பொயு பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய வரலாறு பெரும் மாற்றங்களைச் சந்திக்கத் தொடங்கியது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் அதுவரை கோலோச்சிக்கொண்டிருந்த சோழப் பேரரசும் சாளுக்கியர்களின் அரசும் படிப்படியாக வலுவிழக்கத் தொடங்கின. கர்நாடகப் பகுதியில் சாளுக்கியர்களின் ஆட்சியை வீழ்த்தி மேலெழுந்த அரசுதான் ஹொய்சாளர்களின் அரசு. அந்த வம்சத்தில் ஆட்சி செய்த தலைசிறந்த மன்னர்களில் ஒருவர்தான் விஷ்ணுவர்த்தனர். அவருடைய ஆட்சியைப் பற்றி ஆராய்வதற்கு முன்னால், ஹொய்சாளர்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.
ஹொய்சாளர்கள்
தமிழில் போசளர்கள் என்று அழைக்கப்படும் ஹொய்சாளர்களின் வம்சத்தைத் தோற்றுவித்தவர் சாளா என்பவர். தற்போது கர்நாடகத்தில் உள்ள அங்கடி என்ற இடத்தைச் சேர்ந்த சாளா, ஒருநாள் முனிவர் ஒருவரைத் தரிசிக்கச் சென்றபோது, அங்கே ஒரு புலி (அல்லது சிங்கம்) அந்த முனிவரைத் தாக்க முயன்றதைக் கண்டார். அப்போது அந்த முனிவர் “ஹொய் சாளா” என்று, அதாவது “அடி சாளா” என்று கன்னடத்தில் கூறியதைக் கேட்டு, சாளா அந்தப் புலியை வீழ்த்தினார். அதன் காரணமாகவே அந்த வம்சத்துக்கு ஹொய்சாள வம்சம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுவதுண்டு.
பத்தாம் நூற்றாண்டிலேயே இவர்கள் அந்தப் பகுதியை ஆளத் தொடங்கினர். ஆரம்பத்தில் மேலைச் சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக இருந்தனர். சோழர்களுக்கு எதிரான மேலைச் சாளுக்கியர்களின் போர்களில் ஹொய்சாளர்கள், சாளுக்கியர்களுடன் சேர்ந்து போரிட்டனர். அவற்றில் முக்கியப் பங்கு வகித்தவர் ஹொய்சாள இளவரசர் எரியங்கன். பின்னர், கர்நாடகத்தின் தெற்குப் பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர்களை வென்று, அந்தப் பகுதி முழுவதையும் ஆட்சி செய்யத் தொடங்கினர். இந்த வம்சத்தில் தோன்றியவர்தான் விஷ்ணுவர்த்தனர்.
விஷ்ணுவர்த்தனரின் ஆட்சிக்காலம்
பொயு 1104ம் ஆண்டு விஷ்ணுவர்த்தனர் போசளர்களின் ஆட்சிக்கட்டிலில் ஏறினார் என்பது, அவரது பன்னிரண்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த தொட்டபல்லபூர் கல்வெட்டால் உறுதிசெய்யப்படுகிறது. இவரது இயற்பெயர் பிட்டிதேவன் என்பதாகும். ஹொய்சாள இளவரசர் எரியங்கனுக்கு வல்லாளன், பிட்டிதேவன், உதயாதித்யன் என்று மூன்று புதல்வர்கள் இருந்தனர். எரியங்கன் அரசராக முடிசூடுவதற்கு முன்பே இறந்துவிட்டதால், மூத்த புதல்வரான வல்லாளன் அரசராகப் பொறுப்பேற்றார். ஆனால், அவரும் மூன்றே ஆண்டுகளில் இறந்துவிட்டதால், பிட்டிதேவன் ஆட்சியை ஏற்றார்.
தன்னுடைய அண்ணனின் காலத்தில் பல போர்களில் ஈடுபட்ட அனுபவம் பிட்டிதேவனுக்கு இருந்தது. இருந்தபோதிலும், சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் போர் எதிலும் ஈடுபடாமல், ஆட்சி நிர்வாகத்தில் அவர் கவனம் செலுத்தினார். அதேசமயம், தன்னுடைய ராணுவத்தை வலுப்படுத்துவதிலும் அவர் முனைந்தார். வடக்கில் சாளுக்கியர்கள், தெற்கில் சோழர்கள் என இரண்டு பெரிய வல்லரசுகளுக்கு இடையில் ஹொய்சாள அரசு அமைந்திருந்தது. எந்த நேரத்திலும் தாங்கள் நசுக்கப்படக்கூடும் என்பதை உணர்ந்த பிட்டிதேவன், மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தமது படைபலத்தைப் பெருக்கினார்.
அவரது சமயம் சார்ந்த வாழ்விலும் ஒரு பெருத்த மாற்றம் இக்காலகட்டத்தில் ஏற்பட்டது. சோழநாட்டிலிருந்து வைணவ ஆச்சாரியரான ஶ்ரீராமானுஜர், பிட்டிதேவனின் ஆட்சிப்பகுதியில் இருந்த மேல்கோட்டைக்கு இடம்பெயர்ந்தார். பிட்டிதேவனின் மகளைப் பிரம்மராட்சதன் பிடித்துக்கொண்டதாகவும், அதன் பிடியிலிருந்து அரசமகளை ராமானுஜர் விடுவித்ததாகவும் ஒரு தொன்மம் உண்டு. அதனால் பிட்டிதேவன், ராமானுஜரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டாராம். எப்படி இருந்தாலும், ராமானுஜரின் தாக்கத்தால் பிட்டிதேவன், தன்னுடைய முன்னோர்களின் சமயமான சமணத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார். தன்னுடைய பெயரையும் விஷ்ணுவர்த்தனர் என்று மாற்றிக்கொண்டார். இது பொயு 1116ம் ஆண்டு நடந்த நிகழ்வாகும்.
தலைக்காட்டு வெற்றி
அதே ஆண்டிலேயே விஷ்ணுவர்த்தனர் தனது படையெழுச்சியையும் தொடங்கினார். ராஜராஜ சோழன் காலத்திலேயே தலைக்காட்டு கங்க அரசு (கங்கவாடி) சோழர்களால் வெல்லப்பட்டு, அவர்களது ஆட்சியுடன் இணைந்திருந்தது. பின்னர் மேலைச் சாளுக்கியர்கள் அதை ஓரளவு மீட்டெடுத்த போதிலும், கங்கவாடிக்கு என்று ஓர் அரசு அமையவில்லை. ஹொய்சாளர்களிடமே அதன் ஆட்சிப்பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மீண்டும் சோழர்கள் கங்கவாடியைப் பிடித்திருந்தனர். ஆகவே, அதைச் சோழர்களிடமிருந்து கைப்பற்றுவதில் விஷ்ணுவர்த்தனர் தனது கவனத்தைச் செலுத்தினார்.
தலைக்காட்டை நோக்கிப் படையெடுத்துச் சென்ற ஹொய்சாளர்களின் படை, கடுமையான முயற்சிக்குப் பிறகு சோழர்களை அங்கிருந்து விரட்டி, அந்த இடத்தைக் கைப்பற்றியது. பொயு 1117ம் ஆண்டைச் சேர்ந்த விஷ்ணுவர்த்தனரின் கல்வெட்டுகள் அவரைத் ‘தலைக்காடு கொண்டான்’ என்று புகழ்கின்றன. இந்தப் படையெடுப்பில் ஹொய்சாளர்களின் தண்டநாயகராக கங்கராஜா என்பவர் பொறுப்பு வகித்தார். சோழர்களின் தலைவராக அப்போது கங்கவாடியில் இருந்தவர் அதியமான் என்று தெரிகிறது. இந்தப் போரைப் பற்றிய விவரங்களைச் ச்ரவணபெலகொலாவில் உள்ள கல்வெட்டு ஒன்று விவரிக்கிறது.
“துரோகிகளை அரைத்துத் தூளாக்கும் கல்லைப் போன்றவனும், பெரும் அமைச்சனும், தண்டநாயகனுமான கங்கராஜன், மலைக் கணவாய்களுக்கு அப்பால் அமைந்த கங்கவாடி நாட்டின் எல்லைப் பகுதியான தலைக்காட்டுப் பாசறையில் வாயிற்காவலன் போல் நிலைகொண்டிருந்த சோழரின் சாமந்தனான அதியமான், சோழன் தனக்குக் கொடுத்திருந்த நாட்டை ஒப்படைக்க மறுத்து, ‘போரிட்டு எடுத்துக்கொள்’ என்று கூறியபோது, வெற்றியை நாடி அவனுக்கு எதிராகப் படையெடுத்தான். இரு படைகளும் மோதின.
ஓ கங்க சேனாதிபதியே! இந்நாட்டுப் பகுதியில் உமது வீரத்தின் பெருமையை எடுத்துரைக்க வேறு யாருடைய சான்று நமக்குத் தேவை? வெற்றிக்காக உயர்த்தப்பட்ட உமது கூரிய வாளின் அழிவூட்டும் முனை தனது முதுகுத் தோலைக் கிழிக்கத் தொடங்கியபோது காஞ்சியை நோக்கி ஓடிய தாமனே அதற்குப் போதுமான சான்றல்லவா?
இதுவரை தலைக்காட்டில் தங்கி, எண்ணற்ற போர்களில் பலரைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து, தனது வீரத்தால் மக்களை வியப்பில் ஆழ்த்திய சாமந்தனான தாமோதரன், இப்போது கங்கராஜனின் வாள் வீச்சுகளுக்குப் பெரிதும் அஞ்சி, போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடினான். கங்கராஜன் தனியே வேகமாக முன்னேறி, எதிரிகளை இகழ்ந்து சவால்விட்டு, அவர்களின் மனத்துணிவைக் குலைத்து, அவர்களை ஓடச் செய்தான். மேலும் நரசிங்கவர்மனையும், மலைக்கடவுகளுக்கு அப்பால் இருந்த சோழரின் மற்ற எல்லாச் சாமந்தர்களையும் புறமுதுகிட்டு ஓடச் செய்து, அந்த நாடு முழுவதையும் ஒரே குடையின் ஆட்சிக்குள் கொண்டு வந்தான்.”
மேற்குறிப்பிட்ட வரிகளிலிருந்து, சோழர்களின் படைத்தலைவன் காஞ்சி நகருக்குச் சென்றுவிட்டான் என்று தெரிகிறது. அதை அடுத்து, கங்கர்களின் இன்னொரு முக்கியமான நகரான கோலாலபுரத்திற்கு (கோலார்) விஷ்ணுவர்த்தனரின் படை சென்றது. அங்கே இருந்த சோழப்படைகளும் ஹொய்சாளர்களால் தோற்கடிக்கப்பட்டன. இப்படியாக, பொயு 1131ம் ஆண்டிற்குள் கங்கவாடி முழுவதும் விஷ்ணுவர்த்தனரின் ஆதிக்கத்திற்குள் வந்தது. இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக, தனது தலைநகரான வேலாபுரத்தில் (பேலூர்) விஜயநாராயணன் கோவிலை விஷ்ணுவர்த்தனர் எழுப்பினார். தற்போது அது சென்னகேசவர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

அதன் பிறகு துளுநாட்டையும் வட கொங்குப் பகுதிகளையும் ஹொய்சாளப் படைகள் வென்றெடுத்தன. குறிப்பாக, கொங்குப் பகுதியில் நடந்த படையெடுப்புகளுக்கு ஹொய்சாளத் தளபதியான புனிசன் தலைமையேற்றதாகவும், சேலமும் கோவையும் ஹொய்சாளர்களின் ஆட்சியின் கீழ் சென்றதாகவும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அத்தோடு, காஞ்சிபுரத்தையும் வென்றதாக விஷ்ணுவர்த்தனரின் சாசனங்கள் குறிப்பிட்டாலும், அது மிகைப்படுத்தப்பட்டதாகவே பல வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். ஹொய்சாளர்களின் கொங்குப் பகுதி வெற்றியைக் குறிக்கும் வகையில் அங்கே ஒரு ஜெயஸ்தம்பம் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
அதன் பின், தெற்கு கர்நாடகப் பகுதியில் ஆட்சி செய்த செங்காள்வர்களையும் கொங்காள்வர்களையும் ஹொய்சாளர்கள் தோற்கடித்தனர். ஆனால், கரடுமுரடான மலைப்பகுதியில் ஆட்சி செய்த அந்தத் தலைவர்கள் அடிக்கடி ஹொய்சாளர்களை எதிர்த்துக் கலகம் செய்தனர். அதன் காரணமாக அவர்களிடையே மீண்டும் மீண்டும் போர்கள் நடந்தன.
தெற்கில் கிடைத்த இந்த வெற்றிகளை அடுத்து, வடக்கு நோக்கித் தனது கவனத்தைத் திருப்பிய விஷ்ணுவர்த்தனர், சக்கரக்கூடத்தை (சட்டீஸ்கரில் உள்ளது) தோற்கடித்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. “அவனுடைய வாளின் கூர்மையினால் சக்கரக்கூடத்தின் தலைவனான சோமேஸ்வரனை விஷ்ணுவர்த்தனன் அச்சமடையச் செய்தான்” என்றும், “சக்கரக்கூடத்தின் சிம்மாசனத்தை அலங்கரித்தவனும் யானைபோன்றவனுமான சோமேஸ்வரனை, சிங்கம் போன்ற விஷ்ணுவர்த்தனன் வீழ்த்தினான்” என்றும் ஹொய்சாளர்களின் சாசனங்கள் புகழ்கின்றன.
வடபகுதியில் ஆட்சி செய்துகொண்டிருந்த மேலைச் சாளுக்கியர்களைக் கடந்து ஹொய்சாளர்கள் அடைந்த இந்தப் பெருவெற்றி, அவர்களின் கவனத்தை ஈர்த்ததில் வியப்பில்லை அல்லவா?
சாளுக்கியர்களுடன் மோதல்
ஆனாலும், சாளுக்கியர்களுடன் நேரடியாக மோத விரும்பாத விஷ்ணுவர்த்தனர், அடுத்ததாக பனவாசியின் மேல் படையெடுத்தார். செல்லும் வழியில் நுளம்பவாடியைத் தாக்கி, அதனைத் தோற்கடித்தார். அப்போது பாண்டியர்கள் என்ற பெயருடைய வம்சத்தினர் நுளம்பவாடியை ஆண்டு கொண்டிருந்தனர் (இவர்கள் மதுரைப் பாண்டியர்கள் அல்லர்). அவர்களின் தலைநகரான உச்சங்கியை விரைவில் கைப்பற்றி, ‘நுளம்பவாடி கொண்டான்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார் விஷ்ணுவர்த்தனர். அதன் பின், பனவாசியை ஆண்டு கொண்டிருந்த இரண்டாம் தைலபனைத் தோற்கடித்து, அந்த அரசையும் ஹொய்சாளர்களுடன் இணைத்துக்கொண்டார்.
இப்படி, தெற்குக் கர்நாடகத்தில் சோழர் ஆதிக்கத்தை ஒழித்துவிட்டு, பிறகு அங்கிருந்த சிற்றரசுகளை ஒன்றன்பின் ஒன்றாக வீழ்த்திக்கொண்டிருக்கும் ஹொய்சாளர்களை இனிமேலும் சும்மாவிட்டால் முதலுக்கே மோசம் வந்துவிடும் என்று நினைத்த சாளுக்கிய அரசனான ஆறாம் விக்கிரமாதித்தன், ஹொய்சாளர்களுடன் மோதினான். இரண்டு படைகளுக்கும் இடையில் பல இடங்களில் போர்கள் நடந்தன. ஹனகல்லில் நடந்த போரில் ஹொய்சாளர்கள் வெற்றி பெற்று, அந்த ஊர்க் கோட்டையைக் கைப்பற்றினர். ஆனால், கிருஷ்ணா நதிக்கரையில் நடந்த போரில் விஷ்ணுவர்த்தனரின் படை, சாளுக்கியத் தளபதியான அச்சுகியால் தோற்கடிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஹொய்சாளர்கள் சிறிது காலம் சாளுக்கியர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனாலும், ஆறாம் விக்கிரமாதித்தனின் காலத்திற்குப் பிறகு மீண்டும் வடதிசையை நோக்கிப் படையெடுத்த விஷ்ணுவர்த்தனர், பங்கபுரத்தைக் கைப்பற்றி, துங்கபத்திரா நதியைக் கடந்து தனது அரசை விரிவுபடுத்தினார். இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் துலாபார தானத்தைச் செய்தார் என்று அவரது கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில், மிகச்சிறிய அரசாகவும் சாளுக்கியர்களுக்கு அடங்கிய சிற்றரசாகவும் இருந்த ஹொய்சாளர்களை ஒரு பேரரசாக மாற்றுவதற்கு அடித்தளமிட்ட பெருமை விஷ்ணுவர்த்தனரையே சேரும். நிர்வாக வசதிக்காக, ஏற்கனவே இருந்த தலைநகரான வேலாபுரத்தைத் தவிர, துவாரசமுத்திரம் (ஹலேபீடு) என்ற இன்னொரு நகரையும் நிர்மாணித்தார் விஷ்ணுவர்த்தனர்.
