நரகத்தைவிட மோசமான இடம் ஒன்று இருந்தால், நான் அதில்தான் இருப்பேன்.
– ஆபிரகாம் லிங்கன்.
மேற்கே நடந்து கொண்டிருந்த போரையும், கிராண்ட்டையும் நாம் ஷைலோவில் விட்டுவிட்டு வந்தோம். ஷைலோவின் வெற்றி கிராண்டிற்குப் புகழை கொடுத்தாலும், ராணுவத்திற்குள் அவரது உயரதிகாரிகள் – ஹாலக் முதலியோர் – இன்னமும் அவர் மீது திருப்தியில்லாமல் இருந்தார்கள்.
ஷைலோவிற்குப் பின்னர், ஜெனரல் ஹாலக் படைகளை நடத்திச் சென்று கோரின்த் நகரை கைப்பற்றினார். படைகளை இரண்டாகப் பிரித்து, ஒரு படைக்கு கிராண்ட்டைத் தளபதியாக நியமித்தார். டென்னிசி மாநிலம் இப்போது கிராண்டின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. சிறு சிறு சண்டைகளில் வெற்றி பெற்றாலும், 1862 வேறு பெரிய சண்டைகள் இல்லாமலேயே அவருக்குக் கழிந்தது.
மேற்கில் மற்றொரு பெரிய படையின் தளபதியான டான் பூயல், கென்டக்கி மாநிலத்தில் இருந்தார். ஆன்டிடம் போர் நிகழ்ந்த அதே நேரத்தில், மற்றொரு கூட்டமைப்புப் படை கென்டக்கி மாநிலத்தைக் கைப்பற்ற வந்தது. பெர்ரிவில் என்ற இடத்தில் அக்டோபர், 1862இல் நடந்த சண்டையில் பூயல் தோல்வியடைந்தாலும், கூட்டமைப்பின் படைகள் பின்வாங்கிவிட்டன.
மீண்டும் கோரின்த் நகரைக் கைப்பற்ற வந்த தென் மாநிலப் படைகளை, கிராண்ட் தோற்கடித்தார். லிங்கன் விடுதலைப் பிரகடனத்தை அறிவித்தவுடன், கிராண்ட் தன்னுடைய படைகளில் தகுதியுள்ள கறுப்பர்கள் வீரர்களாகச் சேரலாம் என்று அறிவித்துவிட்டார். 1862 இறுதியில், மிஸ்ஸிஸிப்பி நதியின் முக்கிய நதிக்கரை நகரான விக்ஸ்பர்க்கைக் கைப்பற்றுமாறு அவருக்குக் கடிதம் எழுதினார் லிங்கன்.
0
ராபர்ட் எட்வர்ட் லீயின் தந்தை விர்ஜினியாவில் பெரும் தோட்டமும், தோட்டத்தில் வேலை செய்யப் பல அடிமைகளும் வைத்திருந்தவர். ராபர்ட் லீ தோட்டத்தில் இளவரசரைப் போல வளர்ந்தவர், கல்லூரி செல்லும் வயது வந்ததும், தந்தை அவரை வெஸ்ட் பாயிண்ட் ராணுவப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார். அங்கு அவர் பொறியியலாளராகப் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்தவுடன் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார்.
அவரது மனைவி, மேரி அன்னா கஸ்டிஸ், அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவரான ஜார்ஜ் வாஷிங்டனின் கொள்ளுப் பேத்தியாகும். விர்ஜினியா மாநிலத்தின் அதிகார மையத்தில் இருந்த அனைவரும், ராபர்ட் லீயின் குடும்பத்துடன் நெருக்கமானவர்கள். அவரது மனைவியின் வழியில் அவர் அமெரிக்காவின் முதல் குடும்பத்திற்கும், அதன் மூலமாக அமெரிக்க அரசியலின் மைய அதிகாரத்திற்கும் நெருக்கமாகவே இருந்தார்.
1846ல் மெக்ஸிகோவுடனான போரில் பெரும் திறமையுடன் போரிட்டதால் விரைவாகப் பதவி உயர்வு பெற்று, அமெரிக்க ராணுவத்தின் குறிப்பிடத்தக்க தளபதிகளில் ஒருவராக இருந்தார்.
அவரது குடும்பமும், அவரது மனைவியின் குடும்பமும் பல அடிமைகளுக்குச் சொந்தக்காரர்கள். லீ தன்னுடைய உயிலில் அனைத்து அடிமைகளுக்கும் விடுதலை கொடுப்பதாகத் தெரிவித்திருந்தாலும், அவர் அடிமை முறையைப் பற்றி வெளிப்படையாக அரசியல் ரீதியான எந்தக் கருத்தையும் தெரிவித்ததில்லை.
அவரது மாமனார் இறந்தபோது, மாமனாரின் தோட்டத்தில் இருந்த பல அடிமைகளை அவர் விற்றார். தோட்டத்தில் இருந்த மூன்று அடிமைகள் தப்பித்துப் பென்சில்வேனியாவிற்கு ஓடியபோது, அவர்களைத் திரும்பவும் பிடித்துக் கொண்டு வர எல்லா முயற்சிகளும் எடுத்தார். அவர்கள் பிடிபட்டவுடன், தோட்டத்தில் இருந்த கம்பத்தில் கட்டி ஆளுக்கு ஐம்பது கசையடிகள் கொடுக்கச் செய்தார். அவரே சில கசையடிகளைக் கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது. மற்ற வெள்ளை தென் மாநிலத்தவர்களைப் போலவே, அவர் அடிமை முறையை முழுமையாக ஆதரிக்கவில்லை என்றாலும், எந்த விதத்திலும் எதிர்க்கவும் இல்லை என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ராபர்ட் லீ, ராணுவத்தைத் தன்னுடைய முழுநேரத் தொழிலாகப் பார்த்தார். அதில் மிகுந்த திறமையுடையவராகவும் இருந்தார். அவரது வீரர்களை நல்ல முறையில் நடத்துவது, போரில் இழப்புகளை முடிந்த வரை தவிர்ப்பது என்று நல்ல தளபதிக்குரிய அனைத்து குணங்களும் அவரிடம் இருந்தன.
லிங்கன் குடியரசுத் தலைவராகத் தேர்வானது பற்றி அவர் எந்தக் கருத்தும் தெரிவித்ததாகத் தெரியவில்லை. 1860இல் லிங்கன் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல ஆரம்பித்தன. அந்த நேரத்தில் அவர் டெக்சாஸ் மாநிலத்தில் இருந்தார். டெக்சாஸ் மாநிலத்தின் ஒன்றிய தளபதி, டேவிட் ட்விக்ஸ், தனது ராணுவத்தையும், ஒன்றிய அரசின் கோட்டைகளையும் டெக்சாஸ் மாநிலத்திடம் ஒப்படைத்துவிட்டு, தானும் தென் மாநில கூட்டமைப்பின் ராணுவத்தில் சேர்ந்துவிட்டார். ஆனால் ராபர்ட் லீ டெக்ஸாஸில் இருந்து வாஷிங்டனிற்குத் திரும்பினார்.
விர்ஜினியா இன்னமும் பிரிந்து செல்வது பற்றி யோசித்துக் கொண்டிருந்தது. லீ, பிரிவினைக்கு எதிராக இருந்தாலும், தன்னுடைய விசுவாசம் எங்கே இருக்கிறது என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தார். மார்ச் 1861ல், புதிய குடியரசு தலைவர் லிங்கன் அவரை மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்தினார்.
அப்போதைய அமெரிக்க ஒன்றியப் படைகளின் தலைமை தளபதியான வின்பீல்ட் ஸ்காட், ராபர்ட் லீயை வரப்போகும் போரில் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக நியமிக்கும்படி சிபாரிசு செய்தார். லிங்கனும் தயாராக இருந்தார். ஆனால், அதற்குள் விர்ஜினியா ஒன்றியத்தில் இருந்து பிரிந்துவிடுவதாக அறிவித்தது.
லிங்கனின் தனி ஆலோசகரான பிரான்சிஸ் பிளேயர், லீயைத் தளபதியாக நியமிக்கும் ஆணையைக் கொடுக்கும்போது, லீ மறுத்துவிட்டார்.
‘திரு. பிளேயர், பிரிவினையைச் சட்டமில்லாத நிலையாகத்தான் பார்க்கிறேன். தெற்கில் என்னிடம் நான்கு லட்சம் அடிமைகள் இருந்தால், அவர்கள் அனைவரையும் ஒன்றியத்தின் ஒற்றுமைக்காகத் தியாகம் செய்திருப்பேன்; ஆனால் என்னுடைய சொந்த மாநிலமான, விர்ஜினியாவிற்கு எதிராக எப்படி என் வாளைத் தூக்குவேன்?’
விர்ஜினியா திரும்பிய அவருக்கு விர்ஜினியா படையின் தளபதி பொறுப்புக் கொடுக்கப்பட்டது. முதல் வருடத்தில் அதிகமாக நேரடி போரில் அவர் ஈடுபடவில்லை என்றாலும், தீபகற்பப் போரின் போது அவர் ஒன்றிய ராணுவத்தைப் பல முனைகளில் தோற்கடித்தது, தென் மாநிலங்களில் அவருக்குப் புகழை கொடுத்தது.
அப்போதிருந்து, ராபர்ட் லீயின் படைகளின் தொடர் வெற்றிகள், கிழக்கில் இருந்த ஒன்றிய ராணுவத்திற்கு, குறிப்பாக அதன் தளபதிகளுக்கு நடுக்கத்தைக் கொடுத்திருந்தது.
0
ஆன்டிடம் போருக்கு பின்னரான நாட்களில், ஜார்ஜ் மக்லெலன் திரும்பவும் தனது படைகளுடன் அமைதியாக இருந்துகொண்டார். இதற்குள் லிங்கன் தனது பொறுமையை இழந்துவிட்டார்.
முதலில் மேற்கு போர்முனையில் தோல்வியைத் தழுவியிருந்த மேஜர் ஜெனரல் டான் பூயலை மாற்றினார். அதைக் கண்டாவது மக்லெலன் தன்னுடைய வேகத்தை அதிகரிப்பார் என்று எதிர்பார்த்த லிங்கனிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே நவம்பர் 5, 1862 அன்று மக்லெலனை போடோமக் படைகளின் தளபதி பதவியில் இருந்து விலக்கினார். அந்த இடத்திற்கு மேஜர் ஜெனரல் அம்ப்ரோஸ் பர்ன்சைட் நியமிக்கப்பட்டார்.
உடனடியாகப் படைகளை நகர்த்தி, ரிச்மன்டைக் கைப்பற்ற வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது.
0
மேஜர் ஜெனரல் அம்ப்ரோஸ் பர்ன்சைட் புகழ் பெற்றது போர் திறமைக்காக அல்ல. அவரது முகத்தில் அடர்த்தியாக இருபுறமும் இருந்த கிருதா, அப்போது இளைஞர்களால் விரும்பப்பட்டு, அடர்த்தியான கிருதாக்கள், அவரது பெயராலேயே ‘Sideburns’ என்று அழைக்கப்பட்டது.
ஆனால், பர்ன்சைட் நல்ல தளபதிதான். சுதந்திரமாகச் செயல்படுபவர் என்பதால் அவர் சில வெற்றிகளைப் பெற்றிருந்தார். ஆனால் அவர் இதுவரை கையாண்ட படைகளை விடப் பல மடங்கு பெரிய படையை எதிர்கொள்ளமுடியுமா, ராபர்ட் லீக்கு எதிராக வெற்றியைப் பெற முடியுமா என்பதுதான் கேள்வி.
குளிர் காலம் ஆரம்பிக்கச் சில வாரங்களே இருந்தாலும், பர்ன்சைட் காத்திருக்க விரும்பவில்லை. இந்த முறை அவர் நிலத்தின் வழியே சென்று ரிச்மன்டை அடைவதுதான் அவரது திட்டம். வழியில் ராபர்ட் லீயின் படைகளுடன் மோதுவதையும் எதிர்பார்த்துதான் இருந்தார். ஆனால் நிலவழியாகச் செல்லும் போது, அவர் ரிச்மன்டிற்கு முன் இருந்த ரப்பஹன்னாக் (Rappahannock) நதியைக் கடக்க வேண்டும். அதற்கு அவருக்கு மிதவை பாலம் தேவைப்பட்டது.
பர்ன்சைட்டின் படையில் அப்போது 1,22,000 வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் நதியை கடக்க, ஆறு பாலங்கள் தேவைப்படும் என்பதால், அவரது தேவைகளை வேண்டுதலாகப் போர் மற்றும் பாதுகாப்பு துறைக்கு அனுப்பிவிட்டு, தன்னுடைய படைகளை நடத்திக் கொண்டு ரிச்மன்டை நோக்கி கிளம்பினார்.
நவம்பர் 7ஆம் தேதி கிளம்பிய அவரது படை, ரப்பஹன்னாக் நதியை நவம்பர் 15ஆம் தேதி வந்தடைந்தது. ஆனால் பாலம் கட்ட தேவையான மிதவைகள் இன்னமும் வந்து சேரவில்லை. வாஷிங்டனின் அரசாங்க துறைகள், போரில் வேகத்தின் முக்கியத்துவத்தை உணரவில்லை. எல்லாக் கையெழுத்துக்களும் பெறப்பட்டு, மிதவைகளைக் கொண்டு செல்ல தேவையான வண்டிகள், குதிரைகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு, முதல் பாலத்தின் பொருட்கள் பர்ன்சைட்டை நவம்பர் 25ம் தேதிதான் அடைந்தது.
நதியின் மறுபுறம் இருந்த பிரெடெரிக்ஸ்பர்க் நகரில், நவம்பர் 15ம் தேதி வெறும் 500 கூட்டமைப்புப் படை வீரர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆனாலும் பர்ன்சைட் நதியைப் படகுகளில் கடந்து தாக்க தயங்கினார். அதுவே அவரது முதல் தோல்வியானது. பாலத்திற்கான பொருட்கள் வந்து சேர்ந்த நவம்பர் 25ஆம் தேதிக்குள், ராபர்ட் லீ, பர்ன்சைட்டின் படையின் நிலையைத் தெரிந்துகொண்டு, தன்னுடைய படைகளை நதியின் மறுபக்கத்தில் இருந்த மேட்டின் மீது நிறுத்திக்கொண்டார். அப்போதும் அவரிடம் 18,000 வீரர்கள் மட்டுமே இருந்தார்கள்.
ஆனால் இப்போது வானிலை மாறியது. மழையும் பனியும் விழ ஆரம்பித்தது. ஒரு வாரம் தொடர்ந்த இந்த வானிலை, குளிர்காலத்தின் ஆரம்பத்தைக் கூறியது. அத்தோடு, லீயின் மற்ற தளபதிகளும் தங்களது வீரர்களுடன் வந்து அவரைப் பலப்படுத்த தேவையான அவகாசத்தைக் கொடுத்தது.
இப்போது பாலங்களை அமைப்பதே பெரும் தாக்குதலுக்கு இடையில் என்பதில் சந்தேகமில்லை. டிசம்பர் 11ஆம் தேதி ஆரம்பித்த பாலம் அமைக்கும் பணி, மிகுந்த உயிர் சேதங்களுக்கு இடையே 12ஆம் தேதி முடிந்தது. பல வீரர்களும், பொறியாளர்களும் அதற்குள் தங்கள் உயிரை இழந்திருந்தார்கள்.
13ஆம் தேதி ஒன்றியப் படைகள் பிரெடெரிக்ஸ்பர்க் நகருக்குள் நுழைய ஆரம்பித்தன. ஒவ்வொரு தெருவிலும் வீட்டிலும் சண்டை நடந்தது. மிகுந்த சிரமத்திற்கு இடையே படைகளின் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவும் பெரும் இழப்புகளுடனும் இருந்தது.
மெதுவாக முன்னேறிய ஒன்றியப் படைகள், நகரின் வெளியே இருந்த மேரிஸ் ஹைட் என்ற இடத்தின் சாலைக்கு வந்து சேர்ந்தார்கள். இந்த இடம் சிறிய குன்றின் மீதிருந்தது. அந்தக் குன்றின் மீது இருந்த கற்சுவரின் பின்னால் இருந்த மாநிலக் கூட்டமைப்பின் படைகள், தங்களை நோக்கி வந்த ஒன்றியப் படைவீரர்களைக் குருவி சுடுவது போலச் சுட ஆரம்பித்தார்கள்.
இங்கே இரண்டு பெரிய சோகங்கள் நிகழ்ந்தன. ஒன்று, பர்ன்சைட்டின் உத்தரவுகள் தெளிவாக இல்லாத காரணத்தால், படைகள் ஒன்றாகக் கற்சுவற்றை நோக்கி முழுத்தாக்குதலாக நடத்தாமல், பிரிந்து ஒவ்வொரு டிவிஷன்களாக (கிட்டத்தட்ட 5000 வீரர்கள்) தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதனால் தென் மாநிலப் படைகள் எளிதாகத் தாக்குதலை எதிர்கொள்ள முடிந்தது.
இரண்டாவது சோகம், தாக்குதல் சரியாகச் செல்லவில்லை என்பது தெரிந்தும், அங்கிருந்த எந்த ஒன்றியப் படை தளபதியும் அதை நிறுத்தவில்லை. காலை 10 மணிக்கு ஆரம்பித்த இந்தத் தாக்குதல், மாலைவரை தொடர்ந்தது. மொத்தம் ஏழு டிவிசன்கள், பதினான்கு முறை தாக்குதலை நடத்தின. ஒன்றியப் படையின் ஒரு வீரர்கூட, கற் சுவருக்கு அருகில் கூடச் செல்ல முடியவில்லை. அந்த இடத்தில் மட்டும் 7000-9000 வீரர்கள் இறந்து அல்லது காயப்பட்டுக் கிடந்தார்கள்.
மற்ற இடங்களில் நடந்த தாக்குதல்களும் இது போன்றே தவறுகளால் நிரம்பியிருந்தது. லீயின் படையை விட மூன்று மடங்கு பெரிய படையைக் கொண்டிருந்த பர்ன்சைட், தவறு மீது தவறாகச் செய்து தோல்வியைத் தேடிக் கொண்டார். மறுநாள் தாக்குதல் நடத்த எந்த மனஉறுதியும் இல்லாததால், படையைப் பின்வாங்க செய்து, அடுத்த இரண்டு நாட்களில் அங்கிருந்து வெளியேறினார்.
இந்தத் தோல்வியும், ஒன்றியப் படை ஒரே நாளில் 13000 வீரர்களை இழந்ததும், லிங்கன் மனதைப் பாதித்தது. தனக்கு நரகத்தை விட மோசமான இடத்தில்தான் இடம் இருக்கும் என்று கூறிய அவரது மனஉறுதியும் கூடச் சற்றுக் குலைந்துதான் போனது.
வடமாநிலங்கள் முழுவதும், லிங்கன் போரை மோசமாக நடத்துவதாக விமர்சனங்கள் எழுந்தது. அவருக்குப் பதிலாக அமெரிக்கச் செனட் போருக்குப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.
ராபர்ட் லீயின் வெற்றி, தென் மாநிலங்களின் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அடுத்த வருடமும் போர் தொடரும் என்று எல்லா இடங்களிலும் வருத்தம் பரவியது.
படைகள் பின்வாங்கிய ஒரே மாதத்தில், பர்ன்சைட் அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். லிங்கன் போரை நிறுத்தப் போவதில்லை என்பதை மட்டும் உறுதியாகக் கொண்டு, 1863ஆம் வருடத்தை எதிர்நோக்கி இருந்தார்.
(தொடரும்)
ஆதாரம்
1. Team of Rivals: The Political Genius of Abraham Lincoln – Doris Kearns Goodwin
2. The Battle of Fredericksburg – James Longstreet (https://en.wikisource.org/wiki/The_Battle_of_Fredericksburg)
3. The Civil War Volume II: Fredericksburg to Meridan – Shelby Foote