முன்பொரு காலத்தில் காட்டில் வாழ்ந்த சிட்டுக்குருவி ஒன்று, வெகுதூரம் பயணம் செய்வதற்காக உணவு தானியங்களைச் சேகரித்தது. அவ்வாறு அதற்குக் கிடைத்த தானியங்களை இரு துண்டுகளாக உடைப்பதற்காக மரத்தினாலான அரவைக் கருவி ஒன்றை அது பயன்படுத்தியது. அப்போது இரண்டாக உடைந்த ஒரு தானியத்தின் ஒரு பகுதி வெளியே பறந்துவிட, மற்றொரு பகுதி அக்கருவியின் திருக்கைக்கு நடுவே இருந்த மரக் குச்சியில் சிக்கிக்கொண்டது. அப்படிச் சிக்கியிருந்த அந்தச் சிறிய தானியப் பகுதியை எடுக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தது சிட்டுக்குருவி. ஆனால் அதை எடுக்க முடியாமல் போனதால், ஒரு விறகுவெட்டியின் உதவியை அது நாடிச் சென்றது.
‘விறகுவெட்டியே… எனது தானியத்தின் ஒரு பகுதி இந்தத் திருக்கையின் மரக்குச்சியில் சிக்கிவிட்டது. இந்தத் திருக்கையை உடைத்து எனது தானியத்தை எடுத்துக் கொடு’ என விறகுவெட்டியிடம் கூறியது அச்சிட்டுக்குருவி.
அதைக் கேட்ட விறகுவெட்டி, ‘ஒரு சிறிய தானியத்திற்காக ஒரு திருக்கையை உடைக்கக் கூறுகிறாயா? என்னால் முடியாது’ என மறுத்துவிட்டான்.
உடனே சிட்டுக்குருவி அந்நாட்டின் அரசனிடம் சென்று உதவிக் கேட்டது. ‘அரசே… என் தானியத்தின் ஒரு பகுதி மரத் திருக்கையில் சிக்கிவிட்டது. எனது நீண்ட பயணத்திற்கு அந்தத் தானியம் மிகுந்த உதவியாக இருக்கும். அதற்காக மரவெட்டியிடம் திருக்கையை உடைக்கக் கூறினேன். அவன் மறுத்துவிட்டான். நீங்கள் அவனைத் தண்டியுங்கள்’ எனக் கூறியது அந்தச் சிட்டுக்குருவி.
‘ஒரு சிறிய தானியத்திற்காக விறகுவெட்டியை என்னால் தண்டிக்க முடியாது. இங்கிருந்து ஓடிவிடு’ எனக் கோபத்துடன் சிட்டுக்குருவியை விரட்டினான் அரசன். எனினும் மனம் தளராத சிட்டுக்குருவி, நேராக அரசியிடம் சென்று முறையிட்டது. ‘எனது தானியத்தின் ஒரு பகுதி மரத் திருக்கையில் சிக்கிவிட்டது. உதவி கேட்டு விறகுவெட்டியிடம் சென்றேன். அவன் மறுத்துவிட்டான். அந்த விறகுவெட்டியைத் தண்டிக்க அரசரும் மறுத்துவிட்டார். அவனைத் தண்டிக்க அரசரிடம் எனக்காக நீங்கள் சிபாரிசு செய்யுங்கள்’ என அரசியிடம் கூறியது சிட்டுக்குருவி.
சிட்டுக்குருவியின் விண்ணப்பத்தால் எரிச்சலடைந்த அரசி, ‘இந்தச் சின்ன விஷயத்துக்காக அரசரிடம் நான் பேசமாட்டேன்’ எனக் கூறி, சிட்டுக்குருவியை அங்கிருந்து விரட்டினாள். அப்போதும் தன் முயற்சியைக் கைவிடாத அந்தச் சிட்டுக்குருவி, ஒரு பாம்பைத் தேடிச் சென்றது. ‘பாம்பே… நீ சென்று அரசியைக் கடி. அவள் எனக்காக அரசரிடம் பேச மறுத்துவிட்டார். அதனால் அரசர் அந்த விறகுவெட்டியைத் தண்டிக்கமாட்டார். விறகுவெட்டியும் திருக்கையை உடைக்கமாட்டான். பிறகு எப்படி எனது தானியத்தை நான் அதிலிருந்து எடுப்பேன்? தானியம் இல்லாமல் என்னால் பயணம் செல்ல முடியாது. அதனால் நீ சென்று அரசியைக் கடி’ என அந்தப் பாம்பிடம் அது கூறியது.
அதை ஏற்காத பாம்பு, ‘நீ என்ன பைத்தியமா? ஒரு சிறிய தானியத்திற்காக அரசியை நான் சென்று கடிக்க வேண்டுமா? என்னால் முடியாது’ என மறுப்பு தெரிவித்தது. எனினும் மனம் தளராமல் அடுத்ததாக ஒரு குச்சியிடம் சென்றது அந்தச் சிட்டுக்குருவி.
‘குச்சியே… அந்தப் பாம்பை அடித்துக் கொன்று விடு. பாம்பு, அரசியைக் கடிக்காது. அரசி, அரசரிடம் சென்று பேசமாட்டார். அரசர், விறகுவெட்டியைத் தண்டிக்கமாட்டார். விறகுவெட்டி, திருக்கையை உடைக்க மாட்டான். என் தானியமும் எனக்குக் கிடைக்காது. பிறகு, எவ்வாறு நான் நீண்டதூரம் பயணம் மேற்கொள்வேன்? அதனால், நீ பாம்பை அடித்துக் கொன்று விடு’ என்றது சிட்டுக்குருவி. அந்தக் குச்சியும் சிட்டுக்குருவியிடம் மறுப்பு தெரிவித்தது. நம்பிக்கையை இழக்காத சிட்டுக்குருவி, நேராக நெருப்பிடம் சென்றது.
‘நெருப்பே… அந்தக் குச்சியை நீ எரித்து விடு. அந்தக் குச்சி, பாம்பைத் தண்டிக்காது. பாம்பு, அரசியைக் கடிக்காது. அரசி, எனக்காக அரசனிடம் சென்று பேசமாட்டார். அரசர், அந்த விறகுவெட்டியைத் தண்டிக்க மாட்டார். விறகுவெட்டி, திருக்கையை உடைக்க மாட்டான். அதனால் என்னுடைய தானியம் எனக்குக் கிடைக்கவில்லை. அந்தத் தானியம் என் பயணத்துக்கு மிகுந்த உதவியாக இருக்கும்’ என நெருப்பிடம் கெஞ்சியது சிட்டுக்குருவி. இதைக் கேட்டு எரிச்சலடைந்த நெருப்பு, ‘ஒரு தானியத்திற்காக அந்தக் குச்சியை எரிக்க முடியாது’ என மறுத்துவிட, சோர்ந்துவிடாமல் கடலிடம் சென்றது சிட்டுக்குருவி.
தனது கதை முழுவதையும் கடலிடம் எடுத்துக் கூறி, நெருப்பை அணைத்துவிடுமாறு அதனிடம் கேட்டுக்கொண்டது. மற்ற அனைவரையும்போல் சிட்டுக்குருவியின் வேண்டுகோளைக் கடலும் நிராகரித்துவிட, அப்பொழுதும் முயற்சியைக் கைவிடாமல் ஒரு யானையிடம் சென்றது அந்தச் சிட்டுக்குருவி.
‘யானையே… இந்தக் கடல் நீர் முழுவதையும் நீ விழுங்கிவிடு. கடல், நெருப்பை அணைக்காது. நெருப்பு, குச்சியை எரிக்காது. குச்சி, பாம்பை அடிக்காது. பாம்பு அரசியைக் கடிக்காது. அரசி, எனக்காக அரசரிடம் சென்று பேசமாட்டார். அரசர், விறகுவெட்டியைத் தண்டிக்கமாட்டார். விறகுவெட்டி, திருக்கையை உடைக்க மாட்டான். அதனால், திருக்கையில் சிக்கியிருக்கும் எனது தானியம் கிடைக்காது. தானியம் இல்லாமல் என்னால் எப்படிப் பயணம் செய்ய முடியும்?’ என வருத்தத்துடன் கூறி, யானையிடம் கெஞ்சியது சிட்டுக்குருவி. அந்நேரம் யானை மிகுந்த தாகத்துடன் இருந்ததால், சிட்டுக்குருவியின் வேண்டுகோளை அது உடனடியாக ஏற்றுக்கொண்டது.
யானை, ஆவலுடன் கடல் நீரை அருந்த சென்றது. அதைப் பார்த்துப் பயந்துபோன கடல், ‘என்னை விழுங்கி விடாதே. நான் நெருப்பை அணைத்து விடுகிறேன்’ என்றது. கடல் தன்னை அணைத்துவிடப் பொங்கியெழுந்து வருவதைக் கண்ட நெருப்பு, ‘தயவுசெய்து என்னை நீ அணைத்துவிடாதே. நான் அந்தக் குச்சியை எரித்து விடுகிறேன்’ எனப் பயந்து நடுங்கியது.
அதன்பிறகு நெருப்பு அந்தக் குச்சியை எரிக்கச் சென்றது. அதைக் கண்ட குச்சி, ‘என்னை எரித்துவிடாதே… நான் அந்தப் பாம்பை அடித்துக் கொன்றுவிடுகிறேன்’ என்று நெருப்பிடம் கூறிவிட்டு, பாம்பை அடிக்கச் சென்றது. குச்சி தன்னை அடிக்க வந்ததைப் பார்த்துப் பயந்துபோன பாம்பு, ‘என்னை அடித்துக் கொன்றுவிடாதே. நான் அந்த அரசியைக் கடித்து விடுகிறேன்’ எனச் சொல்லிவிட்டு, அரசியை கடிப்பதற்காக வேகமாக ஊர்ந்து சென்றது.
பாம்பைக் கண்டு அலறிய அரசி, ‘என்னைக் கடித்து விடாதே. நான் அரசரிடம் சென்று சிட்டுக்குருவிக்காகப் பேசுகிறேன்’ எனக் கூறிவிட்டு அரசரிடம் ஓடினார். அரசரைச் சந்தித்து, சிட்டுக்குருவியின் கோரிக்கையை நிறைவேற்றாததற்காகக் கடிந்துகொண்டாள் அரசி. இதனால் கோபம்கொண்ட அரசர், விறகுவெட்டிக்குத் தண்டனை அளிக்க உத்தரவிட்டார். அரசரின் தண்டனை உத்தரவால் பயம்கொண்ட விறகுவெட்டி, சிட்டுக்குருவியின் தானியம் சிக்கியிருந்த திருக்கையை உடைத்துவிடுவதாகக் கூறினான்.
அதன்பிறகு சிட்டுக்குருவியின் அரவைக் கருவியில் இருந்த திருக்கையை உடைக்க முயன்றான் அந்த விறகுவெட்டி. அப்போது, திருக்கையின் நடுவே இருந்த மரக்குச்சி தானாகவே விலகி, உள்ளே சிக்கியிருந்த தானியத்தின் ஒரு பகுதி வெளியே வந்தது. அதை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் பறந்துசென்றது சிட்டுக்குருவி.
பீஹாரின் நாட்டுப்புறக் கதைகளிலேயே மிகவும் பிரபலமான இக்கதையானது மிகவும் எளிமையானதாகத் தோன்றினாலும் சில ஆழமான கருத்துகளை நமக்குத் தெரிவிக்கிறது. விடாமுயற்சிக்கு என்றுமே பலன் உண்டு என்பது இக்கதையில் வரும் சிட்டுக்குருவியின் வழியே நமக்குத் தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது.
அரவைக் கருவில் சிக்கிய தனது தானியத்தின் ஒரு துகளை மீட்டெடுப்பதற்காக அந்தச் சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி, அரசர் முதலான அனைவரிடமும் சென்று விடாமுயற்சியுடன் உதவி கேட்டுப் போராடியது. அளவில் பெரிய மற்றும் புஜபலம் கொண்டவர்கள் மட்டுமல்லாமல் சிறிய மற்றும் பலவீனமானவர்களும்கூட தளராத உறுதியுடன் முயற்சி செய்தால், பெரிய மாற்றத்தைத் தங்களுடைய வாழ்வில் ஏற்படுத்திக்கொள்ள முடியும். மேலும், மிகச்சிறிய குரலுக்கும் மதிப்பு என்பது உண்டு என்கிற கருத்தையும் இக்கதையில் வரும் சிட்டுக்குருவி நமக்கு வெளிப்படுத்துகிறது.
தனக்குத் தேவைப்பட்ட விஷயத்துக்காக நம்பிக்கை இழக்காமல் சிட்டுக்குருவி தொடர்ந்து முயற்சி செய்ததால், இறுதியில் அந்தக் கோளாறு தானாகவே சரியாகி, உள்ளே சிக்கியிருந்த தானியத்தின் ஒரு பகுதி மீட்கப்பட்டது. சிறிய துகள்தானே என அதைக் கைவிட்டுவிட்டு வேறொரு தானியத்தைத் தேடிச் செல்லாமல், தனக்கு உரிமையான பொருள் சிறியதாயினும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து போராடி அதை அடைந்தது சிட்டுக்குருவி.
சாத்தியமற்றதாகத் தோன்றும் தடைகளை எதிர்கொள்ளும்போது, ஒருபொழுதும் மனம் தளராமல், நேர்மறையாக இருந்து தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்கிற பாடத்தை இக்கதையில் வரும் சிட்டுக்குருவி நமக்குக் கற்றுத் தருகிறது.
(தொடரும்)

