Skip to content
Home » சினிமாவும் சாதியும் #5 – தலித்துகளின் சித்தரிப்பு

சினிமாவும் சாதியும் #5 – தலித்துகளின் சித்தரிப்பு

தமிழ் சினிமாவில் சாதிய அடையாளங்களை வெளிப்படையாகப் பேசிய படங்கள் பெரும்பாலும், குறிப்பிட்ட அந்தச் சாதிக்குள் இருக்கும் இரண்டு தனிநபர்கள் அல்லது இரண்டு குழுக்களுக்குள் நிலவும் உள்முரண்பாடுகள், உறவுச் சிக்கல்கள், அதிகாரப் போட்டிகள் ஆகியவை குறித்தே இருந்திருக்கின்றன. தேவர் மகன் திரைப்படத்தில் பங்காளிகளுக்குள் நடக்கும் சண்டையாகவும், கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் ஒரு பெண்ணின் அண்ணனுக்கும் அவளது கணவனுக்கும் இடையிலான கௌரவச் சண்டையாகவும், மண்வாசனை திரைப்படத்தில் தேவர் சாதியினர் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய இரண்டு ஊர்களுக்குள் நடக்கும் சண்டையாகவும் கதை கட்டமைக்கப்பட்டிருக்கும்.

சாதி சார்ந்த திரைப்படங்கள் பெரும்பாலும் தேவர் மற்றும் கவுண்டர் சமூகத்தையே மையமாகக் கொண்டு இயக்கப்பட்டன. நாட்டாமை, சின்னக் கவுண்டர், சூர்ய வம்சம் போன்றவை இரண்டு கவுண்டர் சாதி நிலவுடைமையாளர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட திரைப்படங்களாகும்.

இரண்டு வெவ்வேறு சாதிகளுக்கு இடையிலான பிரச்னையாக இந்தத் திரைப்படங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை என்றாலும், இவற்றில் தலித் மக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தார்கள் அல்லது அடிபணிந்து போகும் கதாபாத்திரமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களது உண்மையான வாழ்வியல், பண்பாடு, கொண்டாட்டங்கள் ஆகியவை எதுவும் இந்தத் திரைப்படங்களில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தலித் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ஆளுமையற்ற வகையிலே சித்தரிக்கப்பட்டன.

மேடை நாடகங்கள் மற்றும் சினிமாவில் தலித் மக்கள் பற்றிய அசலான சித்தரிப்புகள் இல்லை என்றே சொல்லலாம். தலித் மக்கள் கணிசமாக வாழும் கிராமங்களில் அரங்கேற்றப்படும் நாடகங்களில், தலித் கதாபாத்திரங்கள் இழிவான வகையில் சித்தரிக்கப்பட்ட காரணத்தால், அந்த மக்கள் அவற்றை எதிர்த்துப் போராடிய நிகழ்வுகளும் உண்டு. நாடகங்களில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆளுமைகள் குறித்துப் பாடச் சொல்லி மக்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்த மேடை நாடகங்களில் தலித் மக்கள் குறித்த நேர்மையான அசலான சித்தரிப்புகள் ஏதும் இல்லாததுபோலவே தமிழ் சினிமாவிலும் இல்லை என்று ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் சுட்டிக்காட்டுகிறார்.

பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் கதாநாயகன் பாரதியை (நடிகர் பார்த்திபன்) தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இயக்குநர் சேரன் சித்தரித்திருப்பார். தலித் இளைஞனான பார்த்திபனை, தேவர் சமூகத்தைச் சேர்ந்த நிலவுடைமையாளரின் மகள் கண்ணம்மா (நடிகை மீனா) காதலிப்பதாகக் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். கதாநாயகன் தன்னளவில் ஆளுமையுள்ள வீரனாக இருந்தாலும், அவன் பெரும்பாலும் அந்த வீரத்தைத் தனது தேவர் சாதி எஜமானின் நலனுக்காகவே வெளிப்படுத்துவான். ‘அய்யா நம் தேவர் அய்யா’ என்று நிலவுடைமையாளரை வாழ்த்திப் பாடுவது, பஞ்சாயத்தில் தேவர் சாதியைச் சேர்ந்த மற்றொருவன் தனது எஜமானனைத் தவறாகப் பேசியதற்காக அவனைத் தாக்குவது எனத் தன்னுடைய நிலவுடைமையாளருக்கு விசுவாசமாக இருக்கும்படியாக அந்தக் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

நிலவுடைமையாளர் மீதிருக்கும் விசுவாசத்தின் காரணமாக, அவருடைய மகள் கண்ணம்மாவின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பான் பாரதி. தலித் சமூகத்தைச் சேர்ந்த மாயன் (நடிகர் ரஞ்சித்) தேவர் சமூகத்துப் பெண்ணைக் காதலித்து மணம் முடித்ததால், அவனை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பார்கள். இந்த மாயன் கதாபாத்திரம் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். படம் முழுவதும் தேவர் சாதி நிலவுடைமையாளரைப் பெருந்தன்மையாக நீதி வழங்கும் நபராகவும், தலித் மக்கள் அவரது தயவில் வாழும் ‘கீழ்ப்படிந்தவர்களாகவும்’ சித்தரித்திருப்பார் இயக்குநர் சேரன். இந்த ‘கீழ்ப்படிதலுக்கு’ உட்படாத மாயன் போன்றவர்கள் சமூக விலக்கம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு தலித் இளைஞனை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தில்கூட, தலித் மக்கள் அடிபணிந்தவர்களாகவும், சாதியக் கட்டமைப்பை மீறாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர்.

வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தில் கதாநாயகன் மாரியை (விஷ்ணு விஷால்) தலித் சமூகத்தைச் சேர்த்தவனாக இயக்குநர் சுசீந்திரன் சித்தரித்திருப்பார். கிராமத்தின் கபடிக்குழுவில் கதாநாயகன் மாரிக்கான இடம், அவனது சாதி காரணமாக மறுக்கப்படுவதை நுட்பமாகக் காட்டியிருப்பார் சுசீந்திரன். அதேபோல், இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய பேராண்மை படம், ஒரு பழங்குடியின கதாநாயகன் துருவன் (ஜெயம் ரவி) வனத்துறையில் கீழ்மட்ட அதிகாரியாகப் பணியாற்றுவதையும், அவரிடம் பயிலவரும் மாணவிகள் அவரைச் சாதிய ரீதியாக ஒதுக்குவதையும் யதார்த்தமாகச் சித்தரித்தது. ஆனால் இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் மரபான சாதியமைப்பில் தலித் வாழ்க்கை அனுபவத்தையும், அதன் பல்வேறு பரிணாமங்களைச் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0

தமிழ்ச் சமூகத்தின் சாதி அமைப்பு என்னும் இயங்குவெளியில், தலித் சாதிகளில் பிறந்த மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்க்கை அனுபவங்கள், கொண்டாட்டங்கள், அதன் மற்றொரு முனையில் இருக்கும் ஒடுக்குமுறைகள் ஆகியவை இயக்குநர் பா. ரஞ்சித்தின் வருகைக்குப் பின்னர்தான் தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்பட்டன. அவரது முதல் திரைப்படமான ‘அட்டகத்தி’யில் தீனா (நடிகர் தினேஷ்) என்னும் தலித் இளைஞனின் கல்லூரிப் பருவ வாழ்க்கை, அதன் அசலான கொண்டாட்டங்களுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

தலித் மக்கள் மீது ஒடுக்குமுறை தொடுக்கப்படுகிறது. அதனால் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வரும் கதாநாயகன் வலிமையானவனாக, சமூகத்தின் விடுதலைக்காகப் போராடும் தன்னலமற்ற தூயவனாக இருக்கவேண்டும் என்கிற வரையறைகளை மீறி, இயல்பான கதையைச் சொன்னது அட்டகத்தி திரைப்படம். ஒரு வளரிளம் பருவ இளைஞனின், கல்லூரி மாணவனின் இயல்பான விட்டேற்றித் தனமான நடவடிக்கைகளை இப்படம் சித்தரித்தது. கல்லூரிப் பேருந்து வழித்தடத்தில் பின்பற்றப்படும் ‘ரூட்டு தல’ என்னும் லும்பன் கலாசாரம்கூட எவ்வித விமர்சனமும் இல்லாமல் இப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். கானா இசை அப்பகுதி மக்களின் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கமாக இருப்பதையும், நடனம் அவர்களது கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக இருப்பதை அசலாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் பா. ரஞ்சித்.

இயக்குநர் பா. ரஞ்சித்தின் இரண்டாவது படமான ‘மெட்ராஸ்’இல், நகர்ப்புற தலித் மக்களின் வாழ்க்கை, அதன் முழுமையான அம்சங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ‘Housing board’ என்ற குடியிருப்புப் பகுதி, அதன் நெருக்கடியான சந்துகள், கால்பந்து, நடனம், காதல், நட்பு, கொண்டாட்டங்கள், கட்சி அரசியல், அவற்றின் துரோகச் செயல்கள் என நகர்ப்புற தலித் மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும், அதனூடாக அவர்கள் மீது செலுத்தப்படும் அரசியல் ஆதிக்கத்தையும் மெட்ராஸ் திரைப்படம் சித்தரித்தது.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், சென்னை நகர்ப்புறம் போன்ற சூழல்களில் வாழும் தலித் மக்களின் வாழ்க்கையை பா. ரஞ்சித் படமாக்கிய அதே தீவிரத்தில், தென் மாவட்டங்களில் தலித் மக்களின் வாழ்வையும் அவர்கள் எதிர்கொள்ளும் சாதி ஒடுக்குமுறைகளையும் இயக்குநர் மாரி செல்வராஜ் படமாக்கினார்.

மாரி செல்வராஜின் முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’, கல்லூரி என்னும் நவீன நிறுவனத்திலும்கூட ஒரு தலித் மாணவன் மீது தொடுக்கப்படும் சாதிய வன்முறைகளைச் சித்தரித்தது. கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் முதலாளித்துவ நவீன நிறுவனங்களாக இருந்தாலும், தென்மாவட்டங்களில் அவை இன்னும் சாதி கடந்த பொதுவெளியாக மாறவில்லை என்கிற யதார்த்த நிலை அப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. படம் முழுவதும் சாதி மறுப்பு காதலுக்கு எதிராக நடக்கும் ஆணவப் படுகொலைகளைக் காட்சிப்படுத்தினாலும், ஆணவக்கொலை போன்ற உச்சபட்ச சாதி வன்முறைகள் மட்டுமே தலித் மக்களின் சமூகப் பிரச்னை என்கிற கோணத்தை அப்படம் பேசவில்லை. மாறாக, தலித் மக்கள் மீது தொடுக்கப்படும் நுட்பமான வன்முறைகளையும் அப்படம் காட்சிப்படுத்துகிறது.

சாதிய வன்முறையின் இந்த நுட்பமான பக்கத்தை நுண்ணுணர்வுடன் மாரி செல்வராஜ் காட்சிப்படுத்தியது மிக முக்கியத்துவமுடையது. ஏனெனில், தலித் மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகள் என்பது பல்வேறு நிலைகளில் நடக்கக்கூடியது. ஆனால் பொதுவாகவே, ஆணவக்கொலை போன்ற அதீத வன்முறைகள் மட்டுமே தலித் மக்கள் மீது தொடுக்கப்படும் சாதிய ரீதியிலான வன்முறை என்று புரிந்துகொள்ளப்படுகிறது.

பரியேறும் பெருமாள் படத்தின் ஆரம்பக் காட்சியில், ஒரு குட்டையில் தேங்கியிருக்கும் நீரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகன் மற்றும் அவனது உறவினர்கள் நீராடுவார்கள். அதிலே தங்களுடைய நாய்களையும் குளிப்பாட்டுவார்கள். தலித்துகள் நீராடிய அந்தத் தண்ணீரில் தங்களது கால்களைக்கூட நனைக்காத ஆதிக்கச் சாதியினர், அதில் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வார்கள். மற்றொரு காட்சியில், பேருந்தில் கதாநாயகன் பரியனுக்கு (நடிகர் கதிர்) அருகில் அமர்ந்திருக்கும் முதியவர், அவனது சொந்த ஊரைக் கேட்கிறார். அவன் ஊர்ப் பெயர் சொன்னதும் அவனது சாதியை ஊகித்து அறியும் முதியவர், அவனுக்கு அருகில் உட்கார விரும்பாமல் எழுந்து சென்றுவிடுவார். இவையெல்லாம் நுட்பமான தீண்டாமை வடிவங்கள். இவையெல்லாம் ஆணவக்கொலை, சாதிவெறி தாக்குதல் போன்ற சம்பவங்களைப்போல் செய்திகளில் வராது. ஆனால் ஒவ்வொரு தலித்தும் இதுபோன்ற நுட்பமான தீண்டாமையை வாழ்க்கையில் ஒருமுறையேனும் கடந்திருப்பார்கள்.

மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படத்தில், தலித் மக்கள் வாழும் ஒரு ஊரில் பேருந்து நிற்காதது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தலித் மக்கள் சமூக விலக்கம் செய்யப்படும் யதார்த்தத்தை, பேருந்தை நிறுத்தாமல் செல்லும் காட்சியின் மூலம் நுட்பமாகக் கையாண்டிருப்பார் மாரி செல்வராஜ்.

அதுவே வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தில், மாரியம்மா என்னும் கதாபாத்திரம் செருப்பைத் தலையில் வைத்து நடக்க நிர்ப்பந்திக்கப்படும் காட்சி இடம்பெற்றிருக்கும். சிவசாமி கதாபாத்திரம் ஊரில் இருக்கும் அனைவரின் கால்களிலும் விழுவது போன்றொரு காட்சியும் இருக்கும். செருப்பைத் தலையில் வைத்து நடப்பது, ஊரார் காலில் விழுவது போன்ற அதீதமான வன்முறைகள் காட்சிப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது.

இவை போன்ற அதீத வன்முறைகள் மட்டும்தான் சாதிய ஒடுக்குமுறையின் வடிவங்கள் என்கிற எண்ணத்தை இது பார்வையாளர்கள் மத்தியில் விதைக்கக்கூடும். இதுபோல் சித்தரிக்கப்படும் அதீத வன்முறையின் சாயலில் இல்லாத எதையும், பார்வையாளர்கள் சாதிய வன்முறையாகப் புரிந்துகொள்ளாத நிலை ஏற்படலாம். இவற்றைத் தவிர மேற்கூறிய நுட்பமான வன்முறைகளைச் சாதிய வன்முறைகளாகப் பொதுப் பார்வையாளர்கள் இனம் கண்டுகொள்ள முடியாமல் போகலாம். அத்தகைய பொதுப் பார்வையாளர்களின் மனதை அசைத்துப் பார்க்க ஒவ்வொரு முறையும் காலில் விழுவது அல்லது தலையில் செருப்பைச் சுமக்கும் காட்சியைக் காட்டவேண்டிய நிலை ஏற்படுகிறது.

உண்மையில் கிராமப்புறங்களில் இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த சிறுவர்கள்கூட வயது முதிர்ந்த தலித் பெரியவர்களைப் பெயர் சொல்லி, ஒருமையில் அழைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இதுபோன்ற நுட்பமான சாதிய வன்முறைகளைத் தன்னுடைய படங்களில் மாரி செல்வராஜ் காட்சிப்படுத்தியிருப்பது இதனால்தான் முக்கியத்துவம் பெறுகிறது.

தலித் மக்களின் அசலான வாழ்க்கை, கொண்டாட்டங்கள், சமூக இருப்பு, அவர்கள் மீதான சாதிய வன்முறைகள் குறித்து தங்களுடைய படங்களில் சித்தரித்த பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர், சாதிய வன்முறைகளைத் தலித்துகள் தீர்க்கமாக எதிர்கொள்வது போன்ற காட்சிகளுடன்கூடிய படங்களையும் இயக்கினார்கள். பா. ரஞ்சித்தின் கபாலி, காலா போன்ற படங்களும், மாரி செல்வராஜின் கர்ணன் படமும் இந்த வகையைச் சேர்ந்ததாகும்.

தலித் மக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுக் கீழ்ப்படிபவர்களாகச் சினிமாவில் சித்தரிக்கப்பட்ட காலத்திலிருந்து, தற்போது தலித் மக்கள் வாழ்வையும், சமூக இருப்பையும், அவர்கள் எதிர்கொள்ளும் அமைப்பு ரீதியான வன்முறையும், உண்மைத்தன்மையுடன் சித்தரிக்கும் நிலைக்குத் தமிழ் சினிமா நகர்ந்திருக்கிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *