இந்திய வரலாற்று நாயகர்கள் தொடரில் இந்திய நாட்டில் ஆட்சி செய்த அரசர்களையே பார்த்து வருகிறோம் என்றாலும், பல அரசிகளும் நாயகர்கள் என்ற சிறப்புக்குத் தகுதியானவர்களே. அவர்களில் ஒருவர்தான் காகதீய அரசி ருத்ரமாதேவி.
காகதீய வம்சம்
மேலைச்சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக வட ஆந்திர–தெலங்கானா பகுதியை ஆட்சி செய்தவர்கள் காகதீயர்கள். ஒருகல்லு என்று அப்போது அழைக்கப்பட்ட வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் அந்த வம்சத்தினர். பொயு 800ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தாலும், முதலாம் பிரதாபருத்திரனின் காலத்தில் (பொயு 1163) அவர்கள் தங்களைச் சுயாட்சி பெற்ற அரசாகப் பிரகடனம் செய்துகொண்டனர். ஆனால், அவர்களைப் போலவே மேலைச்சாளுக்கியர்களின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக்கொண்ட தேவகிரி யாதவர்களால் பிரதாபருத்திரனின் தம்பியான மகாதேவன் கொல்லப்பட்டார். மகாதேவனின் மகனான கணபதிதேவன் யாதவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில் காகதீய அரசு பல பிரச்சனைகளையும் உள்நாட்டுக் குழப்பங்களையும் சந்தித்தது.
கணபதி தேவன்
காகதீயர்களுடன் சமாதானமாகப் போக விரும்பிய யாதவ அரசன் ஜயித்ரபாலனால் ஒரு கட்டத்தில் கணபதி விடுதலை செய்யப்பட்டார். அதன்பின், தனது அரசைச் சீர்திருத்துவதில் கவனம் செலுத்திய கணபதி, வேலநாட்டை ஆண்ட தெலுங்குச் சோழர்களைத் தோற்கடித்து காகதீயர்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தினார். அதன்பின் தெற்கு நோக்கிச் சென்ற கணபதி, நெல்லூரை ஆட்சி செய்த தெலுங்குச் சோழர்களின் இன்னொரு பிரிவினரைத் தோற்கடித்து, காஞ்சிபுரம் வரை தனது படைகளைக் கொண்டு சென்றதாக அவரது சாசனங்கள் கூறுகின்றன. அதை அடுத்து, கலிங்க நாட்டின் மீது படையெடுத்து, அதன் ஒரு பகுதியையும் காகதீயர்களோடு இணைத்துக்கொண்டார் கணபதி. இப்படிச் சென்ற இடங்களெல்லாம் வெற்றி பெற்ற கணபதியின் வெற்றிமுகத்தைப் பாண்டிய அரசன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் தடுத்து நிறுத்தினார். தனது திக்விஜயத்தின்போது பாண்டியப் படைகளை நெல்லூர் வரை கொண்டு சென்று, அங்கு சுந்தரபாண்டியன் விஜயாபிஷேகம் செய்துகொண்டதைச் சென்ற பகுதியில் பார்த்தோம்.
இருப்பினும், ஒரு கணிசமான ஆட்சிப் பகுதியைத் தன் கைவசம் வைத்திருந்த கணபதிக்கு ஆண் வாரிசு இல்லாததால், தனது மகளான ருத்ரம்மாவை அவர் ஆண் போலவே வளர்த்து, பலவிதமான போர்ப் பயிற்சிகள் அளித்து வந்தார். ருத்ரம்மாவுக்கு வேங்கியின் இளவரசனைத் திருமணமும் செய்து வைத்தார். பாண்டியர்களிடம் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, தனது மகளான ருத்ரம்மாவிற்குப் பட்டம் கட்டி வைத்து ஓய்வு எடுத்துக்கொண்டார் கணபதி.
ருத்ரமாதேவியின் ஆட்சி
கணபதிக்கும் அவரது மனைவியான சோமாம்பாவிற்கும் மகளாகப் பிறந்த ருத்ரம்பா, ருத்ரமாதேவி என்ற பட்டத்துடன் பொயு 1260ஆம் ஆண்டு ஆட்சி செய்யத் தொடங்கினார். சில குறிப்புகள் அவர் ஆண் வேடம் பூண்டு ருத்ரதேவ மகாராஜா என்ற பெயருடன் ஆட்சி செய்தார் என்று கூறுகின்றன. தந்தையுடன் சிறிது காலம் ஆட்சி செய்தாலும், பொயு 1263ஆம் ஆண்டு முழுப்பொறுப்பையும் ஏற்றார் அவர். ருத்ரமாதேவி பதவியேற்றபோது, காகதீய அரசு பல சோதனைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. தெற்குப் பகுதிகள் எல்லாம் பாண்டியர்கள் கைக்குச் சென்றிருந்தன. கலிங்கத்தின் பகுதிகளை கஜபதி அரசர் மீட்டிருந்தார். மேற்கிலோ, யாதவர்கள் மீண்டும் பிரச்சனை கொடுக்கத் தொடங்கியிருந்தனர்.
இதெல்லாம் போதாதென்று, உள்நாட்டிலும் அவருக்கு எதிராகக் கலகங்கள் எழுந்தன. கணபதிக்கு இன்னொரு ராணியின் மூலம் பிறந்த ஹரிஹரன், முராரிதேவன் ஆகிய இருவரும் ருத்ரமாதேவியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ததாக பிரதாப சரிதம் என்ற நூல் கூறுகிறது. ஆனால், இது வெறும் கட்டுக்கதை என்பது சிலரின் கருத்து. இருந்தாலும், அவரது ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி நடந்தது என்னவோ உண்மை. அந்தக் கிளர்ச்சியை ப்ரசாதித்யர் என்பவரது உதவியுடன் ருத்ரமாதேவி அடக்கினார் என்பது, ப்ரசாதித்யருக்கு அளிக்கப்பட்ட ‘காகதீய ராஜ்ய ஸ்தாபன ஆச்சார்யா’ என்ற பட்டத்தினால் தெரியவருகிறது.
கஜபதியுடன் போர்
உள்நாட்டுக் கலகத்தை ஒருவழியாக ருத்ரமாதேவி அடக்குவதற்குள், கலிங்க நாட்டை ஆட்சி செய்த கஜபதி அரசர் ஆந்திராவுக்குள் ஊடுருவியிருந்தார். வேங்கி நாடு வரை வந்த அவரது படை பல இடங்களைக் கைப்பற்றியது என்பதற்கு அங்கெல்லாம் இருக்கும் கஜபதியின் கல்வெட்டுகள் ஒரு சான்றாகும். இதன் காரணமாக, ருத்ரமாதேவி கஜபதியோடு மோதவேண்டியதாயிற்று. தனது சகோதரர்களான ப்ரோலி நாயக்கர், பொடி நாயக்கர் என்பவர்கள் தலைமையில் வேங்கியை நோக்கி ஒரு படையை அனுப்பினார் ருத்ரமாதேவி. அவர்கள் கஜபதியைத் தோற்கடித்து மீண்டும் கலிங்கத்திற்குத் துரத்தினர். திராக்ஷாராமம் கோவிலில் உள்ள பொயு 1278ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, அங்கே ஆட்சி செய்த சிற்றரசர் தன்னை காகதீய ருத்ரதேவ மகாராஜாவின் சேவகர் என்று குறிப்பிட்டுக்கொண்டார் என்பதைத் தெரிவிக்கிறது. ருத்ரதேவ மகாராஜா என்று ஆண் பெயரிலும் ருத்ரமாதேவி அழைக்கப்பட்டதால், அந்தப் பகுதிகளையெல்லாம் கஜபதியிடமிருந்து அவர் மீட்டெடுத்துவிட்டார் என்பது தெளிவாகிறது.
விக்கிரமபாண்டியன்
அதன்பின் தெற்கே கவனம் செலுத்திய ருத்ரமாதேவி, பாண்டியர்களிடம் இழந்த பகுதிகளையெல்லாம் தனது ஆட்சிக்குள் மீண்டும் கொண்டுவர முயன்றார். அப்போது பாண்டியர்களின் வடதிசைத் தண்டநாயகராக இருந்தவர் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் தம்பியான புவனேகவீரன் விக்கிரமபாண்டியன். பெண் என்ற காரணத்தால் ருத்ரமாதேவியோடு விக்கிரமபாண்டியன் போரிட விரும்பவில்லை என்பதை சிதம்பரத்தில் உள்ள இரு கல்வெட்டுப் பாடல்கள் அழகுடன் பதிவு செய்திருக்கின்றன.
புயலும் தருவும் பொருகைப் புவனேக வீரபுனல்
வயலும் தரளம்தரும் கொற்கைக் காவல வாரணப்போர்
முயலும் கணபதி மொய்த்தசெஞ் சோதி முகத்திரண்டு
கயலுண்டு எனும் அதுவோ முனிவறிய காரணமே
வெங்கண் மதயானை விக்கிரம பாண்டியனே
பொங்கி வடதிசையிற் போகாதே — அங்கிருப்பாள்
பெண்ணென்றும் மீண்ட பெருமாளே பேரிசையாழ்ப்
பண்ணொன்றும் வேய்வாய் பகை
(விக்கிரம பாண்டியனே! காகதீயர்களை எதிர்த்து வடதிசை நோக்கிப் படையெடுக்காதே. அங்கே ஒரு பெண் நிற்கிறாள்; ஆண் வேடம் பூண்டு போர்க்களத்துக்கு வந்தாலும், அவள் கணபதியின் மகளே. மீனைப் போன்ற அழகிய அவளது இரு கண்களையும் நீ ஒருமுறை கண்டுவிட்டால், அவை உன் பாண்டியர் சின்னமான இரட்டை மீனை உனக்கு நினைவூட்டும். அதன் பிறகு அவளுடன் உன்னால் போர் செய்ய இயலாது.)
காரணம் எப்படியிருந்தாலும், பாண்டியர்களிடம் இழந்த ஆந்திரத்தின் தெற்குப் பகுதிகளை மீண்டும் தனது அதிகாரத்திற்குள் ருத்ரமாதேவி கொண்டுவந்தார்.
இதற்கிடையில், கணபதி தேவனிடம் நட்பாக இருந்த யாதவர்கள், வளர்ந்து வரும் காகதீயர்களின் வலிமையைக் கண்டு அச்சமடைந்து அவர்களை நோக்கிப் படையெடுத்தனர். யாதவ அரசன் மகாதேவனின் சாசனங்கள், அவர் காகதீயர்களைத் தோற்கடித்ததாகவும், ருத்ரமாதேவி பெண் என்பதால் அவரைக் கொல்லாமல் விட்டதாகவும் தெரிவிக்கின்றன. ஆனால், ருத்ரமாதேவியின் கல்வெட்டுகள் அவர் யாதவர்களைத் தோற்கடித்தது மட்டுமல்லாமல், அவர்களது ஆட்சிப் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றிக்கொண்டதாகவும் கூறுகின்றன.
நிர்வாகம்
இப்படி தொடர்ந்து போர்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், தனது நிர்வாகத்தையும் செம்மையாக நடத்தினார் ருத்ரமாதேவி. அவருடைய காலத்தில் வாரங்கல் நகரம் காகதீயர்களின் அரசியல் வலிமையையும், அவர்களின் கட்டடக்கலை நுணுக்கத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும் முக்கியமான மையமாக விளங்கியது. கணபதிதேவர் அங்கு கட்டிய பிரம்மாண்டமான கோட்டை அமைப்புகளை ருத்ரமாதேவி மேலும் விரிவுபடுத்தி வலுப்படுத்தினார். காலப்போக்கில், மண் மதில்கள், கல் மதில்கள், வலுவான நுழைவாயில்கள், அகழிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல அடுக்குகளைக் கொண்ட சிறப்பான பாதுகாப்பு அமைப்பாக வாரங்கல் கோட்டை உருவானது.
மேலும், வாரங்கல் வெறும் ராணுவக் கோட்டையாக மட்டும் விளங்கவில்லை. அது காகதீய அரசின் நிர்வாக மையமாகவும், சமயப் பணிகளுக்கு ஆதரவளித்த முக்கிய இடமாகவும், கைவினைத் தொழில்கள், வணிகச் செயல்பாடுகள் போன்றவை செழித்த நகரமாகவும் திகழ்ந்தது. பிரம்மாண்டமான தோரண வாயில்கள், கோயில்கள், பொதுப் பயன்பாட்டுக் கட்டுமானங்கள் ஆகியவை காகதீய மன்னர்களின் ஆட்சிச் சிறப்பையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தின. இன்றும் எஞ்சியுள்ள புகழ்பெற்ற காகதீய தோரணங்கள், தெலங்கானாவின் வரலாற்று மற்றும் பண்பாட்டு மரபை அடையாளப்படுத்தும் முக்கியச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.
தனக்கு ஒரு வலுவான உள்நாட்டுக் கட்டமைப்புத் தேவை என்பதை உணர்ந்திருந்த ருத்ரமாதேவி, அமர நாயக்கர்கள் முறையை உருவாக்கத் தொடங்கினார். அதேபோல, தனது ஆட்சியின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கிய ருத்ரமாதேவி, விவசாயத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினார். தெலங்கானாவின் பெரும்பகுதி மழைப்பொழிவு அதிகமாக இல்லாத பகுதிகளில் அமைந்திருந்ததால், நீர் மேலாண்மை மிகுந்த பொருளாதார முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதனால், காகதீய அரசர்கள் ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், பாசன அமைப்புகளை உருவாக்குவதற்குப் பெருமளவில் ஆதரவளித்தனர். இதை ருத்ரமாதேவி மிக விரிவாக முன்னெடுத்துச் சென்றார். அவரது ஆட்சிக் காலத்தில் காகதீய நாட்டின் பல பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டதாக ஆவணங்கள் பதிவு செய்கின்றன.
விவசாயத்தை அடுத்து, வெளிநாட்டு வணிகத்திலும் ருத்ரமாதேவி கவனம் செலுத்தினார். கடலோர வாணிபத்தின் மூலம், வங்காள விரிகுடாவையும் அதற்கு அப்பால் பரந்த இந்தியப் பெருங்கடல் வணிகப் பாதைகளையும் பயன்படுத்திய பல்வேறு நாடுகளின் வணிகர்களுடன் காகதீய அரசு தொடர்பு கொண்டிருந்தது.
குறிப்பாக, அப்பகுதியில் தயாரிக்கப்பட்ட துணிகள் பெரும் புகழ் பெற்றிருந்தன. அவரது ஆட்சி காலத்தில் வாரங்கல் வந்த இத்தாலியப் பயணி மார்க்கோ போலோவின் குறிப்புகள், இப்பகுதியில் தயாரிக்கப்பட்ட மிக நுண்ணிய துணிகள், வைரங்கள், பல விலைமதிப்புள்ள பொருட்கள் குறித்துக் குறிப்பிடுகின்றன. அங்கு தயாரிக்கப்பட்ட துணிகள், சிலந்தி வலையைப் போல மிக நுண்மையாக இருந்ததாக மார்க்கோ போலோ வியந்து குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்தப் பகுதியின் அரசி நீதிநெறியுடன் ஆட்சி செய்ததாகவும், அவரை நாட்டு மக்கள் மிகவும் நேசித்ததாகவும் மார்க்கோ போலோ பதிவு செய்திருக்கிறார். இவை எல்லாம் ருத்ரமாதேவியின் நிர்வாகத் திறனுக்குச் சான்றாக உள்ளன.
அம்பதேவனின் கலகம்
எப்படி அவரது ஆட்சியின் ஆரம்பத்தில் உள்நாட்டுக் கலகங்கள் எழுந்தனவோ, அதேபோல, ருத்ரமாதேவியின் ஆட்சிக்காலத்தின் இறுதியிலும் உள்நாட்டுக் கிளர்ச்சி ஒன்றை அவர் எதிர்கொள்ள நேரிட்டது. அரசின் தென்பகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த தலைவரான அம்பதேவன், படிப்படியாகத் தனது ஆட்சியை வலுப்படுத்தத் தொடங்கினார். அம்பதேவன் பலருடன் கூட்டணிகளை ஏற்படுத்திக்கொண்டு, அரசின் தென்பகுதிகளில் தனது செல்வாக்கைப் பெருக்கிக்கொண்டார். இதன் காரணமாக, காகதீயர்களின் தென்பகுதி ஆதிக்கம் குறிப்பிடத்தக்க அளவில் பலவீனமடைந்தது.
இதன் காரணமாக, ருத்ரமாதேவி அம்பதேவனுக்கு எதிராகப் போராடவேண்டியிருந்தது. இந்தக் கிளர்ச்சியை அடக்குவதற்கான நடவடிக்கைகளின்போது, ஒருவேளை படைத்தலைவர் மல்லிகார்ஜுன நாயக்கருடன் சேர்ந்து ருத்ரமாதேவியும் உயிரிழந்திருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. சந்துப்பட்லா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான கல்வெட்டு, இதுகுறித்து ஒரு ஆதாரத்தை வழங்குகிறது.

ருத்ரமாதேவி சிவலோகத்தை அடைய வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட ஒரு தானத்தை அந்தக் கல்வெட்டு பதிவு செய்கிறது. இந்தியத் தொல்லியல் துறையின் ஆண்டு அறிக்கைகளிலும், பொயு 1289ஆம் ஆண்டைச் சேர்ந்த சந்துப்பட்லா கல்வெட்டு ருத்ரமாதேவியின் ஆட்சியின் இறுதி ஆண்டைத் தீர்மானிக்க உதவும் முக்கிய ஆதாரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கல்வெட்டுக்கும் அம்பதேவனின் கிளர்ச்சிக்கும் தொடர்பு இல்லாத காரணத்தால், அந்தக் கிளர்ச்சியின்போதுதான் ருத்ரமாதேவி இறந்தார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அம்பதேவனின் சாசனங்கள் அவன் காகதீயப் படைகளைத் தோற்கடித்தது பற்றியும், தனது ஆட்சிப் பகுதிகளைச் சுயமாக ஆட்சி செய்தது பற்றியும் குறிப்பிடுகின்றன. இதனால், ஆந்திரத்தின் தென்பகுதிகளை ருத்ரமாதேவி இழந்துவிட்டார் என்பது தெளிவு.
ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில், பொயு 13ஆம் நூற்றாண்டில், ஒரு பெண் அரசியாக மிகத்திறமையாக ஆட்சி செய்தார் என்பது இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு பக்கமாகும். அந்தப் பெருமைக்கு உரியவர் ருத்ரமாதேவி.
(தொடரும்)