சமயம்
ஆரம்பத்தில் சமண சமயத்தைப் பின்பற்றிய விஷ்ணுவர்த்தனர், ராமானுஜரின் தாக்கத்தால் பரமவைஷ்ணவராக மாறிவிட்டாலும், அவர் தனது சமயத்தை மற்றவர்களிடம் திணிக்கவில்லை. அவரது பிரதான சேனாதிபதியான கங்கராஜாவும், அவரது பட்டமகிஷியான சாந்தலா தேவியும் சமணர்களாகவே தொடர்ந்தனர். தனது தலைநகரில் விஷ்ணுவுக்குக் கோவில் எழுப்பியதைப் போலவே, ஹலேபீட்டில் சிவனுக்காக

லையும் விஷ்ணுவர்த்தனர் கட்டினார். சமணராக இருந்த சாந்தலா தேவியும் விஷ்ணுவர்த்தனரின் கோவில் கட்டும் பணிகளுக்குத் துணைபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
சாந்தலா தேவி
விஷ்ணுவர்த்தனரைப் பற்றிய எந்தக் குறிப்பும் அரசி சாந்தலா தேவியைப் பற்றிச் சொல்லாமல் முழுமை பெறாது. ஹொய்சாளர்களின் பண்பாட்டு வரலாற்றில் அவர் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறார். சாந்தலா தேவி கல்வியறிவு, சமயப் பக்தி, நாட்டியத் திறமை ஆகியவற்றுக்காகப் பெரிதும் போற்றப்பட்டவர். பேலூரில் காணப்படும் பல சிற்பங்களுக்கு மாதிரியாக இருந்தவர் சாந்தலா தேவியே என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு சிறப்புப் பெற்றிருந்த சாந்தலா தேவி, தற்கொலை செய்துகொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே இருந்து வருகிறது.

விஷ்ணுவர்த்தனரின் தாக்கம்
விஷ்ணுவர்த்தனர் ஹொய்சாளர்களைப் பேரரசாக மாற்றியவர் அல்ல. அவரது ஆட்சிக்காலத்திலேயே ஹொய்சாளப் பேரரசு தனது மிகப்பெரிய எல்லையை எட்டியதாகவும் கூற முடியாது. பிற்கால அரசர்கள், குறிப்பாக இரண்டாம் வீர வல்லாளர், ஹொய்சாளர்களின் வலிமையை மேலும் உயர்த்தினர். ஆனால், விஷ்ணுவர்த்தனர் அதைவிட முக்கியமான ஒன்றைச் செய்தார்.
அவருக்கு முன்பு, சாளுக்கியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையில் தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்த முயன்ற சிற்றரசர்களாகவே ஹொய்சாளர்கள் இருந்தனர். அவருக்குப் பிறகு, தென்னிந்தியாவில் மேலாதிக்கத்திற்குப் போட்டியிடக்கூடிய ஒரு முக்கிய அரச சக்தியாக அவர்கள் உருவெடுத்தனர். அவர் கங்கவாடியைக் கைப்பற்றினார். தெற்கு கர்நாடகத்தின் பெரும்பகுதியில் இருந்த சோழர்களின் ஆதிக்கத்தை அகற்றினார். மேலைச் சாளுக்கியர்களின் அரசியல் அதிகாரத்துக்குச் சவால் விடுத்தார். ஹொய்சாள அரசின் வளங்களையும் பெருமையையும் விரிவுபடுத்தினார். துவாரசமுத்திரம் ஒரு முக்கிய அரசியல் மையமாக உருவெடுப்பதற்கு வழிவகுத்தார்.
மேலும், ஹொய்சாளர்களின் பண்பாட்டின் நிலையான அடையாளங்களாகப் பின்னாளில் திகழ்ந்த கோவில்களின் பெரும் கட்டுமான யுகத்தையும் அவரே தொடங்கி வைத்தார். எனவே, விஷ்ணுவர்த்தனரை வெற்றிகரமான அரசர்களில் ஒருவராக மட்டும் கருதாமல், தன் வம்சத்தின் வரலாற்றுப் பாதையையே மாற்றியமைத்த அரசராகவே போற்ற வேண்டும்.
(தொடரும்)

