Skip to content
Home » மக்கள் அரசியல் #21 – சந்திரசேகர்: ஆட்சிக் கவிழ்ப்பு

மக்கள் அரசியல் #21 – சந்திரசேகர்: ஆட்சிக் கவிழ்ப்பு

எமர்ஜென்சியை அமல்படுத்தி, தன்னைச் சிறையில் தள்ளிய இந்திராவைப் பழிவாங்க வேண்டுமென்பதில் சரண்சிங் ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக இருந்தார். எமர்ஜென்சி காலத்தில் நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, ‘ஷா ஆணையம்’ அமைக்கப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கை அவருக்குப் போதுமானதாக இல்லை. ஷா ஆணையத்தின் முன்பு ஆஜரான காங்கிரஸ் தலைவர்கள் பலர், இந்திராவே அனைத்திற்கும் காரணமென்று சாட்சியம் கூறினர். நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜி, வசந்த் சாத்தே போன்ற ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் அப்போதும் இந்திராவிற்கு ஆதரவாக நின்றனர். தேர்தல் தோல்வியின் எதிரொலியாக, கட்சி நடவடிக்கைகளில் இருந்து சற்று காலத்திற்கு இந்திரா விலகியிருந்தார். எனவே, கட்சித் தலைவராக பிரம்மானந்த ரெட்டி என்பவரும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஒய்.பி. சவானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திரா தனிமைப்பட்டார். 12, வில்லிங்டன் கிரசென்ட் என்கிற விலாசமுடைய வீட்டில் குடிபுகுந்த இந்திரா, வெளியில் வருவதைக்கூடத் தவிர்த்தார்.

ஜனதா கட்சியின் பகையைச் சம்பாதிக்க விரும்பாத காங்கிரஸ் தலைவர்கள் பலர், இந்திராவை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினர். ஜனதா கட்சியை எதிர்ப்பதில் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்தனர். கட்சி விவகாரங்களிலோ அல்லது ஆளுங்கட்சியை எதிர்க்கும் விவகாரங்களிலோ இந்திராவைக் கலந்தாலோசிப்பதைத் தவிர்த்தனர். குடியரசுத் தலைவர் வேட்பாளராக நீலம் சஞ்சீவ ரெட்டியை ஜனதா கட்சி அறிவிக்க, மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டது காங்கிரஸ். போட்டியே இல்லாமல் குடியரசுத் தலைவரானார் சஞ்சீவ ரெட்டி.

காங்கிரஸ் தலைவர்களின் பதுங்கலை ரசித்த ஜனதா அரசாங்கம், இந்திரா மீது பாயத் தொடங்கியது. இந்திராவின் குற்றங்கள் குறித்த விசாரணை, நியூரம்பெர்க் தீர்ப்பாய விசாரணையைப்போல் செய்யப்படவேண்டும் என்று உள்துறை அமைச்சர் சரண்சிங் கூறினார். (இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நாஜி ஜெர்மனியின் தொடர் அரசியல் கொலைகள், ராணுவ அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம்தான் ‘நியூரம்பெர்க் விசாரணை’ என அழைக்கப்படுகிறது). அவசரநிலை அமலில் இருந்தபோது, காவலில் இருந்த பல்வேறு அரசியல் தலைவர்களைச் சுட்டுத் தள்ளும் மறைமுக எண்ணம் அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்திற்கு இருந்ததாகவும் அவர் மக்களவையில் கூறினார். எவ்வித ஆதாரமும் இல்லாமல் இந்திரா காந்தியின் செயல்பாடுகள் மீது பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டன. 1977 மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த இந்திரா, இனிமேல் மீண்டு வரவே முடியாது என்று பலராலும் ஆரூடம் கூறப்பட்டது.

ஒரு கட்டத்தில் பொறுத்தது போதும் என்ற நிலைக்கு வந்த இந்திரா, ஜூலை 1977இல் வெளியில் வரத் தொடங்கினார். ஆச்சார்ய கிருபலானியை சந்தித்தார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியையும் (ஜேகே) சந்தித்தார். பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினார். அவரைப் பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இந்திராவிற்கு ஆதரவுக் குரல் எழுப்பினர். ஜனதா அரசாங்கம் கடுப்பாகத் தொடங்கியது. பீகாரின் நாலந்தா மாவட்டத்திலுள்ள பெல்ச்சி என்ற சிற்றூரில், 11 தலித் சமூகத்தினர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த விஷயத்தில் ஜனதா அரசாங்கத்தைத் திணறடிக்கத் தவறியது காங்கிரஸ். செய்தியைக் கேள்விப்பட்ட இந்திரா, ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். பெல்ச்சிக்கு உடனே கிளம்பிச் சென்றார். சாலை வசதி இல்லாத வழிகளிலும், சேறும் சகதியும் நிறைந்த பாதைகளிலும், நடந்து சென்றும், யானை மீது சவாரி செய்தும் அந்தக் கிராமத்தை அடைந்தார். மக்களைச் சந்தித்து அனுதாபம் தெரிவித்தார். பொதுமக்கள் இந்திராவை ஆதரிக்கத் தொடங்கினர்.

இந்திராவிற்குப் பெருகிவரும் மக்கள் ஆதரவைக் கண்டு கொதிப்படைந்தது ஜனதா அரசாங்கம். குறிப்பாக, சரண் சிங் மிகவும் வெறுப்புற்றார். சரண்சிங் வற்புறுத்தலின் பேரில், எவரும் எதிர்பாராவிதமாக அக்டோபர் 1977இல் இந்திரா கைது செய்யப்பட்டார். உப்புச் சப்பில்லாத காரணத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஹரியானாவில் உள்ள பட்கல் ஏரி விருந்தினர் மாளிகையில் இந்திராவைச் சிறைவைக்க எண்ணியது காவல்துறை. இதைத் தெரிந்துகொண்ட இந்திரா, புது தில்லியை விட்டு வெளியேற மறுத்தார். காவல்துறை வாகனத்தை விட்டுக் கீழிறங்கி, ஒரு சிறிய பாலத்தில் அமர்ந்துவிட்டார். இறுதியாகப் புது தில்லிக்கே அழைத்து வரப்பட்டு, மறுநாள் காலையில் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்ததற்கு வலுவான காரணங்கள் இல்லையென்று கூறி, இந்திராவை விடுவித்தார் நீதிபதி.

பொதுமக்களின் மத்தியில் இந்திராவின் கைது விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘ஒரு பெண்ணை இப்படித் தொல்லை செய்கின்றனரே!’ என்று அனுதாபம் உருவானது. ஜனதா கட்சியின் திறமையின்மை மீது நக்கல் பேச்சுகள் எழும்பின. ‘பல நூறு தலைவர்களை 19 மாதங்கள் சிறையில் அடைத்த ஒரு பெண்மணியை, 19 மணிநேரம்கூட அதே தலைவர்களால் சிறையில் அடைக்க முடியவில்லை!’ என்று ஜனதா அரசாங்கம் விமர்சிக்கப்பட்டது.

இந்திரா கைது செய்யப்பட்டது தவறென்று சந்திரசேகர் வெளிப்படையாகக் கூறினார். ‘இந்திரா செய்த தவறுகளுக்கான தண்டனையைத் தேர்தல் முடிவுகளின் வாயிலாக மக்கள் ஏற்கெனவே அளித்துவிட்டனர்; எனவே, இந்திராவைப் பழிவாங்குவதை விடுத்து, நல்லாட்சியை அளித்தாலே போதுமானது; பொதுமக்கள் தாமாக முன்வந்து ஜனதா கட்சியை விரும்புவார்கள்’ என்பது அவருடைய கருத்து. ஷா ஆணையம் அமைக்கப்பட்டதைக்கூட அவர் விரும்பவில்லை என்றாலும், அவருடைய கருத்தை எவரும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றவுடன், இந்திராவை சந்தித்த சந்திரசேகர், அவசரநிலை கொண்டு வரப்பட்டதற்கான காரணத்தைக் கேட்டார். தான் தவறாக வழிநடத்தப்பட்டதாக இந்திரா அவரிடம் கூறினார். ‘சஞ்சய் காந்திக்கோ, அல்லது தன்னுடைய பேரன், பேத்திக்கோ இன்னல் ஏதேனும் நேருமோ?’ என்று வருத்தப்பட்டுக் கலங்கிய இந்திராவைக் கண்டதும் சந்திரசேகருக்கு ஒருவேளை மனம் இளகியிருக்கலாம்.

என்ன நடந்தாலும், எவர் கூறினாலும் இந்திராவைப் பழிவாங்கும் எண்ணத்தைச் சரண்சிங் கைவிடவே இல்லை. ஆட்சியில் பங்கு வகித்தவாறே, ஆட்சியைக் கவிழ்ப்பதிலும் அவர் முனைப்பு காட்டினார். அவரும், அவருடைய சகாவான ராஜ் நாராயணும் (இந்திராவைத் தோற்கடித்திருந்த அவர், மத்திய சுகாதார அமைச்சராக்கப்பட்டிருந்தார்) மொரார்ஜியின் ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். ‘இந்திராவைச் சட்டத்தின் முன் நிறுத்திடவும் அஞ்சுகின்ற ஆண்மையற்ற கூட்டம்’ என்பன போன்ற கடுஞ்சொற்கள் சரண்சிங்கால் பிரயோகிக்கப்பட்டன. இருவரையும் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றினார் மொரார்ஜி. நடப்பது எதுவுமே நன்றாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட சந்திரசேகர், அரசாங்கம் செயல்படுகின்ற விதத்தை விமர்சிக்கத் தொடங்கினார். அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதாகவும், சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முனைப்பின்றிச் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

சரண்சிங்கை வெளியேற்றிய முடிவின் விளைவால், கூடிய விரைவில் ஆட்சி கவிழும் என்பதை உணர்ந்த சந்திரசேகர், ஆட்சிக் கவிழ்ப்பைத் தவிர்க்க விரும்பினார். மொரார்ஜியைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். ஒருவழியாக மொரார்ஜி சமாதானமானார். சரண்சிங்குக்கும், பாபு ஜெகஜீவன்ராமுக்கும் துணைப் பிரதமர் பதவி அளிக்கப்பட்டது. சரண்சிங்குக்கு நிதியமைச்சர் பொறுப்பும் தரப்பட்டது. ஆனால், அமைச்சரவையில் ராஜ் நாராயண் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. விளைவு, சஞ்சய் காந்தியுடன் கரம் கோர்த்த ராஜ் நாராயண், ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.

தன்னுடைய கருத்துகளைக் காதுகொடுத்துக் கேட்காமல், சுயநலமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஜனதா கட்சித் தலைவர்களைக் கண்டு சந்திரசேகர் சலிப்படைந்தார். உடல்நிலை சரியில்லாத ஜேபிக்குத் துணையாகப் பம்பாயில் சில நாட்கள் தங்கினார். ஜேபி உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாக மார்ச் 1979இல் ஒரு வதந்தி பரவியது. உண்மை நிலவரம் என்னவென்பதை அறிந்துகொள்ளாமல், பிரதமர், மக்களவைத் தலைவர் உட்படப் பலரும் நாடாளுமன்றத்தில் இரங்கல் செய்தி வாசித்தனர். ஜேபிக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. ஜேபி அனுமதிக்கப்பட்டிருந்த பம்பாய் ஜஸ்லோக் மருத்துவமனையில் பெருங்கூட்டம் திரண்டது. உண்மையை ஒலிபெருக்கியில் எடுத்துக் கூறி, அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் அனைவரையும் கலைந்துபோகச் செய்தார் சந்திரசேகர். ஜனதா அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்த விதத்தைப் பிரதிபலிக்கும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்வை எண்ணிச் சந்திரசேகர் வெறுப்படைந்தார். மொரார்ஜியின் ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்பது அவருக்குப் புரிந்துபோனது.

ராஜ் நாராயண்-சஞ்சய் காந்தி இணை, மொரார்ஜி தேசாயின் ஆட்சியைக் கவிழ்ப்பதில் முனைப்புடன் செயல்பட்டது. ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மொரார்ஜியின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். நேரம் பார்த்து, மொரார்ஜியின் ஆட்சிக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கொண்டுவந்தது. நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த மொரார்ஜி, ஜூலை 1979இல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். உட்கட்சிப் பூசல்களின் விளைவாலேயே, மொரார்ஜியின் ஆட்சி கவிழ்ந்தது. கட்சித் தலைவர் என்கிற முறையில், கட்சியின் ஒற்றுமைக்காகச் சந்திரசேகர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகப் போயின. காங்கிரசுக்கு மாற்றான கட்சி என்கிற தன்னுடைய ‘ஜனதா முயற்சி’ தோல்வியுற்றதை எண்ணி வருத்தப்பட்டவாறே, அக்டோபர் 1979இல் ஜேபி காலமானார்.

பிரதமராக மொரார்ஜியின் பங்களிப்பை இந்த இடத்தில் காண்பது சற்று அவசியமாகிறது. ஆட்சியில் இருந்தபோது மொரார்ஜி தேசாய் எடுத்த முக்கியமான முடிவுகள் எனச் சிலவற்றைக் கூறலாம். அவசரநிலை அமலில் இருந்த காலத்தில் இந்திரா தனக்குச் சாதகமாகக் கொண்டு வந்திருந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் பலவும் மொரார்ஜியால் நீக்கப்பட்டன. மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் பழையபடி ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டன. நீதித்துறையின் அதிகாரங்களைக் குறைத்திருந்த விதிகள் ரத்து செய்யப்பட்டன. பிரதமரின் தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் நீதிமன்றத்தின் அதிகாரம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. அவசரநிலையைப் பிரகடனம் செய்வதற்கான விதிகள் மேலும் கடினமாக்கப்பட்டன. குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான நிபந்தனைகள் இறுக்கமாக்கப்பட்டன. பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை ஆராய்ந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை அரசாங்கத்திற்குப் பரிந்துரைப்பதற்காக, முன்னாள் பீகார் முதல்வர் பிண்டேஷ்வரி பிரசாத் மண்டல் என்பவர் தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. ‘மண்டல் ஆணையம்’ என்றழைக்கப்பட்ட இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 1980இல் அளித்தது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளைத்தான் 1990இல் வி.பி. சிங் அமல்படுத்தினார். ஒருவேளை மொரார்ஜி ஐந்தாண்டுகள் பிரதமராகத் தொடர்ந்திருந்தால், மேலும் பங்களிப்பைத் தந்திருக்கக்கூடும். உட்கட்சிப் பூசல்களின் விளைவால் இரண்டே கால் வருடங்களில் மொரார்ஜி ஆட்சியை இழந்திருந்தார்.

மொரார்ஜியின் ஆட்சி கவிழ்ந்த கையோடு, ஜனதா கட்சியை விட்டுச் சரண்சிங் வெளியேறினார். ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஜெகஜீவன்ராம் நியமிக்கப்பட்டார். ஆட்சியமைக்க ஜெகஜீவன்ராம் உரிமை கோரினார். அதே சமயத்தில், தன்னுடைய பிரதமர் கனவை நனவாக்கிக்கொள்ள விரும்பிய சரண்சிங், இந்திராவிடம் ஆதரவு கேட்டார். அதாவது, எவரைப் பழிவாங்கிட விரும்பினாரோ, அவரின் ஆதரவையே சரண்சிங் கேட்டார். அரசியல் விளையாட்டுகளில் கைதேர்ந்தவராகியிருந்த இந்திரா, ஜனதா கட்சி ஆட்சியில் தொடரக்கூடாது என்பதற்காகவே சரண்சிங்குக்கு ஆதரவளித்தார். ஆட்சியமைக்க ஒரே சமயத்தில் ஜெகஜீவன்ராம் மற்றும் சரண்சிங் இருவரும் உரிமை கோரினர். ஜெகஜீவன்ராம் தரப்பைப் பரிசீலித்துப் பார்க்காமல், சரண்சிங்கை ஆட்சியமைக்குமாறு குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அழைப்பு விடுத்தார். இந்திராவின் தயவால் சரண்சிங் பிரதமரானார். சில நாட்களிலேயே, தன்னுடைய ஆதரவை வாபஸ் பெற்றார் இந்திரா. ராஜினாமா செய்த சரண்சிங், மக்களவையைக் கலைக்குமாறு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தார். மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெகஜீவன்ராம். இந்த முறையும் ஜெகஜீவன்ராமின் கோரிக்கையைப் புறக்கணித்த குடியரசுத் தலைவர், மக்களவையைக் கலைத்தார். 1980இல் மக்களவைக்குத் தேர்தல் வந்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *