ஞாயிறு, ஜூலை 5, 1942
அன்புள்ள கிட்டி,
வெள்ளிக்கிழமை பட்டமளிப்பு விழா யூத அரங்கில் எதிர்பார்த்தபடி நடைபெற்றது. என்னுடைய மதிப்பெண் அறிக்கை அட்டை அவ்வளவு மோசமாக இல்லை. எனக்கு இரண்டு பி+, இரண்டு பி -, தவிர, ஒரு டி, அல்ஜீப்ராவில் சி, மற்ற அனைத்திலும் பி கிடைத்தது. எனது பெற்றொருக்கு இது மகிழ்ச்சியே. ஆனால் தரவரிசை என்று வரும்போது அவர்கள் மற்ற பெற்றோரைப் போல் கிடையாது. அறிக்கை அட்டைகளைப் பற்றி, அது நல்லதோ கெட்டதோ அவர்கள் எப்போதும் கவலைப்பட்டதில்லை. நான் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், அதிகம் பேசாமலும் இருக்கும்வரை அவர்களுக்குத் திருப்திதான். இந்த மூன்று விஷயங்களும் சரியாக இருந்தால், மற்ற அனைத்தும் தானாகவே சரியாக நடக்கும்.
நான் இதற்கு நேரெதிர். நான் எப்போதும் மோசமான மாணவியாக இருக்க விரும்பியதில்லை. நிபந்தனை அடிப்படையில்தான் நான் யூத லைசியத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டேன். நான் மாண்டிசோரி பள்ளியில்தான் ஏழாம் வகுப்பில் இருந்திருக்க வேண்டும். ஆனால் யூத குழந்தைகள் யூத பள்ளிகளுக்குச் செல்ல வேண்டி இருந்ததால், திரு.எல்டே, மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு லைஸ் கோஸ்லரையும் என்னையும் ஒருவழியாக ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தார். லைஸும் இந்த ஆண்டு தேர்ச்சி அடைந்து விட்டாள். எனினும் அவள் தன்னுடைய ஜியோமெட்ரி தேர்வை மீண்டும் எழுத வேண்டியுள்ளது.
லைஸ் பரிதாபத்துக்குரியவள். வீட்டில் படிப்பதென்பது அவளுக்குச் சுலபமான காரியம் அல்ல. அவளுடைய அறையில் இரண்டு வயது நிரம்பிய சேட்டைக்கார குழந்தை ஒன்று எந்நேரமும் விளையாடிக் கொண்டிருக்கும். அந்தக் குழந்தையான கேபி, தான் நினைத்தது நடக்கவில்லை என்றால் அலறத் தொடங்குவாள். அவளை லைஸ் கவனிக்கவில்லை என்றால் திருமதி கோஸ்லர் அலறத் தொடங்குவார். இதனால் லைஸ் தன்னுடைய வீட்டுப் பாடத்தைச் செய்வதே கடினமான வேலையாக இருந்தது. நிலைமை இப்படி இருக்கும்வரை, அவளுடைய பயிற்சிகள் அவளுக்குப் பெரியளவில் உதவப்போவதில்லை. கோஸ்லர் வீடு குறிப்பிடத்தக்க ஒன்று. திருமதி கோஸ்லருடைய பெற்றோர் பக்கத்து வீட்டில் வசிக்கின்றனர். ஆனால் குடும்பத்துடன்தான் அவர்கள் சாப்பிடுவர். அங்கே, சம்பளத்துக்கு வேலை செய்யும் பெண் இருப்பாள். பின் ஒரு குழந்தை, எப்போதும் ஏதோ ஒரு நினைவில் இருக்கும் திரு.கோஸ்லர், எப்போதும் பதற்றத்துடனும் எரிச்சலுடனும் இருந்தபடி, தற்போது இன்னொரு குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திருமதி.கோஸ்லர், இவர்களுடன் எந்நேரமும் குழப்ப நிலையில் இருக்கும் லைஸ் ஆகியோரும் இருப்பர்.
என் சகோதரி மார்கோட்டுக்கும் அவளுடைய அறிக்கை அட்டை கொடுக்கப்பட்டது. வழக்கம்போல, அட்டகாசம் செய்திருந்தாள். கம்லாட் (cum laude – ஒரு கெளரவ பட்டம்) போல எங்களுக்கும் ஏதேனும் இருந்திருந்தால், அவள் மிகக் கெளரவத்துடன் தேர்ச்சி பெற்றிருப்பாள். மார்கோட் மிகப் புத்திசாலி.
சமீபநாட்களாக அப்பா அதிகம் வீட்டில் இருக்கிறார். அலுவலகத்தில் அவர் செய்வதற்கு ஒன்றும் இல்லை. ‘நாம் தேவையில்லை’ என்ற உணர்வு மிகவும் மோசமானது. ஒபெக்டா நிறுவனத்தை திரு.க்ளேமேனும், 1941ல் தொடங்கப்பட்ட மசாலா மற்றும் மாற்று மசாலா பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான கிஸ் அண்ட் கோவை திரு.கூக்லரும் கையகப்படுத்தினர்.
சில தினங்களுக்கு முன்பு, நாங்கள் எங்கள் வீடு இருக்கும் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒளிந்து கொள்வதைப் பற்றி அப்பா பேசத் தொடங்கினார். ஏனைய உலகத்தினரிடமிருந்து பிரிந்து வாழ்வது நமக்குக் கடினமாக இருக்கும் என்று அவர் கூறினார். ஏன் இப்போது அதைப் பற்றி பேசுகிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘ஆன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாம் மற்றவர்களுக்கு உடைகள், உணவு, வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டு வந்து தருவதை நீ அறிவாய். நம்முடைய உடைமைகள் ஜெர்மானியர்களால் அபகரிக்கப்படுவதில் நமக்கு விருப்பம் கிடையாது. அவர்களுடைய பிடி நம் மீது இறங்குவதிலும் நமக்கு விருப்பம் கிடையாது. எனவே, நாம் இழுத்துச் செல்லப்படும் வரை காத்திராமல் நம்முடைய சொந்த விருப்பதின் பேரில் வெளியேறுவோம்’ என்றார்.
‘ஆனால், எப்போது அப்பா?’ அவர் கூறிய வார்த்தைகளில் இருந்த தீவிரம் என்னை அச்சுறுத்தியது.
‘கவலைப்படாதே. நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறோம். உன்னால் இயலும்போதே கவலைகளற்ற உன் வாழ்வை ரசித்துக் கொள்’
அவ்வளவுதான். இந்தச் சோகம் தழும்பும் வார்த்தைகள் முடிந்தவரை நிஜமாகாமல் இருக்கட்டும்.
அழைப்புமணி அலறியது. ஹெலோ வந்திருக்கிறான். எழுதுவதை நிறுத்துவதற்கான நேரம் இது.
உனது அன்பான ஆன்,
புதன், ஜூலை, 1942
அன்புள்ள கிட்டி,
ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு பல ஆண்டுகள் ஆனதுபோல் இருக்கிறது. உலகமே தலைகீழாக மாறியது போன்ற பல விஷயங்கள் அரங்கேறிவிட்டன. ஆனால் கிட்டி, நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். அதுதான் முக்கியம் என என் அப்பா சொல்கிறார். நான் உயிருடன் இருக்கிறேன். ஆனால் எங்கே, எப்படி எனக் கேட்காதே. அநேகமாக, நான் இப்போது கூறி வரும் ஒரு வார்த்தைகூட உனக்குப் புரியாது. எனவே ஞாயிறு மதியம் என்ன நடந்தது என்று சொல்லத் தொடங்குகிறேன்.
மூன்று மணியளவில், (ஹெலோ கிளம்பிவிட்டான், ஆனால் திரும்ப வருவதாகக் கூறியிருந்தான்) அழைப்பு மணி அலறியது. நான் அதைக் கேட்கவில்லை. ஆனால் பால்கனியில் இருந்தபடி சோம்பலுடன் சூரிய வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து சமையலறைக் கதவு வழியாக மார்காட் மிகவும் கோபத்துடன் தோன்றினாள். ‘எஸ்எஸ் இடமிருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்துள்ளது’ என்று அவள் முணுமுணுத்தாள். ‘அம்மா திரு.வான் டானை பார்க்க சென்றிருக்கிறார்’ (திரு.வான் டான் அப்பாவின் வியாபாரக் கூட்டாளியும் நல்ல நண்பரும் ஆவார்) எனக் கூறினாள்.
நான் அப்படியே உறைந்துவிட்டேன். ‘அழைப்பு’: இதன் அர்த்தம் என்னவென்று அனைவருக்குமே தெரியும். வதை முகாம்களும் தனிமையான செல்களின் காட்சிகளும் என் மூளையில் ஓடின. அப்பா இப்படி ஒரு விதியை எதிர்கொள்ள நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும்? ‘கண்டிப்பாக அவர் போகமாட்டார்’ மார்காட் தீர்க்கமாகக் கூறினாள். அம்மாவுக்காக நாங்கள் காத்திருந்தோம். ‘நாளை நாங்கள் எங்களுடைய பதுங்குமிடத்துக்குச் சென்று விடலாமா என்று கேட்பதற்காக அம்மா திரு.வான் டானைப் பார்க்கச் சென்றிருக்கிறார். வான் டான் குடும்பத்தினரும் நம்முடன் வருகின்றனர். நாம் மொத்தம் ஏழு பேர்’. அமைதி நிலவியது. எங்களால் எதுவும் பேசமுடியவில்லை. நடப்பது குறித்து எதுவும் தெரியாத அப்பா, யூத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை பார்க்கச் சென்றிருப்பது, அம்மாவுக்கான நீண்ட காத்திருப்பு, அந்த வெப்பம், மர்மம் – இவை அனைத்தும் எங்களை அமைதியாக்கின.
திடீரென அழைப்புமணி மீண்டும் அலறியது. ‘அது ஹெலோ’ என்று நான் சொன்னேன்.
‘கதவைத் திறக்க வேண்டாம்’ மார்காட் என்னைத் தடுத்தாள். ஆனால் அதற்குத் தேவை ஏற்படவில்லை. காரணம் அம்மாவும், திரு.வான் டானும் கீழ ஹெலோவிடம் பேசிக் கொண்டிருந்ததையும், பிறகு அவர்கள் இருவரும் உள்ளே வந்து கதவைத் தாழிட்டதையும் நாங்கள் கேட்டோம். ஒவ்வொரு முறை அழைப்பு மணி அடிக்கும்போதும், நானோ மார்காட்டோ, அது எங்களது அப்பாவா என்று பார்க்க மெதுவாகக் கீழே சென்றோம். நாங்கள் வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. திரு.வான் டான் அம்மாவிடம் தனியாகப் பேச விரும்பியதால் நானும் மார்காட்டும் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டோம்.
நானும் அவளும் எங்கள் படுக்கை அறையில் அமர்ந்திருந்தபோது, மார்காட், அந்த அழைப்பு அப்பாவுக்கு வரவில்லை என்றும், தனக்கு வந்திருக்கிறது என்று கூறினாள். இந்த இரண்டாவது அதிர்ச்சியால் நான் அழத் தொடங்கிவிட்டேன். மார்காட்டுக்கு பதினாறு வயது. அந்த வயதுடைய இளம்பெண்களை அவர்கள் தனியாக அனுப்பி வைக்க விரும்புவதுபோல் தெரிகிறது. ஆனால் நல்லவேளையாக அவள் போகமாட்டாள். அம்மா அப்படித்தான் சொன்னார். அப்பாவும்கூட என்னிடம் நாங்கள் ஒளிந்து கொள்வதைப் பற்றிப் பேசியபோது இதைப் பற்றித்தான் சொல்லியிருப்பார். ஒளிந்து கொள்வது… நாங்கள் எங்கே ஒளிந்து கொள்வது? நகரத்திலா? கிராமத்திலா? ஏதேனும் ஒரு வீட்டிலா? குடிசையிலா? எப்போது, எங்கே, எப்படி? நான் கேட்பதற்கு அனுமதியில்லாத கேள்விகள் இவை. ஆனால் அவை என்னுடைய மூளையில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தன.
மார்காட்டும் நானும் எங்களுடைய மிக முக்கியமான பொருட்களை ஒரு புத்தகப்பையில் வைக்கத் தொடங்கினோம். நான் எடுத்து வைத்த முதல் பொருள் இந்த டைரி. அதன் பிறகு தலைமுடியைச் சுருட்ட உதவும் கருவி, கைக்குட்டைகள், பள்ளிப் புத்தகங்கள், ஒரு சீப்பு, சில பழைய கடிதங்கள். பதுங்கிக் கொள்ள செல்வது குறித்த எண்ணங்களே மனதை ஆக்கிரமித்திருந்தால், சில தேவையற்ற பொருட்களை எடுத்து பையில் நான் வைத்தேன். ஆனால் அதுகுறித்து எனக்கு வருத்தம் எதுவும் இல்லை. துணிமணிகளைவிட எனக்கு நினைவுகளே முக்கியம்.
அப்பா ஒருவழியாக மாலை 5 மணி அளவில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். நாங்கள் திரு.க்ளெய்மேனை அழைத்து அவரால் அன்று மாலை வர இயலுமா என்று கேட்டோம். மீப்பை அழைத்து வருவதாக திரு.வான் டான் கிளம்பிச் சென்றார். மீப் பின்னிரவில் மீண்டும் திரும்பி வருவதாக உறுதியளித்தார். அவர் தன்னுடன் ஒரு பை நிறைய ஷூக்கள், துணிகள், ஜாக்கெட்டுகள், உள்ளாடைகள், காலுறைகள் எடுத்து வந்தார். வெப்பம் குறையவில்லை. எல்லாமும் விசித்திரமாக இருந்தன.
நாங்கள் எங்களுடைய பெரிய மாடி அறையை, விவாகரத்தான, முப்பது வயதைத் தாண்டிய, திரு.கோல்ட்ஸ்மிட் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தோம். அன்று மாலை அவர் செய்வதற்கு எதுவு இல்லை. நாங்கள் பொறுமையாக குறிப்புகளை வெளிப்படுத்தியும் அவர் இரவு 10 மணி வரை அங்கேயே இருந்தார்.
மீப்பும் ஜேன் கீஸும் 11 மணிக்கு வந்தனர். மீப் என் அப்பாவின் நிறுவனத்தில் 1933 முதல் பணியாற்றுபவர். எங்களுக்கு அவரும் அவருடைய கணவர் ஜேனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஷூக்கள், காலுறைகள், புத்தகங்கள், உள்ளாடைகள் என இவை அனைத்தும் மீண்டும் ஒருமுறை மீப்புடைய பைகளுக்குள்ளும், ஜெனியின் ஆழமான பாக்கெட்டுகளுக்குள்ளும் சென்று மறைந்தன. 11.30 மணிக்கு அவர்களும் காணாமல் போனார்கள்.
நான் மிகவும் களைத்து இருந்தேன். என்னுடைய படுக்கையில் அதுதான் கடைசி இரவு என்று எனக்குத் தெரிந்தாலும், படுத்ததுமே எனக்கு உறக்கம் வந்துவிட்டது. மறுநாள் காலை 5.30 மணிக்கு அம்மா என்னை அழைக்கும் வரை நான் எழவே இல்லை. அதிர்ஷ்டவசமாக, ஞாயிற்றுக்கிழமையைப்போல அன்று வெப்பமாக இல்லை. நாள் முழுக்க இதமான மழை பெய்திருந்தது. நாங்கள் நால்வரும் இரவை ஒரு குளிர்சாதனப் பெட்டியில் கழிக்க இருந்ததைப்போல பல அடுக்கு ஆடைகளால் எங்களச் சுற்றிக்கொண்டோம். இந்த ஏற்பாடு எங்களுடன் அதிக ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக. எந்த யூதருக்கும் ஒரு சூட்கேஸ் முழுக்க ஆடைகளுடன் வீட்டை விட்டு வெளியேறும் துணிவு இருந்திருக்காது. நான் இரண்டு கீழாடைகளும், மூன்று ஜோடி உள்ளாடைகளும், ஒரு ஆடையும், அதற்கு மேல் ஒரு பாவாடையும், ஒரு ஜாக்கெட்டும், ஒரு மழைக்கோட்டும், இரண்டு ஜோடி காலுறையும், கனமான ஷூக்களும், ஒரு தொப்பியும், ஒரு துப்பட்டாவும் அணிந்திருந்தேன். வீட்டை விட்டு கிளம்பும் முன்னரே எனக்கு மூச்சுத் திணறியது. ஆனால் நான் எப்படி உணர்கிறேன் என்று யாரும் என்னிடம் கேட்கவில்லை.
மார்காட் தன்னுடைய புத்தகப் பையில் பாடப் புத்தகங்களை திணித்தாள். பின்னர் மீப்பின் உதவியுடன் தன்னுடைய மிதிவண்டியை எடுக்கச் சென்றாள். எது எப்படியோ, எங்களுடைய பதுங்குமிடம் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியாததால், நான் அதனை ஒரு மர்ம இடமாக நினைத்திருந்தேன். 7.30 மணிக்கு நாங்கள் எங்கள் வீட்டு கதவை அடைத்தோம். என்னுடைய பூனை மூர்ட்ஜே மட்டுமே நான் பிரியாவிடை கொடுத்த ஒரே உயிரினம். திரு.கோல்ட்ஸ்மிட்டுக்காக நாங்கள் விட்டுச் சென்ற குறிப்பில், எங்கள் பூனைக்கு நல்ல வீட்டை கொடுக்க விரும்பும் அக்கம் பக்கத்தினரிடம் அதனை ஒப்படைக்க வேண்டும் என்று எழுதி இருந்தோம். கலைந்த படுக்கையும், மேஜையில் இருந்த காலை உணவுப் பொருட்களும், பூனைக்கான மாமிசமும் நாங்கள் எவ்வளவு அவசரமாக கிளம்பிச் சென்றோம் என்பதைப் பறைசாற்றின. ஆனால் அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு ஆர்வமில்லை. நாங்கள் எங்களுடைய இலக்கை பாதுகாப்பாக அடைய, அங்கிருந்து வெளியேற விரும்பினோம். வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமானதாகத் தெரியவில்லை.
மற்றவை நாளை.
உன் அன்புள்ள, ஆன்
வியாழன், ஜூலை 9, 1942
அன்புள்ள கிட்டி,
விடாது கொட்டித் தீர்க்கும் மழையில் அப்பா, அம்மா, நான் மூவரும் நடந்து கொண்டிருந்தோம். எங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு பள்ளி புத்தகப் பையும் விளிம்பு வரை பல்வேறு பொருட்கள் நிரம்பிய மற்றோரு பையும் இருந்தன. அந்த அதிகாலை நேரத்தில் வேலைக்குச் செல்லும் மக்கள் எங்கள் மீது பரிதாபப் பார்வையை வீசினர். அவர்களின் முகங்களை வைத்தே, அவர்களால் எங்களுக்கு ஏதேனும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரமுடியாமல் போனது குறித்த வருத்தம் இருப்பதை அறிய முடிந்தது. வெளிப்படையாய் தெரிந்த மஞ்சள் நட்சத்திரம் அவர்களிடம் பேசியது.
வீதியில் நடந்தபோதுதான் அம்மாவும் அப்பாவும் திட்டம் என்ன என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூறினார்கள். பல மாதங்களாக நாங்கள் முடிந்தவரை வீட்டு உபயோக பொருட்களையும் ஆடைகளையும் எங்கள் குடியிருப்பிலிருந்து வெளியேற்றி வந்தோம். ஜூலை 16 அன்று நாங்கள் தலைமறைவு வாழ்க்கைக்குச் செல்வதாக அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மார்காட்டுக்கு வந்த நோட்டீஸ் காரணமாக, திட்டத்தைப் பத்து நாட்கள் நீட்டிக்க வேண்டியிருந்தது. அதாவது நாங்கள் அலங்கோலமான அறைகளில் சமாளிக்க வேண்டியிருந்தது.
எங்களுடைய பதுங்குமிடம் அப்பாவின் அலுவலகக் கட்டிடத்தில் இருந்தது. அதை வெளியாட்கள் புரிந்துகொள்வது சற்றுக் கடினம். எனவே நான் அதுகுறித்து விளக்குகிறேன். அப்பாவின் அலுவலகத்தில் அதிகம் பேர் பணிபுரியவில்லை. திரு.கூக்லர், திரு.க்ளேமேன், மீப், இவர்களுடன் 23 வயது டைப்பிஸ்டான பெப் வோஸ்குய்ல் மட்டுமே இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் எங்கள் வருகை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பெப்பின் அப்பா திரு. வோஸ்குய்ல், இரண்டு உதவியாளர்களுடன் கிடங்கில் பணிபுரிகிறார். அவர்களிடம் எதுவும் சொல்லப்படவில்லை.
இதோ கட்டடத்தைப் பற்றிய ஒரு விவரணை. தரைதளத்தில் இருக்கும் மிகப்பெரிய கிடங்கு வேலை செய்யும் அறையாகவும் சேமிக்கும் அறையாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த அறைகளும், கையிருப்பு அறை, அரைக்கும் அறை போன்ற பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அங்கே பட்டை, கிராம்பு, மாற்று மிளகு போன்றவை அரைக்கப்படுகின்றன.
கிடங்கின் கதவுகளுக்குப் பக்கத்தில் மற்றொரு வெளிப்புற கதவு ஒன்று உண்டு. அலுவலத்துக்கான தனி நுழைவாயில். அலுவலக கதவின் உட்புறம் இரண்டாவது கதவு ஒன்று உண்டு. அதற்கு அப்பால் ஒரு பட்டிக்கட்டு. அதற்கு மேல் இன்னொரு கதவு. அதில் ‘ஆஃபீஸ்’ என்று கருப்பு நிறத்தில் எழுதப்பட்ட வார்த்தையைக் கொண்ட ஒரு ஜன்னல். இதுதான் அலுவலத்தின் பெரிய முகப்பு. அங்குதான் பெப், மீப், திரு. க்ளேமேன் மூவரும் பகலில் வேலை செய்வார்கள். ஒரு பாதுகாப்புப் பெட்டகம், ஒரு அலமாரி, ஒரு பெரிய சுவர் அலமாரி ஆகிவற்றைக் கொண்ட ஒரு அறையைக் கடந்து வந்தால், ஒரு சிறிய, இருண்ட, நெருக்கடியான அலுவலகப் பின்பக்கத்தை அடையலாம். இந்தப் பகுதி திரு.கூக்லர், திரு.வான் டான் இருவராலும் பகிர்ந்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இப்போது திரு.கூக்லர் மட்டுமே அதில் இருக்கும் ஒரே நபர். திரு.கூக்லரின் அலுவலகத்தையும் நடுக்கூடத்தின் வழியாக அடையமுடியும். ஆனால் உள் பக்கமாகத் திறக்கக்கூடிய ஒரு கண்ணாடி கதவு வழியாக மட்டுமே அங்கு செல்ல முடியும். வெளியில் இருந்து அதனை எளிதாகத் திறக்க முடியாது. திரு.கூக்லரின் அலுவலகத்திலிருந்து வெளியேறி நிலக்கரித் தொட்டியைக் கடந்து நீண்ட, குறுகிய நடைபாதை வழியாக நான்கு படிகள் மேலே சென்றால், முழுக் கட்டடத்தின் காட்சிப் பொருளாக விளங்கும் தனிப்பட்ட அலுவலகத்துக்குச் செல்லமுடியும். நேர்த்தியான மஹோகனி மரத்தால் ஆன பொருட்கள், விரிப்புகளால் மூடப்பட்ட லினோலியம் தரை, ஒரு ரேடியோ, ஒரு ஆடம்பரமான விளக்கு, என அனைத்தும் முதல் தரம். கதவின் உள்ளே ஒரு சுடுதண்ணீர் ஹீட்டர், இரண்டு கேஸ் பர்னர்களுடன் கூடிய விசாலமான சமையலறை. அதன் அருகே ஒரு குளியலறை. அது இரண்டாவது தளம்.
மரத்தால் செய்யப்பட்ட ஒரு படிக்கட்டு கீழிருந்து மூன்றாவது தளத்தில் உள்ள நடைபாதைக்குச் செல்கிறது. படிக்கட்டின் மேல் இரண்டு பக்கமும் கதவுகளைக் கொண்ட ஒரு இறங்குதளம். இடது பக்கம் உள்ள கதவு, வீட்டின் முன் பகுதியில் உள்ள மசாலாப் பொருட்களை சேமிக்கும் பகுதிக்கும், பரண் மற்றும் மேல் மாடிக்கும் நம்மைக் கொண்டு செல்லும். வீட்டின் முன் பகுதியிலிருந்து தெருவாசலில் அமைந்துள்ள மற்றொரு கதவு வரை, அசல் டச்சு பாணியிலான, மிகவும் செங்குத்தான, கால்களைத் தடுமாற வைக்கும் படிக்கட்டுகள் உள்ளன.
இறங்குதளத்தின் வலது பக்கம் அமைந்துள்ள கதவு, வீட்டின் பின்பக்கம் உள்ள ‘ரகசிய இணைப்பு’க்கு நம்மை இட்டுச் செல்லும். அந்தச் சாதாரண சாம்பல் நிறக் கதவின் பின்னால் இத்தனை அறைகள் இருப்பதாக யாரும் சந்தேகிக்க மாட்டார்கள். கதவின் முன்பக்கம் ஒரு சிறிய படி மட்டுமே இருக்கும். அதைத் தாண்டினால் உள்ளே வந்துவிடலாம். நேராகச் சென்றால் ஒரு செங்குத்தான படிக்கட்டு. அதன் இடது பக்கம் குறுகலான நடைபாதை. அது ஃபிராங்க் குடும்பத்தினரின் பிரதான அறையாகவும் படுக்கையறையாகவும் செயல்படும் ஒரு அறைக்குள் செல்லும். அடுத்த கதவு ஒரு சிறிய அறையினுடையது. அது குடும்பத்தின் இரண்டு இளம் பெண்களின் படுக்கையறையாகவும் படிக்கும் அறையாகவும் பயன்படுகிறது. படிக்கட்டின் வலது பக்கம் ஜன்னல்களற்ற, ஒரு சிங்க் உடன் கூடிய ஒரு கழிப்பறை. ஓரத்தில் இருக்கும் கதவு கழிப்பறைக்கும், இன்னொரு கதவு மார்காட் மற்றும் என்னுடைய அறைக்கும் கொண்டு செல்லும். படிக்கட்டுகளில் ஏறிச் சென்று மேல உள்ள கதவைத் திறந்தால், இதுபோன்ற ஒரு பழைய கால்வாய் ஓர வீட்டில் இவ்வளவு பெரிய, வெளிச்சம் நிறந்த மற்றும் விசாலமான அறையைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
அதில் ஒரு அடுப்பும் (அது திரு.கூக்லரின் ஆய்வகமாக இருந்த காரணத்தால்), ஒரு சிங்க்கும் இருந்தன. இது திரு, திருமதி வான் டான் உடைய சமையலறையாகவும் படுக்கை அறையாகவும் பயன்பட இருந்தது. அதே போல பொது அறை, சாப்பிடும் அறை, படிக்கும் அறை அனைத்தும் எங்கள் அனைவருக்குமானது. ஒரு சிறிய பக்கவாட்டு அறை, பீட்டர் வான் டானின் படுக்கை அறையாக இருக்கப்போகிறது. பிறகு, கட்டடத்தின் முன் பகுதியை போல, இங்கும் ஒரு பரணும், ஒரு மாடியறையும் உள்ளன. அவ்வளவுதான். இப்போது எங்களுடைய அழகான கட்டடம் முழுவதையும் உனக்கு நான் அறிமுகம் செய்துவிட்டேன்.
உன் அன்பான ஆன்