuprum), தகரத்துக்கு ஸ்டான்னம் (Stannum), ஆண்டிமனிக்கு ஸ்டிபியம் (Stibium), தங்கத்துக்கு ஆரம் (Aurum), வெள்ளிக்கு ஆர்ஜெண்டம்(Argentum), இரும்புக்கு ஃபெர்ரம் (Ferrum) என்கிற லத்தீன பெயர்களை ஆமோதித்தார்.
இந்த விதிப்படி செம்புடன் ஆக்ஸிஜன் சம அளவில் இணைந்து காப்பர் ஆக்ஸைட் ஆகியதை Cu+O என்று குறிப்பிட்டார். கந்தக அமிலம் S + 3O, கார்பானிக் அமிலம் C + 2O, நீர் 2H+O. இது போன்ற சேர்மங்கள், முதல் தரச் சேர்மங்கள் என்றும், இரண்டு முதல் தர சேர்மங்கள் பிணைந்து ஒரு பெரிய சேர்மமாக விளங்கினால் அது இரண்டாம் தரம் சேர்மம், மூன்று முதல் தர சேர்மங்கள் சேர்ந்தால் மூன்றாம் தர சேர்மம் என்றும் வகுத்தார். காப்பர் சல்ஃபேட் என்பது செம்பு ஆக்சைடும் கந்தக அமிலமும் பிணைந்தது; அதை CuO2 + 2SO3 என்று குறித்தார்.
| பெயர் | Names | Symbols | Weight in form of gas |
| ஆக்ஸிஜன் | Oxygen | O | 100.00 |
| கந்தகம் | Sulphur | S | 201.00 |
| ஃபாஸ்ஃபரஸ் | Phosphorus | P | 167.512 |
| குளோரின் | Muriatic radicle | M | 139.56 |
| ஃப்ளோரின் | Fluoric radicle | F | 60. |
| போரான் | Boron | B | 73.273 |
| கார்பன் | Carbon | C | 75.1 |
| நைட்ரொஜன் | Nitric radicle | N | 79.54 |
| ஹைட்ரொஜன் | Hydrogen | H | 6.636 |
| தங்கம் | Gold | Au | 2483.8 |
| வெள்ளி | Silver | Ag | 2688.17 |
| செம்பு | Copper | Cu | 806.48 |
| தகரம் | Tin | Sn | 1470.59 |
| இரும்பு | Iron | Fe | 693.64 |
CuO2 SO3 என்று எழுத்தின் தலைபாகத்தில் (superscript) 2, 3 என்று தனிம எண்ணிக்கையை பெர்சீலியஸ் குறித்ததை, ஜஸ்டஸ் லைபிக் (Justus Liebig) மாற்றி பாதபாகத்தில் (Subscript) எழுதினார்.
அடுத்த பல ஆண்டுகள் சுமார் 45 தனிமங்களுக்கு ஆக்ஸிஜனோடு கலக்கும் கொள்ளளவையும், அதன் அடிப்படையில் அணுக்களின் கனத்தையும் பல பரிசோதனைகள் மூலம் கணித்து ஆண்டாண்டு பட்டியலை வளர்த்து பெர்சீலியஸ் வழங்கினார். பிற்காலத்தில் இதன் அடிப்படையில் திமித்ரி மெண்டலீவ் (Dmitri Mendeleev) தனிமப் பட்டியலை (Periodic Table) உருவாக்க பெர்சீலியஸின் இந்த ஆராய்ச்சியே அஸ்திவாரமாகியது.
அதேநேரம் பெர்சிலியஸின் புரிதலில் ஒரு பெரும் பிழை இருந்தது. எதிரெதிர் மின்சக்தி கொண்ட அணுக்கள் அந்த மின் ஈர்ப்பினால் (Electrical Attraction) மட்டும் இணைந்து சேர்மமாகின்றன என்று அவர் கருதினார். அதாவது நேர்மின் (Positive) சோடியம் எதிர்மின் (Negative) குளோரினுடன் சேர்ந்து சோடியம் குளோரைட் எனும் சேர்மமாகும். நேர்மின் ஹைட்ரஜன் எதிர்மின் ஆக்ஸிஜனோடு நீர் எனும் சேர்மமாகும். நேர்மின் இரும்பு எதிர்மின் கந்தகத்தோடு இணைந்து இரும்பு சல்ஃபைடாகும். அயனிப் பிணைப்பு (Electrovalent Bond – எலெக்ட்ரோ வேலண்ட் பாண்ட்) என்று இருபதாம் நூற்றாண்டில் இது பெயர் பெற்றது.
ஆனால் உண்மையில் இரண்டு எதிர்மின் ஆக்ஸிஜன் அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஆக்ஸிஜன் மூலக்கூறாகும். இதை 1811லேயே அவகாத்ரோ எடுத்துச் சொன்னாலும் எப்படி மின்னெதிர்பு விதியை உடைத்து எதிர்மின் அணுக்கள் இணையும் என்று அவர் விளக்க இயலவில்லை. 1850களில் கொஞ்சம் கொஞ்சமாக, இது புதிரானாலும் உண்மை என்று வேதியியல் ஆய்வாளர்கள் உணர்ந்தனர். 1852இல் எட்வர்ட் ஃப்ராங்க்லேண்ட் (Edward Frankland) வேலன்ஸ் (Valence) எனும் பிணைப்பு கோட்பாட்டை அறிமுகம் செய்தார். ஆனால் 1897இல் மின்னணு (எலெக்ட்ரான்), 1900களில் அணுவின் சரியான இயல்பு அறியப்பட்ட பின், 1919இல் கில்பர்ட் லூயிஸ் (Gilbert N Lewis) பிணைப்புகளைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்து, அயன் பிணைப்பு, சக பிணைப்பு (கோவேலண்ட் பாண்ட் – Covalent Bond) குறித்து விளக்கிய பின்னரே அணுக்களின் பிணைப்பு சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டது. பெர்க்மன் பெர்தோலேவின் கோட்பாடுகள் அற்றுப்போய், இயற்பியலால் வேதியியல் வளர்ந்தது.
கலை மேவும் வர்ண ஜாலம்
1814இல் மிச்செல் செவ்ரூல் (Michel Chevreul) பன்றிக் கொழுப்பை பொடாஷில் கலந்து, அதன் விளைவாகக் கட்டிக் கட்டியாய் புதிய வேதி ஒன்று உருவானதைக் கண்டார். முத்து முத்தாக இருந்ததால் கிரேக்க மொழியில் மார்கரீடஸ் என்ற சொல்லின் அடிப்படையில் அதற்கு மார்கரீன் என்று பெயர் சூட்டினார். சர்க்கரை நோய் கொண்டவர்களின் சிறுநீரில் குளூக்கோஸ் எனும் சர்க்கரை இருப்பதையும் இவர் அடையாளம் கண்டார். பல வித சோப்புகளை இவ்வாறு கொழுப்பிலிருந்து தயாரிக்கலாம் என்று கண்டுபிடித்தார். தாவரங்களிலும் விலங்குகளிலும் உள்ள சில அமிலங்கள் இவ்வாறு காரங்களோடு கலக்கும்போது சோப், மெழுகு போன்றவை உண்டாவதை முதலில் காட்டியவர் செவ்ரூல். அதேபோல் அவர் பல சாயங்களையும் ஆராய்ந்தார். ஐரோப்பாவில் பெருகி வந்த துணி வணிகம் இந்த விஞ்ஞானத்தைத் தொழில்நுட்பமாக மாற்றியது. சாயங்களைப் பற்றியும், நிறங்களைப் பற்றியும் இவர் செய்த ஆராய்ச்சிகள் ஓவியக்கலைஞர்களின் கவனத்தை ஈர்த்தன. இம்ப்ரெஷனிசம், பாயிண்டிலிசம் போன்ற புதிய ஓவிய தரிசனங்களுக்கு செவ்ரூலின் ஆய்வுகள் வழிவகுத்தனவாம். வின்சென்ட் வான்கா போன்ற ஓவியர்கள் இதில் ஆர்வம் காட்டினர்.
உயிரின வேதியியலின் தந்தை என்று செவ்ரூல் சிலரால் வர்ணிக்கப்பட்டுள்ளார். கொழுப்பு மார்கரீன் ஆராய்ச்சி, உயிரின வேதிகளை உயிரற்ற வேதிகளோடு கலந்து புதிய வேதிப்பொருட்களை உண்டாக்கலாம் என்று காட்டியபோதும், உயிர் சக்தி கருத்தைப் பெரிதும் இது பாதிக்கவில்லை.
பெயர் சூட்டிய பெர்சீலியஸ்
1818இல் பெர்தொலேவின் அர்கைல் இல்லத்திற்கு பெர்சீலியஸ் சென்று அங்கு சில காலம் கேலூசாக், லாப்ளாஸ், துலாங் போன்ற பிரெஞ்சு விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆராய்ச்சிகளைச் செய்தார். ஆனால் அங்கே புதிதாக எதுவும் சாதிக்கவில்லை. மீண்டும் ஸ்வீடன் சென்று தன் ஆய்வுகளைத் தொடர்ந்தார்.
1824 பெர்சீலியஸின் மாணவர் ஓஃலர் ஜெர்மனியில் சயனிக் அமிலத்தையும் அதன் உப்பாகிய வெள்ளி சயனேட்டையும் பரிசோதித்து வந்தார். அதே சமயம் பாரிஸ் நகரில் கேலூசாக்கின் உதவியாளராய் இருந்த ஜஸ்டஸ் லைபிக், ஃபுல்மினிக் அமிலத்தையும், அதன் உப்பாகிய வெள்ளி ஃபுல்மினேட்டையும் ஆய்வு செய்தார். ஓஃலர் வெள்ளி சயனேட்டை AgCNO என்றும், லைபிக் வெள்ளி ஃபுல்மினேட்டை AgCNO என்றும் அறிவித்தனர். வெள்ளி ஃபுல்மினேட் (Silver Fulminate) எளிதில் வெடிக்கும், வெள்ளி சயனேட் (Silver Cyanate) வெடிக்காது. தெளிவாக இரண்டும் குணத்தில் வேறாக இருந்தும் எப்படி உருவத்தில் தனிம அளவையில் ஒன்றாக இருக்கவியலும் என்று இரண்டு வருடம் கடுமையாக விவாதித்து விட்டு, அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு என்று சூளுரைத்த வந்தியத்தேவனைப்போல், இருவரும் ஒரே சேர்மத்தின் இருவேறு அவதாரமாக இருப்பதை ஒப்புக்கொண்டனர். இரண்டு பூனைகள் சேர்ந்து பிடித்த மீனைப் பங்கு போட்டுத்தர கவியை நடுவராக்கிய கதைபோல், இரு ஆராய்ச்சி பூனைகளும் பெர்சீலியஸ் கவியிடம் இந்த விசித்திரத்தைப் பகிர்ந்தனர். இதற்கு ஐசோமெர் (Isomer) என்ற பெயர் சூட்டினார். பின்னர், பல சேர்மங்கள் இதுபோல் வடிவில் ஒன்றாயினும் குணத்தில் வேறுபட்டு இருப்பதைப் பல விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். குறிப்பாக உயிர் வேதிகளில் இது சகஜம்.
மாற்றியன், சமபகுதி என்று ஐசோமருக்கு தமிழ் சொற்கள் உள்ளன. நிகர்சேர்மம் என்று சொல் தகும் என்று கருதுகிறேன்.
1824இல் மின்சாரத்தின் காந்த தாக்கலைக் கண்டுபிடித்த ஹான்ஸ் ஓர்ஸ்டெட் (Hans Oersted), அலுமினியம் குளோரைட் எனும் உப்பில் ஒரு பொடாசிய கலவையைக் கலந்து அலுமினியம் (Aluminium) எனும் உலோகத்தைத் தனிமைப்படுத்தினார். 1825இல் ஓர்ஸ்டெடின் பரிசோதனையை ஓஃலர் செய்து பார்த்தார். அவருக்கு அலுமினியம் கிடைக்கவில்லை. பொடாசிய கலவையைத் தவிர்த்து, பொடாசியத்தோடு அலுமினியம் குளோரைடை கலந்தபோது ஓஃலருக்கு அலுமினியம் கிடைத்தது. இந்த முறையில் மிகக் குறைவாகவே அலுமினியம் தயார் செய்ய முடியும். அதனால் அடுத்த 60 ஆண்டுகளுக்குத் தங்கம் வெள்ளியைவிட அலுமினியம் உலோகம் அபூர்வமாகவும் விலை அதிகமாகவும் இருந்தது. மந்திரிகளும் செல்வந்தர்களும் சாதாரண தங்கத் தட்டில் உணவருந்த, மன்னர்கள் மட்டும் அலுமினியம் தட்டில் உணவருந்தும் காலம் பிறந்தது. பெரிலியம், ஒய்ட்ரியம் ஆகிய உலோகங்களையும் முதலில் தனிமைப்படுத்திய பெருமை ஓஃலருக்கே.
வெள்ளி சயனேட்டில் ஐசோமர் கண்டுபிடித்த ஓஃலர், 1828இல் அமோனியம் சயனேட் எனும் உப்பை ஆராயும்போது, சயனிக் அமிலத்தையும் அமோனியாவையும் கலந்து அதிலிருந்து யூரியா CO(NH2)2 எனும் வேதிப்பொருளைத் தயாரித்தார். இதற்கு முன் யூரியா விலங்குகளின் சிறுநீரிலிருந்தோ சிறுநீரகத்திலிருந்தோ மட்டுமே தயார் செய்யப்பட்டது. ஓர் உயிர்வேதியை உயிரற்ற வேதியிலிருந்து தயார் செய்தது ஒரு வரலாற்றுச் சம்பவம் என்று ஓஃலர் உணர்ந்தார். ஃப்லாகிஸ்டானை மறுத்து, ஆக்ஸிஜனை அடையாளம் கண்டு புதிய வேதியியலை அந்துவான் லவோய்சியே தொடங்கிய புரட்சிக்குச் சமமாய், இந்தச் சாதனையை வேதியியல் உலகம் கருதியது. உயிரினங்களுக்கும் உயிரினங்களின் உடல் பாகங்களை இயக்கவும் உயிர் சக்தி தேவையில்லை, உயிரற்ற வேதிகளாலேயே உயிர்வேதிகளைத் தயார் செய்ய முடியும் எனும் புரட்சிகரமான கருத்து உருவாகியது.
இதைக் குதூகலமாகத் தன் குரு பெர்சீலியசுக்கு ஒரு கடிதம் மூலம் ஓஃலர் தெரிவித்தார். பெர்சீலியஸ் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பாராட்டினார். பெர்சீலியஸின் ஆரம்பகால ஆராய்ச்சிகள் எப்படி அவருக்குப் புகழ்பெற்று தந்து ஓஃலர் போன்ற மாணவர்களை அவரை நாடச் செய்ததோ, அதேபோல் ஓஃலரின் புகழும் மாணவர்களை இழுத்தது.
ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம் என்பது ஐசோமருக்கும், அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம், என்பது அணுவிற்கும், இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம், என்பது உயிர்சக்திக்கும் இவ்வாறு வேதியியலில் கோட்பாடுகள் உருவாயின!
1830இல் ஜஸ்டஸ் லைபிக் உயிர்வேதிகளில் அதிகமாக இருக்கும் நீர், கரிமம் (கார்பன்), ஆக்ஸிஜன் போன்றவற்றைப் பிரித்து, மீந்திருக்கும் தனிமங்களை அடையாளம் காண, 5 கண்ணாடி குமிழிகளைக்கொண்ட ஒரு கருவியை உருவாக்கினார். காரங்களை அல்கலி என்று அழைப்பதால், கலி-அப்பராட் (காரக்கருவி) என்று அதற்குப் பெயரிட்டார். ஒரு வேதியை சுடவைத்து அதன் வாயுவை ஒரு குழாய் வழியாய் செலுத்தினால் அக்குழாயில் உள்ள கேல்சியம் குளோரைட், வாயுவிலுள்ள நீராவியை உரிஞ்சிவிடும். மீதி வாயுவை காரக்கருவியில் செலுத்தினால், அதன் அடிப்பாகத்தில் இருக்கும் மூன்று குமிழிகளில் உள்ள பொடாசியம் ஹைட்ராக்ஸைட் வாயுவிலுள்ள கார்பன் டையாக்ஸைடை உரிஞ்சிவிடும். இப்படி உரிஞ்சியதை எடைபோட்டு, சோதனை செய்தால் வேதியில் கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் அளவுகளை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். வாயு வடிவில் ஆக்ஸிஜன் ஹைட்ரஜன் கொள்ளளவுகளை அளப்பதைவிட இது மிகச் சிறப்பான கணிசமான முறை. எஞ்சியுள்ள வாயுவை ஆறவைத்து திரவியமாகச் சோதித்து அதிலுள்ள தனிமங்களை அடையாளம் காணலாம். வானியலுக்குத் தொலைநோக்கி, உயிரியலுக்கு நுண்ணோக்கி, வெப்பத்திற்கு வெப்பமானி என்கிற வரிசையில் இந்தக் காரக்கருவி மிக அற்புதமான ஒரு வேதியியல் கருவி. ஆயிரக்கணக்கான வேதிகளை ஆய்வுசெய்ய இன்றியமையாத கருவி. லைபிக் புகழும் இதன் பின் பரவி, பல்வேறு நாடுகளிலிருந்து அவரை நாடி மாணவர்கள் வந்தனர்.
இப்படிப் பல்வேறு புதுமைகள் வேதியியலில் கண்டுபிடித்ததனால், இதை தொழில்வழிக் கல்வியாகக் கற்றுத் தர ஒரு கல்லூரியைத் தொடங்க கிஸ்ஸன் பல்கலைக்கழகத்திடம் லைபிக் கோரினார். மருந்து தயாரிப்பவர்களுக்கும், சோப்பு தயாரிப்பவர்களுக்கும், சாயப் பட்டறை ஊழியருக்கும், சாராயம் காய்ச்சுவோருக்கும் (பியர் ஆலை ஊழியர்), கல்வி கற்பதற்கு இல்லை என்று காரசாரமாக அதிகாரிகள் நிராகரித்தனர். அதாவது சமூகத்தின் தாழ்வான தொழிலாளர்களை, பண்டிதர் களமாகிய பல்கலைக்கழகத்தில் அனுமதிக்க முடியாது என்றனர். பின்னர், வேண்டுமானால், வேரோரிடத்தில் தனியாக நீங்கள் தொழிலாளிகளுக்கு ஒரு பாடசாலை தொடங்கலாம் என்று புறங்கை காட்டினர். அப்படியே செய்தார் லைபிக்.
கெஸ்ஸ்னில் லைபிக் மற்றும் காட்டிங்கனில் ஓஃலர் இருவரும், பாடம் மட்டும் நடத்தி, தங்கள் ஆராய்ச்சிகளைக் காட்சிகளாகக் காட்டவில்லை. ஒவ்வொரு மாணவனும் கருவிகள் அனைத்தையும் தொட்டுப் பழகி கற்றுப் பரிசோதனை செய்து கற்க வேண்டும் என்று கண்டிப்பாக இருந்தார்கள். ஆராய்ச்சி என்பது தனி மனித வினை அல்ல, மேதைகள் மட்டும் செய்வதல்ல, அனைவரும் சேர்ந்து செய்யவேண்டும் என்று கல்வி முறையையே மாற்றினர். இதன் பின் ஐரோப்பா முழுவதும் இவ்வாறு பாடநூல் மட்டுமின்றி கைவினைப் பயிற்சிக்கூடமாக முதலில் வேதியியலும் பின்னர் மற்ற அறிவியல் துறைகளும் மாறின.
கரிமம், ஹைட்ரஜன் ஆகிய இரண்டும் அனைத்து உயிர்வேதிகளிலும் இருப்பதால் பிற்காலத்தில் இவற்றை ஹைட்ரோகார்பன் (Hydrocarbon) என்று அழைக்கும் பெயரும் பரவியது. இதனால் தமிழிலும் கரிமச்சேர்மம் என்ற பெயர் அமைந்தது.
1825இல் மைக்கேல் ஃபாரடே பென்சீனை (Benzene) கரிவாயுவிலிருந்து தனிமைப்படுத்தினார். 1833இல் ஐலார்த் மிஷ்டர்லிக் (Eilhard Mishterlich) கோந்து மரப் பிசினிலிருந்து (Gum Resin) இதே பென்சீனை சுரந்தெடுத்தார். வாசனையான பென்சீன் வழியில் பல புதிய வாசனை திரவியங்கள் (Aromatic Compounds) கண்டுபிடிக்கப்பட்டன.
மிஷ்டர்லிக் எத்தனால் (Ethanol) எனும் சாராயத்தைக் கந்தக அமிலத்தோடு கலந்து டையீத்தைல் ஈத்தர் (Diethyl Ehter) எனும் வேதியைத் தயாரித்தார். விசித்திரமாகக் கந்தக அமிலம் இந்தத் தயாரிப்பில் உதவினாலும், அதன் அளவு குறையவில்லை. சேர்மங்கள் கலக்காமல் புதிய வேதியை உருவாக்க ஒரு வேதி ஏன் உதவுகிறது? இது புரியாத புதிராக இருக்கவே, பெர்சீலியஸிடம் இதை வர்ணித்து மிஷ்டர்லிக் ஒரு கடிதம் எழுதினார்.
1811லேயே, ருஷியாவில் காட்லீப் கிர்சாஃப் (Gottlieb Kirchoff) கஞ்சி மாவில் (Starch) கந்தக அமிலம் கலந்து ஒரு சர்க்கரையை எடுத்தார். இந்தச் சர்க்கரைக்கு குளூக்கோஸ் (Glucose) என்று பெயரிடப்பட்டது. கந்தக அமிலம் மாறவில்லை, ஆனால் அதைக் கலந்தால் வேகமாக கஞ்சிமாவு குளூக்கோஸாக மாறியது. இதை கிர்சாஃப் பெர்சீலியசுக்கு தெரிவித்தார். 1811இல் கிர்சாஃப் தெரிவித்ததுதான் 1833இல் மிஷ்டர்லிக் மீண்டும் வேறு ஒரு வேதி இணைப்பில் கண்டுபிடித்துள்ளார் என்று பெர்சீலியஸ் உணர்ந்தார். வேதி மாற்றத்துக்கு உதவி அதை வேகப்படுத்தவதால் அதற்கு கேடலிஸ்ட் (Catalyst – வினைவேகமாற்றி) என்று பெர்சீலியஸ் பெயர் சூட்டினார். மிஷ்டர்லிக் ஏற்கெனவே 1821இல் பெர்லினில் கல்லூரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க, அவரை அப்பதவிக்கு நியமிக்க பெர்சீலியஸ் பிரஷ்ஷிய (ஜெர்மானிய) மந்திரியிடம் சிபாரிசு செய்தார். அந்த மந்திரி அப்பதவியில் மிஷ்டர்லிக்கை நியமிக்கவில்லை; ஆனால் பெர்சீலியஸின் ஆராய்ச்சிச் சாலையில் பணி செய்ய மிஷ்டர்லிக்கு மானியம் வழங்கினார்.
1838இல் ஜெர்ஹார்டஸ் மல்டர் (Gerhardus Mulder) வெண்ணி (ஆல்பமின்), ஜெலடின், ஃபைப்ரின் ஆகியவற்றைப் பரிசீலித்து, அவற்றைப் பொதுவாக C400H620N100O120P1S1 என்று அறிவித்தார். இது மிகப்பெரிய மூலக்கூறு என்பது விசித்திரம். நிகர்சேர்மமான இது ஒரு விலங்கிலோ ஒரு தாவரத்திலோ இல்லாமல், பற்பல விலங்குகளிலும் தாவரங்களிலும் உள்ளது என்பதும் அதிசயம். இதை பெர்சீலியஸிடம் கடிதம் மூலம் குறிப்பிட்டார். பெர்சீலியஸ் ஒரு பிரதான சேர்மத்தை மல்டர் கண்டுபிடித்தார் என்று யூகித்தார். உயிர் சக்தி உள்ளதோ இல்லையோ, ஒரு பிரதானமான சேர்மம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருந்தது. இதற்குப் பிரதானம் என்று பொருள்பட, ப்ரோடீன் (protein) என்று லத்தீனத்தில் பெயர் வைக்கலாம் என்று பரிந்துரைத்தார். மல்டர் ஏற்றுக்கொண்டார். இந்தச் சொல் மூலம் புரியாமலோ என்னவோ, தமிழில் புரோட்டீன் என்பது புரதம் எனப் பெயர் பெற்றது.
இவ்வாறு பிரசவத்துக்கு இலவசமாக ஆட்டோவை அனுப்பாவிட்டாலும், மற்றவர் பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல நல்ல பெயர் சூட்டினார் பெர்சீலியஸ்.
(தொடரும்)
உதவிய புத்தகங்கள், வலைதளங்கள்
- Vital Forces by Graeme Hunter
- Annals of Philosophy, or Magazine of Chemistry, Mineralogy, Mechanics, Natural history, Agriculture 1813
- Rediscovery of the Elements: Jons-Jacob Berzelius, by James and Virgina Marshall, Univ of North Texas, Denton, TX, USA 2019
- Origins of Organic Chemistry and organic synthesis by Prof Curt Wentrop, March 2022, European Journal of Organic Chemistry
- On the compositions of animal substances, Gerhardus Mulder, 1839

