மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலித்தனமானது கோழிதான். ஏனென்றால் அது தன்னுடைய முட்டையை இடும் வரை சத்தமிடுவது இல்லை.
– ஆபிரகாம் லிங்கன்.
அமெரிக்க உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டுமே 7-10 லட்சம் என்று பார்த்தோம். இதில் போரில் கிடைத்த காயங்களினால் இறந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். அன்றைய மருத்துவ வசதி மிகவும் குறைவாகவே இருந்ததே இதற்குக் காரணம். நுண்ணுயிரிகள் பற்றியோ நோய்கள் பற்றியோ சரியான புரிதல் அன்று இல்லை.
செவிலியராக ஆண்களே பணிபுரிந்து வந்தனர். அமெரிக்காவின் முதன்மை கவிஞரும் தத்துவவாதியுமான வால்ட் விட்மனின் சகோதரர், போர்வீரராக ஒன்றியப் படையில் சண்டையிட்டு வந்தார். ஆன்டிடம் போரில் காயப்பட்டவர்களில் அவரும் ஒருவர். அவரைப் பார்ப்பதற்காக வாஷிங்டனில் இருக்கும் மருத்துவமனைக்கு வந்த வால்ட் விட்மன், மருத்துவமனையில் இருந்த நிலையைப் பார்த்து, அப்படியே செவிலியராகப் பணிபுரிய ஆரம்பித்தார். போர் முடியும்வரை பணிபுரிந்து கொண்டிருந்தார்.
ஐரோப்பாவில் நடந்த கிரிமியா போரின் போதே முதல் முறையாகப் பெண்கள் செவிலியராகப் பெரிய எண்ணிக்கையில் பணிபுரிந்தார்கள். அமெரிக்காவில் இந்த மாற்றத்தை உள்நாட்டுப் போர் கொண்டு வந்தது. அதுவரை ஆண்கள் பெரும்பான்மையாகச் செவிலியராக இருந்த நிலையில், உள்நாட்டுப் போரின் போது பெண்களும் செவிலியராகப் பணிபுரிய ஆரம்பித்தார்கள்.
அப்படியான செவிலியரில் ஒருவர் கிளாரா பர்டன். வாஷிங்டன் நகரில் வாழ்ந்து வந்த அவர், அங்கிருந்த ரயில் நிலையத்திற்கு வரும் காயமடைந்த வீரர்களுக்குப் பணி புரிய ஆரம்பித்தார். அப்படியே, பல போர்முனை மருத்துவமனைக்கும், மருத்துவப் பொருட்களைக் கொண்டு சென்று கொடுக்கவும், மருத்துவமனைகளைச் சுத்தம் செய்யவும் அவர் உதவினார். வடமாநிலங்களில் மருத்துவமனைகளுக்குத் தேவையான பொருட்களை நன்கொடையாகப் பெற்று, போர்முனைக்குச் சென்று கொடுத்தார்.
பின்னாளில், அமெரிக்க ரெட் கிராஸ் நிறுவனத்தை அமெரிக்காவில் நிறுவினார். போரின் இறுதி நாட்களில், காணாமல் போனவர்கள் என்று குறிக்கப்பட்ட வீரர்களையோ, அவர்களது அடையாளம் தெரியாத கல்லறைகளையோ கண்டறிந்து, அவர்களது குடும்பத்தினரிடம் தெரிவிப்பதைத் தன்னுடைய கடமையாகக் கொண்டார். ‘அமெரிக்காவின் பிளாரென்ஸ் நைட்டிங்கேல்’ என்று அவரது சேவைகளுக்காக அழைக்கப்பட்டார்.
0
‘வெள்ளை மாளிகை.
வாஷிங்டன். ஜனவரி 26. 1863.
மேஜர் ஜெனரல் ஜோசப் ஹூக்கர்.
ஜெனரல்,
உங்களைப் போடோமக் படையின் தலைமை தளபதியாக நியமித்திருக்கிறேன். அதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாக நான் கருதினாலும், உங்கள் மீது சில விஷயங்களில் எனக்கு அதிருப்தி இருக்கிறது. நீங்கள் மிகவும் வீரமும் திறமையுமான போர்வீரர் என்று எனக்குத் தெரியும். அத்தோடு நீங்கள் உங்கள் தொழிலில் அரசியலைக் கலப்பதில்லை என்பதும் தெரியும். உங்களது தன்னம்பிக்கையும் மிகவும் தேவையான குணமாகும்…
நமது ராணுவத்திற்கும் அரசிற்கும் சர்வாதிகாரி தேவை என்று நீங்கள் கூறியதாக நம்பத்தகுந்த வகையில் எனக்குத் தகவல் கிடைத்தது. வெற்றியடையும் தளபதிகள் மட்டுமே சர்வாதிகாரிகளை நியமிக்க முடியும். நான் கேட்பதெல்லாம் போரில் வெற்றிதான். அதற்காகச் சர்வாதிகாரத்தையும் எதிர் நோக்க துணிந்துவிட்டேன்… தளபதிகளை நம்பக்கூடாது என்றும், அவர்களைக் குறை சொல்லவும் நீங்கள் உங்கள் படைகளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். இப்போது அவர்கள் உங்களை நோக்கி திரும்புவார்கள். அதைச் சமாளிக்கத் தேவையான உதவிகளை நானும் உங்களுக்குத் தருவேன். நீங்களோ அல்லது இப்போது உயிரோடிருந்தால், நெப்போலியனோ கூட அப்படிப்பட்ட படைகளை வழிநடத்த முடியாது. ஆனால் அவசரப்படாதீர்கள். அவசரப்படாமல், ஆற்றலுடனும், உறக்கமில்லா விழிப்புடனும் முன்னேறி சென்று, எங்களுக்கு வெற்றிகளைத் தாருங்கள்.
தங்கள் உண்மையுள்ள
ஆபிரகாம் லிங்கன்
0
பிரெடெரிக்ஸ்பர்க்கில் கிடைத்த பெரும் தோல்வியினால் ஒன்றிய ராணுவம் துவண்டு போயிருந்தது. அனைத்துப் பக்கங்களிலும் இருந்து வந்த குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் லிங்கனை மட்டுமல்ல, படைகளையும் வெகுவாகப் பாதித்திருந்தது. லிங்கன் தனது முதல் நடவடிக்கையாகப் பர்ன்சைட்டைப் பதவியில் இருந்து விலக்கினார். அவருக்குப் பதிலாக ‘ஃபைட்டிங் ஜோ’ (Fighting Joe) என்றழைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஜோசப் ஹூக்கரை நியமித்தார்.
ஜோசப் ஹூக்கர் அவரது படைப்பிரிவின் வீரர்களிடைய மிகவும் பிரபலமானவர். குடிப்பதில் நல்ல ஆர்வமும், பெண்களிடையே மிகவும் பிரபலமாகவும் இருந்தார். அதுவரை இருந்த மற்ற தளபதிகளைவிட மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர். சில நேரங்களில் லிங்கனையும் விமர்சித்திருந்தார். இருந்தாலும், தனக்கு வெற்றிகளைக் கொடுக்கும் தளபதி ஒருவர் கிடைத்தால் போதும் என்று லிங்கன் முடிவிற்கு வந்தார்.
ஆனால், போருக்கு முன்னே, தோல்விகளால் துவண்டிருந்த படைவீரர்களுக்குத் திரும்பவும் வெற்றியைப் பற்றிய நம்பிக்கையைக் கொடுக்க வேண்டியிருந்தது. குளிர்காலம் இன்னமும் மூன்று மாதங்கள் இருந்ததால், அதற்குள் படையின் உற்சாகத்தைத் திரும்பவும் கொண்டு வந்து, வீரர்களை அடுத்த போருக்கு தயார்படுத்துவது இன்றியமையாததாக இருந்தது.
எனவே ஹூக்கர் முழு மூச்சாகப் படையைத் திரும்பவும் சீரமைக்க ஆரம்பித்தார். ஹூக்கர் சண்டையை எப்படிப் போடுவார் என்பதை இனிதான் பார்க்கப் போகிறோம். ஆனால் படைகளைத் திரும்பவும் தயார் செய்வதை மிகவும் சரியாகச் செய்தார்.
ஆனாலும் ஹூக்கரின் தன்னம்பிக்கை சில நேரங்களில், தற்பெருமையாக இருக்கும். உதாரணமாக, ‘ராபர்ட் லீக்குக் கடவுள்தான் கருணை காட்ட வேண்டும். ஏனென்றால் நான் கருணை காட்டப் போவதில்லை’ என்பது போலப் பெருமை பேசிக் கொள்வது அவரது பழக்கம். இதனாலேயே லிங்கன் கோழி ஏன் புத்திசாலித்தனமானது என்று சொல்ல வேண்டி வந்தது.
ஏப்ரல் மாதத்தில் லிங்கன், தன்னுடைய புதிய, உற்சாகமான படையை நேராகச் சென்று ஆய்வு செய்தார். உடனடியாக லீயைத் தோற்கடிக்கத் தேவையானவற்றைச் செய்யுமாறு ஹூக்கரை கேட்டுக்கொண்டார்.
மற்ற தளபதிகளைப் போலல்லாது, ஹூக்கரும் போருக்கான திட்டத்துடன் தயாராகவே இருந்தார். அவரது படையில் இப்போது 130000 வீரர்கள் இருந்தார்கள். லீயை எங்கே சந்திப்பது என்றும் எப்படிச் சந்திப்பது என்றும் விரிவாகத் திட்டம் வகுத்திருந்தார்.
0
லீயின் நிலை நேர்மாறாக இருந்தது. தொடர்ந்த வெற்றிகளால் அவரது படைகள் மிகவும் உற்சாகத்துடன் இருந்தாலும், இரண்டு வருட தொடர் போரும், வடக்கு மாநிலங்கள் கப்பல் போக்குவரத்திற்கு விதித்திருந்த தடைகளும் மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்திருந்தன. உணவும் ஏனைய பொருட்களும் கிடைப்பது சவாலாக இருந்தது. லீயின் படைகளின் உணவு ரேஷன் ஏற்கனவே பாதியாகக் குறைக்கப்பட்டிருந்தது.
லீயின் படையில் 60000 வீரர்கள் இருந்தார்கள். சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் உணவைச் சேகரிக்க அவர்களில் 15000 வீரர்களைத் தளபதி லாங்ஸ்ட்ரீட் தலைமையில் அனுப்பி வைத்தார். தன்னை விடப் பெரிய படையை எதிர்கொள்ளும்போது, படையைப் பிரிக்கக்கூடாது என்பது நெப்போலியன் போர் பாடத்தின் முதல் விதி. லீ, தன்னுடைய படையைப் பிரித்ததன் மூலம் அதை மீறிவிட்டார்.
ஏப்ரல் 27, 1863 அன்று ஹூக்கரின் படைகள் மீண்டும் ரப்பஹன்னாக் நதிக்கரைக்கு வந்து சேர்ந்தது. ஆனால் இந்த முறை ஹூக்கர் இன்னொரு திட்டம் வைத்திருந்தார். தன்னுடைய படையின் ஒரு பகுதியை லீயின் படைகளுக்கு முன்னே நிறுத்திவிட்டு, இன்னொரு பகுதியை நதியின் கரையோரமாக வடக்கே அனுப்பி, அங்கே நதியை கடந்து, லீயின் படையின் பின்புறமாக வருவதுதான் அந்தத் திட்டம். இரண்டு படைகளுக்கும் இடையில் லீ சிக்கிக் கொள்வார் என்பதுதான் ஹூக்கரின் திட்டம்.
முதல் மூன்று நாட்களில் எல்லாம் சரியாகவே நடந்தது. லீயின் படைகளுக்கு முன்னே நதியை கடந்து, தளபதி செட்ஜ்விக் லீயை நேருக்கு நேராகச் சந்தித்தார். ஹூக்கரின் படைகள் அவர் எதிர்பார்த்தது போலவே, வெற்றிகரமாக நதியை கடந்து லீயின் படைகளின் இடது புறமாக வர ஆரம்பித்தன. அங்கே இருந்த சான்செல்லர்ஸ்வில் என்ற கட்டடத்தின் அருகில் இருந்த வெளியில் அவரது படைகள் ஒன்று சேர ஆரம்பித்தன. அப்போதே, ஏப்ரல் 29ம் தேதி அவர்களுடன், ஹூக்கரும் அங்கே வந்துவிட்டார். ஆனாலும் முழுத் தாக்குதலுக்கான உத்தரவிற்காகக் காத்திருந்தனர். அந்த உத்தரவு வரவேயில்லை.
சரியான நேரத்தில் ஹூக்கர் முடிவெடுக்க முடியாது திணறினார். இரண்டு மடங்கு பெரிய படையை வைத்திருந்தாலும், லீயின் படைகளை நேருக்கு நேர் கண்டவுடன், அவரால் முடிவெடுக்க முடியவில்லை.
ஏப்ரல் 30ம் தேதியும் வந்து போனது. வழக்கம் போல, ஒன்றியப் படைகள் எதுவும் செய்யப்போவதில்லை என்பதை லீ உணர்ந்தார். தனக்கு முன்னே இருந்த செட்ஜ்விக் வெறுமனே பயமுறுத்துகிறார் என்பதையும், தன்னைத் தாக்க போவதில்லை என்றும் முடிவு செய்து, தன்னுடைய படையைத் திரும்பவும் இரண்டாகப் பிரித்தார். செட்ஜ்விக்கிற்கு முன்னே வெறும் 9000 வீரர்களை மட்டும் நிறுத்திவிட்டு, மீதியிருந்த 31000 வீரர்களுடன் சான்செல்லர்ஸ்வில் வந்து சேர்ந்தார்.
மே 1ஆம் தேதி காலை இரண்டு படைகளும் இங்கும் அங்குமாக மோதிக் கொண்டன. இரண்டு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தன. ஹூக்கர், அதிர்ச்சி தரும் விதமாக, தன்னுடைய படைகளைத் தாக்குவதற்கு உத்தரவிடாமல், பின்வாங்கி ஒன்றாகச் சேருமாறு உத்தரவிட்டார். அந்த வினாடியே, ஹூக்கரின் போர் முடிந்துவிட்டது. அவர் முழுவதுமாக முடிவெடுப்பதை லீயிடம் தந்துவிட்டார்.
ராபர்ட் லீ, முடிவெடுப்பதற்குத் தயங்குபவர் அல்ல. மே 1ஆம் தேதி இரவு, ராபர்ட் லீயும், அவரது புகழ்பெற்ற தளபதியான ‘ஸ்டோன்வால்’ ஜாக்சனும் மறுநாளுக்கான திட்டங்களை வகுத்தார்கள். ஹூக்கரின் வலது பக்கத்தில் எந்தப் படைகளும் இல்லை என்றும், தன்னால் ஹூக்கரின் பின்புறமாகச் சென்று தாக்க முடியும் என்றும் ஜாக்சன் கூறினார். லீ, எல்லாப் போர்முனை விதிகளையும் உடைத்து, தன்னுடைய படைகளை இன்னொரு முறை பிரித்தார். ஜாக்சனுடன் 28000 வீரர்கள் ஹூக்கரின் படையைப் பின் புறமாகத் தாக்க சென்று கொண்டிருந்தார்கள்.
மே 2ம் தேதி ஜாக்சன் காலை 7 மணிக்கு தன்னுடைய படையை நடத்திக் கொண்டு, ஹூக்கரின் படையின் பின்புறத்தை மதியம் 3 மணிக்கு அடைந்தார். கூட்டமைப்பின் படை தன்னைப் பின்புறமாகத் தாக்க வருகிறது என்பதை ஹூக்கர் அறிந்தே இருந்தார். ஆனாலும் தனக்கு முன்னே இருந்த லீயைத் தாக்காமலும், பின்னே வந்து கொண்டிருந்த ஜாக்சனை எதிர்கொள்ளத் தயாராகாமலும் இருந்தார்.
ஜாக்சன் மாலை 5மணிக்கு தாக்குதலை துவக்கினார். சிறிது நேரத்தில் அவரது படைகள் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு முன்னேறி விட்டன. பின்புறமாகச் சான்செல்லர்ஸ்வில் கட்டடத்தை நெருங்கி விட்டன. ஹூக்கர் இரண்டு கூட்டமைப்பின் படைகளுக்கு இடையில் சிக்கினார்.
ஆனால் இன்னமும் நிலைமை ஹூக்கருக்கு சாதகமாகவே இருந்தது. அவரது 90000 வீரர்கள் முன்சென்று தாக்கினால், லீ மற்றும் ஜாக்சனின் சிறிய, பிரிந்த படைகளை எளிதாக வென்றிருக்க முடியும். ஆனால், ஹூக்கருக்கு இன்னமும் லீயின் மீதான பிரமிப்பு போகவில்லை. எனவே, லீயின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
மே 2ஆம் தேதி நடுஇரவில், மிகவும் வெற்றிகரமான தாக்குதலுக்குப் பின்னர், ‘ஸ்டோன்வால்’ ஜாக்சன் தன்னுடைய உதவியாளர்களுடன் போர்முனையில் ஆய்வு நடத்திவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ரோந்து பணியில் இருந்த கூட்டமைப்பின் வீரர்கள் சிலர், அவர்களை ஒன்றியப் படையினர் என்று தவறாக நினைத்து சுட ஆரம்பிதார்கள். ஒரு குண்டு, ஜாக்சனின் இடது தோளைத் துளைத்தது. அவரைத் திரும்பவும் முகாமிற்குக் கொண்டு வந்தவுடன், மருத்துவர் அவரது இடது கையை வெட்டி எடுத்தார். ஆனால், ரத்தம் போனதால், ஜாக்சன் மே 10ஆம் தேதி இறந்துவிடுகிறார்.
ஆனாலும், மே 3ம் தேதி அதிகாலையில் லீ தன்னுடைய முழுப் படையுடன் தாக்குதலைத் துவக்கினார். 4 மணி நேரம் நடந்த சண்டையில், பெரும் உயிரிழப்பிற்குப் பின்னர், ஹூக்கர் பின்வாங்க முடிவு செய்தார்.
லீயின் ‘குறையற்ற போர்’ என்றழைக்கப்படும் சான்செல்லர்ஸ்வில் சண்டை, லீ தன்னைவிட இரண்டு மடங்கு பெரிய படையை எதிர்த்து, போர்முனை விதிகளை எல்லாம் மீறி வெற்றி பெற்ற சண்டை. எப்படிப் பார்த்தாலும், லீயின் வெற்றி, ஏற்கெனவே தோல்விகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ஒன்றியப் படைகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல இருந்தது.
தோல்வியின் செய்தி லிங்கனை அடைந்த போது, ‘கடவுளே! கடவுளே! நாடு என்ன சொல்லும்?’ என்றார். பல தலைகள் உருண்டன. ஹூக்கர் இன்னமும் ஒரு மாதம் தலைமை பதவியில் இருந்தார்.
ராபர்ட் லீ யாருக்காகவும் காத்திருக்கவில்லை. மீண்டும் ஒரு முறை போரை வடமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துவிட்டார்.
(தொடரும்)
ஆதாரம்
1. Gods and Generals – Jeff Shaara
2. The Battle of Chancellorsville – Gary W. Gallagher
3. The Campaign of Chancellorsville – David Gregg McIntosh