போர்கள் பயங்கரமாக இருப்பதும் நல்லதுதான். இல்லையென்றால் நாம் அவற்றை விரும்ப ஆரம்பித்துவிடுவோம்.
– ராபர்ட் இ. லீ
1812இல் பிரித்தானிய அரசின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அமெரிக்காவிற்கும் பிரித்தானிய காலனியான கனடாவிற்கும் இருந்த எல்லை சர்ச்சைகள், பிரித்தானிய அரசு அமெரிக்கக் கடல் வணிகத்தைத் தொந்தரவு செய்தது போன்றவை போருக்கான காரணங்களாக அமைந்தன. அந்தப் போரின்போது, பிரித்தானியக் கப்பற்படை அமெரிக்கக் கடலோர நகரங்களைத் தாக்கியது. குறிப்பாக, வாஷிங்டன் நகரில் அப்போதுதான் கட்டப்பட்டிருந்த வெள்ளை மாளிகை, பிரித்தானியப் படையால் எரிக்கப்பட்டது. அமெரிக்க அரசாங்கமே வாஷிங்டனில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது.
இந்தப் போர் முடிந்தவுடன், அமெரிக்கா தன்னுடைய கடற்கரை நகரங்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தது. இதன் காரணமாகக் கடலோர நகரங்களில் புதிய கோட்டைகளை எழுப்பி, தன்னுடைய வணிகத்தைக் காப்பாற்ற முடிவு செய்தது.
அப்போது தெற்கு கரோலினாவின் சார்லஸ்டன் நகரம், அமெரிக்காவின் நான்காவது பெரிய துறைமுகமாக இருந்தது. தென் மாநிலங்களின் பொருள்கள் பெருமளவில் இதன் வழியே தங்களது சந்தைகளை அடைந்தன. எனவே இந்த நகரைப் பாதுகாக்க, துறைமுகத்திற்கு அருகில் ஏற்கெனவே மௌல்ட்ரி கோட்டை இருந்ததால், கடலின் உள்ளே ஒரு செயற்கை தீவில் புதிய கோட்டை ஒன்றை நிர்மாணிக்க ஆரம்பித்தார்கள். அதன் பெயர் சம்டர் கோட்டை (Fort Sumter).
0
1860ஆம் ஆண்டு, சார்லஸ்டன் நகரத் துறைமுகத்திலுள்ள மௌல்ட்ரி கோட்டையில் ஒன்றிய ராணுவத் துருப்புகள் இருந்தன. அங்கிருந்த 127 போர் வீரர்களும், அவர்களை வழிநடத்திய மேஜர் ராபர்ட் ஆண்டர்சனும், தென் கரோலினாவில் நடந்து கொண்டிருந்தவற்றை எல்லாம் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
டிசம்பர் 20, 1860. சார்லஸ்டன் நகரத் தேவாலய மணிகள் எல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தன. அன்று மதியம் 1 மணிக்கு ஒன்றியத்திலிருந்து பிரிவதாக அறிவித்தது தெற்கு கரோலினா. கிறிஸ்துமஸ் வருவதற்கு இன்னமும் ஐந்து நாட்கள் இருந்தாலும் எங்கும் விழாக்கோலம். கடைகளும் அலுவலகங்களும் அனைவர்க்கும் விடுமுறை கொடுத்துவிட்டு, மூடப்பட்டன. தெருக்களில் மக்கள் நிறைந்திருந்தார்கள். அனைவரும் ஒன்றைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்கள். போர் வருமா என்பதுதான் அது. ஆனால் அதையும் தாண்டி அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். இளைஞர்களும் பெண்களும் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.
மௌல்ட்ரி கோட்டையின் உள்ளே நிலை வேறாக இருந்தது. அந்த வீரர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். அடுத்து என்ன செய்வது என்று அவர்கள் மேஜர் ஆண்டர்சனை எதிர்நோக்கி இருந்தார்கள். அவர் வாஷிங்டனில் இருந்த பாதுகாப்புத் துறைக்குத் தாங்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் நிகழ்வுகள் பதிலுக்குக் காத்திருக்கவில்லை.
அமெரிக்காவில் பொதுவாக நாட்டிற்கு என்று ராணுவம் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலமும் துணை ராணுவப்படைகளை வைத்திருந்தன. இவர்கள் பொதுவாகச் சிறிதளவு ராணுவ பயிற்சி பெறும் பொதுமக்கள். தேவை ஏற்படும்போது, இவர்களைப் போர் அல்லது வேறு அவசர தேவைகளுக்கு அழைத்துக்கொள்ளமுடியும்.
தெற்கு கரோலினாவிலும் இது போன்ற துணை ராணுவப் படைகள் இருந்தன. அவர்கள் அனைவரும் பிரிவினையை அறிவித்தவுடன், ஆயுதங்களுடன் தங்கள் மாநிலத்தைக் காக்க கிளம்பி இருந்தனர்.
அவர்களின் முதல் இலக்கு, மாநிலத்தில் இருந்த ஒன்றிய கட்டடங்கள், சொத்துக்கள் முதலியவை. தெற்கு கரோலினாவின் ஆளுநர் ஏற்கெனவே தங்களிடம் ஒன்றிய கோட்டைகளை அமைதியாக ஒப்படைத்துவிட வேண்டும் என்று அமெரிக்கக் குடியரசு தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். எனவே, மாநிலத்தில் இருந்த அனைத்து ஒன்றிய கட்டடங்களும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் இருந்தன.
மௌல்ட்ரி கோட்டையின் வெளியிலும் ஆயுதம் ஏந்திய பலர் சுற்றி வந்து கொண்டிருந்தனர். ஆண்டர்சன் அவர்களுடன் மோத விரும்பவில்லை. அவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. இன்னொன்று, போரின் முதல் நெருப்பை அவர் பற்ற வைக்க விரும்பவில்லை.
மௌல்ட்ரி கோட்டை, சார்லஸ்டன் துறைமுகத்திற்கு அருகில் இருந்த சதுப்பு நிலத்தில் இருந்தது. கடலை நோக்கி பார்த்திருந்த கோட்டை, கடலில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்நோக்கியே கட்டப்பட்டிருந்தது. எனவே, ஆண்டர்சன் தன்னுடைய வீரர்களையும், ஆயுதங்களையும் திரட்டிக் கொண்டு சம்டர் கோட்டைக்குச் சென்றுவிட முடிவு செய்தார். தான் அங்கிருந்து வெளியேறுவது தெரிந்தால், தன்மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் யாருக்கும் தெரியாமல் அதை நடத்துவது என்றும் முடிவு செய்தார்.
0
முந்தைய போர்களில் இருந்து அமெரிக்க உள்நாட்டுப் போரை வேறுபடுத்திக் காட்டும் விஷயம் இன்னொன்று உண்டு – தபால். 1860ம் வருடத்திய கணக்கெடுப்பின்படி, 90% வெள்ளையர்கள் எழுத, படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். இதனால், தங்களது வீடுகளில் இருந்து தொலைவில் போரிட சென்றிருந்த வீரர்கள் கடிதம் எழுதுவது சாதாரணமாக இருந்தது. ஒரு கணக்கின்படி, போர் நடந்த வருடங்களில் ஒரு மாதத்திற்குப் பத்து லட்சம் கடிதங்கள் போர்முனையில் இருந்து எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இவற்றில் பலவும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. வெறும் ஆய்வாளர்களின் நோக்கில் மட்டுமில்லாமல் வீரர்கள் என்ன நினைத்தார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு இந்தக் கடிதங்கள் உதவுகின்றன.
டிசம்பர் 26, 1860 அன்று சம்டர் கோட்டையில் இருந்து போர்வீரர் ஒருவர் அவரது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இருந்து சில பகுதிகள்.
‘டிசம்பர் 26, 1860. சம்டர் கோட்டை. மாலை.
அன்பு தந்தைக்கு, இந்தக் கடிதம் கிடைப்பதற்குள், நாங்கள் காளையின் கொம்பைப் பிடித்து விட்டோம் என்பதைக் கேள்விப்பட்டு விடுவீர்கள். இன்று மாலை சூரியன் மறைந்த சில மணி நேரங்களில் நாங்கள் அனைவரும் சம்டர் கோட்டைக்கு வந்துவிட்டோம். இதை யாரும் நெருங்கவே முடியாது; இங்கிருந்து நாங்கள் மௌல்ட்ரி கோட்டை அல்லது சார்லஸ்டன் நகரைத் தாக்க முடியும். எங்களைத் தினமும் கண்காணிக்கப் படகுகள் அனுப்பட்டன. ஆனால் அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டோம். மேஜர் ஆண்டர்சனுக்கு வெற்றி! பொது வாழ்வில் இருப்பவர்களைப் போலப் பொறுப்பைக் கண்டு பயப்படாத, சரியாக யோசிக்கும், கடமையுணர்வு கொண்ட மனிதர் அவர்.’
