தளபதி மக்கிலேலன் அவரது படைகளை உபயோகிக்கவில்லை என்றால், அதைச் சிறிது காலத்திற்குக் கடன் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்.
– ஆபிரகாம் லிங்கன்
தத்துவத்திற்கு அரிஸ்டாட்டில் போல, பத்தொன்பதாம் நூற்றாண்டின் போர்களுக்கு நெப்போலியன் குருவாகப் பார்க்கப்பட்டார். படைகளைச் சிறு குழுக்களாகப் பிரித்துத் தாக்குவது, எதிரியை ஒரு பக்கமாகவும், பின்புறமும் தாக்குவது. புதிய ஆயுதங்களை வேகமாகப் பழக்குவது, மின்னல் வேகத்தில் படைகளை ஓரிடத்தில் இருந்து இன்னொன்றுக்கு நகர்த்துவது என்று அவர் கொண்டு வந்த புதுமைகள் அதிகம். அப்போதிருந்த ஐரோப்பிய, அமெரிக்க ராணுவப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் அனைவரும் நெப்போலியனின் போர்களையும் அவற்றில் அவர் புகுத்திய புதுமைகளையும் படித்தவர்கள்.
ஆனால் புதிய, நவீன ஆயுதங்களும் இயந்திரங்களும் குதிரைப் படைகளின் இடத்தை எடுத்துக் கொண்டிருப்பதையும் போர்க்களத்தை மாற்றிக் கொண்டிருப்பதையும் பலரும் உணரவில்லை.
0
புல் ரன்னில் கிடைத்த தோல்விக்குப் பின்னர், வாஷிங்டனில் ஒன்றிரண்டு நாட்கள் பீதி நிலவியது. மாநிலக் கூட்டமைப்புப் படைகள் எப்போதும் தாக்கலாம் என்ற பயம் அனைவரிடமும் இருந்தது. அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மோசமான தோல்வியும் அல்ல என்பதும் அனைவரையும் சிறிது நிம்மதியாக்கியது.
ஆனால் தோல்விக்கு யார் காரணம் என்ற விவாதம் பெரிதானது. ஜூலை 25 1861 அன்று தளபதி பிரிகேடியர் ஜெனரல் இர்வின் மக்டவல் அவரது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போதே லிங்கன் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஜார்ஜ் மக்கிலேலனை நியமித்தார்.
அமெரிக்க ராணுவத்தில் இருந்த அதிகாரிகள் பலரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அடிமை முறையை ஒழிப்பதற்கு அன்றி, ஒன்றியத்தை ஒன்றாக்க வேண்டியே போரிட வந்தனர். எனவே இயற்கையாகவே, லிங்கன் மீது அவர்களுக்கு அதிக மதிப்பு இருக்கவில்லை. இந்த அதிகாரிகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, அவர்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கலாம் என்றால் அதற்கு ஜார்ஜ் மக்கிலேலன் பொருத்தமானவர். வெற்றியைப் பெற்று தந்தால் போதும் என்ற நிலையில் இருந்த லிங்கன், இவை எல்லாம் தெரிந்தும் அவரை நியமித்தார்.
ஜார்ஜ் மக்கிலேலன் போர் தந்திரங்களிலும், போரைத் திட்டமிடுவதிலும் வல்லவர். அவரது வீரர்கள் அவரை விரும்பினார்கள். ‘யங் நெப்போலியன்’ என்று அழைத்தனர். பத்திரிகைகள் இடையிலும் அவர் பிரபலமாக இருந்தார்.
லிங்கனின் வேண்டுகோளுக்கு இணங்க, அதிகமான வீரர்களைப் படையில் சேர்க்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது. மேலும் முதல் சண்டைக்குப் பின்னர், சிதறிக் கிடந்த வீரர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டனர். இவர்கள் ‘போடோமோக் படை’ (Army of the Potomac) என்றழைக்கப்பட்டனர். (வாஷிங்டன் வழியாகச் சென்ற நதியின் பெயரே போடோமோக்).
இவர்களை ஒன்றிணைத்து, மீண்டும் ஒரு படையாக மாற்றுவதில் ஜார்ஜ் மக்கிலேலன் பெரும் பங்கு வகித்தார். தினமும் பயிற்சிகள், அணிவகுப்பு, படையாகச் செல்வது என்று பல விதங்களிலும் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். வாஷிங்டன் நகரை சுற்றி பல புதிய பாதுகாப்பு அகழிகள், கோட்டைகள் முதலியவற்றையும் தன் வீரர்களைக் கொண்டு கட்டினார். புதிதாக வந்த வீரர்களோடு நவம்பர் 1861ல் அவரது படையில் 1,68,000 வீரர்கள் இருந்தார்கள்.
நவம்பர் 1, 1861 அன்று தலைமை தளபதி வின்பீல்ட்ஸ்காட் பதவி ஓய்வு பெற்றார். லிங்கன் அந்தப் பதவிக்கு ஜார்ஜ் மக்கிலேலனை நியமித்தார். மேற்கு, கிழக்கு என இரண்டு இடங்களில் நடந்து கொண்டிருந்த போரை முழுவதுமாக நடத்தும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டது. அனைவரும் வரப்போகும் பெரும் வெற்றிக்காகக் காத்திருந்தார்கள்.
ஆனால் ஜார்ஜ் மக்கிலேலன் வேறு ஒரு கவலையில் இருந்தார். எப்படியோ அவர் மாநிலக் கூட்டமைப்பின் படைகள் தன்னுடைய படைகளைவிட அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன என்று நம்ப ஆரம்பித்திருந்தார். இதனால், மோதலைத் தள்ளி போட்டுக் கொண்டே இருந்தார். மேலும், அவர் ஸ்காட்டின் ‘அனகோண்டா திட்டத்தை’ விரும்பவில்லை. நெப்போலியனைப் போல ஒரே பெரும் போரில் கூட்டமைப்பை வென்றுவிட வேண்டும் என்று நினைத்தார்.
எல்லாவற்றையும் விட, அவருக்கும் லிங்கனிற்கும் நடுவே நல்லுறவு இல்லை. லிங்கனைப் பொதுவிடங்களில் ‘கொரில்லா’, ‘பஃபூன்’ என்றெல்லாம் அழைத்தார். தன்னைப் பார்க்க வீட்டிற்கு வந்த லிங்கனை, தான் களைத்திருப்பதாக வேலையாள் மூலமாகச் சொல்லச் செய்தார். அவரது திட்டங்கள் எதையும் அவர் லிங்கனிடமோ மற்ற தளபதிகளிடமோ ஆலோசிக்கவில்லை. இவற்றை எல்லாம் லிங்கன் அறிந்திருந்தாலும், பொறுமையாகவே இருந்தார்.
குளிர் காலம் ஆரம்பித்தது. பாதைகள், சாலைகள் எல்லாம் சகதியாகிவிடும் என்பதால், பொதுவாக இந்தக் காலங்களில் சண்டைகள் நடத்தப்படுவதில்லை. இது லிங்கனின் பொறுமையைச் சோதித்தது.
ஜனவரி மாதம், லிங்கன் ஜார்ஜ் மக்கிலேலனைத் தவிர்த்த மற்ற தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போதே, அத்தியாயத்தின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களைப் பேசினார். இந்தக் கூட்டம் பற்றிக் கேள்விப்பட்ட ஜார்ஜ் மக்கிலேலன், முதல் முறையாகத் தன்னுடைய திட்டத்தைத் தெரிவித்தார்.
0
மாநிலக் கூட்டமைப்பின் தலைநகரான ரிச்மன்ட் நகரம், வாஷிங்டன் நகரில் இருந்து 100 மைல் தொலைவிலேயே இருந்தது. அதை நிலவழியாகக் கைப்பற்றலாம் அல்லது கடல்வழியே சென்று அதன் அருகில் இருந்த தீபகற்பத்தின் வழியே சென்று கைப்பற்றலாம். ஜார்ஜ் மக்கிலேலன் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்திருந்தார்.
இது உண்மையில் மிகவும் சவாலான, எதிரியை நிலைகுலைய வைக்கும் திட்டம். அனைவரும் வடக்கில் இருந்து தாக்குதல் வரும் என்று நினைக்கும்போது, கிழக்கில் இருந்து தாக்குவது நெப்போலியனின் உத்திக்குச் சமமானது. ஆனால் ஜனவரி 1862ல் திட்டத்தை லிங்கனிடமும், தன்னுடைய தளபதிகளிடமும் பகிர்ந்த அவர், அடுத்த ஒரு மாத காலத்திற்கு எதுவும் செய்யவில்லை.
மீண்டும் லிங்கன் தலையிட்டு, ஆணைகளைப் பிறப்பிக்க ஆரம்பிக்கவே ஜார்ஜ் மக்கிலேலன் வேகம் கொண்டு தீபகற்பப் போருக்கான (Peninsula Campaign) வேலைகளை ஆரம்பித்தார்.
1,20,000 வீரர்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டார்கள். 15000 குதிரைகள், பீரங்கிகள், உணவுப் பொருள்கள், இன்னபிற பொருள்கள் என அனைத்தும் ஏற்றப்பட்டன. தீபகற்பத்தில் உபயோகத்தில் இல்லாமல் இருந்த மன்றோ கோட்டைதான் அவர்களது இலக்கு. மார்ச் 17, 1862 அன்று அங்கே எந்த அசம்பாவிதமும் இல்லாமல் வந்து இறங்கினார்கள்.
ஆனால் அங்கே தீபகற்பத்தை மறித்துக் கொண்டு, மாநிலக் கூட்டமைப்பின் படை இருந்தது. ஜார்ஜ் மக்கிலேலன் வழக்கம் போல, அங்கே இருந்த வீரர்களைவிடப் பல மடங்கு அதிகமாக எண்ணிக்கொண்டு, தன்னுடைய தாக்குதலைத் தள்ளி போட்டுக்கொண்டிருந்தார். லிங்கன் கடிதங்கள் மூலம் தாக்குதலைத் துவக்குமாறு கெஞ்சிக்கொண்டிருந்தார்.
ஒரு மாதம் கழிந்த பின்னரே அவர் தாக்குதலை ஆரம்பித்தார். ஆரம்பித்த உடனே கிடைத்த சில வெற்றிகள், ரிச்மன்ட் நோக்கிய அவரது முன்னேற்றத்துக்கு உதவியது. ஆனாலும், மிகவும் கவனத்துடன், எந்த அவசரமும் இல்லாமல் சென்று கொண்டிருந்த அவரது படை, மாநிலக் கூட்டமைப்பின் படைகள் ஒன்றாகச் சேரவும், அவரை எதிர்ப்பதற்குத் தேவையானவற்றைக் கொண்டு வரவும், ரிச்மன்ட் நகரைச் சுற்றி பாதுகாப்பு அரணை எழுப்பவும் தேவையான கால அவகாசத்தைக் கொடுத்திருந்தது.
மே 5ம் தேதி, வில்லியம் ஸ்பர்க் நகரின் அருகே நடத்த சண்டையில் ஜார்ஜ் மக்கிலேலன் பெற்ற வெற்றி, அவரை ரிச்மன்ட் நகருக்கு மிக அருகில் – 10 கிலோ மீட்டர் தொலைவில் – கொண்டு வந்து சேர்த்தது. ஆனால் இங்குத் தாக்குதலைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போதே, மாநிலக் கூட்டமைப்புப்படைகள் தங்களது தாக்குதலை ஆரம்பித்துவிட்டன. பதில் தாக்குதல் நடத்தாமல் தயங்கிய நேரத்தில், சண்டை முடிந்துவிட்டது.
இந்தச் சண்டை எந்த முடிவும் தெரியாமல் இருந்தாலும், மாநில கூட்டமைப்பின் தளபதி ஜான்ஸ்டன் காயமடைந்து விடவே, இப்போது ராபர்ட் இ. லீ தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இது மொத்தப் போரையும் திருப்பிப் போட்டது.
ராபர்ட் லீ முன்னோக்கி வலிந்து நடத்தும் தாக்குதல்களில் பெயர் பெற்றவர். அப்போதிருந்த மற்ற தளபதிகள் போலத் தயக்கமின்றி, தன்னுடைய திட்டத்தை விரைந்து நிறைவேற்றுபவர். இப்போது ஜார்ஜ் மக்கிலேலனிற்கு நெப்போலியன் போலத் தாக்குதல் நடத்துவதில் ஒரு பாடம் கற்பித்தார்.
ஜூன் மாத இறுதியில், ஏழு நாட்கள் போர் என்று அழைக்கப்பட்ட போரைத் தொடுத்தார். பல இடங்களில் நடந்த இந்தப் போரில், மாநிலக் கூட்டமைப்புப் படைகள், அமெரிக்கப் படைகளைப் பின்னோக்கித் தள்ள முயன்றன. மிகவும் விரைவாகவும், வேகமாகவும் நடத்தப்பட்ட இந்தச் சிறு சண்டைகள், அமெரிக்கப் படைகளுக்குப் பெருத்த சேதத்தை உண்டாக்கின. லீயின் வேகமான படை நகர்த்தல், ஜார்ஜ் மக்கிலேலனிற்கு எதிர்பாராத எதிர்ப்பைக் காட்டியது.
இன்னமும் அமெரிக்கப் படைகள் நல்ல நிலையிலேயே இருந்தன. எதிர்பார்த்ததைவிட ஜார்ஜ் மக்கிலேலனின் நிலையும் நல்ல முறையிலேயே இருந்தது. அவருக்கு ஆதரவாக இன்னமும் ஒரு படை வடக்கில் இருந்து வந்து சேர்ந்திருந்தது. ஆனால் ஜார்ஜ் மக்கிலேலன் மனதளவில் தோற்றுவிட்டார்.
நீண்ட கடிதத்தின் மூலம், தனக்கு லிங்கனும் அமெரிக்க அரசும் சரியான ஆதரவு தரவில்லை என்று கூறிவிட்டு, படைகளைப் பின்வாங்கச் செய்தார். ஜூலை மாத மத்தியில் மொத்த வீரர்களும் கடல் வழியே வாஷிங்டன் நகருக்குத் திரும்பினார்கள். நிர்மூலமாக்கப்படுவதில் இருந்து படையைக் காப்பாற்றிவிட்டதாக, ஜார்ஜ் மக்கிலேலன் கடிதம் எழுதினார்
தன்னுடைய இன்னொரு தளபதியும் ஏமாற்றத்தையும் தோல்வியையும் தந்துவிடவே, லிங்கன் ஜார்ஜ் மக்கிலேலனை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மேஜர் ஜெனரல் ஹல்லேக்கையும், ஜார்ஜ் மக்கிலேலனின் போடோமோக் படையைப் பிரித்து, அதை மேஜர் ஜெனரல் ஜான் போப்பிடமும் ஒப்படைத்தார். புதிய தளபதிகளாவது தனக்கு வெற்றியைத் தந்து விடுவார்கள் என்று நம்பினார். இவற்றைச் செய்ததன் மூலம் ஜார்ஜ் மக்கிலேலனைத் தன்னுடைய தீராத எதிரியாகவும் ஆக்கிக்கொண்டார்.
ஆனால் அமெரிக்க ஒன்றியத்தின் ராணுவத்தில் இருந்த பலரும் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் என்பதை இங்கே நினைவுறுத்த வேண்டும். ஜார்ஜ் மக்கிலேலன் நல்ல திட்டமிடுபவர் என்றாலும், அவரால் படைகளை நடத்த முடியவில்லை. சண்டைகள் நடக்கும்போது, போர்க்களத்தில் இருக்க மாட்டார் என்பது அவர் மீதிருந்த பெரும் குற்றசாட்டு. அதற்கு நேர்மாறாக, மாநிலக் கூட்டமைப்புப் படையில் இருந்த தளபதிகள் பெரும்பாலோர் – ராபர்ட் லீ, ஜேம்ஸ் லாங்ஸ்ட்ரீட், ஜான்சன் – நேரடியாகக் களத்தில் இருப்பவர்கள்.
மேலும் ராபர்ட் லீ தலைமை ஏற்றவுடன், போர் அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக மாறியது. லீயின் திட்டங்களை முறியடிக்கத் தேவையான வேகமோ, போர் சிந்தனையோ மேலே சொன்ன அரசியல் தளபதிகளிடம் இல்லை. அதைக் கொண்டிருந்தவர் மேற்கில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருந்தார்.
(தொடரும்)
ஆதாரம்
1. The Civil War, a Narrative: Fort Sumter to Perryville – Shelby Foote
2. Lincoln – Carl Sandburg

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், ‘1877 தாது வருடப் பஞ்சம்.’ தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.