Skip to content
Home » பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #20 – கோவிந்தசந்திரர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #20 – கோவிந்தசந்திரர்

பெரும்பாலும் ஹர்ஷவர்த்தனரோடு நின்றுவிடும் வட பாரதத்தின் வரலாற்றில், அவருக்குப் பின் ஆட்சி செய்த முக்கியமான அரசர்களைப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வரும் மற்றொரு சிறப்பான அரசர், காஹடவால வம்சத்தைச் சேர்ந்த கோவிந்தசந்திரர்.

காஹடவாலர்கள்

கோவிந்தசந்திரரின் எழுச்சியைப் புரிந்துகொள்ள, முதலில் காஹடவாலர்களின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பார்க்க வேண்டும். ஹர்ஷவர்த்தனரின் காலத்திலிருந்தே கன்னோஜ் வடஇந்திய அரசியலில் ஒரு விசேஷமான இடத்தைப் பெற்றிருந்தது. கன்னோஜைக் கட்டுப்படுத்துவது என்பது வெறும் ஒரு நகரைக் கைப்பற்றுவது மட்டுமல்லாமல், வடஇந்தியாவின் கேந்திரமான பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்குச் சமமானதாகவே கருதப்பட்டது. பிரதிஹாரர்கள், பாலர்கள், ராஷ்டிரகூடர்கள் எனப் பல வம்சங்கள் கன்னோஜுக்காக மோதியிருந்தன.

அவர்கள் காலப்போக்கில் வலிமை இழந்தபோது, புதிய வம்சங்கள் தோன்றின. அவற்றில் ஒன்றாகக் காஹடவாலர்கள் உருவானார்கள். இந்த வம்சத்தின் வலுவான அடித்தளத்தை அமைத்தவர் சந்திரதேவர். இவர் கோவிந்தசந்திரரின் பாட்டனார். கன்னோஜ், வாரணாசி போன்ற இடங்களைச் சுற்றிய பகுதிகளில் தனது ஆட்சியை உறுதியாக நிறுவினார் சந்திரதேவர். அவருக்குப் பின் அவரது மகன் மதனபாலர் ஆட்சிக்கு வந்தார். மதனபாலரின் ஆட்சிக் காலத்திலேயே இளவரசராக இருந்த கோவிந்தசந்திரர், பல போர்களில் ஈடுபட்டு தனது வலிமையை நிரூபிக்கத் தொடங்கினார்.

அக்காலகட்டத்தில் வட பாரதம் பலவிதமான குழப்பங்களில் சிக்கியிருந்தது. மேற்கிலிருந்து அந்நியர்கள் இந்தியாவைக் குறிவைத்துப் படையெடுக்கத் தொடங்கியிருந்தனர். கஜினி முகமதுவின் பல படையெடுப்புகளால் வடமேற்குப் பகுதியில் இருந்த அரசர்கள் நிலைகுலைந்து போயிருந்தனர். கஜினி முகமதுவுக்குப் பின்னர் கஜினியின் அரசர்களாக வந்தவர்களும் இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிக்க முனைப்புடன் இருந்தனர். அதனால், அவர்கள் கங்கைச் சமவெளியைக் குறிவைத்துப் படையெடுத்தனர். கஜினியின் அரசனாக இருந்த மூன்றாம் மசூது, கன்யாகுப்ஜத்தைக் (கன்னோஜ்) கைப்பற்றி, அதன் அரசராக இருந்த ‘மல்ஹி’ என்பவரைச் சிறைப்பிடித்ததாக சல்மான் என்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார். இந்த மல்ஹி, கோவிந்தசந்திரரின் தந்தையான மதனபாலராக இருக்க வேண்டும்.

தன் தந்தையைக் காப்பாற்றக் களத்தில் இறங்கிய கோவிந்தசந்திரர், கஜினியின் படைகளைப் பல இடங்களில் முறியடித்து, கன்யாகுப்ஜத்தை மீட்டார். பின்னர், இரு தரப்பும் சமாதானம் செய்துகொண்டன. மதனபாலர் மீட்கப்பட்டார். காஹடவாலக் கல்வெட்டுகளில் ‘ஹம்மீரன்’ என்ற எதிரி குறிப்பிடப்படுகிறான். இந்த ‘ஹம்மீர’ என்பது ‘அமீர்’ என்ற பட்டத்தின் சமஸ்கிருத வடிவமாகக் கருதப்படுகிறது. கஜினியின் ஆட்சியாளர்கள் தங்களை அமீர் என்று அழைத்துக்கொண்டதால், இதை வைத்து கோவிந்தசந்திரர் எதிர்த்தது மூன்றாம் மசூதைத்தான் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனாலும், இந்தப் போர் முடிவுக்கு வரவில்லை. மீண்டும் மசூத் கன்னோஜ் மீது படையெடுத்தான். கோவிந்தசந்திரரின் அரசவைக் கவிஞரான லக்ஷ்மிதாரர் எழுதிய ‘க்ரியா கல்பதரு’ நூல், கோவிந்தசந்திரர் ‘ஹம்மீரனைக்’ கொன்றதாகக் கூறுகிறது.

குமாரதேவியின் சாரநாத் கல்வெட்டு
குமாரதேவியின் சாரநாத் கல்வெட்டு

கோவிந்தசந்திரரின் ராணி குமாரதேவியின் சாரநாத் கல்வெட்டில், வாரணாசியை துருஷ்கர்களிடமிருந்து காப்பதற்காக இறைவனால் அனுப்பப்பட்டவன் என்று கோவிந்தசந்திரர் புகழப்படுகிறார். காஹடவால அரசின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று வாரணாசி. அது ஒரு அரசியல் மையம் மட்டுமல்ல; சிவபெருமானின் புனிதத் தலம், வேத, சாஸ்திரக் கல்வியின் மையம், யாத்திரை நகரம். அதனால், வாரணாசியைப் பாதுகாப்பது காஹடவாலர்களுக்கு அரசியல் கடமையாகவும், தர்மத்தின் காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் வாய்ப்பாகவும் இருந்தது.

இப்படி ஒரு புறம் அந்நிய சக்திகளிடம் அவர் போரிட்டுக்கொண்டிருந்தபோது, கிழக்கில் ஆட்சி செய்துகொண்டிருந்த பாலர்கள் கன்னோஜின் மீது படையெடுத்தனர். இளவரசராக இருந்த கோவிந்தசந்திரர், இந்தப் படையெடுப்பைத் திறம்படச் சமாளித்தார். காஹடவாலக் கல்வெட்டுகளில் ‘கௌடர்களை’ வென்றதாக வரும் குறிப்புகள் இந்த மோதலோடு தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன. சந்திரதேவரின் காலத்திலிருந்து தொடர்ந்து வந்த இந்த மோதல், ஒருவழியாக மண உறவோடு முடிவுக்கு வந்தது. கோவிந்தசந்திரர், மகத ஆட்சியாளர் தேவரக்ஷிதாவின் மகளான குமாரதேவியை மணந்துகொண்டதன் மூலம், கிழக்கில் உள்ள அரசுகளோடு சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொண்டார்.

கோவிந்தசந்திரரின் ஆட்சி

இப்படி இளவரசராக இருந்தபோது பல வெற்றிகளைக் குவித்து, நிர்வாகத் திறனை வெளிப்படுத்திய கோவிந்தசந்திரர், பொ.யு. 1114ஆம் ஆண்டு வாக்கில் ஆட்சிக்கு வந்தார். கோவிந்தசந்திரர் முழு அதிகாரத்துடன் ஆட்சிக்கு வந்தபோது, காஹடவால அரசின் வலிமை வேகமாக உயர்ந்தது. பாலி மொழியில் அமைந்த அவரது கல்வெட்டு ஒன்று, அவரை நவராஜ்யகஜங்களை, அதாவது ஒன்பது அரசுகளின் யானைகளைக் கைப்பற்றியவராகப் புகழ்கிறது. இது கொஞ்சம் அதீதமாக இருந்தாலும், பல அரசுகளை வென்று பேரரசாகக் காஹடவாலர்களை உயர்த்தியதால், கோவிந்தசந்திரர் இந்தப் பெயருக்குத் தகுதியானவரே என்பது தெளிவு.

அவரது ஆட்சியில் கன்னோஜ் அரசியல் மையமாக இருந்தது. வாரணாசி சமயம் தொடர்பான விஷயங்களின் மையமாக வளர்ந்தது. கங்கைச் சமவெளியின் பெரும்பகுதி காஹடவாலர்களின் செல்வாக்குக்குள் இருந்தது. பீகாரின் சில பகுதிகளும் அவரது ஆதிக்கத்தின் கீழ் வந்தன.

அவரது போர் வெற்றிகளில் காலசூரிகளுக்கு எதிரான வெற்றி முக்கியமானது. மத்திய இந்தியாவில் மத்திய இந்தியாவில், இன்றைய ஜபல்பூருக்கு அருகிலுள்ள திரிபுரியை மையமாகக் கொண்ட காலசூரிகள் ஒருகாலத்தில் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தனர். ஆனால், பன்னிரண்டாம் நூற்றாண்டில் அவர்களின் பலம் குன்றியபோது, கோவிந்தசந்திரர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். காலசூரி மன்னர்களை எதிர்த்து அவர் வெற்றி பெற்றதாகவும், சில பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன. கோவிந்தசந்திரரால் தோற்கடிக்கப்பட்ட காலசூரி அரசர் யஷகர்ணராக இருக்கக்கூடும். காலசூரிகளின் மேல் அடைந்த இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக, அவர்களது விருதுப் பெயரான ‘அஸ்வபதி நரபதி கஜபதி ராஜத்ரயாதிபதி’ என்பதை கோவிந்தசந்திரர் தனக்குச் சூட்டிக்கொண்டார்.

பீகாரை நோக்கிய அவரது விரிவாக்கத்துக்கும் சான்றுகள் உள்ளன. பாட்னாவுக்கு அருகில் உள்ள மனேர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொ.யு. 1126ஆம் ஆண்டைச் சேர்ந்த செப்பேடு மிகவும் முக்கியமானது. அதில், கோவிந்தசந்திரர் கங்கையில் நீராடிய பின், கிராமங்களை ஒரு பிராமணருக்குத் தானமாக வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆவணம் கிடைத்த இடமே, கோவிந்தசந்திரரின் செல்வாக்கு எவ்வளவு கிழக்கே பரவியிருந்தது என்பதை உணர்த்துகிறது.

நிர்வாகம்

கோவிந்தசந்திரரின் ஆட்சியைப் புரிந்துகொள்ள, அவருடைய செப்பேடுகள் பெருமளவில் உதவுகின்றன. அவரது காலத்தைச் சேர்ந்த ஏராளமான செப்பேடுகள் கிடைத்துள்ளன. அவை நிலதானங்கள், வரிவிலக்குகள், பெறுநர்களின் உரிமைகள், நிர்வாக எல்லைகள் போன்றவற்றை மிகத் தெளிவாகப் பதிவு செய்கின்றன. இதனால், காஹடவால அரசு ஒரு சிறந்த நிர்வாக அமைப்பைக் கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது. கிராம நில வருவாயைக் கணக்கிடும் நிர்வாகம் இருந்தது. ஆவணங்களை உருவாக்கும் அதிகாரிகள் இருந்தனர். மன்னன் வழங்கிய தானங்களைப் பல இடங்களிலும் நடைமுறைக்குக் கொண்டுவரக்கூடிய நிர்வாக அமைப்பும் இருந்தது.

மனேர் செப்பேட்டில் வரும் ‘துருஷ்க தண்டம்’ என்ற பெயரில் விதிக்கப்பட்ட வரி சுவாரஸ்யமானது. அதன் துல்லியமான பொருள் குறித்து ஆய்வாளர்கள் வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். அது கஜினி அரசர்களின் படையெடுப்புகளுடன் தொடர்புடைய வரியாக இருக்கலாம், அல்லது படைச் செலவுகளுக்கான கட்டணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எந்த விளக்கத்தை எடுத்துக்கொண்டாலும், அந்தக் காலத்தின் அரசியல் நிலைமை வரிவிதிப்பிலும் நேரடியாகப் பிரதிபலித்தது என்பதை அது காட்டுகிறது.

கோவிந்தசந்திரரின் தங்க நாணயங்களில் அமர்ந்திருக்கும் லட்சுமியின் உருவம் காணப்படுகிறது. மறுபக்கத்தில், ‘ஸ்ரீமத் கோவிந்தசந்திர தேவ’ என்ற அவரது பெயர் நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் வெளியிட்ட இந்த வகை நாணயங்கள் அக்காலத்தின் பொருளாதாரச் செயல்பாட்டுக்கும் அரசின் நாணய வெளியீட்டுத் திறனுக்கும் சான்றாக உள்ளன.

இலக்கியம்

கோவிந்தசந்திரரின் அரசவையில் பெரிய அறிஞர்களும் இருந்தனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் லக்ஷ்மிதரர். இவர் ஒரு அமைச்சராக இருந்ததோடு, சமஸ்கிருத அறிஞராகவும் விளங்கினார். அவர் எழுதிய ‘க்ருத்யகல்பதரு’ என்ற நூல், தர்மம், தானம், யாத்திரை, சமூக வழக்கங்கள், அரசாட்சி, சட்டநெறி, சமய கடமைகள் போன்ற பல விஷயங்களைத் தொகுத்து வழங்குகிறது. இடைக்கால இந்திய அரசவைகளில் அறிவுக்கும் ஆட்சிக்கும் இருந்த நெருக்கத்தை இந்த நூல் நன்றாகத் தெளிவாக்குகிறது.

கோவிந்தசந்திரரின் ஆட்சியில் நிலவிய சமயச் சூழலும் முக்கியமான ஒன்றாகும். கோவிந்தசந்திரர் ஹிந்து சமயத்தைப் பின்பற்றினார். அவரது ராணியான குமாரதேவி பௌத்த சமயத்தை ஆதரித்தவர். சாரநாத்தில் கிடைத்த அவரது கல்வெட்டு, அங்கு அவர் ஒரு பெரிய விஹாரத்தைக் கட்டியதைக் குறிப்பிடுகிறது. புத்தர் தனது முதல் உபதேசத்தை அளித்த புனித இடம் சாரநாத். அந்த இடத்தில் காஹடவால ராணி ஒரு பௌத்த விஹாரத்தைக் கட்டியிருப்பது, அந்தக் கால சமய வாழ்க்கையின் பரந்த தன்மையைக் காட்டுகிறது.

வாரணாசி, கோவிந்தசந்திரரின் ஆட்சியில் மிகப் பெரிய அரசியல் அடையாளமாக இருந்தது. அது சிவனின் நகரம் என்பதற்காக மட்டுமல்ல, ஒரு அரசன் புனித நகரங்களைக் காக்கும் தர்ம ரக்ஷகராகத் தன்னை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பாகவும் அது இருந்தது. கன்னோஜ் அவருக்கு அரச வம்ச மரபின் பெருமையைத் தந்தது என்றால், வாரணாசி அவருக்குச் சமய அங்கீகாரத்தைத் தந்தது.

விஷ்ணு ஹரி கல்வெட்டு

கோவிந்தசந்திரரின் அயோத்தி தொடர்பான விஷ்ணு ஹரி கல்வெட்டு மிகவும் முக்கியமானதாகும். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சமஸ்கிருதக் கல்வெட்டில் கோவிந்தசந்திரரின் பெயர் நேரடியாக வருகிறது. அதில் சாகேத மண்டலம், அதாவது அயோத்தி இருந்த பகுதி, அவரது அரசியல் அதிகாரத்துக்குள் இருந்தது தெளிவாகத் தெரிகிறது.

அந்தக் கல்வெட்டின்படி, கோவிந்தசந்திரரின் ஆதரவால் அனயசந்திரன் என்ற அதிகாரி சாகேத மண்டலத்தின் நிர்வாகத்தைப் பெற்றிருந்தான். அவன் விஷ்ணு ஹரிக்காக ஒரு பெரிய கற்றளியை அயோத்தியில் கட்டியதாகக் கல்வெட்டு கூறுகிறது. அந்தக் கோவில் உயரமாகவும் சிறப்பாகவும் இருந்ததாகவும், அதன் மேல் பொற்கலசம் இருந்ததாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதற்கு முன் எந்த மன்னனும் இத்தகைய கோவிலை அமைக்கவில்லை என்று அந்தக் கல்வெட்டு புகழ்கிறது.

அயோத்தி ராமர் கோவில் வழக்கில் இந்தக் கல்வெட்டு முக்கியமான சான்றாக இருந்தது. அதற்கு முக்கியமான காரணம், அந்த இடத்தில் அகழாய்வு செய்யப்பட்டபோது இந்தக் கல்வெட்டு கிடைத்ததுதான். விஷ்ணுவின் அவதாரங்களைப் புகழும் இந்தக் கல்வெட்டு, நரசிம்மர், கிருஷ்ணர், வாமனர், பத்து தலைகொண்ட இராவணனை அழித்த ராமர் ஆகிய விஷ்ணுவின் அவதாரங்களையும் குறிப்பிடுகிறது. அயோத்தியில் கிடைத்த கல்வெட்டில் ராமரை இந்த வகையில் குறிப்பிடுவது இயல்பாகவே மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

அயோத்தி நகரம் உயரமான கட்டிடங்களும், அறிஞர்களும், கோவில்களும் கொண்டதாக இக்கல்வெட்டில் புகழப்படுகிறது. சாகேத மண்டலத்தில் குளங்களும் நீர்நிலைகளும் அமைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து, பன்னிரண்டாம் நூற்றாண்டின் அயோத்தி வெறும் ஒரு சிறிய யாத்திரைத் தலம் அல்ல, ஒரு முக்கிய நகர மையமாக இருந்தது என்பதை உணர முடிகிறது.

வெளியுறவுக் கொள்கைகள்

காலசூரிகள், பாலர்கள் போன்றவர்களோடு போரிட்டாலும், மற்ற சில அரசர்களுடன் கோவிந்தசந்திரர் நட்புறவைப் பேணினார் என்று தெரிகிறது. சாந்தேல அரசர் மதனவர்மனோடு கோவிந்தசந்திரர் நட்புப் பாராட்டியதை மாவ் சாசனம் தெளிவுபடுத்துகிறது. கஷ்மீர அரசர் ஜெயசிம்மனோடு கன்யாகுப்ஜம் நட்புறவோடு இருந்தது என்பதை ராஜதரங்கிணி குறிப்பிடுகிறது. கஷ்மீரில் கூடிய அறிஞர்களின் கூட்டம் ஒன்றுக்கு, கோவிந்தசந்திரர் தன் அரசவையிலிருந்து சுஹலர் என்பவரை அனுப்பியதாகக் குறிப்புகள் கிடைக்கின்றன.

தமிழகத்துடனும் கோவிந்தசந்திரருக்கு தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. கங்கைகொண்டசோழபுரத்தில், முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில், காஹடவால அரசர்களின் பிரசஸ்தி இடம்பெற்றுள்ளது. அது காஹடவாலர்களின் செப்பேடுகளில் காணப்படும் பிரசஸ்தியை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறது.

இதன் அடிப்படையில், சோழர்களுக்கும் காஹடவாலர்களுக்கும் நட்புறவு இருந்திருக்கலாம் என்று கருதலாம். மேலும், காஹடவால மன்னன் கோவிந்தசந்திரர் கங்கைகொண்டசோழபுரம் கோவிலுக்கு ஒரு தானம் வழங்கியிருக்கலாம் என்றும் ஊகிக்க முடிகிறது. கங்கைகொண்டசோழபுரம் கல்வெட்டில் அவரது பெயர் ‘சந்திரதேவோ’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு முக்கியமான அம்சமும் இங்கு கவனிக்கத்தக்கது. முதலாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் சூரிய வழிபாடு குறிப்பிடத்தக்க வகையில் வளரத் தொடங்கியதாகத் தெரிகிறது. ஆடுதுறைக்கு அருகில் சூரியனுக்காக ஒரு கோவிலையும் முதலாம் குலோத்துங்கன் கட்டியுள்ளார். காஹடவாலர்களும் சூரிய பகவானை வழிபட்டவர்கள் என்பது இதனுடன் இணைத்துப் பார்க்கும்போது, இது மேலும் சுவாரஸ்யமாகிறது.

இப்படிப் போர்கள் மூலமும் நட்புறவுகள் மூலமும் ஒரு வலிமையான ஆட்சியைத் தந்த கோவிந்தசந்திரர், சுமார் நாற்பது ஆண்டுகள் கங்கைச் சமவெளியின் மையப்பகுதியைப் பாதுகாத்தார். போர் வெற்றிகளைத் தவிர, அவரது ஆட்சியில் நிர்வாகம் செம்மையாக இருந்தது; பெரிய கோவில்கள் கட்டப்பட்டன; அறிஞர்கள் அரசவையில் இருந்தனர். கோரி முகம்மதுவின் படையெடுப்புக்கு முன் வடஇந்தியா பலவீனமாக இருந்தது என்பது வெறும் கற்பனையே என்பதற்கு கோவிந்தசந்திரரின் ஆட்சி ஒரு சான்றாகும்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *