நன்னீரும் உப்பு நீரும் சந்திக்கும் இடம் கழிமுகம் என்றழைக்கப்படும். அதாவது கடலோடு ஆறு சங்கமிக்கும் பகுதி. இப்பகுதிகளில் வளரும் மரங்களைக் கொண்ட இடத்தைச் சதுப்புநிலக் காடுகள் என்கிறோம். இவற்றுக்கு அலையாத்திக் காடுகள் என்கிற பெயரும் உண்டு. உலகின் மிகப்பெரிய சதுப்புநிலமான சுந்தரவனக் காடுகள், கங்கை, பிரம்மபுத்ரா மற்றும் மேக்னா நதிகளின் கழிமுகப் பகுதியில், இந்தியாவிலும் வங்கதேசத்திலும் அமைந்துள்ளன. சுந்தரி என்னும் பெயர் கொண்ட மரங்கள் இக்காடுகளில் பெரும்பான்மையாக நிறைந்துள்ளதால் இதற்கு ‘சுந்தரவனம்’ என்னும் பெயர் உருவானது. இந்தியாவின் தேசிய விலங்கான வங்கப் புலியின் புகலிடமாக இந்தச் சுந்தரவனம் உள்ளது.
புலிகளைத் தவிர புள்ளிமான்கள், காட்டுப் பன்றிகள், டால்பின்கள், உவர்நீர் முதலைகள் மற்றும் பலவகையான தாவரங்கள், மீன்கள், பறவைகள் ஆகியவையும் இங்கு வாழ்கின்றன. புயல், சுனாமி மற்றும் கடல் சீற்றங்களிலிருந்து கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்கும் இயற்கை அம்சமாக சுந்தரவனக் காடுகள் விளங்குகின்றன. இத்தகைய வளம் நிறைந்த சுந்தர வனத்தைப் பாதுகாக்கும் ஒரு வன தேவதையைக் குறித்து மேற்கு வங்காளத்தில் கதை ஒன்று கூறப்படுகிறது.
வெகு காலத்திற்கு முன்பு வாழ்ந்த இப்ராஹிம் பக்கீர் மற்றும் ஃபுல்பீபி தம்பதியினருக்கு நீண்டகாலமாகக் குழந்தை இல்லை. பெரும் செல்வங்களைப் பெற்றிருந்தும் குழந்தையில்லாமல் இருந்தது அந்தத் தம்பதியினரைப் பெரிதும் வருத்தியது. இதன் காரணமாக அருகிலிருந்த மசூதிக்குச் சென்று அங்கிருந்த ரசூலிடம் அவர்கள் முறையிட்டனர்.
குர்ஆனை படித்துப் பார்த்த ரசூல், ‘உங்களுக்கு குழந்தை பிறக்கலாம். ஆனால், ஃபுல்பீபியால் ஒருபோதும் கருத்தரிக்க முடியாது. நீங்கள் இரண்டாவது திருமணம் செய்தால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்’ என்றார். அதைக் கேட்ட ஃபுல்பீபி, தன் கணவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்தார். அதேநேரம் தனக்கு ஒரு வாக்குறுதி அளிக்குமாறு அவரிடம் கேட்டார். அந்த வாக்குறுதி குறித்து இப்ராஹிம் கேள்வி எழுப்பவே, சரியான நேரம் வரும்பொழுது கேட்பதாகக் கூறினார் ஃபுல்பீபி.
தன் மனைவியின் உள்நோக்கத்தை அறியாத முடியாத நிலையில், குலால் என்கிற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் இப்ராஹிம். அதேநேரம், மனிதர்களுக்குத் துன்பத்தை விளைவிக்கும், சுந்தரவனத்தில் வாழும் தக்கன் ராய் என்கிற கொடுமைக்காரனை அழிப்பதற்காக, இறைலோகத்தில் இருந்த பான் பீபி மற்றும் ஷா ஜங்காலி ஆகிய இருவரிடமும் பூலோகம் சென்று குலாலுக்கு குழந்தைகளாகப் பிறக்கும்படி இறைவன் ஆணையிட்டார்.
ரசூல் கூறியதுபோல் திருமணமான சிறிது காலத்தில் குலால் கர்ப்பம் தரித்தார். அதுவரை அமைதியாக இருந்த ஃபுல்பீபி, குலாலுக்கு பேறுகாலம் நெருங்கியதும், தான் பெற்ற வாக்குறுதியை இப்ராஹிமிடம் நினைவுபடுத்தினார். அதாவது, குலாலை வனத்தில் விட்டுவிட்டு வருமாறு அவரிடம் கூறினார் ஃபுல்பீபி.
வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, வனத்தில் உள்ள ஓர் இடத்தில் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று கூறி, குலாலை சுந்தரவனத்துக்குள் அழைத்துச் சென்றார் இப்ராஹிம். கணவரின் எண்ணத்தை அறியாமல், அவருடன் வனத்துக்குள் சென்றார் குலால். காட்டினுள்ளே நடந்துகொண்டிருக்கையில் தனக்குச் சிறிது ஒய்வுதேவை என்று குலால் கூறவே, இருவரும் ஓர் இடத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தனர். நடந்த களைப்பால் குலால் ஆழ்ந்து உறங்கத் தொடங்கியதும், அவரைத் தனியாக விட்டுவிட்டு இப்ராஹிம் வீட்டிற்குத் திரும்பினார். மனம் முழுவதும் பாரமாக இருப்பினும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம் என்று நினைத்தார் இப்ராஹிம்.
நன்றாக உறங்கி எழுந்த குலால், அருகில் இப்ராஹிம் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளைப் பயம் சூழத் தொடங்கியது. வனத்திலிருந்து வெளியே செல்ல வழி தெரியாமல் தவித்தார். அவளுடைய நிலைக் கண்ட இறைவன், அவளுடைய பாதுகாப்புக்காக நான்கு தேவலோகப் பெண்களை அனுப்பி வைத்தார். இறையின் ஆணைப்படி பான் பீபி மற்றும் ஷா ஜாங்காலி ஆகிய இருவரும் குலாலுக்குக் குழந்தைகளாகப் பிறந்தனர்.
குழந்தைகள் பிறந்ததும் அந்த நான்கு பெண்களும் தேவலோகம் சென்றுவிட, மீண்டும் தனித்து விடப்பட்டாள் குலால். காட்டிற்குள் சரியான உணவும் தண்ணீரும் கிடைக்காமல் பசி மற்றும் தாகத்தால் வாடிய குலால், குழந்தைகள் இருவரையும் இறைவனின் சித்தத்தில் விட்டுவிட்டுச் செல்ல முடிவெடுத்தார். அப்பொழுது, இறந்துபோன தன்னுடைய குட்டியை வாயில் கவ்வியபடி அங்கும் இங்கும் சென்றுகொண்டிருந்த ஒரு மானைப் பார்த்தார் குலால். இறந்துவிட்டாலும் தன் குழந்தையைக் கைவிடாமல் இருந்த மானைக் கண்டு அவர் ஒரு முடிவுக்கு வந்தார். ஆண் குழந்தையான ஷா ஜாங்காலியை மட்டும் எடுத்துக்கொண்டு பெண் குழந்தையான பான் பீபியை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். தெய்வக் குழந்தையான பான் பீபியை தங்கள் குழந்தையைப்போல் கவனித்துக்கொள்ளுமாறு காட்டு மான்களுக்கு இறைவன் கட்டளையிட்டார்.
நிறைமாதக் கர்ப்பிணியான மனைவியைக் காட்டில் தனியாக விட்டுவிட்டு வந்த குற்றவுணர்வில் தவித்த இப்ராஹிம், ஏழு ஆண்டுகள் கழித்து காட்டிற்குச் சென்றார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு குலாலும் ஷா ஜாங்காலியும் ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்ட இப்ராஹிம், மனைவியிடம் பேசி மன்னிப்புக் கேட்டு வீட்டிற்கு அழைத்தார். அந்நேரத்தில் அவர்கள் முன்பு தோன்றிய பான் பீபி, ‘சகோதரா… நம் பிறப்பின் காரணத்தை மறந்துவிட்டு அவர்களுடன் செல்ல நினைக்காதே’ எனக் கூறி, ஷா ஜாங்காலியை தன்னுடன் அழைத்துச் சென்றார். பாசத்தில் அவர்களைத் தடுத்த பெற்றோரிடம், ‘இவ்வனத்தில் நாங்கள் ஆற்றவேண்டிய கடமை ஒன்று உள்ளது. கலங்காதீர்கள், அனைத்தும் இறைவனின் சித்தப்படியே நடைபெறுகிறது’ என ஆறுதல் கூறினார் பான் பீபி. இப்ராஹிமும் குலாலும் தங்களுடைய மனதைத் தேற்றிக்கொண்டு வீடு திரும்பினர்.
சுந்தரவனத்தில் இருந்த கொடுமைக்காரன் தக்கன் ராயும் அவனுடைய தாய் நாராயணியும், அங்கு நுழையும் மனிதர்களைத் துன்புறுத்தி வந்தார்கள். தக்கன் ராய்க்கு புலியாக உருமாறும் மந்திர ஆற்றல் இருந்தது. தன்னை அழிக்கப் பிறந்த இரட்டையர்கள் குறித்து ஒரு கட்டத்தில் அறிந்துகொண்ட தக்கன் ராய், பான் பீபியுடன் போரிடச் சென்றான். ஒரு பெண்ணுடன் பெண் மட்டுமே சண்டையிட வேண்டும் என்று கூறி தன் மகனைத் தடுத்து, பான் பீபியுடன் போரிட்டாள் நாராயணி. இறுதியில் பான் பீபி வெற்றிபெற்றாலும், அவர்கள் இருவரையும் கொல்லவில்லை. மாறாக, இனி மனிதர்களைத் துன்புறுத்தக்கூடாது என வாக்குறுதி பெற்றுக்கொண்டு அவர்கள் இருவரையும் பான் பீபி விடுவித்தார்.
இந்நிலையில் சுந்தரவனத்துக்கு அருகிலிருந்த பாரிஜாத் என்கிற கிராமத்தில், தோனா என்கிற செல்வந்தன் மர வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். இந்தத் தோனா ஒரு பேராசைக்காரன். போதுமான அளவுக்கு அவனிடம் செல்வம் இருந்தது. எனினும், மேலும் செல்வங்களைச் சேர்க்கப் பேராசை கொண்டான். இதனால் தன் கிராமத்தில் உள்ள ஆட்கள் சிலரைத் திரட்டி காட்டில் தேனெடுக்கச் செல்ல ஒருநாள் அவன் முடிவெடுத்தான். ஒரு ஆள் குறைவாக இருந்த காரணத்தால் இறந்துபோன தன் நண்பனின் வீட்டிற்குச் சென்றான் தோனா. தோனாவின் நண்பனின் இறப்புக்குப் பிறகு, அக்குடும்பம் ஏழ்மையில் வாடியது.
அவர்களின் ஏழ்மை நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள தோனா எண்ணினான். தேன் சேகரிக்கத் தன்னுடன் வந்தால், பொருளீட்டி உனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை மாற்றலாம் எனத் தன் நண்பனின் மகனான 12 வயது சிறுவன் துக்கேவிடம் அவன் கூறினான். இதைக் கேட்டதும் தன் குடும்பத்தின் நிலையை மாற்ற முடியும் என நம்பிக்கை கொண்ட துக்கே, காட்டிற்குச் செல்ல தாயிடம் அனுமதி கோரினான்.
தோனாவுடன் தன் மகனை அனுப்ப விருப்பமில்லை என்றாலும், மகனின் வற்புறுத்தலுக்காகத் தேனெடுக்கச் செல்ல அவனுக்கு அனுமதி அளித்தார் துக்கேவின் தாய். வனத்திற்குப் புறப்படும் முன், ‘சுந்தரவனத்தில் அனைவரையும் காக்கும் பான் பீபி வாழ்கிறாள். காட்டினுள் உனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அவளை மனமுருக பிரார்த்தனை செய். அவள் உனக்கு உதவி புரிவாள்’ என அறிவுறுத்தினார் துக்கேவின் தாயார்.
சுந்தரவனத்துக்குள் தேன் மற்றும் மெழுகு எடுக்க நுழைந்த தோனாவின் குழுவுக்கு, ஒருநாள் முழுதும் அலைந்தும் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மிகவும் வருத்தப்பட்டான் தோனா. அன்றிரவு அனைவரும் வனத்தில் உறங்கிங்கொண்டிருக்கும்போது, தோனாவின் முன்பு தோன்றினான் தக்கன் ராய். சிறுவன் துக்கேவை தனக்கு அளித்தால் ஏராளமான தேன் மற்றும் மெழுகு தருவதாகத் தோனாவிடம் கூறினான். பேராசை எண்ணம் கொண்டிருந்த தோனா, துக்கேவை அளிக்க தக்கன் ராயிடம் ஒப்புக்கொண்டான்.
தோனாவுக்கு வாக்களித்தவாறு மறுநாள் அளவுக்கதிகமான தேன் மற்றும் மெழுகினை அவனுக்குக் காண்பித்தான் தக்கன் ராய். அவற்றை சேகரித்து புறப்படுவதற்குள் இரவு நெருங்கிவிட்டது. அப்போது, விறகுக் கட்டைகளைக் கொண்டு வருமாறு துக்கேவிடம் தோனா கூறினான். விறகு எடுக்க துக்கே சென்றதும், தன் குழுவினருடன் காட்டை விட்டு வெளியேறினான் தோனா. காட்டினுள் தனியே விடப்பட்ட துக்கே முன்பு தோன்றி, அவனை அச்சுறுத்தத் தொடங்கினான் தக்கன் ராய்.
அப்போது, முன்பு தாய் கூறியது துக்கேவின் நினைவுக்கு வந்தது. மரண பயத்தில் பான் பீபியிடம் பிரார்த்தனை செய்தான் துக்கே. உடனே அங்கு தோன்றிய பான் பீபி, தக்கன் ராயிடம் இருந்து துக்கேவைக் காப்பாற்றினார். பின்னர், தக்கன் ராயை காட்டிற்குள் வெகுதூரம் துரத்தி அடித்தான் ஷா ஜாங்காலி.
தேன், மெழுகு மற்றும் விறகு போன்றவற்றை எடுத்து தங்களது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் காட்டினுள் வரும் மனிதர்களை எதுவும் செய்யக்கூடாது எனவும், காட்டின் ஆழமான பகுதி விலங்குகளுக்கும் (புலிகளுக்கும்), காட்டின் எல்லைப் பகுதிகள் மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கும் உரியது எனவும் தக்கன் ராயுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் பான் பீபி. அதன்பின் உயிர் வாழ மீண்டும் அவனுக்கு வாய்ப்பளித்தார்.
அதன்பின் துக்கேவை அவனுடைய தாயிடம் சேர்ப்பித்தார் பான் பீபி. புலி உருவத்தில் இருந்த தக்கன் ராயிடம் தன்னைத் தோனா விட்டுவிட்டு வந்ததையும், பான் பீபி தன்னைக் காப்பாற்றியதையும் கிராமம் முழுவதும் கூறினான் துக்கே. தோனாவின் உண்மையான குணத்தை அறிந்துகொண்ட கிராம மக்கள், அவனுடைய செல்வங்களைப் பறிமுதல் செய்துவிட்டு அவனைக் கிராமத்தைவிட்டு வெளியேற்றினர்.
அன்றிலிருந்து சுந்தரவனத்தின் தேவதையான பான் பீபியை அப்பகுதி மக்கள் வணங்க ஆரம்பித்தனர். இதன்பிறகு தேனெடுக்கவோ அல்லது சுள்ளி பொறுக்கவோ காட்டினுள் செல்லும் முன், ‘பான் பீபி தாயே… காட்டினுள் நுழையும் எங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் எங்களைக் காப்பாற்று’ என வேண்டிக் கொண்ட பிறகே அம்மக்கள் சுந்தரவனத்திற்குள் நுழையத் தொடங்கினர்.
சுந்தரவனத்தையும் அதைச் சுற்றியுள்ள மக்களையும் பான் பீபி பாதுகாப்பதாக இன்றளவும் நம்பப்படுகிறது. இக்கதையானது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கவேண்டிய சமநிலையை அழகாக எடுத்துரைக்கிறது. புலி வடிவத்தில் இருக்கும் அரக்கனான தக்கன் ராயை பான் பீபி தோற்கடித்தாலும், அவனை அழித்துவிடாமல் செய்துகொண்ட ஒப்பந்தமானது, காடு என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதையும், மனிதர்களும் விலங்குகளும் வளங்களைப் பகிர்ந்து வாழவேண்டும் என்கிற சுற்றுச்சூழல் விழிப்புணர்வுச் செய்தியையும் எடுத்துரைக்கிறது.
அது மட்டுமன்றி, இக்கதையில் வரும் தோனா என்பவன், பேராசை கொண்டு காட்டின் தேன் மற்றும் மெழுகுகளை அளவுக்கு அதிகமாகச் சுரண்ட நினைக்கிறான். அதுவே அவனுக்கு ஆபத்தாக முடிகிறது. இதன் மூலம், நம் தேவைக்கு அதிகமாக இயற்கையைச் சுரண்டக்கூடாது என்கிற கருத்தையும் இக்கதை நமக்குத் தெரிவிக்கிறது.
இஸ்லாமிய பின்னணியைக்கொண்ட பான் பீபியை, சுந்தரவனப் பகுதியில் வாழும் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட அனைவரும் சாதி, மத பேதமின்றி வழிபடுகின்றனர். யாராக இருப்பினும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதே உண்மையான தெய்வீகம் மற்றும் இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது.
நமக்கான வாழ்வாதாரத்தை இயற்கை வழங்குகிறது. ஆனால், அதை நமது பேராசைக்காக அழிக்க நினைத்தால் இயற்கையே நம்மை அழித்துவிடும். எனவே, பேராசையின்றி தேவைக்கு மட்டுமே இயற்கையைப் பயன்படுத்தி அதனுடன் இயைந்து வாழ்வோம்.
(தொடரும்)