0
மேஜர் ராபர்ட் ஆண்டர்சன் தென் மாநிலங்களில் ஒன்றான கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் ஒன்றியத்தை நேசித்தவர். தென் மாநிலங்களைப் போல மாநில உரிமைகளை அவரும் விரும்பினாலும், போர் வீரராகத் தன்னுடைய விசுவாசம் ஒன்றிய அரசிற்குத்தான் என்பதில் தெளிவாக இருந்தார். பிரிவினைக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் அவர் சார்லஸ்டன் நகருக்கு மாற்றலாகி வந்திருந்தார்.
டிசம்பர் 26ம் தேதி சம்டர் கோட்டைக்குச் செல்வதை அவர் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார். அன்று மதியம் மருத்துவ அதிகாரியிடம் மட்டும், மருத்துவத்திற்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளும் படி கூறியிருந்தார். அன்று மாலை 6 மணி சுமாருக்கு மௌல்ட்ரி கோட்டையில் இருந்து வீரர்கள் தங்களது ஆயுதங்களுடன் படகுகளில் கிளம்பினார்கள். ஆயுதங்களை மறைவாக வைத்துக் கொண்டிருந்தார்கள். கிளம்புவதற்கு முன், கோட்டையில் இருந்து கொண்டு செல்ல முடியாத பீரங்கி முதலியவற்றைச் செயல்படாதவாறு உடைத்தார்கள். அங்கிருந்த கொடிக்கம்பத்தையும் வெட்டி சாய்த்தனர். அமெரிக்கக் கொடி பறந்த கம்பத்தில் வேறு கொடி பார்க்கக்கூடாது என்று ஆண்டர்சன் கூறினார்.
8 மணிக்குள் அவர்கள் அனைவரும் சம்டர் கோட்டைக்குச் சென்றுவிட்டார்கள். சம்டர் கோட்டை இன்னமும் கட்டி முடிக்கப்படாத நிலையில் இருந்தது. எனவே அங்கே இன்னமும் வேலையாட்கள் இருந்தார்கள். அவர்களையெல்லாம் நகருக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள். அங்கிருந்த சில பீரங்கிகள், தங்கள் ஆயுதங்கள், நான்கு மாதத்திற்குத் தேவையான உணவு முதலியவற்றுடன் தங்களுக்கு உதவி வரும் என்று காத்திருந்தனர்.
0
வாஷிங்டனில் இப்போது இரண்டு பிரச்சினைகள் முன்னே இருந்தன. ஒன்று தெற்கு கரோலினா பிரிந்து போனது. இரண்டாவது சம்டர் கோட்டையில் இருக்கும் வீரர்களை என்ன செய்வது என்பது.
குடியரசு தலைவர் ஜான் புக்கானன், சட்டப்படி எந்த மாநிலமும் பிரிய முடியாது. ஆனால் அப்படிப் பிரிந்துவிட்டால், ஒன்றியத்தால் எதுவும் செய்யமுடியாது என்று நினைத்தார்.
இரண்டாவது விஷயத்தில், அவர் அமெரிக்க ராணுவப் படைகளின் முதன்மை தளபதி வின்பீல்ட் ஸ்காட் (Winfield Scott) என்பவரின் ஆலோசனையைக் கேட்டார்.
ஸ்காட், முதலில் சம்டர் கோட்டையில் இருப்பவர்களுக்கு உணவும், மற்ற அத்தியாவசியப் பொருள்களையும் வழங்க வேண்டும் என்றார். எனவே நியூ யார்க் நகரில் இருந்து ‘ஸ்டார் ஆப் தி வெஸ்ட்’ என்ற கப்பல் உணவு பொருட்களுடன் கிளம்பியது. ஆனால் சார்லஸ்டன் துறைமுகத்திற்குள் புகாதவாறு, அதன் மீது தாக்குதல் நடக்கவே, அது திரும்பிவிட்டது.
இன்னமும் ஒரு மாதமே குடியரசுத் தலைவர் பதவி இருந்ததால், புக்கானன் எதையும் செய்ய விரும்பவில்லை.
மார்ச் மாதம், மாநிலக் கூட்டமைப்பின் சார்லஸ்டன் நகரப்படைகளின் தலைவராக, பி.ஜி.டி. போரெகார்ட் நியமிக்கப்பட்டார். தென் மாநில படைகளின் சிறந்த வீரர்களில் ஒருவரான அவர், சம்டர் கோட்டையைக் கைப்பற்றுவதைத் தன்னுடைய முதல் வேலையாக எடுத்துக் கொண்டார்.
மார்ச் 4, 1861ம் வருடம் லிங்கன், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு முன்பிருந்த முதல் பிரச்சினை, சம்டர் கோட்டை வீரர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதுதான்.
எனவே அவர் தெற்கு கரோலினாஆளுநருக்கு, கோட்டையில் இருப்பவர்களுக்கு உணவு பொருட்களை அனுப்பவிருப்பதாகக் கடிதம் எழுதினார். ஆனால் லிங்கன், உணவு கப்பலோடு இந்த முறை சில போர்க் கப்பல்களையும் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் தெற்கு கரோலினா ஆளுநர் அதுவரை காத்திருக்க விரும்பவில்லை. உடனடியாக சம்டர் கோட்டையைப் பிடிக்கவேண்டும் அல்லது தரைமட்டமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஏப்ரல் 12, 1860 அன்று சார்லஸ்டன் நகரில் இருந்து இரண்டு ராணுவ அதிகாரிகள், இந்த உத்தரவுடன் சென்று மேஜர் ஆண்டர்சனைப் பார்த்தார்கள். ஆண்டர்சன் இரவு 3 மணி வரை ஆலோசித்துவிட்டு, தனக்கு ஏப்ரல் 15 வரை நேரம் தரும்படி கேட்டார்.
போரெகார்ட் ஒப்புக்கொள்ளவில்லை. காலை 4.30 மணிக்கு போர் துவங்கும் என்று கூறிவிட்டார். அதுபோலவே சார்லஸ்டன் துறைமுகத்தில் இருந்த பீரங்கிகளின் சத்தம் 4.30 மணியில் இருந்து முழங்க ஆரம்பித்தது. சம்டர்கோட்டையில் போதுமான வெடி மருந்துகள் இல்லை என்பதால் அவர்கள் 2 மணி நேரம் கழித்தே தங்களது பதில் தாக்குதலைத் துவக்கினார்கள்.
சார்லஸ்டன் நகரப் பீரங்கிகள் தொடர்ச்சியாக 34 மணி நேரம் முழங்கின. சம்டர் கோட்டை கிட்டத்தட்ட தரைமட்டமானது. கோட்டை முழுவதும் கட்டுப்பாடில்லாமல் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு உதவ வந்த ஒன்றியப் போர்க் கப்பல்கள், வானிலை காரணமாக நகரத்துறைமுகத்திற்குள் வர முடியாமல் நின்று கொண்டிருந்தன.
வெடி மருந்து முடிந்துவிடவும், உணவு கையிருப்பும் குறைந்துவிடவே, ஆண்டர்சன் சரணடைய முடிவு செய்துவிட்டார். அங்கிருந்த கொடிக் கம்பத்தில் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது. அதைக் கண்டவுடன், சார்லஸ்டன் நகரில் இருந்து அதிகாரிகள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் கோட்டையை ஒப்படைத்துவிட்டால், அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல், அவர்கள் விருப்பப்படும் இடத்திற்கு அனுப்பிவிடுவதாக போரெகார்ட் தெரிவித்தார்.
மேஜர் ஆண்டர்சன், தன்னால் முடிந்த அளவிற்குப் போரிட்டு விட்டதாக நினைத்ததால் இதை ஒப்புக்கொண்டார். கோட்டையில் ஏற்றியிருந்த அமெரிக்கக் கொடியை மட்டும் எடுத்துக் கொண்டார். கோட்டையை அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
சம்டர் கோட்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். போர் துவங்கிவிட்டது.
(தொடரும்)
ஆதாரம்
1. Reminiscences of Forts Sumter and Moultrie in 1860–61, Abner Doubleday
2. A Diary From Dixie , Mary Chesnut