Skip to content
Home » ஆன் ஃபிராங்க் டைரி #2

ஆன் ஃபிராங்க் டைரி #2

சனிக்கிழமை, ஜூன் 20, 1942

என்னைப் போன்ற ஒருத்திக்கு டைரி எழுதுவது என்பதே விசித்திரமான அனுபவம். நான் இதற்கு முன் எதுவும் எழுதியதில்லை என்பதால் மட்டுமல்ல, நான் உட்பட, வேறு எவருமே பதின்மூன்று வயது பள்ளி மாணவி ஒருத்தியின் சிந்தனைகளில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதால். ஆனாலும் அது பிரச்னை இல்லை. எனக்கு எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. எல்லா வகையான விஷயங்களையும் என் இதயத்திலிருந்து அகற்ற வேண்டிய அவசியமும் அதிகமாக உள்ளது.

‘மக்களைவிட காகிதத்திற்கு அதிக பொறுமை உண்டு. ’நான் கொஞ்சம் மனச்சோர்வடைந்து, என் கன்னத்தைக் கைகளில் ஏந்தியபடி, சலிப்புடனும் சோர்வுடனும், வீட்டுக்குள் இருப்பதா அல்லது வெளியே செல்வதா என்று யோசித்துக் கொண்டிருந்த ஒரு நாளில், இந்த வாசகத்தை நான் நினைத்துப் பார்த்தேன். ஒருவழியாக நான் அங்கு இருந்தபடியே, சிந்தனையில் மூழ்கினேன். ஆம், காகிதத்திற்கு அதிக பொறுமை உண்டு. மேலும் ‘டைரி’ என்று பரவலாகக் குறிப்பிடப்படும் இந்தத் திடமான அட்டை கொண்ட நோட்புக்கை எனக்கென உண்மையான நட்பு ஒன்று கிடைக்கும் வரை, வேறு யாரையும் படிக்க அனுமதிக்கப்போவதில்லை என்பதால் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.

என்னை ஒரு டைரியை வைத்திருக்கத் தூண்டிய முதல் விஷயத்திற்கு இப்போது நான் மீண்டும் வருகிறேன்: எனக்கு எந்த நட்புறவும் இல்லை.

இன்னும் தெளிவாகவே சொல்கிறேன், பதின்மூன்று வயது சிறுமி ஒருத்தி, இந்த உலகில் முற்றிலும் தனித்து விடப்பட்டிருக்கிறாள் என்று யாரும் நம்புவார்களா என்ன? ஆனால் நான் அப்படி இல்லை. எனக்கு அன்பான பெற்றோர்களும், 16 வயது நிரம்பிய ஒரு மூத்த சகோதரியும் உள்ளனர். நண்பர்கள் என்று சொல்லக்கூடிய 30 பேர் இருக்கின்றனர். என்னை விட்டு கண்களை அகற்ற இயலாத, வகுப்பறையில் என்னை லேசாகப் பார்ப்பதற்காக ஓர் உடைந்த பாக்கெட் கண்ணாடியைப் பயன்படுத்தக்கூடிய அநேகம் பேரும் உள்ளனர். எனக்கு ஒரு குடும்பமும், அன்பான அத்தைகளும், அருமையான வீடும் உள்ளது. இல்லை. மேலோட்டமாக பார்த்தால், எனக்கு எல்லாமே இருப்பதுபோல் தெரிகிறது, ஓர் உண்மையான நட்பை தவிர. நான் நண்பர்களுடன் இருக்கும்போது, மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவதைப் பற்றி மட்டுமே நினைப்பேன். அன்றாட விஷயங்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேச எனக்கு மனம் வராது. எங்களால் அதற்கு மேல் நெருங்கிப் பழக முடியவில்லை. அதுதான் பிரச்னை.

நாங்கள் மனம் விட்டு பேசிக் கொள்ளாதது என்னுடைய தவறாகக்கூட இருக்கலாம். எதுவாகினும், இதுதான் சூழல். துரதிர்ஷ்டவசமாக, அவற்றை மாற்ற முடியாது. அதனால்தான் நான் இந்த டைரியை எழுதத் தொடங்கி இருக்கிறேன்.

என்னுடைய கற்பனையில் நீண்டகாலமாக இருக்கும் இந்த நண்பனின் பிம்பத்தை மேம்படுத்தும் பொருட்டு, பெரும்பாலான மனிதர்களைப்போல இந்த டைரியில் நான் தகவல்களை மட்டுமே எழுதப் போவதில்லை. இந்த டைரி எனது நண்பனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த நண்பனை நான் கிட்டி என்று அழைக்கப் போகிறேன். கிட்டியிடம் நான் சொல்லும் என்னுடைய கதைகளில் ஒரு வார்த்தைகூட யாருக்கும் புரியாது என்பதால், என்னுடைய வாழ்க்கையை பற்றிய ஒரு சுருக்கமான விவரிப்பை வழங்குவது நல்லது, அப்படி செய்வது எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட.

நான் பார்த்ததில் மிகவும் அன்பானவரான என்னுடைய அப்பா, அவருக்கு 36 வயதாக இருக்குபோது 25 வயதான என் அம்மாவை திருமணம் செய்துகொண்டார். என் அக்கா மார்காட், 1926ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பிராங்க்ஃபர்ட் ஆம் மெயினில் பிறந்தாள். நான் 1929ஆம் ஆண்டு ஜூன் 12இல் பிறந்தேன். என்னுடைய 4 வயது வரை நான் பிராங்க்ஃபர்ட்டில்தான் வாழ்ந்தேன். நாங்கள் யூதர்கள் என்பதால் என் அப்பா 1933இல் ஹாலந்து நாட்டுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கு அவர் டச்சு ஒபெக்டா நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக மாறினார். அந்த நிறுவனம் ஜாம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களை உற்பத்தி செய்கிறது. என்னுடைய அம்மா ஈடித் ஹாலண்டர் ஃப்ராங்க், செப்டம்பரில் ஹாலந்துக்கு அவருடன் சென்றார். அப்போது நானும் மார்காட்டும் எங்கள் பாட்டியுடன் தங்குவதற்காக ஆச்சென் அனுப்பப்பட்டோம். டிசம்பரின் மார்காட் ஹாலந்து சென்றாள். நான் பிப்ரவரியில் அங்கு சென்று மார்காட்டின் பிறந்தநாள் பரிசாக மேஜையில் கிடத்தப்பட்டேன்.

நான் உடனடியாக மான்டேசரி நர்சரி பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினேன். ஆறு வயது வரை அங்கேயேதான் இருந்தேன். அப்போது நான் முதல் வகுப்பில் இருந்தேன். ஆறாம் வகுப்பில், தலைமை ஆசிரியையான திருமதி. குபேரஸ்தான் என்னுடைய வகுப்பு ஆசிரியர். அந்த ஆண்டின் இறுதியில், இதயத்தைப் பிழியும் பிரியாவிடை கொடுத்தபோது நாங்கள் இருவருமே கண்ணீர் விட்டு அழுதோம். காரணம் யூத லைசியம் பள்ளியால் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன். மார்காட்டும் அதே பள்ளியில்தான் படித்தாள்.

ஹிட்லரின் யூத எதிர்ப்புச் சட்டங்களால் ஜெர்மனியில் எங்கள் உறவினர்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வந்ததால் எங்கள் வாழ்க்கையில் பதற்றம் இல்லாத நாட்களே இல்லை. 1938இல் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைகளுக்குப் பிறகு என்னுடைய இரண்டு மாமாக்களும் (என் அம்மாவின் சகோதரர்கள்) ஜெர்மனியை விட்டு தப்பியோடி வட அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். என்னுடைய வயதான பாட்டி எங்களுடன் வாழ வந்தார். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு வயது 73.

மே 1940க்குப் பிறகு நல்ல நாட்கள் என்பவை மிகக் குறைவாகவே இருந்தன. முதலில் போர் நடந்தது, பின்னர் சரணடைதல், ஜெர்மானியர்களின் வருகை என அப்போதுதான் யூதர்களுக்குப் பிரச்னை தொடங்கியது. தொடர் யூத எதிர்ப்பு சட்டங்களால் தொடர்ச்சியாக எங்களின் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

யூதர்கள் ஒரு மஞ்சள் நட்சத்திரத்தை அணிந்து கொள்ள வேண்டும். யூதர்கள் தங்கள் மிதிவண்டிகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். யூதர்கள் வண்டிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. யூதர்கள் கார்களில் சவாரி செய்யத் தடை விதிக்கப்பட்டது, அவர்களின் சொந்த வாகனங்களில்கூட. யூதர்கள் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும். யூதர்கள் யூதர்களுக்குச் சொந்தமான முடித்திருத்தும் கடைகள், அழகு நிலையங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். யூதர்கள் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை தெருக்களில் நடமாடத் தடை விதிக்கப்பட்டது.

யூதர்கள் திரையரங்குகள், திரைப்படங்கள் அல்லது வேறு எந்த வகையான பொழுதுபோக்குகளுக்கும் செல்ல அனுமதி கிடையாது. நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்கள், ஹாக்கி மைதானங்கள் எனத் தடகள மைதானங்கள் எதையும் பயன்படுத்தக்கூடாது. யூதர்கள் படகுப் போட்டியில் ஈடுடவும் அனுமதி கிடையாது. யூதர்கள் பொது இடங்களில் எந்தப் போட்டிகளிலுமே பங்கேற்க முடியாது.

இரவு 8 மணிக்குப் பிறகு யூதர்கள் தங்கள் தோட்டங்களிலோ அல்லது நண்பர்களின் தோட்டங்களிலோ உட்காரக்கூடாது. யூதர்கள் கிறிஸ்தவர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திக்க தடை விதிக்கப்பட்டது; யூதர்கள் யூதப் பள்ளிகளில் மட்டுமே படிக்க வேண்டும். இப்படியாக நீங்கள் இதைச் செய்ய முடியாது, நீங்கள் அதைச் செய்ய முடியாது.. என இருந்தது வாழ்க்கை. இருப்பினும் வாழ்க்கை சென்று கொண்டுதான் இருந்தது. ஜாக் எப்போதும் என்னிடம், ‘இனி எதையும் செய்ய எனக்குத் துணிவில்லை. ஏனென்றால் அதற்கு அனுமதி இருக்காது என நான் அஞ்சுகிறேன்’ என்று கூறுவாள்.

1941 கோடையில் என் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் என் பிறந்தநாள் பெரிய கொண்டாட்டமின்றிக் கழிந்தது. 1940 கோடையில், ஹாலந்தில் சண்டை சமீபத்தில்தான் முடிவுக்கு வந்திருந்தது. அதனால் என் பிறந்தநாளின்போது நாங்கள் பெரிதாக எதுவும் செய்யவில்லை. பாட்டி 1942 ஜனவரியில் இறந்தார். நான் அவரை எவ்வளவு நினைக்கிறேன், இன்னும் எவ்வளவு நேசிக்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது. 1942இல் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், மற்றவர்களுடன் சேர்ந்து பாட்டிக்கும் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. நாங்கள் நால்வரும் இன்னும் நன்றாகவே இருக்கிறோம். அதுதான் என்னை தற்போதைய தேதியான ஜூன் 20, 1942க்கும், எனது டைரியில் அர்ப்பணிப்புடன் எழுதுவதற்கும் கொண்டு வந்திருக்கிறது.

சனி, ஜூன் 20, 1942

அன்புள்ள கிட்டி!

நான் உடனே தொடங்குகிறேன்; இப்போது நன்றாகவும் அமைதியாகவும் இருக்கிறது. அப்பாவும் அம்மாவும் வெளியே சென்றிருக்கிறார்கள். மார்கோட் அவளுடைய தோழி ட்ரீஸ் வீட்டில் இன்னும் சில இளம் நண்பர்களுடன் பிங்-பாங் விளையாடச் சென்றிருக்கிறாள். நான் சமீப நாட்களாக நிறைய பிங்-பாங் விளையாடுகிறேன். நாங்கள் ஐந்து பெண்கள் சேர்ந்து ஒரு கிளப்பை உருவாக்கியுள்ளோம். அதற்கு ‘தி லிட்டில் டிப்பர் மைனஸ் டூ’ என்று பெயர் வைத்துள்ளோம். மிகவும் முட்டாள்தனமான பெயர். ஆனால் அப்பெயர் ஒரு தவறை அடிப்படையாகக் கொண்டது. எங்கள் கிளப்புக்குச் சிறப்பு பெயர் ஒன்றை வைக்க விரும்பினோம்; நாங்கள் ஐந்து பேர் இருந்ததால், லிட்டில் டிப்பர் என்ற யோசனை எங்களுக்கு உதித்தது. அந்தப் பெயர் ஐந்து நட்சத்திரங்களைக் கொண்டிருப்பதாக எங்களுக்குத் தோன்றியது. ஆனால் நாங்கள் நினைத்தது தவறு. அது, பெரிய டிப்பரைப் போல ஏழு நட்சத்திரங்களைக் கொண்டதாக இருக்கிறது. அதனால் மைனஸ் டூ ஏன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். இல்ஸ் வாக்னரிடம் ஒரு பிங்-பாங் செட் உள்ளது. மேலும் வாக்னரின் குடும்பத்தினர் அவர்களுடைய பெரிய உணவருந்தும் அறையில் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம் என அனுமதித்திருக்கிறார்கள். பிங்-பாங் விளையாடும் எங்கள் ஐந்து பேருக்கும் ஐஸ்கிரீம் பிடிக்கும், குறிப்பாக கோடைக்காலத்தில். பிங்-பாங் விளையாடும்போது உடல், வெப்பம் அடைவதால், எங்கள் விளையாட்டுள் பொதுவாக யூதர்களை அனுமதிக்கும் அருகிலுள்ள ஐஸ்கிரீம் பார்லர்களான ஓயாசிஸ் அல்லது டெல்பிக்குச் செல்வதோடு நிறைவடையும். நாங்கள் எங்களுடைய பர்ஸையோ பணத்தையோ தேடுவதை நிறுத்தி நீண்டகாலமாகிறது. பெரும்பாலும் ஒயாசிஸில் மிகவும் பரபரப்பாக இருப்பதால், எங்களுக்குத் தெரிந்த சில தாராள மனப்பான்மை கொண்ட இளைஞர்கள், நாங்கள் ஒரு வாரம் முழுக்க சாப்பிடக்கூடியதை விட அதிகமான ஐஸ்கிரீமை எங்களுக்கு வாங்கி தருவார்கள்.

இவ்வளவு இளம் வயதில் ரசிகர்களைப் பற்றி நான் பேசுவதைக் கேட்டு உனக்கு சற்று ஆச்சர்யமாக இருக்கலாம். துரதிர்ஷ்டவசமோ இல்லையா எனத் தெரியவில்லை. இந்தத் தீய பழக்கம் எங்கள் பள்ளியில் பரவலாக நடைபெறுகிறது. ஏதேனும் ஒரு பையன் என்னுடன் வீட்டிற்கு சைக்கிள் ஓட்டிக் கொண்டு வரலாமா என்று கேட்டு, நாங்கள் இருவரும் பேசத் தொடங்கினால்போதும், பத்துக்கு ஒன்பது முறை நிச்சயமாக அந்தப் பையன் அந்த இடத்திலேயே என் மீது காதலில் விழுந்து, ஒரு நொடி கூட பார்வையிலிருந்து என்னை விலக்கமாட்டார் என்று நான் உறுதியாகச் சொல்கிறேன். நான் அவனது உணர்ச்சிமிக்க பார்வைகளைப் புறக்கணித்து, எனது வழியில் மகிழ்ச்சியுடன் மிதிவண்டி ஓட்டும்போதுதான் அவனது ஆர்வம் ஒருவழியாக அமைதி அடையும். ‘அப்பாவிடம் அனுமதி கேட்பது’ குறித்து அவர்கள் பேசத் தொடங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டால், நான் எனது வண்டியை லேசாகத் திருப்பிவிடுகிவேன், என் பள்ளிப் பை கீழே விழும், அப்போது அந்த இளைஞன் தன் வண்டியில் இருந்து இறங்கி என்னிடம் பையை எடுத்துக் கொடுக்க வேண்டிய நிலைக்குச் செல்வான். அதற்குள் நான் உரையாடலை வேறு தலைப்புக்கு மாற்றிவிடுவேன். இவர்கள் மிகவும் அப்பாவி வகையைச் சேர்ந்தவர்கள். அதேசமயம் நம்மை முத்தமிடுபவர்களும், நம் கையைப் பிடிக்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தட்டுவது தவறான கதவு என நிச்சயமாகச் சொல்வேன். நான் என் வண்டியில் இருந்து இறங்கி, அவர்கள் துணை எனக்குத் தேவையில்லை என்று மறுப்பேன். நான் அவமானப்பட்டதைப்போல நடந்துகொண்டு, தனியாக வீட்டிற்குச் செல்லுமாறு சந்தேகத்திற்கு இடமின்றிச் சொல்லிவிடுவேன்.

இப்போதோ நீ வந்துவிட்டாய் . நம் நட்புக்கான அடித்தளத்தை நாம் அமைத்துவிட்டோம். நாளை பார்க்கலாம்.

உன் அன்புள்ள ஆன்,

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21, 1942

அன்புள்ள கிட்டி,

எங்கள் ஒட்டுமொத்த வகுப்பும் ஒருவித பீதியில் இருக்கிறது. நடக்கவிருக்கும் கூட்டத்தைப் பற்றி. அதில் யார் அடுத்த வகுப்பு செல்லப்போகிறார்கள், யார் இங்கேயே தங்கப் போகிறார்கள் என்று ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள். வகுப்பில் பாதி பேர் பந்தயம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். எங்களுக்குப் பின்னால் இருந்த இரண்டு பையன்களான சி.என்னையும், ஜாக் கோசர்னூட்டையும் பார்த்து நானும் ஜிஜியும் எங்களுக்குள் பலமாகச் சிரித்தோம். காரணம் அவர்கள் இருவரும் விடுமுறை முழுவதும் சேமித்த அத்தனையையும் பந்தயம் கட்டியுள்ளனர். காலை முதல் இரவு வரை, ‘நீ பாஸ் ஆகப் போகிறாய்’, ‘இல்லை, நான் அல்ல’, ‘ஆம், நீதான்’. ‘நான் இல்லை’ போன்ற உரையாடல்கள் நடைபெற்றன. ஜியின் கெஞ்சும் பார்வையும், என்னுடைய கோபமான வார்த்தைகளும் கூட அவர்களை அமைதிப்படுத்த முடியவில்லை. என்னைக் கேட்டால் வகுப்பில் கால் பங்கு இருக்கும் ஏராளமான முட்டாள்கள் இதே வகுப்பில் தங்க வைக்கப்பட வேண்டும். ஆனால் பூமியில் இருக்கும் மிகவும் கணிக்க இயலாத உயிரினங்கள் என்றால் அது ஆசிரியர்கள்தான். ஒருவேளை இந்த முறை ஒரு மாற்றத்துக்காக அவர்கள் சரியான திசையில் கணிக்க முடியாதவர்களாக இருக்கலாம்.

எனக்கு என் தோழிகளைப் பற்றியும், என்னைப் பற்றியும் பெரிய கவலைகள் இல்லை. நாங்கள் பாஸ் ஆகிவிடுவோம். என்னால் உறுதியாகச் சொல்லமுடியாத ஒரே பாடம் கணிதம் மட்டுமே. எப்படி இருந்தாலும், எங்களால் செய்யமுடிவதெல்லாம் காத்திருப்பது மட்டுமே. அதுவரை, மனதைரியத்தை இழந்து விடக்கூடாது என்று ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டோம். நான் எல்லா ஆசிரியர்களிடம் நன்றாகப் பழகுவேன். அவர்கள் மொத்தம் ஒன்பது பேர். ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள். கணக்குப் பாடம் எடுக்கக் கூடிய, பழமைவாதம் நிறைந்த வயதான திரு.கீசிங், நான் அதிகம் பேசுவேன் என்பதற்காக நீண்டகாலமாக என் மீது கோபமாக இருக்கிறார். பல எச்சரிக்கைகளுக்குப் பின்னர், அவர் எனக்குக் கூடுதல் வீட்டுப் பாடங்களைக் கொடுத்தார். ‘எ சாட்டர்பாக்ஸ்’ என்ற பாடத்தைப் பற்றிய ஒரு கட்டுரை. ஒரு சாட்டர்பாக்ஸைப் பற்றி என்ன எழுத முடியும்? அதைப் பற்றிப் பின்னர் கவலைப்பட்டுக் கொள்ளலாம் என்று நான் முடிவு செய்தேன். நான் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை என்னுடைய நோட்புக்கில் எழுதி, அதை என்னுடைய பையில் வைத்து, அமைதியாக இருக்க முயற்சி செய்தேன்.

அன்று மாலை, என்னுடைய மீதி வீட்டுப்பாடத்தையும் முடித்த பிறகு, அந்தக் கட்டுரையை பற்றிய குறிப்பு என்னுடைய கவனத்தை ஈர்த்தது. எனது பேனாவின் முனையைக் கடித்தபடியே பாடத்தைப் பற்றி நான் யோசிக்க தொடங்கினேன். யார் வேண்டுமானாலும் வார்த்தைகளுக்கு இடையில் பெரிய இடைவெளி விட்டு, தடுமாற்றத்துடன் பேசலாம். ஆனால் பேசுவதன் அவசியத்தை நிரூபிக்க உறுதியான வாதங்களைக் முன்வைப்பதுதான் திறமை. நான் தொடர்ந்து யோசித்து கொண்டே இருந்தேன். திடீரென எனக்கு யோசனை உதித்தது. திரு.கீசிங் எனக்குக் கொடுத்த மூன்று பக்கங்களை நான் எழுதினேன். அது எனக்குத் திருப்தியாக இருந்தது.

பேசுவது பெண்ணின் குணம் என்றும், அதைக் கட்டுக்குள் வைத்திருக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும், எனினும் அந்தப் பழக்கத்தை ஒருபோதும் என்னால் விட்டுவிட முடியாது என்றும் நான் வாதிட்டேன். ஏனென்றால், என் அம்மா நான் பேசிய அளவுக்கு, இல்லாவிட்டாலும், அதிகமாகப் பேசினார் என்றும், மரபுவழிப் பண்புகளைப் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்றும் நான் வாதிட்டேன்.

என்னுடைய வாதங்களைக் கண்ட திரு.கீசிங் பலமாகச் சிரித்தார். ஆனால் என்னுடைய அடுத்த வகுப்புக்கு செல்லும் வழியில் நான் பேசத் தொடங்கியபோது, அவர் எனக்கு இரண்டாவது கட்டுரையைத் தந்தார். இந்த முறை அதன் தலைப்பு ‘ஒரு திருத்தமுடியாத சாட்டர்பாக்ஸ்’. நான் அதை ஒப்படைத்தேன். திரு.கீசிங்குக்கு இரண்டு வகுப்புகள் முழுவதும் எதுவும் சொல்லவில்லை . எனினும் மூன்றாவது வகுப்பின்போது, அவர் இறுதியாகப் பொறுமை இழந்தார். ‘ஆன் ஃப்ராங்க், வகுப்பில் பேசியதற்கான தண்டனையாக ‘குவா, குவா, குவா.. சொன்னது திருமதி.சாட்டர்பேக்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்போகிறாள்’ என்றார்.

மொத்த வகுப்பும் சிரிப்பலையில் அதிர்ந்தது. நானுமேகூட சிரித்து விட்டேன். எனினும், சாட்டர்பாக்ஸ் பற்றிய தலைப்புகளில் என்னுடைய புத்திசாலித்தனம் நீர்த்துப் போயிருந்தது. வேறு ஏதேனும், அசலான ஒன்றைச் செய்ய வேண்டிய நேரம் இது என்று தோன்றியது. கவிதை எழுதுவதில் சிறந்தவளான என் தோழி சன்னே, கட்டுரையை ஆரம்பம் முதல் இறுதி வரை பத்திகளாக எழுதுவதற்காக உதவ முன்வந்தாள். நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். இந்த அபத்தமான தலைப்பில் என்னைக் கேலி செய்ய கீசிங் முயன்றார். ஆனால் அவர் கேலிக்குள்ளாவதை நான் உறுதி செய்தேன்.

நான் என்னுடைய கவிதையை முடித்தேன். அது அழகாக இருந்தது. அக்கவிதை ஒரு தாய் வாத்தையும், தந்தையான அன்னப் பறவையையும் பற்றியது. அவற்றுக்கு மூன்று வாத்துக் குஞ்சுகள் இருந்தன. அவை அதிகமாகச் சத்தம் எழுப்பியதால் தந்தையால் கடிக்கப்பட்டதாக அதில் எழுதினேன். அதிர்ஷ்டவசமாக, கீசிங் அந்த நகைச்சுவையைச் சரியான வழியில் எடுத்துக் கொண்டார். அந்தக் கவிதையை வகுப்பின் முன் வாசித்தார். கூடவே தன்னுடைய கருத்துகளையும் அதில் சேர்த்தார். வேறு சில வகுப்புகளிலும் அதை வாசித்துக் காட்டினார். அன்று முதல் நான் பேச அனுமதிக்கப்பட்டேன். எனக்கு எந்தவிதக் கூடுதல் வீட்டுப் பாடமும் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, கீசிங் இப்போதெல்லாம் எப்போதும் நகைச்சுவையாகப் பேசியபடி கொண்டிருக்கிறார்.

உன் அன்பான, ஆன்

(தொடரும்)

_________
Anne Frank’s “The Diary of a Young Girl” – அ.சல்மான் மொழிபெயர்ப்பில்

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *