Skip to content
Home » அயோத்திதாசர் #10 – ஆடி மாதமும் அம்மன் வழிபாடும்

அயோத்திதாசர் #10 – ஆடி மாதமும் அம்மன் வழிபாடும்

இந்து மதத்தில் உள்ள தாய் தெய்வ வழிபாடு, மிக உயர்ந்த ஒரு வழிபாட்டு நிலையாகும். அம்மன் வழிபாடு என்பது நம்முடைய நாடு மட்டுமல்லாமல் நமது கலாசாரம் பரவிய நாடுகளின் மரபுகளிலும் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். உதாரணமாக இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில், பெண்களையும் பெண் தேவதைகளையும் மையப்படுத்தி நிகழ்த்தப்படும் வழிபாட்டு முறைகளும், வாழ்வியல் சடங்குகளும் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்திய நாட்டில், குறிப்பாக ஆடி மாதமும் புரட்டாசி மாதமும் முழுக்க முழுக்க அம்மன் வழிபாடு நடைபெறும் மாதங்களாக உள்ளன. ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு என்பது பொதுவாக அமைந்தாலும், மாரியம்மன் வழிபாடே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆடி மாத அம்மன் வழிபாடு குறித்து, ஒரு வரலாற்று முறைமையிலான கதையை அயோத்திதாசர் கூறுகின்றார்.

1,500 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் சீவகனுடைய தாய்மாமன் சாக்கைய சந்திரவாகு என்பவர், புந்நாடு என்னும் நாட்டினை ஆட்சி செய்து வந்தார். சீரிய முறையில் நடந்த அவருடைய ஆட்சியில், எவ்விதமான குறையுமின்றி மக்கள் நலமுடன் வாழ்ந்து வந்தனர். நல்ல குணங்கள் வாய்த்த அந்த மன்னருக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அம்பிகா தேவி எனப் பெயரிட்டுச் சிறப்புடன் வளர்த்து வந்தார் சாக்கையன். தன்னுடைய 7 வயதிற்குள் இனிய தமிழ் மொழியினையும் எழுத்துகளையும் கற்றுத் தேர்ச்சி பெற்றாள் அப்பெண் குழந்தை. இதைத் தொடர்ந்து, தன்னுடைய 11ஆம் வயதில் புத்தர் செயலையும், அவரது குணாதிசயங்களையும் கேள்விப்பட்டு, அவருடைய திருவடிகள் குறித்தே சிந்திக்கும் தியான நிலையில் தன் மனதைச் செலுத்தத் தொடங்கினாள் குழந்தை அம்பிகா தேவி.

இத்தகைய நிலையில் பெண்களின் 7 பருவங்களில் ஒன்றான மங்கை என்னும் வளரிளம் பருவத்தை அம்பிகா தேவி அடைந்தபோது, இயல்பாக எழும் திருமணப் பேச்சுகள் எழுந்தன. இதைக் கேள்விப்பட்ட அம்பிகா தேவி, தன் தந்தை சாக்கையனிடம் சென்று, தனக்குத் திருமணம் வேண்டாம் எனவும் ஞானிகள் நடத்தும் பெண்களின் ஞான சங்கத்தில் சேர விரும்புவதாகவும் கூறினாள். இதைக் கேட்ட சாக்கையன், ‘பெண்கள் ஞான சங்கத்தில் 7 வயதாகும்போது பேதைப் பருவத்தில் சேர முடியும் அல்லது திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையின் இறுதியில்தான் சேர முடியும்; ஆனால் இளமைக் காலத்தின் மங்கைப் பருவத்தில் சேர இயலாது’ என்று தன் மகள் அம்பிகா தேவியிடம் கூறினார். அதற்கு அம்பிகா தேவி, தனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், ஞான சங்கத்தில் சேர்ந்து உயரிய ஞான நிலையை அடைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் முடிவாகக் கூறி, அதற்கு உதவுமாறு அவரிடம் வேண்டினாள்.

இதனால் வேறு வழியில்லாமல், தன்னுடைய மகளின் விருப்பம் குறித்து அமைச்சர்களிடமும் ஞான சங்கத்தின் ஆசிரியர்களிடம் மன்னர் சாக்கையன் எடுத்துக் கூறினார். அவர்கள் அனைவரும் தீவிரமாக ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். மன்னரிடம் சென்று, ‘மங்கைப் பருவத்தை அடைந்த அம்பிகா தேவியை ஞான சங்கத்தில் சேர்க்க வேண்டுமென்றால், அவளது தாய்மாமன் அவளுடைய கழுத்தில் பொட்டுக் கட்டிவிடுதல் வேண்டும். அதன் பின்னர்தான் அவளைச் சங்கத்தில் சேர்க்க முடியும்’ எனத் தீர்மானமாகக் கூறினர். தனது மகளின் தாய்மாமனாகிய கந்தருவதத்தனை அழைத்த மன்னர், நடந்து நிகழ்வுகள் அனைத்தையும் கூறினார். மன்னர் கூறியவற்றை ஏற்றுக்கொண்ட கந்தருவதத்தன், அம்பிகா தேவியின் கழுத்தில் சான்றோர்கள் கூறிய முறையில் குறிப்பிட்ட நாளில் ஒரு பொட்டினைக் கட்டினான். அதன்பிறகு ஞானச் சங்கத்தில் அம்பிகா தேவி சேர்ந்தார்.

ஞானச் சங்கத்தில் சேர்ந்த அம்பிகா தேவி, தனது சீரிய முயற்சியின் விளைவாகத் திரிபிடக தரும நெறிகளைப் பின்பற்றி, விரைவாக மெய்யுணர்ந்து ஞானம் கிடைக்கப் பெற்றார். அதன்பின்னர் ஒரு வேம்பின் அடியில் அமர்ந்துகொண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடகத்தில் உள்ள தரும நெறிகளை அறிந்துகொள்ளும் பொருட்டு, அவரவர் அறிவிற்கு ஏற்ப அவற்றைப் போதித்து வந்தார். பிடகத்தைக் கூறியதால், அம்பிகா தேவியை மக்கள் ‘பிடகறி’ என்று அழைத்தனர். அதுவே பின்னாளில் ‘பிடாறி’ என்று மாறியதாகக் கூறுகிறார் பண்டிதர்.

தான் பெற்ற ஞானத்தால் பிடகறி என்கிற பெயருடன் வேம்பு மரத்தின் அடியில் அமர்ந்திருந்த இளவரசி அம்பிகா தேவி, ஒரு கட்டத்தில் முக்காலத்தையும் அறியும் ஆற்றலையும் பெற்றார். அதன் வழியாக மக்களுக்கு அவர் நல்லது செய்துவந்த நேரத்தில், நாகை நாட்டு மக்கள் ஒரு பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய பயிர்களும்கூட பாதிப்புக்குள்ளாயின. இதனால், அச்சமடைந்த நாகை மக்கள், அப்பிரச்னையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிவதற்காக அம்பிகா தேவியிடம் தஞ்சமடைந்தனர்.

தன்னை நாடி வந்த மக்களை ஆழ்ந்துநோக்கி, தன்னுடைய ஞான விழியால் அவர்களுடைய துயருக்கான காரணத்தை அறிந்துகொண்டார் அம்பிகா தேவி. அதன்பிறகு அவர்களிடம், ‘நாகை நாட்டு மக்களே! உங்களுடைய மனதில் அறம் குறைந்து வஞ்சக எண்ணங்கள் நிரம்பின. அத்தோடு பிற உயிர்கள் மீது அன்பு செலுத்தும் உணர்வும் குறைந்துபோயிற்று. மேலும், அதிகப் பொருளாசை கொண்டு உங்களுடைய நிலத்தை முறையாகப் பேணாததும் ஒரு காரணமாகும். இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க உங்களுடைய வீடுகளிலும் மற்றும் நகர வீதிகளிலும், கற்பூரம் மற்றும் மட்டிப்பால் புகையிட்டு, வேப்பிலைத் தோரணம் கட்டி உப்பில்லாமல் தானியங்கள் சமைத்துத் தானம் அளிக்க வேண்டும்!’ என்று கூறினார். அம்பிகா தேவி கூறியபடியே செய்து, தங்களுடைய நாட்டைப் பீடித்திருந்த வியாதியை நாகை மக்கள் நீக்கினர்.

‘எங்கெல்லாம் மழை குறைகின்றதோ, அங்கெல்லாம் வெப்பத்தால் உண்டாகும் 13 வகையான வெப்ப நோய்களும், 13 வகையான வாந்தி நோய்களும் ஏற்பட்டு மக்களை வருந்தச் செய்யும். அந்த நோய்க் கிருமிகளின் பாதிப்பு அகல வேண்டுமென்றால் அவுரி புகை, வேப்பிலை மற்றும் கற்பூர புகை, மட்டிப்பால் புகை ஆகியவற்றை வீதிகளிலும் வீடுகளுக்குள்ளும் செலுத்த வேண்டும். இதனால் நோய்க் கிருமிகளின் தாக்கம் குறைந்து, மழை மேகங்கள் உருவாகும்’ என்றெல்லாம் வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டு அம்பிகா தேவி கூறிய வாக்கை, ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தவறாமல் பின்பற்றத் தொடங்கினர்.

இவ்வாறு ஞான நோக்கினால் தங்களுடைய குறைகளை நீக்கிய அம்பிகா தேவியை, ‘மாறி நீக்கப் பெற்றவள்’ என்னும் பொருள்பட ‘மாறியாத்தாள்’ என்று மக்கள் கொண்டாடி வந்தனர். அந்தச் சொல்லே பின்னாளில் மாரியாத்தாள் எனத் திரிந்தது. திரிபிடகத்தின் உண்மையை எடுத்துச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்திய மாறியாத்தாள் இறுதியில் தன்னுடைய சமாதி நாளையும் அனைவருக்கும் அறிவித்தார். இதன்படி ஆடிமாதம் பதினெட்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி தினத்தன்று அம்பிகா தேவி பரிசுத்த நிர்வாண நிலையை அடைந்தார். ஜோதி வடிவாய்த் தோன்றிய அவரை, மக்கள் அனைவரும் தங்களுடைய குறைகளை நீக்கும் பொருட்டும் தங்களை நல்வழிப்படுத்தும் வகையிலும், கிராம தெய்வமாகவும் இல்லத் தெய்வமாகவும் வழிபடத் தொடங்கினர். வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்த அம்பிகா தேவியை நினைவுகூரும் வகையில், ஆடி மாதத்தன்று வேப்பிலைத் தோரணமிட்டு, தங்கள் இல்லங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்களால் பொங்கல் வைத்து, அவற்றை ஒன்று சேர்த்து ஏழைகள் முதல் அனைவரும் பசியாறி, மாரியாத்தாளை வழிபட்டு வந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் மாரியம்மன் வழிபாடு சிறப்பாகப் பின்பற்றப்பட்டாலும், ஆடி மாதத்தின்போது நாகைப் பகுதியில் மாரியம்மன் வழிபாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தங்களின் வருத்தத்தைப் போக்கிய மாரியம்மனை, அம்மக்கள் வேலாங் கண்ணி என்கிற மடத்தை அமைத்துச் சிறப்புற வழிபட்டார்கள்.

இவ்வாறு பிற உயிர்களைத் துன்புறுத்தாமல், ஜீவ காருண்ய ஒழுக்கத்தைப் பின்பற்றிச் சிறந்து விளங்கிய அம்மன் வழிபாடு, பின்னாளில் நமது தேசத்தில் குடியேறிய அந்நிய நாட்டவரின் சூழ்ச்சியின் காரணமாகவும், நமது முன்னோரது கூற்றின் உட்பொருளை உணர்ந்துகொள்ளாத மக்களின் அறியாமையினாலும், சிறிது சிறிதாகப் பலியிடுதல் முதலான வழிபாட்டு முறைகளுக்கு மாற்றம் பெறத் தொடங்கியதாக பண்டிதர் குறிப்பிடுகிறார்.

இதற்குச் சான்றாக அம்பிகையம்மன் (அம்பிகா தேவி) வழிபாட்டிற்குப் பின்னர் தமிழகத்தில் நிகழ்ந்த கோவலன் கண்ணகி வரலாற்றை அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். கோவலனின் கொலைக்குக் காரணமான பொற்கொல்லரின் சூழ்ச்சியின் காரணமாக மதுரையை எரித்தாள் கண்ணகி. இதனால் கண்ணகியைக் குளிர்விக்க ஆயிரம் பொற்கொல்லர்களைப் பாண்டியர்கள் பலியிட்டனர் என்று கூறப்படுகிறது. பிற்காலத்தில் கண்ணகி வழிபாட்டிற்காக மனிதர்களைப் பலியிடாமல், அதற்குப் பதிலாக ஆடு மற்றும் கோழி முதலான உயிர்களைப் பலியிட்டனர் என்று குறிப்பிடுகிறார் பண்டிதர்.

எனவே, கண்ணகி வழிபாடு என்பது அம்பிகையம்மன் வழிபாட்டிற்குப் பின்னர் தோன்றியது. இருப்பினும் கண்ணகி மதுரையை எரியூட்டியதும் ஆடி மாதம் என்பதால், இரண்டும் ஒன்றோடொன்று கலந்து வழிபாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். அம்பிகையம்மன் வழிபாட்டில் இத்தகைய பலியிடுதல் முதலான சடங்குகள் இருக்கவில்லை என்பதைப் பண்டிதர் உறுதிப்பட எடுத்துரைக்கிறார்.

கிராம தேவதையாக இருந்து ஊர் மக்களைக் காப்பவர் அம்பிகையம்மன். எனவே, புத்தர் காட்டிய நெறியான கொலை, களவு, கள் உண்ணுதல், காமம் மற்றும் பொய்யுரைத்தல் முதலான பஞ்ச பாவங்களில் இருந்து விடுபட்டு, அம்மனை நன்னெறியில் வழிபடுவதே அவருக்கு நாம் செய்யும் சிறப்பென, ஆடி மாதத்தில் நிகழும் அம்மன் வழிபாட்டிற்கு உண்டான பின்னணியைப் பண்டிதர் வகுத்துக் கூறுகிறார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *