Skip to content
Home » அமெரிக்க உள்நாட்டுப் போர் #17 – துயரங்களின் மனிதன்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #17 – துயரங்களின் மனிதன்

‘நம்முடைய சோகமான உலகில், துயரம் அனைவரையும் தேடி வருகிறது; வயதில் குறைந்தவர்கள் அதை எதிர்பார்ப்பதில்லை என்பதால், அவர்களுக்கு இன்னமும் வலி தருவதாகவும் இருக்கிறது. வயதானவர்கள் அதை எதிர்பார்க்க கற்றுக் கொள்கிறார்கள்… காலத்தைத் தவிர, துயரத்திற்கு வேறு சரியான மருந்தில்லை… மீண்டும் ஒரு நாள் நீ மகிழ்ச்சியாக இருப்பாய்.’
– ஆபிரகாம் லிங்கன், உள்நாட்டுப் போரில் இறந்த வீரரின் மகளுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து.

இங்கே சற்று மூச்சு விட்டுக் கொண்டு, இந்த மாபெரும் போரின் நடுவேயான லிங்கன் என்ற மனிதனின் வாழ்வை சற்று பார்த்து விடுவோம்.

லிங்கன் ‘துயரங்களின் மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். அவரது தாயார் இறந்ததில் இருந்து, லிங்கனின் வாழ்வில் துயரங்களே அவரைத் துரத்தின. அவரது தந்தையுடன் அவருக்குச் சரியான உறவில்லை. அவர் 1850களில் இறந்த போது, லிங்கன் அவரது இறுதி சடங்கிற்குக் கூடச் செல்லவில்லை. மிகவும் கசப்பான அனுபவங்களைத் தந்தவர் என்று லிங்கன் குறிப்பிடுகிறார்.

அவரது வாழ்வின் பெருமகிழ்ச்சி அவர் தனது மனதிற்குப் பிரியமான பெண்ணை மணம் புரிந்ததுதான். இலினொய் மாநிலம், ஸ்ப்ரிங்பீல்ட் நகரில் வக்கீலாக இருந்த போது அங்கு நடந்த நடன நிகழ்வு ஒன்றில் அவர் மேரி டாடை சந்தித்தார். கென்டக்கியை சேர்ந்த பெரும் செல்வந்தரின் மகளான அவர், பெரும் அழகியாகக் கருதப்பட்டார்.

முந்தைய அத்தியாயங்களில் கூறியது போல மேரியின் குடும்பம், கென்டக்கியில் நிறைய அடிமைகளை வைத்திருந்த செல்வம் நிறைந்த குடும்பம். அவர்கள் எங்கோ மேற்கே ஒரு பெயர் தெரியாத வக்கீலை மேரி விரும்புவதை ரசிக்கவில்லை. அதே நேரத்தில், லிங்கனின் அரசியல் எதிரியான ஸ்டீபன் டக்லசும் மேரியுடன் நெருங்கி பழக விரும்பினார். ஆனால் மேரி, லிங்கனையே தேர்ந்தெடுத்தார். அவர்கள் 1842ல் திருமணம் புரிந்தார்கள்.

அடுத்தப் பத்து வருடங்களில் அவர்களுக்கு நான்கு மகன்கள் பிறந்தார்கள். இரண்டாவதாகப் பிறந்த எட்வர்ட், 4 வயதிலேயே இறந்து போனான். அப்போதுதான் லிங்கன் முதல் முறையாக மனசோர்வை அடைந்தார். தன் குழந்தையின் மறைவு அவரைத் தனிமையை நாட செய்தது. மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்த அவர், தன்னுடைய தொழிலிலும், அரசியலிலும் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொண்டார்.

அவரது மனைவியும் துயரத்தையும் இங்கே சொல்ல வேண்டும். லிங்கன் தன்னுடைய வேலையின் காரணமாகவும், அரசியல் தேவைகளுக்காகவும் நீண்ட இடைவெளிகளுக்கு வீட்டில் இருப்பதில்லை. தனிமையில், தன்னுடைய இழப்புகளை நினைத்து மேரி லிங்கனும் பெரிய மன அழுத்தத்திற்கு ஆளானார். அவரது மனஅழுத்தத்தைக் குறைக்க விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

இப்படியான நிலையிலேயே அவர்கள் வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைத்தார்கள். அவர்களது முதல் மகன் ராபர்ட் லிங்கன், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருந்தார். மற்ற இரண்டு மகன்கள், 11 வயது வில்லியம் (வில்லி) மற்றும் 8 வயது தாமஸ் (டாட்), அவர்களுடன் 1861இல் வெள்ளை மாளிகையில் குடியேறினார்கள்.

0

இலினொய் மாநிலத்தில் இருக்கும் போது, லிங்கனிற்கு அறிமுகமாகி இருந்த ஜான் நிக்கோலாய் மற்றும் ஜான் ஹே ஆகிய இருவரையும் தன்னுடைய தனிக் காரியதரிசிகளாக வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்திருந்தார். லிங்கனின் தீவிர ஆதரவாளர்களான அவர்கள், லிங்கனுடன் தினமும் நாட்களைச் செலவழித்தவர்கள். லிங்கனும் அவர்களைத் தன்னுடைய மகன்களைப் போலவே நடத்தி வந்தார்.

1861ம் ஆண்டுப் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் லிங்கன் நிக்கோலாயின் அறைக்கு வந்தார். நிக்கோலாய் எழுதுகிறார்.

‘இன்று மாலை 5 மணி சுமாருக்கு, நான் என் சோபாவில் அரைத் தூக்கத்தில் இருந்தேன். அவரது வருகை என்னை எழுப்பியது. ‘நிக்கொலாய்’ என்று மிகவும் உணர்ச்சிவசப்படக் குரலில் பேசினார். ‘என் மகன் போய் விட்டான் – உண்மையிலேயே போய் விட்டான்!’ என்று கண்களில் கண்ணீர் வழிய தெரிவித்துவிட்டு, அவரது அலுவலகத்திற்குள் சென்று விட்டார்.’

0

உள்நாட்டுப் போரின் அழுத்தத்தில் இருந்து விடுபட லிங்கனிற்கு இருந்த ஒரே வழி, அவரது இரண்டு சிறு மகன்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதுதான். வெள்ளை மாளிகை இரண்டாக்கும்படியாக அந்த இரண்டு சிறுவர்களும் ஓடியும், ஆடியும் விளையாடிக்கொண்டிருந்ததை அவரது காரியதரிசிகள் எழுதியிருக்கிறார்கள். தோல்விகளும் ஏமாற்றங்களும் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்த சிறுவர்கள் அவர்கள்.

1861 பிப்ரவரி மாதம், இரண்டு சிறுவர்களும் காய்ச்சலால் அவதிப்பட ஆரம்பித்தனர். டைபாய்டு காய்ச்சலாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. பிப்ரவரி 20ம் தேதி வில்லியம் லிங்கன் (வில்லி) மரணமடைந்தார். லிங்கனின் வாழ்வில் பெரும் இடி மீண்டும் விழுந்தது.

வில்லியமின் மரணமும், அவன் நோய்வாய்பட்டிருந்த அதற்கு முந்தைய சில நாட்களும் லிங்கனிற்கு மிகவும் சோதனையான நாட்கள். அவர் தனது பிள்ளைகளின் மீது மிகவும் அன்போடிருப்பவர். அவரது வாழ்வின் துயரங்களில் இருந்து விடுவிக்க வந்தவர்கள் என்பது அவரது எண்ணம். அவர்களே அவரது துயரத்தை அதிகரித்தார்கள் என்பது அவரால் தாங்க முடியாததாக இருந்தது.

இதற்கு அடுத்த நாட்களில் அவர் தனக்கான பதிலை கடவுளிடம் தேட ஆரம்பித்தார். முன்பே சொன்னது போல அவர் பொதுவாகத் தேவாலயங்களுக்குச் செல்வதோ, மதச் சடங்குகளைச் செய்வதோ இல்லை. எனவே அவரது தேடலும் அவருக்கே உரித்தானதாக இருந்தது.

மேரி லிங்கனும் வில்லியின் மரணத்திற்குப் பின்னரான மூன்று வாரங்களுக்குப் படுக்கையை விட்டு எழவில்லை. வில்லியின் இறுதி சடங்கிற்குக் கூட வரவில்லை. வில்லியின் மரணம் அவர்களது குடும்பச் சூழலை தலைகீழாக மாற்றியது.

0

மேற்கில் இருந்து கிடைத்த சில வெற்றிச் செய்திகளைத் தவிர வேறு எதுவும்நல்ல விதமாக இல்லை. ஜார்ஜ் மக்கிலெல்லன் வழக்கம் போல, அவரது படையை வெறுமனே அணிவகுப்பு நடத்தவும், பயிற்சி செய்யவும் பயன்படுத்தினாரே அன்றி, போருக்குச் செல்வதாகத் தெரியவில்லை.

தீபகற்பப் போரில் தோற்று ஜூலை 1861ல் திரும்பி வந்த ஜார்ஜ் மக்கிலெல்லன், அதற்கு மேல் போரிடத் தயக்கத்துடன் இருந்தார். ஆனால் ராபர்ட் லீ, எதிரியின் நகர்வை எதிர்பார்ப்பவர் அல்ல. அதுவரை விர்ஜினியாவை நோக்கி நகர்ந்த போரை, வடமாநிலங்களை நோக்கி நகர்த்த முடிவு செய்துவிட்டார்.

மேரிலாண்ட் மாநிலத்தை நோக்கியும், வாஷிங்டன் நகரை நோக்கியும் லீயின் படைகள் நகர ஆரம்பித்தன. தளபதி ஜான் போப்பின் தலைமையில் ஒரு படை லீயைத் தடுத்து நிறுத்த அனுப்பப்பட்டது.

ஆகஸ்ட் மாத இறுதியில் இரண்டு படைகளும் அருகே நெருங்க ஆரம்பித்தன. சிறு சிறு மோதல்களில் இருந்து ஆகஸ்ட் 28ம் தேதி சண்டை ஆரம்பித்தது.

இரண்டாம் புல் ரன் போர், இந்த முறையும் வாஷிங்டனில் இருந்து 30 மைல் தூரத்தில் நடந்தது. இந்த முறை யாரும் சுற்றுலாவிற்கு வரவில்லை. அனைவரும் மிகுந்த கவலையோடு போர் எந்தப் பக்கம் செல்லும் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

போப் முதலில் ‘ஸ்டோன்வால் ஜாக்சன்’னின் படைகளை எதிர் கொண்டார். ஆகஸ்ட் 28ம் தேதி நடந்த போரில் உயிர் இழப்பு அதிகமாக இருந்தது. ஜாக்சன் எந்தக் காரணத்தைக் கொண்டும் தன்னுடைய நிலையை விட்டுக்கொடுப்பவர் இல்லை. அதனாலேயே அவருக்குக் காரணப்பெயராக ‘கற்சுவர்’ என்பது இருந்தது. எனவே ஆகஸ்ட் 29ம் தேதி நடந்த மிகவும் பயங்கரமாக நடந்த சண்டையில் பெரிதாக எந்த முடிவும் எட்டப்படவில்லை.

மூன்றாவது நாளான ஆகஸ்ட் 30 அன்று லீ தனது பதில் தாக்குதலைத் துவக்கினார். இதற்கிடையே ஜார்ஜ் மக்கிலெல்லனின் படைகள் வாஷிங்டனிற்கு அருகில் வந்திருந்தன. ஆனால் ஜார்ஜ் மக்கிலெல்லன், போப்பிற்கு உதவ விரும்பவில்லை. போப்பின் தோல்வி தனக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணினார். எனவே, ஜார்ஜ் மக்கிலெல்லன் அருகில் இருப்பது தெரியாத போப் எதிர் தாக்குதலை எதிர்கொண்டார். ஆனால், குதிரைப்படையுடன் இணைந்து, லீ நடத்திய தாக்குதலின் வேகத்தில் அமெரிக்க ஒன்றிய படை நிலை குலைந்தது. 30ம் தேதி மாலைக்குள் லீ மிகப்பெரிய வெற்றியை அடைந்திருந்தார்.

ராபர்ட் லீயின் வெற்றிச் செய்தி வாஷிங்டனில் அதிர்வை ஏற்படுத்தியது. லீயின் படைகள் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், வடமாநிலங்கள் அனைத்தும் லீயின் பாதையில் இருக்கும்.

லீக்கும் வாஷிங்டனுக்கும் இடையே இப்போது ஜார்ஜ் மக்கிலெல்லனின் படைகள் மட்டுமே இருந்தன.

0

வில்லியின் மரணத்திற்குப் பின்னான நாட்களில், லிங்கன் கறுப்பர்களை விடுதலை செய்யக்கூடிய சட்ட சாசன திருத்தம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். அதற்கு முன்பாகச் சில சட்டங்களை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

ஜூன் 1862ல் இரண்டு சட்டங்கள் நிறைவேறின. முதலில், அமெரிக்காவில் எல்லாப் புதிய பிரதேசங்களிலும் (மாநிலங்களில் இல்லை) அடிமை முறையைச் சட்டவிரோதமாக்கியது. இரண்டாவதாக, வடமாநிலங்களுக்குத் தப்பி வரும் அடிமைகள், தானாகவே விடுதலையடைந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்ற சட்டமும் நிறைவேறியது. ஆனாலும் இவை அனைத்தையும் சட்ட சாசனத்தில் எழுதி வைப்பதன் மூலமாக நிரந்தரமாக வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது.

அந்தச் சட்டத்தின் முதல் வரைவை லிங்கன், தன்னுடைய அமைச்சரவைக்கு ஜூலை 13ம் தேதி வாசித்துக் காட்டினார். ஆனாலும் இன்னமும் பல படிகள் செல்ல வேண்டியிருந்தது.

ஆனால், ஒன்றிய ராணுவம் வரிசையாகப் பெற்றுக் கொண்டிருந்த தோல்விகள் அவரது திட்டத்தையும் பாழ்படுத்திவிடும் போலிருந்தது. அத்தனை தோல்விகளுக்கிடையே இந்தச் சட்ட வரைவு, தோல்வியில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழியாகவே உலகத்தின் கண்களில் தெரியும் என்று நினைத்தார். எனவே, சட்ட சாசன வரைவை அமுல்படுத்தவாவது அவருக்கு வெற்றித் தேவைப்பட்டது.

0

லிங்கனின் துயரத்துடன் இந்த அத்தியாயத்தைத் துவக்கினோம். அவர் வக்கீலாகப் பணிபுரிந்தபோது அவருடன் வக்கீல் தொழிலை கூட்டாகச் செய்து வந்த வில்லியம் ஹெர்ன்டான், அவரைப் பற்றிக் கூறியதைப் பார்ப்போம்.

‘அவர் மிகவும் சோகமான மனிதர்; அவர் நடக்கும் போது துக்கம் சொட்டுவதை உணரலாம்… லிங்கனை பார்த்த, தெரிந்திருந்த எவரும் அவரது துயரத்தை கவனிக்காமல் இருந்ததில்லை.’

ஆனாலும் பொதுவெளியில் லிங்கன் மிகவும் உற்சாகமான, வேடிக்கையான குட்டிக்கதைகளைச் சொல்பவராக, ஒரு விதமான கிராமத்து கோமாளியாகவே பார்க்கப்பட்டார். அப்படியென்றால் உண்மையான லிங்கன் யார் என்பது இன்னமும் பலராலும் விவாதிக்கபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *