ஜூன் 12, 1942
என்னால், உன்னிடம் அனைத்தையும் சொல்லமுடியும் என்று நம்புகிறேன். என்னால் யாரிடமும் இதுவரை அனைத்தையும் சொல்ல முடிந்ததில்லை. நீ மிகச்சிறந்த ஆறுதலாகவும், ஆதரவுக்கான ஆதாரமாகவும் இருப்பாய் என்று நம்புகிறேன்
செப்டம்பர் 28, 1942 அன்று ஆன் ஃபிராங்கால் சேர்க்கப்பட்டது: இதுவரை நீதான் எனக்கு ஆறுதலிக்கும் மிகச்சிறந்த ஆதாரமாய் இருக்கிறாய். கூடவே கிட்டியும். அவளுக்கு நான் இப்போது தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு டைரியை இந்த வகையில் எழுதுவது அழகான ஒன்றாக இருக்கிறது. இப்போதெல்லாம் உனக்காக எழுதும் தருணம் வரும்வரை என்னால் காத்திருக்க முடிவதில்லை. உன்னையும் என்னோட அழைத்து வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி!
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14, 1942
நீ எனக்குக் கிடைத்த தருணத்தில் இருந்து, என்னுடைய மற்ற பிறந்தநாள் பரிசுகளுக்கு மத்தியில் மேஜையில் நீ கிடந்த தருணத்தில் இருந்தே தொடங்குகிறேன். (நீ வாங்கப்பட்டபோது நானும் உடன் வந்திருந்தேன். ஆனால் அது கணக்கில் வராது).
ஜூன் 12, வெள்ளிக்கிழமை அன்று, நான் 6 மணிக்கு விழித்தெழுந்தேன். அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. காரணம் அன்று என் பிறந்தநாள். ஆனால் அந்த நேரத்தில் எழ எனக்கு அனுமதி இல்லை. எனவே 6.45 மணி வரை நான் என்னுடைய ஆர்வத்தை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அதற்கு மேல் என்னால் காத்திருக்க முடியாத நிலை வந்தபோது, நான் சாப்பிடும் அறைக்குச் சென்றேன். அங்கு மூர்ஜே (பூனை) என் கால்களை உரசியபடி என்னை வரவேற்றது.
ஏழு மணிக்குப் பிறகு நான் அப்பா, அம்மாவிடம் சென்றேன். அதன் பிறகு எனது பரிசுகளைத் திறந்து பார்க்க ஹாலுக்கு வந்தேன். அங்கு என் கண்ணில் பட்ட முதல் பொருள் நீதான். என்னுடைய அழகான பரிசுகளில் ஒன்று நீ. அதன் பிறகு ஒரு ரோஜா பூங்கொத்து, சில பூச்செண்டுகள், ஒரு தொட்டியில் வைக்கப்பட்ட செடி ஆகியவையும் இருந்தன. அப்பாவும் அம்மாவும் எனக்கு ஒரு நீல நிறச் சட்டை, ஒரு விளையாட்டுப் பொருள், திராட்சைச் சாறு அடைக்கப்பட்ட ஒரு பாட்டில்; என் மூளைக்கு அது ஒயின் போன்ற சுவையாக தெரிந்தது (எல்லாவற்றிற்கும் மேலாக, திராட்சைகளிலிருந்தே மது தயாரிக்கப்படுகிறது), ஒரு புதிர் விளையாட்டு, ஒரு ஜாடி நிறையக் குளிர்ந்த க்ரீம், 2.50 மதிப்பு கொண்ட கில்டர் நாணயங்கள், 2 புத்தகங்களுக்கான ஒரு பரிசு சான்றிதழ் ஆகியவற்றைப் பரிசளித்தனர். எனக்கு கேமரா அப்ஸ்க்யூரா என்ற மற்றொரு புத்தகமும் கிடைத்தது; (ஆனால் மார்கட் ஏற்கெனவே அதனை வைத்திருந்தாள் என்பதால் நான் அதற்குப் பதில் வேறு ஒன்றை மாற்றிக் கொண்டேன்). ஒரு தட்டு நிறைய வீட்டில் செய்யப்பட்ட குக்கீகள் (கண்டிப்பாக, குக்கீ செய்வதில் நான் நிபுணராக மாறிவிட்டதால் அவற்றை நானே செய்தேன்), நிறைய மிட்டாய்கள் மற்றும் ஒரு அம்மாவிடம் இருந்து ஒரு ஸ்ட்ராபெர்ரி டார்ட் ஆகியவையும் எனக்குக் கிடைத்தது. கிராமியிடம் இருந்து ஒரு கடிதமும் சரியான நேரத்துக்கு வந்தது. ஆனால் அது நிச்சயமாகத் தற்செயலானதே.
அதன்பிறகு ஹனெலி என்னை அழைத்துச் செல்ல வந்தாள். நாங்கள் பள்ளிக்குச் சென்றோம். இடைவேளையின்போது நான் என்னுடைய ஆசிரியர்களுக்கும், என்னுடைய வகுப்பினருக்கும் குக்கீகளைக் கொடுத்தேன். அதன்பிறகு மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்தது. 5 மணி வரை நான் வீட்டுக்கு வரவில்லை. வகுப்பின் மற்ற உறுப்பினர்களுடன் நான் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றேன். (என்னுடைய தோள்களும் இடுப்பும் இடம் மாறி விடும் என்பதால் அதில் பங்கெடுக்க எனக்கு அனுமதி கிடையாது). அது என்னுடைய பிறந்தநாள் ஆதலால், எனது வகுப்புத் தோழர்கள் என்ன விளையாட்டை ஆட வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். நான் கைப்பந்தைத் தேர்வு செய்தேன். பின்னர் அவர்கள் அனைவரும் என்னைச் சுற்றி வட்டமாக நின்று நடனமாடி, பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடினர். நான் வீட்டுக்கு வந்தபோது, அங்கே ஏற்கெனவே சான் லெடர்மேன் இருந்தாள். இல்ஸ் வாக்னர், ஹனெலி கோஸ்லர், ஜாக்குலின் வான் மார்சன் ஆகியோரும் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்து என்னுடன் வீட்டுக்கு வந்தனர். காரணம் நாங்கள் ஒரே வகுப்பில் படித்தோம்.
ஹனெலியும் சானும் என்னுடைய சிறந்த நண்பர்களாக இருந்தனர். மக்கள் எங்களை ஒன்றாகப் பார்த்து, ‘அதோ, ஆன், ஹான், சான் மூவரும் போகிறார்கள்’ என்று சொல்வார்கள். ஜாக்குலின் வான் மார்சனை நான் யூத லைசியம் பள்ளியில் சேர்ந்த பிறகுதான் சந்தித்தேன். இப்போது அவள் எனக்கு மிகச் சிறந்த தோழி. இல்ஸ், ஹனெலியின் தோழி. சான் வேறு ஒரு பள்ளியில் படிக்கிறாள். அங்கே அவளுக்கு நண்பர்கள் உண்டு.
அவர்கள் எனக்கு ‘டச் சாகாஸ் அண்ட் லெஜெண்ட்ஸ்’ என்ற அழகான ஒரு புத்தகத்தை கொடுத்தனர். ஆனால் தவறுதலாக என்னிடம் அதன் இரண்டாம் தொகுதியைக் கொடுத்து விட்டனர். எனவே முதல் தொகுதிக்காக வேறு இரண்டு புத்தகங்களைக் கொடுத்து மாற்றிக் கொண்டேன். ஹெலன் அத்தை எனக்கு ஒரு புதிர் விளையாட்டைக் கொண்டு வந்திருந்தார். ஸ்டீபனி அத்தை அருமையான மார்பு ஊசி ஒன்றையும், லெனி அத்தை ‘டெய்ஸி கோஸ் டு தி மவுன்டைன்ஸ்’ என்ற ஓர் அட்டகாசமான புத்தகத்தையும் கொடுத்தார்.
இன்று காலை குளிக்கும் தொட்டியில் இருக்கும்போது, என்னிடம் ரின் டின் டின் போல ஒரு நாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நானும் அதனை ரின் டின் டின் என்று அழைப்பேன். அதை என்னோடு பள்ளிக்கு அழைத்துச் செல்வேன். வானிலை நன்றாக இருக்கும்போது பராமாரிப்பாளரின் அறையிலோ அல்லது சைக்கிள் அடுக்குகளிலோ அதைத் தங்க வைப்பேன்.
திங்கள், ஜூன் 14, 1942
ஞாயிறு மதியம் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கியது. என்னுடைய வகுப்புத் தோழிகள் மத்தியில் ரின் டின் டின் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. என்னிடம் இரண்டு அணியூக்குகளும், ஒரு புத்தகக்குறியும், இரண்டு புத்தகங்களும் இருந்தன.
என்னுடைய பள்ளியைப் பற்றியும், வகுப்பைப் பற்றியும், ஒரு சில விஷயங்களைச் சொல்வதன் மூலம் தொடங்கலாம் என இருக்கிறேன். குறிப்பாக என் வகுப்பு மாணவர்களிடம் இருந்து தொடங்குகிறேன்.
பெட்டி ப்ளூமெண்டால் பார்க்க ஏழையைப்போலத் தோற்றமளிப்பாள். அநேகமாக அவள் ஏழையாக இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். மேற்கு ஆம்ஸ்டர்டாமில் உள்ள பலருக்கும் தெரியாத ஏதோ ஒரு தெருவில் அவள் வசிக்கிறாள். அது எங்கே உள்ளது என எங்கள் யாருக்கும் தெரியாது. அவள் பள்ளியில் நன்றாகப் படிப்பாள். ஆனால் அதற்கு அவள் புத்திசாலி என்பது காரணமல்ல, மிகக் கடுமையாக உழைப்பவள் என்பதே. பெட்டி மிகவும் அமைதியானவள்.
ஜாக்குலின் வான் மார்சனை என்னுடைய சிறந்த தோழி எனச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையான தோழி என எனக்கு ஒருவரும் இருந்ததில்லை. முதலில் ஜாக் அப்படியானவள் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது மோசமான தவறு.
டி.க்யூ. அதிகம் பதற்றம் வாய்ந்த பெண். எப்போதும் பல விஷயங்களை மறந்து விடுவாள். இதனால் ஆசிரியர்கள் அவளுக்குத் தண்டனையாகக் கூடுதல் வீட்டுப்பாடங்களைக் கொடுப்பது வழக்கம். ஆனாலும் டி.க்யூ. மிகவும் கனிவானவள், குறிப்பாக ஜி.ஜி. மீது அன்பு வைத்திருந்தாள்.
இ.எஸ். அதிகமாக பேசுபவள். ஆனால் அது வேடிக்கையாக இருக்காது. அவள் நம்மிடம் ஏதேனும் கேட்கும்போது தலைமுடியைத் தொடுவது, பொத்தான்களைக் கலைப்பது போன்ற செயல்களிலேயே எப்போதும் ஈடுபடுவாள். அவளுக்கு என்னைப் பிடிக்காது என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கும் அவளைப் பிடிக்காது என்பதால் அதைப் பற்றிக் கவலை இல்லை.
ஹென்னி மெட்ஸ், உற்சாகமான மனநிலை கொண்ட நல்ல பெண். ஆனால் உரத்த குரலில் பேசுவாள். நாங்கள் வெளியில் விளையாடும்போது மிகவும் குழந்தைத்தனமாக நடந்துகொள்வாள். துரதிர்ஷ்டவசமாக, ஹென்னிக்கு பெப்பி என்ற பெயர் கொண்ட ஒரு தோழி உண்டு. அவள் அழுக்காகவும், நாகரீகம் அற்றும் நடந்துகொள்வதால் ஹென்னி மீது அவள் தவறான தாக்கத்தைச் செலுத்துகிறாள்.
ஜே.ஆர் – இவளைப் பற்றி நான் முழு புத்தகமே எழுதலாம். மிகவும் அருவருப்பான, தந்திரமான, இரட்டை முகம் கொண்ட, கிசுகிசு பேசக்கூடிய, தான் பெரியவள் என்று நினைத்து கொண்டிருக்கும் ஒரு பெண். ஜாக்குலினை மிகவும் வசியப்படுத்தி வைத்திருக்கிறாள். அது அவமானகரமாகத் தோன்றுகிறது. ஜே. சிறிய விஷயங்களுக்குக்கூட எளிதில் உடைந்து போய், கண்ணீர் விட்டு அழுது விடுவாள். எல்லாவற்றுக்கும் மேலாக அவள் மோசமான பகட்டுக்காரி. திருமதி ஜேவுக்கு எல்லாமும் சரியாக இருக்க வேண்டும். அவள் பெரும் பணக்காரி. அவளுடைய அலமாரி முழுக்க மிக அழகான ஆடைகள் நிரம்பியிருக்கும். ஜே தன்னை அழகானவளாக நினைத்துக்கொள்கிறாள். ஆனால் உண்மையில் அப்படியல்ல. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்கிறோம்.
இல்ஸ் வாக்னர் உற்சாகமான இயல்பு கொண்ட நல்ல பெண். ஆனால் எளிதில் திருப்தி அடையாதவள். எதைப் பற்றியாவது மணிக்கணக்கில் புலம்பிக் கொண்டே இருப்பாள். அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். அவள் நல்ல புத்திசாலி; ஆனால் சோம்பேறி.
ஹனெலி கோஸ்லருக்கு பள்ளியில் ‘பொய்க்காரி’ எனவும் ஒரு பெயர் இருக்கிறது, சற்றே விநோதமானவள். கூச்ச சுபாவம் கொண்ட அவள், வீட்டில் நிறையப் பேசுவாள். ஆனால் மற்றவர்கள் இருக்கும்போது அமைதியாக இருப்பாள். நாம் அவளிடம் எதைச் சொன்னாலும் அதைத் தன் அம்மாவிடம் போய் உளறிக் கொட்டி விடுவாள். ஆனால், தான் நினைப்பதைப் பேசக்கூடியவள். சமீப நாட்களாக நான் அவளை அதிகம் பாராட்டத் தொடங்கியுள்ளேன்.
நான்னி வான் ப்ராக்-சிகார், குட்டியான, வேடிக்கையான அதே நேரம் விவேகமான பெண். மிகவும் நல்லவள். புத்திசாலியும்கூட. நான்னியை பற்றி வேறு எதுவும் பெரிதாகச் சொல்ல இயலாது.
ஈஃப்ஜே டி யாங் அட்டகாசமான பெண் என்பது என்னுடைய கருத்து. அவளுக்கு பன்னிரெண்டு வயதுதான் ஆகிறது என்றாலும், பெரிய பெண்போல நடந்துகொள்வாள். என்னை குழந்தைபோல நடத்துவாள். மிகவும் உதவிகரமானவள். எனக்கு அவளைப் பிடிக்கும்.
ஜி.ஜி எங்கள் வகுப்பிலேயே மிகவும் அழகான பெண். அவளுக்கு அழகான முகம் உண்டு. ஆனால் கொஞ்சம் முட்டாள். அவளை ஒரு வருடம் மீண்டும் அதே வகுப்பில் போடப் போகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நிச்சயமாக, அதை நான் அவளிடம் சொல்லப்போவதில்லை.
வேறு ஒரு நாளில் ஆன் சேர்த்த கருத்து:
ஆச்சரியமூட்டும் விதமாக ஜி.ஜியை அதே வகுப்பில் போடவில்லை.
ஜி.ஜிக்கு அருகே அமர்ந்திருப்பது, பன்னிரெண்டு பேர் கொண்ட தோழிகளில் கடைசி ஆளான நான்.
பையன்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது என்றும் சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம்.
மோரிஸ் கோஸ்டர் என்னை ரசிக்கும் பலரில் ஒருவன். ஆனால் தொல்லைப் பிடித்தவன்.
சாலி ஸ்ப்ரிங்கர், அழுக்கான எண்ணங்களைக் கொண்டவன். அவன் தவறான காரியங்களில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனினும், நான் அவனை அட்டகாசமான பையன் எனக் கருதுகிறேன். காரணம், அவன் வேடிக்கையாகவும் இருக்கிறான்.
எமீல் போனிவிட், ஜி.ஜியை ரசிப்பவன். ஆனால் அவளோ அவனைக் கண்டுகொள்வதில்லை. அவன் மிகவும் சோர்வூட்டுபவன்.
ராப் கோஹெனும் என்னைக் காதலித்து வந்தான். ஆனால் என்னால் அவனைச் சகித்துக் கொள்ள இயலவில்லை. அவன், அருவருப்பான, இரட்டை முகம் கொண்ட, பொய் சொல்லக் கூடிய, அழுது புலம்பும் ஆள். அவனுக்குத் தன்னைப் பற்றிய மிகவும் உயர்ந்த எண்ணம் உண்டு.
மேக்ஸ் வான் டிவால்டே, மெடெம்பிளிக் நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் பையன். ஆனால் மார்காட் சொல்வதைப்போல, பண்பானவன்.
ஹெர்மன் கூப்மேன்வும், ஜோபி டி பீர்போல அழுக்கான எண்ணங்களை கொண்டவன். பெண் பித்தன். மோசமாக வழியக்கூடியவன்.லியோ ப்ளோம், ஜோபி டி பீரின் நல்ல நண்பன். ஆனால் தன்னுடைய மோசமான எண்ணங்களால் நாசமாகி விட்டான்.மான்டெஸ்ஸோரி பள்ளியைச் சேர்ந்த ஆல்பர்ட் டி மெஸ்கிட்டா, நடுவில் ஒரு வகுப்பைத் தாண்டி எங்களுடன் சேர்ந்தவன். மிகவும் புத்திசாலி.லியோ ஸ்லேகரும் அதே பள்ளியில் இருந்து வந்தவன்தான். ஆனால் அவன் புத்திசாலி அல்ல.அல்மெலோவைச் சேர்ந்த ரு ஸ்டோப்பிள்மோன் குட்டையான, முட்டாள்தனம் வாய்ந்தவன். ஆண்டின் நடுவில் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்தான்.
சி.என், தான் செய்ய நினைக்கும் எதையும் செய்வான்.ஜாக் கோசர்னூட் எங்களுக்குப் பின்னால், சி.க்கு அருகே அமர்ந்திருப்பான். நாங்கள் (நானும் ஜி.யும்) எங்களுக்குள் சிரித்து கொள்வோம்.ஹாரி ஷாப் எங்கள் வகுப்பிலேயே மிகவும் ஒழுக்கமான பையன். மிகவும் நல்லவன்.வெர்னர் ஜோசப்கூட நல்லவன்தான். ஆனால் சமீப நாட்களாக நடக்கும் விஷயங்கள் எல்லாம் அவனை மிகவும் அமைதியாக்கிவிட்டன. இதனால் சுவாரஸ்யமற்றவனாகத் தெரிகிறான்.சாம் சாலமன், நகரின் ஏழ்மையான பகுதியைச் சேர்ந்த வலிமையான பையன்களில் ஒருவன். உண்மையான சேட்டைக்காரன்.ஆப்பீ ரீம், கட்டுப்பாடு மிகுந்தவன். ஆனால் அவனும் சேட்டைக்காரன்.
(தொடரும்)
_________
Anne Frank’s “The Diary of a Young Girl” – அ.சல்மான் மொழிபெயர்ப்பில்