புதன், ஜூன் 24, 1942
அன்புள்ள கிட்டி,
வெப்பம் தகிக்கிறது. அனைவரும் அசெளகரியமாக உள்ளனர். இந்த வெப்பத்தில் நான் எல்லா இடங்களுக்கும் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு காரின் அருமை இப்போதுதான் எனக்குப் புரிகிறது. ஆனால் யூதர்களாகிய எங்களுக்கு அந்த வசதியைப் பயன்படுத்த அனுமதி இல்லை. எங்களுடைய இரண்டு கால்களே எங்களுக்குப் போதுமானவை. நேற்று மதிய உணவு இடைவேளையின்போது, ஜான் லுய்கென்ஸ்ட்ராட்டில் உள்ள பல் மருத்துவரை நான் பார்க்கச் சென்றேன். அது பள்ளியில் இருந்து வெகு தொலைவில் ஸ்டாட்ஸ்டிமெர்டுயினென் எனும் இடத்தில் உள்ளது. அந்தப் பிற்பகல் வேளையில் நான் என்னுடைய மேஜையில் கிட்டத்தட்ட தூங்கி விழுந்துவிட்டேன். அதிர்ஷ்டவசமாக, மக்கள் நமக்குக் குடிக்க ஏதோ ஒன்றைத் தருகின்றனர். பல் மருத்துவரின் உதவியாளர் மிகவும் கனிவானவர்.
எங்களுக்கு இருக்கும் ஒரே போக்குவரத்து வசதி படகு மட்டுமே. ஜோசப் இஸ்ரேல்கடேலில் இருந்த படகோட்டி, எங்களின் கோரிக்கையை ஏற்று எங்களை அக்கரைக்கு அழைத்துச் சென்றார். யூதர்களாகிய நாங்கள் இந்த மோசமான காலகட்டத்தை எதிர்கொள்வது, டச்சு மக்களின் தவறல்ல.
நான் பள்ளிக்குச் செல்லாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஈஸ்டர் விடுமுறையின்போது என்னுடைய மிதிவண்டி திருடுபோனது. அம்மாவின் மிதிவண்டியை, அப்பா, சில கிறிஸ்தவ நண்பர்களிடம் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகக் கொடுத்தார். நல்லவேளையாக கோடை விடுமுறை நெருங்கி விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும்.
நேற்று காலையில் எதிர்பாராத ஒன்று நடந்தேறியது. மிதிவண்டி அடுக்குகளை நான் கடந்து சென்றபோது, என்னுடைய பெயரைச் சொல்லி யாரோ அழைப்பது எனக்குக் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு முந்தைய நாள் மாலையில் என் தோழி வில்மாவின் வீட்டில் நான் சந்தித்த அந்த அழகான பையன் நின்றிருந்தான். அவன் வில்மாவின் ஒன்றுவிட்ட சகோதரன். வில்மா மிகவும் அருமையானவள் எனத் தோன்றும். அவள் அப்படித்தான். ஆனாலும் அவள் பையன்களைப் பற்றி மட்டுமே பேசுவாள். அது ஒருகட்டத்தில் அலுப்பு தட்டிவிடும். அவன் என்னை நோக்கி ஒருவித வெட்கத்துடன் நடந்து வந்தான். தன்னை ‘ஹெலோ சில்பெர்பெர்க்’ என்று அறிமுகம் செய்து கொண்டான். எனக்கு சிறிய ஆச்சர்யம். அவனுக்கு என்ன வேண்டும் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க எனக்கு நீண்டநேரம் ஆகவில்லை. பள்ளி வரை என்னுடன் துணைக்கு வரத் தன்னை அனுமதிக்க முடியுமா என்று கேட்டான். ‘நீ அந்த வழியாகச் சென்றால் நானும் உன்னோடு வருகிறேன்’ என்று கூறினேன். நாங்கள் இருவரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினோம். ஹெலோவுக்கு 16 வயது. எல்லாவித வேடிக்கைக் கதைகளையும் சொல்வதில் அவன் சிறந்தவன்.
இன்று காலை மீண்டும் அவன் எனக்காகக் காத்திருந்தான். இனி அவன் இப்படித்தான் காத்திருப்பான் என்று நான் நினைத்துக்கொண்டேன்.
ஆன்
புதன், ஜூலை 1, 1942
அன்புள்ள கிட்டி,
இன்றுவரை உண்மையிலேயே எனக்கு எழுத நேரம் கிட்டவில்லை. வியாழக்கிழமை முழுவதும் நான் நண்பர்களுடன் இருந்தேன். வெள்ளிக்கிழமை சிலர் வந்துவிட்டனர். இன்று வரை அப்படித்தான் சென்று கொண்டிருந்தது. நானும் ஹெலோவும் கடந்த வாரத்தில் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது. தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி அவன் என்னிடம் நிறையக் கூறினான். அவன் கெல்சென்கிர்ச்சென்னில் இருந்து வருகிறான். அவனுடைய தாத்தா- பாட்டியுடன் வசிக்கிறான். அவனுடைய பெற்றோர் பெல்ஜியத்தில் இருக்கின்றனர். ஆனால் அவன் அங்கு செல்ல வழியே இல்லை. ஹெலோவுக்கு உர்சுலா என்ற தோழி இருந்திருக்கிறாள். எனக்கும் அவளைத் தெரியும். அவள் இனிமையானவள். அதே நேரம் மிகவும் சலிப்பூட்டக்கூடியவள். அவன் என்னைச் சந்தித்த நாள் முதல், உர்சுலாவின் பக்கம் சலிப்பை உணர்ந்திருக்கிறான். அவனுக்கு நான் உற்சாகப் பானம்போல இருந்திருக்கிறேன். நாம் எதில் சிறந்தவராக இருக்கிறோம் என்பது நமக்கே தெரிவதில்லை.
ஜாக் சனிக்கிழமை இங்குதான் இருந்தாள். ஞாயிறு மதியும் அவள் ஹனெலியின் வீட்டிற்குச் சென்றாள். எனக்கு அதீத சலிப்பாக இருந்தது.
அன்று மாலை ஹெலோ வருவதாக இருந்தது. ஆறு மணியளவில் அவன் அழைத்தான். நான் போனை எடுத்தபோது, ‘நான் ஹெல்முது சில்பர்பெர்க் பேசுகிறேன். நான் ஆன் உடன் பேசலாமா?’ என்றான்.
‘ஹெலோ. நான் ஆன்தான் பேசுகிறேன்’
‘ஆன், எப்படி இருக்கிறாய்?’
‘நன்றாக இருக்கிறேன், நன்றி’
‘மன்னித்து விடு. என்னால் இன்று இரவு வர இயலாது என்று சொல்ல விரும்பினேன். எனினும் நான் உன்னிடம் இன்னொன்றும் கேட்க விரும்புகிறேன். நான் இன்னும் 10 நிமிடத்தில் அங்கு வந்து உன்னை அழைத்து சென்றால் உனக்கு எதுவும் பிரச்னை இல்லையே?’
‘எந்தப் பிரச்னையும் இல்லை. பார்க்கலாம்’
‘சரி, நான் அங்கு வருகிறேன். பார்க்கலாம்’
நான் போனை வைத்து விட்டு அவசர அவசரமாக என்னுடைய உடைகளை மாற்றி, என் தலைமுடியைச் சரிசெய்தேன். மிகவும் பதற்றத்துடன், ஜன்னலில் சாய்ந்து அவன் வருகையை எதிர்நோக்கி இருந்தேன். ஒருவழியாக அவன் வந்தான். அதிசயத்திலும் அதிசயம். நான் படிக்கட்டில் அவசரமாக இறங்கவில்லை. அவன் அழைப்பு மணியை அடிக்கும் வரை அமைதியாக இருந்தேன். கீழிறங்கிச் சென்று கதவைத் திறந்தேன். அவன் நேராக விஷயத்துக்கு வந்தான்.
‘ஆன், நீ என்னைவிட மிகவும் இளையவள். அதனால் உன்னைத் தினமும் பார்க்கக்கூடாது என்று என் பாட்டி நினைக்கிறார். நான் லோவன்பாக்ஸின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அவர் சொல்கிறார். ஆனால் நானோ உர்சுலாவுடன் எனி வெளியே செல்ல மாட்டேன் என்பது உனக்கு தெரியுமல்லவா’
‘இல்லை. எனக்குத் தெரியாது. என்ன ஆயிற்று? உங்கள் இருவருக்கும் இடையே ஏதேனும் சண்டையா?’
‘இல்லை. அப்படி எதுவும் இல்லை. நான் உர்சுலாவிடம் நம் இருவருக்கும் பொருத்தமில்லை இல்லை எனச் சொல்லிவிட்டேன். அதனால் நாம் இனி ஒன்றாக வெளியே செல்லாமல் இருப்பதே நல்லது எனக் கூறினேன். ஆனால் அவள் என்னுடைய வீட்டில் வரவேற்கப்படுவதால், நானும் அவளுடைய வீட்டில் வரவேற்கப்படுவேன் என்று நம்புகிறேன். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், உர்சுலா வேறொரு பையனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். அதைப் போலவே நானும் அவளை நடத்தினேன். ஆனால் உண்மை அது அல்ல. என்னுடைய மாமா நான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார். எனக்கோ அப்படித் தோன்றவில்லை. அதனால்தான் நான் அவளிடம் இருந்து பிரிந்து விட்டேன். பல ஆனால், காரணங்களில் இது ஒன்று மட்டுமே.’
‘இப்போது என்னுடைய பாட்டி, உன்னையல்ல, உர்சுலாவைத்தான் நான் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. நான் அவ்வாறு செய்யமாட்டேன். சிலநேரங்களில் பழைய ஆட்கள் பழமையான எண்ணங்களில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதல்ல. எனக்கு என்னுடைய தாத்தா – பாட்டி தேவை. ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கும் நான் தேவை. இன்றிலிருந்து புதன்கிழமை மாலைகளில் எனக்கு எந்த வேலைகளும் கிடையாது. மரவேலை செய்யும் வகுப்புக்கு என்னுடைய தாத்தா பாட்டி என்னைச் சேர்த்துள்ளனர். ஆனால் யூதர்களால் நடத்தப்படும் ஒரு கிளப்புக்கு நான் செல்கிறேன். என்னுடைய தாத்தா- பாட்டி நான் அங்கு செல்வதை விரும்பவில்லை. காரணம், அவர்கள் ஜியோனிசத்துக்கு எதிரானவர்கள். நான் ஜியோனிசத்தின் ரசிகன் அல்ல. ஆனால் அது எனக்கு ஆர்வத்தை தூண்டும் விதத்தில் உள்ளது. எப்படி இருந்தாலும், சமீபகாலமாக அதுவும் குழப்ப நிலையில் இருப்பதால், நான் விட்டுவிட தீர்மானித்திருக்கிறேன். அடுத்த புதன்கிழமை என்னுடைய கடைசி கூட்டம். இதன் அர்த்தம், புதன்கிழமை மாலை, சனிக்கிழமை பிற்பகல், சனிக்கிழமை மாலை, ஞாயிறு பிற்பகல், என மற்ற நாட்களிலும்கூட உன்னை பார்க்கமுடியும்.’
‘ஆனால் உனது தாத்தா – பாட்டி நீ அப்படிச் செய்வதை விரும்பவில்லை என்றால், நீ அவர்களுக்குத் தெரியாமல் அதைச் செய்யக் கூடாது’
’காதலிலும் போரிலும் அனைத்தும் நியாயமே’
அப்போதுதான் நாங்கள் பிளாங்கவோர்ட்டில் உள்ள புத்தகக் கடையை கடந்து சென்றோம். அங்கு பீட்டர் ஷிஃப்பும், அவனுடன் இரண்டு பையன்களும் இருந்தனர். பல நாட்களுக்குப் பிறகு அப்போதுதான் முதல் முறையாக அவன் எனக்கு ஹலோ சொன்னான். அது எனக்கு உண்மையிலேயே நல்ல உணர்வை தந்தது.
திங்கள் மாலை ஹெலோ என் அப்பாவையும் அம்மாவையும் சந்திக்க வந்தான். நான் ஒரு கேக்கும், சில மிட்டாய்களும் வாங்கியிருந்தேன். நாங்கள் தேநீர் அருந்திவிட்டு சில குக்கிகளைச் சாப்பிட்டோம். ஆனால் எனக்கும், ஹெலோவுக்கும் எங்களுடைய நாற்காலிகளில் விறைப்பாக உட்காரத் தோன்றவில்லை. நாங்கள் நடப்பதற்காக வெளியே சென்றோம். இரவு 8.10 மணி ஆகியும் அவன் என்னை கொண்டு வந்து விடவில்லை. அப்பா கொந்தளிப்புடன் காணப்பட்டார். நேரத்துக்கு நான் வீட்டுக்கு வராதது தவறு என்று சொன்னார். இனி 7.50 மணிக்கெல்லாம் நான் வீட்டுக்கு வந்துவிடுகிறேன் என்று உறுதியளித்தேன். சனிக்கிழமை ஹெலோவின் வீட்டுக்கு நான் அழைக்கப்பட்டேன்.
ஒருநாள் ஹெலோ விம்லாவின் வீட்டில் இருந்தபோது, அவள் அவனிடம் ‘உர்சுலா அல்லது ஆன், இருவரில் உனக்கு யாரை மிகவும் பிடிக்கும்?’ என்று கேட்டதாக என்னிடம் கூறினாள்.
அதற்கு அவன், ‘அது உனக்குத் தேவையில்லாத விஷயம்’ என்று கூறியிருக்கிறான்.
ஆனால் அவன் கிளம்பும்போது (அன்று மாலை முழுவதும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை), அவன் ‘எனக்கு ஆன்-ஐதான் அதிகம் பிடிக்கும். ஆனால் இதை யாரிடமும் சொல்லிவிடாதே. வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பிச் சென்றுவிட்டான்.
ஹெலோ செய்யும் விஷயங்களிலும், சொல்லும் விஷயங்களிலும் அவன் என் மீது காதல் கொண்டிருக்கிறான் என்பதைப் பார்க்க முடிகிறது. இது ஒருவகையில் நல்லதுதான். ஹெலோ நல்ல பையன் என்று மார்காட் சொல்வாள். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் அவன் அதை விடவும் மேலானவன். அம்மா அவனுக்கு அதிகமாகப் புகழாரம் சூட்டுவார்: ‘பார்க்க அழகான பையன். அருமையானவன். பொறுமையானவன்’ என்று.
அனைவரிடமும் அவன் பிரபலமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் என்னுடைய தோழிகளிடம் அவன் அப்படி இல்லை. அவர்கள் மிகவும் குழந்தைத்தனமானவர்கள் என்று அவன் நினைக்கிறான். அவன் நினைப்பது சரிதான். அவனைப் பற்றி ஜான் இப்போதும் என்னைக் கேலி செய்கிறாள். ஆனால் நான் அவனைக் காதலிக்கவில்லை. உண்மையாகவே. ஆண்களை நண்பர்களாகக் கொண்டிருப்பதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.
நான் வளர்ந்த பிறகு யாரை திருமணம் செய்து கொள்வேன் என்று அம்மா எப்போதும் என்னிடம் கேட்டுக் கொண்டிருப்பார். நான் விரும்புவது பீட்டர்தான் என்று ஒருபோதும் கணித்திருக்கவே மாட்டார் என்று நான் அடித்துக் கூறுவேன். காரணம், எந்தவித ஆச்சரியங்களையும் வெளிப்படுத்தாமல் அந்த எண்ணத்தை விட்டு நான் அவரை விலக்கியே வைத்தேன். இதுவரை யாரையும் நேசிக்காத அளவுக்கு நான் பீட்டரை நேசிக்கிறேன். என் மீது அவனுக்கு இருக்கும் உணர்வுகளை மறைக்கவே, அவன் மற்ற பெண்களுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். ஒருவேளை நானும் ஹெலோவும் காதலிப்பதாக அவன் நினைக்கலாம். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. அவன் எனக்கு ஒரு நண்பன் மட்டுமே. அல்லது, அம்மா சொல்வதைப்போல அழகான ஒருவன் மட்டுமே.
உனது ஆன்
(தொடரும்)
_________
Anne Frank’s “The Diary of a Young Girl” – அ.சல்மான் மொழிபெயர்ப்பில்