Skip to content
Home » பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #21 – பிரித்விராஜ் சௌகான்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #21 – பிரித்விராஜ் சௌகான்

இந்தியாவின் இடைக்கால வரலாற்றில், உண்மை வரலாறும் கொஞ்சம் அதீதமான புனைவுகளும் ஒன்றோடொன்று கலந்து சில மன்னர்களின் வாழ்க்கை வரலாறாக முன்னே நிற்கின்றன. அப்படிப்பட்ட வரலாறுகளில் பிரித்விராஜ் சௌகானின் வரலாறு முக்கியமானது. எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அவரது பெயர் கல்வெட்டுகள், சமஸ்கிருத இலக்கியங்கள், ஜைன நூல்கள், பாரசீக வரலாற்றுக் குறிப்புகள், ராஜபுத்திர வீரப்பாடல்கள் ஆகியவற்றின் வழியாகத் தொடர்ந்து நினைவுகூரப்பட்டு வருகிறது. பொதுவாக மக்களின் நினைவில் நிலைத்திருப்பது, இந்தியாவை ஆக்கிரமிப்பதற்காக வந்த முகமது கோரியைப் போர்க்களத்தில் தோற்கடித்த ராஜபுத்திர மன்னரான பிரித்விராஜின் உருவமே. ஆனால், அவரது வாழ்க்கை இரண்டு தரைன் போர்களில் மட்டும் அடங்கிவிடவில்லை. இளம் வயதிலேயே ஆட்சியை ஏற்று, பல எதிரிகளை முறியடித்து, வடஇந்தியாவின் முக்கிய அரசர்களில் ஒருவராக உயர்ந்த ஒரு மன்னனின் விரிவான வரலாறே அவரது உண்மையான வாழ்க்கை.

சஹமான வம்சம்

பிரித்விராஜ் சஹமானர் வம்சத்தைச் சேர்ந்தவர். இந்தச் சஹமானர்களே பின்னாளில் சௌகான்கள் என்று பரவலாக அறியப்பட்டனர். இவர்கள் பல நூற்றாண்டுகளாக ராஜஸ்தானின் பல பகுதிகளை ஆட்சி செய்து வந்தவர்கள். தொடக்கத்தில், அவர்களது ஆட்சிப்பகுதியின் மையமாக சாகம்பரி, இன்றைய சாம்பர் பகுதி இருந்தது. பின்னர், அஜயமேரு (இன்றைய அஜ்மீர்) முக்கிய அரசியல் மையமாக வளர்ந்தது. பிரித்விராஜின் காலத்திற்கு முன்னரே, அவரது முன்னோர்களான அர்ணோராஜா, விக்ரஹராஜா போன்றோர் சஹமானர் ஆட்சியின் பரப்பை விரிவுபடுத்தியிருந்தனர். குறிப்பாக, டெல்லியிலும் யமுனையாற்றின் சுற்றுப்பகுதிகளிலும் அவர்களுடைய செல்வாக்கு வலுவாக இருந்ததால், பிரித்விராஜ் அரியணை ஏறியபோது, அவருடைய ஆட்சிப்பகுதியின் பரப்பு குறிப்பிட்ட அளவை எட்டியிருந்தது.

ஆகவே, பிரித்விராஜை ஒரு சிறிய அஜ்மீர் மன்னனாக இருந்து திடீரென டெல்லியைக் கைப்பற்றிய வீரராக மட்டும் பார்ப்பது சரியாக இருக்காது. அவர் ஆட்சியை ஏற்றபோது, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி ஆகிய பகுதிகளை இணைக்கும் மிக முக்கியமான நிலப்பரப்பு அவரது அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. பஞ்சாபிலிருந்து இந்தியாவின் வளமான கங்கைச் சமவெளியை நோக்கிச் செல்லும் படைகளுக்கு இந்த நிலப்பரப்பு ஒரு முக்கியமான தடையாக இருந்தது. இதுவே பின்னர் முகமது கோரியுடன் ஏற்பட்ட மோதலுக்கான அடிப்படைக் காரணமாகவும் அமைந்தது.

பின்னணி

பிரித்விராஜின் தந்தை சோமேஸ்வரர்; அவரது தாய் கற்பூரதேவி. சோமேஸ்வரர் இறந்தபோது, பிரித்விராஜ் இளம் வயதினராக இருந்தார். பொயு 1177ஆம் ஆண்டில் அவர் அரியணை ஏறியதாகத் தெரிகிறது. ஆரம்பகாலத்தில் அவரது தாயாரும் மூத்த அமைச்சர்களும் ஆட்சியில் அவருக்குத் துணையாக இருந்தனர். ஆனால், மிக விரைவிலேயே பிரித்விராஜ் தானே தனியாக ஆட்சியை நடத்த முடியும் என்பதை நிரூபித்தார். அவருக்கு எதிராக எழுந்த முதல் சவால், சொந்த அரசுக்குள் எழுந்த அதிகாரப் போட்டியாகும்.

அவரது உறவினரான நாகார்ஜுனன் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, குடாபுரம் என்ற இடத்தைக் கைப்பற்றி, தனி அதிகாரத்தை நிறுவ முயன்றான். பிரித்விராஜின் படைகள் இந்தக் கிளர்ச்சியை அடக்கி, மன்னரின் அதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்தின. அதற்குப் பிறகு, அவர் பதானகர்கள் எனப்படும் ஒரு அரசியல் குழுவை எதிர்த்துப் போரிட்டார். இவர்கள் இன்றைய ஆல்வார், ரேவாரி போன்ற பகுதிகளில் இருந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஜைன இலக்கியங்கள், பொயு 1182ஆம் ஆண்டிற்கு முன்னரே பிரித்விராஜ் அவர்களைத் தோற்கடித்ததாகக் கூறுகின்றன.

பிரித்விராஜின் முக்கியமான சாதனைகளில் ஒன்று சந்தேலர்களுக்கு எதிரான படையெடுப்பு. அப்போது பண்டேல்கண்ட் பகுதியைச் சந்தேல வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர். அவர்களது மன்னன் பரமார்தி, பின்னாளில் பர்மால் என்று அறியப்பட்டவர். இந்த மோதலோடு அல்ஹா, உதல் போன்ற வீரர்களின் நாட்டுப்புறக் கதைகளும் பின்னாளில் இணைந்தன. ஆனால், பிரித்விராஜின் சந்தேலப் படையெடுப்பு வெறும் கட்டுக்கதை அல்ல. பொயு 1182ஆம் ஆண்டைச் சேர்ந்த மதன்பூர் கல்வெட்டுகள், ஜேஜாகபுக்தி எனப்படும் சந்தேல நாட்டுக்குள் அவர் படையெடுத்ததைக் குறிப்பிடுகின்றன.

அதேபோல, குஜராத்தின் ஆட்சியாளர்களுக்கும் பிரித்விராஜுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. ஆனால், இப்போர்களில் எந்த ஒரு தரப்பும் மற்றொரு சக்தியை முற்றிலுமாக அழிக்கவில்லை. இந்த அரசியல் மோதல்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டு வடஇந்தியாவின் தன்மையை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
அந்தக் காலத்தில் வடஇந்தியாவை முழுமையாக ஆட்சி செய்த அரசவம்சம் எதுவும் இல்லை. சஹமானர்கள், கஹடவாலர்கள், சந்தேலர்கள் போன்ற பல வலுவான அரசவம்சங்கள் தத்தம் பகுதிகளில் ஆட்சி செய்து, ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுக்கொண்டிருந்தன. பிரித்விராஜ் இவர்களில் முக்கியமான மன்னனாக இருந்தார்; ஆனால், வடஇந்தியாவின் ஒரே பேரரசராக அவர் இருக்கவில்லை. இந்த அரசியல் பிளவு வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அச்சமயம் வடமேற்கு எல்லையைத் தாண்டி ஒரு புதிய சக்தி முனைந்து கொண்டிருந்தது.

கோரியுடனான மோதல்

அந்த சக்தி முகமது கோரி. முயிஸ் அல்-தீன் முகமது இப்னு சாம் என்ற பெயருடைய இந்த ஆட்சியாளர், ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்த கோர் அரசவம்சத்தைச் சேர்ந்தவன். இந்திய வரலாற்றில் அவன் முகமது கோரி என்று பொதுவாக அறியப்படுகிறான். அவனுக்கு முன்பு கஜினியின் முகமது இந்தியாவுக்குள் பல முறை படையெடுத்திருந்தாலும், அவனது நோக்கம் கொள்ளையடிப்பது மட்டுமே. ஆனால், முகமது கோரியின் நோக்கம் வேறுபட்டது. வடஇந்தியாவில் நிலையான அரசியல் அதிகாரத்தை உருவாக்க வேண்டும் என்ற பேராசை அவனுக்கு இருந்தது.

பொயு 1170களிலிருந்து முகமது கோரி இந்திய எல்லைகளுக்குள் முன்னேறத் தொடங்கினான். மெதுவாகப் பஞ்சாபிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் தனது நிலையை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், 1180களின் இறுதியில் அங்கிருந்த கஜினி வம்சத்தின் எஞ்சிய ஆட்சியையும் அவன் முறியடித்தான். அதற்குப் பிறகு, பிரித்விராஜுடன் நேரடியாக மோதுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. பொயு 1190-91ஆம் ஆண்டுகளில் முகமது கோரி தபர்ஹிந்த் (இன்றைய படிண்டா) என்னும் கோட்டையைக் கைப்பற்றினான். தன்னுடைய எல்லைக்கு மிக அருகில் கோரி வந்துவிட்டதை உணர்ந்த பிரித்விராஜ், உடனடியாக ஒரு படையைத் திரட்டினார். இரு படைகளும் டெல்லியின் வடக்கே, இன்றைய ஹரியானாவில் உள்ள தரைன் என்ற இடத்தில் மோதின.

1191ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தரைன் போர், இந்திய வரலாற்றின் மிக முக்கியமான மோதல்களில் ஒன்றாகும். பிரித்விராஜின் படையில் பல துணை மன்னர்களின் படைப்பிரிவுகள் இருந்தன. டெல்லியை ஆட்சி செய்த கோவிந்தராஜா என்பவரும் இதில் முக்கியப் பங்கு வகித்ததாகப் பாரசீக ஆசிரியர்களின் குறிப்புகள் கூறுகின்றன. பின்னாளைய சில வரலாற்றுக் குறிப்புகள் இரு படைகளின் எண்ணிக்கையையும் மிகைப்படுத்திக் கூறினாலும், பிரித்விராஜிடம் ஒரு பெரிய படை இருந்ததாகத் தெரிகிறது. குதிரைப்படை, காலாட்படை, யானைப்படை ஆகியவை அவரது படையின் முக்கிய அங்கங்களாக இருந்தன.

போர் மிகவும் கடுமையாக நடைபெற்றது. ஒரு கட்டத்தில், கோவிந்தராஜாவுக்கும் முகமது கோரிக்கும் நேரடி மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் காயம் ஏற்பட்டாலும், முகமது கோரி கடுமையான காயத்துடன் போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டான். அதன் பின்னர், கோரியின் படையில் குழப்பம் ஏற்பட்டது. இறுதியில், அவர்கள் பின்வாங்கினர். இப்படியாக, 1191ஆம் ஆண்டின் முதல் தரைன் போரில் பிரித்விராஜ் சௌகான் முகமது கோரியைத் தெளிவாகத் தோற்கடித்தார்.

இந்த வெற்றி பின்னாளில் உருவான காவியக்கதைகளின் கற்பனை அல்ல. இது வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்வு. அந்தக் காலத்தில் ஆப்கானிஸ்தானைக் கடந்து பஞ்சாப் பகுதிகளில் விரைவாக முன்னேறிக்கொண்டிருந்த முகமது கோரியை, இந்திய மன்னன் ஒருவன் போர்க்களத்தில் முறியடித்தது மிகப் பெரிய சாதனை. கோரியால் கைப்பற்றப்பட்டிருந்த தபர்ஹிந்த் கோட்டையும் பின்னர் மீட்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, வடமேற்கிலிருந்து வந்த ஆபத்து முடிவுக்கு வந்துவிட்டது போலத் தோன்றியது.

ஆனால், உண்மையில் அது முடிவு அல்ல; அடுத்த பெரிய மோதலின் தொடக்கம் மட்டுமே. முகமது கோரி உயிருடன் இருந்தான். அவனது அரசியல் வலிமையும் சிதையவில்லை. மேலும், தனது தோல்வியை மறந்துவிடும் ஆட்சியாளனும் அவன் அல்ல. முதல் தரைன் போருக்குப் பிறகு பிரித்விராஜ் முகமது கோரியைப் பிடித்து, மன்னித்து விடுதலை செய்தார் என்ற கதை பரவலாக இருந்தாலும், அதற்கான வலுவான சமகால ஆதாரங்கள் இல்லை.

இரண்டாவது படையெடுப்பு

1192ஆம் ஆண்டு முகமது கோரி மீண்டும் இந்தியாவுக்கு வந்தான். இந்த முறை, முதல் தரைன் போரின் அனுபவத்தின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட தந்திரத்துடன் வந்தான். கோரியின் படையின் வலுவான அம்சம் அவனுடைய வேகமான குதிரைப்படையும், குதிரையில் இருந்தபடியே அம்பு எய்யும் வீரர்களின் திறனும் ஆகும். பிரித்விராஜின் படையோ யானைகளையும், நேரடி மோதலில் வீரமாகச் சண்டையிடும் படைவீரர்களையும் கொண்டிருந்தது. எனவே, முதல் போரில் நடந்ததுபோல நெருக்கமான நேரடி மோதலில் சிக்காமல், எதிரியைச் சோர்வடையச் செய்யும் போர்முறையை கோரி பயன்படுத்த முயன்றான்.

பின்னாளைய வரலாற்றுக் குறிப்புகளின்படி, கோரியின் படைகள் சிறிய குதிரைப்படைப் பிரிவுகளாகப் பிரிந்து, சஹமானர் படையை மீண்டும் மீண்டும் தாக்கிவிட்டு, பின்னால் சென்றன. இவ்வாறு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அம்புவீச்சும் மின்னல்வேகத் தாக்குதல்களும் பிரித்விராஜின் படையைச் சோர்வடையச் செய்தன. அதன்பின், ஒரு கடுமையான தாக்குதலை கோரி நடத்தினான். பிரித்விராஜும் பெரிய படையைத் திரட்டியிருந்தாலும், இரண்டாம் தரைன் போரின் முடிவு முதல் போருக்கு நேர்மாறாக அமைந்தது. மாற்றப்பட்ட தாக்குதல் முறையைச் சமாளிக்க முடியாமல் சஹமானர்களின் படை தோல்வியடைந்தது.

இந்தப் போரின் விளைவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பிரித்விராஜ் பிடிபட்டார். அதன் பின்னர் அவர் அதிக நாட்கள் உயிருடன் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து வேறுபட்ட செய்திகள் உலவுகின்றன. சிலர், கோரி அவரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாகவும், அதற்கு பிரித்விராஜ் இசையாததால் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால், இந்த விவரங்களை முழுமையாக உறுதிப்படுத்த முடியாது.

உறுதியாக அறியக்கூடியது என்னவென்றால், 1192ஆம் ஆண்டுடன் பிரித்விராஜின் சுதந்திரமான ஆட்சி முடிவுக்கு வந்தது. இரண்டாம் தரைன் போரின் வெற்றி, முகமது கோரியின் படைகளுக்குக் கங்கைச் சமவெளியை நோக்கிச் செல்லும் வாயிலைத் திறந்தது. அவனது முக்கியத் தளபதியான குத்புதீன் ஐபக், பின்னர் வடஇந்தியாவில் கோரியின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் பெரும் பங்கு வகித்தான். இதுவே பின்னாளில் டெல்லி சுல்தானகத்தின் உருவாக்கத்திற்கான முக்கிய அடித்தளமாக அமைந்தது.

வீர வரலாற்றைப் பற்றிய கதைகள்

வரலாற்றில் பிரித்விராஜின் வாழ்க்கை இங்கே முடிந்தாலும், மக்களின் நினைவில் அவரது வாழ்க்கை அதன்பிறகு பெரிதாக வளரத் தொடங்கியது. காலப்போக்கில், அவரைச் சுற்றிப் பல வீரக்கதைகள் உருவாகின. அவற்றில் மிகவும் பிரபலமானது ‘பிரித்விராஜ் ராசோ’ என்ற நூல். இதில் பிரித்விராஜின் வீரச் செயல்களோடு காதல், கௌரவம், பழிவாங்குதல் போன்ற அம்சங்களும் கலந்து, அவரது வாழ்க்கையை ஒரு பெரிய காவியமாக மாற்றிவிட்டன.

அவற்றுள் மிகவும் பிரபலமானது சம்யுக்தாவைப் பற்றிய காதல் கதை. அவள் கஹடவால மன்னன் ஜயச்சந்திரனின் மகளாகச் சொல்லப்படுகிறாள். பிரித்விராஜை நேசித்ததால், அவளுக்காக நடத்தப்பட்ட சுயம்வரத்தில் பிரித்விராஜ் அழைக்கப்படாதபோதும், வாயிலில் வைக்கப்பட்டிருந்த அவரது சிலைக்கு மாலை அணிவித்ததாகக் கதை சொல்கிறது. பின்னர், பிரித்விராஜ் வந்து அவளை அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது இந்தியாவின் மிகப் பிரபலமான காதல் கதைகளில் ஒன்றாக இருந்தாலும், இதற்கு உறுதியான சமகால வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை.

அதேபோல, பிரித்விராஜின் இறுதிக்காலத்தைப் பற்றிய இன்னொரு வீரக்கதையும் பின்னாளில் பெரும் புகழ் பெற்றது. இரண்டாம் தரைன் போருக்குப் பிறகு அவர் கஜினிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கண்கள் குருடாக்கப்பட்டார் என்றும், அங்கு சந்த் பர்தாய் என்ற கவிஞர் அவருடன் சேர்ந்தார் என்றும் கூறப்படுகிறது. பிரித்விராஜ் ஒலியை வைத்து அம்பு எய்யக்கூடியவர் என்பதால், முகமது கோரி அமர்ந்திருந்த இடத்தைப் பாடல் வடிவில் சந்த் பர்தாய் மறைமுகமாகக் கூற, அதன்படி பிரித்விராஜ் அம்பு எய்தி கோரியைக் கொன்றார் என்பதே அந்தக் கதை. மிகவும் கவர்ச்சிகரமான இந்தக் கதை வரலாற்று உண்மையல்ல. ஏனென்றால், முகமது கோரி பிரித்விராஜின் மரணத்திற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1206ஆம் ஆண்டில்தான் கொல்லப்பட்டான்.

இதனால், ‘பிரித்விராஜ் ராசோ’வை முழுமையான வாழ்க்கை வரலாறு என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று கிடைக்கும் அதன் கையெழுத்துப் பிரதிகள், பிரித்விராஜின் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிந்தையவை. மேலும், இந்நூல் பல பதிப்புகளாகவும், மாறுபட்ட வடிவங்களிலும் கிடைக்கிறது. பின்னாளைய ராஜபுத்திர சமூகம் பிரித்விராஜை எவ்வாறு கொண்டாடியது என்பதைக் காட்டும் முக்கியமான கலாச்சார ஆதாரமாக இது விளங்குகிறது. ஆனால், பிரித்விராஜைப் பற்றி அறிய, சமகால ஆதாரங்களை முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம்.

அவற்றில் மிகவும் முக்கியமானது ‘பிரித்விராஜ விஜயம்’. ஜயானகன் என்ற சமஸ்கிருதப் புலவர் எழுதிய இந்த மகாகாவியம், பொயு 1191-92 காலப்பகுதியில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில் பிரித்விராஜ் முகமது கோரியை வென்ற செய்தி பெருமையாகப் பேசப்படுகிறது; ஆனால், இரண்டாம் தரைன் போரின் தோல்வி எங்கும் குறிப்பிடப்படவில்லை. இதனால், இந்த நூல் முதல் தரைன் போருக்குப் பிறகும், இரண்டாவது போருக்கு முன்பும் எழுதப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

தரைன் போர்களின் புகழ், பிரித்விராஜின் மற்ற சாதனைகளைச் சில நேரங்களில் மறைத்துவிடுகிறது. அவர் சுமார் பதினைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். இளம் வயதில் அரியணை ஏறியபோதும், உள்நாட்டுக் கிளர்ச்சியை அடக்கி, பதானகர்களைத் தோற்கடித்து, சந்தேல நாட்டிற்குள் படையெடுத்து, தனது முன்னோர்களிடமிருந்து பெற்ற சஹமானர் அரசை நிலைநிறுத்தினார். அவரது ஆட்சியில் அஜ்மீர் வெறும் இராணுவத் தலைநகராக மட்டுமல்லாமல், சமஸ்கிருத இலக்கியம், அரசவைக் கலாச்சாரம் மற்றும் அறிவாற்றலின் மையமாகவும் இருந்தது. பிரித்விராஜ விஜயம் போன்ற நூல்களின் உருவாக்கமே அவரது அரசவையின் இந்தப் பண்பாட்டு சூழலை வெளிப்படுத்துகிறது.

பிரித்விராஜை இரண்டாம் தரைன் போரின் தோல்வியைக் கொண்டு மட்டும் மதிப்பிடுவது நியாயமல்ல. அதேபோல, அவரை ‘இந்தியாவின் கடைசி ஹிந்துப் பேரரசர்’ என்று கூறுவதும் சரியான வரலாற்றுப் பார்வை அல்ல. ஏனெனில், அவருக்குப் பிறகும் இந்தியாவின் பல பகுதிகளில் சக்திவாய்ந்த ஹிந்து அரசுகள் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து இருந்தன.

ஆகவே, பிரித்விராஜின் பெருமையை உயர்த்துவதற்கு வரலாற்றுக்கு அப்பாற்பட்ட பட்டங்கள் தேவையில்லை. ஒரு பெரிய அரசியல் தோல்விக்குப் பிறகும் பிரித்விராஜின் புகழ் அழியவில்லை. மாறாக, அவரது அரசு மறைந்தபின், மன்னன் மக்கள் நினைவில் இன்னும் பெரிதாக வளர்ந்தார். சமஸ்கிருதப் புலவர்கள் அவரைப் பாடியிருக்கின்றனர். ஜைன ஆசிரியர்கள் அவரைப் பற்றிப் பதிவு செய்திருக்கின்றனர். பாரசீக வரலாற்றாசிரியர்கள் அவரது போர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். ராஜபுத்திரப் புலவர்கள் அவரை வீரத்தின் உருவகமாக மாற்றினர். இவ்வாறு, வரலாற்று நிகழ்வுகள், காதல், வீரச்செயல், தியாகம், எதிர்ப்பின் நினைவுகள் ஆகியவற்றோடு கலந்து, சஹமான மன்னர் பிரித்விராஜ் ஒரு முக்கியமான வரலாற்று நாயகராக நினைவுகூரப்படுகிறார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *